Sunday, November 20, 2016

யாரிந்த ட்ரம்ப்? ஏனிந்த கொலைவெறி!!!

சொல்வனம்
 | இதழ் 149 | 28-04-2016| 


அமெரிக்க மண்ணில், எனக்கு இது நான்காவது அதிபர் தேர்தல். கடந்த 2000த்தில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் “அல்கோர்” முன்னணியில் இருந்தாலும், ஃப்ளோரிடா மாகாண தேர்தல் முடிவுகளை தள்ளிப் போட்டு, சில பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ஜூனியர் புஷ் அதிபரானதாக ஜனநாயக கட்சியினர் பல காலமாய் புலம்பிக்கொண்டிருந்தனர். பின்னாளில் இதை மையமாக வைத்து “ரீகவுண்ட்” என்றொரு திரைப்படம் கூட வெளியானது.

ஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் போர் நடவடிக்கைகள், இரட்டை கோபுரத்தாக்குதல், விமான நிலயங்களில் திடீர்திடீரென ரெட் அலர்ட், வீண்வதந்திகளினால் பதற்றம் என  மக்களிடைய ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியே இருந்தது. போதாதகுறைக்கு பொருளாதார பின்னடைவுகள், வேலையில்லா திண்டாட்டம்,கேட்ரினா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் என எல்லாம் சேர்ந்துகொள்ள, மக்கள் புதிய தலைமையை, நம்பிக்கையை எதிர்பார்த்தனர். மக்களின் இந்த எதிர்பார்ப்பை, தேவைகளை ஜனநாயக கட்சியின் ஒபாமா நிச்சயம் நிறைவேற்றுவார் என நினைத்த மக்கள் அமோக ஆதரவளித்து  அதிபராக்கினர்.கடந்த எட்டாண்டுகளில் ஒபாமா தான் அளித்த வாக்குறுதிகளில் சிலதை செய்தார், சிலதை செய்யவில்லை, பலவற்றை செய்யவிடாமல் தடுக்கப்பட்டார் என்றெல்லாம் நிறையவே  விவாதங்கள் இருக்கின்றன.

எது எப்படியோ, இதோ அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபருக்கான தேர்தல்களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பது உறுதியாகிவிடும். வேட்பாளர் போட்டியில் நிறைய பேர் குதித்திருந்தாலும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹில்லாரி கிளிண்ட்டனும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பும் அனைவரின் கவனத்தை பெற்ற வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த கட்டுரையின் நாயகனாகிறார் “ட்ரம்ப்”.

ஜெர்மானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட்,ஹோட்டல்கள்,சூதாட்டவிடுதிகள், கோல்ஃப் மைதானங்கள் என பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் குழுமத்தின் தலைவர், தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றவர், 1987ம் ஆண்டுவரை ஜனநாயக கட்சியின் ஆதரவாளராய் இருந்தவர், அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரர், மூன்று திருமணங்களை செய்தவர், ஆரஞ்சு வண்ண தலையர், பணத்திமிர் கொண்டவர், ஏற்கனவே கடந்த 2000 த்தில் ஜூனியர் புஷ்ஷுடன் அதிபர் வேட்பாளராக மல்லுக்கட்டியவர் என ஏகப்பட்ட புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் டொனல்ட் ட்ரம்ப்.

அதிரடியான, வெளிப்படையான மேடைபேச்சுக்கள்தான் டொனால்ட் ட்ரம்ப்பை மற்றவர்களிடம் இருந்து தனியே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னார்தான் என்றில்லாமல் எல்லோரையும் தன் பேச்சில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். சொந்த கட்சியினரைக் கூட விட்டுவைப்பதில்லை. ஆரம்பத்தில் இத்தகைய ஆரவார பேச்சுக்கள் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டாலும் கூட, தற்போது மனிதர் ஏதோ சொல்ல வருகிறார் என அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினர் கவனிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னிடத்தில் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்தே தேர்தல் செலவுகளை சமாளிப்பேன். எனக்கு யார் பணமும் தேவை இல்லை. அதனால் நான் யாருக்காகவும் என் கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. யாரிடமும் விலை போக வேண்டிய அவசியமும் இல்லை என்று ட்ரம்ப் கொக்கரித்த போது மற்ற வேட்பாளர்களால் அமைதியாக வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.

தற்போதைய ஒபாமா ஆட்சியில் அமெரிக்காவின் மதிப்பும் மரியாதையும் உலக அரங்கில் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. உலக அரங்கில் நமக்கென இருந்த கௌரவத்தை இந்த எட்டு ஆண்டுகளில் இழந்து விட்டோம். இழந்த பெருமைகளை மீட்டெடுத்து மீண்டும் வளமான,வலுவான அமெரிக்கா உருவாக்குவதே தன்னுடைய குறிக்கோள் என்பதுதான் இந்த தேர்தலில் ட்ரம்ப்  முன் வைக்கும் ஒற்றை செய்தி. இதைச் சுற்றியே அவருடைய மற்ற கொள்கை வடிவங்கள் முன்வைக்கப் படுகின்றன.
சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் அமெரிக்கர்களின் வேலைகள், மெக்ஸிகோ, சைனா, இந்தியாவிற்கு செல்வதைத் தடுத்து, மீண்டும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்கிற பேச்சுக்கு எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நம் நாட்டில் மக்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைகளை தூக்கிக் கொடுத்த ஒபாமா அரசும், ஹிலாரியும் வெட்கப்பட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விளாசி தள்ளிக் கொண்டிருக்கிறார்.

இதைப் போலவே அமெரிக்க நிறுவனங்கள் செலவை காரணம் காட்டி உள்நாட்டில் தயாரிக்காமல்,வெளிநாட்டில் தயாரித்த பொருட்களை இங்கு கொண்டு வரும் பொழுது அதற்கு அதிகமான வரியை விதிப்பேன் என்று உலகளாவிய அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் வயிற்றிலும்  புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் தேவையில்லை. இது அன்றைய புஷ் அரசின் தவறான நடவடிக்கை. இதை அன்றிலிருந்து நான் சொல்லிக் கொண்டு வருகிறேன் என தன் சொந்த கட்சி தாக்கிப் பேசியது பலருக்கும் பிடித்துப் போனது. தீவிரவாதத்தை தயவுதாட்சண்யமின்றி அடியோடு ஒழிப்பேன். முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை. அகதிகள் என்ற போர்வையில் ஐசிஸ் தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள்  ஊடுருவதை ஒபாமா அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால்தான், இன்று நம் நாட்டில் இருந்து கொண்டே நம் மக்களை தீவிரவாதிகள் கொன்று குவிக்கிறார்கள் என்பதைப் போன்ற பேச்சுக்கள், இந்த குறைகளை களைய ட்ரம்ப்தான் சரியான ஆளாக இருப்பார் என பலரையும் நினைக்கத் தூண்டியது. இதன் எதிரொலியாக  பல மாநில ப்ரைமரி தேர்தலில் ட்ரம்ப் முன்னிலை பெற்றார்.

மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவேன். அவர்களால் போதைப்பொருட்களும் அதன் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து விட்டது.  இரு நாடுகளுக்கிடையே பெரிய சுவர் ஒன்று கட்டுவேன் என்று ட்ரம்ப் பேசியதற்கு எதிர்வினையாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப்,  நாட்டில் பாலங்களை கட்டுவதைப் பற்றி யோசிக்காமல் இரு நாடுகளுக்கிடையே சுவரை கட்டுவேன் என்று சொல்பவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது என்று சொல்ல,  போப்பையும் ட்ரம்ப் விட்டு வைக்கவில்லை.  போப்பையே எதிர்த்துப் பேசி விட்டாரே. இனி இவர் அவ்வளவு தான் என்றார்கள். ஆனாலும், அதற்குப் பின்னர் நடந்த ப்ரைமரியில்  ட்ரம்ப் முன்னிலையிலேயே  இருந்தார்.

‘சூப்பர் டியூஸ்டே’ தேர்தலுக்கு முன் வேட்பாளர்களிடையே நடைபெறும் விவாதஙக்ளில் ஆளாளுக்கு அதைச் செய்வோம், இதைச்செய்வோம் என்று சொல்லியும், சக வேட்பாளர்களை வம்புக்கு இழுத்தும் தங்கள் வார்த்தை ஜாலங்களினால் கலகலப்பூட்டினர். க்றிஸ் கிறிஸ்டி தனக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று தெரிந்து ஒரு கட்டத்தில் விலகிக் கொண்டார்.  மருத்துவத்துறையை சார்ந்த பென் கார்சன் தீவிர கிறிஸ்தவ ஆதரவாளர். ஆரம்பத்தில் அவரிடமிருந்த உற்சாகம் சில ப்ரைமரிகளில் காணாமல் போயின. மக்களும் அவரை எளிதில் மறக்க, ட்ரம்ப்புக்கு தன் ஆதரவை தெரிவித்துக் கொண்டு வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். எளிதில் கோபப்படுபவர் என அறியப்பட்டிருந்த ஜெப் புஷ்சும் ட்ரம்ப்பின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. பலத்த தோல்வியுடன் க்ரூஸ்-ஐ  ஆதரிக்கிறேன் என்று அவரும் தேர்தலில்  இருந்து விலகிக் கொண்டார். மார்கோ ரூபியோவிற்கும் ட்ரம்ப்புக்கும் நடந்த வாரத்தை விவாதங்களில் ரூபியோவிற்கு இன்னும் அரசியல் ஞானம் வரவில்லை என்று அவருடைய சொந்த மாகாணத்திலேயே அவரை வெற்றி கண்ட ட்ரம்ப் சொல்லாமல் அவரையும் விரட்டி அடித்தார்.

தற்போது டெட் க்ரூஸ் மற்றும் கைச் களத்தில் இருக்கிறார்கள். இவர்களுள் ஒருவர்தான் குடியரசுக்கட்சி வேட்பாளராக முடியும் என்கிற நிலையில் குடியரசுக்கட்சியின் பழமையாளர்கள் ட்ரம்ப் முன்னிலையாவதை ரசிக்கவில்லை என்றொரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் சில நிகழ்வுகள் நடைபெற ட்ரம்ப் அவர்களையும் தன் பேச்சுகளில் தாளித்தெடுத்தார்.

இப்படி எல்லாம் ட்ரம்ப்புக்கு ஆதரவாய் போய்க் கொண்டிருக்கையில், அவருடைய பிரச்சார மேலாளர் நிருபர் ஒருவரை அடிக்கச் சென்ற விவகாரம் பெரிதானது. சமீபத்தில் ஒரு பேட்டியில், அபார்ஷன் சட்ட விரோதம் என்றால் அதை செய்து கொள்ளும் பெண்களை தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும், அதற்கு காரணமான ஆண்களுக்குத் தண்டனை இல்லை என்று உளறிக் கொட்ட எல்லா தரப்பிலிருந்து ட்ரம்ப்புக்கு கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக பெண்களின் ஆதரவு கணிசமாக குறைந்திருக்கிறது.இதன் எதிரொலியாக விஸ்கான்சின் ப்ரைமரி தேர்தலில் ட்ரம்ப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.

அமெரிக்க தேர்தலில் வேட்பாளர் தேர்வு மற்றும் அதிபர் தேர்வு நடைமுறைகள் கொஞ்சம் சிக்கலானவை. 1237 பிரநிதிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முடியும். ஒரு வேளை தனக்கு அத்தகைய ஆதரவு கிடைக்காவிட்டால் தனியாகவே தேர்தலை சந்திப்பேன் என்று இப்போதே தன் கட்சியினரை கலவரப்படுத்திக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். தங்களுக்கு பிடித்த வேட்பாளரை நிறுத்தும் முழு அதிகாரமும் தங்களுக்கே இருப்பதாகவும், யாரும் தங்களை இப்படியெல்லாம் நிர்பந்திக்க முடியாது என்று கட்சியும் தன்பங்கிற்கு எதிர்குரல் கொடுத்திருக்கிறது. இதனால் குடியரசு கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுவரை ட்ரம்ப் முன்னணியில் இருந்தாலும் கூட 1237 பிரதிநிதிகளைப் பெற முடியுமா என்பது பெரிய கேள்விகுறிதான். இப்போதுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் ஏழாம் தேதி கலிபோர்னியாவில் நடக்கவிருக்கும் ப்ரைமரி தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அங்கிருக்கும் 172 பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவு ட்ரம்ப்புக்கா அல்லது க்ரூஸுக்கா என்பதை பொறுத்து தான் குடியரசு கட்சி தன்  வேட்பாளரை பரிந்துரை செய்யும் நிலையில் உள்ளது. நியூயார்க் மாநில ப்ரைமரியும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ட்ரம்ப்பின் முன்னுக்கு முரணான பேச்சுகளுக்கு பரவலான அதிருப்தி இருந்தாலும், விஸ்கான்சின் ப்ரைமரியில் ட்ரம்ப் தோற்ற நிலையில் நியூயார்க் ப்ரைமரி முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமைந்தது மீண்டும் அவர் பலத்தை நிரூபித்துள்ளது. கனெக்டிகட், டெலவேர் , ரோடே ஐலேண்ட், மேரிலேன்ட், பென்சில்வேனியா ஐந்து மாநிலங்களிலும் ட்ரம்ப் வென்று முன்னிலையில் இருக்கிறார். இன்டியானா ,  கலிஃபோர்னியா ப்ரைமரி முடிவுகள் யாருக்குச் சாதகமாக  இருக்கும் என்பதைப் பொறுத்துத்தான் ட்ரம்ப்பின் எதிர்காலம் தீர்மானமாகும்.

ப்ரைமரி தேர்தல்களில் ஜெயித்தாலும் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்களா?, ஒருவேளை கட்சி ட்ரம்ப்பை நிராகரித்து விட்டால் அவர் சுயேச்சை வேட்பாளாராக தேர்தலில் நிற்பாரா?, மும்முனைத் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறதா?  இப்படி  பல கேள்விகளுடன் அமெரிக்க தேர்தல்களம் பரபரப்பாகி இருக்கிறது.

ஸ்டோனிப்ரூக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்(Helmut Norpoth) உருவாக்கிய ஒரு ஸ்டாடிஸ்டிகல் மாடல், இந்த தேர்தலில் ட்ரம்ப் அதிபராகும் வாய்ப்பு 97% – 99% இருப்பதாக சொல்கிறதாம். இந்த மாடல் 1912ல் இருந்து இதுவரையில் எல்லா தேர்தல் முடிவுகளையும் சரியாக கணித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரே ஒரு முறைதான் பிழைத்திருக்கிறதாம். அதாவது 99% துல்லியம்.
அந்த ஒற்றை விழுக்காட்டில் தொக்கி நிற்பது ட்ரம்ப்பின் எதிர்காலம் மட்டுமல்ல, அமெரிக்காவின் எதிர்காலமும்தான்.

எங்கே போய்விடப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...