Monday, September 17, 2012

புரட்டாசி மாதம்

இன்று தமிழ் மாதம் புரட்டாசி தொடங்குகிறது. பல சௌராஷ்டிரா மக்களுக்கு மிகவும் புரதான மாதம் இது. பெருமாள் குடும்ப கடவுளாக இருக்கும் பட்சத்தில், புண்ணிய மாதமும் கூட. அந்த குடும்பங்கள் எல்லாம் இந்த ஒரு மாத காலத்திற்கு எந்த ஒரு அசைவ உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளாமல்(மிகவும் கஷ்டமான ஒன்று!) , சைவ உணவு சாப்பிட்டு சனிக்கிழமைகளில் அல்லது ஒரு சனிக்கிழமையாவது பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அதிகாலையில் பல வீடுகளிலும் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசர்தூல கர்த்தவ்யம் தெய்வமானிக்ஹம்
என்று திருமதி. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரலுடன் அன்றைய பொழுது புலர ஆரம்பிக்கும். எங்கள் வீட்டிலும் புரட்டாசி மாதம் விரதம் இருப்போம்.

சனிக்கிழமைகளில், வீடு முழுவதும் பத்தி, சாம்பிராணி, சூடம், துளசி, பூக்கள் மணம் கமழ ஒரே பக்தி மயமாக இருக்கும். வாசலில் செம்மண் கோலமிட்டு ஸ்பெஷல் நாள் என்று தெருவில் இருப்பவர்களை உணர்த்தும். இந்த மாதத்தில் ஏதாவதொரு சனிக்கிழமையில், என் தம்பிகளும், அப்பாவும் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, வேட்டி கட்டிக்கொண்டு , நெற்றியில் பளிச்சென நாமம் போட்டுக் கொண்டு, நன்கு துலக்கிய நாமம் போட்ட மூன்று பித்தளை சொம்புகளில் துளசி மாலை சூடி, வீட்டில் பூஜை செய்து விட்டு, கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று மூன்று முறை உரக்கச் சொல்ல, அம்மாவும் மூன்று முறை அரிசி எடுத்து கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே சொம்புகளில் அரிசி போடுவார். நாங்களும் ஒரு கைப்பிடி அரிசி போடுவோம். அவர்களும் தெருவில் இருக்கும் வீடுகளின் முன் சென்று கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று சொல்ல, அவர்களும் கைப்பிடி அரிசி போடுவார்கள். வீடுகளில் குழந்தைகள் இருந்தால், அவர்களை மதியம் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்து விட்டு வருவார்கள். சொம்பு நிறைய அரிசியுடன் வீட்டுக்கு வர, அந்த அரிசியுடன் வீட்டு அரிசியும் சேர்த்து, சுவையான சமையல் செய்து சுவாமிக்குப் படைத்து விட்டு, குழந்தைகள் எல்லோரையும் அமர வைத்து, இலையில் சாதம், கீரைப் பொரியல், காய்கறிகளுடன் சூப்பரான சாதமும், குழம்பும், ரசமும், தயிரும், பாயசமும் என்று சாப்பிட்டு முடிக்க, எல்லோர் இலையிலும் காசும், வெத்திலைப் பொட்டி, பூவும் வைத்து விருந்து சுபமாக முடியும். சாப்பிடுவதற்கு முன், இலையில் பரிமாறிய பிறகு, எல்லோரும் கோரசாக கோவிந்தா கோவிந்தா என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு தான், சாப்பிட விடுவார்கள் :)

எனக்குப் பிடித்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மதியம் ஒரு வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுக்கும் காசையும் எடுத்துக் கொண்டு, பல வீடுகளுக்கும் சென்று வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு!!!! காசை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். சில வீடுகளில், எங்களைப் பார்த்தவுடனே, சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டு, காசு கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஹையா, இன்று எனக்கு ஒன்னாரூவா கிடைச்சிருச்சு , ஒன்னரைரூவா கிடைச்சிருச்சு என்று வயிறும், மனமும் துள்ள யார் எவ்வளவு கலெக்க்ஷன் செய்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டே வருவோம். எந்தெந்த வீடுகளில் நல்ல சாப்பாடு, யார் நிறைய காசு கொடுக்கிறார்களோ அவர்கள் வீட்டில் குழந்தைகள் கூட்டம் நிறைய இருக்கும். எல்லா வீடுகளிலும் அருமையாக,சுவையாக சமைத்திருப்பார்கள். சில வீடுகளில் சிம்பிளாக வெண்பொங்கல், சாம்பார், ரவா கேசரி, சில வீடுகளில் தக்காளிப் பொங்கல், ஸ்வீட், சில வீடுகளில் சாதம், காய்கறிகள், பாயசம் என்று விதவிதமாக இருக்கும். நினைத்தாலே இனிக்கிறது அந்த பருவம்:)   கிருஷ்ணாபுரத்தில் ஆரமபித்து கான்பாளையம் வரை சாப்பிட்டு, காசு பார்த்ததுண்டு! புரட்டாசி மாத சனிக்கிழமைகள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாட்கள். காலையிலிருந்தே கோவிந்தா கோஷம் தெருக்களில் கேட்க ஆரம்பிக்கும். ஒரு சனிக்கிழமை பாட்டி வீட்டு கோவிந்தா, ஒரு சனிக்கிழமை பெரியம்மா வீட்டு கோவிந்தா என்று பிஸியான சனிக்கிழமைகளாக போகும் புரட்டாசி மாதம்!

இப்பொழுதும் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்களின் குடும்பங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று உற்சாகமான விருந்து நாள். அமெரிக்கா, கனடாவிலும் கூட சௌராஷ்டிரா நண்பர்கள் மறக்காமல் கடைப்பிடிக்கிறார்கள். என்ன, மதிய விருந்துக்கு போகும் பொழுது நாம் அரிசி எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும். அங்கு அவர்கள் பூஜை அறையில் வைத்து கோவிந்தலக்ஷம் கோவிந்தா, வெங்கட்ரமணா கோவிந்தா என்று அரிசி கேட்க, நாங்களும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே அரிசி போட, அதை வைத்து அவர்கள் சுவையான சக்கரைப் பொங்கல் பண்ண என்று விருந்துடன் சுபமாக முடியும் அன்றைய தினம்  :)


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...........


6 comments:

  1. இக்கட்டுரை எழுதியமைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணலதா! கடந்த 21 வருடங்களாக ஜப்பான், கனடா, ஐக்கிய அமெரிக்க குடியரசு என்று நாங்கள் வாழும் எல்லா நாடுகளிலும் இன்றும் நாங்கள் 'தசல்'/'கோவிந்தா' கடைபிடுத்து வருகிறோம். இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் எங்கள் வீட்டில் கொண்டாடப்படும் தசலுக்கு அவசியம் குடும்பத்துடன் வரவும். நன்றி!
    Sudarsan and Family

    ReplyDelete
  2. இது மாதிரியான மலரும் நினைவுகளே, இன்று இத்தனை பரபரப்பிலும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது என்றால் மிகையில்லை.

    ReplyDelete
  3. நன்றி, சுதர்சன்.

    ReplyDelete
  4. நன்றி, சரவணன். இந்த மாதிரி நாட்களும், கிழமைகளும், மாதங்களும் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே போகத் தூண்டும். பிள்ளையாய் இருந்து விட்டால் தொல்லை ஏதும் இல்லையடா என்று அடிக்கடி நினைக்க வைக்கும் இம்மாதிரி நிகழ்வுகள்.

    ReplyDelete
  5. Nicely written Latha. I wish some Sourastra family in bay area invites me to dhasal :)

    ReplyDelete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...