Sunday, November 15, 2015

நினைக்கத் தெரிந்த மனமே...

இம்முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது புட்டு வாங்க அரசமரம் செல்வதற்கு முன் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று தம்பி என்னை அழைத்துச் சென்றான். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்றேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க ஆவலாகத் தான் இருந்தது.

செயின்ட் மேரிஸ் பள்ளியிலிருந்து செயின்ட் ஜோசப் பள்ளி வரை கடைகள் நிரம்பி வழிய, மிஷன் ஆஸ்பத்திரியின் வளர்ச்சியோ கட்டிடங்களாய் பிரமாண்டமாய் வளர்ந்து விட்டிருந்தது. மெயின் ரோடிலிருந்து கால்வாய் அருகே பிரிந்து செல்லும் தெரு இன்னும் குறுகி மேடு பள்ளங்களுடன் அன்று போல் இன்றும் கால்வாய் நாற்றத்துடன் பால்யகால நினைவுலகத்திற்கே கொண்டு சென்றது. தம்பியும் பாரு, அந்த பலசரக்கு கடை இன்னும் இருக்கு என்று ஒரு கடையை கடந்தவுடன் சொன்னவுடன் தான், ஆமா! இங்க ஒண்ணு இருந்தது! அதற்கு எதிர்ப்புறம் கூட அம்மாவின் சித்தப்பா பெண் வீடு இருந்ததே. கடவுளே! எல்லாம் மாறி விட்டிருக்கிறது. இங்க தான ஒரு டெய்லர் கடை இருந்தது? இந்தச் சந்தில் என்னுடன் படித்தவர்கள் வீடும், குச்சி ஐஸ் செய்யும் கடையும், அதைத்தாண்டி சென்றால் தெருவே மணக்கும் கருவாடு விற்பவரின் வீடு...மனம் அலைபாய...

பெரிய விறகுக்கடை இங்கிருந்தது. சாயப்பட்டறைக்கு அங்கிருந்து தான் வாங்குவதுண்டு. அவ்வளவு பெரிய தராசு! அங்கிருக்கும் எடைக்கற்கள் தூக்க பிரயத்தனப்பட்ட நாட்கள், கால்ல போட்டுக்காதே, வேண்டாம்மா...பதறுவார் விறகு கடைக்காரர். எதிரே கரிக்கடை, அங்கே வேலை செய்பவர் பாவம் கறுத்தே இருப்பார்! நல்ல பெரிய பெரிய கரித்துண்டு வாங்கிட்டு வரச் சொன்னாங்க, பணம் அம்மா வந்து கொடுப்பாங்க...கையில் கரி பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாய் வாங்கிச் சென்ற நாட்கள் நிழலாடின.

எதிரில் அப்பாவின் சித்தி வீடு. எனக்கு மிகவும் பிடித்த வீடும் கூட. உள்ளே நுழைந்தால் ஏதோ கிராமத்து வீடு போல இருக்கும். ஆடு, கோழி, மாடுகளுடன் சாயப்பட்டறை என்று பெரிய இடம். கூட்டுக் குடும்பம். முட்டைமேல் அடைகாக்கும் கோழியை வேடிக்கை பார்த்தது , குஞ்சுகளை கையிலெடுத்து கொஞ்சியது, கொய்யா, எலுமிச்சை மரங்கள், சாணி மணக்க மாடுகள் என்றிருக்கும் அங்கு பாட்டியுடன் அடிக்கடி விஜயம் செய்ததது இன்று அடையாளமே தெரியவில்லை! அத்தைகளும், மாமாக்களும் மிகவும் அன்பானவர்கள்! ம்ம்ம்...

இதோ, இங்கே தான் பெரியப்பா வீடு. சாயப்பட்டறையுடன் பெரிய உயரமான மாடியுடன். எதிர் வீட்டில் கூட அப்பாவின் உறவுகள் தான். தெரு முழுவதுமே தெரிந்த உறவுகளும், பங்காளிகளும் என்று ஒருவொருக்கொருவர் அனுசரணையாக இருந்தது நினைவிற்கு வந்தது.

நாங்கள் இருந்த தெரு அந்த கால சிம்ரனின் இடுப்பை போல் குறுகி இருந்தது. வீட்டின் முன் நானும் தம்பியும் அமைதியாக நின்று கொண்டிருந்தோம்.
அன்று ஒரு பெரிய வீடு. இன்று பல வீடுகளாய் வளர்ச்சியடைந்திருந்தது!அதோ அந்த வாசலில் உட்கார்ந்து கடந்து செல்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார் பாட்டி. பூர்விக வீட்டை வாங்கி விடு என்று அப்பா சொன்னாலும் ஏனோ மனம் ஒப்பவில்லை. பாட்டி இல்லாத வீடு... இவ்வளவு வருடத்திற்குப் பின்னும் பாட்டியை நினைத்து ஏங்குகிறேன். தி கிரேட் பாட்டி!

நாங்கள் சென்றிருந்த நேரம் அதிகாலை மற்றும் விடுமுறை ஆதலால் தெருவில் யாரும் இல்லை. பெண்கள் எழுந்து வாசல் தெளித்து விட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டார்களோ? குழந்தைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். மூன்றாம் நான்காம் ஜாமம் முடிந்தும் சுகமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

அப்பாவிடம் அடி, அம்மாவிடம் திட்டு, பாட்டியிடம் புலம்பல், அக்கா, தங்கை, தம்பிகளுடன் நான் பண்ணிய அலம்பல்கள், தெருவே கதி என கிடந்த என் சிறுவயது நாட்கள், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று முழங்கால் அடிபட்ட நாட்கள், தெருப்பெண்களுடன் பல்லாங்குழி, கபடி, பாண்டிச்சில்லு என விளையாடியது, சேர்ந்து உண்டது, வேடிக்கைப் பேச்சுக்கள், வயதில் மூத்த பெண்கள் சொல்லும் பேய்க்கதைகளை பயத்துடன் கேட்டு புளிய மரம், வேப்ப மரம் என்றாலே பயந்து நடுங்கியது...பேய், பிசாசு என்று இல்லாத ஒன்றை கண்டு மிரண்டது, மெதுவாக திரும்பி பார்த்தேன், கால்வாயின் மறுபுறத்தில் மிஷன் ஆஸ்பத்திரியை சேர்ந்த புளிய, வேப்ப மரங்கள் ...காணாமல் போய் கட்டிடங்களாய் ...

அம்மா, பேய்ன்னு ஒன்னு இருக்கா? யாரு அப்படியெல்லாம் சொன்னது. அதெல்லாம் ஒன்னும் கிடையாது. பாட்டி , பேய் எப்படி இருக்கும்? ஐயோ, பிள்ளை எதையோ பார்த்து பயந்து போய் கெடக்குன்னு தெற்குவாசல் மசூதியில் வெள்ளிக்கிழமை மந்திரிப்பு, கோவிலில் வேண்டி தாயத்து...அதையே சாக்கா வைத்து பள்ளிக்குப் போக மாட்டேன் என்று நான் பண்ணிய சேட்டைகள்...

அம்மாவுடன் மார்க்கெட் சென்று சீசனுக்கு வரும் ஒரு பழங்களையும் விடாமல் வாங்கிச் சாப்பிட்டது...தெரு எதிரே தான் பலாப்பழம், நுங்கு, கொடை ரோடு ப்ளம்ஸ், மலைப்பழம், சீத்தாப்பழம் , நவ்வாப்பழம் , நெல்லிக்காய், கடுக்காய்ப்பழம், இலந்தப்பழம், மாம்பழம் என்று சீசனுக்கேற்றார் போல் விற்கும் தோல்கள் சுருங்கிய பாட்டி ஈ ஒட்டியபடி இருப்பாள். எவ்வளவு பொறுமையாக எண்ணெய் தொட்டு பலாப்பழ சுளையை பதமாக பிரித்தெடுப்பார். அதை வேடிக்கை பார்ப்பதிலும் சுகம்!

வீட்டில் குடியிருந்த ரேஷன், சலூன், பலசரக்கு, பொரிகடலை, கறிக்கடைகள், குடியிருப்பவர்கள் என்று எல்லோரையும் நினைத்துக் கொண்டோம். படிப்பறிவு இல்லாத அண்ணாச்சி மனக்கணக்கு போடுவதை படிக்காமல் எப்படி இவரால் கணக்கு போட முடிகிறது என்று வியந்திருக்கிறேன்! கறிக்கடையில் அம்மா காலையிலேயே ஆட்டுத்தலையும், காலும் வேண்டுமென்று சொல்லி விடுவார்... அவர்களும் வியாபாரம் முடிந்தவுடன் தீயில் வாட்டிக் கொடுக்க...அன்று தலையும், காலும் வைத்த கொழுப்பு மின்ன சுவையான அம்மா கையால் செய்த சூப். சுடச்சுட குடும்பத்துடன் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்ட நாட்கள் ...பனி, மழைக்காலங்களில் அதிகம் இந்த சூப் வைத்துக் கொடுப்பார். சுவரொட்டி, கல்லீரல், ரத்தப்பொரியல், குடல் குழம்பு என்று ஒன்று விடாமல் சாப்பிட்டு ருசியை கண்டறிந்த காலங்கள்...ம்ம்ம்...

இந்த வாசலில் தான் குமுதம், விகடனுக்காக காத்திருந்து அக்கா தங்கையிடம் சண்டை போட்டுக் கொண்டு நகம் கடித்துக் கொண்டே முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை விடாமல் படித்ததெல்லாம் ஞாபகம் வருதே...

வீட்டின் அருகில் இருந்த கல் வாசலில் தோளில் மெஷினை வைத்துக் கொண்டு வரும் தையல்காரரிடம் தைப்பதற்க்கென்றே சிலவற்றை வைத்திருப்பார் அம்மா. வெயிலில் அலைந்து திரிந்து நிறம் கறுத்து குடித்து குடித்து சிவப்பேறிய கண்களுமாய், மலிந்த ரக பீடி குடிக்கும் தையல்காரரை பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் குனிந்த தலை நிமிராமல் நேர்த்தியாக அவர் துணிகள் தைப்பதை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த சிறு தையல் மெஷினுக்குள் கத்திரிக்கோல் முதல் நூற்கண்டுகள், ஊசி என பலதும் இருக்கும். மதிய நேரம் வரை வேலை இருந்தால் சாப்பாடும் கொடுத்து விடுவார் அம்மா. நியாயமாக கொடுக்கிற காசை வாங்கிக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்து வேலை செய்கிறவர்கள் இப்போது இருக்கிறார்களா என்ன?

குப்பைத் தட்டு செய்ய பான்ட்ஸ் பவுடர் டப்பா, எண்ணெய் கேன்கள் தயாராக இருக்கும். அவர் குரல் கேட்டால் போதும் தெருவே பரபரத்து பரண் மேல் இருக்கும் சாமான்களை கொடுத்து அவரும் தட்டி தட்டி ஆணி அடித்து அழகாக குப்பைத்தட்டு செய்து கொடுப்பதை குழந்தைகள் நாங்கள் எல்லோரும் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.

பாத்திரங்களில் பேர் வெட்றது என்று ஒருவர் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டே வருவார். திருமணங்களுக்கு, வீட்டு விஷேசங்களுக்கு பரிசாக கொடுக்கும் பாத்திரங்களில் பெயர் அடித்து கொடுப்பது அன்றைய வழக்கம். இன்றும் என் திருமணத்திற்கு வந்த பாத்திரங்களில் பெயரை பார்க்கும் போதெல்லாம்கொடுத்தவர்கள் நினைவிற்கு வந்து செல்கிறார்கள்! இன்றோ யாருக்கும் உபயோகப்படாத பரிசுகளை வாங்கிக் கொடுத்து குப்பைகளை பெருக்குகிறோம். ஒரு வீட்டு கிரகப்ரவேசம் என்று சொன்னால் போதும் முக்கால்வாசிப் பேர் கடிகாரம் கொண்டு வந்து நிற்கிறார்கள். திருமணத்திற்கும் அப்படித்தான்! பேர் அடித்து பாத்திரங்கள் கொடுப்பது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டது போல!

பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், பொம்மைத் தலையுடன் குச்சிமிட்டாய் என்று குழந்தைகளை மகிழ்விக்க வியாபாரிகள் தெருவில் வந்து கொண்டிருந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது. யார் வந்தாலும் தெருக் குழந்தைகள் வாங்குகிறார்களோ இல்லையோ வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அஞ்சு பைசா வாட்ச் மிட்டாய் அநேகமாக அனைவர் கையிலும் பிசுபிசுத்துப் போகும் வரை இருக்கும்.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா என்று எதற்கெடுத்தாலும் கிண்டலடிக்கும் இத்தலைமுறை அதை கண்டிருக்குமா என்ன? நிச்சயதார்த்தம் முதல் தியேட்டரில் அடுத்து வருகிற படத்திற்கான விளம்பரங்கள் வரை அந்த லைட்டின் துணையில்லாமல் நடந்ததில்லை. போஸ்டரை ஒட்டிக் கொண்டு தள்ளு வண்டிகள்... அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே பின்தொடரும் சிறுவர் பட்டாளம்...இரவு நேரங்களில் வரும் குல்ஃபி ஐஸ், பஞ்சு மிட்டாய்...காத்திருந்து சாப்பிட்ட காலங்கள்...

மாலையில் சிறிது நேரம் அடுத்த தெருவில் புல்லாங்குழல் செய்பவர்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. அவர்கள் பேசிக்கொண்டே நெருப்பில் இருந்து இரும்புக்குச்சியை எடுத்து துளையிடுவதை ஆச்சரியமாக ரசித்ததுண்டு. என் சிறுதீனிக் கடைகள்...கமர்கட், பூஸ்ட் மிட்டாய், கடலை, தேங்காய், பாக்கு மிட்டாய்கள், நியுட்ரின் , எக்லேர்ஸ் சாக்லேட்டுகள் , மேரி, ட்ரூ நைஸ் , பொம்மை ரொட்டிகள்...என்று சதாசர்வ காலம் நொறுக்கிக் கொண்டிருந்த நான்!

ஆமவடை, உளுந்த வடை, தூள் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜியின் மேல் காதல் வந்ததே இரண்டாவது தெருவில் இருந்த கடையால் தான். காலையில் அப்பம் சாப்பிடவே வீட்டு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்துக் காத்திருப்பேன். அப்பத்திற்க்கென்றே குழியான மண்பாத்திரம், அதற்கு ஒரு மூடி, அதுவும் மண்பாத்திரமே! வெண்ணெய் போட்ட அப்பம் கருப்பட்டி ஏலக்காய் மணக்க வாயில் வைத்தாலே கரையும் ...மாவை ஊற்றுவதும், பிய்க்காமல் எடுப்பதும்...சமையல் மேல் ஆர்வம் வந்ததும் அவரால் இருக்குமோ?

மூன்றாவது தெருவில் இருந்த மார்க்கெட்டில் தான் முற்றல் இல்லாத காய்களை பேரம் பேசி எப்படி வாங்குவது என அம்மாவிடம் கற்றுக் கொண்டது! மிகவும் பிடித்த மதுரை மல்லி , பிச்சி, முல்லைப்பூக்களை அழகான திண்டிகளாக கட்டும் நேர்த்தியை கண்டு மனம் மயங்கியது மூன்றாவது தெருவில் தான்! மாலை நேர நொறுக்குத்தீனிகள் முறுக்கு, நெய்கடலை, மசாலா கடலை, காராபூந்தி, மைசூர்பாகு, ஜிலேபி, காராசேவு, ஓமப்பொடி, பக்கோடா விற்கும் கடைகள்...ம்ம்ம்...இன்னும் மணம் காற்றில் வளைய வருகிறதோ???

அரிசி, பருப்புக் கடைகள்...விழாக்காலங்களில் கூட்டம் அலைமோதும் சேலை, காதணி கடைகள்...பலசரக்கு கடைகளில் ஐந்து கிராம் முதல் இருபது கிலோ வரை பேப்பரில் தான் மடித்துக் கொடுத்தார்கள். பிளாஸ்டிக் குப்பை பூதங்கள் வராத பொற்காலம் அது. ஹோட்டல்களில் வாழை இலையில் வைத்து தான் இட்லி, தோசைகளை மடித்துக் கொடுப்பார்கள். சாம்பாருக்கு வீட்டில் இருந்தே தூக்குச் சட்டி கொண்டு செல்ல வேண்டும். இன்று போல் மட்டமான பிளாஸ்டிக் குப்பைகள் அன்று இல்லை. துணிக்கடைகளும் மஞ்சள் பையை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தது. இன்றைய சுற்றுச்சூழலை கெடுப்பது போல் மக்காத பிளாஸ்டிக் பைகள் இல்லை. எப்படித்தான் மாறி விட்டோம்!

பள்ளி விட்டு வந்தவுடன் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஐந்து தெருக்களையும் சுற்றி வந்த பட்டாம்பூச்சி நாட்கள்...இன்று குழந்தைகளை வெளியே அனுப்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புழுதி, போக்குவரத்து, இடித்து விட்டு மனசாட்சியே இல்லாமல் செல்லும் கூட்டம் என்று குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டிய கொடுமையான நிலைமை...மனம் புதிய, பழைய நினைவுகளில் அலைக்கழிக்க, நான் பிறந்து வளர்ந்த வீட்டை சில படங்கள் எடுத்துக் கொண்டு நானும் தம்பியும் கொஞ்சம் வருத்தத்துடனே கிளம்பினோம்.

டிவி இல்லாத நாட்களில் வானொலியில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்கள் தான் இன்று வரை துணையாக இருக்கிறதோ? அந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையின் வேகம் ஒரு வித ஏக்கத்தை தான் தரும்.

என் மன வானில் நான் சிறகடித்து பறந்த அந்த நாட்கள் தான் எத்தனை இனிமையாக...வாழ்க்கை அன்று அவ்வளவு சுமையானதாக இல்லையோ? முகமறிந்த மனிதர்களுடன் அளவளாவியது போய் முகமறியா நட்புகள் என்று வாழ்க்கை வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறது.

உறவுகளுக்கும், குடும்பங்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை குறைத்து தன்னை மட்டுமே முன்னிறுத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை நீரோட்டத்தில் மக்கள் ஓடுவதைப் பார்த்தால்...ம்ம்ம்...அயர்ச்சியாக இருக்கிறது.









Thursday, September 24, 2015

ரயில் பயணங்களில் ...

ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தாலும் பெங்களூரிலிருந்து மதுரைக்கு முதன்முறையாக இரவில் தனிமைப் பயணம்... சிறிது அச்சத்துடனே பயணித்தேன்!

சில நிமிடங்களே நிற்கும் ரயில்வே ஸ்டேஷன் என்றதால் தம்பி குடும்பத்துடன் பல நிமிடங்களுக்கு முன்பே ஆஜராகி விட்டோம். எல்லோரும் சேர்ந்து போக வேண்டியது ஏனோ தம்பியின் கடைசி நிமிட வேலை செய்த குழப்பத்தில் டிக்கெட்டை கான்சல் செய்ய வேண்டியதாயிற்று!

சுத்தமாக இருந்த ரயில்வே நிலையத்தில் அந்த ஒரு பிளாட்பாரத்தில் மட்டுமே வரிசையாக ரயில்கள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டுச் செல்ல, இரவுப்பயணம் தான் என்றாலும் 'பளிச்'சென்று இருந்தார்கள் பலரும்! சிலர் சோகமாகவும், சிலர் சிரித்த முகத்துடனும் ரயிலில் பயணிகளை ஏற்றி விட்டு ஜன்னல் அருகே நின்று பேசிக்கொண்டும் வண்டி புறப்பட கையசைத்துக் கொண்டே விடைபெறுவதுமாய் என ரயில் நிலையத்துக்கே உரிய காட்சிகள்!

ரயில் வந்து நின்றவுடன் அதனுடனே வந்த மூச்சை அடைக்கும் மூத்திர நாற்றம்... என்று மாறுமோ இந்த நிலை என்று ஏங்க வைத்தது. வண்டி கிளம்பியவுடன் அந்த நாற்றமும் மறைந்தது தான் ஆச்சரியம்! இரண்டு மூன்று ரயில்கள் வருவதும், மக்கள் இறங்குவதும், ஏறுவதும்,  கன்னட, ஹிந்தி மொழிகளில் கனத்த குரலில் அறிவிப்பாளர்களின் பேச்சு புரியாவிட்டாலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல வேளை, ஆங்கிலத்திலும் சொன்னதால் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள் தப்பித்தார்கள்!

நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட, பார்த்து பத்திரமா போ! செல்போன் எடுத்துக்கிட்டியா?? எப்ப வேணுமினாலும் கூப்பிடு, பரபரத்தான் தம்பி. தனியாகச் செல்லும் என்னைப் பற்றி அவனுக்குத் தான் அதிக கவலை! ஒண்ணும் பயமில்லை. நான் பார்த்துக்கறேன்- சொல்லி விட்டேனே தவிர எனக்குள்ளும் உள்ளூர உதறல் தான் :( இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கி இருந்திருக்கலாம். நீ வந்ததில் நாட்கள் போனதே தெரியவில்லை. அடுத்த தடவை பாவா, குழந்தைகளுடன் வரும் போது ஒரு வாரமாவது தங்கி இருக்கிற மாதிரி ப்ளான் பண்ணிட்டு வா. முடிஞ்சா அடுத்த வாரம் நானும் மதுரை வரப்பார்க்கிறேன்.

சரி, நீயும் பத்திரமா இரு. போயிட்டு வர்றேன் என்று தம்பி குழந்தை, மனைவியிடமும் சொல்லி விட்டு வண்டியில் ஏறியாச்சு! தம்பியும் வேகமாக என் பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு சீட்டுக்கு அடியில் தள்ள முயற்சிக்க அதுவோ மக்கர் பண்ண, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் வந்து உதவி செய்ய அவருக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, சரி சரி, நீ இறங்கு வண்டி கிளம்ப போகுது!! 

இனி அடுத்த வருடமோ, இரண்டு வருடம் கழித்தோ தான் பார்ப்போமோ என்னவோ?? வருத்தமாக இருந்தது.

எனக்கு எதிரே இருந்தவர் அடிக்கடி ரயில் பயணம் செய்பவர் போல. நிமிடங்களில் விரிக்கையைப் போட்டு தன் படுக்கையை தயார் செய்து கொண்டு TTRக்காக காத்திருந்தார். ஏனோ ஹோட்டலில் ஆற அமர சாப்பிடாமல் 'லபக் லபக்' என்று வாயில் உருட்டித் தள்ளுபவர்கள் ஞாபகம் வந்தது. நானும் என் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலேயே 'கோட்டு' போட்டுக் கொண்டு வந்த TTR பாஸ்போர்ட் வாங்கி சரிபார்த்து விட்டு அவர் பேப்பரில் 'டிக்' அடித்து விட்டு நகர, என் போர்வை, தலையணை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்திவிட்டு சிறிது நேரம் மூடியிருந்த ஜன்னல் வழியே நகரை வேகமாக முந்திக்கொண்டுச் செல்லும் ரயில்பாதையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நண்பர் ரத்தினக்குமார் வேறு ரயிலில் எலி இருக்கும் என்று பயமுறுத்தியிருந்தார். ஞாபகம் வந்தவுடன் 'சடக்'கென்று காலை மேலே தூக்கி வைத்துக் கொண்டேன். அடுத்த மூன்று இருக்கைகளில் கணவன், மனைவி ஒரு பெண்குழந்தை. அப்பா, அம்மா இருவரும் அவர்கள் தாய்மொழியில் குழந்தையிடம் பேசினால் அவள் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். NRI போல!! :) அவர்களுக்கும் அடுத்த இருக்கையில் அப்போது தான் கால் முளைத்து நடை பயிலும் ஒரு சிறு குழந்தை. கள்ளம்கபடமற்ற சிரிப்புடன் புதுமுகங்களை பார்த்துக் கொண்டே ரயிலின் ஆட்டத்துடன் அவனும் சேர்ந்து ஆடியபடியே கம்பார்ட்மெண்ட் முழுவதும் வளைய வந்து கொண்டிருந்தான். ஏண்டா , இப்படி படுத்தறே??? என்ற அவன் தாயின் கேள்வியில் களைப்பும் வருத்தத்தையும் விட அன்பும் பெருமையும் தான் இருந்ததாக தோன்றியது எனக்கு! அத்தனை ஆட்டம் போட்ட குழந்தை விளக்குகள் அணைந்த மறுநொடியே தாயிடம் அடைக்கலமாயிருந்தான் !! என்னைத்தவிர பலரும் தூங்கியே விட்டிருந்தார்கள். கடவுளே, யாரும் குறட்டை விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே படிக்கவேண்டிய புக்கை எடுத்து வைத்துக் கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர ஆரம்பித்தேன்.

புத்தகத்தின் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

ரயிலின் ஆட்டமும் ஊருக்கு வந்த நாளிலிருந்து தூக்கம் சரிவர இல்லாத களைப்பும் சேர்ந்து கண்ணை அழுத்த எப்பொழுதுஉறங்கினேன் என்றே தெரியவில்லை. 'க்ரீச்' என சக்கரம் தண்டவாளத்தை உரசி நிற்கையில் தூக்கம் களைந்து பார்த்தால் சேலத்தில் வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் இரண்டரையோ என்னவோ! அந்த இரவிலும் சிலர் இறங்குவதும் ஏறுவதும் என ஒரு சிறு பரபரபப்பு.

'தடக் தடக்' என மீண்டும் வண்டி புறப்பட, தூக்கமும் கண்களைத் தழுவ, அடுத்து ஈரோட்டில் நிற்க, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கணவர் மடியில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தவிர வேறு மக்கள் கூட்டம் அதிகமில்லை. அவர்களுக்கான ரயில் இனிமேல் தான் வருகிறது போல! சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நின்றது. 

தூக்கம் விடை பெற, விடிந்தும் விடியாத காலைப்பொழுதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கம்பார்ட்மெண்டில் என்னைத்தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்!!! அமைதியான அழகான மனதை வருடும் காலை நேரப்   பயணங்கள் எனக்குப் பிடித்தமான ஒன்று. கரூரை நெருங்கும் வேளையில் விடிய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிது விளைநிலங்கள், ஓங்கி வளர்ந்த பனை, தென்னை மரங்கள், நெருஞ்சி முள்ளாய் கருவேல மரங்கள் வழியெங்கும் வறண்டு கிடந்த நிலங்களை கண்டு ஏனோ மனம் நெருடியது. வாழ்வாதாரமாய் இருந்த விவசாயம் கண்முன்னே கருகிக் கொண்டிருக்கிறது! ம்ம்ம்...

நன்றாகவே விடிந்து விட்டது இப்பொழுது. வண்டியும் கொஞ்சம் வேகமாக செல்வதைப் போல இருந்தது. செம்மண் நிலங்கள், பின்புலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோ??? பறவைகள் பறந்து செல்வதும், ஆடு, கோழி, மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதும், காலைக் கடனை கழித்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்று ரயிலுக்கு மரியாதை செலுத்துவதும், ரயில் பாதையை ஒட்டி இருக்கும் வீடுகளில் பெண்கள் வாசல் தெளித்து கோலமிடுவதும் என காலைநேரக் காட்சிகளுக்கு குறைவில்லை!

திண்டுக்கல் நெருங்கும் போதே தண்ணீர் பாய்ச்சிய விளைநிலங்கள் மனதை கொள்ளை கொண்டது. பூந்தோட்டங்கள், கீரை, காய்கறிச் செடிகள், நெல், வாழை, தென்னந்தோப்புகளுடன் சோழவந்தான் பசுமையில் திளைத்துக் கொண்டிருக்க...இயற்கை அன்னையின் அரவணைப்பில் கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த ஊர் அப்படியே இருக்க வேண்டும். மாறி விடக்கூடாது ... அத்தனைக்கும் ஆசைப்படு மனமே!

அடுத்து வந்த காட்சிகள் மதுரையை நெருங்கி விட்டதை பறைசாற்றியது!!! எங்கும் ஈ மொய்க்கும் குப்பை மேடுகள், அதைச் சுற்றி குட்டிகளுடன் பன்றிக்கூட்டங்கள்,  ரயில் சந்திப்புகளில் பொறுமையில்லா மனிதர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பேருந்துகள், லாரிகள், சைக்கிள், பைக்குகளின் அணிவகுப்புகள்...சுற்றிலும் கட்டிடக்குவியல்களுடன் வறண்ட குப்பை மேடாய் வைகை! தேங்கியிருக்கும் குட்டை நீரில் வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க...பொதி மூட்டையை சுமந்து வந்த கழுதைகள் 'தேமே' என்று நின்று கொண்டிருக்க, அவிழ்த்து விட்ட மாடுகளும், எருமைகளும்தேங்கி இருக்கும் நீரில் குளியல் போட்டுக் கொண்டிருக்க...காட்சிகளுக்கு என்றுமே குறைவில்லை!

மதுரை சந்திப்பு என்று மஞ்சள் வண்ணம் அடித்த போர்டை பார்த்தவுடன் வந்த குதூகலத்தை வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை! அதோ அம்மா, அக்காவின் மகன்கள்...அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார்கள்! வண்டியில் இருந்த பலரும் மதுரையில் இறங்கினார்கள். வண்டியும் அதிக நேரம் நின்றது! ரயில்வே ஸ்டேஷனுக்கே உரிய பல மொழித்தகவல் அறிக்கையும் மணிச்சத்தமும் கூடுதலாக தமிழ் பேச்சும்,...ஹையா!!! ஊருக்கு வந்துவிட்டேன்! 

அம்மா தான் வயதாகி துவண்டு விட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவருக்கும் ஆனந்தம்! அக்கா மகன்களும் நன்கு வளர்ந்திருந்தார்கள்! அவர்களைப் பார்த்து நான்கு வருடமாயிற்றே! அவசரஅவசரமாக பெட்டிகளை இறக்கி பேசிக்கொண்டே தானியங்கி மாடிப்படிகளில் இறங்கி வெளியில் வந்தால் வாங்கம்மா, சார் எப்படி இருக்கிறாரு?? குழந்தைங்க எப்படி இருக்காங்க? ஏன் அவங்கள்லாம் வரலே என்று பழகிய பாசத்துடன் டிரைவர் அண்ணன்.

மதுரை வெக்கை வரவேற்க, அம்மாவைப் பார்த்ததில், ஊருக்கு வந்ததில் சில நாட்களுக்கு அமெரிக்காவா?? அப்படின்னா... :)

Saturday, September 5, 2015

வெள்ளி விழா கொண்டாட்டம் - 3


வெள்ளி விழா கொண்டாட்டங்களின் இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரியில்,
மறக்கமுடியுமா அந்த வளாகத்தை!, ஒரு பக்கம் பச்சைபசேலென வயலும் வரப்புமாய் விரிந்திருக்க, மறுபுறம் திருப்பரங்குன்றம் மலைகள் சூழ்ந்திருக்க ,இடையில் மலை அடிவாரத்தில் ஏற்றமும் இறக்கமுமான சாலைகள், அதை ஒட்டிய பெரிய பெரிய கட்டிடங்கள், அவற்றில் காற்றோட்டமான பெரிய வகுப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகம்,, மாணவர் விடுதிகள், விழுதுகள் தாங்கிய மரங்கள், நடுவே பெரிய மைதானம். எப்போதும் சிலுசிலுவென வீசும் வயற்காற்று என இயற்கையின் வனப்பு சூழ்ந்த அற்புத வளாகம் எங்கள் கல்லூரி.

ஏதோ முதல் நாள் கல்லூரிக்கு போவது போல அத்தனை பரபரப்பாய் கிளம்பினேன். இருக்காதா பின்னே, எத்தனை வருடங்கள் ஆயிற்று. என்னதான் குடும்பம், வேலை, பணம், குழந்தை வளர்ப்பு, அவர்களின் படிப்பு என பலவாகிலும் வாழ்க்கை திசை மாறிப் போனாலும் கல்லூரி நாட்கள் எனக்கே எனக்கானவை. இன்று அவற்றை எல்லாம் திரும்பிப் பார்க்க எனக்கொரு வாய்ப்பு. இல்லையில்லை எங்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு.

நினைக்கவே உற்சாகமாய் இருந்தது.

வழி நெடுகே மதுரைக்கே உரிய பிரத்யேகமான ட்ராஃபிக்கும், இரைச்சலுமாய் மூலக்கரையைத் தாண்டியதும் அதிர்ந்தே போனேன். எங்கே போயிற்று பசுமை சுமந்த வயல்கள். எல்லாம் காங்க்ரீட் குவியலாய் மாறியிருந்தது. எப்படி இருந்த இடம். இங்கிருந்து பார்த்தால் கல்லூரி தெரியும்.இன்றோ....

ரயில்வே கேட், அதைத் தாண்டியதும் பளிச்சென கண்ணில் படுகிற மாதிரி கல்லூரியின் பெயர் பலகை, பின்னனியில் போலிஸ் ஸ்டேஷன்,அதையொட்டி கல்லூரிக்குச் செல்லும் மரங்கள் அடர்ந்த தனிபாதை.இன்றோ எதுவும் இல்லை. ஒரு மேம்பாலம் இவை எல்லாவற்றையும் மறைத்து நின்றது.

சட்டென மனம் கனத்துப் போனது.

பாலத்தின் மேல் ஏறி ஒரு சுற்று சுற்றிவிட்டு திருப்பரங்குன்றம் மலையையும், கோவில் கோபுரத்தையும் தரிசனம் செய்துவிட்டு, குண்டு, குழியுமான சாலையில், முன்தினம் பெய்த மழையில் தேங்கியிருந்த தண்ணீர் குட்டைகளை கடந்தும் நான் மிகவும் ஆவலுடன்எதிர்பார்த்த 'Thiagarajar College of Engineering' போர்டை பார்க்கவே முடியாமல் போனது.


ஒரு வழியாய் கல்லூரி போய் சேர்ந்தேன். பழைய இடங்கள், கட்டிடங்கள் அப்படியே இருக்க புதிதாக கட்டிடங்கள் பிரம்மாண்டமாய் முளைத்திருந்தன. கல்லூரியின் சேர்மன் திரு.கருமுத்து கண்ணன் அவர்களால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்ற செய்தியை அறிந்த போது ஏமாற்றமாய் இருந்தது. இவருக்காகத்தானே வெள்ளிவிழா தேதியை மாற்றினோம். அதனால்தானே இன்று பலராலும் நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனது .

யாருக்குத் தெரியும், அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருந்திருக்கலாம்.

நாங்கள் போய் சேர்வதற்கு முன்னரே நண்பர்கள் செட்டியார் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளை முடித்திருந்தார்கள். எல்லோரும் பழைய நாட்களுக்கு திரும்பியிருந்தோம். சிரிப்பும், சந்தோஷமுமாய் வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நானும் அந்தக் கூட்டத்தில் ஐக்கியமானேன்.

நான் கல்லூரியில் சேரும் பொழுது முதல்வராக இருந்த Dr.மரியலூயிஸ். அவர்களிடம் சென்று வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பற்றியும், என் வேலை பற்றியும் விசாரித்தார். அவர் மகன் நியூஜெர்சியில் இருப்பதாகவும்,அதனால் அவர் அடிக்கடி அமெரிக்கா வருவதாக கூறினார். தற்போது புத்தகங்கள் எழுதுவதாகவும், அழைப்பின் பேரில் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் பேசி வருவதாகவும் சொன்னார். சிரித்த முகத்துடன் அவர் வயதுக்கு மிக இளமையாகவே தெரிந்தார்.

அடுத்து எனக்கு 'மிகவும் பிடித்த'Engineering Drawing' (!!???) வகுப்பெடுத்த பேராசிரியர்.பழநியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். I think I remember you என்றார். ஒரு வேளை வேறு யாரையோ போட்டுக் குழப்பிக் கொள்கிறாரோ என நினைத்தாலும், என் ஆசிரியர் என்னை நினைவில் வைத்திருப்பதாய் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களை இன்ஜினியர்களாக ஆக்கியதில் எங்களுக்குச் சிரமமில்லை. அப்பொழுதெல்லாம் நுழைவுத்தேர்வு, கட்-ஆப் மதிப்பெண்கள் என ஒரு தர நிர்ணயம் இருந்தது. இப்போது அப்படி எதுவுமில்லை என வருத்தப் பட்டார். உண்மை தான்! இன்றைய ஆசிரியர்களின் நிலைமை பாவம்தான்!

என்னுடன் படித்த S .அருணாவின் அப்பாவான பேராசிரியர் திரு.சோமன், என்னுடன் படித்த சந்திரசேகரின் அப்பாவான இயற்பியல் பேராசிரியர். அகியோரிட்ம் பேசிக்கொண்டிருந்த போது பேராசிரியர் RRSம் எங்களோடு சேர்ந்து கொண்டார். அருணாதான் நிகழ்வுக்கு வரவில்லை. பேராசிரியர் சோமன் இத்தனை வருடம் கழித்தும் என் அக்கா மற்றும் என்னுடைய பெயரை நன்றாக நினைவு வைத்திருந்தது மகிச்சியாய் இருந்தது.

சுகந்தி மேடம் அன்று போலவே அதே சிரிப்புடன்! சாந்தி மேடம் தான் சிறிது மன நலமில்லாமல் இருப்பதாகக் கூறியதை கேட்க வருத்தமாக இருந்தது. அதற்குள் முதல்வர்களும், பேராசிரியர்களும் வந்து சேர, அனைவரும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். அனைவரையும் ஆடிட்டோரியத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

முன்னாள் முதல்வர் மெய்யப்பன் உடல் தளர்ந்திருந்தார்.பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கம்பீரமாகப் பார்த்தஆசிரியர்களை வயோதிக நிலையில் பார்த்ததில் கொஞ்சம் வருத்தம்தான்! எல்லோருக்கும் ஒரு காலத்தில் வயதாகதான் போகிறது. இருந்தாலும் சமயங்களில் அறிவு சொல்வதை மனது ஏற்றுக் கொள்வதில்லைதானே..

ஆடிட்டோரியத்தில் பேராசிரியர் முரளிதரனிடம் நலம் விசாரித்து விட்டு அவரவர் இருக்கையில் அமர விழா துவங்கியது. குத்துவிளக்கேற்றிய உடன், எங்களோடு படித்து இன்று காலம் கடத்திப் போன எங்களுடைய நண்பர்களுக்காக அஞ்சலி செலுத்தினோம். யார்,யாரெனச் சொல்லியிருக்கலாமோ என ஒரு கணம் தோன்றியது.

ராஜி 'ஜம்'மெனத் தமிழில் வரவேற்புரை துவங்கி வைக்க, என் மனமோ கல்லூரியின் முதல் நாள் நினைவுகளில் மூழ்கியது. இதே ஆடிட்டோரியத்திற்குள் பயந்துகொண்டே வந்ததையும், சீனியர் மாணவ, மாணவியர்கள் சந்தனம், கல்கண்டு கொடுத்து ஜூனியர்களை வரவேற்றதை படபடக்கும் இதயத்துடன் எதிர்கொண்டதையும், முதலாமாண்டு கணித வகுப்பெடுத்த ஆசிரியர் மோகனுடன் 'A' செக்க்ஷன் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றதும் நினைவுக்கு வர, எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.

பயந்தாங்கொள்ளி நாட்கள்!

மெயின் பில்டிங் மாடியில் முதலாமாண்டு வகுப்பறைகள்.ஒவ்வொரு பீரியடாய் கடந்து அடுத்தடுத்த பாடங்கள், இடைவேளை, மதியநேரம் என்று அந்நாள் முடியும் வரை யாரிடமும் ராகிங்கில் மாட்டி விடக்கூடாது என்ற நினைவில் கழிந்த பொழுதுகள் இன்று நினைத்தாலும் ரசிக்கமுடிகிறதே!!! ராகிங் கொடுமை தான் என்றாலும் என்னைப் பாதிக்காதவரை நான் ரசித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்!

இன்றோ எல்லாமே நிறையவே மாறி இருந்தது, என்னைப் போலவே!

மீண்டும் நினைவுலகத்திற்கு வந்தால் Dr .மரியலூயிஸ் இன்னும் பேசிக் கொண்டிருந்தார். அட ராமா!!! இவ்வளவு நேரமாகவா பேசுவார்?? மனமோ முதலாம் ஆண்டு வகுப்புகள், லேபுகள், ஆசிரியர்கள், கலாட்டாக்களின் நினைவுகளையே சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தது.

இப்பொழுது Dr.மெய்யப்பனின் முறை. அவரும் தன் பங்கிற்கு எங்கெல்லாம் வேலை பார்த்தார், என்ன செய்தார் என்று ஆரம்பிக்க, அந்த நாட்களில் அவர் வகுப்புகளில் நடந்த கலாட்டாக்கள், அவரிடமிருந்து தப்பித்து ஓடிய மாணவர்கள்...வழக்கம் போலவே அவர் பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார்.இதே பழைய நாட்களாய் இருந்திருந்தால் இன்னேரத்துக்குப் பின்னால் இருந்து கமெண்டுகளும், கைதட்டல்களும்,ராக்கெட்டுகளும் வந்திருக்கும்..இன்று எல்லோரும் நெகிழ்வான மனநிலையில் இருந்ததாலோ என்னவோ அமைதி காத்தனர்.

இவர்களுக்கு அடுத்ததாக Alumini president பேசினார். நாங்கள் ஆளாளுக்கு சீரியஸாய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தோம். ம்ம்ம்...இத்தனை நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று இவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கலாமோ???

ஆசிரியர்களுக்கும் முதல்வர்களுக்கும் நினைவுப்பரிசுகளை மாணவர்களைக் கொண்டே வழங்கினார்கள்! தாமோதரன் 'தடா'லென ஆசிரியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறேன் பேர்வழி என்று அரசியல்வாதி தோற்றான்.

என்ன தான் வயதானாலும், உருவத்தில் வளர்ந்திருந்தாலும் நாங்கள் இன்னும் அதே பழைய ஆட்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சிலர் அரங்கத்தில் கூச்சலிட்டது ஏனோ சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.
நடுவில் ஒரு சின்னப் பிரேக். உச்சி வெயில் மண்டையைப் பிளக்க அப்போதும் சூடான காபி, யாருடைய ஐடியாவோ நானறியேன். கூடவே பருப்பு வடை, கேக். பலரும் சாப்பிட்டுக் கொண்டே கல்லூரி வளாகத்தைச் சுற்றி வர கிளம்ப, சிலரே மீண்டும் அரங்கிற்குத் திரும்பினோம். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு என தனியே கலை நிகழ்ச்சிகளை வேறு அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தொடர் உரைகளினால் சோம்பியிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்த தாமோதரன், சுரேஷ், பொன்ராஜ், சித்திக் பழைய நாட்களின் புகழ்பெற்ற dumbcharades ஐ எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல் மீண்டும் நடத்திக் காட்டினர். தாமோதரனின் நகைச்சுவைப் பேச்சும் தூங்கி வழிந்தவர்களை நிமிர வைத்தது.

அடுத்து, கல்லூரி முதல்வர் Dr.அபய்குமார் பேசினார் பேசினார் பேசிக் கொண்டே இருந்தார்.எத்தனை ஸ்லைடுகள், எத்தனைவிஷயங்கள்!!! 'நறுக்'கெனச் சில முக்கியமான விஷயங்களை மட்டும் பேசியிருக்கலாம் எனத் தோன்றியது. அங்கு வந்திருந்தவர்களுக்கு கல்லூரி இன்று பல விஷயங்களில் முன்னேறி நல்ல பெயரை பெற்றுள்ளது என்பதைத் தவிர அவர் சொன்னதில் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அவ்வளவு நேரம் பேசியதற்கு பதிலாக துறை வாரியாக எங்களை அழைத்துச் சென்று இன்று எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது, லேப் வசதிகள் எப்படி பெருகியிருக்கிறது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு கட்டத்தில்அவர் எப்படா பேசி முடிப்பார் என்ற தவிப்பு தான் பலருக்கும்!

மதிய உணவிற்கு கிளம்புவதற்கு முன் Dr.ராஜாராமிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தவரிடம் வலியப் போய் என்னை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென கேட்டுக் கொண்டேன். மேற்படிப்பு படிக்க அவரிடம் ரெக்கமண்டேஷன் கடிதம் வாங்க கல்லூரிக்கு வந்ததை நினைவுறுத்த ஞாபகம் வருகிறது என்றார். நீ சொன்னதால் தான் இன்று வந்தேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நல்லாசிரியர்!

முதல்நாள் துறைவாரியாக எடுத்த படங்களை ஃப்ரேம் போட்டு ராஜன் ஒவ்வொருவரிடமும் கொடுக்க, அனைவருக்கும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும்!

சுவையான சாப்பாடு , 'சுடுசுடு' வெயில், பலரும் அவதிஅவதியாகச் சாப்பிட்டு விட்டு சுடுநீரை காலில் கொட்டிக் கொண்டது மாதிரி ஊருக்கு கிளம்பணும், பெர்சனல் வேலைகள் , நாளைக்கு வேலைக்குப் போகனும் என்று காரணங்களைச் சொல்லி கிளம்பி விட்டார்கள். முதல் நாள் எவ்வளவு கலகலப்புடன் ஆரம்பித்தது சடுதியில் முடிந்து விட்டது போலிருந்தது. சம்திங் இஸ் நாட் ரைட் என நினைத்துக் கொண்டேன்.

வெளியில் வந்தால் பலரும் நாங்கள் கொடைக்கானல் போகிறோம் என்று தப்பித்துப் போன மாதிரி ஓடிக் கொண்டிருந்தார்கள்! உமாவுடன் சேர்ந்து கொண்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தால் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் மாணவர்கள். தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி.

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடல் இன்னும் கொஞ்சம் ஆர்கனைஸ்டாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. பல சமயங்களில் ராஜன் தனி ஆளாய் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததைப் பார்க்க வருத்தமாகவும் இருந்தது. குறை சொல்வது எளிது தான். களத்தில் இறங்கி இத்தனை தூரம் நிகழ்வை சிறப்பாக்கிய நண்பர்களின் உழைப்புக்கு நிஜமாகவே ஒரு ராயல் சல்யூட்.
அப்ளைட் சயின்ஸ் செந்தில் முருகன், அவர் மனைவி, அவருடன் படித்தவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவர்களும் கிளம்பி விட, அந்தச் சூழலே 'வெறிச்'சென்றிருக்க, எனக்கு மிகவும் பிடித்த ஆலமரத்தின் கீழ் அமைதியாக தனிமையில் அமர்ந்திருந்தேன். எத்தனை பேரின் கனவுகளைச் சுமந்த இடம் இது. இன்னும் எத்தனை எத்தனையோ மாணவர்களைப் பார்க்கப் போகும் இடம். இந்த மரத்தின் வரலாற்றில் எனக்கும் ஓர் துளி உண்டு என நினைத்த போது பெருமிதமாய் இருந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங் முன் இருக்கும் ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு பயத்துடன் லேப் தேர்வுகளுக்காகக் காத்திருந்தது, கடந்து செல்லும் MCA மாணவர்களை கலாய்த்தது , ஹாஸ்டல் லஞ்ச் கூட்டாஞ்சோறை சேர்ந்து உண்டது...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...பாடியது மனம்.

அதோ, அங்கே தான் வீணா சுந்தரத்துடன் நான் பேசிக் கொண்டிருப்பேன். சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருப்பாள். வீணாவின் தன்னம்பிக்கையும், திறமைகளும் என்னுள் அவளைப் பற்றின உயர்வான பிம்பத்தை வளர்த்திருந்தாலும், அவள் ஏதோ சொல்ல வந்து பின் அமைதியானதைப் போல் ஒரு பிரம்மை எனக்கு எப்போதும் உண்டு.ஏனோ அதைப் பற்றி கடைசிவரை கேட்கத் தோன்றியதே இல்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது கிடைத்த நண்பர்கள், அவர்களுடன் உண்டு களித்த நேரங்கள், படித்த பாடங்கள், வகுப்பெடுத்த ஆசிரியர்கள், நூலகம்,அங்கு நான் படித்த ஸ்போர்ட்ஸ் ஸ்டார், எனக்குப் பிடித்த ஸ்டார்களின் பக்கங்களைக் கிழித்து எடுத்துக் கொண்டது, அடித்துப் பிடித்து முதல் ஆளாக லைப்ரேரியில் புத்தகங்களை எழுதிக் கொடுத்தது, லேப்-ல் அரட்டை அடித்தது...என்று ஒன்றன்பின் ஒன்றாகப் பழைய நினைவுகள்....ம்ம்ம்...அது ஒரு கனாக்காலம்!!!

தனியே உட்கார்ந்திருக்கையில் இப்படி பலதும் மனதில் நிழலாடியது...என் வாழ்க்கைப் பாதையில் என் மகிழ்ச்சியில், துயரங்களில் உறுதுணையாக நின்ற நல்ல நண்பர்களை இந்தக் கல்லூரி தான் எனக்கு அடையாளம் காட்டியது. இன்று நானிருக்கும் நிலைக்கும் இந்தக் கல்வி தான் எனக்கு உறுதுணையாக இருக்கிறது.

கல்லூரியில் மரங்களும், செடிகளும் சூழ்ந்திருந்த நிலை மாறி கட்டடங்களின் வளர்ச்சி கல்லூரியின் வளர்ச்சியை உணர்த்திற்று! கல்லூரி அதன் அழகைஇழந்து விட்டதோ??? கல்லூரி வளாகம் ஏதோவொரு இறுக்கம் சூழ்ந்ததைப் போலிருந்தது. ஒருவேளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் எனக்கு அப்படித்தோன்றியதோ என்னவோ.

'கீச்கீச்' பறவைகளின் சத்தம் கேட்க இனிமையாக இருந்தது. சில மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, மாணவ, மாணவியர்கள் சகஜமாகப்பேசி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்! காலம் தான் எப்படியெல்லாம் மாறி விட்டிருக்கிறது!

பல நண்பர்களோடு இன்றும் தொடர்பிலும், நெருக்கத்துடனும் இருந்தாலும் சிலருடன் முற்றிலும் தொடர்பே இல்லாமல் போனது வருத்தம்தான். சமீபகாலமாக ஃபேஸ்புக் வாயிலாகவும், ஈமெயில் மூலமாகவும் நண்பர்களோடு மீண்டும் தொடர்பில் இருப்பது டெக்னாலஜியின் கருணையே கருணை.

முன்பு நேரடியாக அறிமுகம் இல்லாமல் முகநூல் வாயிலாக அறிமுகமான பல நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினருடன் நேரில் பேசியது புதிய அனுபவம்.என்னுடைய முகநூல் குறிப்புகள், பத்தி எழுத்துக்கள் அவர்களுக்கு பிடித்திருப்பதாய்ச் சொல்லியதை நம்பமுடியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இந்த முறை நண்பர்களுடன் பேசுகையில் பலரும் வருந்திய விஷயம்- படிக்கும் காலத்தில் சிறுபிள்ளைத்தனமாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் மெச்சூர்டாக நடந்திருந்தால் புரிதலுடன் கூடிய பல நட்புகள் சாத்தியப்பட்டிருக்கலாம் என்பதுதான்.

என்னைப் போல சொந்த மண்ணையும், மக்களையும் பிரிந்து தூரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற இனிய நினைவுகள் தான் சோர்வடையாமல் வைத்திருக்கும் மருந்து. அந்த வகையில் இந்தச் சந்திப்பு எனக்குள் நினைத்துக் களிக்க ஏராளமான நினைவுகளைத் தந்திருக்கிறது.



மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு உருவாகி, இதே போல நண்பர்களோடு சேர்ந்து களிக்கும் ஒரு நிகழ்வு நடக்கவேண்டும் என நினைத்துக் கொண்டே, பை பை TCE ... என கல்லூரியிடமிருந்து விடைபெற்றேன்.



Sunday, August 30, 2015

வெள்ளிவிழா கொண்டாட்டம் - 2


இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு என் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடும் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் முதல் நாள் நிகழ்வு மதுரையின் புறநகரில் உள்ள ஓர் திருமண மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. ஆகஸ்ட் மாதத்திலும் அக்கினி வெயிலில் மதுரையே தகித்துக் கொண்டிருந்தது.ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாத பரவை இன்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது ஆச்சர்யமாய் இருந்தது.. ராஜனின் மனைவி சிவபாலாவோடு நான் மண்டபம் போய் சேர்ந்த போது எங்களுக்கு முன்னரே நண்பர்கள் பலர் வந்து சேர்ந்திருந்தனர். நுழைவாயிலில் நுழையும் போதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. எங்கெங்கும் சந்தோஷம் சுமந்த முகங்கள். பார்த்தவர்கள், பழகியவர்கள், பயந்தவர்கள் என திரும்பின பக்கமெல்லாம் ஆச்சர்யம், உற்சாகம், பெருமிதம்…..மொத்தத்தில் பழைய நாட்களுக்கு திரும்பிப் போன உணர்வு.

தாமோதரனின் மனைவி சுஜாதாவிடம் பேசி விட்டு அப்ளைட் சைன்ஸ் செந்தில்முருகனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். முகநூலில் அறிமுகமான ராஜசேகர்( மெக்கானிக்கல்) வாங்க வாங்க, திகர்தண்டா சாப்பிடுங்க என்று சொல்லவும் தான் அங்கிருந்த பல ஸ்டால்களையும் கவனித்தேன்!

அதற்குள் சிரித்துக் கொண்டே ராஜியும் வந்து சேர வழக்கமான சம்பாஷணைகள்! முகநூலில் தொடர்பிலிருப்பதால் புதிதாக பார்ப்பது போல் இல்லாமல் 'கலகல'வென பேசிக் கொண்டிருக்கையில் ராஜியின் கணவரும் வந்து சேர, அறிமுகம் செய்து கொண்டோம். அந்த நேரத்திற்கே காபி, திகர்தண்டா, இளநீர் ஸ்நாக்குகள் தயாராக இருக்க, பின் என்ன? ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இளநீரில் ஆரம்பித்தோம் நானும், ராஜியும் :)

பட்டு வேட்டி தழைய தழைய கட்டிக்கொண்டு விருமாண்டி ஸ்டைலில் சரவண குமார்! உமா, ஜெசிந்தா என்று எல்லோரிடமும் பேசி விட்டு இதற்கு மேல் வெயிலில் நிற்க முடியாது, உள்ளே போகலாம் என்று குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்குள் நுழைந்தோம்.

உள்ளே நுழைந்தவுடன் ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்து மீனாட்சிசுந்தரம் ஹாய் சொல்ல, அவர் மனைவியுடனும் பேசி விட்டுத் திரும்பினால், அதோ! என் கேங்!

கன்னக்குழி சிரிப்புடன் அருணாதேவி ஸ்வர்ணாஆஆஆ என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள். உமா தேவி, சுகந்தி, டெல்லா  யாரும் மாறவேயில்லை. நான் மட்டும் தான் மாறி விட்டேனோ?? மேகலா அன்று பார்த்த அதே முகம்!  சதீஷ், கிஷோர், ஸ்ரீனிவாசன், குகராஜன், சரவணன், முரளி, ராதா...காலம் அவர்களை மாற்றவில்லை போலும்! வரதகணபதியை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

பேசிக்கொண்டிருக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே?? ஹே! ராஜசேகர்! அமெரிக்காவில்சந்தித்துக் கொள்ளவே அரிதானஆள் சர்ப்ரைஸாக வந்து நிற்க, அட! அப்ப நீ சொன்னது உண்மை தான் போலிருக்கே! மூன்று நாள் மட்டும் இந்தியா வருகிறேன் அதுவும் நிகழ்ச்சிக்காக, அதுவும் ராஜன் இந்த நிகழ்ச்சிக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தெரிந்ததால் ... என சொல்லும் போது கூட, ஆமா, போன மாதம் விடுமுறைக்கு இந்தியாவுக்குப் போனவன் திரும்ப இந்தியாவுக்கா?? நீ அங்க வந்ததற்கப்புறம் தான் நம்புவேன் என்று சொல்லி இருந்தேன். இந்நிகழ்ச்சிக்காக மேகலாவும் ஒரு வாரத்திற்கு வந்திருந்தாள்.
அனைவரையும் பார்த்ததில் ஒரே குஷியாகி விட்டது எனக்கு.  'பளிச்'சென்றிருந்த கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்புடன் ஐக்கியமாகி எப்ப வந்தீங்க, யார் வந்திருக்கா? வராதவர்களை நினைத்து அவர்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பேசினோம்.

இந்தியாவில் இருந்து கொண்டே பலராலும் வர முடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

காலங்கள் மாறி பலரும் பலவிதத்திலும் உருமாறி இருந்தாலும் சிலர் மட்டும் அதே இளமைத் தோற்றத்துடன் இருந்தார்கள்!!!  முகநூல் நண்பர்களுடன் நேரில் அளவளாவியது மகிழ்ச்சியாக இருந்தது.

எண்பதுகளின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதையும் மீறி நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியின் குரல்கள் அரங்கம் முழுவதும்! நல்ல காற்றோட்டத்துடன் வெளிச்சமான பெரிய அரங்கம் தான்! அலங்கரிக்கப்பட்ட வட்ட மேசை, நாற்காலிகள். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தாலும் பெரும்பாலோர் தனியாகவே வந்திருந்தார்கள். குடும்பத்துடன், துறை வாரியாக படங்களை எடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் .

இதற்கிடையில் கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஒரு தத்துபித்து நிகழ்ச்சியும் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதையும் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்தார்களோ அல்லது விரும்பி பார்த்தார்களோ ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது :(

தங்கள் வாழ்க்கைத்துணைக்காக வந்திருந்தவர்கள், மகளுடன் வந்த பெற்றோர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டும் இருக்க, குழந்தைகள் சிலர் அமைதியாகவும் சிலர் ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.

வெளிநாட்டிலிருந்து வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு வந்தவர்களை மேடையேற்றி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் குமரேஷிடம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியவர் வேடிக்கையாக கேட்கிறேன் பேர்வழி என்று நீங்கள் காதலித்து இருக்கீர்களா என்றவுடன் பார்க்கணுமே, குமரேஷை?!!! மீண்டும் அவர் குமரேஷிடம், கல்லூரியில் படிக்கும் போது நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என கேட்கவும் கூட்டத்திலிருந்து குடும்பத்தில் குழப்பத்தை பண்ணிடாதீங்க என சத்தம் வர...குமரேஷ் 'நோ' சொல்லிவிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், அடுத்தவரிடமும் அதே கேள்வியை அந்த வடிவேலு வேடம் போட்டவர் கேட்க, ராஜன் மேடைக்கு வந்து இந்த மாதிரி கேள்விகள் வேண்டாம், இனி அவர்களாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும் என்று வடிவேலுவை மேடையிலிருந்து கீழிறக்கி விட்டார்.

பிறகு கணினியியல் துறை மாணவ, மாணவிகளின் அறிமுகப்படலம் ஆரம்பமாயிற்று. சிவில் துறையிலிருந்து நிறைய மாணவிகள் வந்திருந்தார்கள். உமா நிறைய மெனக்கெட்டிருந்தது தெரிந்தது. எலெக்ட்ரானிக்ஸ் துறையில் தான் குறைந்த அளவில் மாணவ, மாணவியர் வந்திருந்தனர். எலெக்ட்ரிக்கல் துறையில் வெகு சிலரை மட்டுமே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது! மெக்கானிக்கல் துறையில் நிறைய மக்கள் வந்திருந்த மாதிரி இருந்தாலும், இரு வகுப்புகளில் இருந்து வந்தவர் எண்ணிக்கை குறைவு தான் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அறிமுகப்படலம் முடிந்தது.

சிலர் மேடையேற அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சில கற்றறிந்தவர்களிடம் எப்படி தன்னடக்கத்துடன் இருப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன் மனதில்! என்ன ஒரு தன்னடக்கம்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன், தாமோதரன், அரவிந்தன், கேப்டன் மேடைக்கு வர அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். ராஜன் தன் மனைவிக்கும், மகள்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொண்டு அவர்களின் ஆதரவால் தான் தன்னால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய முடிந்தது என்று அவர்களுக்கும் நன்றி கூறி, வந்திருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு வாட்ச் பரிசாக வழங்கப்பட, குதூகலாத்துடன் வாங்கிக் கொண்டார்கள். மீண்டும் கலை நிகழ்ச்சிகள் தொடர, நண்பர்களுடனான பேச்சுக்கள் மீண்டும், சிலர் வெளியில் சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட...நாங்களும் ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

மதிய உணவிற்கு கீழே செல்லலாம் என்றவுடன் மொத்த கூட்டமும் இறங்கி கீழ்தளத்திற்குச் சென்றோம். பல வகையான சைவ, அசைவ உணவு வகைகள் இரு மூலைகளில் அழகாக வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவரவர் வேண்டியதை வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தோம். சுவையான நல்ல சாப்பாடு! திருப்தியாகச் சாப்பிட்டோம். ஒன்றுமே சாப்பிடாத ராஜன் அனைவரிடமும் சாப்பிட்டாச்சா, நல்லா இருந்துச்சா...என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

உமா, சாருசீலா, சாருமதி, ராதாவுடன் சிறிது நேரம் பேசியதில் நன்கு பொழுது போனது. மீண்டும் மதிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. தாமோதரன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எடுத்த படங்களைப் போட்டு ( ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடல் பின்னணியில் ஒலிக்க) இது கல்லூரியில் எந்த இடம் ஞாபகமிருக்கிறதா என பழைய நினைவுகளை கிளற பலவும் பெண்கள் போகாத இடங்களாகவே இருந்தது!
குழந்தைகள் விரும்பினால் அவர்களும் கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றவுடன் ஒரு அழகிய கீபோர்ட் ப்ரோக்ராம் நடந்தது. யாருடைய குழந்தை என்று நினைவில்லை. ஒரு குழந்தை பாடியது. சந்திரமோகனின் மகள் உடம்பை வில்லாக வளைத்து அருமையான யோகா வித்தைகளை செய்து கூட்டத்திலிருந்தோரை வியப்பூட்டினார்.

வெளியில் சூடான வடை, மிளகாய் பஜ்ஜி போட ஆரம்பித்திருந்தார்கள். கும்பகோணம் டிகிரி காஃபியுடன் ...ம்ம்ம்...யம்மி :)

முரளிதரனின் மனைவி முரளிதரன் கணவனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை சிலாகித்துப் பேசியதை நாங்களும் கேட்டுப் புளங்காகிதம் அடைந்தோம். பாவம், முரளிதரன் தான் வெட்கத்தில்!!! அவர் மனைவி விடுவதாய் இல்லை. பேசிக் கொண்டேடே....இருந்தார். நாங்களும் கேட்ட்டுக் கொண்டேடே இருந்தோம். ஸ்ரீநிவாசன், ராதா இருவரும் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்து மேகலாவை கலாய்க்க ...நன்றாகவே பொழுது போனது. துறைத்தலைவர் அய்யாதுரையை மாணவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள். அவரும் இவர்கள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தார்...கேட்கவே ஆச்சரியமாக இருந்தது! அடப்பாவிகளா என்று மாணவர்களையும், அட இப்படியுமா இருப்பார் மனிதர் என்று துறைத்தலைவரையும் நினைக்க வைத்தது!

மீண்டும் அரங்கில் நுழைந்தால் மேடையில் சிலர் அந்த வடிவேலு சொல்ல சொல்ல ஆடுகிறேன் பேர்வழி என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் நடனம் தான் ஆடுகிறோம் என்று நினைத்தார்களோ என்னவோ! சிறிது நேரம்அந்த காமெடி நடன அவஸ்தையை அவர்கள் குடும்பங்களும் வெட்கப்பட்டுக் கொண்டேகண்டு களித்தார்கள்.

இந்த களேபரத்தில் அரவிந்தனின் கேமரா தொலைந்து பலமுறை அறிவித்தும் கிடைக்கவில்லை.

இதனூடே ராஜன் கையில் ஒரு லிஸ்டை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆட்களாக தேடிச் சென்று வெள்ளிவிழா நினைவுப்பரிசுகளை வழங்க, ஆர்வத்துடன் அனைவரும் பிரித்துப் பார்த்து, எதிர்பாராத அசத்தலான பரிசை கண்டு பிரமித்துத் தான் போனார்கள்! அந்த நினைவுப்பரிசிற்காக நாட்பகலாக உழைத்த ராஜனுக்கு பெரிய மனசு தான்! ஏதோ கடையில் விற்பதை வாங்கி வேலையை முடிக்காமல் இவ்வளவு மெனக்கெட பெரிய மனது வேண்டும் தானே? அப்படி ஒருவர் நமக்கு கிடைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே!

ஒரு வழியாக கலைநிகழ்ச்சிகள் முடிவடைய, குடும்பங்களும் களைப்படைய, நாளைக்கு நாங்கள் வர மாட்டோம் என்று குழந்தைகளுடன் சில குடும்பத்தலைவிகளும் குழந்தைகளும் அன்றே உறுதி மொழியும் எடுத்து விட்டார்கள்! அவர்களுக்கு பயங்கர போர் அடித்து விட்டது போல!

சிறிது நேரத்தில் சுவையான இரவு உணவு -இட்லி, இடியாப்பம், பரோட்டா பரிமாறப்பட்டது. திருப்தியாக அதையும் சாப்பிட்டு முடிக்க, சிலர் அன்றே ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை. மற்றவர் எல்லாம் மறுநாள் கல்லூரியில் காலை ஒன்பது மணிக்குச் சந்திப்பது என்று நண்பர்களுடன் பேசி விட்டுக் கிளம்பினோம்.

பல நாட்கள் தூங்காத களைப்பும், அன்றைய நாள் விருந்துக்காக அதிகாலையில் கடைக்குச் சென்று வேண்டிய அசைவ ஐட்டங்களை வாங்கிக் கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் மீண்டும் ஐம்பது எலுமிச்சம்பழங்கள் வாங்க யாரையும் அணுகாமல் பரவையிலிருந்து தானே மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்குச் சென்று வாங்கி வந்து கொடுத்து அனைவரும் திருப்தியாக சாப்பிட்டார்கள் என்று தெரிந்தும் தான் சாப்பிடாமல் இரவு வரை அலைந்த ராஜன் ரியல் ஹீரோ!

இந்த வெள்ளிவிழா அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்று ராஜன் நினைத்தபடியே இனிமையாக முடிவுற்றது அந்நாள்.



























Friday, August 21, 2015

வெள்ளிவிழா கொண்டாட்டம் - 1

கல்லூரிப்பருவம் பெரும்பாலோனோர் வாழ்விலும் ஒரு வசந்த காலம்! ஆம், அது ஒரு கனாக்காலம் என்று இருபத்தைந்து வருடங்கள் கழிந்த பின்னரும் களிப்புற வைக்கும் காலம். எதைப்பற்றின கவலையுமின்றி நண்பர்களுடன் பேசி துள்ளித் திரிந்த நாட்கள் மீண்டும் வருமா? அசை போட்டு பார்க்கும் மனம் சொல்லாமல் சொல்லும் ஆயிரமாயிரம் இனிய நினைவுகளை!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கல்லூரிப் படிப்பு என்பது ஒரு கனவோ என்ற குடும்ப பின்னணி! பத்தாம் வகுப்புடன் என்னுடன் பள்ளியில் பயின்ற பல பெண்களுக்கும் திருமண வாழ்க்கை! நல்ல வேளை, என் பெற்றோர்கள் அந்த தவற்றைச் செய்யவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிக்க ஊக்கமளித்து கல்லூரி வரை அழைத்தும் வந்து விட்டார்கள்! ஆனாலும், அவர்கள் சொன்ன கல்லூரிக்கும், படிப்பிற்கும் தான் தலையாட்ட வேண்டியிருந்தது. அதுவும் எனக்குச் சாதாகமாக அமைந்தது என் அதிர்ஷ்டமே!

என்ன, வீட்டை விட்டு சிறிது காலம் ஹாஸ்டல் வாழ்க்கை வாழ வேண்டும், தனித்து என் வாழ்க்கையை நானே தீர்மானிக்க வேண்டும் என்பது அன்றைய என் இள வயது அவா. அது நடக்கவில்லை. அப்போதைய பெற்றோர்களின் பயம் போலும்! உணர்ந்து நானும் மதுரையில் இருக்கும் கல்லூரியில் படிப்பது என்ற என் முடிவையும் மாற்றிக் கொண்டேன். வேறு வழியில்லையே! 'ஆஊ' என்றால் கல்யாணம் பண்ணி வைத்து விடுவேன் என்ற மிரட்டல் வேறு.

ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து மருத்துவம், பொறியியல், விவசாயத்துறை நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராக மெஜுரா கல்லூரி நடத்திய தாம்ப்ராஸ் கோச்சிங் வகுப்புக்களுக்கும் சென்று ஒரு வழியாக தேர்வும் எழுதியாயிற்று.

அம்மாவுடன் முதன் முதலில் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்ப படிவம் வாங்க சென்ற நாளில் விஸ்தாரணமான கல்லூரியின் அமைப்பும், ஆண், பெண் இணைந்து படிக்கும் சூழ்நிலையும், ஓங்கி வளர்ந்து நின்ற ஆலமரங்களும், பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் வழியெங்கும் கூடவே வந்த பச்சைப்பசேல் விளைநிலங்களும் நான் கண்டிராதவை. இவ்வளவு தூரம் தினமும் நடக்கணுமோ? என்னுள் எழுந்த கேள்வியுடன் ம்ம்ம்...நன்றாகத் தான் இருக்கும் என எனக்கு நானே நினைத்துக் கொண்ட வேளையில் கல்லூரியில் சேருவதற்கு முன்பே என்னை எதிர் கொண்ட சீனியர் மாணவர்கள் கேட்ட கேள்விகள் கொஞ்சம் பயமுறுத்தின. என்னை விட என் அம்மாவிற்குத் தான் பயமாகிப் போனது. படப்படப்புடன் அறிவுரைகளும் ஆரம்பமாகியது.

கல்லூரி இது தான் என்று தெரிந்த நாளிலிருந்து கல்லூரிக் கனவுகள்! அட்மிஷன் நாளன்று அப்பா, அம்மாவுடன் நானும் அக்காவும் படப்படப்புடன் பிரின்சிபால் அறை வாசலில் காத்திருந்த நேரங்களில் பல வித எண்ண ஓட்டம். நம்மை குழப்புவதற்கென்றே ஒரு கூட்டம் தான் இருக்குமே! பன்னிரெண்டாம் வகுப்பில் படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள் என்று வேறு சொல்லி விட்டதால் பயம் கூடி விட்டது. பெயரை சொல்லிக் கூப்பிட்டவுடன் உடல் சில்லிட அறைக்குள் நுழைந்தால் பெரிய மேஜையின் முன் அன்றைய முதல்வர் டாக்டர்.மரியலூயிஸ். அவருடன் பேராசிரியர் S.R. பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன். a/c அறையில் குளிரா, நடுக்கமா...தெரியவில்லை. நடுங்கிக் கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேனா? என் குரல் எனக்கே கேட்கவில்லை!

மார்க்சீட், நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் , இன்ன பிற படிவங்களை வாங்கிக் கொண்டு எதிலோ கையெழுத்திட்டவாறே வெல்கம் டு TCE என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னவுடன், தப்பிச்சோம்டா சாமி என்று பாய்ந்து வெளியேறினேன். அடுத்து அக்காவின் அட்மிஷனும் முடிந்தது. அப்பா, அம்மாவிற்கு ஒரே ஆனந்தம்! ஆம், தன் பெண்கள் கல்லூரிக்கு அதுவும் இன்ஜினியரிங் கல்லூரிக்குச் செல்ல போகும் பெருமை அவர்களிடத்தில்! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அம்மாவின் அறிவுரைகள். பத்திரமா போயிட்டு வரணும். யாரிடமும் வம்பு வளர்த்துக்க கூடாது. நீங்கள் இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும். தனியாக எங்கும் செல்லக் கூடாது. ஐயோ, அம்மா...என்று நான் சொல்லும் வரை தொடர்ந்த அந்த அறிவுரைகளை இன்று என் மகளுக்குச் சொல்லும் பொழுது தான் என் அம்மாவின் பயமும், அக்கறையும் புரிகிறது!

வந்தே விட்டது அந்நாளும்! கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குல்ல? கேட்ட அம்மாவிற்கு தலையை ஆட்டி பதிலளித்துக் கொண்டே சீக்கிரமாகவே எழுந்திருந்து, சுவாமி கும்பிட்டு, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு நானும் அக்காவும் நேரத்திற்கு மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கல்லூரி பஸ்சிற்காக காத்திருந்தோம். கண் முன்னே கூட்டமாக வந்த 14A பஸ் திகிலாக, இனி வருடம் முழுவதும் கல்லூரி பஸ் தான் என்று அன்றே தீர்மானிக்க வைத்தது!

அப்படி ஆரம்பித்த பயணம் இன்று இருபத்தைந்து வருடங்களைக் கடந்து விட்டிருக்கிறது! இதோ ராஜனிடமிருந்து அழைப்பிதழ். மீண்டும் கல்லூரி நினைவுகளில் மூழ்க வேண்டும். காலம் மாறி விட்டது. கடந்து வந்த பாதைகள் மாறி விட்டது. அதனால் என்ன? எனக்கென்று சில நேரம், எனக்கென்று ஓரிரு நாட்கள்...அசை போட என்றும் பசுமையாய் என் நினைவுகள் என்னுடனே பயணிக்க, நானும் தீர்மானித்து விட்டேன், கல்லூரி வெள்ளி விழா கொண்டாட்டத்திற்குச் செல்வதென...












Thursday, August 13, 2015

ஆடிப்பெருக்கு - உலா ...

நாளைக்கு ஆடிப்பெருக்கு! அம்மா சொன்னவுடன், கோவிலுக்குப் போய் மீனாக்ஷியை தரிசனம் செய்து விட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன். காலையில் நேரத்திற்குச் சென்றால் கூட்டத்தைச் சமாளித்து விடலாம். தங்கை மகளும் வருகிறேன் என்றவுடன் கிளம்பி விட்டோம். வெளியில் கூட்டம் அவ்வளவாகத் தெரியவில்லை! செக்யூரிட்டியை கடந்து கோவில் உள்ளே நுழையும் போதே சந்தனம், பூக்களின் மணம் வர, அம்மா, மாலை வாங்கிட்டு போங்க, அர்ச்சனை தட்டு, சுவாமிக்கு அர்ச்சனை என்று முகத்திற்கு எதிரே நீட்டிய தட்டுக்களையும், மாலைகளையும் கடந்து உள்ளே சென்றால் அதிகாலையிலிருந்து வந்த மக்கள் கூட்டம், கூட்டம் கூட்டமாக!!!

அதிகாலை நேரமாதலால் கடைகள் மூடியிருந்தது. கடைகள் இல்லாத கோவில் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!

உறவினர்கள் சூழ வெட்கப்பட்டுக்கொண்டே புது மணப்பெண்கள், மணமகன்கள் என சுற்றுப் பிரகாராங்களில் கூட்டம். தாலி பெருக்குவது நடந்து கொண்டிருந்தது. பெரிய விசேஷம் தான் போலிருக்கு! எங்களிடையே அந்தப் பழக்கம் இல்லாததால் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்களை கடந்தேன். விபூதி பிள்ளையார் நவீன 'மொழுமொழு' விபூதியில் குளித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கோபுரத்தின் பின்னணியில் எழும் சூரிய பகவானை பார்த்து விட்டு அம்மன் சன்னதி கூட்டத்தில் இணைந்தோம்.


நீண்ட வரிசை!!! இந்த வரிசையில் நின்றால் எப்போது பார்ப்பது? மலைப்பாகத் தான் இருந்தது! மேடம், ஐம்பது, நூறு ரூபாய் டிக்கெட் இருக்கு. சீக்கிரம் அம்மனை பார்த்துடலாம். எவ்வளவு சீக்கிரம்? இந்தா, வரிசை நகர்ந்துட்டே இருக்கு பாருங்க. ம்ம்ம்... இருக்கட்டும். இந்த வரிசையையும் கொஞ்சம் சீக்கிரம் நகர்ற மாதிரி செய்யலாமே!! வளைந்து வளைந்து சென்றது வரிசை. ஜாலியாகச் சுவரில் இருந்த திருவிளையாடற்புராண சித்திரங்களைப் படித்துக் கொண்டே ஒரு வழியாக சன்னதிக்குள் வந்தாகி விட்டது. பெரிய பெரிய மின்சார விசிறிகளை ஆங்காங்கே வைத்திருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! அந்தக் காலை நேரத்திலும் அப்படி வியர்த்தது! அநேக பெண்களும் தலை குளித்து, வாச மலர்களைச் சூடி, சிலர் மஞ்சள் பூசிய முகத்துடனும், புத்தாடையுடனும், புது நகையுடனும் 'பளிச்'சென்று இருந்தார்கள்.

அம்மனை நெருங்க ஏசியின் குளிர் நன்றாகத் தான் இருந்தது. நடுநடுவே கரைவேட்டிக்கு, போலீஸ்காரர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று ஒரு கூட்டம் தனி வரிசையில் சென்று அம்மனை மறித்து நின்று அனைவரின் வயிற்றெரிச்சலையும் வாங்கி கட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக அம்மனின் தரிசனம் கிட்டியது. அழகி அவள்!!!

வைர கிரீடமும், வைர கிளியுடனும் வாசனை மலர்களுடன் தீபாராதனையில் ஜொலிக்க...திவ்ய தரிசனம் !!! குங்குமத்தை வாங்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு ஒதுங்கினோம். தட்டில் விழும் காணிக்கையில் குறியாக இருக்கிறார்கள் சில பட்டர்கள் :(

முக்குறுணி விநாயகரை தரிசிக்கச் செல்லும் வழியில் சூடான வெண்பொங்கலை தொன்னையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! மிளகு, நெய் வாசம் சுண்டி இழுத்தாலும் கணேஷா என்று பிள்ளையாரை பார்க்க அவ்விடத்தைக் கடந்தோம். சுவாமி சன்னதியில் கூட்டம் இல்லை. நிம்மதியாக நீண்ட நேரம் அங்கு நின்று தரிசனம் செய்ய முடிகிறது. சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, பிட்சாடனர், லக்ஷ்மி தரிசனம் அமர்க்களமாக இருந்தது. சித்தர் எண்ணை காப்பு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார். துர்க்கையும் எலுமிச்சை பழ மாலையுடன்!

சுற்றுப்பிரகாரத்தில் காளி, வீரபத்ரர், திருக்கல்யாண கோலத்துடன் அம்மன் , வெண்ணையில் மூழ்கிய ஹனுமான், நவக்கிரகங்கள் எல்லோரையும் தரிசித்தாயிற்று !! பார்வதி- குட்டி யானையின் ஆசிர்வாதமும் ! கோவில் கடையில் பிரசாதம்...அப்பம், முறுக்கு, புளியோதரை நிறைய இருந்தது. வெளியில் வந்து பொற்றாமரைக்குளத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நல்ல கூட்டம்! பலரும் கோபுரத்துடன், குளத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்! சூரிய ஒளியில் கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது! இம்முறை செவ்வாடை, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இல்லாதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!



தூண்கள் எல்லாம் 'sandblasting' செய்யப்பட்டுச் சிலைகள் வழுவழுப்பாக இருந்ததில் அதன் சுயத்தை இழந்திருந்தது. புதிதாக தூண்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பராமரிப்பு வேலைகளும் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. கோவிலில் குடிகொண்டிருக்கும் புறாக்களும், வௌவால் கூட்டங்களும் குறைவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது!

அம்மா, அப்பா, பாட்டி, பெரியம்மாவுடன் எத்தனை முறை வந்திருக்கிறேன்? பாட்டி வீடு அருகிலிருந்ததால் சொற்பொழிவுக்கூட்டங்களுக்கும் வந்திருக்கிறோம். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் கோவில்! ஆடிப்பெருக்கன்று கோவிலுக்குச் சென்று வந்ததில் பரம திருப்தி!

Thursday, July 23, 2015

அது ஒரு கனா காலம்...

கல்லூரிப் படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் எப்படித் தான் ஓடோடி விட்டது? படிக்க வேண்டுமே என்ற கவலையைத் தவிர வேறொன்றையும் அறியா பருவம் அது! வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, நல்லது கெட்டதுகளை இன்றும் கற்றுக் கொண்டிருக்கும் இதே வேளையில் அக்கால நினைவுகள் தரும் சுகம் என்றுமே இனிமையானைவ!

வியர்த்து விறுவிறுக்க பயத்துடன் வாழ்வின் முதல் இண்டர்வியூ, கல்லூரி முதல்வருடன்! அட்மிஷன் முடிந்து வெளியில் வரும் பொழுது அப்பா, அம்மா முகத்தில் அவர்கள் வாழ்வில் சாதித்து விட்ட சாதனை! இருக்காதா பின்னே?? பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம், பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம் என்று பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் குப்பா வீட்டுப் பெண்கள் (அக்காவும், நானும் ) முதன்முதலில் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்ற பெருமிதத்தில் என் பெற்றோர்கள்!

அதுவரை பெண்கள் பள்ளியில் படித்து விட்டு முதன்முதலில் ஆண்-பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கப் போகும் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு! அம்மாவுக்கோ பெருங்கவலை. கல்லூரியில் நன்கு படித்து எந்த வம்பு தும்பிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் பெண்கள் இருக்க வேண்டுமே என்று அந்த நொடியிலிருந்து அறிவுரைகள்! பயப்படாதேம்மா, நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது என்று சொன்ன போதும் அவர் ஒருவித தவிப்பில் தான் இருந்தார். தேவையில்லாம யார் கூடவும் பேசாதே என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும் அது எனக்கான அறிவுரை என்று எனக்கு நன்றாகவே புரிந்தது :) எங்களுக்காக அதிகாலையில் எழுந்து காலை, மதிய உணவு என்று பார்த்து பார்த்து பண்ணியதும், படிக்கிற பிள்ளைகள் என்று வீட்டு வேலை அனைத்தையும் அம்மாவே 'மாங்குமாங்'கென்று செய்ததும் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது இப்போது L

வீட்டின் அருகில் இருக்கும் சீனியர்களிடமிருந்து கல்லூரிக்கு எந்த பஸ், நேரம் என்று தெரிந்து வைத்துக் கொண்டாயிற்று. அவர்களே கல்லூரி பஸ் டிக்கெட்டும் முதல் நாளுக்காக கொடுத்து விட்டார்கள்! பள்ளிக்கு எட்டரை மணிக்கு கிளம்புவதே பெரிய போராட்டம். இப்போது கல்லூரிக்கோ ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும். வீட்டிலிருந்து இருபது-இருபத்தைந்து நிமிட நடை. வேர்த்து ஒழுக விறுவிறுவென்று மாணவர்கள் பலருடன் நடந்து பஸ்நிறுத்தத்தில் காத்திருக்கும் வேறு சில மாணவிகளைப் பார்த்தவுடன் தான் அப்பாடா, கல்லூரி பஸ் இன்னும் போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கும். ஒவ்வொரு நிறுத்தத்தில் இருந்தும் ஆசிரியர்களையும் மாணவிகளையும் ஏற்றிக் கொண்டு ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க உதவிய ஆபத்பாந்தவன்! அந்த கட்டை வண்டியில் வரக்கூடாது டவுன்பஸ்சில் தான் வர வேண்டும் என்ற சீனியர்களின் கட்டளை எரிச்சலைத் தான் தந்தது L
கல்லூரியில் முதல் நாள்! படபடப்புடன் ஒரு அரங்கில் காத்திருந்தோம். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் பேசினார்கள். எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஏனோ, ஒருவித பயத்துடனே இருந்தேன். அவரவர் வகுப்பிற்குச் சென்ற பொழுது என்னுடன் பள்ளியில் படித்த தோழிகள், அக்கா என்று அனைவருமே ஒரே வகுப்பில் இருந்தது ஆறுதலான விஷயம். காலையில் ஆரம்பித்த வகுப்புகள் மாலை வரை நீண்டு எப்படா முடியும் என்றிருந்தது! முதல் வருடம் முழுவதும் கடைசி பெஞ்ச் இல்லையென்றால் அதற்கு முந்தின பெஞ்ச் :)

முதலாம் ஆண்டில் பல வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தது, இயற்பியலைத் தவிர :( புதிதாக சிவில் & மெக்கானிக்கல் அறிமுகம். இஞ்சினியரிங் டிராயிங் போல ஒரு அறுவையை நான் பார்த்ததில்லைL முதலாம் ஆண்டு முழுவதும் கூட படித்த மாணவிகளைத் தவிர லேபில் ஒரு சில மாணவர்கள் அறிமுகமானார்கள். அதிக பேச்சில்லை யாருடனும். ராகிங் காரணமாக வகுப்பை விட்டு வெளியில் செல்ல பயம். பிரேக் நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும் திகிலுடன் போய் வந்து கொண்டிருந்தோம். யார் சீனியர், யார் பிற வகுப்பு மாணவர்கள் என்று தெரியவே பல மாதங்கள் ஆனது! ஆனாலும், தெனாலி கமல் போல், எவனை பார்த்தாலும் பயம் தான் :(

எப்படியோ முதாலம் ஆண்டு முடிந்து எந்த பிராஞ்ச் என்று தெரிந்தவுடன் நிம்மதியாக இருந்தது. இனி இந்த மாணவர்களுடன் தான் மூன்று வருடங்கள். கணினியியல் துறை அப்போது தான் ஆரம்பித்திருந்த நேரம்! அதற்கென கட்டடம் உருவாகிக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் மெக்கானிக்கல் வகுப்புகள் நடக்கும் இடத்தில் எங்கள் வகுப்பும்! வேறு வினை :( மீண்டும் பயத்துடனே வகுப்புக்கு வருவதும் போவதுமாய் ...சீனியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி அதனாலாயே நண்பர்கள் சிலர் என்றானாது. பாரி வள்ளல்கள்! அவர்களின் புத்தகங்கள், நூலக டோக்கன்கள் என்று கேட்காமலே கிடைத்தது :)

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகள் பிடித்திருந்தது. பல வகுப்புகள் பிடித்திருந்தாலும், சில வகுப்புகள் வெண்பொங்கல் சாப்பிட்ட எஃபெக்ட் தான் :(
தேர்வுக்கு முன் ஒரு முழு மாதம் விடுமுறை என்றாலும் தேர்வு நெருங்க நெருங்க புத்தகங்களை தேடி அலைவதும், டைம்டேபிள் போட்டு படிப்பது போல் பாவனை செய்ததும்...என்னை விட என் அம்மாவிற்குத் தான் டென்ஷன் அதிகமாகி விடும். அம்மா, காலையில் மூணு மணிக்கெல்லாம் எழுப்பி விட்று என்று சொல்லி விட்டு தூங்க, அப்போது மட்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் கடிகாரமோ தூங்கிய மறுநொடியே மூன்று மணியானதை சொல்லும் பொழுது எரிச்சலாக இருக்கும். அம்மாவும் எழுந்திரு எழுந்திரு எழுந்திரு என்று பொறுமையாக சொல்ல, இதோ அஞ்சே அஞ்சு நிமிஷம் என்று சொல்லியே ஒரு மணி நேரம் ஓடி விடும். அதற்குள் சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் வேறு! அதை குடித்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தூக்கம். இப்பொழுது அக்காவும் சேர்ந்து கொண்டு நீ நேத்தும் ஒண்ணும் படிக்கல. இன்னும் தூங்கிட்டு இருக்கே. எழுந்திரு என்று ஆரம்பித்து விடுவாள். அவளிடமும் அதே ஐந்து நிமிட நாடகம் தொடர்ந்தாலும், திடீரென்று அய்யோயோ இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கே என்று பயத்துடன் எழுந்தால் மணி ஐந்தாகி விட்டிருக்கும். அப்புறம் என்னத்த படிக்கிறது? ஒரு குயிக் ரீடிங் மட்டுமே!

ஹால் டிக்கெட் எடுத்துக்கிட்டாச்சா?? சாமி கும்பிட்டு போங்க. முருகா, உன்னைத் தான் நம்பி இருக்கேன்னுட்டு கிளம்பி...ஹாலுக்குள் நுழையும் பொழுது இன்னைக்கு என்ன எக்ஸாம் என்று ஒரு நொடி ஸ்தம்பித்து ...எதுவுமே மண்டையில் ஞாபகத்துல இல்லியே என்ற கலக்கத்துடன் உள்ளே நுழைந்தால்...அங்கே கதம்பமாக அனைத்துத்துறை மாணவ, மாணவிகள்...சிலர் குழப்பத்துடன், சிலர் ஒரு முடிவுடனே(!), சிலர் பயபக்தியுடன்...

ஆசிரியர்கள் வந்து பேப்பர் கொடுத்து, தேர்வு எண்ணை எழுதுங்கள், இப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று சொன்னவுடன்...கேள்வித்தாளை படித்து தேறுவோமோ இல்லையென்றால் எப்படி தேறுவது என்று யோசிக்க ஆரம்பித்து விடும் மனது. முதல் ஒரு மணி நேரத்தில் அழகான கையெழுத்துடன் ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல தலைஎழுத்தாக மாறி விடும்! அதுவும் அருகில் இருக்கும் மாணவிகள் பரபரவென்று எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தால், என்னங்கடா நான் மட்டும் தான் இப்படி இருக்கேனா என்று சுற்றுமுற்றும் பார்த்தால் நமக்கு கம்பெனி கொடுக்க நிறைய மாணவர்கள் இருப்பார்கள்!

சில மாணவர்கள் பரீட்சை ஹாலில் வாத்தியார்களை டென்ஷன் பண்ணியதும் உண்டு. இவன் பிட் அடிக்கப் போறானோ என்று அவனையே சுத்தி வருவார்கள். ஆனால் வேறொரு கூட்டம் அங்கே பிட்டு, பேப்பர் மாத்துறது என்று சகலத்தையும் பண்ணியதாக கேள்வி!

கல்லூரி ஸ்ட்ரைக், வகுப்பாக படத்திற்குப் போனது, நண்பர்களுடன் சேர்ந்து போனது, கொஞ்சம் படித்தது, நிறைய வெட்டி பேச்சு பேசினது, படிப்பாளிகளை கண்டு மிரண்டது ...அது ஒரு இனிமையான காலம் தான்! பல புதிய நண்பர்களின் அறிமுகம் என நட்பு வட்டாரம் விரிவடைந்ததும் இக்கால கட்டத்தில் தான்!

இன்றும், கல்லூரி என்றவுடன் பிரமாண்டமான அந்த ஆலமரங்கள், காற்றாட வெளிச்சமான வகுப்பறைகள், மரம் செடிகளுடன் நீண்ட சாலைகள், வரும் வழியில் ஒரு காபிக்கடை, பாய்ஸ் ஹாஸ்டல், அழகான மெயின் பில்டிங், பூச்செடிகள் சூழ்ந்த அமைதியான கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப்பசேல் வயற்பரப்புகள் (இன்று இல்லை என்பது காலக்கொடுமை ) , திருப்பரங்குன்றம் மலை...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

Sunday, July 19, 2015

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..


நான்கைந்து வருடங்களுக்கு முன் snowshoeing என்று மூங்கிலில் செய்யப்பட்ட டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையின் மேல் ஷூவை மாட்டிக் கொண்டு பனி(snow)யில் நடந்து போவதைப் பற்றி தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் Environmental Education Centerக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம்.

அங்கு பறவைகள், விலங்குகள், பூக்கள் இன்னும் பல சுவையான சுற்றுப்புறத் தகவல்களை இலவசமாக பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாங்கள் அன்று தான் அங்கு சென்றிருந்தோம். நகர்ப்புறத்திலிருந்து சிறிது தள்ளி பல ஏக்கர்களுக்கு மரம், செடி, கொடி, ஏரிகளுடன் அற்புதமாக இருந்தது. பனிக்காலமாதலால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளைப்பனி தான்.

அந்த டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையில் ஷூவை மாட்டிக் கொண்டு நடப்பதே ஒரு அனுபவம். விழுந்தால் எழுவதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. அன்று குளிர் ஓகே தான். ஒரு மைல் வரை நடத்திச் சென்று பனிக்காலத்தில் உணவிற்காக வெளியில் வந்த மான், அணில், முயல், இன்னும் பல விலங்குகளின் கால் தடயங்களை வைத்து எங்களை அழைத்துச் சென்றவர் பல சுவையான தகவல்களை கூறிக் கொண்டே வர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டே சென்றோம்.

பனிக்காலத்தில் பறவைகளும், விலங்குகளும் உணவை எப்படி கண்டடைகிறது? கொடும்பனியில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது என்று பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

அந்த சென்ட்டரின் நுழைவாயில் பறவைகளுக்காக பல feederகள் வைத்து நிறைய தீவனங்கள் போட்டிருந்தார்கள். நான் இதுவரை கண்டிராத அழகழகு பறவைகள்! அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜன்னலின் அருகிலேயே அவற்றைப் பற்றின தகவல்களுடன் புத்தகங்கள். அங்கு வேலை செய்வோரும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளும் ஆரவாரம் செய்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல பறவைகளைப் பற்றி படித்து தெரிந்திருந்தாலும், நேரில் பார்க்கும் பொழுது ஒரு பரவசம் தான். இங்கு வெளிவரும் Conservationist என்ற பத்திரிகையில் பறவைகளின் படங்களை கண்டு அதிசயித்திருக்கிறேன்!

அப்பொழுதே ஒரு bird feeder வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தாலும் இரு வருடங்களுக்கு முன்பு தான் வாங்கி வீட்டின் முன் இருக்கும் மரத்தில் தொங்க விட முடிந்தது! பலவகையான விதைகளுடன் கூடிய 20பவுண்ட் பை ஒன்றும் வாங்கியாகி விட்டது.

முதலில் குருவிகள் வருகை தந்தன. வீட்டைச் சுற்றி கூடுகளும் கட்ட ஆரம்பித்தது. பனிக்காலம் முடிந்தவுடன் விடியல் அவர்களின் 'கீச்கீச்' குரலுடன் தான் ஆரம்பம். கோடையில் அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆரம்பமாகி விடும் இவர்களின் ரவுசு. கணவரும் விதவிதமாக படங்கள் எடுக்க ஆரம்பிக்க, குருவிகளில் இத்தனை வகையா?? இதுவரை எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு குருவி இனம் தான். தலையில் ஒரு நிறம், தொண்டையில் ஒரு நிறம், இறகுகளில் பல நிறங்கள், பல பெயர்கள்...படங்களில் இருந்து அது என்ன பறவை என்று தேட ஆரம்பித்து அதனைப் பற்றிய தகவல்களைப் படிக்க ஆரம்பித்தவுடன் சுவாரசியம் கூடி, அவர்களை கண்காணிக்க...நேரமும், நாட்களும் போதவில்லை.

ஆண் குருவி, பெண் குருவி என இனம் கண்டுபிடிப்பதிலும் சிரமம் இல்லை. இணையை கண்டு இரண்டும் சேர்ந்து கூடு கட்டுவதிலிருந்து, இருட்டும் நேரத்தில் ஓடிப் போய் கூட்டுக்குள் தஞ்சம் புகும் வரை பறந்து திரியும் பொழுதில் அதன் 'கீச்கீச்' சங்கீதத்திலும், சேர்ந்து விதைகளை தேடித்தேடி உண்ணுவதிலும், விதையை உண்டு தோலை துப்புவதிலும், தண்ணீரைத் தேடி குடிப்பதிலும், மண்ணில் புரண்டு புழுதியில் உடலை புரட்டி எடுப்பதிலும், இணையுடன் சேர அது எழுப்பும் குரலும்(!), கூட்டிற்காக இலை, தழைகளை எங்கிருந்தோ சேர்த்து அதன் மேல் முட்டைகளை அடைகாத்து சின்னஞ்சிறு பறவைகளின் சிறகு முளைத்து பறக்கும் காலம் வரை தாய், தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்வது என்று படித்ததை நேரில் பார்த்த பொழுது...அவர்களின் உலகத்தில் இருக்கும் சுவாரசியம் பலவும் ஆச்சரியமாக இருந்தது.

முதன் முதலில் Cardinal ஆண் பறவையை பார்த்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் உடல் முழுவதும் அடர் சிகப்பு நிறம், முகம் மட்டும் கருமையுடன். சிறிது வண்ணம் குறைந்த பெண் பறவையும் பெரிய கண்களுடன் கொள்ளை அழகு. ஆண் பறவை தன் இணைக்கு ஊட்டி விட்டுத் தன் அன்பை வெளிபடுத்துமாம். வீட்டிற்குப் பின் ஒரு ஜோடி இருக்கிறது. அடிக்கடி வந்து விதைகளை உண்டு செல்லும். நிமிடத்திற்குள் பறந்து விடும்.

K-PAX படத்தில் ஒரு நீலப்பறவை வரும். ஏதோ ஒரு பறவை என்று நினைத்திருந்த எனக்கு வீட்டின் முன் இருக்கும் மரத்தில் அது அமர்ந்திருந்த பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. தலைக்கொண்டையுடன் நீல வண்ணமும், வெள்ளை நிறத்துடனும் ஒரு அழகுப்பறவை !! அதுவும் தன் துணையுடன் அவ்வப்போது தரிசனம் கொடுக்க ...ஆனந்தம் ஆனந்தம்...

கைக்கு அடக்கமான அழகு குட்டிப் பறவைகள், கறுப்புத் தலையுடன் வெள்ளை நிறப்பறவை Chickadee. கைகளில் ஏந்த மனம் துள்ளும். அது சாப்பிடுவதும், அலகை தீட்டிக் கொள்வதும், குரலும் ...அழகோ அழகு. பனிக்காலத்தில் அதன் வருகை அதிகமாக இருந்தது. மழைக்காலத்தில் குறைந்து விட்டது.

வெள்ளை நிற முகமும், வயிறும் கொண்ட நீண்ட அலகுடன் 'டொக்டொக்' என்று மரப்பட்டைகளை கொத்திக் கொண்டிருக்கும் Nuthatch, மரங்களில் ஏறி இறங்கும் அழகே அழகு!

இருப்பதிலேயே மிகவும் வேகமானதும், மனம் மயக்குவதும் மரங்கொத்திப் பறவைகள் தான். மரத்தின் மேல் ஏறும் அழகில் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது தான்! அதிலும் எத்தனை வகைகள்!

Junco என்றொரு குட்டிப்பறவை. பொந்துகளில் கூடு கட்டி வாழ்கிறது. வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்த ஒரு அழகு தேவதை. வசீகரமான குரலுடன் இப்பறவைகளும் வலம் வருகிறது.

எனக்குத் தெரிந்த வரையில் காகம் என்றால் கருப்பு நிறத்துடன் இருக்கும். அடர் கருப்பில் அண்டங்காக்கையும் தான். இது வரை நான்கு கறுப்புப் பறவைகளை பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருத் தனித்தன்மையுடன்.

Brewer's Black Bird என்று ஒரு காகம். நீண்ட வால், மயில் கழுத்து வண்ணத்தில் இதன் கழுத்தும், பளிச்சென்றிருக்கும் வெள்ளைக் கண்கள், கூரிய அலகுகள். ஆண் பறவை தான் இவ்வளவு அழகுடன்!

Brown-headedCowbirds என்றொரு கருப்பு பறவை இனம். இதுவும் தன் துணையுடனே வலம் வரும் :)

சிறகில் மஞ்சளும், சிவப்பும் வண்ணங்களை கொண்ட Red-winged Blackbird குரல் அப்படி ஒரு கட்டையான குரல். அதே பறவையால் அப்படி ஒரு அழகானவிசிலும் அடிக்க முடியும் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். அவர்களுக்குள் பேசும் சங்கேத மொழியோ என்னவோ!

அமைதியாக, பறவைகளுக்கே உரிய ஆர்ப்பாட்டமில்லாத 'Mourning Dove' அழகு தேவதைகள். ஏன் தான் இதற்கு இந்தப் பெயரோ? என்று எண்ண வைக்கிறது. தன் துணையுடனே என்றும் இருக்கும். சேர்ந்தே வருவார்கள், உண்பார்கள், பறப்பார்கள். அதனால் எனக்கு மிகவும் பிடித்த பறவையும் கூட. துணையுடன் இருக்கையில் யாரையும் நெருங்கவும் விடுவதில்லை.

Song Sparrow என்று உடல் முழுவதும் பழுப்பு, வெள்ளை நிறத்துடன் இருக்கும் இந்தப் பறவைகளின் குரல் நன்றாக இருக்குமாம்.

Rock Pigeon -நம்மூர் வெள்ளைப்புறாக்கள் வகையை சேர்ந்தவை. தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டி ஆட்டி நடக்கும் அழகும், வண்ண வண்ண சிறகுகளுடன் மூக்குத்தி அணிந்ததைப் போன்ற அலகுகளுடன் வலம் வரும் பெரிய பறவைகள்- பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

GoldFinch என்று மஞ்சள் வண்ணத்திலும், Purple Finch, House Finch என்று தலையில் சிவப்பு வண்ணத்துடன் வலம் வரும் சிட்டுக் குருவிகளும் பார்ப்பதற்கு அழகோ அழகு.

பூனை போல் கத்தும் Cat Bird. முதலில் குரலை கேட்டவுடன் பூனைக்குட்டி தான் இங்கிருக்கிறதோ என்று எண்ண வைத்து பிறகு அப்படி ஒரு பறவை இருப்பது தெரிந்தது!

கழுத்தை தூக்கி எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் Robin பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கிறது.

Killdeer என்றொரு பறவை இனம். ஓரிடத்தில் ஒரு நொடிக்கு மேல் நிற்பதில்லை. நடந்து கொண்டே இருக்கும். 'சடக்'கென்று நின்று விடும். திடீரென்று இறக்கையை தூக்கி இரையை பயமுறுத்துமாம் !

கழுகுகளிலும் ஏராள இனங்கள். பெரிய பறவைகள் பெரிய கூடுகளை உயர்ந்த இடங்களில் கட்டிக் கொண்டு, ஷிப்ட் போட்டு அடைகாப்பதும், உணவை கொண்டு ஊட்டி விடுவதும், குட்டிகள் நன்கு வளரும் வரை பாதுகாப்பதும் ...

ஜோடி ஜோடியாக வாத்து நடை போட்டவர்களும், தன குஞ்சுகளுடன் குடும்பமாக நடந்து செல்வது காண கோடி இன்பம்! வாத்துக்களிலும் பல வகைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் !

அதிகாலையிலும், இருள் நெருங்கும் வேளையிலும் மனித நடமாட்டம் குறைந்தவுடன் தத்திதத்தி தாவிச் சென்றும், சிறு சத்ததிற்கும் ஓடிச் சென்று தன் பெரிய காதை கூராக்கி கேட்கும் முயல் இனங்கள் கைகளில் எடுத்து கொஞ்சத் தூண்டும் அழகு செல்லங்கள் என்றால்,

மரங்களில் ஓடிவிளையாடும் அணில்களோ இன்னும் அழகு. சிறு கைகளால் குழி தோண்டி உணவை புதைத்து, சுற்றிப் பார்த்து மண்ணை போட்டு மூடும் அழகும், பசிக்கும் வேளையில் எங்கு புதைத்தோம் என்று முகர்ந்து கொண்டே கைகளால் குழியை தோண்டுவதும் ...அதன் உலகமே தனி தான் போல!

பறவைகளில் ஆண் பறவைகளை எளிதில் கண்டு பிடித்து விடலாம். வண்ணத்திலும், அழகிலும் ஒரு படி மேல்!

துணையை கவருவதற்காக அவர்கள் செய்யும் தந்திரங்களும் ஏராளம்! பெண் பறவைகளும் லேசுப்பட்டவர்கள் இல்லை போலிருக்கு :) தன் எல்லையில் பிற பறவைகள் வந்து விட்டால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை தான் இவர்கள் வாழ்விலும். குஞ்சுகளை அடைகாக்கும் நேரங்களில் அருகில் யாராவது வர நேர்ந்தால் மிக அருகில் பறந்து அவர்களை விரட்டுவதாகட்டும், தேடித்தேடி உணவை கொண்டு வந்து குட்டிகளுக்கு ஊட்டுவதாகட்டும், குட்டிகளின் அருகிலேயே இருந்து அவர்களை கண்காணிப்பாகதாகட்டும் ...மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்! ஒவ்வொரு பறவையின் கூடும் கைதேர்ந்த வல்லுனரால் கட்டப்பட்டது போல் இருக்கிறது. சில பறவைகள், அடுத்தவர் கட்டிய கூட்டில் முட்டையிட்டு சென்று விடுமாம்!

பறவைக்குஞ்சுகள் பறக்கும் காலம் வந்தவுடன் தாய்ப்பறவை அதை கண்டுகொள்வதில்லை. தந்தைப்பறவை தான் குஞ்சுகளுக்கு ஊட்டி விடுகிறது!

சில பறவைகள் தரையில் ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்டால், சில பறவைகள் பறக்கும் பூச்சிகளை சாப்பிடுகிறது! உருவங்களில், வண்ணங்களில், குரல்களில் என்று பல இனங்கள்! பனிக்காலம் முடிந்தவுடன் கூட்டிற்குத் திரும்பும் பறவைகளும், கோடைமுடிந்தவுடன் புலம்பெயரும் பறவைகளும் ...

நம்மைச் சுற்றியிருக்கும் இவ்வுலகில் பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் ...

பறவைகளின் படங்களை கண்டுகளிக்க ( To view more pictures)...

Saturday, May 30, 2015

ரசம் - நேசம்- பாசம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சூப் மாதிரி இருக்கே என்ன இது என்று கேட்டதற்கு, எலுமிச்சம்பழ ரசம், டேஸ்ட் பண்ணி பாருங்க என்றதும், அட, ஆமா, டேஸ்ட்டா இருக்கு! இஞ்சி வாசம் வருதே? ஆமா, இஞ்சி துருவி போட்ருக்கோம்ல என்றார்கள். வித்தியாசமான சுவையுடன் இருந்தது. அதையொட்டி சில தினங்களில், முகநூல் சாப்பாட்டு குரூப்பில் அந்த ரசத்தை ஒருவர் குறிப்பிட்டிருந்தார். விடுவேனா??? ரெசிபி ப்ளீஸ்! என்றவுடன் விரிவாக எழுதியிருந்தார்.

இந்த வாரம் ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று அந்த வாரமே செய்து பார்த்ததில் மிகவும் திருப்தியாக வந்திருந்தது. கணவரும், 'ஆஹோ ஓஹோ' வென்று (வேற வழி !) மெச்சி சாப்பிட்டார். மிகவும் எளிதான குறிப்பு. கொஞ்ச நாளைக்கு இந்த ரசம் பண்ணிட வேண்டியது தான்.

மகனிடம், பருப்புக்கீரை தீர்ந்து விட்டது. ரசஞ்சோறு சாப்பிட சொன்னால், எனக்கு அது வேண்டாம்மா என்றான். ரசஞ்சோறு வேண்டாமா?? நானெல்லாம் அடிச்சு பிடிச்சு ரசிச்சு சாப்பிட்டதை இப்படி வேண்டாம் என்கிறானே என்ன பசங்க?

என் அம்மா ரசம் வைப்பதை வேடிக்கை பார்க்கவே நன்றாக இருக்கும். வீட்டில் பருப்புடன் கூடிய ரசம், பருப்பு இல்லாத ரசம் என்று இரு வகை ரசம் வைப்பார்கள். பருப்பு இல்லாத ரசம் ஈஸி ரசம். புளியை கரைத்து ஒரு கொதி வந்தவுடன், பூண்டு தட்டிப் போட்டு, ரசப்பவுடர் , உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுவார்கள். அதில் தாளிப்பு தான் சுவையை கூட்டும். நெய்யில் கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை போட்டு, கரைத்து வைத்த பெருங்காயத் தண்ணீரை கொஞ்சம் சேர்த்தவுடன், 'சொய்ங்ங்ங்ங்' சத்தமும், பெருங்காய வாசமும், மேலே மிதக்கும் கொத்தமல்லி வாசமும் ...உறங்கிக் கொண்டிருக்கும் பசியை உறும வைத்து விடும்.

ரசம் சோற்றுக்கு சாதம் கொஞ்சம் குழைவா இருக்கணும். அதோடு  நல்லா ரசத்தை ஊத்தி ரசமும், சோறும் ஒண்ணு மண்ணா கலந்து அதோட எந்த காம்பினேஷன் நல்லா இருக்கும்னா ,
சுக்கா வறுவல் - ஐயோ! எவ்வளவு சோறு சாப்பிட்டோம்னே தெரியாது.
மீன் வறுவல் - ஆஹா!!
கருவாடு - வாரே வா!
உப்புக்கண்டம் - நோ சான்ஸ் !
தேங்காயும், மட்டனும், சின்ன வெங்காயமும் சேர்த்து வேக வைத்தது - அடடா!!
பருப்பு வடை - ம்ம்ம்ம்ம்
கொலுவிஞ்சிக்காய் ஊறுகாய் (இரவு நேர சாப்பாட்டிற்கு ஐடியல் )
பொரிச்ச அப்பளம் -ஓகே
உருளைக்கிழங்கு கார வறுவல் கூட நல்லா தான் இருக்கும்.
பட்டாணி மசால்
கருப்பு சுண்டல் மசால்
பட்டர்பீன்ஸ் மசால்
காராபூந்தி
எண்ணையில் வறுத்த கடலை
பக்கோடா
எல்லாமே அம்சமா தான் இருக்கும்.

இப்ப மைசூர் ரசம், மிளகு ரசம், மல்லி ரசம்,  பைன்-ஆப்பிள் ரசம்னு விதம்விதமா தசாவதாரம் எடுத்து வந்தாலும், இந்த காலத்துப் பசங்களுக்கு தெரியலையே இதோட அருமை.

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அம்மா கையால பிசைஞ்ச சாதம் உருட்டி உருட்டி கொடுத்தா, வயிறு ரொம்பி கழுத்து வரைக்கும் வந்து முட்ற அளவுக்குத் திருப்தியா சாப்பிடறது தான்!

அந்த புளிப்பு ரசம் ...ம்ம்ம்ம்...இப்ப அப்படியே குடிப்பேனே ரேஞ்சில வந்து நிக்குது.




Sunday, May 10, 2015

மதுரை-இராமேஸ்வரம் 2

பல வருடங்களுக்கு முன் பாட்டியுடன் ஒரு முறையும், பள்ளிச்சுற்றுலாவாகவும் இராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் .  இந்த முறை நாங்கள் சென்ற நாளிலும் நல்ல கூட்டம்! பெயர் பெற்ற ஸ்தலம் அல்லவா?

ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்த்தங்களில் மகளும், நானும் நீராடுவதில்லை. தலையில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தோம். அன்று பார்த்து ஆடி அமாவாசையோ ஏதோ என்று சொல்லி எல்லா தீர்த்தக் கிணறுகளையும் மூடி விட்டதில் கணவருக்கு கொஞ்சம் வருத்தம்!


கடற்கரையோரம் மண்டபகங்களை  அழகாக கட்டி படிகள் சுத்தமாக இருந்தாலும், இல்லாத ஜலகண்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டு தண்ணீருக்குள் காலை விட பயமாகத் தான் இருந்தது. 'தளுக் தளுக்'  என்று கரையை தொட்டுச் செல்லும் அலைகள் பார்ப்பதற்கு இன்பம் தான். வெயிலில் கடல் நீர் மின்னியது வேறு மிகவும் நன்றாக இருந்தது. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று கடல் நீரில் காலை அலம்பி விட்டு வந்தோம்.

கோவிலுக்கெதிரில் இறந்தவர்களுக்கு திவசம் செய்வதை தடை செய்திருக்கிறார்கள். அதனால் துணி, மாலைகள் இன்ன பிற திவச பொருட்கள் நீரில் மிதக்காமல் இருந்தது.

கோவிலுக்குள் சென்றவுடன் அங்கிருந்த பட்டர் ஒருவர் சந்நிதி மூடப்பட்டுள்ளது என்றும், சுவாமியை பார்க்க வேண்டுமென்றால் ராமர் பாதம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னார். சரி,பிரகாரங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கோவில் முழுவதும் சிற்பங்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபங்களை வலம் வந்தோம். என்ன ஒரு நேர்த்தியான வேலைப்பாடு! பெரிய பிரகாரங்களும் கூட!

நாங்கள் சென்றிருந்த பொழுது சுற்றுப் பிரகாரங்களுக்கு வண்ணம் அடித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளும் சிறிது கூட்டம் இருந்தது. வட மாநிலத்து மக்கள் நிறைய தெரிந்தார்கள். கோவிலைச் சுற்றி வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கிச் செல்லும் வகையில் வட நாட்டவர் சத்திரங்கள் பல இருந்தது. ஹோட்டல் ஒன்றில் காபி என்று ஒன்றை குடித்து விட்டு அருகில் இருந்த கடைகளுக்குச் சென்றோம்.

செல்வி ஸ்படிகமணிமாலை வாங்க அதை தேடிக் கொண்டிருந்தார். சங்கு, பாசிமணிகள், வீட்டு அலங்காரப்பொருட்கள் என்று பலவும் விற்றுக் கொண்டிக்க, சங்குகளில் பெயர் எழுதியும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவரும் எங்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய சங்குகளில் பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டோம். அதில் சில மணி நேரங்கள் கழிந்தது. அனைத்து அமெரிக்க நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த பரிசாக அமைந்து விட்டதில் எனக்குத் திருப்தியும் கூட!

பிறகு ராமர் பாதம் சென்றோம். அங்கு சுவாமியை தரிசிக்க வந்த கூட்டம் நிறைய இருந்தது. அழகிய பல்லக்கில் வீற்றிருந்த சுவாமியையும், தாயாரையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் கோவிலைச் சுற்றிப் பார்த்தோம். படிகளில் ஏறி அங்கிருந்து கடலை பார்க்க கொள்ளை அழகு.

தனுஷ்கோடி செல்ல அங்கிருந்து கிளம்பினோம். ஏற்கெனவே அங்கு சென்று வந்த அனுபவத்தை கணவர் கூறி இருந்ததால் குழந்தைகளும் ஆவலுடன் இருந்தார்கள். உறங்கிக் கொண்டிருந்த ஊரையே சூறாவளி  முழுங்கிக் கொண்டது என்று படித்திருந்ததால் வருத்தமாகவும், ஊரை பார்க்க ஆர்வமாகவும் இருந்தது. அங்கு செல்வதற்கு முறையான சாலைகள் இல்லை. ஓரிடத்தில் பஸ்களும், வேன்களும், கார்களும் நிறுத்தியிருந்தார்கள்.

அங்கிருந்து தனுஷ்கோடி செல்ல அதற்கென சில மீன்பாடி வண்டிகள் வைத்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுத்துக் கொண்டு சொந்த வண்டியில் கூட போகலாம். நடுவில் கடல் மண் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது என்று பீதியை கிளப்பி விட, அநியாய விலை கொடுத்து அந்த வண்டிக்குள் ஏறி விட்டோம். முருகனுக்கோ அதில் ஏற இஷ்டமே இல்லை. லாரி என்றால் கூட எங்களுக்கு ஓகே. எல்லாம் ஒரு அனுபவம் தான். நம்மை விட குழந்தைகள் நன்கு அனுபவிப்பார்கள். ஏறுங்கள் என்று சொல்லி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து ஏற்றினோம். பயந்து கொண்டே தான் ஏறினார். பெண்கள் அனைவருக்கும் சீட் கிடைத்து விட்டது. என் கணவருக்கோ வண்டியின் பின்னால் நின்று கொண்டு வருவதில் அப்படி ஒரு ஆனந்தம்!

பாவம், ஒரு நடுத்தர வயதுள்ள அம்மாவால் ஏறக் கூட முடியவில்லை. படி போன்ற வசதிகளும் கிடையாது. இரண்டு பேர் சேர்ந்து அவரை தூக்கி விட்டார்கள்.

இப்படி ஒரு வண்டியில், அதுவும் சகதியில் மேலும் கீழும் தூக்கிப் போட்டுக் கொண்டே சென்றது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் தான். சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. நடுவில் ஓரிடத்தில் சேற்றில் சக்கரங்கள் மாட்டிக் கொண்டு விட்டது. இப்படியே புதைந்து விடுமோ என்ற பயம் கூட வந்து விட்டது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சீக்கிரம் சுற்றிப் பார்த்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார் டிரைவர்.

சிதிலமடைந்த கோவில், வீடுகள், தேவாலயம்...எத்தனை உயிர்கள் இழந்தனவோ அந்த சுனாமியால்?? எத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வு! அங்கு நின்றிருந்த அந்த நொடிப் பொழுதில்  இருண்ட இரவின் கொடூரத் தாண்டவத்தை கற்பனை செய்ய, மனம் கனத்தது.

தொலைவில் ஒரு பூசாரி சிவனை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு பெண், பாசி மணி மாலைகள் விற்றுக் கொண்டிருந்தார். சிலர், திவச பூஜைகளும் செய்து கொண்டிருந்தார்கள்.

வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் இரு வேறு நிறத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. சிறிது நேரம் அலைகளுடன் குழந்தைகள் நடந்து விளையாடினார்கள். சிலர் அந்தப் பக்கம் தான் ஸ்ரீலங்கா இருக்கு என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

எவ்வளவு அழகான கடல்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் கடல் மட்டுமே! ஆரவார அலைகளுக்குப் பின்னால் இருப்பது அமைதியா?? பேரழிவைச் சுமந்த உயிர்களா? எண்ணங்களா??அமைதியாக கிளம்பினோம்.

காரில் ஏறி ராமநாதபுரத்தில் இரவு உணவவைச் சாப்பிடுவது என்று தீர்மானித்து கிளம்பி விட்டோம். போகும் வழியில் டிரைவர் இங்க ஒரு அருமையான பெருமாள் கோவில் இருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, பார்த்துட்டு போயிடுங்க என்றார். அப்போதே நேரம் எட்டு மணிக்கு மேல் இருக்கும். எப்படியும் போய்ச் சேர இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகி விடும். குழந்தைகளோ பசிக்குது பாட்டை அப்போதே பாட ஆரம்பித்திருந்தார்கள் வானம் வேறு சிணுங்கிக் கொண்டிருந்தது. சரி, கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்து முருகனுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது.

திருப்புல்லாணியில் இருக்கும் ஆதி ஜகன்னாத பெருமாள் கோவில் மூடப்போகும் நேரத்திற்கு உள்ளே நுழைந்தோம். 108 திவ்யதேசங்களில் ஒன்று என்று பட்டர் கூற, அழகான கரிய பெருமாள், தாயார் லக்ஷ்மியை சேவித்து விட்டு வந்தோம். இரவில் சென்றதாலும், நேரமின்மையாலும் கோவிலை முழுமையாக சுற்றிப் பார்க்க முடியவில்லை. சாவகாசமாக ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பிரசாதமாக சுவையான காரமான புளியோதரையும் சிறிது கிடைத்தது. அது பசியை மேலும் கிளப்பி விட, ஹோட்டலுக்குச் சென்று திருப்தியாக சாப்பிட்டு வந்தோம். இவ்வளவு லேட்டாக வந்து இப்படி சாப்பிடுகிறார்களே என்று சர்வர் நினைத்திருப்பார்.

இரவு உணவு எதுவும் வேண்டாம் தூக்கம் வந்து விடும் என்று டிரைவர் வெறும் காபி மட்டுமே சாப்பிட்டார். வண்டியில் ஏறியவுடன் என்னைத் தவிர எல்லோரும் உறங்கி விட, தூக்க கலக்கத்துடன் இருந்த டிரைவர் தூங்காமல் ஓட்டுகிறாரா என்று நடுநடுவே அவரிடம் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டே வீடு  வந்து சேர்ந்தோம்.



படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா & முருகன்
















































Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...