Saturday, September 7, 2013

திக்... திக்... திக்...2

அது கார்த்திகை மாதம் 1996ஆம் வருடம்.

ராஜபாளையம் மகளிர் கல்லூரி- கணினியியல் துறை மாணவிகளுக்குத் தேர்வு கண்காணிப்பாளராக செல்ல வேண்டிய கட்டாயம். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்து போய் வந்து விடலாம் என்று நினைத்து அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

ராஜபாளையம் நாய், மாம்பழம் தவிர வேறு எதுவுமேஅந்த ஊரைப் பற்றித் தெரியாத நிலையில் பழங்காநத்தத்தில் இருந்து பேருந்தில் பயணம். ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே திருப்பரங்குன்றம், திருநகர், ஆள் அரவமில்லாத கப்பலூர் வழியாக திருமங்கலம் தாண்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் பொழுது பால்கோவாவின் மணமும் சுவையும் திரும்பி வரும் பொழுது வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இறங்கும் கூட்டத்தையும் முண்டியடித்துக் கொண்டு ஏறும் கூட்டத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, தூரத்தில் தெரிந்த ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் மனதில் வணங்கிக்கொண்டு ஒரு வழியாக ராஜபாளையம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்து விட்டேன்.

ஒன்பது மணிக்குத் தேர்வுகள் ஆரம்பித்துவிடும் என்று மனம் பரபரக்க, ஒரு ரிக்க்ஷாவில் ஏறி மகளிர் கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொல்ல, போகும் வழியில் பெண் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் பல ஆட்டோ, ரிக்க்ஷாக்கள் திரை போட்டுக் கொண்டு போவதை பார்க்க வேடிக்கையாக இருந்தது! ஒரு வழியாக கல்லூரி வந்து சேர்ந்து நான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மதுரை காமராஜர் பல்கலையில் இருந்து வந்திருந்த கேள்வித்தாள் அடங்கிய பேப்பர் மிகவும் ரகசியமாக(!) வைக்கப்பட்டிருக்கும். தேர்வு கண்காணிப்பாளர் முன் தான் அதை பிரித்து கேள்விகளை மாணவிகளுக்கு கொடுக்க அவர்களும் எழுதி முடித்து விட்டுப் போக மீண்டும் பஸ் ஏறி பயணம். முதல் நாள் நன்றாகவே போனது.

இரண்டாம் நாள் மாலை மதுரைக்குத் திரும்ப பஸ் ஏறிப் புறப்பட்டு புழுதி பறக்க போய்க் கொண்டிருந்தது. நல்ல கூட்டம் வேறு. பனைமரங்களும், வறண்ட நிலங்களும், அங்கொன்று இங்கொன்றுமாய் தென்னை மரங்களும் என்று வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டே பஸ்சின் முதல் இருக்கையில் (கூட்டத்திலிருந்து தப்பிக்க!!!) உட்கார்ந்தால் கூட்டம் ஏறினாலும் சமாளித்துக் கொள்ளலாம், வேடிக்கையும் பார்க்கலாம் என்ற நினைப்பில் முதல் ஆளாய் ஓடிப் போய் இடம் பிடித்து ஏறி உட்கார்ந்து கொண்டேன். பஸ்சும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டது.

சிறிது தூரம் தான்சென்றிருக்கும். திடீரென்று டிரைவர் பிரேக் போட்டு கண்டக்டரை எச்சரிக்கை செய்ய, எதிரில் பார்த்தால் தொலைவில் தீப்பந்தம், கம்பு, அருவா என்று கொலைவெறியுடன் ஒரு கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் படத்தில் தான் பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு ஓடி வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
டிரைவரும் பக்கத்தில் ஏதோ சாதிக் கலவரம் போல. பஸ்ஸைத் திருப்பி விடுகிறேன். அனைவரும் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

கண்டக்டரும், எல்லோரும் இறங்கி ஓடி விடுங்கள். பஸ்ஸை கொளுத்தி விடுவார்கள் என்று சொன்ன பொழுது தான் அவர்களின் தீவிரம் தெரிந்தது. கலவரக்காரர்களும் யாரை வெட்டி சாய்த்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று வெறியோடு ஓடி வருவதைப் பார்க்க...😢😢😢

எனக்கா அந்த ஊரில் யாரையும் தெரியாது. அவ்வளவு ஏன்? எங்கே நிற்கிறோம் என்று கூட தெரியாது! என் கூட சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பல தாய்மார்கள். அனைவர் கண்களிலும் ஏதும் தப்பாக நடந்து விடக் கூடாதே என்ற பயம். குழந்தைகளுக்கு எப்படி தெரியுமோ, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள். அம்மாக்களுக்குப் பதட்டம். சே! நிம்மதியாக வேலை கூட செய்ய முடியவில்லையே என்ற கோபம் எனக்கு. நடத்துனரும் பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு சண்டை.

சில நிமிடங்கள் வரை நிம்மதியாக இருக்கிறது என்று நினைத்த என் வாழ்க்கை ஒரு சில விஷக்கிருமிகளால் நொடியில்...

ஓடி வந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் கொலைவெறி! அவர்களுக்கும் மற்றொரு சாதியினருக்கும் கைகலப்பு நடந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதையாவது செய்து கலகம் செய்ய அனல் பறக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அன்று உயிருடன் திரும்பினால் அதுவே பெரிய விஷயமாக பட்டது எனக்கு.

எங்கிருக்கிறோம் என்று எதுவுமே தெரியாமல் உயிருடன் திரும்ப முடியுமா என்ற அச்சத்துடன் இறங்கி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு அழும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய்மார்களும், வயதான தாத்தா பாட்டிகளும் கூட்டத்தோடு கூட்டமாக வந்த வழியில் ஓட ஆரம்பிக்க, பேருந்தும் திரும்பி வேகமெடுக்க, ஆத்திரத்துடன் அறிவில்லாமல் பொதுச் சொத்துக்களை நாசம் பண்ணக் கிளம்பிய கூட்டம் வெறித்தனத்துடன் தொடர அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்ற ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டு ஓடி ரோட்டிற்கு வந்து நின்றால், ஒரு பேருந்தும் நிற்கவில்லை. குடிகார வெறி பிடித்த கூட்டமோ மிக அருகில். பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

போனால் போகிறதென்று ஒரு பேருந்து நிற்க, கண்டக்டரும் விரைந்து ஏறுங்கள் என்று சொல்லிக் கொண்டே பின்னால் வரும் பேருந்துகளுக்கு சைகையால் நிறுத்தாமல் போங்கள் என்று சொல்லி எங்கள் வண்டியும் அந்த இடத்திலிருந்து கிளம்பி விட அப்பாடா என்றிருந்தது.

டிக்கெட் எடுக்கும் பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தான் பஸ் போகும். அதற்குப் பிறகு ஒரே கலவரம். மதுரைக்கு இப்போதைக்கு பஸ் எதுவும் கிடையாது என்று சொல்ல படபடக்கிற இதயத்துடன் என் அடுத்த பிரச்னை ஆரம்பமாகியது 😓😓😓

அதற்கு பின்பு தான் யோசித்தேன் எங்கே போய் தங்குவது என்று. நல்ல வேளை! நாங்கள் பசுமலையில் குடியிருந்த பொழுது வீட்டு உரிமையாளரின் அம்மா, தங்கை என்று அவர் குடும்பம் முழுவதும் அங்கிருப்பது நினைவில் வந்தது. நானும் ஒரு முறை அவர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன். குத்துமதிப்பாக நடந்து எப்படியோ அவர்கள் வீட்டுக்குப் போய் சேர்ந்து விட்டேன். பீதியில் இருந்த என்னைப் பார்த்து அவர்களும் பதறிப் போய், என்ன ஏதென்று விசாரித்து விட்டு, கைப்பேசி இல்லாத அந்த காலத்தில், அவர்கள் தயவில் தொலைபேசி மூலம் வீட்டுக்குத் தகவல் சொல்லி அவர்களையும் கலவரமூட்டினேன். இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அங்கேயே இரவில் தங்கி அடுத்த நாளும் பயத்துடனே, ராஜபாளையம் போய் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தங்கி, ஒரு வழியாக தேர்வுகளை முடித்து விட்டு மதுரை வந்து சேர்ந்தேன்.

மதுரை வரும் பொழுது கார்த்திகைப் பெருநாள். திருப்பரங்குன்றம் ஜொலித்துக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கோபுரத்தை பார்த்தவுடன் அப்பாடா, பத்திரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்து விட்டாய் முருகா என்று வேலைப் பார்த்து கும்பிட்டபடியே அம்மா வீட்டுக்கு வந்து சேர, மகளும், கணவரும் அங்கே இருந்தார்கள். என் அக்காவும், பாவாவும் கூட பெரிய கார்த்திகை விருந்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரிடமும் நடந்த நிகழ்சிகளை சொல்லி முடித்து, அம்மா கையால் சமைத்த சூப்பர் சாப்பாட்டை சாப்பிட்டவுடன் தான் திருப்தியாக இருந்தது. பின் அனைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போன் பண்ணி, எங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டோம். அந்த கார்த்திகைத் திருநாள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத திருநாளாகி விட்டது எனக்கு :(

இன்றும் பஸ் எரிப்பு, கலவரம் என்று படித்தாலே திக்... திக்... திக்...தான்.

யாரும் இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பனுமே என்று மனம் அடித்துக் கொள்ளும்.

பொதுச் சொத்துக்களை நாசம் செய்யும் இந்த விஷக்கிருமிகளை இன்னும் சில வியாதிகள் தங்கள் சுயநலத்திற்காக வளர்த்துக் கொண்டிருப்பதும் அதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிவதும் தான் வருத்தும் விஷயம்.

5 comments:

  1. கலவரச் சூழலை நேரடியாய் பார்த்து பதை பதைத்தாலும்..ஆனது ஆகட்டுமென அடுத்த நான்கு நாளும் கடமையாய் போய் வந்த கடமையை முடித்த இடத்தில்தான், எதற்கும் அசராத எங்கூர் பொண்ணு நிற்கிறார். :)

    ReplyDelete
  2. ஆற்றங்கரை நாகரீக காலத்தில் அதாவது நாடுகள், எல்லைகள், கொடிகள் என வளராமல் சிறு சிறு குழுக்களாய் மனிதன் வாழ்ந்த காலத்தில் துவக்கிய குழுச் சண்டைகளே இன்றளவும் வெவ்வேறு பெயர்களில் கலவரங்களாய்த் தொடர்கிறது.இது பற்றிய தகவல்கள் நம் பழந்தமிழ் பாடல்களில் நிறைய இருக்கின்றன.

    அப்போதிருந்த நிலையில் மனிதனின் உடமைகள் அவனது பெண்களும்,கால்நடைகளும்தான்....ஒரு குழுவிடம் இருக்கும் பெண்களையும், கால்நடைகளையும் அடுத்த குழுவினர் கடத்திப் போவதும் அதை மீட்க போய் சண்டை இடுவதுமாக துவங்கியவைதான் இந்த கலவரங்கள்.அதுதான் இன்றைக்கு வளர்ந்து சாதிக்கலவரமாய், மதகலவரமாய்,இன்னும் வெவ்வேறு பெயர்களில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

    தொல்காப்பியத்தில் வெட்சித் திணை...ன்னு தனியா ஒரு பிரிவே இருக்கு. அதில் பகுதிபகுதியா இந்த சண்டைகளைப் பற்றி சொல்லிருக்காங்க.வாய்ப்புக் கிடைச்சா படிச்சு பாருங்க.....இணையத்துல கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //வாய்ப்புக் கிடைச்சா படிச்சு பாருங்க.....இணையத்துல கிடைக்கும்.//

      கண்டிப்பா!

      நன்றி, சரவணன்.

      Delete
  3. மகிழ்ச்சியால், துயரத்தால் ஒரே நிமிடத்தில் வாழ்க்கையே மாறிப்போன அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களுடையது பயங்கரமான அனுபவம். அத்தனை பிரச்சினைகளுக்கிடையே உங்களின் கடமையையும் குறைவறச் செய்து முடித்த உங்களின் நேர்மைக்கும் பொறுப்புனர்ச்சிக்கும் வாழ்த்துக்கள்!! அருமையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, திருமதி.மனோ சுவாமிநாதன்.

      Delete

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...