Tuesday, September 18, 2012

விநாயகர் சதுர்த்தி

விநாயகனே  வினை தீர்ப்பவனே , வேழ முகத்தோனே ஞான முதல்வனே என்று சீர்காழி கோவிந்தராஜன் குரல் பல இடங்களிலும் இன்று ஒலித்துக்  கொண்டிருக்கும். ஆடி முடிந்து ஆவணி மாதம் வந்தாலே, விநாயகர் சதுர்த்திக்கான விழா களை கட்ட ஆரம்பித்து விடும். இந்த வருடம் என்னடாவென்றால் புரட்டாசியும் வந்து விட்டது. இப்போது தான் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இது தான் பிள்ளையார் சுழி, வரப் போகின்ற கொலு, தீபாவளி, ஐயப்பன் விரதம், வைகுண்ட ஏகாதேசி, பொங்கல் என்று மதுரையில் விழாக்கோலம் ஆரம்பமாகிவிடும். ஒவ்வொரு மாதமும் இனி திருவிழா மாதங்கள் தான். மதுரை மதுரை தான்:) அதுவும்  அரசமரம் பிள்ளையார் கோவில் பக்கம் இருந்திருந்தால் விநாயகர் சதுர்த்தி அனுபவம் மிகவும் நன்றாகவே இருந்திருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அரசமரம் பக்கம் ஜேஜே என்று தள்ளுவண்டிக் கடைகள் முளைக்க ஆரம்பிக்கும். விநாயகர் சதுர்த்தி அன்றோ, அதற்கு முன் தினமோ பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்க அம்மா கடைக்குப் போக, நானும் பலமுறை அவருடன் போயிருக்கிறேன்.

வீட்டிலிருந்து மூன்றாம் தெருவில் ஆரம்பிக்கும் கூட்டமும், கடைகளும், அரசமரம் வரை நீண்டிருக்கும். அங்கேயே களிமண்ணால் செய்த பிள்ளையார், அழகான சிவப்பு நிற மணிகள் வைத்த கண்கள், மூஞ்சுருக்கு மட்டும் கருப்பு வண்ணம் அடித்து, பல உருவங்களில், பல சைசுகளில், பூணூல் போட்ட, இடம், வலம் என்று திசைகளில் தும்பிக்கையுடன் காட்சி தரும் பிள்ளையார் என்று வண்டிகளில் வைத்திருப்பார்கள். பேரம் பேசி எல்லோரும் தங்களுக்குப் பிடித்த பிள்ளையாரை வாங்கிக் கொண்டு போவார்கள். பெரிய பிள்ளையார், சுளகு காதுகளுடன் ஜம்மென்று நடுவில் இருக்க, அவரைச் சுற்றி குட்டி குட்டி பிள்ளையார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அம்மாவுக்குப் பிடித்த பிள்ளையார் ஒன்று வாங்கி, பக்கத்து கடையிலேயே ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, நவ்வாப்பழம், மாம்பழம், விளாம்பழம் (இதை தரையில் உருட்டிப் போட்டுப் பார்த்து வாங்குவார்கள். நல்ல எடையுடன் ஒரே இடத்தில் இருந்தால் நல்ல பழம், காதில் வைத்து ஆட்டிப் பார்த்து லொட, லொடவென்று சத்தம் வருகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்), தேங்காய், வாழைப்பழம், வெத்திலை, பாக்கு, வாழைக் கன்றுகள், அருகம்புல், எருக்கம்பூ மாலை, பூக்கள், செம்மண் உருண்டை, வாழை இலை, நாட்டுச்சக்கரை, பொரி, அவல், பொரிகடலை, கடலை என்று கூடை கனக்க வாங்கிகொண்டு வருவோம். எல்லா மக்களும் பேரம் பேசி வங்கி கொண்டு போவது தான் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். இப்ப என்னம்மா சொல்றே, வேணுமா வேண்டாமா என்றவுடன் பணிந்து சொல்ற விலைக்கு வாங்குபவர்களும், ஏன், கொஞ்சம் விலைய கொறைச்சு குடுத்தா தான் என்னா என்று எதிர் கேள்வி கேட்பவர்களும் என்று சுவாரசியமாக இருக்கும். வியாபாரிகளுக்கும் நன்கு தெரியும். எப்படியும் மக்கள் வாங்கித் தான் ஆகணும் என்று முடிந்தவரை லாபம் பார்க்க நினைப்பார்கள். பேரம் பேசியே பழகிய மக்களும் முடிந்தவரை மல்லுக்கு நிற்பார்கள். அந்த சிறிய இடத்தில் மழைக்கு முளைத்த காளான்கள் மாதிரி பல கடைகளும், ரோட்டில் போகும் வாகனங்களும், மக்கள் கூட்டமும், தெரிந்தவர்களைப் பார்த்தவுடன் சுற்றுப்புறம் மறந்து குசலம் விசாரிக்கின்ற கூட்டமும் என்று வண்ணமாக இருக்கும். மக்களின் முகத்தில் ஒரு வித சந்தோஷமும் நன்கு தெரியும்.


பூஜை தினத்தன்று, வாசல் தெளித்து, தண்ணீரில் கரைத்த செம்மண் உருண்டையை வாசலில் அழகாக இழுத்துக் கொண்டே வர, சிறிது காய்ந்ததும், அதன் மேல் கோலம் போட, அந்த நிமிடமே, வீட்டுக்கு ஒரு விழா களை வந்து விடும்.அம்மா பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி விக்கிரகங்களையும் சுத்தமாக விளக்கி விட்டு, படங்களையும் துடைத்து விட்டு, மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி வைக்க, அந்த இடமும் பளிச்சென்று இருக்கும். எல்லா சுவாமி படங்களுக்கும், விக்கிரகங்களுக்கும் பூக்கள் வைத்து பார்க்கவே பளிச் சென்றிருக்கும். தரையில் சின்னக் கோலம் போட்டு, உட்காரும் பலகை மேல் அருகம்புல் பரப்பி, அதன் மேல் புதிதாக வாங்கிய பிள்ளையார் அழகாக உட்கார்ந்திருப்பார். அவரின் இருபுறமும் மஞ்சள் கிழங்கு செடியும், கழுத்தில் ஊதாப் பூ மாலையும், தலை மேல் பூவும் வைத்து அழகாக இருப்பார். நல்ல நேரம் பார்த்து, இருபுறமும் விளக்கேற்றி விட்டு, பெரிய தட்டில் இல்லையென்றால் வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, நவ்வாப்பழம், மாம்பழம் எல்லாம் வைத்து ஒரு ஓரத்தில் பொரி, பொரிகடலை, நாட்டுச் சக்கரை கலந்து வைத்து விடுவார். விளாம்பழத்தை உடைத்து அதனுடன் நாட்டுச்சக்கரையை கலந்து, அதுவும் கொஞ்சம் இலையில் இருக்கும். சில நேரங்களில், வீட்டில் செய்த அப்பமும், வெளியில் வாங்கிய
கொழுக்கட்டையும் (கந்துளோ -சௌராஷ்ட்ராவில்), வடையும் படையலுக்கு காத்திருக்கும். பிள்ளையாருக்கு நாங்கள் எல்லோரும் எப்படா பூஜை முடியும், போட்டுத் தாக்கலாம் என்று காத்திருப்போம் :)

அதற்குள் கனலைப் போட்டு, சுவாமி முன் வைக்க, ஒரு டம்ளரில் பாலும் நாட்டுச்சக்கரையும் கலந்து வைக்க, இன்னொரு டம்ளரில் தண்ணீரும் வைப்பார். நாங்களும் குளித்து முடித்து நன்றாக உடை உடுத்திக் கொண்டு வர, அப்பாவும் வந்தவுடன், சுவாமி கும்பிட்டு விட்டு, தேங்காயை எடுத்து விளக்கில் காண்பித்து விட்டு, வராந்தாவில் போய் உரலின் மேல் போட்டு உடைத்து அந்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு வர, அதை குடிக்க நாங்கள் அப்போதே போட்டிபோட ஆரம்பித்து விடுவோம். ஒருவர் மணி அடிக்க, முதலில் சாம்பிராணி போட்டு மணக்க மணக்க தூபபூஜை. வீடு முழுவதும் அப்பா எடுத்துக் கொண்டு போக, பின்னாடியே மணியடித்துக் கொண்டே எங்களில் ஒருவர் செல்வோம். மற்றவர்கள் இலையை பார்த்து இந்த பழம் எனக்கு, இந்த ஸ்வீட் எனக்கு என்று அடுத்தவரை கடுப்பேற்றிக் கொண்டிருப்போம். பிறகு பத்தி, சூடம், பிரசாதங்கள் என்று எல்லா பூஜைகளும் முடிந்த பிறகு, எல்லோரும் விழுந்து கும்பிடுவோம். ஹ்ம்ம், நல்லா படிக்கணும், பெரியவங்க சொல்றத கேக்கணும், நல்லா பெயர் எடுக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட மறக்காமல் செய்வோம்:) பிறகு விபூதி, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப்பழமாய் பொறுமையாக காத்திருப்போம். சூடம் அணைந்த பிறகு, அம்மா அவர் சொல்லவேண்டிய மந்திரங்களை எல்லாம் சொல்லி முடித்த பிறகு, கத்தியை கொண்டு வரச் சொல்லி தேங்காயை சில்லுகளாக போட, வாழைப்பழத்தை சிறுசிறு வில்லைகளாக போட்டு கொடுக்க, முதலில் தேங்காய், பழம் எடுத்துக் கொள்வோம். பால், தேங்காய் தண்ணீர் என்று எல்லோரும் சிறிது சிறிதாக குடிக்க, பழங்கள் எல்லாம் சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி, அதையும் சாப்பிட்டுக் கொண்டே, இனிப்பான விளாம்பழக் கலவையை கையில் வைத்து சிறிது சிறிதாக சாப்பிட(நல்ல நார்ச்சத்துள்ள பழம்), இனிப்பு பத்தவில்லைஎன்றால், இன்னும் கொஞ்சம் சீனியை போட்டுக் கொண்டு சாப்பிட, நவ்வாப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு, நாக்கு ஊதா கலருக்கு மாறி விட்டதா என்று நாக்கை துருத்தி பார்த்துக் கொண்டே, அப்பம், அதிரசம், போளியல், கொழுக்கட்டையையும் ஒரு கை பார்த்து விட்டு, அவல், பொரி,கடலை கலவையை சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் என்று வைத்துவிட்டு,

அதற்குள் அம்மாவும் நெய் சாதம்(தூப்பு பொங்கல்), எலுமிச்சைபழ சாதம்(லிம்பு பொங்கல்), வாழைத்தண்டு போட்ட சாம்பார் மணக்க, மணக்க ரெடியாக, இலையிலோ, தட்டிலோ பாட்டி, அப்பா, நாங்கள் எல்லோரும் என்று குடும்பமாக சாப்பிட என்று அன்றைய தினம் வீடு மணக்க, வயிறு முட்ட வித விதமான பிடித்த உணவுகளை உண்டதால் ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும். வீட்டில் சாயப்பட்டறை இருந்ததால் அங்கு வேலை செய்தவர்களுக்கும் பூஜை பிரசாதங்கள் கொடுக்க அவர்களுக்கும் சந்தோஷம். பாட்டி வீட்டிலிருந்து பிரசாதமும் வர, நாங்களும் இங்கிருந்து கொடுக்க, பக்கத்து வீட்டிலிருந்து சீயம், வடை என்று விதவிதமாக பிள்ளையார் பெயரைச் சொல்லி அந்த நாள் இனிய நாளாக பொழுது போகும்:) பழைய பிள்ளையார் கிணற்றுத் தண்ணீரில் கரைய, புதுப் பிள்ளையார் ஒரு வருடம் கொலு வீற்றிருப்பார்.பிள்ளையாருக்கு பிடிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும் :)

புதிதாக திருமணம் நடந்த வீடுகளில் அதுவும் பெண் வீட்டில், முதல் விநாயகர் சதுர்த்தி ரொம்பவுமே ஸ்பெஷல் ஆனது. மாப்பிள்ளை வந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட, விருந்து, கும்மாளம் என்று உறவினர்களுடன் களை கட்டும் :)

நான் இருக்கும் ஊரிலிருக்கும் கோவிலிலும் மிக விமரிசையாக விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடக்கும். நியூயார்க்கில் Flushing கோவிலைச் சுற்றி தெரு முழுவதும் விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...

ஸ்ரீகணேசா... சரணம்!

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...