Sunday, January 5, 2025

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தாலும் பழைய நினைவுகளைக் கிளறும் படங்களைப் பார்த்தால் மீண்டும் பால்ய காலத்திற்கே கொண்டு செல்லும் வலிமை படங்களுக்கு உண்டு. அப்படித்தான் திரு.மனோகர் தேவதாஸ்-ன் 'Mulitple Facets of Madurai' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

அவர் கோரிப்பாளையம் என்ற பகுதியில் சிறிது காலம் வசித்திருக்கிறார். மேம்பாலம் ஏறுவதற்கு முன்பே மசூதி ஒன்று இருக்கும். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அங்குள்ள இறைச்சி சந்தை கழிவுகளை ஆற்றில் கொட்டி தண்ணீர் வராத வைகையை மாசுபடுத்தி வருகிறார்கள் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளாத மாநகராட்சியும். அப்பகுதியில் நடமாட முடியாதபடி நாஸ்தி பண்ணி வைத்திருக்கிறார்கள். யாருக்கும் எதைப்பற்றியும் அக்கறையில்லை. கவலையுமில்லை. வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம் என்ற நினைவு அறவே இல்லை. சுரணை கெட்டுத்தான் போயிருக்கிறோம். 

அவருடைய குறிப்புகளில் இருந்து அப்பகுதி இப்பொழுது நிறையவே  மாறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர் ஓவர் பிரிட்ஜ் ) பாரம் தாங்காது என்று கீழ்பாலத்தை அதிகமாக பயன்படுத்தவேண்டிய நிலை தற்பொழுது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வைகையின் இருகரைகளையும் இணைக்கும் பாலங்கள் வரிசையாகக் காட்சி தருகிறது. ஆனாலும் மதுரையிலிருந்து கோரிப்பாளையம், செல்லூர் செல்பவர்கள் கீழ்பாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும். 

புழுதி பறக்க வாகனங்கள் செல்லூர் செல்ல கண்மாயை கடந்து செல்ல வேண்டும். பாவம் அதன் எதிர்புறத்தில் வாழும் மக்கள். கடந்து செல்லும் பொழுதே மூக்கை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. சாக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். கண்மாய் முழுவதும் குப்பைகளைக் கொட்டி நீரின் நிறம் மாறி பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது.  மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். சாக்கடை தண்ணீர் சாலையெங்கும் ஓடி வாகனங்களின் சக்கரங்களில் சுற்றி ஊரெங்கும்...ச்சை! தீராத கொசுத்தொல்லை வேறு. ப்ளீச்சிங் பவுடர் "விலை என்ன தெரியும்ல" என்று மைதா/கோதுமை மாவைத் தூவி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அறிவுக்கழகம்.  மதுரையின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. கைநீட்டி காசு வாங்கி ஓட்டுப்போடும் கும்பல் இதைப்பற்றிக் கேட்கவே கூடாது. முடியாது. பெருமைக்கு நாம் வேண்டுமென்றால் 'தூங்கா நகரம்', 'உணவு நகரம்' என்று பீற்றிக் கொள்ளலாம். அதனுடன் இப்பொழுது 'துர்நாற்ற நகரம்', 'குப்பை நகரம்' என்ற அடைமொழிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 

நல்லவேளை, இந்த மனிதர் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கவில்லை. அவருடைய நினைவுகளில் இருந்து 2004ல் வரைந்த பாடத்தைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது!

ஹ்ம்ம்... என்னவோ போடா மாதவா! 









இனியாவது அமைதி திரும்புமா?

 சொல்வனம் இதழ் 333ல் வெளிவந்துள்ள 'சிரியா' பற்றின விரிவான கட்டுரை.

இனியாவது அமைதி திரும்புமா?

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ‘சிரியா’வை ஒரு குடும்பம் மட்டுமே ஆண்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஆட்சி ஆட்டம் கண்டு தப்பியோடும் நிலைக்கு ஆளானார் அதிபர் ‘பஷார் அல் அசாத்’. டிசம்பர் 8, 2024 அன்று சிரியாவை அசாத்தின் ஆட்சியில் இருந்து விடுவித்ததாக எதிர்க்கட்சிப் படைகள் அறிவித்த நேரத்தில் முன்னாள் அதிபர் டமாஸ்கஸிலிருந்து தப்பி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

அசாத்தின் குடும்ப அதிகார ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் சரிவு ஒரு வரலாற்றுத் தருணம் என்றே கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக சிரியர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசோ, அவர்களை வன்முறையால் அடக்க முயற்சிக்க, உள்நாட்டுப் போர் வெடித்தது. கடைசி நாட்கள் வரை நாட்டின் கணிசமான பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் அரசு வைத்திருந்தும், இத்தனை விரைவில் எப்படி ஆட்சி கவிழ்ந்தது? யார் இதைச் செய்தார்கள்? எப்படி சாத்தியமாயிற்று என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

‘வன்முறை தடுப்பு நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (HTS) தலைமையிலான ஆயுதமேந்திய பல சிரிய எதிர்ப்புக் குழுக்கள். HTS, சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சன்னி இஸ்லாமிய ராணுவ அமைப்பாகும். இதற்கு துருக்கிய படைகளின் ஆதரவும் உண்டு.

யார் இவர்கள் என்று பார்ப்பதற்கு முன்னால் சிரியாவைப் பற்றின சிறிய அறிமுகம்.

‘சிரிய அரபு குடியரசு’ ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. லெபனான், ஈராக், இஸ்ரேல், துருக்கி, ஜோர்டன் என ஐந்து நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்குப் பகுதியில் மத்தியதரைக்கடலும் எல்லையாக உள்ளது. எல்லை நாடுகளிலும் கலவரங்களும் போர்களும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வீழ்ச்சி அப்பகுதியின் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டக்குழுக்களால் சிரியாவும் துண்டாடப்பட்டுள்ளதைத் தான் உலகம் கண்கொத்திப்பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரியாவின் வரலாறு முழுவதும் போர்களும் போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது.

1918ல் பிரிட்டிஷ் ராணுவ உதவியுடன் 400 வருட ‘ஆட்டமன்’ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சிரியா, பின், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் சிக்கியது. 1947ல் ‘மைக்கேல் அஃப்லாக்’, ‘சலா-அல்-தின் அல்-பிதார்’ ஆகியோர் ‘அரபு சோசலிச பாத்’ கட்சியைத் தொடங்கினர். பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு சிரியாவும் எகிப்தும் இணைந்து ‘ஐக்கிய அரபு குடியரசு’ ஆனது. எகிப்து அதிபர் ‘கமல் அப்தெல் நாசர்’ புதிய அரசுக்குத் தலைமை ஏற்றார். உடனே, சிரியாவில் இருந்த அரசியல் கட்சிகளைக் கலைக்க உத்தரவிட்டார். இதில் ‘ஐக்கிய அரபு குடியரசு’ அமைய காரணமாக இருந்த ‘பாத்’ கட்சியும் கலைக்கப்பட்டது. எகிப்திய மேலாதிக்கத்தின் மீதான அதிருப்தியால் 1961ல் சிரிய ராணுவ அதிகாரிகள் குழு டமாஸ்கஸில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய அரபு குடியரசிலிருந்து வெளியேறியது சிரியா.

1963ல் ‘பாத்’ கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1966ல் பாத் கட்சியை எதிர்த்து ‘சலாஹ் ஜாடிட்’ ஆட்சி பொறுப்பேற்க, ‘ஹபீஸ் அல் அசாத்’ பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார். இவர் ‘அலவிஸ்’ இனக்குழுவைச் சார்ந்தவர். 1967ல் எகிப்து, ஜோர்டன் மற்றும் சிரியாவுடனான ஆறு நாள் போரில் இஸ்ரேலியப் படைகள் சிரியாவிடமிருந்து ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ கைப்பற்றி, சிரியாவின் விமானப்படையின் பெரும்பகுதியை அழித்தது.

1970ல் ராணுவ அமைச்சர் ‘ஹபீஸ் அல் அசாத்’, அதிபர் ‘சலாஹ் ஜாடிட்’டை சிறையில் அடைத்தார். அதுமட்டுமில்லாமல், 1973ல், தனக்குச் சாதகமாக, அதிபராகப் பொறுப்பேற்பவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தார். அதன் மூலம் முஸ்லீம் அல்லாதவரும் அதிபராகலாம் என்று சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ‘ஷியா’ பிரிவினர் அதிகம் வசிக்கும் சிரியாவில் கலவரம் வெடித்தது. அதை ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் அசாத். பின், சிரியாவும் எகிப்தும் இஸ்ரேலுடன் போரிட்டாலும் இஸ்ரேல் கைப்பற்றிய ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ மீட்க முடியாமல் தோற்றுப் போயின. அதற்குப் பிறகு, அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட அரபு நிலங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறினால் அதனுடன் சமாதான உடன்படிக்கை செய்யத் தயாராக இருப்பதாக அசாத் கூறினார். இஸ்ரேல் இணங்கவில்லை.

1980ல் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, ‘அலெப்போ’, ‘ஹோம்ஸ்’, ‘ஹமா’வில் ‘முஸ்லிம் சகோதரத்துவ குழுக்கள்'(ஷியா பிரிவினர்) போராட்டங்களில் ஈடுபட்டன. ஈரான்-ஈராக் போர் ஆரம்பமாக, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ‘பாத்திஸ்ட்’ தலைமைகளுக்கு இடையிலான பாரம்பரிய போட்டிக்கு ஏற்ப, சிரியா ஈரானை ஆதரித்தது. 1981ல் ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ இஸ்ரேல் முறையாக இணைத்துக் கொண்டது.

1982ல் ஹமா நகரில் ‘முஸ்லிம் சகோதரத்துவ எழுச்சி இயக்கம்’ சிரிய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதே வருடம் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்து சிரிய ராணுவத்தைத் தாக்கி அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. 1983ல் லெபனானும் இஸ்ரேலும் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்து சிரிய படைகள் லெபனானில் தங்க அனுமதித்துள்ளது.

1984ல் அசாத்தின் சகோதரர் ‘ரிஃபாத்’ துணை அதிபராக பதவி உயர்வு பெற்றார். 1990ல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் சிரியா இணைந்தது. 1991ல் மத்திய கிழக்கு அமைதி மாநாட்டில் பங்கேற்ற சிரியா, ‘கோலன் ஹைட்ஸ்’ பிரச்சினை தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 1994ல் அதிபர் அசாத்தின் மகன் பசில், அவரது தந்தைக்குப் பின் ஆட்சிக்கு வரவேண்டியவர் கார் விபத்தில் இறந்து போகிறார். 1998ல் அசாத்தின் சகோதரர் ‘ரிஃபாத்’ துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2000ம் வருடம் அதிபர் அசாத்தின் மறைவிற்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் ‘பஷார்’ பதவியேற்றார். புதிய அதிபர் 600 அரசியல் கைதிகளை விடுதலை செய்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்தார். ஆனாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ‘முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு’ மீண்டும் அரசியல் போராட்டங்களைத் தொடங்குவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள், சீர்திருத்த ஆதரவாளர்களைச் சிறை பிடித்து கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கி தந்தையின் வழியிலேயே கொடுங்கோல் ஆட்சி செய்தார் பஷார்.

2004ல் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, ஈராக்கிற்குள் நுழையும் போராளிகளைத் தடுக்கத் தவறியதற்காக சிரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2005ல் லெபனான் பிரதமர் ‘ரஃபிக் ஹரிரி’ கொல்லப்பட்டதை அடுத்து பெய்ரூட்டில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சிரியாவை வலியுறுத்தியது அமெரிக்கா. சிரியாவும் லெபனானிலிருந்து வெளியேறியது. மேற்கு நாடுகள் சிரியாவுடனான தங்கள் உறவை முறித்துக் கொண்டன.

ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பிறகு 2006ல் ஈராக்குடன் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியது சிரியா. 2007ல் ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்கியது. அன்றைய அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ‘நான்சி பெலோசி’, டமாஸ்கஸில் அதிபர் அசாத்தை சந்தித்தார். முதன்முதலாக சிரியாவிற்கு விஜயம் செய்த உயர்நிலை அமெரிக்க அரசியல்வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வருடம், ‘அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு’, சிரியாவின் ரகசிய அணுசக்தி உலை திட்டத்தை ஐ.நாவில் சமர்ப்பிக்க, வடக்கு சிரியாவில் கட்டுமானத்தில் இருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

2008ல் அதிபர் அசாத் பாரீஸில் ஃபிரெஞ்சு அதிபர் ‘நிக்கோலா சார்க்கோசி’யை சந்தித்தார். முன்னாள் லெபனான் பிரதமர் ‘ரஃபிக் ஹரிரி’ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ராஜதந்திர தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்ததை இந்த விஜயம் ஊர்ஜிதப்படுத்தியது. முதல் முறையாக லெபனானுடன் சிரியா நட்புறவைப் பேண பேச்சுவார்த்தை நடத்தியது.

2010ல் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதாகவும், பேரழிவு ஆயுதங்களைக் குவிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கு ‘ஸ்கட்’ ஏவுகணைகளை வழங்குவதாகவும் கூறி, சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா புதுப்பித்தது.

2011ம் ஆண்டின் முற்பகுதியில் மத்திய கிழக்கு முழுவதும் “Arab Springs” என்ற பெயரில் அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்துத் தீவிர போராட்டம் நடந்தது. அரபு எழுச்சிகளால் ஈர்க்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சிரிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமைதியான போராட்டங்கள் சிரியா முழுவதும் வேகமாகப் பரவின. பஷாரின் ராணுவம் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளைக் கட்டவிழ்த்து விட்டது. ‘அலெப்போ’வில் ஏற்பட்ட தீ, வரலாற்றுச் சந்தையின் பெரும்பகுதியை அழித்தது. சிரியா உலகத்தாரின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.

2012ல் கத்தாரில் உருவாக்கப்பட்ட ‘சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கான தேசிய கூட்டணி’, ‘இஸ்லாமிய போராளிகளை'(ஐசிஸ்) அங்கீகரிக்கவில்லை. அதனால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி, வளைகுடா நாடுகள் எதிர்க்கட்சியான தேசிய கூட்டணியை சிரிய மக்களின் “சட்டப்பூர்வமான பிரதிநிதியாக” முறையாக அங்கீகரித்தன.

அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குழுக்களின் படைகள், ஆயுதமேந்திய கிளர்ச்சியினைத் தொடங்க, சிரியா முழு அளவிலான உள்நாட்டுப் போரில் இறங்கியது. நாட்டின் மிகப்பெரிய நகரமான ‘அலெப்போ’வின் சில பகுதிகள் உட்பட வடக்கின் முக்கிய நகரங்களை போராளிக்குழுக்கள் கைப்பற்றின. 2013ல் பஷார் அரசுக்கு உதவ, லெபனானின் ‘ஹெஸ்பொல்லா’வும் ஈரானிய புரட்சிகர காவல்படை(IRGC)யும் வெளிப்படையாக அதன் போராளிகளை சிரியாவிற்கு அனுப்பியது.

அதே காலகட்டத்தில் ஐசிஸ்-ன் வளர்ச்சியும் சிரியாவில் ஏற்பட்டு, 2014ல், ‘ரக்கா’வை தலைநகராகக் கொண்டு, ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சிரியாவை உரிமை கொண்டாடியது. இது அமெரிக்க ராணுவத்தின் நேரடித் தலையீட்டிற்கும் காரணமாக அமைந்தது. 2013ல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ‘ஹெஸ்பொல்லா’ கட்டமைப்பதாகச் சந்தேகித்து ‘டமாஸ்கஸ்’ அருகே ராணுவ தளத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதாக சிரியா குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து டமாஸ்கஸின் ‘கௌடா’ பகுதியில் 300 பேரைக் கொன்ற தாக்குதலில் சிரிய ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் அறிவித்தனர். 2014க்குள் ரசாயன ஆயுத இருப்புக்களை அழிக்க ஐ.நா.வை சிரிய அரசாங்கம் அனுமதித்தது. மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற ‘சுதந்திர சிரிய ராணுவ’த்தின் தளங்களை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகக் கூறப்பட்டதை அடுத்து, வடக்கு சிரியாவில் போராளிகளுக்கான ஆதரவை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்தியது.

 
2015ல் ‘குர்திஷ் படைகள்’ நான்கு மாதப் போருக்குப் பிறகு துருக்கிய எல்லையில் உள்ள கோபானில் இருந்து ‘இஸ்லாமிய அரசை’ வெளியேற்றின. ‘இஸ்லாமிய அரசு’ போராளிகள் மத்திய சிரியாவில் உள்ள பழங்கால நகரமான ‘பல்மைரா’வைக் கைப்பற்றினர். இஸ்லாமியத்திற்கு முந்தைய உலக பாரம்பரிய தளங்களில் உள்ள பல நினைவுச்சின்னங்களை அழிக்கத் தொடங்கினர்.

‘ஜெய்ஷ் அல்-ஃபதாஹ்’, இஸ்லாமிய கிளர்ச்சிக் கூட்டணி ‘இட்லிப்’ மாகாணத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.

2015ல் ரஷ்யா தனது முதல் வான்வழித் தாக்குதல்களை சிரியாவில் நடத்தியது. ‘இஸ்லாமிய அரசு’க் குழு(ஐசிஸ்)வை குறிவைத்ததாகக் கூறினாலும் அசாத்தின் எதிரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று எதிர்க்கட்சிகளும் போராளிகளும் கூறினர். கிளர்ச்சியாளர்கள் ‘ஹோம்ஸின்’ எஞ்சிய பகுதியை காலி செய்ய சிரிய ராணுவம் அனுமதித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் மூன்றாவது பெரிய நகரம் அரசாங்க கட்டுப்பாட்டிற்குத் திரும்பியது.

2016ல் சிரிய அரசாங்கப் படைகள் ரஷ்ய வான் உதவியுடன் இஸ்லாமிய அரசிடமிருந்து பல்மைராவை மீட்டெடுத்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் மீண்டும் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ அதனை ஆக்கிரமித்து விட்டது. கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவுவதற்காக துருக்கியப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்து அவர்களுடன் சேர்ந்து குர்திஷ் படைகளையும் இஸ்லாமிய அரசுப் படைகளையும் துருக்கி எல்லையை நெருங்காமல் பார்த்துக் கொண்டன. ரஷ்ய வான்படை மற்றும் ஈரானிய ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகளின் உதவியுடன் அசாத்தின் ராணுவம் நாட்டின் மிகப்பெரிய நகரமான ‘அலெப்போ’வை போராளிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஐ.நா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நடத்திய சமாதான உடன்படிக்கைகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் தோல்விக்குப் பிறகு, ரஷ்யா, ஈரான், துருக்கியுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவங்கியது. 2017ல் கஜகஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்யா, ஈரான், துருக்கி நாடுகள், அரசுக்கும் ஐசிஸ் அல்லாத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ‘கான் ஷெய்கோன்’ நகரின் மீது சிரிய அரசாங்க விமானங்கள் ரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியதாகக் கூறி விமானத் தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்த அன்றைய அமெரிக்க அதிபர் ‘டொனால்ட் ட்ரம்ப்’ உத்தரவிட்டார். ‘குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவு’களுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. இப்பிரிவு, முக்கிய எதிர்க்கட்சியான ‘சிரிய ஜனநாயகப் படை’களுடன் இணைந்து ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ஐ எதிர்த்துப் போர் புரிந்தன.

2015 மற்றும் 2016ல், மிதவாத கிளர்ச்சிப் பிரிவுகளுக்கு எதிராக ரஷ்யா தனது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் சிலவற்றைப் பயன்படுத்தியது. ரஷ்ய ராணுவத்தின் தலையீடும், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானின் படைகளும் பஷாருக்கு ஆதரவாகவும் போராடும் மக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது. 2016ம் ஆண்டின் இறுதியில், ‘அலெப்போ’ உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் மேற்குப் பகுதியையும், ஜோர்டன் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைகள் வரை நாட்டின் தெற்கே கிட்டத்தட்ட அனைத்தையும் சிரிய ராணுவம் தன் ஆதரவுப் படைகளுடன் மீண்டும் கைப்பற்றியது.

அசாத் அரசு, இழந்த சிரியாவின் பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. 2018ல் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக டமாஸ்கஸை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளையும் கைப்பற்றியது. அதன் பிறகு, எழுச்சியின் பிறப்பிடமான ‘டாரா’விற்கு தெற்கே தனது பார்வையைத் திருப்பியது. இஸ்லாமிய அரசின் தலைவர் ‘அபு பக்கர் அல்-பாக்தாதி’ ‘இட்லிப்’ மாகாணத்தில் உள்ள அவரது மறைவிடத்தில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்தார். 2019ல் வடக்கு சிரியாவிலிருந்து துருப்புக்களை அமெரிக்கா திரும்பப் பெற்றது.

எதிர்க்கட்சிகளின் கைவசம் இருந்த கடைசி மாகாணமான இட்லிப்பை சிரிய ராணுவ தாக்குதலில் இருந்து மீட்க, துருக்கி ஆயிரக்கணக்கான துருப்புக்களை எல்லைக்கு அப்பால் அனுப்பியது. தெற்கு சிரியாவில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான எதிர்ப்புகள் காரணமாக பிரதம மந்திரி இமாத் காமிஸை பதவி நீக்கம் செய்தார் அசாத்.

குறைந்தது இரண்டு முறை அசாத்தின் ஆட்சி சரிந்தாலும் அதன் மறுபிரவேசம் நட்புநாடுகளால் அரங்கேறியது.

இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் உள்நாட்டுப்போர்களால் பொருளாதாரம் வீழ்ச்சியடைய, ‘கேப்டகன்’ என்ற உளவியல் போதைப்பொருளின் சட்டவிரோத வர்த்தகத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தது சிரியா. வாழ்க்கை கடினமாக, அசாத்தின் ராணுவ வீரர்களே ஒத்துழைக்க மறுக்கும் நிலைமைக்கு ஆளாகியது அரசு. ராணுவ ரீதியாகவும் பல ஆண்டுகளாக பலவீனமாக இருந்த நிலையில் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரானிய ராணுவ ஆதரவை வெகுவாக நம்பியிருந்தது பஷாரின் அரசு. இதற்கிடையில் ரஷ்யா, உக்ரைன் போரிலும் ஹெஸ்பொல்லவைக் காப்பாற்ற ஈரான், லெபனானுடன் சேர்ந்து இஸ்ரேலுடன் போரிட்டுக் கொண்டிருப்பதில் சிரியா ஆதரவற்று பலமிழந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிரியாவில் பல்வேறு மதங்களும் பிரிவுகளும் இருப்பதால் நாட்டின் பல பகுதிகள் பல்வேறு குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ‘சன்னி இஸ்லாம்’, ‘அலவிஸ்’, ‘ஷியா’, ‘பன்னிரண்டு ஷியா முஸ்லிம்கள்’ இனக்குழுவினர், ‘இஸ்மாயிலி முஸ்லிம்கள்’, ‘சிரியன் கிறிஸ்தவர்கள்’, ‘யசிடிஸ்’, ‘பஹாய்ஸ்’ இனத்தவர் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.


A map of the country

Description automatically generated
சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த போராட்டக் குழு ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS)’. இக்குழு தான் முன்னாள் அதிபர் பஷார் அல்அசாத்திற்கு எதிரான மின்னல் தாக்குதலை வழிநடத்தி ரஷ்யாவிற்குத் தப்பி ஓடச் செய்தது.

நவம்பர் 27ல் ஆரம்பித்து சில நாட்களிலேயே சிரிய கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர். பின்னர், ஹமா, ஹோம்ஸ் வழியாக தெற்கு நோக்கிச் சென்று தலைநகரான டமாஸ்கஸை கைப்பற்றினர்.

இவர்களைத் தவிர மற்ற எதிர்க்குழுக்கள் சிரியாவின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன.

அவற்றில் ஒன்று, ‘சிரிய தேசிய இராணுவம்’ (Syrian National Army, SNA). அது சிரியாவின் வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. HTS கிளர்ச்சியாளர்கள் மற்றும் SNA படைகள் சில சமயங்களில் கூட்டாளிகளாகவும், சமயங்களில் எதிரிகளாகவும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்கிறார்கள். அண்டை நாடான துருக்கியின் ஆதரவுடன் இருக்கும் SNA படைகள், சிரியாவின் ‘குர்திஷ்’ படைகளை துருக்கிய எல்லையிலிருந்து விலக்கி வைப்பதற்காக இடையக மண்டலத்தை(buffer zone) உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது.

இரண்டாவது, துருக்கிக்கு ஒவ்வாத ‘குர்திஷ் குழு’ ஒரு சிறுபான்மை இனக்குழு. சிரியாவின் ஜனநாயகப் படைகள் (Syria’s Democratic Forces -SDF) என்று அழைக்கப்படுகிறது. துருக்கிய ஆதரவு SNA படைகள் மற்றும் குர்திஷ் SDF படைகள் அமெரிக்காவின் தலையீட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்பு, வடக்கு சிரிய நகரமான ‘மன்பிஜின்’ கட்டுப்பாட்டிற்காக போராடிக் கொண்டிருந்தன.

மூன்றாவது, ‘இஸ்லாமிக் ஸ்டேட்(IS)’ பயங்கரவாதக் குழு சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரசாயன ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் “தீவிரவாதிகளிடம்” சேருவதைத் தடுக்க, சிரியா முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கிடையில், சிரியாவில் பயங்கரவாதக் குழு(ISIS) மீண்டும் எழுவதைத் தடுக்க, அமெரிக்க துருப்புக்கள் கிழக்கு சிரியாவில் குர்திஷ்(SDF) படைகளுடன் இணைந்து இஸ்லாமிய அரசின் முகாம்கள், செயல்பாட்டாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திய நிலையில், ரஷ்யாவின் கடற்படை, விமான, ராணுவத் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போராளிக்குழுக்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரியாவின் உள்நாட்டுப் போர் மத்திய கிழக்கு முழுவதும் அலை அலையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவிலும் இது ஆழமாக எதிரொலித்தது. மில்லியன் கணக்கான அகதிகள் துருக்கி, ஜோர்டன், லெபனான், ஈராக், எகிப்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் குவிந்தனர். அங்கு அகதிகள் நெருக்கடி அரசியல் நிலப்பரப்பை மறுவரையறை செய்தது. உள்நாட்டில், சிரியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து அன்றாட வாழ்வாதாரத்திற்காக மனிதாபிமான உதவியை நம்பியிருகின்றனர். இத்தனைக்கால நீண்ட போரினால் வீடுகள், பள்ளிகள், வணிகங்கள், மருத்துவமனைகள், சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அழிவு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அசாத் குடும்ப ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சி, 13 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் கொடூரமான சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்ந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உமையா மசூதியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை கொடி பறக்கிறது. சிரியாவின் தலைநகரின் மறுபுறம், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் அரண்மனை எரிகிறது. தெருக்களில், நூற்றுக்கணக்கான மக்கள் 50 ஆண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.

உமையாத் மசூதியில் இருந்து ஆற்றிய உரையில், சிரியாவின் முக்கிய கிளர்ச்சிக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (HTS) தலைவரான அபு முகமது அல்-ஜோலானி, அசாத் வீழ்த்தப்பட்டதை, “முழு இஸ்லாமிய தேசத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த தேசத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டால், அவை மீட்கப்படும் வரை தொடர்ந்து போராடி அவற்றைக் கோரும். அசாத் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட மக்களை HTS விடுவிக்கிறது” என்று கூறியுள்ளார். ‘HTS’ போராளிகள் புறநகரில் உள்ள சிறைக்குள் நுழைந்து, “செட்னயா சிறையில் கொடுங்கோன்மையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக” அறிவித்தனர். இங்கு தான் பஷாரின் அதிகார கொடூரங்கள் அரங்கேறியுள்ளது.

தலைநகருக்குள் போராளிகளின் விரைவான நகர்வு குடிமக்களையும் மற்ற உலக மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2011ல் துவங்கிய அதிகார குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் 2024ல் வெற்றியடைந்துள்ளது. பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, பல லட்ச மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும்?

பல்வேறு தரப்பினரும் ஒத்துழைக்காவிட்டால் பல இடர்பாடுகள் ஏற்படும் பல வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னாள் பிரதமர் ‘அல்-ஜலாலி’ ஒரு வீடியோ அறிக்கையில், தனது அமைச்சரவை, எதிர்க்கட்சிகளுக்கு “ஆதரவுக்கரம் நீட்ட” தயாராக இருப்பதாகவும், அதன் செயல்பாடுகளை ஒரு இடைநிலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

“இந்த நாடு அதன் அண்டை நாடுகளுடனும் உலகத்துடனும் நல்லுறவைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு சாதாரண நாடாக இருக்க முடியும். அது சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமையையும் சார்ந்தது” என்று அல்-ஜலாலி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட உரையில் கூறியுள்ளார்.மேலும், HTS தலைவர் ‘அபு முகமது அல்-கோலானி’க்கு அதிகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

HTS தலைவர், “பொது நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் வரை பிரதமரின் மேற்பார்வையில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

விடுதலை பெற்ற பின்னரும் பல மத்திய கிழக்கு நாடுகளில் காலங்காலமாக புரட்சிகளும் போராட்டங்களும் போர்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்கூடு. அமைதி என்றால் கிலோ என்ன விலை என்ற நிலையில் தான் இன்றும் அங்கே பல நாடுகளின் நிலைமை இருக்கிறது. அப்படியிருக்கையில் நீண்ட நெடிய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு ஒரு அதிகார வெற்றிடம் உருவாகியுள்ளது. ஆபத்து என்னவென்றால், இந்த வெற்றிடத்தை நிரப்புபவர்கள் சமாதானத்திலும் நல்லிணக்கத்திலும் அக்கறை காட்டாமல் அதிகாரத்திலும் பழிவாங்கலிலும் ஆர்வம் காட்டுவார்கள். இந்தக் குழுக்களுக்குள் அதிகார போராட்டம் தொடரும்.

இஸ்லாமிய போராளியாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் அபு முகமது அல்-கோலானி. சிரியாவில் இனியாவது அமைதி திரும்புமா?

காத்துக்கொண்டிருக்கிறது உலகம்!



Saturday, January 4, 2025

ஹண்டர் பைடன்

 

ஹண்டர் பைடன் பற்றி நான் எழுதிய கட்டுரை சொல்வனம் இதழ் 333ல் வெளிவந்தது. 

ஹண்டர் பைடன் – சொல்வனம் | இதழ் 333 | 22 டிச 2024

ஒவ்வொரு வருடமும் ‘தேங்க்ஸ்கிவ்விங் டே’ கொண்டாட்டத்தின் பொழுது அமெரிக்க அரசு ஒரு விநோதமான நடைமுறையைக் கையாளும். அதாவது, வெள்ளை மாளிகையில் ஒன்று அல்லது இரண்டு வான்கோழிகளுக்கு அதிபர் ‘மன்னிப்பு’ வழங்குவார். எதற்கு மன்னிப்பு? பறவை என்ன தப்பு செய்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதிபர் மன்னிப்பு வழங்கினால் எஞ்சிய நாட்களைச் சிரமமின்றி உயிர்பயமின்றி வான்கோழி(கள்) வாழலாம். அருகிலுள்ள பூங்காவிலோ, பண்ணையிலோ சுதந்திரமாக வாழும் அதிர்ஷ்டம் அந்தப் பறவைகளுக்குக் கிட்டும்.

இந்த வருடம் கூடுதலாக வெள்ளை மாளிகையில் இருந்து மற்றொரு “மன்னிப்பு” செய்தியும் வெளியாக, ஆளும் கட்சியினரிடமும் அதிருப்தி அலைகள்! வரி ஏய்ப்பு மற்றும் உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியது தொடர்பான இரண்டு கிரிமினல் வழக்குகளில் தண்டனையை எதிர்கொண்டிருந்தார் ‘ஹண்டர் பைடன்’. அவருக்கு அதிபர் ‘ஜோ பைடன்’ டிசம்பர் 1, 2024 அன்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

யார் இந்த ‘ஹண்டர் பைடன்’?

அதிபர் பைடனுக்கும் முதல் மனைவி ‘நீலியா ஹண்ட’ருக்கும் பிறந்தவர்கள் போ பைடன், ஹண்டர் பைடன் மற்றும் நவோமி கிறிஸ்டினா பைடன். இதில் 54 வயதான ‘ஹண்டர் பைடன்’ தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்லவிருந்த நிலையில் இந்த அதிரடியான மன்னிப்புப் படலம் நிகழ்ந்துள்ளது.

இன்னும் ஒரு மாதமே அதிபராகப் பதவியில் நீடித்திருக்கும் நிலையில் தன் கட்சியினரிடையே பெரிய விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளார் அதிபர். இதன் மூலம், சிறப்பு ஆலோசகர் ‘டேவிட் வெயிஸ்’ ஹண்டர் மீது கொண்டு வந்த இரண்டு கூட்டாட்சி வழக்குகளின் தண்டனையிலிருந்து மகனை காப்பாற்றியிருக்கிறார். வரிக் குற்றச்சாட்டுகளுக்காக, 17 ஆண்டுகள் வரை ஃபெடரல் சிறைத் தண்டனையையும் $1.35 மில்லியன் அபராதத்தையும் அதே நேரத்தில் உண்மையை மறைத்து துப்பாக்கி வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டில் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றிருந்த நிலையில் இந்த மன்னிப்பின் மூலம் இவற்றிலிருந்து தப்பித்திருக்கிறார் ஹண்டர் பைடன்.

2021ஆம் ஆண்டு குறிப்பில், தான் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் சிகிச்சைப் பெற்று போதை பழக்கத்திலிருந்து மீண்டு விட்டதாகவும் கூறியுள்ளார் ஹண்டர். துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் வரி மோசடி தொடர்பான பல குற்றச்சாட்டுகள் காரணமாக சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு, சிறைக்குச் செல்லவிருந்தார். டெலவேர் மாநிலத்தில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக டிசம்பர் 12 அன்றும், கலிஃபோர்னியாவில் வரிக் கட்டணங்களுக்காக டிசம்பர் 16 அன்றும் தண்டனையை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

வரி விசாரணை 2018ல் தொடங்கி, அப்போதைய அதிபர் ட்ரம்ப் அதைப் பற்றிப் பேசி பைடனுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதிபர் தேர்தலை முன்னிட்டுச் செய்திகள் வெளிவராமல் வெற்றிகரமாக மறைத்திருக்கிறார்கள். புலனாய்வாளர்கள் சீனாவிலும் பிற இடங்களிலும் ஹண்டரின் வணிகப் பரிவர்த்தனைகள் மூலம் வரிக்குற்றங்களைச் செய்திருக்கலாமோ என்று ஆராய்ந்திருக்கின்றனர்.

2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, டெலவேரில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்கள் அவரது “வரி விவகாரங்களை” விசாரித்து வருவதாக ஹண்டர் பைடன் அறிவித்தார்.

ஜோ பைடன் துணை அதிபராக இருந்த பொழுது ஹண்டர் பைடனின் போதைப் பழக்கம், சீனாவில் அவரது நடவடிக்கைகள், உக்ரேனிய எண்ணெய் மற்றும் எரிவாயு வாரியத்தில் அவரது பதவியில் நடந்த சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் அனைத்தும் 2020 தேர்தலின் பேசுபொருளாக இருந்தாலும் உண்மையை வெளிவராமல் ஜனநாயகக் கட்சியினர் பார்த்துக் கொண்டனர். அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உக்கிரமாக ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பரித்த அதே நேரத்தில் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குழுவில் ஹண்டர் பைடனின் நிலைப்பாட்டை விசாரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக, “பதவி நீக்க” விசாரணையிலிருந்து ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 2022ல் ஹண்டர் பைடனின் வரி விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உக்ரேனிய இயற்கை எரிவாயு நிறுவனமான ‘பரிஸ்மா’வின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றிய போது ஹண்டர் பைடன் பெற்ற பணம், அதற்கான வரிகள் குறித்து விசாரணை நடந்தது. நவம்பர் 2022 இடைக்காலத் தேர்தல்களில் செனட்டின் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சி மீண்டும் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து, ஹண்டர் பைடன் உட்பட ஜோ பைடனின் குடும்பத்தினர் மீதான விசாரணையை முன்னெடுத்துச் செல்லத் தயாராயினர்.

ஒபாமாவின் ஆட்சியில் ஜோ பைடன் துணை அதிபராக பதவி வகித்த காலத்தில் உக்ரைன் மீதான அமெரிக்கக் கொள்கையில் முக்கிய நபராகவும் இருந்தார். அப்பொழுது உக்ரேனிய எரிசக்தி நிறுவனத்தின் சார்பாக அவரது மகன் ஹண்டர் பைடன் இயக்குநர்கள் குழுவில் அங்கம் வகித்தார். அப்பொழுது நடந்த பண பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்புகள், தந்தையின் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தது 2020 தேர்தலில் புதிய கவனத்தைப் பெற்றது. ஹண்டர் பைடன் மீது உக்ரைன் விசாரணையை நடத்த ட்ரம்ப் கட்சியினர் தீவிரமாக, தன்னுடைய அதிகாரத்தால் உக்ரேனிய அரசைத் தடுத்து நிறுத்தியதாக பைடன் மீது குற்றம் சாட்டினர் குடியரசுக்கட்சியினர். உக்ரைன் அரசிற்கும் அதிபர் ஜோ பைடனுடக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தத்திற்குத் தொடர்புடையதாகக் கருதும் FD-1023 ஆவணத்தை காங்கிரசில் சமர்ப்பிக்க எஃப்பிஐக்கு அழுத்தம் கொடுத்தனர்.

மார்ச் 2023ல் சிறப்பு வழக்கறிஞர் டேவிட் வெயிஸ் ஹண்டரின் வழக்குகள் மீதான விசாரணையைத் துவங்கினார். ஏப்ரல் 2023ல், ஹண்டர் பைடன் மீதான விசாரணையை ஆளும் பைடன் நிர்வாகம் தவறாகக் கையாளக்கூடும். அதன் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக IRSன் மேற்பார்வையாளர் சட்டமியற்றுபவர்களிடம் கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம், பைடனுக்கும் இந்த வரி ஏய்ப்பில் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தது.

மே 2023ல் IRSன் மேற்பார்வையாளர் ஹண்டர் மீதான விசாரணையில் இருந்து நீக்கப்பட்டார். ஜூன் 5, 2023 அன்று ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் காமர், அதிபர் ஜோ பைடனுடன் தொடர்புடையதாகக் கருதும் FD-1023 ஆவணத்தை காங்கிரசில் சமர்ப்பிக்க எஃப்பிஐ இயக்குநர் கிரிஸ் ரே மறுத்ததற்காக அவர்மீது அவமதிப்பு விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்தார்.

ஜூன் 20, 2023 அன்று ஹண்டர் பைடன் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார். ஜூன் 22, 2023 அன்று இரண்டு IRS அதிகாரிகள் இந்த வழக்குகளில் ஆளும் அரசின் இடையூறு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கினர். அதிபர் பைடன் மீது பதவி நீக்க விசாரணை கொண்டுவர குடியரசுக்கட்சியினர் தீர்மானித்தனர். அதிபர் பைடனுக்கும் ஹண்டரின் நிறுவனங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நிரூபணம் செய்தாலும், தந்தையின் பெயரை வைத்து தன்னுடைய அலுவல் வேலைகளை முடித்துக் கொண்டதாக ஹண்டரின் மேல் குற்றங்கள் சுமத்தப்பட்டது.

இப்படியே தொடர்ந்த விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்துபவராக இருந்தபோது சட்டவிரோதமாக துப்பாக்கியை வாங்கி வைத்திருந்ததற்காக ஜூன் மாதம் ஜூரியால் தண்டிக்கப்பட்டார் ஹண்டர். அவருடைய வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, துப்பாக்கியை அவர் பயன்படுத்தவில்லை. “நான் நடுவர் மன்றத்தின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். அதிபராக அவரை மன்னிக்க மாட்டேன் ” என்று பைடன் தனது மகனுக்கு மன்னிப்பு வழங்குவதை அன்று நிராகரித்தார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் ‘கரீன் ஜீன்-பியர்’ குறைந்தது ஏழு முறையாவது அதிபர் பைடன் தனது மகனை மன்னிக்க மாட்டார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பரில், குறைந்தபட்சம் $1.4 மில்லியன் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கான திட்டத்தின் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஹண்டர். வரி வழக்கில், 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொண்டார். மேலும் துப்பாக்கி குற்றச்சாட்டுகளுக்கு 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலையில் ஹண்டர் குறுகிய கால தண்டனையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் சிறை நேரத்தை முழுவதுமாகத் தவிர்த்திருக்கும் சாத்தியங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 12, 2024 அன்று டெலவேரில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டிலும், டிசம்பர் 16, 2024 அன்று கலிஃபோர்னியாவில் வரி ஏய்ப்புக்கான குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்படவிருந்தது.

அதிபராக இருந்தபோது ட்ரம்ப் செய்த அனைத்து சட்ட மீறல்களுக்கும் பரந்த விலக்கு அளிக்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ,”யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்று ஜூலை மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பைடன். அதை மேடைகள்தோறும் பேசியும் வந்தார். திடீரென, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வெள்ளை மாளிகையின் அறிக்கையில், தனது மகன் ஹண்டர் பைடனுக்கு “நிர்வாக கருணை” வழங்குவதற்கான தனது அதிரடி முடிவை அறிவித்தார்.

இப்பொழுது தனது நிலைப்பாட்டின் மாற்றத்தை எவ்வாறு அதிபர் நியாயப்படுத்துவார்?

“காங்கிரஸில் உள்ள எனது அரசியல் எதிரிகள் பலர் என்னைத் தாக்கவும், தேர்தலில் எதிர்க்கவும் குற்றச்சாட்டுகளைத் தூண்டினர். வழக்குகளின் உண்மைகளை ஆராயாமல் ஹண்டர் என் மகன் என்பதால் மட்டுமே அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அது தவறு. எனது நற்பெயருக்குச் சேதம் விளைவிப்பதற்காக அரசியல் எதிரிகளால் என் மகன் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் இது. நீதி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன் நான். ஆனால், அதனுடன் போராடியதால் அநீதிக்கு வழிவகுத்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தையாவும் அதிபராகவும் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அதிபர் பைடன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினரின் தண்டனையை மன்னிக்கவோ, மாற்றுவதோ ஒன்றும் புதிதல்ல. பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது.

2021ல் பதவியிலிருந்த தனது இறுதி வாரங்களில், ட்ரம்ப் சுமார் 100 மன்னிப்புகளையும் மாற்றங்களையும் வழங்கினார். அவர் மன்னிப்பு வழங்கியவர்களில் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னரின் தந்தை சார்லஸ் குஷ்னரும் அடங்குவார். 2005ல், குஷ்னருக்கு வரி ஏய்ப்பு, சட்டவிரோத பிரச்சார நன்கொடைகள் மற்றும் சாட்சிகளைச் சேதப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதிலிருந்து மன்னிக்கப்பட்டவர், வரவிருக்கும் நிர்வாகத்தில் பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றுவதற்காக ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவதற்குள், தனது ஒன்றுவிட்ட சகோதரர் ரோஜரை மன்னித்தார். 1985ம் ஆண்டில், ரோஜர் கிளிண்டன் ஜூனியர் போதைமருந்து தொடர்பான குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு விலக்கு அளித்தார் பில் கிளிண்டன்.

Presidential Pardons Through the Years
 PresidentYears in OfficePardons
 Franklin D. Roosevelt1933-19452,819
Harry S. Truman1945-19531,913
Dwight D. Eisenhower1953-19611,110
Woodrow Wilson1913-19211,087
Lyndon B. Johnson1963-1969960
Richard Nixon1969-1974863
Calvin Coolidge1923-1929773
Herbert Hoover1929-1933672
Theodore Roosevelt1901-1909668
Jimmy Carter1977-1981534
John F. Kennedy1961-1963472
Bill Clinton1993-2001396
Ronald Reagan1981-1989393
William H. Taft1909-1913383
Gerald Ford1974-1977382
Warren G. Harding1921-1923383
William McKinley1897-1901291
Barack Obama2009-2017212
George W. Bush2001-2009189
Donald J. Trump2017-2021143
George H.W. Bush1989-199374

“அரசியல் விளையாட்டிற்காக என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக அவமானப்படுத்த, எனது அடிமைத்தனத்தின் இருண்ட நாட்களில் நான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டேன். எனக்கு வழங்கப்பட்டிற்கும் மன்னிப்பை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் என் வாழ்க்கையை நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுபவர்களுக்கு உதவ அர்ப்பணிப்பதாக” ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.

“இந்த மன்னிப்பு அமெரிக்க ஜனநாயக அமைப்பின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மேலும், சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்ற கருத்து பொய்த்து விட்டது. தேர்தலும் முடிந்து விட்ட நிலையில் இனி பைடனின் அரசியல் வாழ்க்கையும் முற்றுப் பெற்று விடும். இங்கே அவர் ஒரு தந்தையாகத் தன் கடமையைச் செய்திருக்கிறார். ஆனால், சட்டங்களின் தேசமாக அமெரிக்கா இப்போது எங்கே நிற்கிறது என்ற மிகப் பெரிய கேள்வியை இது எழுப்புகிறது.

 ஜனவரி 6 கிளர்ச்சியாளர்களை மன்னிக்கும் ட்ரம்ப்பின் தொடர்ச்சியான நகர்வுகளைப் பார்க்கும்போது, சட்டம் சில நபர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது அல்லது வேலை செய்யாது” என்று அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ‘எரிக் ஹாம்’ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கர்கள் தங்கள் அரசியல்வாதிகள் சரியானவர்களாக, குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தரத்தைப் பூர்த்தி செய்யத் தவறியதன் மூலம், நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான வாய்ப்பை பைடன் தவறவிட்டு விட்டார்.

அடுத்த வருடம் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் மன்னிப்பு நடக்கும். அதைக் கேட்கும் துணிவோ, எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட சந்தர்ப்பம் அளிக்காமல் அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார் பைடன்.

சட்டம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல. சாமானியனுக்கு மட்டுமே. குற்றம் செய்தவர்களைப் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டிய நீதி தேவதையின் கண்களை இறுக மூடி, அதிபரானாலும் தான் ஒரு தந்தை என்று நிரூபித்து விட்டார்.

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று தான் கடந்து செல்ல வேண்டும் போல!

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...