Tuesday, September 4, 2012

ஆசிரியர் தினம்

மறைந்த ஜனாதிபதி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் நினைவாக இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது . எனக்குப் பிடித்த ஆசிரியைகள் எல்லாம் என் பள்ளி ஆசிரியைகள் தான். பள்ளி ஆசிரியர்கள் தான் மாணவர்களோடு அதிகம் பழகுகிறார்கள், மாணவர்களும் அவர்களுடன் மனதால் நெருங்குகிறார்கள். சில ஆசிரியர்களைப் பார்த்தவுடன் பிடித்து விடும், சிலருடன் பழக, பழகத்தான் பிடிக்கும். அதனால், அவர்கள் கற்றுத் தரும் பாடங்களையும் படிக்கும் ஆவல் வரும்! கல்லூரியில், ஆசிரியர்கள் ஏதோ கடமைக்கு வந்தோமோ, வகுப்பெடுத்தோமா என்றிருந்தார்கள். நம் படிப்பின் மேலும், நடத்தையின் மேலும் மிகுந்த அக்கறை காட்டியவர்கள் பள்ளி ஆசிரியர்களே. அதுவும் நடுநிலைப் பள்ளி வரை, எனக்கு நடனம் சொல்லிக் கொடுத்த சுகந்தி டீச்சர், சூசை ரத்தினம் டீச்சர், லூர்து டீச்சர், வகுப்பெடுத்த நிர்மலா டீச்சர், ஸ்டெல்லா சிஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் சிஸ்டர் எல்லாம் என்றும் நினைவிலிருக்கும் ஆசிரியர்கள். அந்த வயதில் ஆசிரியைகளுக்கு ரோஸ் பூ கொடுத்து நம் அன்பை வெளிப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆசிரியைகளும் மாணவிகளின் அன்பில் திக்கு முக்காடிப் போவார்கள்.

மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் எடுத்த கமலா டீச்சர், தமிழ் எடுத்த சுகந்தி டீச்சர், வரலாறு எடுத்த ரெஜினா டீச்சர், கணிதம் எடுத்த Ms .ஆக்னெஸ், உயிரியல் மற்றும் தாவரவியல் எடுத்த டீச்செர்களும் மற்றும் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்த ஒரு ஆசிரியையும் எனக்குப் பிடித்தவர்கள். பாடத்தின் மேல் பற்று வரச் செய்து, நன்கு படிக்க வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்தவர்கள். குழந்தைகளின் படிப்பில், வளர்ச்சியில் ஒரு ஆசிரியர் எவ்வளவு முக்கியமானவர் என்று புரிய வைத்தவர்கள். இவ்வளவு நல்ல ஆசிரியைகள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

அவர்கள் எங்கிருந்தாலும் என்னைப் போல் அவர்களை நினைத்துக் கொள்ளும் மாணவர்களும் உலகெங்கிலும் இருப்பார்கள்.

வாழ்க ஆசிரியர் தினம்!

No comments:

Post a Comment

அமரன்

'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பி...