Saturday, December 1, 2018

திரும்பிப் பார்க்கிறேன்(2007)



குழந்தைகள் இருவருடனும் தம்பியுடனும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறிய பலரும் வீட்டிலேயே உணவை முடித்து விட்டு நேராக தூக்கம் போட வந்தவர்கள் போல இருந்தார்கள். ஒரு சிலர் ரயிலின் ஓட்டத்தில் சாப்பிட காத்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் சிவக்க கரை வேட்டி கட்டியவர் தள்ளாடித் தள்ளாடி அவருடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஆஹா! நமக்குன்னு எப்பேர்ப்பட்ட ஆட்கள் வந்து சேருகிறார்கள்? வாந்தி கீந்தி எடுத்துத் தொலையாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து விட்டது. ஆண் பயணிகள் பலரும் ஓரிரு பெண்களுமாய் நிரம்பி விட்டிருந்தது எங்கள் கம்பார்ட்மெண்ட். பாதாம் பால், குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு என்னைச் சந்திக்க வந்திருந்த என்னிடம் படித்த மாணவி பேசி விட்டுக் கிளம்ப, தம்பி வாங்கி வந்திருந்த இரவு உணவை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு நானும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அமர, உறுமலுடன் வண்டியும் புறப்பட...அப்பாடா என்றிருந்தது.

எதிரில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஆரோக்கிய உணவைச் சாப்பிட, சுற்றி இருந்த அனைவரும் ஓசி பேப்பர் படிப்பது போல் ஆர்வத்துடன் என்ன உணவோ என்று பார்த்தும் பார்க்காத மாதிரியும் சிறிது நேரத்தில் தூங்க ஆயத்தமானார்கள். மனிதர்களுக்குப் பொறுமை கொஞ்சம் குறைந்து விட்டதோ? பாவம்! நிம்மதியாக சாப்பிட முடியாமல் 'லபக் லபக்'கென்று அவதி அவதியாக முழுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சடாரென விளக்கை அணைத்து விட்டுத் தூங்கவும் மற்றவர்களும் தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வதென சிலருக்குப் பாடம் எடுக்க வேண்டும் போல! சுயநலமே ஓங்கி இருக்கிறது!

தம்பி அவன் இருக்கைக்குச் செல்ல, மகளும் மேலேறி அவள் படுக்கையில் தூங்க, மடியில் சுப்பிரமணியை படுக்க வைத்துக் கொண்டே ஓடும் ரயிலின் எதிர்ப்புறத்தில் வேகமாக மறையும் தெரு விளக்குகளையும் , ரயில் பாதையோர வீடுகளையும், வானில் நட்சத்திரங்களையும் கண்ணாடி மூடிய ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜன்னல் கண்ணாடிய திறக்காத. செயின் பறிப்பு நடக்குது. யார் பிஸ்கட் கொடுத்தாலும் குழந்தைங்க வாங்கிச் சாப்பிடாம பார்த்துக்கோ.

அப்பா அப்பா! எனக்குத் தெரியாதா?

உனக்கு ஒன்னும் தெரியாது. ஊர் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜாக்கிரதையா வந்து சேருங்க! புறப்படும் முன் அப்பா ஃபோனில் சொன்னது நினைவுக்கு வந்தது. எத்தனை வயதானாலும் எனக்கு குழந்தைகள் இருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் பொறுப்பில்லாத செல்ல மகளாகவே இருக்கிறேன் போல! அதற்காகத்தான் கிளம்பி வந்து விடுவார். இந்த முறை வேண்டாம் என்றதால் வரவில்லை. ஹ்ம்ம்ம்... இனி எப்பொழுதும் வரப்போவதுமில்லை.

திடீரென ஒரு சலசலப்பு. டிக்கெட் டிக்கெட் என்று வெள்ளைச்சட்டை, கருப்பு கோட், கையில் பேப்பர், பேனா சகிதம் கண்ணாடி மாட்டிக் கொண்டு சால்ட் பெப்பர் 'தல' தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இந்த ரயில் பயணத்தில் வெள்ளைச் சட்டை அவசியமா? கருப்பு கோட் எதற்கு? பாவம் அவர்! நம்மூர் சீதோஷணத்திற்கு ஏற்ற உடைகளை அணிய ஏன் மறந்து போனோம்? அடிக்கிற வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் நீண்ட கைச்சட்டை அவஸ்தைகள் வேறு! வெளி வரத்தெரியாத அடிமை மனது பழகி விட்டது! ஹ்ம்ம்ம்...
பாஸ்போர்ட் சரி பார்த்து அவர் வேலையைத் தொடர அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்.

தூங்குடா! சிறிது நேரம் தூங்குவது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் சுப்பிரமணி. ரயிலின் குலுக்கலில் என்னைத் தவிர அனைவருமே தூங்கியிருந்தார்கள். திடீரென மேல் பெர்த்திலிருந்து கீழிறங்கிய மகள், அம்மா! தூக்கமே வரலை.

வா. பக்கத்துல வந்து படு என்று அவளும் மடியில் தலை வைத்துப் படுக்க, ரயில் சந்திப்புகளை நெருங்கும் வேளையில் மெதுவாகச் சென்று 'கிரீச்' என தண்டவாளத்தை உரசியபடி நின்று பயணிகளை ஏற்றுக் கொள்வதும், சில சந்திப்புகளில் ஹாரனை ஒலித்தபடி கடக்க, அங்கு பச்சை விளக்கு, கொடி காட்டி காட்டி ஒருவர் டாட்டா சொல்வதும், 'தடதட'வென என்ஜின் சத்தம் மாறுவதுமாய் இரவு உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அம்மா! தூங்க முடியல. எப்படி குறட்டை விடுறாங்க பாரு. கண்கள் உறங்க ஏங்கினாலும் தூங்க முடியா அவஸ்தையுடன் காதைப் பொத்திக் கொண்டு மகள்!

இந்த ரயில் சத்தத்தையும் மீறி நிஜமாகவே பல பல டெசிபல்களில் குறட்டை! அப்பொழுது தான் நானும் கவனித்தேன்! கடவுளே! தன்னை மறந்து தூங்கும் பொழுது மக்களை வேடிக்கை பார்க்க கூடாதோ? அதிபயங்கரமாக இருக்கிறது! வாயைத் திறந்து போட்டு குறட்டையோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் தாத்தா! அருகில் கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு தூங்குபவர்! எனக்கு வர்ற கோவத்துக்கு இவங்க மூக்கில க்ளிப் மாட்டி விடணும் போல இருக்கும்மா!

கோவப்படாத. வா வா! எல்லாரும் எப்படி தூங்குறாங்க குறட்டை விடறாங்கன்னு வேடிக்கை பார்ப்போம். ஒருவர் உச்சாஸ்தாயில் குறட்டை விட, இன்னொருவர் சரிகம பாட, அடிக்கடி உதட்டை நனைத்துக் கொண்டே மற்றொருவர் என்று தூங்காமல் பேசி சிரித்துக் கொண்டே வந்தோம். போரடிக்காமல் இருக்க UNO கார்டு கேம் விளையாடினோம். சிறிது நேரத்தில் பயணக் களைப்பில் மகள் தூங்கி விட்டாள். இருள் விலகும் அழகை ரசித்துக் கொண்டேயிருக்கையில் சுப்பிரமணி ரெஸ்ட்ரூம் போக வேண்டும் என்று எழுந்து கொண்டான். இந்த நேரத்திலா? இதுவரை அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை. கொடுமைடா! சரி வா! என்று ரயிலுடன் சேர்ந்து தள்ளாடி தள்ளாடி எழவும், தூங்கிக் கொண்டிருந்த தம்பியும் என்னாச்சு என்றவுடன், இவனுக்கு பாத்ரூம் போகணுமாம். சுத்தமா இருக்குமா?

அதற்குள் தம்பி செய்தித்தாளை எடுத்துக் கொண்டு டாய்லெட் சீட்டில் போட்டு சுப்பிரமணியை உட்கார வைக்க, ஹை! (எவர்)சில்வர் டாய்லெட்! அதிகாலை வேளை! சுத்தமாக இருந்தது! நான் வாழ்நாள்ல எட்டிக் கூட பார்த்ததில்ல. எல்லாம் உன்னால. சீக்கிரம் வேலைய முடிடா!

அம்மா, நான் அப்பா கூட இப்பவே பேசணும். அடம் பிடிக்க, தம்பியும் ஃபோனை கொடுக்க...

அப்பா! நான் எங்கே இருக்கேன் தெரியுமா!?

டேய்! ஃபோன் பத்திரம்டா !

ஓடும் ரயிலில் டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எனக்கு இந்த டாய்லெட் பிடிச்சிருக்குப்பா! கீழ தண்டவாளம், மண் தரையெல்லாம் தெரியுது. நீங்களும் வந்திருந்துக்கலாம். எப்படியாவது லீவு போட்டுட்டு வாங்க. நான் வேணா உங்க மேனேஜர்ட்ட பேசவா? பெரிய மனிதனாட்டாம் பேசிக் கொண்டிருந்தான் ஆறு வயது சுப்பிரமணி.

கடைசியில் எழுந்து வந்து விட்டான். என்னடா?

அவ்வளவு தான்! ஒண்ணுமில்ல.

இதுக்காடா இவ்வளவு ஸீன் போட்ட?

பாவம் தம்பி. முதல் நாள் இரவு எங்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்ததில் சரியான தூக்கம் இல்லை. இப்பொழுது இவன் செய்த கலாட்டாவில்... நீ போய் தூங்கு. இனி இவன் தூங்க மாட்டான். நான் பார்த்துக்கிறேன்.

அடுத்த ஸ்டேஷன்ல காஃபி வாங்கிக் கொடுத்துட்டு தூங்கப் போறேன்.

'காஃபி காஃபி' குரலில் சிலர் புரண்டு படுக்க, சூடான காஃபி! அந்த காலை நேரத்திற்கு இதமாக இருந்தது. விலை ஏற ஏற காபியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ரயில் நகர, தம்பி அவனிடத்திற்குத் திரும்ப,

மகளும் எழுந்து வர, நாங்கள் மூவர் மட்டும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தோம். ஆரவாரமில்லாத இரவு மனதிற்கு தரும் அமைதி அங்கே மெல்ல மெல்ல விடைபெற்று ஆர்ப்பாட்ட பகல் பொழுதிற்குத் தயாராக, சூரியனும் வான் உலா வர... வறண்ட காவிரியைக் கடந்து, கொடை ரோடு, திண்டுக்கல், சோழவந்தான் வயல்வெளிகளிலும் மலைகளிலும் மனம் பறக்க... மதுரையை நெருங்க நெருங்க... தாத்தா, பாட்டி, பெரியம்மா, சித்தி என்று எல்லோரையும் காணும் ஆவலுடன் குழந்தைகள் காத்திருக்க...

மஞ்சள் வண்ணத்தில் 'மதுரை சந்திப்பு' பதாகை தரும் உணர்வு அலாதியானது. தாய் மடியில் படுத்துறங்கும் நிம்மதியைத் தரவல்லது. கோவில்கள், என் சிறுவயதில் பாட்டி, பெரியம்மாவுடன் சுற்றிய இடங்கள், உறவுகள், நான் பிறந்து வளர்ந்த ஊர்... பல பல உணர்வுகளுடன் அலைக்கழித்து பிறந்த மண்ணில் கால்வைக்க, எங்களை எதிர்நோக்கி காத்திருந்த அனைவர் முகத்திலும் அதே மகிழ்ச்சி!

இனி நானும் குழந்தையாகி என் தாயின் அரவணைப்பில் ...

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...