Monday, December 17, 2018

பயணக் குறிப்புகள் – ஸ்விட்சர்லாந்து


Mountain View
 நடுவில் ஒருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, துணிகளை துவைத்து முடித்து, ஸ்விட்சர்லாந்து போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டோம். ஸ்வெட்டர்ஸ், ஜாக்கெட்ஸ், பனிக்குல்லாய், கையுறை, காலுறை, பூட்ஸ், குழந்தைகளுக்கான தீனிகள், அங்கு நாங்களே சமைத்து சாப்பிட வேண்டிய சாமான்கள் என்று எல்லாவற்றையும், செல்வியும், முருகனும் பேக் பண்ண, இரண்டு கார்களில் எல்லா லக்கேஜ்களையும் ஏற்றி விட்டு வழியில் சாப்பிடுவதற்கு எங்களுக்குப்  பிடித்த brochen களையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு வழியாக எங்கள் குடும்பமும் முருகனின் குடும்பமும் கிளம்பினோம். அவர்களுடைய செல்போன் ஒன்றையும் எங்களுக்கு கொடுத்து விட்டு, GPS துணையுடன் முருகன் கார் முன்னே செல்ல, நாங்கள் அவர்களைத்  தொடர்ந்து சென்றோம். வழியில் காருக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டு 10 மணிநேரப் பயணத்திற்குத்  தயார் ஆனோம். முருகன் ஜெர்மனியர்கள் ஸ்டைலில் வேகமாக வண்டி ஓட்ட, அவரைத்  தொடர்ந்து செல்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. எங்கள் காரை முடிந்த வரை அழுத்திக் கொண்டு கியர் மாற்றி மாற்றி என் கணவரும் கஷ்டப்பட்டு ஒட்டிக் கொண்டே வந்தார்.

நாங்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பழங்கதைகளைப் பேசிக் கொண்டே போனோம். ஸ்விட்சர்லாந்தைப் பல திரைப்பாடல்களில் பார்த்திருந்தாலும் நேரில் பார்க்கப் போகிற அனுபவம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. நல்ல போக்குவரத்து நெரிசல் கூட. மழையும் தூர ஆரம்பித்தது. குழந்தைகளும் தூங்க ஆரம்பித்தார்கள். புரியாத பாஷையில் எழுதியிருந்த வழிகாட்டிகளை ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக சொல்லிப் பார்த்துக் கொண்டேயும், அடிக்கடி எங்கள் முன்னே முருகனின் சிவப்பு நிறக் கார் போய்க் கொண்டிருக்கிறதா என்று ஒரு கண் அங்கே வைத்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம். ஓட்டினோம், ஓட்டினோம், ஜெர்மனியின் பார்டர் வரைக்கும். நடுவில் எங்கள் காரைப் பார்த்து ஒரு 'ஃப்ளாஷ்' வேறு. என்னவென்று, முருகன் & செல்வியிடம் கேட்டதற்கு, நீங்கள் வண்டியை வேகமாக ஒட்டி இருப்பீர்கள். அது உங்களையும் காரையும் படம் பிடித்திருக்கும் என்று கலக்கமூட்ட, இனிமேல், வெளிநாட்டுச் செலவுடன் ஸ்பீடிங் கட்டணமும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று சாந்திப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
முதலில் ஆஸ்திரியா பார்டர் அருகே வண்டியை நிறுத்தி toll charge கட்டிய பிறகு அதன் வழியே ஸ்விட்சர்லாந்து சென்றோம், சென்றோம், சென்று கொண்டே இருந்தோம். நடுவில் ரெஸ்ட் ஏரியாவில் வண்டிகளை நிறுத்தி ரிலாக்ஸ் செய்து கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். ஆல்ப்ஸ் மலைத்தொடர் கண்ணில் பட ஆரம்பித்தவுடன் அப்பாடா என்றிருந்தது. ஆல்ப்ஸ் மலையின் பிரமாண்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு இருந்தது. நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் அதிகமாக இருந்தது. ஸ்விட்சர்லாந்து பார்டரில் அங்கு தங்கியிருக்கும் நாளில் கார் pass போன்று ஒன்றை வாங்க வேண்டியிருந்தது. வாங்கிக் கொண்டு மீண்டும் கார் ஓட்டம். இப்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் உள்ளே.
அங்கே கட்டிடங்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. மரத்தினாலான பெரிய,பெரிய வீடுகள். அப்பார்ட்மெண்ட் போல பல குடியிருப்பு வசதிகள் கொண்ட பல மாடி வீடுகள். பெரிய பெரிய நகரங்களுக்குச்  செல்லும் வழிகாட்டிகள். நாங்கள் நண்பர் முருகனின் GPS சொன்னபடி போகவேண்டிய இடத்திற்கான வழியை எடுத்து நகரினுள் சென்றோம். மெல்ல பொழுது சாய ஆரம்பிக்கும் நேரம். பச்சைப்பசேல் என எங்கு பார்த்தாலும் புல்வெளிகள். பரந்து விரிந்த மலைகள். நடுநடுவே சலசலவென்ற சத்தத்துடன் நீரோடைகள். மெதுவாக, மலையேற ஆரம்பித்தோம். என் கணவர் இயற்கைச் சூழலில் countryside பக்கம் தங்கி இருக்க ஆசைப்பட்டதால் ஒரு அருமையான விடுமுறை விடுதியை முருகன் தேடிப் பிடித்திருந்தார்.

Road to our resort

Our lovely resort
 மெதுவாக சிறு நகரங்களிலிருந்து விடுப்பட்டு வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தோம். பொதுவாக அங்கே ஏழு மணிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு விடுவதால் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. சின்ன சின்ன சந்துகள். எங்கும் மிகத் தெளிவான வழிகாட்டிகள் ஆங்கிலத்தில். எங்கே செல்கிறோம் என்ற திக்கு திசை தெரியாமல் GPS ஒன்றையே நம்பி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மலைமேல் ஏற,ஏற என் கணவருக்குப்  பதட்டம் ஆரம்பித்தது. முன்னே போகும் முருகனின் காரோ ஆட்டோமாடிக் கார். அதனால் எனகென்ன என்று லட்டு மாதிரி அவர் சொன்ன மாதிரி எல்லாம் போய்க் கொண்டிருந்தது. இவரோ கியரை மாற்றி மாற்றி கை வலிக்க ஓட்டுவதைப்  பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்ய முடியும் இப்போது. நாங்கள் எங்கள் விடுமுறை விடுதியின் ஓனரை முதலில் பார்த்து சாவி வாங்கிக் கொண்டு போக வேண்டும். இதற்குள் நன்கு இருட்டி விட்டது. மலைபாதையோ ஒரு கார் செல்லும் அளவில் தான் இருந்தது. மறுபக்கம் எட்டிப் பார்த்தால் குலை நடுங்கும் அளவுக்கு பள்ளம். மனம் எதைஎதையோ நினைக்க பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ தப்பு செய்து விட்டோமோ? பேசாமல் நகரத்திலேயே தங்கி இருக்கலாமோ என்று. முருகன் வேகமாக ஒரு இடத்தில் திரும்ப, சிறிதும் யோசிக்காமல், நாங்களும் திரும்ப, அங்கே ஒன்றும் இல்லை. அதற்கு மேல் போனால் பள்ளம் தான். பிரச்சினையே இப்போது தான். எங்கள் காரைப் பின்னாடி எடுப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. ஒவ்வொரு முறையும், கார் நின்று புறப்படுவதற்குள் என் கணவருக்கு வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்து விட்டது,அந்த மலையிலும்! அந்த கும்மிருட்டில் அங்கே ஒன்றும் இங்கே ஒன்றுமாக, மலையில் வீட்டு வெளிச்சங்கள், மலை முழுவதும் கிண்கிணி என்று மாட்டின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் ஓசைகள், அதன் எதிரொலிகள், எங்கள் வண்டி சத்தத்தைக் கேட்டு குரைத்த நாய்கள் என்று இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே GPS ஐ நம்பாமால், அந்த இரவு நேரத்தில் (மணி பத்தரை இருக்கும் என்று நினைக்கிறேன்) ஒரு கும்பலாக எங்கள் காரை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் நண்பர் முருகன் ஜெர்மனில் விலாசத்தை கேட்க, அவர்களும், இன்னும் கொஞ்சம் தூரம் போனால் வந்து விடும் என்று சொன்ன பின்னால் தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. ஆனால் இதைப் பற்றிய கவலையேதும்  இல்லமால் எனக்கென்ன மனக்கவலை, என் அப்பா, அம்மா தான் இருக்கிறார்களே என்று நிம்மதியாக தூங்கிக்  கொண்டிருந்தார்கள் குழந்தைகள்!!! அதற்குள் நான் நாளை முதல் வேலையாக நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் பார்த்து தங்கி விட வேண்டியது தான். இப்படி பயந்து பயந்து என்னால் தினமும் வர முடியாது என்று புலம்ப ஆரம்பித்து விட்டேன். ஒரு வழியாக, அந்த ஓனர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம், அதற்கு முன்பே அவர் வீட்டு நாய்  நாங்கள் வந்து விட்டதை கத்தி அவரும் வெளியே வந்து, சாவி கொடுத்து விட்டு, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு, நாங்கள் இருக்கப் போகும் இடத்தை காட்ட வந்தார்.
My husband with the resort owner & her sons

அவர் தன்னுடைய பெரிய ட்ரக்கில் முன்னே செல்ல, நல்ல தூரம் விட்டு எங்கள் காரும் பின்தொடர, ஒரு இருண்ட வீட்டின் முன்னால் வந்து நிறுத்தினார். அதெல்லாம் தனியார் சொத்துக்கள் என்பதினால் அவர்கள் போட்டுக் கொண்ட ரோடு. நடுவில் மலையிலிருந்து தண்ணீரின் ஓட்டம் வேறு. மேடும் பள்ளமுமாக காரின் டயர் போகும் பாதைகள். அதை விட்டு நடுவில் ஓட்டினால் வண்டி பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும். அப்படி மாட்டிக் கொண்டால், என்னை கூப்பிடுங்கள் நான் வந்து மேலே இழுத்து விடுகிறேன் என்று ஜஸ்ட் லைக் தட் சொன்ன பொழுது இன்னும் பயமாகி விட்டது. இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டின் முன் காரை நிறுத்தி குழந்தைகளையும் எழுப்பி விட்டு, வெளியே வரும் பொழுது எங்கள் முகம் பேயறைந்தது போல் இருந்தது. ஒரே கும்மிருட்டு. ஆனால், மலைக்காற்றும், மாடுகளின் மணியோசையும், பச்சைப்புல் வாசனையும், கோமிய மணமும் கலந்து எங்கோ ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றது. இந்த மலைக்கு மேல் ஒரு மலையில் ஒரு பெரிய விடுதி ஒன்றும் இருந்தது.

வீடு திறந்து இருந்தது. உள்ளே நுழைந்தால், சமையல் அறை, உட்கார்ந்து சாப்பிட வசதியாக நீளமான மேஜை, நாற்காலிகள், அதையடுத்து டிவி ஒன்று வைத்து பார்க்க வசதியாக சாய்வு நாற்காலிகளையும், படிப்பதற்கு வசதியாக சின்ன மேஜை, நாற்காலிகளும் இருந்தன. வீடு சில்லென்றி ருந்தது. சமையல் அறையில் சமைக்க அடுப்பும், வீட்டை உஷ்ணப்படுத்த ஒரு அடுப்பும், பாத்திரங்களும், அழகாக அடுக்கி வைக்கப்படிருந்தன. கீழேயே குளிக்க பாத்ரூமும் இருந்தது. முதல் மாடியில் ஒரு பெரிய படுக்கை அறையும், அதற்கு மேல் மாடியில் ஏழு பேர் படுக்க வசதியாக படுக்கைகளும் போடப்பட்டு மிகவும் வசதியாக இருந்தது. வீட்டின் முன் அறையில் விறகு வெட்ட வசதியாக கோடாலியும், விறகுகளும் இருந்தது. அவரும் வெட்டி வைத்திருந்த விறகுகளை அடுப்பில் போட, சிறிது நேரத்திலேயே வீடு கண,கணவென்றாகியது.
Nitin experimenting wood cutting


நீண்ட நேரம் தலையை அசைத்து அசைத்து முருகன், செல்வியுடன் ஜெர்மனில் ஆய், ஆய் என்று ஒவ்வொரு வாக்கியத்தையும் நீட்டி முழக்கி முடித்து பேசியதை சிறு வயதில் புரியாத ஆங்கிலப் படத்தை பார்த்த மாதிரி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியர்களா நீங்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் தன்னுடைய வீட்டை இருபகுதிகளாக பிரித்துக் கட்டி விடுமுறையில் வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்தார். ஒரு பகுதி நன்கு பெரியதாகவும், இன்னொரு பகுதி ஒரு குடும்பம் தங்கும் வகையிலும் அழகாக கட்டியிருந்தார். அவர் அப்பாவின் உதவியுடன் தானே இந்த வீட்டை கட்டியதாக சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த மலையில் ஒரு பெரிய வீட்டை தனி ஆளாக கட்ட வேண்டுமென்றால் மிகுந்த சிரமமாக இருந்திருக்கும். கில்லாடி லேடி தான் என்று நினைத்துக் கொண்டோம். இதற்குப் பக்கத்தில் அவருடைய மாடுகளைக்  கட்டிப் போட்டிருந்தார். தான் நன்றாக மசாஜ் செய்பவர் என்றும் மணிக்கு 100 euros என்றும் மேலும் மேலும் எங்களைப்  பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்! அவரிடம் ஆட்டுக்கறி, பால், பாலாடைக்கட்டி எல்லாம் விலைக்கு கிடைக்கும் என்று சொல்லி விட்டு போகும் பொழுது மணி 11.30 நெருங்கிக் கொண்டிருந்தது. அவரை அனுப்பி விட்டு எங்கள் பெட்டிகளை காரிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து வெளியே கிளம்ப வேண்டும் என்று ஓடிப் போய் கட்டிலில் தஞ்சம் புகுந்தோம்.


Morning View

Saturday, December 1, 2018

திரும்பிப் பார்க்கிறேன்(2007)



குழந்தைகள் இருவருடனும் தம்பியுடனும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறிய பலரும் வீட்டிலேயே உணவை முடித்து விட்டு நேராக தூக்கம் போட வந்தவர்கள் போல இருந்தார்கள். ஒரு சிலர் ரயிலின் ஓட்டத்தில் சாப்பிட காத்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் சிவக்க கரை வேட்டி கட்டியவர் தள்ளாடித் தள்ளாடி அவருடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஆஹா! நமக்குன்னு எப்பேர்ப்பட்ட ஆட்கள் வந்து சேருகிறார்கள்? வாந்தி கீந்தி எடுத்துத் தொலையாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து விட்டது. ஆண் பயணிகள் பலரும் ஓரிரு பெண்களுமாய் நிரம்பி விட்டிருந்தது எங்கள் கம்பார்ட்மெண்ட். பாதாம் பால், குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு என்னைச் சந்திக்க வந்திருந்த என்னிடம் படித்த மாணவி பேசி விட்டுக் கிளம்ப, தம்பி வாங்கி வந்திருந்த இரவு உணவை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு நானும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அமர, உறுமலுடன் வண்டியும் புறப்பட...அப்பாடா என்றிருந்தது.

எதிரில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஆரோக்கிய உணவைச் சாப்பிட, சுற்றி இருந்த அனைவரும் ஓசி பேப்பர் படிப்பது போல் ஆர்வத்துடன் என்ன உணவோ என்று பார்த்தும் பார்க்காத மாதிரியும் சிறிது நேரத்தில் தூங்க ஆயத்தமானார்கள். மனிதர்களுக்குப் பொறுமை கொஞ்சம் குறைந்து விட்டதோ? பாவம்! நிம்மதியாக சாப்பிட முடியாமல் 'லபக் லபக்'கென்று அவதி அவதியாக முழுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சடாரென விளக்கை அணைத்து விட்டுத் தூங்கவும் மற்றவர்களும் தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வதென சிலருக்குப் பாடம் எடுக்க வேண்டும் போல! சுயநலமே ஓங்கி இருக்கிறது!

தம்பி அவன் இருக்கைக்குச் செல்ல, மகளும் மேலேறி அவள் படுக்கையில் தூங்க, மடியில் சுப்பிரமணியை படுக்க வைத்துக் கொண்டே ஓடும் ரயிலின் எதிர்ப்புறத்தில் வேகமாக மறையும் தெரு விளக்குகளையும் , ரயில் பாதையோர வீடுகளையும், வானில் நட்சத்திரங்களையும் கண்ணாடி மூடிய ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜன்னல் கண்ணாடிய திறக்காத. செயின் பறிப்பு நடக்குது. யார் பிஸ்கட் கொடுத்தாலும் குழந்தைங்க வாங்கிச் சாப்பிடாம பார்த்துக்கோ.

அப்பா அப்பா! எனக்குத் தெரியாதா?

உனக்கு ஒன்னும் தெரியாது. ஊர் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜாக்கிரதையா வந்து சேருங்க! புறப்படும் முன் அப்பா ஃபோனில் சொன்னது நினைவுக்கு வந்தது. எத்தனை வயதானாலும் எனக்கு குழந்தைகள் இருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் பொறுப்பில்லாத செல்ல மகளாகவே இருக்கிறேன் போல! அதற்காகத்தான் கிளம்பி வந்து விடுவார். இந்த முறை வேண்டாம் என்றதால் வரவில்லை. ஹ்ம்ம்ம்... இனி எப்பொழுதும் வரப்போவதுமில்லை.

திடீரென ஒரு சலசலப்பு. டிக்கெட் டிக்கெட் என்று வெள்ளைச்சட்டை, கருப்பு கோட், கையில் பேப்பர், பேனா சகிதம் கண்ணாடி மாட்டிக் கொண்டு சால்ட் பெப்பர் 'தல' தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இந்த ரயில் பயணத்தில் வெள்ளைச் சட்டை அவசியமா? கருப்பு கோட் எதற்கு? பாவம் அவர்! நம்மூர் சீதோஷணத்திற்கு ஏற்ற உடைகளை அணிய ஏன் மறந்து போனோம்? அடிக்கிற வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் நீண்ட கைச்சட்டை அவஸ்தைகள் வேறு! வெளி வரத்தெரியாத அடிமை மனது பழகி விட்டது! ஹ்ம்ம்ம்...
பாஸ்போர்ட் சரி பார்த்து அவர் வேலையைத் தொடர அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்.

தூங்குடா! சிறிது நேரம் தூங்குவது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் சுப்பிரமணி. ரயிலின் குலுக்கலில் என்னைத் தவிர அனைவருமே தூங்கியிருந்தார்கள். திடீரென மேல் பெர்த்திலிருந்து கீழிறங்கிய மகள், அம்மா! தூக்கமே வரலை.

வா. பக்கத்துல வந்து படு என்று அவளும் மடியில் தலை வைத்துப் படுக்க, ரயில் சந்திப்புகளை நெருங்கும் வேளையில் மெதுவாகச் சென்று 'கிரீச்' என தண்டவாளத்தை உரசியபடி நின்று பயணிகளை ஏற்றுக் கொள்வதும், சில சந்திப்புகளில் ஹாரனை ஒலித்தபடி கடக்க, அங்கு பச்சை விளக்கு, கொடி காட்டி காட்டி ஒருவர் டாட்டா சொல்வதும், 'தடதட'வென என்ஜின் சத்தம் மாறுவதுமாய் இரவு உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அம்மா! தூங்க முடியல. எப்படி குறட்டை விடுறாங்க பாரு. கண்கள் உறங்க ஏங்கினாலும் தூங்க முடியா அவஸ்தையுடன் காதைப் பொத்திக் கொண்டு மகள்!

இந்த ரயில் சத்தத்தையும் மீறி நிஜமாகவே பல பல டெசிபல்களில் குறட்டை! அப்பொழுது தான் நானும் கவனித்தேன்! கடவுளே! தன்னை மறந்து தூங்கும் பொழுது மக்களை வேடிக்கை பார்க்க கூடாதோ? அதிபயங்கரமாக இருக்கிறது! வாயைத் திறந்து போட்டு குறட்டையோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் தாத்தா! அருகில் கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு தூங்குபவர்! எனக்கு வர்ற கோவத்துக்கு இவங்க மூக்கில க்ளிப் மாட்டி விடணும் போல இருக்கும்மா!

கோவப்படாத. வா வா! எல்லாரும் எப்படி தூங்குறாங்க குறட்டை விடறாங்கன்னு வேடிக்கை பார்ப்போம். ஒருவர் உச்சாஸ்தாயில் குறட்டை விட, இன்னொருவர் சரிகம பாட, அடிக்கடி உதட்டை நனைத்துக் கொண்டே மற்றொருவர் என்று தூங்காமல் பேசி சிரித்துக் கொண்டே வந்தோம். போரடிக்காமல் இருக்க UNO கார்டு கேம் விளையாடினோம். சிறிது நேரத்தில் பயணக் களைப்பில் மகள் தூங்கி விட்டாள். இருள் விலகும் அழகை ரசித்துக் கொண்டேயிருக்கையில் சுப்பிரமணி ரெஸ்ட்ரூம் போக வேண்டும் என்று எழுந்து கொண்டான். இந்த நேரத்திலா? இதுவரை அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை. கொடுமைடா! சரி வா! என்று ரயிலுடன் சேர்ந்து தள்ளாடி தள்ளாடி எழவும், தூங்கிக் கொண்டிருந்த தம்பியும் என்னாச்சு என்றவுடன், இவனுக்கு பாத்ரூம் போகணுமாம். சுத்தமா இருக்குமா?

அதற்குள் தம்பி செய்தித்தாளை எடுத்துக் கொண்டு டாய்லெட் சீட்டில் போட்டு சுப்பிரமணியை உட்கார வைக்க, ஹை! (எவர்)சில்வர் டாய்லெட்! அதிகாலை வேளை! சுத்தமாக இருந்தது! நான் வாழ்நாள்ல எட்டிக் கூட பார்த்ததில்ல. எல்லாம் உன்னால. சீக்கிரம் வேலைய முடிடா!

அம்மா, நான் அப்பா கூட இப்பவே பேசணும். அடம் பிடிக்க, தம்பியும் ஃபோனை கொடுக்க...

அப்பா! நான் எங்கே இருக்கேன் தெரியுமா!?

டேய்! ஃபோன் பத்திரம்டா !

ஓடும் ரயிலில் டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எனக்கு இந்த டாய்லெட் பிடிச்சிருக்குப்பா! கீழ தண்டவாளம், மண் தரையெல்லாம் தெரியுது. நீங்களும் வந்திருந்துக்கலாம். எப்படியாவது லீவு போட்டுட்டு வாங்க. நான் வேணா உங்க மேனேஜர்ட்ட பேசவா? பெரிய மனிதனாட்டாம் பேசிக் கொண்டிருந்தான் ஆறு வயது சுப்பிரமணி.

கடைசியில் எழுந்து வந்து விட்டான். என்னடா?

அவ்வளவு தான்! ஒண்ணுமில்ல.

இதுக்காடா இவ்வளவு ஸீன் போட்ட?

பாவம் தம்பி. முதல் நாள் இரவு எங்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்ததில் சரியான தூக்கம் இல்லை. இப்பொழுது இவன் செய்த கலாட்டாவில்... நீ போய் தூங்கு. இனி இவன் தூங்க மாட்டான். நான் பார்த்துக்கிறேன்.

அடுத்த ஸ்டேஷன்ல காஃபி வாங்கிக் கொடுத்துட்டு தூங்கப் போறேன்.

'காஃபி காஃபி' குரலில் சிலர் புரண்டு படுக்க, சூடான காஃபி! அந்த காலை நேரத்திற்கு இதமாக இருந்தது. விலை ஏற ஏற காபியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ரயில் நகர, தம்பி அவனிடத்திற்குத் திரும்ப,

மகளும் எழுந்து வர, நாங்கள் மூவர் மட்டும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தோம். ஆரவாரமில்லாத இரவு மனதிற்கு தரும் அமைதி அங்கே மெல்ல மெல்ல விடைபெற்று ஆர்ப்பாட்ட பகல் பொழுதிற்குத் தயாராக, சூரியனும் வான் உலா வர... வறண்ட காவிரியைக் கடந்து, கொடை ரோடு, திண்டுக்கல், சோழவந்தான் வயல்வெளிகளிலும் மலைகளிலும் மனம் பறக்க... மதுரையை நெருங்க நெருங்க... தாத்தா, பாட்டி, பெரியம்மா, சித்தி என்று எல்லோரையும் காணும் ஆவலுடன் குழந்தைகள் காத்திருக்க...

மஞ்சள் வண்ணத்தில் 'மதுரை சந்திப்பு' பதாகை தரும் உணர்வு அலாதியானது. தாய் மடியில் படுத்துறங்கும் நிம்மதியைத் தரவல்லது. கோவில்கள், என் சிறுவயதில் பாட்டி, பெரியம்மாவுடன் சுற்றிய இடங்கள், உறவுகள், நான் பிறந்து வளர்ந்த ஊர்... பல பல உணர்வுகளுடன் அலைக்கழித்து பிறந்த மண்ணில் கால்வைக்க, எங்களை எதிர்நோக்கி காத்திருந்த அனைவர் முகத்திலும் அதே மகிழ்ச்சி!

இனி நானும் குழந்தையாகி என் தாயின் அரவணைப்பில் ...

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...