 |
Library Museum |
நாங்கள் பார்த்த மற்றொரு அழகான ஐரோப்பிய நகரம் Prague, Czech Republic. முருகன் வீட்டிலிருந்து இரண்டரை மணிநேரத் தொலைவில் இருந்தது. ஒரு காலை வேளையில் உணவை முடித்துக் கொண்டு, நாங் களும், குழந்தைகளும், முருகனின் GPS உதவியுடன் கிளம்பினோம். வழி முழுவதும் ஆல்பே ஆறும் எங்களுடன் பயணித்துக் கொண்டே வந்தது. Czech Republic எல்லையைத் தொட்டவுடன், கொஞ்சம் அழுக்காக, குப்பையாக ஒரு ஊர். ஜெர்மனிக்கும் அந்த ஊருக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது. ஆள் அரவமற்ற பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு, உள்ளே போய் என் கணவர் அவர் கிரெடிட் கார்டு கொடுக்க அது வேலை செய்யவில்லை. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அவர்கள் பேசுவது எங்களுக்குப் புரியவில்லை. பெட்ரோல் போட்டாகி விட்டது. நல்ல வேளை, என்னிடம் இருந்த கார்டு வேலை செய்து அங்கிருந்து தப்பித்து வந்தோம். வழி முழுவதும் பலவிதமான தானியங்கள், சூரியகாந்தி பூச்செடிகள், மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்கள். நல்ல வெயில் கூட. ஒரு வழியாக Prague வந்து சேர்ந்தோம். அங்கு நகர நெரிசலை காண முடிந்தது. அழகுப் பதுமைப் பெண்கள் கண்கவர் உடையில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்!

காரை ஓரிடத்தில் நிறுத்தி, அருகிலிருந்த சப்வே வழியாக கீழிறங்கிப் போனோம். படி முழுவதும் சிறுநீர் நாற்றம். அழுக்குப் படிகள். மூக்கைப் பொத்திக்கொண்டு வந்தால் அழகிய, ரயில், பஸ் ஸ்டேஷன். உள்ளே சிறிய, பெரிய கடைகள். கடைகளை பார்த்தவுடன் தான் நமக்கு பசிக்குமே. உடனே, ஒரு கடையின் உள்ளே நுழைந்து ரொட்டிகள், பழங்கள், சிப்ஸ், சாக்லேட்ஸ் வாங்கி கொண்டோம். பக்கத்திலிருந்த கடையில் காபி வாங்கி குடித்துக் கொண்டே, அங்கிருந்த போலீஸ்காரரிடம் வழியை கேட்டு தெரிந்து கொண்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தோம். இந்த நகரம் Czech Republic இன் தலைநகரம். மிகவும் அழகாக,ஏதோ ஒரு மாயஉலகம் போல இருந்தது. மிகவும் பழமையான, புரதான இடமாக இருந்தது. நாங்கள் சாலையில் நடந்து வரும் பொழுதே, பெரிய பெரிய கல் கட்டிடங்களும், பிரமாண்ட சிலைகளும், நேர்த்தியான கட்டிடங்களும் பார்த்து மலைத்துப் போயிருந்தோம்.
 |
View from the Museum |
முதலில், நாங்கள் பார்த்தது நகரின் நடுவில் இருக்கும் பழமையான லைப்ரரி மியூசியம் ஒன்று. இந்த ஊரிலும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டிடங்களில் நன்கு தெரிந்தது. பெரிய பெரிய செயற்கை நீரூற்றுகளும், குதிரை மேல் மாவீரன் சிலைகளும், அழகிய பெண்கள் சிலைகளும் என்று நகர் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மியூசியம் பார்க்கவே ஒரு நாள் ஆகி விடும் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று முன்பே செல்வி சொல்லி இருந்தார். இந்த மியூசியத்தில் எல்லா நாட்டு கலாச்சார விஷயங்கள் மிகவும் நல்ல முறையில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியதால் ஆவலுடன் பார்க்க வந்திருந்தோம். ஆனால், உள்ளே வேலை நடந்து கொண்டிருந்ததால், 2013 வரை அது மூடப்பட்டுள்ளதாக சொன்னதால் ஏமாற்றத்துடன் நகர்வலம் போக ஆரம்பித்தோம். அதற்குள் மக் டொனல்ட்ஸ் கடையை பார்த்து விட்ட என் மகன், பசிக்கிறது என்று கச்சேரியை ஆரம்பித்து விட்டான். இன்னும் ஊருக்குள் போகவே இல்லை, சிறிது நேரம் கழித்து தான் சாப்பிடப்போறோம் என்று சொல்லி நடக்க ஆரம்பித்தோம். அவனும் மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்:(
 |
Indian Restaurant |
மியூசியத்தின் வாசலில் இருந்து பார்த்தால், ஒரு அரை மைல் தூரத்திற்கு அகலமான சாலை, அதன் இருபுறங்களிலும், நெருக்கமான கட்டிடங்கள், கடைகள், சாலை நடுவே உணவகங்கள். அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் கூட்டம் என்று பார்ப்பதற்கே உற்சாகமாக இருந்தது. நடுநடுவில் உயரமான சிலைகள். நாங்களும் ஒவ்வொன்றாக பரவசமாக பார்த்துக் கொண்டே போனோம். நடுவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று காலில் செருப்பில்லாமல், குடுமி வைத்துக் கொண்டு வெள்ளைக்காரகள் கூட்டம் ஒன்று உரத்த குரலில் பாடி ஆடிக் கொண்டே, கிருஷ்ணர் படத்தை வைத்துக் கொண்டு போனார்கள். எங்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் பிரசாதம் கொடுத்து விட்டு, நாங்களும் அவர்களுடன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாட குஷியாகி போனார்கள். அவர்களை அந்த இடத்தில் பார்த்தது அதிசயமாக இருந்தது.

நடுவில் ஒரு கடையில் நுழைந்து நினைவுப் பொருட்களையும், குழந்தைகளுக்கு சுவெட் ஷர்ட்டும் வாங்கிக் கொண்டோம். நம்மூர் T -நகர் நினைவிற்கு வந்தது! சாலை நடுவே ரயில்வே கம்பார்ட்மெண்டில் ரெஸ்டாரெண்ட் இருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், படங்களை எடுத்துக் கொண்டும் நடந்து போய்க் கொண்டிருந்தோம். என் பையனும் இங்கே சைனீஸ் உணவகம் இருக்கிறது, அங்கே பர்கர் இருக்கிறது என்று அறிவிப்பு செய்து கொண்டே வந்து கொண்டிருந்தான். ஒரு இந்திய உணவகமும் இருந்தது.நடுவில் ஒரு குறுகிய சாலை. கல் ரோடுகள். சின்ன சின்ன கடைகள். நானும் என் பெண்ணும் விடாமல் ஏறி இறங்கி சாமான்கள் வாங்கிக் கொண்டே வந்தோம். மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கம் இருக்கும் குறுகலான தெருக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
 |
Market |
வழியில், பழங்கள், இனிப்புகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சில பழங்களை வாங்கிக் கொண்டு சாப்பிட்டபடியே மீண்டும் பல தெருக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். Old Town Square என்ற இடத்தில் நல்ல கூட்டம். என்னவென்று பார்த்தால், உயரமான கட்டிடத்தில் கோவில் மணி ஒன்று. இது ஒரு ஸ்பெஷல் மணிக் கூண்டு. இதை astronomical clock tower என்கிறார்கள். மணிக்கொருதரம், சின்ன ஜீசஸ் உருவம் வர, அவரை தொடர்ந்து அவரது சீடர்கள், எலும்புக்கூடு மணியடிக்க இவர்கள் சுற்றி வர , அதற்கு கீழே பன்னிரண்டு ராசிகளுக்கு என்று ஒரு கடிகாரம் என்று சுற்ற, முடியும் பொழுது ஒருவர் மேலிருந்த படியே, வாத்தியம் வாசிக்க என்று ஒட்டு மொத்தக் கூட்டமே அண்ணாந்து பார்த்து களிப்புறும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருக்கிறது. முடிந்தவுடன் அனைவரும் கைத்தட்ட, கூட்டம் கலைகிறது.
 |
Old Town Square |
அந்த இடம் முழுவதும் உணவகங்களால் நிரம்பி வழிகிறது. பெரிய கோப்பைகளில் மதுவுடன், கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மருந்துக்கு கூட மசாலா வாசனை இல்லை:( அங்கே அழகிய ஒரு தேவாலயம். உள்ளே போய் சுற்றிப் பார்த்து விட்டு, சிறிது நேரம் அவர்கள் பியானோவில் வாசித்த இசையை கேட்டு விட்டு வெளியே வந்தோம். அதற்குள் பொறுமை இழந்த என்மகனும், சாப்பாடு இல்லையென்றால் எங்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க, மீண்டும் பல தெருக்களைத் தாண்டி, ஒரு சைனீஸ் உணவகத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, உண்ட மயக்கத்தில் அவனும் தெம்பாக நடக்க ஆரம்பிக்க, இப்பொழுது மிக,மிகப் பழமையான Charles Bridge என்ற கல் பாலத்தை பார்க்க கிளம்பினோம்.

மீண்டும் old town வழியே குறுகிய கற்தெருக்கள் வழியாக பாலத்தை அடைந்தோம். பல்லாயிரக்கணக்கான வருட பழமையான பாலத்தின் இருபக்கங்களிலும் சிறு இடைவெளியில் முப்பது கரிய கிருத்துவத்துடன் தொடர்பு கொண்ட பெரிய பெரிய சிலைகள். சிலைகளின் கீழே வாசகங்கள். நடைபாதையில் சிறு சிறு கடைகள். நல்ல அகலமான, நீளமான பாலம். பாலம் முழுவதும் ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம். அங்கிருந்து Vtlava ஆறும், நகரமும் பார்க்க அழகாக இருந்தது.
 |
View of Charles Bridge |
அங்காங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பாலத்தின் முகப்பிலும், முடிவிலும் gothic architecture என்று சொல்லப்படுகிற கட்டிட வகையில் பிரமாண்ட நுழைவாயில் அமைப்புகள். அப்படியே நடந்து,நடந்து பாலத்தின் மறு எல்லைக்கு வந்து விட்டோம்.
அங்கும் ஒரு இந்திய உணவகம், கோபால் என்ற பெயருடன். குறுகிய கல்தெருவின் வழியே அங்கிருக்கும் பிரபல மலைக்கோட்டைக்கு மூச்சு வாங்க ஏறிக் கொண்டிருந்தோம். நடுநடுவே கடைகளின் விசிட்டும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு ஒரு வழியாக கோட்டை வந்து சேரும் பொழுது சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகி விட்டது:( இன்னும் சிறிது நேரத்தில், என் பையன் பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவான் அதற்குள் சுற்றிப் பார்த்து விடவேண்டும் என்று கோட்டைக்குள் நுழைந்தோம்.
அது ஒரு சிறு நகரம் போல இருந்தது. உலகத்திலேயே மிகப் பெரிய கோட்டை என்று படித்த ஞாபகம். உள்ளே நிறைய நீண்டு வானுயர்ந்த தேவாலாயங்கள், பிரமாண்ட இசைக்கருவிகளுடன். பல இடங்களிலும் அருமையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வண்ணம் இருந்தது. சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இசையை கேட்டு விட்டு, வெளியே வந்து பார்த்தால், ஓடு வேய்ந்த அழகிய நகரம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
 |
Prague city view from the Castle |
 |
To Castle |
அங்கு தண்ணீரின் விலை, பியரின் (Beer ) விலையைவிட இருமடங்கு!
அங்கேயே சிறிது நேரம் குட்டிப் போட்ட பூனை மாதிரி போக மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்.வேறு வழியில் கீழிறங்க, வழியில் உருளையில் மாவைச் சுற்றிப் போட்டு, ரெடியானதும் சக்கரையை தூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே நன்றாக இருந்தது. வரிசையில் நின்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.
 |
Yummy snack! |
விசித்திரமான, வேடிக்கையான சிலைகள் வழியில். பெண்கள் தான் கூட்டம் கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தார்கள்:) என் பையனோ, சீ சீ என்று ஒதுங்கி எப்படி இதை ரசிக்கிறார்கள் என்று ஆச்சரியத்துடன் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்தான். சிறு சிறு தெருக்களின் வழியே மீண்டும் மெயின் ரோடுக்கு வந்து அகலமான அந்த சாலையில் மேலே ஏறி, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சப்வே வழியாக, கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மாலை வேலை முடித்து வருகிற கூட்டமும் சேர்ந்து கொள்ள, நெரிசலில் இருந்து மீண்டு ஒரு வழியாக முருகனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒரு அழகிய நகரத்தை பார்த்த திருப்தியில், இரவு உணவு முடித்து விட்டு தூங்கப் போனோம்.
No comments:
Post a Comment