Tuesday, November 4, 2014

Woodstock , NY

இலையுதிர்கால வார விடுமுறையில் ஏதாவது ஒரு மலைப்பகுதிக்குச் செல்லலாம் என நினைத்து வீட்டிலிருந்து தெற்கே ஒரு மணிநேர தொலைவில் உள்ள Woodstock என்ற ஊருக்குச் சென்றோம்.

Woodstock-ஓவியர்களுக்கும், ஓவியக்கூடங்களுக்கும், கைவினைப்பொருள் வல்லுநர்களுக்கும், இசை விழாக்களுக்கும் புகழ் பெற்ற ஒரு குக்கிராமம் என்று கூடச் சொல்லலாம். இங்கு நடந்த இசைவிழாவால் இவ்வூர் மிக்க பிரபலமடைந்தது என கேள்விப்பட்டேன். குறுகலான தெருக்களில் சிறுசிறு கடைகள், நூலகம், போலீஸ், தீயணைப்பு நிலையங்கள்... என்று அழகு மிளிரும் ஊர். இம்மாதிரி சிற்றூர்கள் நகரங்களை விட அமெரிக்காவின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. வழியெங்கிலும் விளைநிலங்கள், சிற்றூர்களில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சிகள், வண்ண வண்ண இலைகளுடன் மரங்கள் அடர்ந்த மலைகள் என்று ரசித்துக் கொண்டே போக முடியும் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான இடமும் கூட!

நாங்கள் சென்ற அன்று அதிகக் குளிருமில்லாமல் வெயிலுமில்லாமல் 'குளுகுளு'வென்றிருந்தது. கார் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம். குழந்தைகளுடன் குதூகலமாக செல்லும் குடும்பங்கள், கணவன், மனைவி, காதலனுடன் கைகளை கோர்த்துக் கொண்டு காதலி , நண்பர்களுடன் வந்தவர்கள் என்று அனைவரும் வண்டியைத் தொலைவில் நிறுத்தி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கோடை முடிவடைந்ததை ஒட்டி பல கடைகளிலும் தள்ளுபடி விற்பனை வேறு! வேடிக்கை பார்த்துக் கொண்டே சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் சுகம். உணவகங்களில் மிதமான ஒலியில் பாடல்கள் இசைக்க, கண்ணாடி கோப்பைகளில் மதுவை பருகி ருசித்தபடி உரக்கப் பேசி சிரித்துச் சாப்பிடும் மக்கள் கூட்டம்! தெருக்களில் பீட்ஸா , சாண்ட்விட்ச், பழங்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். என்ன தான் வீட்டிலிருந்து சாப்பிட்டு விட்டு வந்தாலும் இவற்றையெல்லாம்  பார்த்தவுடன் மகனும் எனக்குப் பீட்ஸா வாங்கிக் கொடுத்தால் டோனட் வாங்கிக் கொடுக்கத் தேவை இல்லை என்று பேரம் பேச, வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் கண்ணில் பட்ட கடையில் நான் நுழைய, மகள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைவுடன் அவளுக்காக சில பொருட்களை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்கும் விஜயம் செய்ய, மகனோ நிழலில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டான். அவ்வப்போது அப்பாவிடம் ஏன் எங்கு போனாலும் அம்மா ஷாப்பிங் செய்கிறாள் என்று கேட்டது காதில் விழுந்தாலும் என் வேலையை நான் பார்த்துக் கொண்டே தானிருந்தேன்.


விதவிதமான வடிவங்களில் மெழுகுகள், நகைகள், ஆடைகள் , தேநீர் குடுவைகள் என்று பல கடைகள். எனக்குப் பிடித்த பேக்கரி ஒன்றில் நல்ல கூட்டம். அவர்கள் விற்கும் கேக் வகையறாக்கள் நல்ல சுவையுடன் இருக்கும். அங்கு 1968-ல் நடந்த உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சி சம்பந்தமாக பல படங்கள் இருக்கும். பண்டிட் ரவிசங்கர் படத்தையும் முதல் முறை வந்த போது பார்த்ததாக ஞாபகம். இப்போது வேறு சில படங்களை மாட்டியிருந்தார்கள். சில 'ஹிப்பி'களும் அங்கே இருந்தார்கள்! முதன் முதலில் இங்கு தான் ஒருவர் எங்களைப் பார்த்தவுடன் புத்தர் கோவிலுக்கு வந்தீர்களா என்று கேட்டு , அடடா! அப்படி ஒன்று இங்கு இருக்கிறதா என்ன? எங்கே என அவரிடமே விவரங்கள் கேட்டு பிரமாண்ட அந்த கோவிலையும் தரிசித்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

அதே தெருவில் பாண்டிச்சேரி , மீராபாய் என்ற இரு கடைகளிலும் நம்மூர் கைவினைப்பொருட்கள், யோகா, தியானம், ஸ்ரீ அரவிந்தர், கடவுள்கள் பற்றிய புத்தகங்கள், சுவாமி சிலைகள் என்றுகிடைக்கிறது. இந்தியர்கள் என்றவுடன் ஒரு சிநேக சிரிப்பு. செல்ல குசல விசாரிப்பு!

வழியில் ஒரு ஹிப்பி கும்பல் தங்களை மறந்து 'புகைத்துக்' கொண்டிருந்தார்கள்!

மீண்டும் வந்த வழியே திரும்பும் பொழுது மறக்காமல் பீட்ஸா ஆர்டர் பண்ண, அங்கிருந்தவரும் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ஆல்பனி என்றதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனக்குச் சிவகுமார் என்று ஒரு சவுத் இந்திய நண்பன் இருப்பதாகவும், தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். பீட்ஸா நன்றாக இருக்கு என்று மகனும் சாப்பிட்டுக் கொண்டே வர,

அருகிலிருக்கும் மாதாகிரி என்ற தியான மையத்திற்குச் சென்றோம். ஸ்ரீஅரவிந்தர், அன்னை மேல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்படும் இந்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தியானம் செய்து விட்டு வரலாம். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் அடிக்கடி பாண்டிச்சேரி விசிட் செய்பவர்கள். நன்றாக அன்புடன் பேசுவார்கள். அருகிலிருக்கும் நகரங்களில் இருந்தும் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சிறிய அறையில் ஸ்ரீஅரவிந்தர், அன்னை படங்களை வைத்து நாற்காலிகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். என் கணவர் சிறிது நேரம் தியானம் செய்ய நாங்களும் அமைதியாக இருந்தோம்.

அப்பப்பா! வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது தான் எவ்வளவு கடினமான வேலை!!!

சிலுசிலுவென்ற காற்று, உறுத்தாத வெயில், அழகான மலைகள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மகனும், நானும் சிறிது நேரம் வெளியில் அமர்ந்திருந்தோம்.

சரி, பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் புத்த மடாலயம் செல்லலாம் என்று கிளம்பி வழியைத் தவற விட்டு, அங்கேயும் இங்கேயும் கேட்டுக் கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். வழியைத் தவற விடுவதிலும் ஒரு வசதி. உள்ளூர் சாலைகளில், ஆள்அரவமற்ற தெருக்களில், பெரிய பெரிய வீடுகளில் தங்கியிருப்பவர்களையும், அழகிய பழங்காலத்து வீடுகளையும் பார்த்துக் கொண்டே வரலாம். எப்படித்தான் இப்படித் தனியாக ஒதுங்கி இருக்கிறார்களோ என்றுயோசிக்க வைக்கும்! வீடுகள் ஒவ்வொன்றும் ஏக்கர் பரப்பில் இருக்கிறது.  வீட்டுக்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரிவதற்கு சான்ஸே இல்லை!  மக்கள் புடைசூழ வாழ்ந்து பழகி விட்டதால் இவர்களுக்கு ஒன்று என்றால் எப்படி வெளி உலகத்தைத் தொடர்பு கொள்வார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது!

சிறிது தொலைவில் மலை மீது திபெத்திய புத்த மடலாயம் அதற்கே உரிய கோபுர அழகுடன் தெரிய நிம்மதி ஆயிற்று. இது வடஅமெரிக்காவின் மிகப் பெரிய மடாலயம் என்றும் மலைகளும், ஆறு, ஏரி, குளங்களும் சூழ இருக்கும் இந்த இடத்தைத் தலைமை புத்தகுரு தேர்ந்தெடுத்ததாகவும் முதல்முறை அங்குச் சென்றிருந்த பொழுது நிர்வாகிகளுள் ஒருவரான ஓர் அமெரிக்கப் பெண்மணி கூறினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. வண்ண வண்ணத் துணிகளாலான கொடிமரங்கள் மலைகள் சூழ அந்த இடம் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. பல அமெரிக்கர்களும், சில ஆசியர்களும் வந்திருந்தார்கள். அனைவர் முகங்களிலும் ஒரு வித அமைதி அல்லது என் பிரமை?
கோவில் முழுவதும் சிவப்பு, மஞ்சள், நீலம் என்று வண்ணக் கலவையாகக் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தீப ஒளியில் விளக்குகள் ஜெகஜோதியாக மின்ன தியான நிலையில் பிரமாண்ட புத்தர்! அவர் எதிரே அமர்ந்து தியானம் செய்ய குஷன் நாற்காலிகள் நேர்த்தியான வரிசையில்! அங்கு நிலவிய மௌனமே அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி விடும் போல!

புத்தரின் காலடியில் தற்போதைய மட நிர்வாகியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. லக்ஷ்மி, விஷ்ணு, சிவன் வடிவில் பல புத்தர்கள்! அலங்காரங்களோ மனதையும் கண்களையும் கொள்ளைகொள்ளும் விதத்தில்! துறவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்கிறார்கள். அவர்களுடைய இசைக்கருவிகளும் கேட்பதற்கு வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மலர்கள், சர்க்கரை, அரிசி இன்னும் பல பிரசாதங்கள் கிண்ணங்களில் அழகாக வைக்கப்பட்டிருந்தது.

வெளியில் மந்திரங்கள் எழுதிய உருளைகளை உருட்டி விட்டு வந்தோம். வார இறுதியில் கோவிலில் தொண்டு செய்ய கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். தியான வகுப்புகளும் அங்கிருந்து தங்கி மனம் இளைப்பாறவும் வசதிகள் இருக்கிறது. அதற்கென்று தனிக் கட்டணமும் வசூலிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த சூழ்நிலையில் அங்கிருப்பது நிச்சயம் மன அமைதியைத் தரலாம்.

அமைதியான சூழலில் சிறிது நேரம் அங்கே அமர்ந்து என் கணவர் தியானம் செய்ய, நானும் மகனும் வெளியில் வந்து அங்கிருந்த வயதான புத்தத் துறவியுடன் பேசிக் கொண்டிருந்தோம். ஹிந்தி தெரியுமா என்று அவர் எங்களை கேட்க, ஹ்ம்ம், நம்பள பார்த்தா ஹிந்தி பேசுற மூஞ்சி மாதிரியா இருக்குதுன்னு கேட்க ஆசை தான். ஒரு அசட்டு சிரிப்புடன் சிரித்துக் கொண்டே ஹிந்தி நஹி மாலும், தோடா தோடா என்று மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் ஆங்கிலத்திலும் சொல்ல, உங்களைப் பார்த்தால் ஹிந்திக்காரர்கள் மாதிரி இருக்கிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்பிடித்தான் ஊர்ல பலரும் நெனச்சுக்கிட்டு ஹிந்தியில பேசி கொல்றாய்ங்க...ம்ம்ம்!

இந்தியாவில் எந்தப் பகுதி என்று எங்களை கேட்க, மதுரை, தமிழ்நாடு என்றவுடன், ஓ! சென்னை, பாண்டிச்சேரிசென்றிருக்கிறேன். தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார் அந்த வயதான துறவி! (ஹ்ம்ம். தோசை பிடிக்கும்னு சொன்ன இரண்டாவது நபர் இவர்! ) பனாரஸ் பல்கலையில் சம்ஸ்க்ருதம் படித்தாகவும், நான்குவகையான புத்த பிரிவில், இவர்கள் கர்மபா என்ற பிரிவைச் சார்ந்தவர்கள், தலாய்லாமா வேறொரு பிரிவைச் சார்ந்தவர் என்றும் சாந்தமாக சிரித்துக் கொண்டே பேசினார். இந்த மடத்திற்கு தலாய்லாமாவும் ஒரு முறை வந்திருக்கிறார்.

சிங்களத்தில் இருப்பவர்கள் எந்த பிரிவு என்று கேட்க நினைத்து விட்டு விட்டேன்.

அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வர,  கணவரும் படங்கள் எடுத்து முடித்து விட, வீடு நோக்கிப் புறப்பட்டோம் 






























No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...