Sunday, November 20, 2016

ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை

சொல்வனம் இதழ்
 | இதழ் 158 | 01-10-2016


அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் என்பது ஏறத்தாழ தமிழ் தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் போல இரண்டு வருடங்களுக்கும் குறைவில்லாமல் நீளும் சம்பிரதாயச் சடங்கு. ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரித்தான பரபரப்பும் சுவாரசியமும் கொண்டவை. அந்த வகையில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்ளும் முதல் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இரண்டு விவாதங்கள் பாக்கியிருக்கின்றன.

இந்த விவாதங்களின் நோக்கமே, யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாத நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு தெளிவைத் தரவேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அதனை அவர்கள் அணுகும்முறை, கையாளுவதற்கான திட்டங்கள், அதை வெளிப்படுத்தும் அவர்களின் உடல்மொழி, ஆளுமைத் திறன் என எல்லா கூறுகளும் இந்த விவாதங்களின் மூலமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.

பலவகையிலும் இந்த விவாதம் முந்தைய காலங்களில் நடந்த விவாதங்களை  விட வித்தியாசமானதாகவும், புதுமைகளை கொண்டதாகவும் இருக்குமென  ஊடகங்கள்  தங்களின் கணிப்புகளை கூறி வந்தன. இந்த விவாதத்தில் மூன்று முக்கிய பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை நாட்டின் பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள்.

இத்தகைய பின்னனியுடன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஹிலரி, ட்ரம்ப் இடையிலான முதல் விவாதம் வெற்றிகரமாக(!) நடந்தேறி இருக்கிறது.

ஒரு பக்கம் ஹிலரி க்ளிண்டன். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதி. வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாக இருந்து பெற்ற அரசியல் அனுபவம், செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக கூடுதலாக கிளிண்டன் போன்ற ஒருவரின் பின்புலம் என எல்லாவகையிலும் ஹிலரி கூடுதல் தகுதியுடையவராகத் தெரிந்தார்.

மறுமுனையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான தொழிலதிபராக அறியப்பட்டவர். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர். அமெரிக்காவும், அமெரிக்கர்களும் எல்லா வகையிலும் சுரண்டப்படுவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.

விவாதத்தின் போது ஒரு வார்த்தை பிசகினாலும் அது பாதகமாய் போய்விடும் என்பதால் இரண்டு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் எப்படி கையாளுவது, விவாதத்தின் போக்கை தீர்மானிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய முன் தயாரிப்போடு வந்திருந்தது பல இடங்களில் வெளிப்பட்டது.

இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.

எதைப்பற்றிப் பேசினால் ட்ரம்ப் எரிச்சலாவார் என்பதைப் பற்றி ஹிலரி நன்கு தெரிந்து வைத்திருந்தார். விவாதம் துவங்கிய சில நிமிடங்களில் அதை திறமையாக பயன்படுத்தினார். ட்ரம்ப் ஏன் இன்னும் வருமான வரி விவரங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை அதில் உள்ள தகவல்கள் அவர் சொல்லிக் கொள்வது போல் செல்வந்தரில்லை என்பதை காட்டிவிடுமா, அவருடைய நிறுவனங்களின் மேல் இருக்கும் கடன் நிலுவைகள் எத்தகையவை, தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அளித்திருப்பதாக சொல்லும் நிதி விவரங்கள் முற்றிலும் பொய்யான தகவல்களாக இருக்குமோ என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக அவர் எழுப்பிய கேள்வியில் ட்ரம்ப் நிலைதடுமாறித்தான் போனார். ஹிலரி அழித்ததாகச் சொல்லப்படும் 33000 மின்னஞ்சல்களை வெளியிட்டால் தன்னுடைய வரிவிவரங்களை தணிக்கைக்குப் பிறகு வெளியிடுவதாக ட்ரம்ப் சொன்னதற்கு  பதிலளித்த ஹிலரியோ, தவறு நடந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன் என ஒற்றைவரியில் மின்னஞ்சல் சர்ச்சையை கடந்து போனார். ஹிலரியின் மின்னஞ்சல் சர்ச்சையை ட்ரம்ப் சரியாக முன்னெடுத்துப் பேசாதது அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டதாகவே தோன்றியது.

அடுத்த கட்டமாக ஹிலரி கையில் எடுத்த ஆயுதம், ட்ரம்ப்பின் நிர்வாகத்திறன் மற்றும் அவருடைய வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை பற்றியதாக இருந்தது. ட்ரம்ப்பின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு ஹிலரி விரித்த வலையில் ட்ரம்ப் தானாய் வந்து விழுந்தார் என்றுதான் சொல்வேன். தான் வசமாக சிக்க வைக்கப்பட்டதில் எரிச்சலான ட்ரம்ப் தனிமனித தாக்குதலில் இறங்கினார். இந்த இடத்தில் அவருடைய பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

ஹிலரி தன்னுடைய பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் நன்மையளிக்கும் எதையுமே செய்யவில்லை அது அவருடைய திறமையின்மையையும், தோல்வியையும் குறிக்கிறது என்கிற வாதத்தை ட்ரம்ப் இன்னும் சிறப்பாக எடுத்து வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவரின் முன்கோபமும், எரிச்சலும் அவருக்கு எதிரியாகிப்  போனது. பல இடங்களில் விவாதத்தை தன் போக்கில் திசைதிருப்பி தனக்கு சாதகமாக்கும் உத்தியிலும் ஹிலரி வெற்றிபெற்றார்.

அமெரிக்க  வர்த்தக ஒப்பந்தங்களில் (NAFTA ) கிளின்டன் அரசு செய்த  தவறுகளைச்  சுட்டிக் காட்டி,  அன்று அதையெல்லாம் ஆதரித்த ஹிலாரி இன்று அதை எதிர்ப்பதைப்  போல் காட்டிக்கொள்வது மலிவான  அரசியலே என  ட்ரம்ப் முன் வைத்த வாதத்திற்கு ஹிலரியால் தடுமாற்றத்துடன் சமாளிப்பான பதில்களையே சொல்ல முடிந்ததை இங்கே  குறிப்பிட்டாக வேண்டும்.

க்ளைமேட் சேஞ் அண்ட் க்ரீன் எனர்ஜி பற்றிய வாதத்தில், டிரம்ப் தன் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதை குற்றம் சாட்டிப் பேசினார் ஹிலரி. பதிலுக்கு ட்ரம்ப், ஹில்லரி முப்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் ஏதோ இன்று தான் இவ்விஷயத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதும், அதுவும் தேர்தல் சமயங்களில் மட்டும் பேசுவதன் பிண்ணனி பற்றி எழுப்பிய கேள்வி சில கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது.

சைபர் அட்டாக்கிற்கு காரணமான சோவியத் ரஷ்யாவுடன் டிரம்ப் நட்புறவு கொண்டுள்ளார்  என ஹிலரி ஆரம்பிக்க, அப்படி இல்லையென்றால் பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஹிலாரியின் கட்சி எப்படி நடத்தியது என்கிற விவரங்கள் உலகுக்கே தெரியாமலே போயிருக்கும் என்றவுடன் அப்பேச்சையும்  ஹிலரி எளிதாக திசை மாற்றிக்கொண்டார்.

அதிபர் ஒபாமாவின் பிறப்புச்சான்றிதழ் பற்றிய பேச்சுகளும், கறுப்பர்களுக்கு வீட்டு வாடகைக்கு விட மறுத்து அதைச் சார்ந்து டிரம்ப் மேல் எழுப்பப்பட்ட சட்டமன்ற வழக்குகளும் அவர் கறுப்பர்களுக்கு ஆதரவானவர் அல்ல என்ற தொனியில் ஹிலாரி பேச, தன் மேல் தவறில்லை என்பது நிரூபணமாகி  தான் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றாகி விட்டது என்று அவ்விவாதத்தை டிரம்ப் முடித்து வைத்த கையோடு, 90களில் ஹிலரி கருப்பினத்தவரை  “super predators” என்று  சொன்னதை சுட்டிக்காட்டியது கவனம் பெற்றது.

ஹிலரியின் உடல்நலம் பற்றிய பேச்சை ட்ரம்ப் எடுத்தவுடன், பெண்களைப் பற்றி ட்ரம்ப் கூறிய பல தரமற்ற விமர்சனங்களையும், அவதூறு வார்த்தைகளை பதிலடியாகத் தர, ட்ரம்ப்பினால் பதில் சொல்லமுடியாமல் போனது. இந்த இடத்தில் மட்டும் ட்ரம்ப் சுதாரித்திருந்தால் ஹிலரியின் பெண்ணியவாதி பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கலாம். அவரது கணவர் கிளிண்ட்டனின் பெண் விவகாரங்கள், அதில் தொடர்புடைய பெண்களுக்கு ஹிலரி கொடுத்த தொல்லைகள் மிரட்டல்கள் போன்றவைகளை எல்லாம் ட்ரம்ப் எடுத்துப் பேசியிருந்தால் அது ஹிலரிக்கு பெருத்த சேதாரமாகி இருக்கும். இதை எப்படி ட்ரம்ப் மறந்து போனார் என்பதை இன்னமும் ஆச்சர்யத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக தொடர்ந்த விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிலரி தன்னுடைய அனுபவத்தை, உழைப்பை வெற்றிகரமாக பறைசாற்றினார்.அடிப்படை மேடை நாகரீகம், உடல்மொழி, கேள்விகளை எதிர்கொண்ட நிதானம், தனக்கு சாதகமான இடங்களில் அழுத்தமாய் பேசி, தன் பலவீனங்களை சுட்டிக்காட்டியபோது பதட்டமின்றி அந்த பேச்சுகக்ளை திசைதிருப்பி விவாதத்தின் நெடுகே அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  லாவகம் என பலவகையில் ஹிலரியின் உழைப்பு தெரிந்தது. அந்த வகையில் ட்ரம்ப் எல்லா அம்சங்களிலும் தோற்றுப்போனார்.

தனக்கு சாதகமான அம்சங்கள் பற்றிய புரிதல்களில் ட்ரம்ப் குழம்பிப் போயிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதிலும் அவருக்கு சரியான நிலைப்பாடுகள் இல்லை. அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை முன்வைத்து விவாதித்திருந்தால் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பார் என்றே பலரும் கருத்துச் சொல்லியிருந்தனர்.

ஹில்லரியை பொறுத்த வரையில் உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மேடையில் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியில்லாதவராக காட்ட வேண்டும் என்ற நோக்கம் இந்த முதல் சுற்றில் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஹிலரியின் நம்பகத்தன்மை மீதிருக்கும் சந்தேகத்தின் நிழல் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதை வரும் நாட்களில் ஹிலரி எபப்டி கையாளப்போகிறார் என்பதில்தான் வெற்றி தோல்வி நிர்ணயமாகும். ஏனெனில் இத்தனை மோசமான பின்னடைவுக்குப் பிறகும் சாமான்ய அமெரிக்கர்கள் ட்ரம்ப்பைத்தான் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் சொல்வது ஹிலரிக்கு தோல்விதான். இருவருக்குமான இடைவெளி குறைவாகவே இருக்கிறது. அடுத்த இரண்டு சுற்றுக்களில் அதை நிரப்ப ட்ரம்ப் தன்னாலான அத்தனையும் செய்வார் என்பதால் ஹிலரிக்கு வெற்றி என்பது எளிதில்லை என புரிந்திருக்கும்.

இது ஒரு புறமிருக்க, இந்த இரு கோமாளிகளின் பேச்சுக்களை  யார் கேட்பது என்கிற அலட்சியத்துடன் தொலைக்காட்சியை தவிர்த்தவர்களும் ,  புட்பால் பார்த்தவர்களும் கணிசமானவர்கள் இருந்தனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். விவாதம் நடந்து கொண்டிருந்த போதே சமூகவலைத்தளங்களில் உடனுக்குடன் நக்கலும், நையாண்டியுமான கமெண்ட்டுகள் திங்கள் இரவை விறுவிறுப்போடும் குதூகலமாயும் வைத்திருந்தன.

கடந்த 2008ம் வருடத்தில்  ஒபாமாவுக்கும்  மெக் கைனுக்கும் நடந்த  விவாதத்தில் தன்னுடைய நேர்மையான  வசீகரப் பேச்சால் மக்களின் முழு ஆதரவைப் பெற்றார் ஒபாமா. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள், புஷ்ஷின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களில் வெறுப்புற்றிருந்த  மக்களுக்கு ஒபாமா ஒரு நாயகனாக தெரிந்தார். கறுப்பர்கள், வெள்ளையர்கள், பிறநாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியும் கண்டார். அதற்குப் பிறகு 2012ல் நடந்த விவாதங்களில் மிட் ராம்னிக்கு ஒபாமாவே பரவாயில்லை என்று தோன்றியதால்

ஒபாமா வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை அபபடியான சூழல் எதுவுமில்லை.

ஒப்பீட்டளவில் கடந்த முறை போட்டியில் இருந்த வேட்பாளர்களை விட , இந்த முறை வேட்பாளர்களின் தகுதியும், தரமும் கேள்விக்குள்ளாகி இருப்பதை தொடர்ந்து கவனிக்கும் எவரும் கூறிவிடமுடியும்.இந்த தேர்தலில் அரசியல் அனுபவம் மிக்க ஹிலரிக்கே தங்கள் ஒட்டு என்று சொல்லவும் முடியாமல்  அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப்-பிற்கும் ஆதரவு தெரிவிப்பதில் இருக்கும் தயக்கம் என தெளிவற்ற குழப்பச்சூழலே இதுவரை நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியில் கணிசமானவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதும் , ஒருவேளை ஹிலரி பதவிக்கு வந்தால் அது ஒபாமா ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்கிற மக்களின் எண்ணவோட்டம் ஹிலரிக்கு பாதகமாய் அமைய வாய்ப்பிருக்கிறது.  ஏற்கனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருக்கும்  ஆஃப்கானிஸ்தான், சிரிய போர்கள், சிரியா அகதிகள் பிரச்சினை ,இஸ்லாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் ஹிலரியின்  நிலைப்பாடுகளினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அவர் வால் ஸ்ட்ரீட் மக்களுக்காக உழைப்பவர் என்ற பொதுப்படையான குற்றச்சாட்டுகளும் ஹிலரியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவையெல்லாம்  ட்ரம்ப்புக்கு எத்தனை தூரம் சாதகமாய் அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஹிலரியின் பலவீனங்களை தன்னுடைய பலமாக மாற்றிட  இன்னமும் ட்ரம்ப்புக்கு வாய்ப்பிருப்பதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.இப்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும் கூட வரும் வாரங்களில் ட்ரம்ப் என்னவிதமான உத்திகளை கையாளப்போகிறார், அடுத்தடுத்த விவாதங்களின் போது ட்ரம்ப்பின் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். அந்த வகையில் வரும் நாட்கள் இரு வேட்பாளர்களுக்கும் சவாலான காலகட்டமாக இருக்கும்.

அடுத்த சுற்று விவாதத்தின் முடிவில் இது பற்றி இன்னும் பேசுவோம்.


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...