Saturday, July 6, 2019

When They See Us


ஏப்ரல் 19, 1989ல் நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க்கிற்கு  ஜாகிங் சென்ற ட்ரிஷா மெய்லிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு 'சென்ட்ரல் பார்க் ஜாக்கர்  கேஸ்'.  அமெரிக்காவை உலுக்கிய இச்சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு "When They See Us" தலைப்பில் நான்கு பாகங்கள் கொண்ட தொடர்  நெட்ஃப்ளிக்ஸ்ல் சமீபத்தில் வெளியானது.

வழக்கம் போல் இரவில்  ஜாகிங் சென்ற  ட்ரிஷா மெய்லி வன்கொடுமைக்கு ஆளாகி உருக்குலைந்து குற்றுயிராய் அபாயகரமான கட்டத்தில் உயிர் பிழைப்பாரா என்ற நிலையில்,  அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க பலரும் நியூயார்க் நீதிமன்றம் முன் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறைக்கு காரணமானவர்களை கொலை செய்ய வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்  என்ற கோபமும் மக்களுக்கு இருந்திருக்கிறது. சில நாட்கள் கோமாவில் இருந்த அப்பெண்ணிற்கு அன்று நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இருந்திருக்கவில்லை.

இவ்வழக்கில் பதினாறு வயதிற்கும் குறைவான நான்கு சிறுவர்களும்  காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தன் நண்பனுக்குத் துணையாக எந்த குற்றமும் புரியாத வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத பதினாறு வயதான கோரி வைஸ் என்ற இளைஞனும் அநியாயமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர் வந்த பிறகு தான் அமெரிக்க மக்கள் பலருக்கும் உண்மைகள் தெரிந்து ஊடகங்களில் அன்று பாதிக்கப்பட்டவர்கள் பேச, பலருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது! அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை இயக்குனரிடம் வெளிப்படையாக பேசி இத்தொடரைக் கொண்டு வந்ததன் மூலம் இன்று வரை தொடரும் இந்நாட்டின் நிறவெறியையும், காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், நீதித்துறையின் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கறுப்பர்கள் அதுவும் பதின் பருவ இளைஞர்களும் சிறுவர்களும் கூச்சலிட்டுக் கொண்டே சென்ட்ரல் பார்க்கிற்கு கூட்டமாக நண்பர்களுடன் சென்று அவர்களைக் கடந்து செல்பவர்களைச் சீண்டுவது, சண்டையிடுவதென ஆரம்பித்து, இவர்களைப் பற்றின தகவல் அறிந்து வரும் போலீசார் சில இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலைத் தந்து பொய்யான ஆதாரங்களையும் அறிக்கைகளையும் அவர்களையே சொல்ல வைத்து, பிரபலமான சென்ட்ரல் பார்க் ஜாக்கர் வழக்கில் (Central park jogger case ) முன்தீர்மானமாக குற்றவாளிகளாக்கி  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். எந்த ஆதாரமும் சிறுவர்களை குற்றவாளிகளாக நிரூபணம் செய்ய முடியாத நிலையிலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே அவர்களின் வாழ்க்கையைக்  களவு கொண்டு விடுவது தான் சோகம்.

முன்னேறிய நாடு என்று தன்னைப் பிரகனப்படுத்திக் கொண்டு அடுத்த நாட்டினரின் சாதி, சமய விஷயங்களில் தலையிட்டு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் அமெரிக்கா இன்று வரை சிறுபான்மையினரை, குறிப்பாக கறுப்பர்களை நடத்தும் விதம் உலகமே அறிந்திருந்தாலும் இவ்வழக்கில் அது வெளிப்படையாகவே தெரிகிறது. குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகவும் பலியினை யார் மீதாவது சுமத்த வேண்டிய நிர்பந்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் வெள்ளையின அமெரிக்கனாக இருக்க, மாட்டிக் கொண்டவர்கள் பள்ளி செல்லும் நான்கு கறுப்பின சிறுவர்களும் ஒரு லேட்டினோவும்.

பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை விசாரணை செய்ய அவர்கள் குடும்பத்தினர் உடனிருக்க வேண்டும் என்ற சட்டத்தினைக் கூட மீறியிருக்கிறார்கள் காவல் துறையினரும் விசாரணை அதிகாரிகளும். செய்யாத குற்றத்தை பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளைச் சம்மதிக்க வைத்து, அவர்களும் குழந்தைகள் உயிருடன் திரும்பி வீட்டிற்கு வந்தால் போதும் என்று அதிகாரிகளுடன் ஓத்துழைக்க தங்கள் குழந்தைகளை நிர்பந்திக்க,  சிறையிலிருந்தும் போலீஸ் பிடியிலிருந்தும் காத்துக் கொள்ள தாங்கள் செய்யாத தவறை அப்பெண்ணிற்குச் செய்ததாகச் சொல்ல வைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

அதில் பதினாறு வயதுச் சிறுவனை மட்டும் சிறார் சிறையில் அடைக்காமல் பெரியவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் அநியாயங்களை நிச்சயம் இவர்களும் கடந்து வந்திருக்க கூடும். இலைமறைகாயாக தொடரில் வரும் காட்சிகளுக்கே மனம் பதைபதைக்கிறது!


ஐவரில், மனதாலும் உடலாலும் இன்று வரை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் நண்பனுக்காக காவல்நிலையத்திற்குத் துணையாக சென்ற கோரி வைஸ்! கடைசி வரை தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் ஜாமீன் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் படும் கொடுமைகள் ஏராளம். சிறார் சிறையில் இருந்து மற்ற நான்கு பேரும் தண்டனைக்காலம் (பத்து வருடங்கள்) முடிந்து வெளியில் வந்த போதும் கோரி மட்டும் தண்டனையை அனுபவித்துக் கொண்டே வேறோர் சிறையில்.

இச்சம்பவத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளி வேறு சில பெண்களுக்கும்  அதே பார்க்கில் இதே போன்ற கொடுமையை இழைத்து தண்டனை பெற்று கோரி வைஸ் இருந்த சிறையில் சந்திக்க, கோரியின் நிலைமைக்குத் தான் தான் காரணம் என்றுணர்ந்து 2001ல் அதிகாரிகளிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ள, அப்பொழுது தான் நீதித்துறையும் காவல்துறையும் ஐவரையும் தவறாக தண்டித்து விட்டார்கள் என்று தெரிய வருகிறது.  1989ல் அவ்வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறுப்பதுடன் அந்தக் கொடுமையைச் செய்தவர்கள் அன்று சிறுவர்களாக இருந்தவர்களும்  அவர்களோடு ஆறாவதாக ஒருவனும் இருந்திருக்கிறான். அதனால் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே என்று வாதிடுவது மட்டுமில்லாமல் இன்று வரையில் மன்னிப்பும் கேட்காதது தான் அராஜகத்தின் உச்சகட்டம்!

உண்மையான குற்றவாளியின் வாக்குமூலமும் சாட்சிகளும் 2002ல் உறுதிப்படுத்தப்பட்டு வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தண்டனை அனுபவித்து வந்த கோரியை விடுவித்து, ஐவரின் மேல் இருந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை பழியிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

குற்றமே செய்யாமல் இளம்பருவத்தை சிறையில் கழிக்க வைத்து தங்களையும் குடும்பத்தினரையும் இம்சித்த வகையில் ஐவரும் அரசாங்கத்திற்கு எதிராக 2003ல்தொடுத்த வழக்கு, விசாரணைகள் முடிந்து 2014ல் ஐவருக்கும் சேர்ந்து நாற்பத்தியொரு மில்லியன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறது நியூயார்க் மாநில அரசு. அதில் இத்தனை வருடங்கள் நடந்த விசாரணைக்காக வக்கீல்கள் செலவு போக மிகக் குறைந்த அளவே தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர்களைப் போன்று குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கா வண்ணம் செயல்படும் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்டுக்காக அப்பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதாகவும் இன்று வரை அநியாயங்களுக்கு குரல் கொடுக்கவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பதாகவும் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஐவரும் இத்தொடரை எடுத்த டைரக்டர் அவா டுவெர்னேயுடன் பேசியது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

இருபத்தைந்து வருட போராட்டத்திற்குப் பிறகு அவர்களுக்கு கிடைத்த சொற்ப பணம்,  தொலைத்த வருடங்களைக் மீண்டும் கொண்டு வருமா? அவர்களின் உடல், மன பாதிப்பிலிருந்து அவர்களை மீட்குமா? அவர்களுக்கு இந்த நிவாரணம் அளித்திருக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்! 


விசாரணை அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுந்த ஆதாரங்கள் இல்லையென்ற போதும் தண்டனை அனுபவித்த சிறுவர்களும், அவர்கள் குடும்பத்தினர்  அனுபவித்த மன உளைச்சல்களும் , அவர்களைக் கொல்ல நினைத்து வெறுப்புடன் திரிந்த, இன்று வரை திரியும் மனிதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். அதில் இந்நாட்டின் அதிபரும் இருக்கிறார் என்பதும் அவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபணமான போதும் தன் கருத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதில் இருக்கும் திமிர் நிறவெறியின் உச்சம்!

"சென்ட்ரல் பார்க் ஃபைவ்"  சிறுவர்களாக சிறைக்குச் சென்றவர்கள் இளைஞர்களாக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதி இன்றும் தொடர்வதைத் தான் சுட்டிக் காட்டுகிறது!


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...