சொல்வனம் இதழ் - 338ல் வெளிவந்த என்னுடைய கட்டுரை சுங்க வரி கயக்கம் – கட்டணங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? அமெரிக்க அரசின் புதிய சுங்க வரியைப் பற்றி விவரிக்கிறது.
இருநாடுகளுக்கிடையே வர்த்தகம் என்பது மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு காலம்காலமாக நடைபெற்று வரும் செயலாகும். இருப்பினும், வர்த்தக கூட்டாளர்களிடையே எப்போதும் இணக்கமான முறையில் வர்த்தகங்கள் நடத்தப்படுவதில்லை. கொள்கைகள், புவிசார் அரசியல், போட்டி மற்றும் பல காரணிகள் வர்த்தக கூட்டாளர்களை மகிழ்ச்சியற்றவர்களாக மாற்றக்கூடும். அப்படியொரு சூழலைத் தான் இன்று தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பேசுபொருளாக்கியிருக்கிறார் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்.
அரசாங்கங்கள் தங்களுடன் உடன்படாத வர்த்தக கூட்டாளர்களைக் கையாளும் வழிகளில் ஒன்று தான் ‘சுங்கவரி’. ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்று 2020ல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான வரியை ஏற்றினார் அப்போதைய அதிபர் ட்ரம்ப். அதை அன்றைய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்த்தாலும் ஆட்சிக்கு வந்த பைடன் அரசும் அதையே தொடர்ந்தது தான் முரண்! தற்பொழுது அதே பாணியில் கனடா, மெக்சிகோ நாடுகளும் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி அதிரடியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி தான் ‘இறக்குமதி வரி’/ ‘டாரிஃப்’/’சுங்கவரி’ எனப்படுவது. அதே போல, ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீதான ஏற்றுமதி வரிகளும் உள்ளன. இருப்பினும் இவை அரிதானவை. அமெரிக்கா ஏற்றுமதி வரிகளை அனுமதிப்பதில்லை; அரசியலமைப்பு (பிரிவு I, பிரிவு 9) அவற்றைத் தடை செய்கிறது.
வரிகள் பொதுவாக ஒரு நாட்டின் வருவாயை அதிகரிக்கவும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும், மற்றொரு நாட்டின் மீது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவும் விதிக்கப்படுகின்றன. வர்த்தக கூட்டாளியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், பொருளாதாரத் தாக்குதலைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படலாம் என்பதால், வெளியுறவுக் கொள்கையின் நீட்டிப்பாகவும் சுங்க வரிகள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, உலகின் பெரும்பகுதி ரஷ்யப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலமாகவும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமாகவும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஜூன் 2022ல் ரஷ்ய இறக்குமதிகள் மீதான வரியை 35% ஆக உயர்த்தினார் அதிபர் பைடன். வரிகளைப் பயன்படுத்தி ஒரு போட்டி நாட்டை அழுத்தம் கொடுக்கும் முயற்சி, ‘வர்த்தகப் போர்’ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் யுத்தி. பல நூற்றாண்டுகளாக ஏதேனும் ஒரு வடிவத்தில் வரிகள் இருந்து கொண்டுதான் வருகின்றன.
அதன் அடிப்படையில் தான் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டுப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதே நாட்டைப் பாதிக்கும் விஷயங்களுக்கு ஒரு முழுமையான தீர்வாக இருக்கும் என்று ட்ரம்ப் கருதி அதைச் செயல்படுத்தியுள்ளார். “வரிகள் உலக அமைதியை ஊக்குவிக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பெரிய விஷயம் இது தான்” என்று தேர்தல் களத்திலும் கூறியிருந்தார். பிரச்சாரத்தின் போது, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், போதைப்பொருள் சந்தை , குறிப்பாக ‘ஃபெண்டானில்’ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க எல்லைக்குள் தொழிற்சாலைகளை நிறுவ வெளிநாட்டு வணிகங்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு வழிமுறையாக வரிகளைப் பயன்படுத்துவதை ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளையும், கனேடிய எண்ணெய் மீது 10 சதவீத வரியையும், சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியையும் விதிக்கும் மூன்று நிர்வாக உத்தரவுகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதற்குப் பதிலடியாக கனடா, மெக்சிகோ, சீனாவும் எதிர் வரிகளுடன் எதிர்வினையாற்றுவதாகக் கூறின. இதனால் அந்நாடுகளிலிருந்து அமெரிக்கா அதிகம் இறக்குமதி செய்யும் கார்கள், எரிபொருள், கணினிகள், மின் சாதனங்கள், உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
கனடாவின் பிரதம மந்திரி ட்ரூடோ, அமெரிக்க இறக்குமதிகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறி தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். பெய்ஜிங் சமீபத்திய வரியை விமர்சித்தது. பிப்ரவரி 10 முதல் இறக்குமதி செய்யும் அமெரிக்கப் பொருட்களின் மீது சீனா எதிர் வரிகளை விதித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதும் வர்த்தகப் போருக்கு இட்டுச்செல்லுமோ? பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்குமோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
அமெரிக்க இறக்குமதிகளில் கிட்டத்தட்ட $1.3டிரில்லியனுக்கும் அதிகமானவை, கனடா, சீனா மற்றும் மெக்சிகோவிலிருந்து வருகின்றன. ப்ளூம்பெர்க் பொருளாதார பகுப்பாய்வின்படி, புதிய வரிகள் ஒட்டுமொத்த அமெரிக்க இறக்குமதியை 15 சதவீதம் குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட ‘வரி அறக்கட்டளை’ ஒன்று, இறக்குமதி வரிகளால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் $100 பில்லியன் கிடைக்கும் என்று மதிப்பிட்டாலும், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கும் அபாயமும், வணிகங்களுக்கான செலவுகள் அதிகரித்துப் பலரும் பணிகளை இழக்கவும், நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுக்கும் நிலைமையும் உருவாகும். இது அரசின் மீது குறிப்பிடத்தக்கச் செலவுகளையும் சுமத்தக்கூடும் என்று கணித்திருக்கிறது.
இப்புதிய வரிச்சுமைகளால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சில துறைகளான ஆட்டோமோட்டிவ், எரிசக்தி, உணவுத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். கனடாவும் மெக்சிகோவும் 70 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்குவதால், எரிவாயு விலைகள் ஒரு கேலனுக்கு 50 சென்ட் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளிலிருந்தும் ஆட்டோ பாகங்களை இறக்குமதி செய்வதால், கார்கள் மற்றும் பிற வாகன உற்பத்திகளும் பாதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் சுமார் பதினாறு மில்லியன் கார்களில் சிலவற்றின் விலையில் $3,000 வரை அதிகரிக்கலாம்.
அமெரிக்க காய்கறி இறக்குமதியில் 60 சதவீதத்திற்கும் மேலாகவும், அனைத்துப் பழங்கள் மற்றும் கொட்டைகள் இறக்குமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலாகவும் மெக்சிகோவிலிருந்து வருவதால் மளிகைப் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.
இருப்பினும், ஜெர்மனி, ஜப்பான், யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பல தொழில் மயமான பொருளாதாரங்களை விட அமெரிக்கா வெளிநாட்டு வர்த்தகத்தை குறைவாகவே நம்பியுள்ளது. நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பங்கு மட்டுமே உள்ளது. ஆனால் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வர்த்தகம் சுமார் 70 சதவீதத்தை ஈர்ப்பதால், ட்ரம்ப்பின் சமீபத்திய இறக்குமதி வரிகள் இருநாடுகளையும் மிகவும் கடுமையாகவே பாதிக்கும்.
கார்கள், இயந்திரங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட மெக்சிகோவின் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை வடக்கு நோக்கிச் செல்கின்றன. மெக்சிகோவின் வடக்கு எல்லையில் உள்ள தொழில்துறை மாநிலங்களான சிவாவா, கோஹுயிலா, நியூவோ லியோன் மற்றும் பஜா கலிஃபோர்னியா ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் $200 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கணினிகள், மின்னணுவியல், போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் பிற தயாரிப்புகளை அனுப்புகின்றன.
இந்தப் பொருட்களுக்கு ஒருதலைபட்சமாக 25 சதவீத வரி விதிப்பது மெக்சிகோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சுமார் 16 சதவீதம் குறைக்கக்கூடும் என்று ‘ப்ளூம்பெர்க்’ பொருளாதாரம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ தான் உற்பத்தி செய்யும் கார்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்புகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்வதால் மெக்சிகோவின் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
இறக்குமதி வரிகள் மெக்சிகோவின் எரிசக்தித் துறையையும் அச்சுறுத்துகிறது. மெக்சிகோவின் பெட்ரோலிய ஏற்றுமதியில் சுமார் 60 சதவீதத்தை அமெரிக்கா பெறுகிறது. இதில் பெரும்பாலானவை அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய் ஆகும். அதே நேரத்தில், அமெரிக்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் மெக்சிகோ முதலிடத்தில் இருக்கிறது. அதன் உள்நாட்டுத் தேவையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இதனை நம்பி உள்ளதால் எரிபொருள் விலை ஏறி மெக்சிகோவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
கனடாவும் இதேபோன்ற சவாலை எதிர்கொள்கிறது. கனடாவின் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களை அமெரிக்கா வாங்குகிறது. புதிய கட்டணங்களின் கீழ், கனடாவின் எரிசக்தித் துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.
இதன் காரணமாகவே ‘அங்கிள்சாமி’ன் கை மேலோங்கியுள்ளது.
இந்த இருநாடுகளை ஒப்பிடுகையில் சீனா அமெரிக்காவைச் சார்ந்திருப்பது குறைவாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, பெய்ஜிங் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளதால், அதன் பொருளாதாரத்தில் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை படிப்படியாகக் குறைத்துள்ளது. முந்தைய வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க-சீன வர்த்தகம் குறைந்துள்ளது.
அடுத்து என்ன நடக்கலாம்?
ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பும் மேலும் பலவீனமடையக்கூடும். அமெரிக்க ஏற்றுமதிகளின் விலை உயரும். பலவீனமான ‘யுவான்’ ஏற்கனவே சீன உற்பத்தியாளர்களுக்கு பலமான அடியைத் தந்துள்ளது. பெசோவும் கனேடிய டாலரின் மதிப்பும் சரிவைச் சந்திக்கும்.
கூடுதலாக, கனடா, சீனா, மெக்சிகோ மூன்றும் அமெரிக்கா மீது சமமான வரிகளை விதிக்கலாம். மெக்சிகன் அதிபர் ‘கிளாடியா ஷீன்பாம்’ மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு இறக்குமதி வரிகளை விதிக்கும் என்று கூறியுள்ளார்.
நாடுகள் பதிலடி கொடுப்பது இது முதல் முறை அல்ல. 2018ஆம் ஆண்டில், எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது ட்ரம்ப் வரிகளை விதித்த பிறகு மெக்சிகோவும் கனடாவும் $15 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதித்து எதிர்ப்பு காட்டியது. அதேபோல், 2018 முதல் 2019 வரை சீனா, அமெரிக்காவின் வரிகளை கடுமையாக எதிர்த்தபோது அமெரிக்கா ஆண்டுக்கு $20 பில்லியன் விவசாய ஏற்றுமதியை இழந்தது.
கனடா அல்லது மெக்சிகோ தற்பொழுது பதிலடி கொடுத்தால், அதிகம் பாதிக்கப்படப் போவது அமெரிக்க எரிபொருள் ஏற்றுமதியாளர்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள். மெக்சிகோவில் தயாராகும் மின்சாதனங்கள், வண்டிகளில் பயன்படுத்தப்படும் பில்லியன் டாலர் மதிப்புள்ள செமிகண்டக்டர் சில்லுகள், மின் கூறுகள் நியூ மெக்சிகோவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல், டெக்சாஸ் மாநிலம் மெக்சிகோவிற்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான சில்லுகள், ஆட்டோ பாகங்கள் மற்றும் மின் உபகரணங்களை அனுப்புகிறது. ஓஹையோவின் $5 பில்லியன் மதிப்புள்ள ஆட்டோ மற்றும் உலோக ஏற்றுமதியும், ‘மெயின்’ மாநிலத்தின் $320 மில்லியன் மரங்கள் மற்றும் காகித ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
தற்பொழுது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இரு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரியை அமல்படுத்துவதை அமெரிக்கா 30 நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரி பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வந்துள்ளது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், பொம்மைகள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் மற்றும் கணினிகள் போன்றவற்றின் விலை உயர்வை அமெரிக்க நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது, தனது ‘கட்டணத் திட்டம்’ பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் மறுத்தார். அமெரிக்க நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுத்துப் பொருட்களை வாங்க முடியுமா என்று 2024 செப்டம்பரில் ஏபிசி நியூஸ் அவரிடம் கேட்டபோது, “பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வரும் சீனாவும் அனைத்து நாடுகளும் தான் வரிச்சுமையை ஏற்றுக் கொள்ளும்” என்று பதிலளித்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரும் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் ரொனால்ட் ரீகனின் பொருளாதார ஆலோசகருமான ஸ்டீவ் ஹான்கி, முழு வரி/கட்டணச் செலவையும் வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் அல்ல. “கட்டணங்கள்/வரிகள் என்பது அமெரிக்கர்கள் மீது சுமத்தப்படும் ஒரு மறைமுக வரி” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இறக்குமதி வரி வட அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிப்பது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வளர்ச்சி, பணவீக்கம், முதலீட்டாளர் மற்றும் வணிக நம்பிக்கையை அச்சுறுத்துகின்றன” என்று ‘பீல் ஹன்ட்’ பொருளாதார வல்லுநர்கள் ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தவே சுங்க வரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டாலும் பாதிக்கப்படுவது நுகர்வோர் தான் என்பது கண்கூடு. இதற்கு முன்பு 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் பொருளாதாரங்களைப் பாதுகாக்க இத்தகைய வரிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய கட்டணப் போரால் தூண்டப்படும் பணவீக்க அழுத்தத்திலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது என்பது தான் இன்றைய யதார்த்தமான நிலைமை.
கோட்பாட்டளவில், வரிகளை விதிப்பது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். இதேபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர ஊக்குவிக்கப்பட்டால், அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். உதாரணமாக, சலவை இயந்திரங்கள் மீது 20-50 சதவீத வரிகளை விதித்த பிறகு, முன்னர் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படாத ‘டென்னசி’யில் உள்ள ‘கிளார்க்ஸ்வில்’ மற்றும் ‘சவுத் கரோலினா’வில் உள்ள ‘நியூபெர்ரி’ பகுதிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்திய சுங்க வரி கொள்கையும் அமெரிக்காவில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களை அமைக்க ஊக்குவிக்கும் என்று அமெரிக்க நிர்வாகம் நம்புகிறது.
தற்போதைய கேள்வி வரிகள் உள்ளதா இல்லையா என்பது அல்ல. ஆனால் இந்த வரிகளால் யார் பயனடைகிறார்கள் என்பதுதான். ட்ரம்ப் போட்டியிட்டபோது, அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஜனநாயகக் கட்சியினர் அவர்களைக் கைவிட்டுவிட்டதாகவும் கூறினார். ஜனநாயகக் கட்சியினர் ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைகளாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்வது நியாயமான வாதம் (வருமான விநியோகம் மற்றும் ஊதியம் போன்ற அடிப்படை நடவடிக்கைகளின் அடிப்படையில்) என்று மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியரும் இணை இயக்குநருமான ராபர்ட் போலின் கூறியுள்ளார்.
மேலும் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள் தொழிலாளர்களை ஆதரிக்கும் வழியாகுமா என்றால் அப்படி இல்லை என்றும் கூறுகிறார். “ட்ரம்ப்பின் அணுகுமுறை முதலாளித்துவ சார்புடையது. வரிகளை அமல்படுத்துவதின் நோக்கம், தொழிலாள வர்க்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவைப் பாதுகாப்பதற்காகத் தான். வர்த்தகம், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு அமெரிக்க முதலாளிகள் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளாத சூழலை நிறுவுதல் ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் இது முதலாளித்துவ சார்புடையதாகிறது” என்று ராபர்ட் போலின் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
இது எவ்விதத்தில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அனுகூலமாக இருக்கும்?
“அதிக வருமானம் உள்ளவர்கள், நிறுவனங்களின் மீதான வரிகளைக் குறைப்பது,விதிமுறைகளை நீக்குவது தான் ட்ரம்ப் அரசின் முக்கிய கொள்கையாகும். “நாங்கள் கட்டணத் தடைகளை அமைத்து அமெரிக்கச் சந்தைக்கான அணுகலைக் கட்டுப்படுத்தப் போகிறோம். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலை உயரும்” என்று கூறி, மறுபுறம், “நாங்கள் தொழிற்சங்கத்திற்கு எதிராக இருக்கிறோம். அதிக வருமானம் உள்ளவர்கள் மீதான வரிகளைக் குறைத்து, உழைக்கும் மக்களை ஆதரிக்கும் மற்றும் வருமானத்தை மறுபகிர்வு செய்யும் அரசாங்கத் திட்டங்களைக் குறைக்கப் போகிறோம்” என்று கூறி தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது இந்த அரசு.
ஆக,கட்டணங்கள்/வரிகள் என்பது மிகவும் பரந்த தொகுப்பிற்குள் உள்ள ஒரு கொள்கை கருவியாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்குள் கூட, கட்டணங்கள் மட்டுமே ஒருவர் பயன்படுத்தக்கூடிய கொள்கை கருவி அல்ல. உதாரணமாக, பைடன் நிர்வாகம் அமெரிக்க உற்பத்தி, பசுமை முதலீடுகள் மற்றும் பசுமை தொழில்களை ஊக்குவிக்க பயனுள்ள சில தொழில்துறை கொள்கைகளை இயற்றியது. அவை கட்டணங்கள் அல்ல. ஆனால் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கான மானியங்கள். ‘பணவீக்கக் குறைப்புச் சட்டம்’ பைடன் நிர்வாகம் ஆரம்பத்தில் முன்மொழிந்த ‘பில்ட் பேக் பெட்டர்’ திட்டத்தின் வேறு பதிப்பாகும். அதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் மானியங்களைப் பெற விரும்பினால் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும், பயிற்சித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் பயிற்சி அளிக்கவும் நிர்பந்திக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மற்றொரு வழி இது. இதுவரையில் ட்ரம்ப் அரசு அதற்கான முன்னெடுப்பைத் தொடங்கவில்லை. தொடங்குமா? இந்த அரசு தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!
பில் கிளிண்டனின் அரசில் தொழிலாளர் செயலாளராக இருந்த காலத்தில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (NAFTA) ஆதரித்த ராபர்ட் ரெய்ச், “ட்ரம்ப் தனது அதிகாரத்தையும் கணிக்க முடியாத தன்மையையும் நிரூபிக்க இறக்குமதி வரிகளைப் பயன்படுத்துகிறார். அமெரிக்கத் தொழிலாளர்களுக்காக இதைச் செய்வதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர் தனக்காகவும், உலகின் செல்வத்தைச் சூறையாடும் தன்னலக்குழுவுக்காகவும் மட்டுமே செய்கிறார்” என்று கூறியுள்ளார்.
பணமும் அதிகாரமும் கட்டண வரிகளும் தொழிலாளர் நலனை கருத்தில் கொள்ளுமா?
No comments:
Post a Comment