Wednesday, December 18, 2013

நினைத்தாலே இனிக்கும் - புட்டும், ஆப்பமும்

புட்டு பிடிக்காது என்று இந்தக் கால குழந்தைகள் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் என் வயதையொத்தவர்கள் சொன்னால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த உணவைச் சாப்பிடத் தவறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அரசமரம் சாந்தி ஸ்டோர்ஸ் வாசலில் அதிகாலை 6.30 மணிக்கு இரண்டு பெரிய அலுமினிய டபராக்களில் கோதுமை மற்றும் அரிசி மாவு புட்டு கொண்டு வருபவருக்காக அவருக்கு முன்னே காத்திருக்கும் கூட்டம், டபராக்களைப் பார்த்ததும் 'அபிராமி அபிராமி' என்று ஆனந்தப்படும் கமலைப் போல வரிசைக்கு முண்டியடிக்கும்.

அப்பொழுது காமராஜர் சாலையில் இருந்து ஆவினில் பால் வாங்கிக் கொண்டு அப்படியே காலைச் சிற்றுண்டிக்காக வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்க வருவார்கள்.

புட்டு விற்பவரும் இரண்டு டபராக்களையும் இறக்கி விட்டு பேப்பர், அளந்து போட காசுக்கேற்றவாறு காப்படி, அரைப்படி என்று சிறு ஆழாக்குகள், கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு வரிசையாக பேப்பரில் போட்டுக் கட்டிக் கொடுப்பார்.

அப்போதெல்லாம் அரிசி புட்டு தான் பிடிக்கும். அது கிடைக்கவில்லை யென்றால் தான் கோதுமை புட்டு வாங்குவது வழக்கம்.

'பொலபொல'வென்று உதிரியாகப் புட்டு, தேங்காய்ப்பூ இருக்கும் ஆனா இருக்காது மாதிரி கலந்து வெல்லமும் சேர்ந்த அதன் சுவை இன்றும் தித்திக்கிறது, நினைக்கையிலே :)

அதே போலத்தான் தெரு முக்கில் விற்கும் அப்பமும். காலையில் ஆறுமணிக்கே விறகு அடுப்பு, அப்பத்திற்க்கென்றே குழித்தட்டு, அதை மூட என்று மண்சட்டிகள் பார்க்கவே அழகாக இருக்கும்.

ஒரு சட்டியில் முன் தினம் ஆட்டிய ஆப்பமாவில் கருப்பட்டி கலந்து, வெண்ணெய் வேண்டும் என்பவர்களுக்குச் சிறிது சிறிதாக உருட்டிய வெண்ணெயை ஒரு தட்டில் வைத்து, பேப்பரோ , வாழை இலையையோ நீளவாக்கில் வெட்டி என்று அவருடைய கடையை ஆரம்பிக்கும் போதே எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சொல்லி விட்டுப்  போவோர்களும், என்னைப் போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்தே இருந்து வாங்கிப் போவோர்களும் என்று ஒரு சிறு கூட்டம்.

ஆப்பம் விற்பவர் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டு ஆப்பம் ஊற்றி மூடி, சில நிமிடங்களுக்குப் பிறகு வெந்த ஆப்பம் மேல் வெண்ணை உருண்டையைப் போட்டு ஓரங்கள் மொறுமொறுவென்று ஆகி வாயில் வைத்தால் இனிப்பான, சுவையான ஆப்பம் வீடு வந்து சேர்வதற்குள் காலியாகி விடும்.

இன்றும் மதுரையில் சில தெருக்களில் இந்த வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், நடக்கப் பழகி பேச்சு வந்தவுடனே  பள்ளிக்குப் போக வேண்டிய  குழந்தைகளுக்குத் தான் பொறுமையாக இதையெல்லாம் சாப்பிட நேரம் இருப்பதில்லை.

2 comments:

  1. இன்றைய குழந்தைகளுக்கு என்ன சாப்பிடுகிறோம் என்று கூடத் தெரிவதில்லையே! புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ சாப்பிடுகிறார்கள். சாப்பிடும்போது முழு கவனமும் சாப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறவும் தாத்தா, பாட்டி கூட இல்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான், ராணி சுந்தர். இன்றைய அவசர உலகில் உட்கார்ந்து நிதானமாக சாப்பிடுவதே பெரிய விஷயம். அதற்குப் பிறகு தானே ரசித்து ருசித்து சாப்பிடுவது!

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...