Wednesday, July 10, 2019

Utrecht, Netherlands


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கொண்டாட்டங்கள் புதிதல்ல. அமெரிக்காவிலும் விடுமுறை நாட்களைக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். தேங்க்ஸ்கிவிங் நாளில் திகட்டத் திகட்ட உணவு வகைகளும் திராட்சைப் பழரசமும் உறவினர்களின் வருகையும், கிறிஸ்துமஸ் நாளில் பரிசுப்பொருட்களும் குழந்தைகளின் ஆரவாரச் சிரிப்பும் என்று கலகலவென இருக்கும் வீடுகளின் உற்சாகம் ஒவ்வொரு மக்களின் சந்திப்பிலும் தொற்றிக்கொள்ள எங்கும் மகிழ்ச்சி ததும்பும் முகங்கள்! கோடையில் வரும் சுதந்திர தினத்தன்று நாடே அவரவர் வசதிக்கேற்ப குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
 
இந்த கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சும் வகையிலிருந்தது நெதர்லாந்து மக்கள் கொண்டாடிய 'கிங்ஸ் டே'! அப்பொழுது தான் புரிந்தது ஆம்ஸ்டர்டாமில் ஏன் அந்த வாரத்தில் தங்குமிடங்களின் வாடகை அதிகமாகவும் பல இடங்களில் அதுவும் கிடைக்கவில்லை என்று! நகர வீதிகளும் கடைகளும் ஆரஞ்சு நிற பலூன் அலங்காரங்களுடன். கழுத்தில், காதில், தொப்பிகளில் மக்களும் ஆரஞ்சு நிற உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு வண்ணமும் அந்நாட்டின் கொடியும் தான் பிரதானமாக இருந்தது! அந்தச் சூழலும் சிரிப்பும், கும்மாளமுமாய் நகரும் மக்கள் கூட்டமும் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடத் தூண்டியது.

நெதர்லாந்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்கள் 'கிங்ஸ் டே' அன்று நாடே "உற்சாக மனநிலையில்" இருக்கும். அதுவும் ஆம்ஸ்டர்டாம் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடந்து செல்வதும் மிகக் கடினம் என்று எச்சரிக்கவே வேறு சிறுநகரங்களுக்குச் சென்று வரலாமென முடிவெடுத்துச் சென்ற முதல் ஊர் தான் 'Utrecht'(ஊத்ரெட்ட்). நெதர்லாந்தின் நான்காவது பெரிய நகரம். கூகுளாண்டவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்று சொல்ல... இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசித்து....ஓ! மார்ச் மாதத்தில் அங்கே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நினைவிற்கு வர, கொஞ்சம் பயமும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் சென்று தான் பார்ப்போமே என்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டோம்.
நாங்கள் தங்கியிருந்த Purmerand ஊரிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஊத்ரெட்ட் வந்தடைந்தோம். அப்பொழுது தான் சோம்பல் முறித்து விழித்துக் கொண்டிருந்தது நகரம். விடுமுறை என்பதால் அமைதியாக வேறு இருந்தது. ஆங்காங்கே காவல்துறையினர் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களைக் கடந்து எங்கு வண்டியை நிறுத்துவதென யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்து சென்ற கல்லூரி மாணவன் போலத் தோற்றம் கொண்டவரிடம் கேட்டதற்கு அங்கு நிறுத்தலாம். கிங்ஸ் டேயை முன்னிட்டு வாகன நிறுத்துமிடம் இலவசம். சிரித்துக் கொண்டே சென்றார். அவரின் ஆங்கில உச்சரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது 😃 எதிரில் ஒரு பள்ளிக்கூடம்! அதை நினைவில் கொண்டு காமெரா சகிதம் நகர்வலம் செல்ல கிளம்பி விட்டோம்.

நெதர்லாண்ட்ஸ்ல் மழை இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது! வெயில் வந்தால் அப்படிக் கொண்டாடுகிறார்கள்! அன்று மழை நாள் வேறு! கையில் குடையுடன், சிறு குழந்தைகளுடன் குடும்பங்களாக, கைகோர்த்துக் கொண்டு கணவன் மனைவியாக, காதலன் காதலியாக, நண்பர்களுடன் செல்பவர்களைக் கவனித்தோம். அரைமைல் தொலைவில் மார்க்கெட் சதுக்கம் நோக்கிப் படையெடுக்கும் கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமாகி நடக்க,


நகரின் மையத்தில் ஓடும் கால்வாய். இருபுறமும் வீடுகள். உருளைக்கற்களாலான நடைபாதைகள்! நடுநடுவே அழகிய பாலங்கள். கால்வாய் கரையோரம் பெரிய பெரிய மரங்கள். அவ்வப்போது சிறு தூறல். மழையை ரசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம்.

நகரில் இருக்கும் மக்கள் பலரும் அங்கே கடை விரித்து தேவையற்ற பொருட்களை மலிவு விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்! அமெரிக்காவில் மழைக்காலம் முதல் கோடை வரை கராஜ் சேல் (garage sale) என்று தத்தம் வீட்டின் முன் அல்லது வண்டி நிறுத்தும் கராஜில் வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை விற்பார்கள். தேவையுள்ளவர்கள் வாங்கிச் செல்வார்கள். மிக அழகான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். துணிகளில் இருந்து சமையல் பொருட்கள், மேஜை, நாற்காலிகள் என்று நல்ல நிலையில் இருக்கும் அனைத்தையும் விற்பார்கள். ஆனால் இங்கே பொருட்கள் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் நன்றாக இல்லாவிட்டாலும் அதையும் வாங்கிக் கொண்டுச் செல்ல ஒரு கூட்டம் இருந்தது.

தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு நெதர்லாந்து மக்களோடு மக்களாகக் கடைகள் போட்டுக் கொண்டு பல புலம்பெயர்ந்த குடும்பங்களைக் கண்டோம். அவர்களிடம் யாரும் வித்தியாசமாகப் பழகுவது போல் தோன்றவில்லை. அடைக்கலம் தேடி தங்கள் நாட்டிற்கு வந்தவர்களோடு சரிசமமாகப் பழகும் மக்களை எப்படிக் கொல்ல மனம் வருகிறது? எப்படி இவர்களால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்க முடிகிறது? கேள்விகளுடன் அவர்களையும் கடந்து வந்தோம்.

மதுபான விடுதிகளில் இளம்வயதினரின் இரைச்சலான பாடல்களும் ஆட்டமும். யாரும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவரவர் உலகில் ஆனந்தமாக இருந்தார்கள். அந்நாட்டின் பிரபல பியர் ஹெயினேகென் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. ஐரோப்பியர்கள் எங்கும் புகை பிடிக்கிறார்கள் :( காவல் துறையினர் கூட்டத்தினரிடையே நடந்தும் கண்காணித்துக் கொண்டும் இருக்க,

அருகிலுள்ள கடையில் சுடச்சுட பிரபல டட்ச் வாஃப்ல்ஸ் Stroopwafel வாங்கிச் சுவைத்துக் கொண்டிருக்கையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் படகுகளில் ஆரஞ்சு வண்ண உடைகளை அணிந்து கொண்டு "கிங்ஸ் டே" கொண்டாடும் மக்களைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. ஒருவர் முகத்திலும் கவலைகளோ, வருத்தங்களோ இல்லை.தங்கள் மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மட்டும் தான் நாட்டம் இருந்தது! அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ள வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். அழகான கற்கள் பதித்த குறுகிய தெருக்கள். சிறிய நேர்த்தியான வீடுகள். உற்சாகத்துடன் வளைய வரும் அனைத்து வயதினர்! மேடைப்பாடகர்கள் பாட, நடனமாடிக் கொண்டே மேடையைச் சுற்றிச் சிறு கூட்டம்! துரித உணவுக்கடைகளிலும் தற்காலிக மதுபான கடைகளிலும் 'விறுவிறு' வியாபாரம்!
உருளைக்கிழங்கை தோலுரித்து ஒரே அளவில் வெட்டி எண்ணையில் பொரித்துச் சுடும் வறுவல் வாசம் அழைக்க, அதையும் ஏன் விடுவானேன்? வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஆற்றங்கரைப் படியில் அமர்ந்து கொண்டு படகுகளில் செல்லும் மக்களையும் புன்னகையுடன் கடந்து செல்வோரையும் காண சுகமாக இருந்தது. அங்கிருந்த இரு இந்தியர்கள் நாங்கள் மட்டுமே ☺



அந்த ஊரின் பிரபலமான செயின்ட் மார்ட்டின் தேவாலயத்திற்குச் செல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நுழைவாயிலில் மௌனமாகப் பதாகையை ஏந்தி மிருகவதை எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தவர்கள் ஆர்வமுடன் அவர்களுடைய கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்! பண்ணைகளில் கால்நடைகளை நடத்தும் விதம், மீண்டும் வெஜிடேரியனாகி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்! அழகிய பேராலயம் அன்று மூடி இருந்ததால் அதைச் சுற்றிப் பார்க்க மட்டுமே முடிந்தது. தெருக்களில் சுற்றுலாவினர் படங்களை எடுத்துக் கொண்டே தேவாலயத்தின் பிரமமாண்டத்தை வியந்து கொண்டிருக்க, நாங்களும் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.அழகிய கலை நயத்துடன் இருந்த வெளிப்புறமே மனதைக் கொள்ளை கொண்டதென்றால் உட்புறம் இன்னும் அழகாக இருந்திருக்கக் கூடும். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தைக் காண முடியாத ஏமாற்றத்துடன் அருகிலிருந்த அந்நாட்டின் உயர்ந்த தேவாலய கோபுரத்தைக் காண விரைந்தோம். அப்பகுதியிலும் கிங்ஸ் டே கொண்டாட்டங்களுக்காக அலங்காரங்களும் குழந்தைகள் விளையாட மைதானம் முழுவதும் ராட்டினங்களும் என்று அந்த சூழலே புது உருவம் கொண்டிருந்ததில் கோபுரத்தின் அழகு காணாமல் தான் போயிருந்தது. அண்ணாந்து வான் முட்டிய கோபுரத்தைப் பார்த்து வியந்து கொண்டே வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

மதிய நேரம் நெருங்க, வழியில் பர்கர் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே அடுத்து எந்த ஊருக்குச் செல்லலாம் என்று வரைபடத்தைத் தேடி வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

டட்ச் மனிதர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல 😍வேற்று நாட்டினரையும் தங்களில் ஒருவராக மதித்து நடக்கும் மனிதநேயம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்கள் நாட்டு மன்னரின் பிறந்தநாளை நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடுவதையும் ஊத்ரெட்ட் நகரத்தின் அழகையும் நேரில் பார்த்தது புது அனுபவமாக இருந்தது.

கொண்டாட்ட உலகில் எதுவும் சாத்தியம். மலரட்டும் மனித நேயம்! 





Click here to see more  Utrecht photos




































No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...