Thursday, August 8, 2013

போவோமா ஊர்கோலம் - மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை

ஆடி வெள்ளி என்றதும் உடனே என் நினைவிற்கு வருவது ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் கூட்டத்துடன் போகும் 4 மற்றும் 32...வரிசை பாண்டியன் போக்குவரத்து பஸ்களும், மஞ்சள் அல்லது சிவப்பு வண்ணச் சேலையில் தலைக்கு குளித்து, பூ வைத்துக் கொண்டு மஞ்சள் பூசிய முகத்துடன் கோவில்களுக்கு செல்லும் பெண்கள் கூட்டமும், ஆடி மாதக் கூழும், வெள்ளிக்கிழமைகளில் படைக்கும் பொங்கலும் தான்.

நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுது இந்த ஆடி மாதம் வந்தாலே பஸ்ஸில் போவது பெரும்பாடாகி விடும்! ஆகஸ்ட் மாதம் இந்தியா போகும் வேளைகளில் அதிகாலையில் சென்னையில் இறங்கி விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் LR ஈஸ்வரியின் குரலில் கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா என்று காற்றில் படபடக்க கேட்டுக் கொண்டே பெரிய பெரிய தேவிகளின் கட்அவுட்டுக்கள் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருக்க, ஆள் அரவமில்லாத போக்குவரத்து அதிகமில்லாமல் இருக்கும் அந்த அதிகாலை சாலைகள் என்று இந்த ஆடி மாதம் பற்பல நினைவுகளை கொண்டு வரும்.

மாரியம்மன் கோவிலுக்குப் போவது என்றால் எங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குடும்பத்துடன், சமயங்களில் பாட்டி, பெரியம்மா என்று கும்பலாகவும் மாவிளக்கு, பொங்கல் வைக்க என்று போவதுண்டு.

ஒரு நல்ல நாள் என்றால் போதும் மதுரை மக்கள் கோவில்களுக்கு படையெடுத்து விடுவார்கள். விடுவார்களா ஆடி வெள்ளிகளை மட்டும்?

நாங்களும் கீழவாசலில் இருந்து பஸ் அல்லது ரிக்க்ஷாவில் போவோம். கோவில் வாசலை நெருங்க நெருங்க கூட்டமும், பொங்கல் வைத்த அடுப்பிலிருந்து புகையும், சாம்பிராணி மணமும் என்று ஒரு கலவையாக தெரிய, ம்ம்ம். இனிப்பு பொங்கல் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே போவோம்.

வெட்ட வெளியில் இருக்கும் இந்த கோவிலில் வாசலில் இருக்கும் வேப்ப மரக்கொத்தும், நுழையும் பொழுதே மக்கள் பொங்கல் வைப்பதையும் மாவிளக்கு போடுவதையும் பார்த்துக் கொண்டே மாரியம்மனை தரிசித்து விட்டு வலம் வருகையில் இருக்கும் சிறு சிறு தெய்வங்களையும், அரசமரத்துப் பிள்ளையார், நாக தெய்வங்களையும் வணங்கி விட்டு சிறிது நேரம் அமர்ந்திருப்போம். அங்கிருக்கும் ஒரு அம்மனுக்கு வெற்றிலையில் குங்குமம் வைத்து சாத்துவது மிகவும் பிரபலம்.

பொங்கல் வைத்து சாமி கும்பிடுபவர்கள் அரிசியை களைந்து, வெல்லத்தை பொடி செய்து,பொங்கி வரும் பொங்கல் பானையில் அம்மனை நினைத்துக் கொண்டே அரிசியை போட்டு, அவ்வப்போது விறகுகளை சரி செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அரிசி வெந்த பிறகு, வெல்லத்தை போட்டு, நெய்யையும் ஊற்றி இறக்கிய பிறகு, நெய்யில் வதக்கிய முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் பழத்தை போட்டு அதையும் பொங்கலுடன் கலந்து முடிக்க... இன்னொருவர் இலையில் வாழைப்பழம், தேங்காய், வெத்தலை, ஒண்ணேகால் ரூபாய், பூ , ஊதுவத்தி ஏற்றி பொங்கலையும் இலையில் படைத்து விட்டு அம்மனை வேண்டிக் கொண்ட பின், சுற்றி இருப்பவர்களுக்கு கொடுப்பார்கள். அவர்களும் குடும்பத்துடன் சாப்பிடுவார்கள். இருக்கிற இலையில் எல்லாமே நடக்கும். பிளாஸ்டிக் கழிவுகள் தெரியாத காலம் அது! கொஞ்சம் பொங்கலை அரசமரத்தடியில் நாய்க்கும், காகத்திற்கும் கூட வைப்பார்கள்.

மாவிளக்கு போட வந்தவர்களும் இப்படித்தான். ஊற வைத்த அரிசி மாவை வெயிலில் உலர்த்தி, உரலில் இடித்தோ, மிக்சியில் இடித்தோ, சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய், நெய் கலந்து, மஞ்சள் குங்குமம் வைத்து, நடுவில் குழி செய்து திரி போட்டு வீட்டிலிருந்தே எடுத்து வந்திருப்பார்கள். அதில் தீபம் ஏற்றி கும்பிட்டு அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மாவிளக்கு, அப்பிடியே சாப்பிடுவேனே என்று சொல்லலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் :)

சின்ன கோவில். கோவிலின் இலக்கணம் மாறாமல் வாசலில் கை ஏந்துபவர்கள் கூட்டம்.

எதிரில் தெரியும் தெப்பக்குளம் தண்ணீருடன் இருக்கும் பொழுது கொள்ளை அழகு. அதுவும் தெப்பத்திருவிழா அன்று ஜேஜே என்று இருக்கும்! எல்லாம் குழந்தைகளாக இருக்கும் வரை நன்கு அனுபவித்தோம். ஒரு வயதுக்குப் பிறகு கூட்டம் என்றாலே அலர்ஜி ஆகி விட்டது. என்ன பண்றது, பொண்ணா பொறந்தாச்சு. பையனா இருந்திருந்தா எந்த கூட்டத்திலயும் போயிட்டு வரலாம். எவ்வளவு நேரமானாலும் சுத்தலாம் :(


இந்த முறை ஊருக்குப் போயிருந்தபொழுது கோவிலில் சிறிது மாற்றம் தெரிந்தது. அரசின் மதிய உணவிற்கு டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருந்த கூட்டம் அதிகம்! மற்றபடி மக்களோடு மக்களாய் நாய்கள் கூட்டமும், ஈக்களும் எப்போதும் போல் மொய்த்துக் கொண்டிருந்தன. தெப்பக்குளத்தில் கூரைகள் வேயப்பட்டு புனரமைப்புகள் நடந்து கொண்டிருந்தது.

ஒரு காலை வேளையில் ராமேஸ்வரம் போக, சிறிது நேரம் தெப்பக்குளத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறு மக்கள் கூட்டம் நடைபயிற்சி செய்ய வந்திருந்தார்கள். சிலர் முறையாக காலில் ஷூ மாட்டிக் கொண்டு, பலரும் ஹவாய் சப்பல், செருப்பு, சிலர் காலில் ஒன்றுமே போடாமல்!!! கணவன் மனைவி ஜோடியாக, சிலர் தங்கள் குழந்தைகளுடன், பெரும்பாலும் ஆண்கள். தெப்பக்குளத்தைச் சுற்றி விரைந்து பேசிக் கொண்டே நடப்பவர்கள், அந்த அதிகாலையிலும் கைபேசியில் பேசிக் கொண்டே போகிறவர்கள், அமைதியாக போகிறவர்கள் என்று பல வகையான மனிதர்கள் நடமாட்டம். புழுதி கிளப்பிக் கொண்டு போகும் லாரிகளும், பஸ்களும் அந்த அதிகாலை வேளையில்!

நடையை முடித்து விட்டு வந்தவர்கள் திண்ணை மாதிரி இருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்பை பேசிக்கொண்டும், சைக்கிளில் விற்கும் அந்த ஜூஸ், இந்த ஜூஸ் என்று எதையாவது ஒன்றை குடித்துக் கொண்டும், தெப்பக்குளத்தின் உள்ளே தண்ணீர் இல்லாத நிலையில் குழுகுழுவாக கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் கூட்டம் என்று பரபரப்பாக இருக்கும் அந்த காலை நேரத்தை பார்க்க நன்றாக இருந்தது.



மதுரை மக்களின் எல்லை தெய்வம் மாரியம்மா!




மதுரை மண்ணின் ஒரு அடையாளம் மாரியம்மன் தெப்பக்குளம்!!!!










No comments:

Post a Comment

'கனெக்ஷன்ஸ்' விளையாட்டு

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 'Wordle' என்ற விளையாட்டை 2022ல் அறிமுகப்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களிடையே அது மிகவும் ...