காலையில் பள்ளிக்குச் செல்லவும், சாப்பிட்டு எடுத்துச் செல்ல உணவுகளை தயார் செய்யவுமே அம்மாவுக்குச் சரியாக இருக்கும். அம்மா பொறுமையாக எங்களுக்குப் பின்னல் போட்டு முடித்து அன்றலர்ந்த மலர்களைச் சூடி அழகு பார்ப்பார். பாட்டியும் அம்மாவிற்கு உதவியாக எங்களை பள்ளிக்கு அனுப்புவதில் மும்முரமாய் இருப்பார்!
பள்ளி விட்டு மாலை வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் வரை விளையாடலாம். ஐந்து மணிக்கு ரேடியோவில் வரும் பாடல்களையும் கேட்கத் தவறியதில்லை. ஆறு மணியானவுடன் முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது!
ஆரம்ப பள்ளி நாட்களில் சிலேட்டில் நம்பர்களையும், அ, ஆ என்று பலமுறை எழுதி வரச் சொல்வார்கள். கடல் குச்சியை வைத்து எழுதினால் எழுத்துக்கள் அவ்வளவு அழகாக வரும். கணக்குப் பாடம் அம்மா வந்தவுடன் நானும், அக்காவும் பண்ண ஆரம்பிப்போம். அவள் வேகமாக போட்டு விடுவாள். அவள் சிலேட்டிலிருந்து நான் காப்பியடிக்க, அம்மா தலையில் குட்டு வைக்க...என்று பல மாலைகள்! சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாடங்களை அழியாமல் எடுத்துச் செல்வதே பெரிய விஷயமாக இருந்தது அந்நாட்களில்!
வீட்டுப் பாடம் முடித்தவுடன் மீண்டும் வெளியில் போய் விளையாடலாம். மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத சிறு தெருவில் அம்மாக்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் விளையாட என்று தெருவே ஆனந்தமயமாக இருக்கும். டிவிக்கு முன்பான பொற்காலம் அது !
பெண் குழந்தைகள் இரு குழுவாக, பூ பறிக்க வருகிறோம், பூ பறிக்க வருகிறோம் என்று ஒரு குழு அடுத்த குழுவைப் பார்த்துப் பாடிக் கொண்டே வர, அவர்களைத் தொடர்ந்து, அடுத்த குழுவும், எந்தப் பூவை பறிக்கிறோம், எந்தப் பூவை பறிக்கிறோம் என்று பாடிக் கொண்டே அவர்கள் முன்னே வர, ரோஜாப்பூவை பறிக்கிறோம், ரோஜாப்பூவை பறிக்கிறோம் என்று கத்திப் பாடிக்கொண்டே என்று சிறிது நேரம் விளையாடுவோம். சில நேரங்களில், ஒருவர், கலர் கலர் வாட் கலர் என்று கேட்க, வாயில் வந்த கலரைச் சொன்னவுடன் அந்த நிறத்தில் கண்ணில் பட்டதை ஓடிப் போய்த் தொட வேண்டும். இல்லையேல் அவுட்.
இதைத் தவிர சொட்டங்கல்லு, பம்பர ஆட்டம், கிட்டி புல்லு, தட்டாமாலை, சோழிகளை உருட்டி விளையாடும் தாயம், பரமபத விளையாட்டு, கபடி கபடி என்று மூச்சு விடாமல் நரம்பு புடைக்க விளையாடியது என்று ஓடியாடித் துள்ளித் திரிந்த காலம்! வயது, ஏழை, பணக்கார்கள் என எவ்வித வித்தியாசங்களும் தெரியாமல் நாங்கள் social skills வளர்த்தது அப்படித்தான்!
ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்குப் போன பின்பு, நாங்கள் தனியாக பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தோம். எங்களுடன் வந்த சீனியர் மாணவிகளும் மேல்நிலைப் பள்ளிக்குப் போய்விட்டார்கள். பள்ளிக்குப் போகும் வழியில் நாடார் பள்ளியின் எதிர்புறம் ஒரு கட்டை வண்டியில் வயதானவர் ஒருவர் ஜவ்வு கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பார். ஐந்து பைசாவிற்கு கேட்டால் அதை இழுத்து இழுத்து உடைத்து தருவார். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். பத்து பைசாவிற்கு, நெய்யில் தோய்த்து தருவார். அது இன்னும் சூப்பராக இருக்கும். அவர் அழுக்காக, பீடி குடித்துக் கொண்டே இருப்பார். மிட்டாய் மேலேயும் ஈ எனக்கென்ன என்று மொய்த்துக் கொண்டிருக்கும். அண்ணே, அஞ்சு காசுக்கு மிட்டாய் கொடுங்க என்று வாங்கிச் சாப்பிட்டதெல்லாம் தப்பாக தெரியவில்லை அப்போது!
அவரைத் தாண்டி போனால் ஒரு அம்மா சிறு, சிறு கூடைகளில் வேக வைத்த சோளக்கருது, ஆள்வள்ளிக்கிழங்கு, சர்க்கரை கிழங்கு, வேகவைத்த பலாக் கொட்டை, அடுப்பில் சுட்ட பலாக் கொட்டை, சிறு படிகளில் ஐந்து அல்லது பத்து பைசாவிற்கு கடுக்காய்ப் பழம், இலந்தைப் பழம், நவ்வாப்பழம், அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், கொடுக்காப்புளி, புளி உருண்டை(ம்ம் புளிப்ப்பாக இருக்கும்) வைத்து விற்றுக் கொண்டிருப்பார். சின்ன கரியடுப்பில் சோளக்கருது வாட்டிக் கொண்டிருப்பார். வீட்டில் தினமும் வாங்கிச் சாப்பிட என்று கொடுக்கும் காசில் பள்ளி முடித்து விட்டு வரும் பொழுது சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டே போனதும்...
அது ஒரு கனாக்காலம்!
திங்கட்கிழமைகளில் வெள்ளைச் சீருடையும், மற்ற நாட்களில் வெள்ளை மற்றும் நீலச்சீருடையும் கண்டிப்பாக அணிய வேண்டும். நன்றாக தலையில் எண்ணை வைத்து நீலநிற ரிப்பன் கட்டி பின்னல் போட்டு, ரோஜா/பெங்களூர் பூ/ டிசம்பரில் வயலெட் நிறப் பூ என்று பூச்சூடி பள்ளிக்கு அனுப்புவார் அம்மா. மீ பர்ஸ்ட், மீ செகண்ட் என்று நாங்கள் மூவரும் தலைப்பின்னலுக்குச் சண்டை போட்டு காத்திருப்போம். அம்மா தலை வார வார தூக்கம் சொக்கும் அந்த காலை வேளையிலும்! அவர் இறுக்கமாக போட்ட பின்னல் பள்ளி விட்டு வந்த போதிலும் கலையாமல் இருக்கும்!
நேரமாகிவிட்டது என்று பள்ளிக்கு ஓட்டம். இல்லையென்றால், சுடுமணலில் முட்டி போட வைத்து விடுவார்கள்! அபராதமும் உண்டு. பள்ளி மணியடிப்பதற்கு முன்பே சென்று விடுவதால் அடி வாங்கிய அனுபவம் இல்லை. காலையில் சீக்கிரமே போய் வேப்பங்கொட்டையை பொறுக்கி ஒரு கூடையிலும், நெட்டிலிங்கம் மரத்திலிருந்து கருப்பு நிறத்தில் விழும் கொட்டைகளைப் பொறுக்கி இன்னொரு கூடையிலும் போட வேண்டும். தினமும் கடமையாக சர்ச்சுக்குப் போய் உள்ளே நுழைந்தவுடன் மனம் முருகனையே நினைக்கும். சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு ஒரு மூலையில் சுவற்றிலே சங்கு வைத்து அதில் இருக்கும் நீரை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பயபக்தியுடன் வகுப்புக்களுக்குச் செல்வோம்.
தினமும் காலையில் பிரேயர் நடக்கும். வரிசையாக எல்லா வகுப்பினரும், அவர்களின் ஆசிரியைகளும் நிற்க, மேடையில் ஒரு மாணவி பிரேயர் சொல்ல, நாங்கள் அதைத் திரும்பச் சொல்ல முடிந்தவுடன் ஏசப்பர் பாடலை ஒலிபரப்ப, மாணவிகள் தத்தம் வகுப்பிற்குத் திரும்பிக் கொண்டிருப்பார்கள்.
இடைவேளையின் போது பள்ளியிலேயே நொறுக்குத் தீனிகள் விற்பார்கள். முறுக்கு, மாங்கா சீசனில் வட்டமாக நறுக்கிய மாங்காயை உப்பு மற்றும் சிவப்பு மிளகாய்தூளில் ஊற வைத்தது, கடலை மிட்டாய், ஜீரா ஊறிய தேன் மிட்டாய், கமர்கட், நெல்லிக்காய், அரை நெல்லிக்காய் என்று வாயில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரங்கள்.
பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் பள்ளி வாசலில் பலவிதமான நொறுக்குத் தீனிகள் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும்! தள்ளு வண்டியில் ஒருவர் ஐஸ்கட்டியை துருவி, அதன் மேல் கலர் கலராக சர்க்கரைத் தண்ணீரை ஊற்றித் தருவார். ஒரு உறிஞ்சலில் கலர் போய் விடும். அதையும் விடுவதில்லை. அடுத்த நாளே, தொண்டை கட்டிக் கொள்ளும் இல்லையென்றால் இருமல் வந்து விடும். ஆனாலும், ஆசை யாரை விட்டது?
ஸ்டேட் ஐஸின் பால் ஐஸ் பத்து பைசாவிற்கு கிடைக்கும். வாயில் வைத்தால் பால் மணத்துடன் இனிப்பான ஐஸ் தொண்டையில் கரையும். பெயர் தெரியாத ஐஸ் கம்பெனி வண்டிக்காரனிடமிருந்து ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் கிடைக்கும். அந்த வயதில் எல்லாமே பிடித்திருந்தது. :)
வரும் வழியில் பாட்டி ஒருவர் குழிப்பணியாரம் சுட்டு விற்றுக் கொண்டிருப்பார். அதையும் விட்டு வைத்ததில்லை. இப்படி எதையாவது சாப்பிட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்வதுமாய் -
ம்ம்ம் ...அழியாத கோலங்களாய் அக்கால நினைவுகள் ...
(தொடரும்)

No comments:
Post a Comment