Wednesday, August 29, 2012

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு

பெண்களின் வாழ்க்கையில் பெற்றோரைப்  பிரிந்துச் செல்லும் நேரம் முன்பு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு என்றிருந்த நிலை மாறி, இன்று படிக்கும் வயதிலேயே செல்கின்ற நிலைமை ஆகி விட்டது. ஒரு சிலர், வேலை நிமித்தமாகவும் பிரிகிறார்கள். எனக்கும் என் அன்பு மகள் படிக்க எங்களை விட்டு சிறிது தொலைவு போகப்போகிறாள் என்று ஜனவரி மாதம் முதல் தெரிந்தாலும் அவளை கல்லூரியில் விட்டு விட்டு வரும் வரை அதன் பாதிப்பு தெரியவில்லை.

அவள் வீட்டில் இருக்கும் வரை ஒரு நல்ல தோழியாக, அன்பு மகளாக, பொறுப்புள்ள அக்காவாக, அனைவரிடமும் பாசமுள்ள பெண்ணாக, எங்களுக்குப் பெருமை தேடி தந்த பெண்ணாக வளர வளர, இன்னும் சில மாதங்களில் படிக்கப் போய் விடுவாள், பிறகு அவளுடைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து விடும் என்ற நினைப்பே மலைப்பாகிவிட்டது எனக்கு.

தேர்வுகள் முடிந்த மே மாதம் முதலே, கல்லூரிக் கனவுகளில் அவள் மூழ்க, அவளைப் பிரிய போகிறோம் என்ற நினைவு என்னை வாட்டத் துவங்கி விட்டது. கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் பொழுது நானும் அவளும் சேர்ந்து பேசிக் கொண்டே போனது, எனக்கு ஒன்று என்றால் பதறிப் போய் என்னை கவனித்துக் கொண்டது, தன் தம்பி தப்பு செய்தால் அவனை அன்புடன் கடிந்து கொண்டது, விடுமுறைகளிலும், நான் இல்லாத நேரங்களிலும் அவனை ஒரு தாய் போல் பார்த்துக் கொண்டது, வீட்டு வேளைகளில் எனக்கு உதவியாக இருந்தது, நான் சமைத்த உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டது, சாதம் வைத்து கீரை பொரியல் செய்து விடு என்று சொன்னவுடன் சிரத்தையுடன் செய்தது, காய்கறிகளை நறுக்கி வைத்து விடு என்றவுடன் அழகாக ஒரே மாதிரி வெட்டி வைத்திருப்பது, வீட்டை சுத்தம் செய்து வைப்பது, தம்பிக்கு பியானோ வகுப்பு எடுப்பது, அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களை பார்த்துக் கொள்வது என்று எங்கள் தெருவின் செல்லப் பெண்ணாகவே வளர்ந்தாள்.

அவளுடைய எண்ணங்களை ஒத்த நல்ல தோழிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் என்று ஒரு புதிய உலகத்தை அவள் மூலமாக நாங்களும் அனுபவித்தோம்.

எனக்குத் தெரிந்து ஏழாம் வகுப்பிலிருந்து பொறுப்புள்ள பெண்ணாக மாறி, தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு வந்து விட்டது. அதைத் தவிர, இசை, நடனம், படிப்பு என்று பல வழிகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள். நான் சோர்வாக இருக்கும் நாட்களில் என்னை நன்கு புரிந்து கொண்டு, ஒரு நல்ல தோழியாக பக்கபலமாகவும், ஆதரவாகவும் இருந்து என் மகளா, என் தோழியா, என் அம்மாவா என்று பல கணங்களில் என்னை திக்குமுக்காட வைத்தவள்.

ஜூலை மாதம் முதலே கல்லூரிக்குத் தேவையான சாமான்களை வாங்கி, எல்லாவற்றையும் பேக் செய்து வைத்து விட்டு, கல்லூரிச் சென்றவுடன் அவளுடைய அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, மதிய உணவை அமைதியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கடைசி நிமிட அறிவுரைகளைச் சொல்ல, பத்திரமாக இரு, நன்றாக சாப்பிடு, ஒழுங்காக படி, நாங்கள் போய் வருகிறோம் என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு சொல்லும் பொழுதே உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள்.

அதைப் பார்த்தவுடன் நானும் அழ ஆரம்பிக்க, என் பையனும் எங்கே அவனுக்கும் அழுகை வந்து விடுமோ என்று வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டான். என் கணவரும் அவளுக்குச் சமாதானம் சொல்லி, மனம் கனத்து நாங்கள் வந்து விட்டாலும், கல்லூரியை விட்டு வெளியில் வந்தவுடன் பேசும் பொழுது கூட அவள் அழுது கொண்டிருந்ததை அவள் குரல் சொல்ல, அந்த நினைவிலேயே, ஊருக்கு நாங்கள் திரும்பி வந்து விட்டோம். வந்தவுடன் மீண்டும் கூப்பிட,அவளும் களைப்பாக இருந்தாள். போய் சீக்கிரம் தூங்கு எல்லாம் சரியாகி விடும் என்று அவளுக்கும் எனக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டு,

அடுத்த நாள் பேசினால் அன்றும் குரலில் உற்சாகம் இல்லை. சரியாகத்  தூக்கமே இல்லை என்றாள் :( புது இடம், புது மனிதர்கள், சாப்பாடு பழக்கம், சிறிது காலம் ஆகும், அது வரை பொறுமையாக இரு, கல்லூரி ஆரம்பித்தவுடன் உன் கவனம் படிப்பில் போனவுடன் சரியாகிவிடும் என்று அவளுக்கு சொன்னாலும், எனக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது. ஒரு வழியாக, திங்கட்கிழமை கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் அவளுடைய குரலில் பழைய உற்சாகம் வந்தது. ஸ்கைப் வழியாக அவளை பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. இரண்டுநாட்களில் நன்கு மெலிந்திருந்தாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இப்பொழுது அவளுக்கென்று ஒரு குரூப் அமைந்து விட்டதில் அவளுக்கு சந்தோஷம். அவள் பக்கத்து ரூமில் ஐஸ்வரியா என்று ஒரு இந்திய மாணவி, என்ன ஆன்ட்டி, நிவியை ரொம்ப மிஸ் பண்றீங்களா, அவளும் அப்படித்தான் என்று சொன்னாள்.

இதோ, இந்த வாரத்தில் நான்கு நாட்கள் கல்லூரி விடுமுறை. நான் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னவுடன் அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லாத வீடு வெறிச்சென்றிருக்கிறது. பழகச் சிறிது நாளாகும் என்று நினைக்கிறேன். என்னை தேற்றுவதற்காக என் மகனும், உனக்கு நானும் நிறைய உதவிகள் செய்கிறேன், நிவி மாதிரி கால் பிடித்து விடவா என்று கேட்கும் போதே...

அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகளானேன்... என்று நினைக்கத் தோன்றுகிறது.

8 comments:

  1. செல் ஃபோன், இனையம், ஸ்கைப் என வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் தூரங்களையும், எல்லைகளையும் அழித்து விட்டாலும் கூட அம்மாக்கள் இன்னமும் அன்றைக்கு இருந்த மாதிரியேதானிருக்கிறார்கள். :)

    குழந்தைக்கு வாழ்த்துக்கள். அம்மாவுக்கு...ஒரு பழைய கவிதை, சரியான வசன அமைப்பு மறந்து விட்டது...

    குழந்தை கடவுள் தந்த பரிசு
    தாய் பரிசாய் வந்த கடவுள்....

    :)

    ReplyDelete
  2. அருமையான கவிதை, சரவணன். நன்றி! ஏதோ போன்/SMS/SKYPE/internet என்று இருக்கப் போய் நிம்மதியாகப் போகிறது. இல்லையென்றால் மிகவும் கஷ்டமாகத் தான் இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. oru thaayin anbu manam purikirathu!!! ungal magalukku engal anbu vaazhththukkal!!!

    ReplyDelete
  4. மிக்க நன்றி, சுதர்சன். ஆஷாவும் இதை கடந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. அருமையாக விடுதியில் தங்கி படிக்கும் மகளின் பிரிவைப்பற்றி எழுதி இருக்கிறிர்கள்.
    சிலநேரங்களில் குழந்தைகள் நமக்கு தாயாக மாறி விடுவார்கள் உண்மை.
    ஸ்கைப் தான் நம் பிரிவு துன்ப்த்தை குறைக்கும் தேவதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி, கோமதி அரசு.

      Delete
  6. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி, மனோ சாமிநாதன்.

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...