Wednesday, August 29, 2012

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு

பெண்களின் வாழ்க்கையில் பெற்றோரைப்  பிரிந்துச் செல்லும் நேரம் முன்பு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு என்றிருந்த நிலை மாறி, இன்று படிக்கும் வயதிலேயே செல்கின்ற நிலைமை ஆகி விட்டது. ஒரு சிலர், வேலை நிமித்தமாகவும் பிரிகிறார்கள். எனக்கும் என் அன்பு மகள் படிக்க எங்களை விட்டு சிறிது தொலைவு போகப்போகிறாள் என்று ஜனவரி மாதம் முதல் தெரிந்தாலும் அவளை கல்லூரியில் விட்டு விட்டு வரும் வரை அதன் பாதிப்பு தெரியவில்லை.

அவள் வீட்டில் இருக்கும் வரை ஒரு நல்ல தோழியாக, அன்பு மகளாக, பொறுப்புள்ள அக்காவாக, அனைவரிடமும் பாசமுள்ள பெண்ணாக, எங்களுக்குப் பெருமை தேடி தந்த பெண்ணாக வளர வளர, இன்னும் சில மாதங்களில் படிக்கப் போய் விடுவாள், பிறகு அவளுடைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து விடும் என்ற நினைப்பே மலைப்பாகிவிட்டது எனக்கு.

தேர்வுகள் முடிந்த மே மாதம் முதலே, கல்லூரிக் கனவுகளில் அவள் மூழ்க, அவளைப் பிரிய போகிறோம் என்ற நினைவு என்னை வாட்டத் துவங்கி விட்டது. கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் பொழுது நானும் அவளும் சேர்ந்து பேசிக் கொண்டே போனது, எனக்கு ஒன்று என்றால் பதறிப் போய் என்னை கவனித்துக் கொண்டது, தன் தம்பி தப்பு செய்தால் அவனை அன்புடன் கடிந்து கொண்டது, விடுமுறைகளிலும், நான் இல்லாத நேரங்களிலும் அவனை ஒரு தாய் போல் பார்த்துக் கொண்டது, வீட்டு வேளைகளில் எனக்கு உதவியாக இருந்தது, நான் சமைத்த உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டது, சாதம் வைத்து கீரை பொரியல் செய்து விடு என்று சொன்னவுடன் சிரத்தையுடன் செய்தது, காய்கறிகளை நறுக்கி வைத்து விடு என்றவுடன் அழகாக ஒரே மாதிரி வெட்டி வைத்திருப்பது, வீட்டை சுத்தம் செய்து வைப்பது, தம்பிக்கு பியானோ வகுப்பு எடுப்பது, அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களை பார்த்துக் கொள்வது என்று எங்கள் தெருவின் செல்லப் பெண்ணாகவே வளர்ந்தாள்.

அவளுடைய எண்ணங்களை ஒத்த நல்ல தோழிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் என்று ஒரு புதிய உலகத்தை அவள் மூலமாக நாங்களும் அனுபவித்தோம்.

எனக்குத் தெரிந்து ஏழாம் வகுப்பிலிருந்து பொறுப்புள்ள பெண்ணாக மாறி, தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு வந்து விட்டது. அதைத் தவிர, இசை, நடனம், படிப்பு என்று பல வழிகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள். நான் சோர்வாக இருக்கும் நாட்களில் என்னை நன்கு புரிந்து கொண்டு, ஒரு நல்ல தோழியாக பக்கபலமாகவும், ஆதரவாகவும் இருந்து என் மகளா, என் தோழியா, என் அம்மாவா என்று பல கணங்களில் என்னை திக்குமுக்காட வைத்தவள்.

ஜூலை மாதம் முதலே கல்லூரிக்குத் தேவையான சாமான்களை வாங்கி, எல்லாவற்றையும் பேக் செய்து வைத்து விட்டு, கல்லூரிச் சென்றவுடன் அவளுடைய அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, மதிய உணவை அமைதியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கடைசி நிமிட அறிவுரைகளைச் சொல்ல, பத்திரமாக இரு, நன்றாக சாப்பிடு, ஒழுங்காக படி, நாங்கள் போய் வருகிறோம் என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு சொல்லும் பொழுதே உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள்.

அதைப் பார்த்தவுடன் நானும் அழ ஆரம்பிக்க, என் பையனும் எங்கே அவனுக்கும் அழுகை வந்து விடுமோ என்று வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டான். என் கணவரும் அவளுக்குச் சமாதானம் சொல்லி, மனம் கனத்து நாங்கள் வந்து விட்டாலும், கல்லூரியை விட்டு வெளியில் வந்தவுடன் பேசும் பொழுது கூட அவள் அழுது கொண்டிருந்ததை அவள் குரல் சொல்ல, அந்த நினைவிலேயே, ஊருக்கு நாங்கள் திரும்பி வந்து விட்டோம். வந்தவுடன் மீண்டும் கூப்பிட,அவளும் களைப்பாக இருந்தாள். போய் சீக்கிரம் தூங்கு எல்லாம் சரியாகி விடும் என்று அவளுக்கும் எனக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டு,

அடுத்த நாள் பேசினால் அன்றும் குரலில் உற்சாகம் இல்லை. சரியாகத்  தூக்கமே இல்லை என்றாள் :( புது இடம், புது மனிதர்கள், சாப்பாடு பழக்கம், சிறிது காலம் ஆகும், அது வரை பொறுமையாக இரு, கல்லூரி ஆரம்பித்தவுடன் உன் கவனம் படிப்பில் போனவுடன் சரியாகிவிடும் என்று அவளுக்கு சொன்னாலும், எனக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது. ஒரு வழியாக, திங்கட்கிழமை கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் அவளுடைய குரலில் பழைய உற்சாகம் வந்தது. ஸ்கைப் வழியாக அவளை பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. இரண்டுநாட்களில் நன்கு மெலிந்திருந்தாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இப்பொழுது அவளுக்கென்று ஒரு குரூப் அமைந்து விட்டதில் அவளுக்கு சந்தோஷம். அவள் பக்கத்து ரூமில் ஐஸ்வரியா என்று ஒரு இந்திய மாணவி, என்ன ஆன்ட்டி, நிவியை ரொம்ப மிஸ் பண்றீங்களா, அவளும் அப்படித்தான் என்று சொன்னாள்.

இதோ, இந்த வாரத்தில் நான்கு நாட்கள் கல்லூரி விடுமுறை. நான் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னவுடன் அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லாத வீடு வெறிச்சென்றிருக்கிறது. பழகச் சிறிது நாளாகும் என்று நினைக்கிறேன். என்னை தேற்றுவதற்காக என் மகனும், உனக்கு நானும் நிறைய உதவிகள் செய்கிறேன், நிவி மாதிரி கால் பிடித்து விடவா என்று கேட்கும் போதே...

அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகளானேன்... என்று நினைக்கத் தோன்றுகிறது.

Monday, August 27, 2012

மனிதரில் இத்தனை நிறங்களா?

நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் விதவிதமான மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். சிலர், நெடுநாள் பழக்கமாக இருப்பினும், ஒதுங்கியே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். சிலர், பழகிய சில நாளிலேயே ஏதோ ஜென்மத்திற்கும் உடனிருந்த மாதிரி நல்லது கெட்டதுகளில் கூடவே இருப்பார்கள். சிலர், நமக்கு பிரச்சினை என்றால் ஒதுங்குவதும், பிறகு வந்து ஓட்டிக்கொள்வதும் நடக்கும். சிலர், நம் பிரச்சினை என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே பழகுவார்கள்!

என் வாழ்க்கையில் பலவிதமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன், இன்னும் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே என் மீது அக்கறை கொண்டு இன்றும் அதே அன்புடனும், பாசத்துடனும் இருப்பவர்கள், அக்கறையுடன் இருப்பது போல் முதுக்குப்பின் புறம் பேசுபவர்கள், உண்மை நட்புடன் இருப்பவர்கள்.....என்று பல தரம்.

நல்ல நிலையில் இருந்த பொழுது எங்களைச் சுற்றி இருந்த பலரும் கஷ்டப்படும் நேரத்தில் காணாமல் போனது விந்தை தான்! அன்று எங்களுடன் துணையிருந்த  நல்ல நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள், அவர்களுடைய உதவியை மனதார நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மனதை ரணமாக்கிய மனிதர்களும் இருந்தனர் என்பதை மறக்க முடியவில்லை.

ஆக மொத்தம், என் அனுபவத்தில், பணம் பத்தும் செய்யும் என்பது உண்மை. 

பணம் இருக்கும் போது வந்த மனிதர்கள், பணம் இல்லை என்றவுடன் எதற்குப் பிரச்சினை என்று ஒதுங்கியதும், பிறகு ஒன்றுமே நடவாதது போல் வந்ததும் உண்மை. பிரச்சினைகள் இருந்த போதும் எங்களை பாதுகாப்பாக கை காட்டி அழைத்துச்  சென்ற மாமனிதர்களும் உண்டு.

தாமரை இலைத் தண்ணீர் போல் பழகியவர்கள் பலர். எங்கே நாங்கள் அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டால், மற்றவர்கள் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று சாமர்த்தியமாக எங்களைத்  தற்காலிகமாக மறந்து போன உறவுகளும், அதை மறைக்க அவர்கள் பேசிய பேச்சுக்களும்! அப்பப்பா! சில கண்டான் காமாட்சிகள், பார்த்த நேரத்தில் உள்ளம் உருகி பேசுவார்கள். மற்ற நேரங்களில், நாம் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்ற அக்கறை கூட இல்லாதவர்கள். பார்த்தவுடன் பசக் என்று ஒரு சிரிப்பு, திரும்புவதற்குள் அது காணாமல் போயிருக்கும். சிலர், தனக்கு வேலை ஆக வேண்டுமென்றால் குழைந்து, குழைந்து பேசுவார்கள், காரியத்தில் கண்ணாய் இருப்பார்கள். காரியம் முடிந்ததும் ஆள் அம்பேல். சிலரோ வஞ்சப் புகழ்ச்சி அணியில் பட்டம் பெற்றவர்கள். நன்றாக நம்மை வாழ்த்துவது மாதிரி அவர்கள் பொருமலை பொருமி விட்டுப் போவார்கள். சிலர், ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுவார்கள். முதுகுக்குப்பின் புறம் பேசுபவர்கள் பலர்!

ஒரு கட்டத்தில் இம்மாதிரியான மனிதர்களை இனம் கண்டு ஒதுங்கிச் சென்றாலும் தாமாகவே வலிய வந்து மிக சாமர்த்தியமாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் அவர்கள் குறைகளை மறைக்க, நம்மை புண்படுத்துவதும் உண்டு. அவர்கள் தவறுகளை எடுத்துச் சொன்னால் மரியாதை குறைவாக பேசுகிறாய், உன் வயது என்ன என் வயது என்ன? எதிர்த்துப் பேசுகிறாய்.  ஏதோ இன்று ஒரு நிலையில் வந்தவுடன் தலை கால் புரியாமல் நடக்கிறாய் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிந்து கொள்ளாமலே தம் குறைகளை மறைக்க நம்மை வார்த்தைகளால்  குத்தி மனம் வேதனை அடையச் செய்வதும் நடக்கிறது. இதில் பலரும் தாங்கள் கடைபிடிக்க முடியாத அறிவுரைகளை தாரளமாக,இலவசமாக வழங்குவார்கள். அவர்களுக்கு என்று வரும் பொழுது, அந்த அறிவுரைகள் எல்லாம் காணாமல் போய் விடுகிறது.

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா - என் அனுபவ உண்மை.

சிலர், தனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்று சதா புலம்பிக் கொண்டே இல்லாத கடுகளவுப் பிரச்சினையை மலையளவாக்கிப் பெரிதாக கற்பனை செய்துக் கொண்டு புலம்பி கொண்டிருப்பார்கள். பிரச்னை இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? இவர்கள் தான் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் தூங்குகிறது என்று நினைக்கும் ரகம்.  

என்ன எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு விடக் கூடாது சிலரிடம். ஒரே புலம்பல் புலம்பிவிடுவார்கள். அதில் எத்தனை சவிகிதம் உண்மை, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் பாராட்ட மனமில்லாமல் எப்பொழுதும் அடுத்தவரிடம் குறை கண்டு கொண்டே இருப்பார்கள்  நல்லவர்கள் போல் வெளியில் வேடமிட்டு அடுத்தவரை குழி தோண்டி புதைப்பதில் இன்பம் காண்பார்கள். சிலர், கடவுள் பெயரை சதா சொல்லிக் கொண்டே, பல அழிவு வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பதிலே குறியாய் அலைபவர்கள் பலர். ஒன்றுமே தெரியாத மாதிரி நல்லவர் போல வேஷம் போட்டு பிரச்சினையை பண்ணுபவர்கள் சிலர்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் ரகம் சிலர். நல்ல அறிவுரைகளைச் சொன்னாலும், தெருவில் வருவோர் போவோரின் பேச்சைக் கேட்டு அலையும் ரகம். சிலருக்கு நல்ல விதத்தில் சொன்னால் எதுவும் மண்டையில் ஏறாது. 

நன்றாக ஒருவருடைய பணத்தையும், நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, நீ என்ன செய்தாய் என்று வெட்கமில்லாமால் கேட்கும் ஜென்மங்களும் இருக்கத் தான் செய்கின்றன. பணம் ஒன்றையே குறிவைத்துப்  பழகும் ஜென்மங்கள். அன்பு, பாசத்திற்கு ஏங்கும் மனதை புரிந்து கொள்ளாமல், பணம் ஒன்றிலே குறியாயிருந்து, வார்த்தையால் மனதை ரணகளமாக்கி தன் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் மனித உருவில் அசுரர்கள். 

இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழாமல், அடுத்தவரை நினைத்து வாழ்க்கையை தொலைப்பவர்கள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருப்பவர்கள், வயதில் மட்டும் பெரியவர்கள் என்ற அதிகாரப் போதையில் இலவச அறிவுரைகளை வழங்குகிறேன் என்று உண்மை என்ன என்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பிதற்றும் பித்தர்கள், பிரச்சினைகள் கண் முன்னே இருந்தும் எனக்கேன் வம்பு என் இலைக்கு பாயசம் கிடைத்ததா என்று தன்னை மட்டுமே நினைத்துக் கொள்ளும் மூடர்களும் என்று இன்னும் இப்படிப் பல பேர்! சொல்லிக் கொண்டே  போகலாம்.

ஆனாலும், பல நல்ல உள்ளங்கள் இருக்கத் தான் செய்கின்றன. உண்மையான பாசத்துடனும், நட்புடனும், உதவி என்று போனால் உதவும் நல்ல நெஞ்சங்களும் இருப்பதினால், அற்ப பதர்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அந்த வலி போக சிறிது நாளானாலும் மனவேதனைகள்  வந்த வழியிலேயே போய் விடுகிறது.

மனிதர்கள் பலவிதம் ! ஒவ்வொருவரும் ஒரு விதம் ....புரிகிறது, தெரிகிறது. ஆனாலும், தானாக வந்து எதையாவது உளறிக் கொட்டி மனதை புண்படுத்தும் நல்லவர்கள் வாழ்க்கையில் இருந்தே ஆக வேண்டும் என்பது தான் நான் வாங்கி வந்த வரம் போல! ம்ம்ம்....

Sunday, August 19, 2012

பயணக் குறிப்புகள் - Neuschwanstein Castle , ஜெர்மனி


Bye, Bye Swiss
அடுத்த நாள் எல்லோரும் குளித்து, காலை உணவை முடித்துக் கொண்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இரண்டு ப்ளாஸ்க்குகளில் சூடான டீ எடுத்துக் கொண்டு, துணிமணிகளை பேக் செய்து காரில் ஏற்றி விட்டு, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன் நின்று பல படங்களை எடுத்து விட்டு, செண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்று ராமராஜன் ஸ்டைலில் மாடுகளைப் பார்த்துக் கொண்டே, இந்த மணிச்சத்தம் இனி கேட்க முடியாதே என்ற ஏக்கத்துடன் பார்க்க, அவைகளும் விட்டதுடா தொல்லை, நம்மை தூங்க விடாமல் பண்ணியவர்கள் ஒரு வழியாக கிளம்பி விட்டார்கள் என்று சொல்லுவது போல் இருந்தது:( வீட்டு உரிமையாளரிடம் போய் சாவி கொடுத்து விட்டு, கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் செய்து விட்டு மலை இறங்க ஆரம்பித்தோம்.

Going back to Germany
நடுவில் காரை நிறுத்தி பல இடங்களில் படங்கள் எடுத்துக் கொண்டோம். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. எல்லா இடமும் எடுக்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக தேவாலயம் முன்பு சிறிது நேரம் செலவிட்டு, ஒரு மனதாக இறங்க ஆரம்பித்தோம்.
ஜெர்மனி போவதற்கு இந்த முறை வேறு வழியில் பயணம். போகும் வழியில்Neuschwanstein என்ற கோட்டையை பார்த்துவிட்டு போவதாக திட்டம். அது பவேரியா என்ற மாநிலத்தில் இருந்தது. ஐந்து மணி நேரப் பயணம். மெயின்ரோடைத் தொட்டவுடன், ஜெர்மனி செல்ல எடுத்த ஹைவேயில், எதிர்த்தார் போல், மேகத்தை தொட்டுக்கொண்டு பிரமாண்ட ஆல்ப்ஸ் மலை பரந்து விரிந்திருந்த அழகு, மேக மூட்டத்துடன் கருநீலநிறவானம், லேசான தூறல் என்று Lord of the Rings படத்தை நினைவுப்படுத்தியது.

கண்ணைகவரும் மலை, ஆறு, அருவிகள் என்று வந்த இடத்தில் சிறிது நேரம் காரை நிறுத்தி, ஒரு பெருமூச்சுடன், அடுத்த முறை வரும் பொழுது இங்கு ஏதாவது ஒரு இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு அட்வான்ஸ் பிளானும் போட்டு விட்டு?, அங்கிருந்த கடையில் அந்த நாட்டின் நாணயங்களையும், சில சாமான்களையும் வாங்கிக் கொண்டு மீண்டும் பயணம்.

Waiting for a bus to Neuschwanstein Castle

நாங்கள் Neuschwanstein வந்து சேரும் பொழுது மாலை நான்கு ஆகி விட்டது. கார் வைக்க இடத்தை தேடி அலைந்து, பிறகு, கோட்டைக்கு போக பஸ்
டிக்கெட் எடுத்துக் கொண்டு, மழையில் வரிசையில் காத்திருந்தோம். முருகன், இப்படியே நடந்துபோகலாம் தான் ஆனால்,மழையாக இருப்பதால் வேண்டாம் என்று சொன்னார். பல இடங்களில், நாங்கள் பார்த்தது, காரை நிறுத்தி பஸ்ஸில் மட்டுமே போக செய்திருந்த வசதி தான். இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லை, நடந்து மலை ஏறுபவர்களுக்கும் சிரமம் இல்லை. நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கெதிரில் மஞ்சள் நிறத்தில் ஒரு மாளிகை Hohenschwangau Castle. அது, நாங்கள்பார்க்க போகின்ற கோட்டை/மாளிகையை கட்டியவரின் மகனின் மாளிகையாம்.

கோட்டையும் அதை சுற்றியுள்ள இடங்களும், மலைகளும் அந்த ராஜாக்களின் கலை ஆர்வத்தையும், இயற்கை ரசனையையும் பறைச்சாற்றுவதாய் இருந்தது.
View from the Castle

நேரமாகி கொண்டிருந்ததால், இந்த கோட்டையை பார்க்க முடியவில்லை. இந்த Neuschwanstein கோட்டையை முன்மாதிரியாக வைத்து டிஸ்னிலாண்டில் ஒன்றும் வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பஸ்சும் வந்து, கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் ஏறி உட்கார, மெதுவாக பஸ் ஆடி அசைந்து  மலையில் ஏற, இங்கே நடந்து மலை ஏற முடிந்திருக்குமா, நல்லவேளை மழை வந்தததால் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே இறங்கிக் கொண்டோம். இறங்கிய இடத்திலிருந்து கோட்டைக்குப் போவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி விட்டது :( நல்ல செங்குத்தான மலைப்பாதை தான்!
ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒரு வியூ. ஒரு பக்கம் பச்சை வண்ண நிலப்பரப்புடன், அங்காங்கே ஆறுகளும், குளங்களும். ஒரு பக்கம், சலசலவென்று அருவி. மேலே நிமிர்ந்து பார்த்தால் கம்பீரமான கோட்டை மதிற்சுவர்கள்  மலைப் பின்னணியில். பவேரியன் கொடியுடன் முகப்பு வாசல். உள்ளே நுழைந்தால், அவ்வளவு கூட்டம். ஐந்து மணிக்குள் கோட்டையை சுற்றிக் காண்பிக்கும் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால், உள்ளே போக முடியவில்லை. உள்ளே விலையுர்ந்த ஆடை, ஆபரணங்களும், ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்குமாம்.


அடாது மழையிலும் விடாது முடிந்த வரை, உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அந்த மழையிலும் நல்ல கூட்டம்.

மழை தான் இன்னும் விட்டபாடில்லை. மீண்டும் வெளியே வந்து சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு, கீழிறங்கி விட்டோம். கீழே ஓரிடத்தில் சாப்பிட்டு விட்டு, சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஐந்து மணி நேரப் பயணம். அப்போதே மிகவும் களைப்பாக இருந்தது. இருட்டவும் ஆரம்பித்து விட்டது. நாங்கள் முருகன் காரை தொடர்ந்து போக, அவர் ஓட்டமெடுக்க, பல சிவப்பு நிற கார்களில் அவருடைய காரை தொடர்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. மழையும் விடாமல் துரத்திக் கொண்டே வர, வீடு வந்து சேரும் பொழுது நடுநிசி! நன்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி, சாமான்களை எல்லாம் வீட்டிற்குள் கொண்டு வந்து, களைப்புடன் தூங்கும் பொழுது ஒன்றுமே நினைவில் இல்லை.

Castle view from the entrance









Monday, August 13, 2012

பயணக் குறிப்புகள் - Mt.Titlis, ஸ்விட்சர்லாந்து

அடுத்த நாள், காலையில் எழுந்திருந்து, என் கணவரையும் எழுப்பி விட்டு வந்து, ஜன்னல் வழியே பார்த்தால், ஒரே மேகமூட்டம். டீ எடுத்துக் கொண்டு வெளியே போனால் தான் தெரிந்தது, ஊசி முனைப்போல சன்னமான மழை. தூரத்திலிருந்து பார்த்தால் மழை பொழிவது தெரியவில்லை. போச்சுடா, என்று வேகமாக டிவி போட்டுப் பார்த்தால், அன்று முழுவதுமே மழை தான் என்று தெரிய, வெளியில் போகும் நினைப்பை விட்டு விட்டோம். மெதுவாக காலை உணவை உண்டு, குழந்தைகள் தங்கள் கார்டு கேம்ஸ் விளையாட, பாட்டுக் கேட்க, நாங்கள் பேசிக் கொண்டிருக்க என்று பொழுது போக்கினோம். சிறிது நேரம் குழந்தைகள் குடை எடுத்துக் கொண்டு மலையில் நடந்து வரச் சென்றார்கள். தடதடவென்று இடிமின்னலுடன் இல்லாத சுகமான மழை. மழை நிற்க இரவாயிற்று. மலை எல்லாம் ஏற்கெனவே பச்சை நிறம். இப்போதோ, தெளித்து விட்ட நிலையில் இன்னும் அழகாக இருந்தது. நன்றாக மதிய உணவும், இரவு உணவும் சாப்பிட்டு விட்டு, அன்று நடந்த கால்பந்துப் போட்டியை ஆர்வத்துடன் பார்த்து முடித்தோம். இப்படியாக ஒரு நாள், ரிலாக்ஸ்டாக கழிந்தது.
அடுத்த நாளும், மிதமான மழை என்றிருந்த போதும், Mt.Titlis போவது என்று தீர்மானித்துக் கொண்டு தூங்கப் போனோம்.

அடுத்த நாள் எழுந்து, தயிர் சாதமும், கொண்டைக்கடலை மசாலாவும் செய்து கொண்டு, Mt.Titlis புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து போக கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரமானது. கார் பார்க்கிங் செய்ய நன்று தீட்டினார்கள்:( பணத்தைக் கட்டி விட்டு, காரில் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டு முடிக்க, சுற்றிலும் மலைகள், மலை மேல் வீடுகள், உயரமான பைன் மரங்கள், சலசலவென்று ஓடும் ஒரு ஓடை, கண் எதிரே ஓங்கி உயர்ந்த Mt.Titlis. அங்கே போவதற்கு கேபிள் கார்களில் போக வேண்டும். நான்கு/ஐந்து பேர் அமர்ந்து செல்கிற மாதிரி கேபிள் கார்களில் முதலில் பயணம். மேலே போக, போக கீழே பார்க்கும் பொழுது அடிவயிற்றை கலக்குவது போல் இருந்தது.

என் பழனி மலை பயணத்திற்கு பிறகு கேபிள் கார் என்றாலே ஒரு உதறல். நான் குழந்தைகளுடன், அம்மா, அக்கா மற்றும் அவள் குழந்தைகளுடன் ஒரு முறை பழனிக்குச் சென்றிருந்தோம். ஏறும் போதே, ஒருவர், ஆடாமல் அசையாமல் உட்காருங்கள் என்று சொல்லும் போதே ஒரு பதற்றம். கொஞ்சம் திரும்பினாலே, அந்த கேபிள் கார் அவ்வளவு ஆட்டமாடியது. ஒரு வழியாக பழனிக்குப் போய் பத்திரமாக திரும்பி வந்து விட்டோம். அடுத்த நாள், மாலை செய்திகளில் ஒரு குடும்பம் கேபிள் கார் அறுந்து விழுந்ததால், கீழே சிதறுண்டு போன படத்தைப் பார்த்தவுடன் ஒரு நாள் முன்பு தான் அங்கிருந்தோம் என்ற நினைப்பு பகீரென்றிருந்தது. அழகான சிறிய குடும்பம் யாருடையோ கவனக் குறைவால் அன்று சிதறியது. இந்த நினைவு வந்ததாலோ என்னவோ மலை ஏறும் வரை, அமைதியாகவே இருந்தேன்.

எங்களுக்கு முன்பும், பின்பும், பல கேபிள் கார்கள் எங்களை கடந்து செல்வதை பார்க்க நன்றாக இருந்தது. கீழே உயரமான பைன் மரங்களும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே வர, ஒரு வழியாக மலையின் மேல்பாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு நின்று கொண்டு மலையை பார்க்கும் பொழுது அவ்வளவு பயமாக இல்லை. அங்கு சிறிது நேரம் உலாவி விட்டு, படங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் ஒரு கேபிள் கார் பயணம் மலை உச்சிக்குப் போவதற்கு.


இந்த கேபிள் கார் வட்ட வடிவமாக சுழன்று கொண்டே மேலே போகும். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கல்லவா? அதில் போவதற்கும் நன்றாக இருந்தது. அனால், மெக்கானிசம் தான் புரிவதற்கு கஷ்டமாக இருந்தது. கூட்டத்தோடு போனதால் பயம் அவ்வளவாக இல்லை. அந்த கேபிள் கார் முழுவதும் நாங்களும், மற்றும் சில இந்தியர்களும், சீன மக்களும் தான். நல்ல பெரிய கேபிள் கார். பல கேபிள் கார்கள் மேலே போவதுமாய், கீழே இறங்குவதுமாய் பார்க்க அழகாக இருந்தது. இந்த இடமும், சுழலும் கேபிள் காரும் பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் வந்துள்ளது.

உச்சிக்குப் போனால், பனிமலைப் போர்த்திய ஆல்ப்ஸ் சிகரங்கள். இங்கும் ஒரு பனிக்குகை. விதவிதமான பனி உருவங்கள். மேலே போனால், முதலில் நம்மை வரவேற்பது ஷாருக்கான் மற்றும் கஜோலின் உருவ அட்டைகள்!! அவ்வளவு இந்தியர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது அல்லது அவர்களுக்கு பாலிவுட் மிகவும் பரிச்சயம் போல. அங்கும் தத்தி தத்தி நடந்து சென்று, சிறிது நேரம் அந்த குளிரில் நடுங்கிக் கொண்டே மலையை பார்த்து, கண்களில் நீர் வழிய, காது மடல் சிவக்க இறங்கி வந்தோம். வாசலில் சூடாக மசாலா சாய், சமோசா விற்றுக் கொண்டு ஒரு இந்தியர். டீ குடித்துக் கொண்டே, பக்கத்தில் இருந்த கடைக்குப் போய் சில நினைவுப் பரிசுகள் வாங்கிக்கொண்டு மெதுவாக கீழிறங்கி வந்தோம்.

அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர மாலையாகி விட்டது. வரும் வழியில், ஒரு கடையில் இரவு உணவுக்கு தேவையான பால், சீஸ், பிரட், பழங்கள் என்று வாங்கிக் கொண்டு, மலையோரம் வீசும் காற்று, மனதோடு பாடும் பாட்டு கேட்குதா, கேட்குதா என்று மனதிலே பாடிக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் செல்வி, பாஸ்தா,  சீஸ், கிரீம், முட்டைகள் சேர்த்து அருமையான, சுவையான உணவு செய்து கொடுக்க, நாங்களும் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் எடுத்த படங்களை பார்த்து விட்டு, டிவி பார்க்க, விளையாட என்று பொழுது போக்கி விட்டுத் தூங்கப் போனோம். இன்றைய நாள் இனிதே கழிந்தது :)

Sunday, August 5, 2012

பயணக் குறிப்புகள் - Mt.Jungfrau, ஸ்விட்சர்லாந்து

Lake on our way to Interlaken Ost railway station
அடுத்த நாள் எல்லோரும் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு கிளம்புகையில் மணி பத்தரைக்கும் மேலாகி விட்டது! அங்கிருந்து ஒரு இரண்டு மணிநேரப் பயணத்தில் Interlaken என்ற மலை சூழ்ந்த இடத்தில் ஏரியைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி சிறிது நேரம் அமைதியான அந்த ஏரியையும் பின்புலத்தில் இருந்த மலைகளையும் ரசித்துவிட்டுப் படங்களையும் எடுத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன்சென்றோம். சுவிஸ்சில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஏரிகளும் தான். தண்ணீருக்கும், இயற்கை எழிலுக்கும் பஞ்சமில்லை.
Beautiful view when we waited for Murugan 

நாங்கள் போக வேண்டிய Mt.Jungfrau செல்ல அந்த வழியில் தான் போக வேண்டும்.அங்கு போய் சேர்ந்தவுடன், ஏரியில் சிறிது நேரம் செலவழித்தோம். அங்கிருந்து Mt.Jungfrau போவதற்கு ரயில் டிக்கெட்டுக்களை வாங்கவேண்டி இருந்தது. நல்ல கூட்டம்.

பாஸ்போர்ட்டைக் காட்டி பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் டிக்கெட் வாங்கினோம். அதிக விலை! அதற்கு அருகில் இருக்கும் கடையில் சில நொறுக்குத்தீனிகளையும் வாங்கிக் கொண்டு, Grindelwald என்னும் இடத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு ட்ரெயினில் Mt.Jungfrau போக வேண்டும். ட்ரெயினில் எங்களைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு மூட்டையை எடுத்து என் மகனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த தயிர் சாதமும், சிப்சும் கொடுத்து, நாங்கள் எல்லோரும் சாண்ட்விச்களைச் சாப்பிட்டு முடித்து விட, இறங்க வேண்டிய இடமும் வந்தது. மீண்டும் வேறொரு ட்ரெயினில் ஏற, Grindelwald ஸ்டேஷனில் முருகன் ஒரு பெஞ்ச் மீதேறி வண்டியில் உட்கார்ந்திருந்த எங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி நகர, செல்வி அலற, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த ஸ்டேஷனும் வர, ஒரே கலவரம். முருகனிடமிருந்து ஃபோன்-அடுத்த நிறுத்தத்தில் எங்களை இறங்கிக் கொள்ளுமாறு. அவரிடமோ ட்ரெயின் டிக்கெட் கிடையாது.
Train to Mt.Jungfrau
எப்படியோ ஒரு ஸ்டேஷன் தானே! வந்து சேர்ந்து விட்டார். மறக்க முடியாத அனுபவம். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஸ்டேஷனை சுற்றிப் பார்த்து ஹிந்தி, மாண்டரின், ஜப்பான், ஆங்கில மொழியில் வழித்தடங்கள் எழுதப்பட்டு இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது முருகனும் வந்த சேர நிம்மதியாக இருந்தது. மீண்டும் சரியான ரயிலில் ஏறி Mt.Jungfrau போனோம்.
Train view from Inside

டிக்கெட் பரிசோதகர் அழகாக இரு கைகளையும் கூப்பி நமஸ்தே சொன்னார். நாங்களும் திருப்பி நமஸ்தே சொன்னோம் வணக்கம் என்று தமிழில் சொன்னால் அவருக்குப் புரியாதென்று. இந்தியர்கள் என்றாலே ஹிந்தி பேசுபவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்! அம்மணி மூக்கு வேறு குத்தி அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு கருப்பு ஹேர் டை அடித்து பார்க்க லேடி காகா மாதிரி இருந்தார் :) அங்கிருந்து பலரும் நிறைய வயதானவர்கள் கூட நடந்து மலை ஏறிக்கொண்டிருந்தார்கள். என் கணவருக்கோ மலைக்கு நடந்து போக வேண்டும் என்ற ஆசை. ஆனால் முடியுமா என்று தெரியவில்லை. அவர்களைப் பார்த்தால் மலையேறிப் பழக்கம் உள்ளவர்கள் மாதிரி இருந்தது. அப்படி செய்திருந்தால் நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருந்திருக்கும். சரி கீழிறங்கி வரும்பொழுதாவது நடந்து வருவோம் என்று நினைத்துக் கொண்டோம். ஒரு அரை மணி நேரம் ரயில் மலையேற ஆரம்பித்தது. நல்ல நீளமான ரயில். அந்த செங்குத்தான மலையில் இந்த ரயில் மேலேறிப் போவது மிகப் பெரிய சாதனை தான்! 

View from train
எங்கு பார்த்தாலும் மலை, மலை,மலை, நடுநடுவே சின்ன சின்ன அருவிகள் என்று இயற்கையின் வண்ண ஜாலங்கள். எதை படம் பிடிப்பது, வேடிக்கைப் பார்ப்பது என்று தத்தளித்துக் கொண்டேசென்றோம். அவ்வளவு அழகான நீளமான ஒருவழி ரயில்வே பாதை. நல்ல குளிர், பனி மூட்டம். மேலே ஏற,ஏற சூரியனின் சுவடு குறைந்து கொண்டே வருவது போல் இருந்தது.
நடுவில் ஓரிடத்தில் நாங்கள் சென்ற ரயில் சிறிது நேரம் நிற்கும் எனவும் அந்த இடத்திலிருந்து ஆல்ப்ஸ் மலையை கண்டு ரசிக்கலாம் என்று சொல்ல, நாங்கள் இறங்க, அந்த நேரத்தில் இன்னொரு ரயில் அந்த பாதையைக் கடந்து போனது.
Mt.Junfrau
மீண்டும் ரயில் பயணம் தொடர, கடைசியில் வந்தே விட்டது, Mt.Jungfrau ஐரோப்பாவின் மிக உயர்ந்த மலை உச்சியில் இருந்தோம்! வெள்ளைப் பனிப்போர்த்திய உயர்ந்த மலை! சூரியஒளியில் கண்களை கூசச் செய்யும் விதமாக மின்னிக் கொண்டிருக்க சூரியன் வருவதும் போவதுமாக தன் வித்தையை காட்டிக் கொண்டிருந்தது.
Ice cave
இறங்கியவுடன் ஒரு பனிமலை குகைக்குள் நடந்துக் கொண்டே வந்தோம். காலைப் பார்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வழுக்கி கீழே விழ வேண்டியது தான். மெதுவாக பெங்குயின்கள் மாதிரி தத்தி தத்தி நடந்துக் கொண்டே போக, வாய் குளிரால் தந்தி அடிக்க, அங்கிருக்கும் பனிச் சிலைகளை பார்த்துக் கொண்டும், படங்களை எடுத்துக் கொண்டும் வெளியே வர, அப்பாடா என்றிருந்தது.
பனிக்குகை முழுவதும் பல வடிவங்களில் பொம்மைச் சிலைகள் குளிரில் உருகாமல் இருக்கிறது. அப்போ எப்படி குளிர் இருந்திருக்கும்? மெதுவாக படிகளின் வழியே மேலே சென்றால் கண்கள் கூசுகிற மாதிரி வெள்ளை வெளேரென்று மூஞ்சியில் அடிக்கிற ஆல்ப்ஸ் பனிமலை. சிறு வயதில் புவியியலில் படித்த ஆல்ப்ஸ் மலையை நேரில் தொட்டுப் பார்த்து திக்குமுக்காடித் தான் போனேன் நானும். காற்று வேறு வீச, குளிர் இன்னும் அதிகமாகி விட்டது. காது வலிக்க ஆரம்பித்து விட்டது. அங்கும் சில இடங்களில் ஒரே வழுக்கல் தான். எப்படியோ தட்டுத்தடுமாறி உள்ளே போக, ஒரே சீன மக்கள் கூட்டம். அங்கிருக்கும் சுவிஸ்நாட்டு கொடியுடன் போட்டோ எடுக்க அவ்வளவு போட்டி. சிலர் பனியை உருட்டி அடுத்தவர் மேல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பனிக்கும், வெண்மேகத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு ஓங்கியுயர்ந்த வெண்பனி மலைகள்.

Mt.Jungfrau
இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலிருந்து அரசியல்வாதிகள் குழு (யார் காசிலோ??)ஒன்று ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க ஜோடியாக வந்திருந்த கூட்டம் குளிர் காரணமாக மலைப்பக்கம் வராமல் உள்ளேயே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு பல இடங்களில் பூட்டுக்கள் கொத்துக்கொத்தாக கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். காதல் வாழ்க!
அங்கு ஒரே ஒரு சின்ன தடுப்பு தான். 
விழுந்தால் கீழே சறுக்கிக் கொண்டே மேலே பரலோகம் போக வேண்டியது தான்! அந்த இடம் மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. அது வரை சென்று படங்களை எடுத்துக் கொண்டு சில்லிட்ட மூஞ்சி சிவக்க ஆல்ப்ஸ் மலையின் உச்சியிலிருந்து இறங்க மனமில்லாமல் கீழிறங்கி வந்தோம்.

அங்கிருந்த கடையில் சுவிஸ் நினைவாக மாடுகளின் கழுத்தில் இருக்கும் பெரிய மணி ஒன்றை வாங்கினோம். அங்கு இரண்டு உயர்தர ரெஸ்டாரெண்டுகள். ஒன்று இந்தியன் ரெஸ்டாரெண்ட். நல்ல மசாலா வாசனை.
பசி வேறு. சுடச்சுட மசாலாடீயும் சைனீஸ் நூடுல்சும் வாங்கிச் சாப்பிட, அந்தக் குளிரில் இதமாக இருந்தது. கடைசி ட்ரெயின் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடும் என்று அறிவிப்பு வந்தவுடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிப் போய் வரிசையில் நிற்க, ட்ரெயின் வர, கீழே நடக்க முடியாத வருத்தத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இறங்கினோம். பலரும் கீழிறங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ற உடையும், காலுக்கு ஹைக்கிங் பூட்சும் வேண்டும். திறந்த வெளி. குளிர்காற்று, எதற்கு வம்பு?

கீழிறங்கி வரும் பொழுது இருட்டி விட்டது. நல்ல பசி வேறு. நூடுல்ஸ் எல்லாம் எந்த மூலைக்கு? ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் இருக்கா என்று தேடிக் கொண்டே வந்தோம். ஒரு சைனீஸ், ஒரு டர்கிஷ். சரி என்று டர்கிஷ் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்து உட்கார்ந்திருந்தால் கவனிக்க ஆள் இல்லை. வெறும் இரண்டே பேர் அந்த இடத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருக்கும் டேபிளில் உட்கார்ந்திருந்த அமெரிக்காவிலிருந்து வந்த தமிழ் பெண்மணியோ ஒன்றும் சாப்பிடுவதற்கு நல்லா இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு இடத்திற்கு போய் சாப்பிடுங்கள் என்று உசுப்பி விட்டார். வேறு எங்கு போவது? அதனால் அங்கேயே உட்கார்ந்திருந்தோம். அதற்குள் அவர் சுவிஸில் எல்லாமே குதிரை விலையாக இருக்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? எப்படி வந்தீர்கள்? என்று ஆயிரம் கேள்விகளை கேட்டுத் தொலைத்து எடுத்து விட்டார். நாங்களும் ஆர்டர் செய்து சாப்பாடு வருவதற்குள் பசி வாட்ட  ஒரு வழியாக முடித்து விட்டு வரும் பொழுது மிகவும் நேரமாகி விட்டது. இப்பொழுது மலைப்பயணம் பழகிவிட்டதால் பதட்டமில்லாமல் வீடு வந்து சேர்ந்தோம். இரவு நேர மலைப்பயணமும் ஒரு அழகு தான். வீடு வந்து சேரும் பொழுது அனைவரும் களைப்பால் ஓடிப் போய் தூங்கியவர்கள் தான்! எப்போது தூங்கினோம் என்று தெரியாது!




Wednesday, August 1, 2012

பயணக் குறிப்புகள் – Lake Lucerne , ஸ்விட்சர்லாந்து

அடுத்த நாள் காலையில் எழுந்து அந்தக் குளிரில் முதல் ஆளாக குளித்து முடித்து விட்டு என் கணவரையும் எழுப்பி விட்டு சூடாக என் கிரீன்டீயை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால், அம்மாடி! அப்படி ஒரு கொள்ளை அழகு!
அப்பொழுது தான் மேக மூட்டத்திலிருந்து வெளியே வரவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் சூரியன், மூடுபனி, காலைப்பனி விழுந்த பச்சைப்புற்கள், மண்ணோடு பச்சைப்புற்களின் வாசனை, மேய்ச்சலுக்கு மலை மேல் ஆடி அசைந்து செல்லும் கொளுத்த மாடுகள், கன்னுக்குட்டிகள் அதன் கழுத்திலிருந்து வரும் மணியோசை, மலை முழுவதும் அதன் எதிரொலி, மே,மே என்று கத்திக் கொண்டே செல்லும் செம்மறியாடுகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாதது என்று ஒரு புதிய உலகம்.
புத்துயிர் தரும் அந்த வாடைக் காற்று! புல்வெளி, புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று பாடுது பாடுது பாரம்மா என்று பாடிக் கொண்டே ஓட வேண்டும் போல் தோன்றியது. வேகமாக ஓடி இறங்கிடலாம். அப்புறம் மேலே ஏறுவது தான் கடினம். சிறிதுநேரம் அந்த ஏகாந்தத்தில் உலகமே மறக்க அப்படியே இயற்கையுடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்றே எண்ணத் தோன்றியது. சில நிமிடங்கள் தனியாக என் டீயை குடித்துக் கொண்டே அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே இருந்தேன்.

அதற்குள் செல்வியும் கீழே இறங்கி வந்து எல்லோருக்கும் மசாலா டீ போட, முருகனும் இறங்கி வர, மெதுவாக டீ குடித்துக் கொண்டே முன்னிரவு பயந்துக் கொண்டே வந்த நிகழ்ச்சிகளை சுத்தமாக மறந்து எல்லோரும் அந்த மலைராணியை ரசித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக குளிக்க கிளம்ப, மகளும், முருகன், செல்வியின் குழந்தைகளும் கீழே இறங்கி வர, செல்வி எல்லோருக்கும் சூப்பராக ஆம்லெட் போட்டு toast செய்து தர, நன்றாக வெண்ணை தடவி மீண்டும் ஒரு கப் டீயுடன் காலை உணவை முடித்தோம். இங்கு பதப்படுத்த பால் பாட்டில்களில் கிடைக்கிறது. அதை திறந்து பயன்படுத்தியவுடன் மீதமுள்ளதை குளிர் பெட்டியில் வைத்து இரண்டு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும். புது அனுபவமாக இருந்தது. மகனை எழுப்பி அவன் தயாராகி வருவதற்குள் நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, குடுகுடுவென கீழே இறங்கிப் போய் ஓடும் சிறு ஒடையைப் பார்த்து விட்டு மீண்டும் மலையேறி வருவதற்குள் மூச்சு முட்ட ஆரம்பித்து விட்டது. அவ்வளவு செங்குத்தான மலை. மாட்டுத் தொழுவத்தில் தன் இரண்டு குட்டிகளுடன் மாடு எனக்கென்ன என்று அசை போட்டு நின்று கொண்டிருந்தது. பெரிய்ய்ய மாடு!

எல்லோரும் விறகு வெட்ட ஆசைப்பட்டு வெட்டி முடித்தோம். கேமரா, தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகள் சகிதம் நகர்வலம் போகத் தயாரானோம். நாங்கள் எங்கள் காரிலும், முருகன் குடும்பம் அவர் காரிலும் புறப்பட, என் கணவர் வெகு ஜாக்கிரதையாக முருகன் நீண்ட தூரம் போனபிறகு காரை எடுத்துக் கிளம்பினோம். முதலில் ஏற்றம். மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியப் பகுதி. நடுவில் ஆடு, மாடுகள் தப்பிப் போகாதவாறு, இரும்புக் குழாய்களை இடைவெளிப் போட்டு வைத்திருந்தார்கள். அவைகள் போனால் அதன் நடுவில் கால் மாட்டிக்கொள்ளும். நல்ல ஐடியா தான். அதன் மேல் கார் குலுங்கிக் கொண்டே போக, கவனமாக டயர்கள் பள்ளத்தில் போகாமல் ரோடில் போகுமாறு ஒட்டிக் கொண்டே எப்படி இரவில் இந்தப் பாதையில்  வந்தோம் என்று அசந்து கொண்டே,  கடந்து வரும் மலைகளையும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த வீடுகளையும் பார்த்துக் கொண்டே மெதுவாக கீழிறங்கினோம். நாங்கள், தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒரு இருபது நிமிடத்திற்குள் ஒரு அழகிய தேவாலயம் வரும். வரும் போதே பல இடங்களில் நிறுத்திப்  படம் எடுத்துக் கொண்டோம். சுவிட்சர்லாந்தில் எங்கு எப்படி படம் எடுத்தாலும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சொர்க்கமே என்றாலும், சுவிட்சர்லாந்து போல வருமா, அது எந்நாடு என்றாலும், இந்நாட்டுக் கீடாகுமா என்று பாட்டை மாற்றிப் பாடலாம். அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் பச்சை வண்ண சுத்தமான மலைகள் எங்கு பார்த்தாலும்.


மீண்டும் GPS உதவியுடன் Lake Lucerne பயணம். அங்கு போவதற்குள் வளைந்து நெளிந்து போகும் மலைப்பாதையில் வரும் வீடுகளின் அழகையும், காலண்டரில் பார்த்த மாதிரி இருந்த இடங்களையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தோம். பல வீடுகளில் பெரிய சிலுவைகள் நெஞ்சைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஏசுவின் சிலைகளை வைத்திருந்தார்கள். அழகான பூந்தோட்டம் அநேகமாக எல்லா வீடுகளிலும். ஒரு கார் எதிரே வந்தால், ஒருவர் நின்று மற்றவருக்கு வழி விட வேண்டும். அந்த அளவுக்குத் தான் ரோடு. வரும் வழியெல்லாம் ஒ மை காட்,ஒ மை காட் என்று மலை அழகை பருகிக் கொண்டே ஒரு வழியாக Lake Lucerne வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு கடைக்குப் போய் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நடைப் பயணம்.
ரோடுகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். ஆங்காங்கே வண்ண வண்ண மலர்த்தொட்டிகள். அங்கு இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வதால் நிறைய இந்தியக் கடைகள் மற்றும் உணவகங்கள். அதைப் பார்த்தாலே ஆஹா நம்ம ஊரு கடை என்று ஒரு பரவசம். சாலையைத் தாண்டினால் ஏரி. பல படங்களில் நம் ஹீரோக்கள் ஹீரோயினுடன் ஆடிப்பாடிய அதே இடம்.

ஒருபுறம் மக்கள் சாப்பிட வசதியாக பல வகையான உணவகங்கள். மறுபுறம் நடைப்பாதைக் கடைகள் நடுவில் ஏரி என்று சுள்ளென்ற வெயிலில் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். ஏரியின் பிரபலமான ஒரிடத்தில், நின்று கொண்டு பல படங்களை எடுத்துக் கொண்டோம்-பின்புறத்தில் வண்ண வண்ண மலர்களுடன். அங்கு கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிநேரமாவது நின்று கொண்டே ஏரியின் அழகையும் எங்களை கடந்துசென்றவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிறைய சீன மக்கள்.
அந்த நேரத்தில், முருகனும், என் கணவரும் அடுத்த நாள் போக வேண்டிய இடத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கப் போனார்கள். அப்படியே மீண்டும் நடை. சுற்றுலாவிற்கு வந்திருந்த  நம் நாட்டு மக்கள் சப்பாத்திக்குள் சுருட்டிய காய்கறிகளுடன் சாப்பிடுவதைப் பார்த்த எங்களுக்கும் பசி. பல turkish உணவகங்கள். ஓரிடத்தில் போய் வயிறு முட்ட சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. வெளியே வந்து குழந்தைகள்  ஐஸ்கிரீம் சாப்பிட நாங்கள் டீ சாப்பிட்டுக் கொண்டே, ஏரியின் அருகில் உட்க்கார்ந்து கொண்டு படகுகளையும், மக்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பரந்து விரிந்த ஏரியின் தண்ணீர்  தளும்பும் ஓசையும் பின்புலத்தில் கரைந்து கொண்டிருக்கும் பனியுடன் மலைகளும் நீலநிற வானமும் இது கனவா இல்லை நினைவா என்று அடிக்கடி கிள்ளிப் பார்க்கத் தோன்றியது.
மெதுவாக சிறு சிறு தெருக்களின் வழியே சுற்ற ஆரம்பித்தோம். குறுகலான கல் தெருக்கள். வீடுகள் எல்லாம் படிகளின் மேல் ஏறிப்போனால் தான் உண்டு. ஸ்கூட்டர்கள். சைக்கிள்கள் வீட்டிற்கு வெளியில் நிற்கிறது. ஒரு கடைக்குப் போய் சுவிட்சர்லாந்து நினைவாக சிலபொருட்களை வாங்கினோம்.

அங்கு விற்கும் குக்கூ கடிகாரங்கள் மிகவும் பிரபலம். அதை எப்படி பத்திரமாக இந்தியா போய் US எடுத்துச் செல்வது என்று யோசித்து வாங்காமல் விட்டுவிட்டோம். பல வாட்ச் கடைகள். போய்த் தான் பார்ப்போமே என்று உள்ளே போனால், அங்கேயும் ஐஸ்வரியாராயும், ஷாருக்கானும் சிரித்துக் கொண்டே வாட்ச்களை அணிந்து கொண்டு படங்களில். வாட்ச்களோ  வாங்க முடியாத விலையில்:( இருப்பதிலே விலை உயர்ந்த வாட்சை பார்த்து விட்டு வெளியே வந்தோம். வரிசையாக வங்கிகள்! நம் அரசியல்வாதிகளின் கள்ளப்பணம் இருக்கும் ஸ்விஸ் பேங்க்கை  கடந்து, உணவகங்களையும் கடந்து வந்தால் ஓரிடத்தில் இந்திய உணவகம்!
மறக்காமல், ஒரு கிளிக். கீழே bata செருப்புக் கடையும். அட இது கூட இங்கே இருக்கே என்று நினைத்துக்கொண்டே, சாலையைக்  கடந்து, கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேரும் பொழுது பல மைல்கள் நடந்த களைப்பு. மீண்டும் வீட்டிற்குப் பயணம்.
கூட்டமில்லாத தெருக்கள் மற்றும்  சாலைகளைக்  கடந்து மலையேற, பெரிய பெரிய சிலுவைகள் உள்ள வீடுகளைக்  கடக்கும் பொழுது என் கணவர் அவருக்குப் பிடித்த D.H.Lawrence புத்தகத்தில் அதனைப் பற்றிய குறிப்புகளை எவ்வாறு விவரித்திருப்பார் என்று சொல்லிக்  கொண்டே வந்தார். இதை மாதிரியே ஷேக்ஸ்பியர், கீட்ஸ் என்று இடத்திற்கு தகுந்தவாறு மேற்கோள்கள்  காட்டிப் பேசிக் கொண்டே வருவதும் போவதுமாய் ஊர் உறங்கிய பிறகு மலை ஏறுவதுமாய், கிணிங், கிணிங் என்ற மணியோசையை கேட்டுக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது. வீட்டிற்கு வந்து சேரும் பொழுது இரவுநேரம்.சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு குழந்தைகள் விளையாட,   என் கணவர் தனிமையிலே ஜெர்மனியில் வாங்கிய பியரை ருசிக்க, செல்வி சமைக்க ஆரம்பிக்க, அவருடன் நான் பேசிக் கொண்டே உதவ, சுடச்சுட சாப்பிட்டு முடித்தோம். மீண்டும் குழந்தைகள் விளையாட, நாங்கள் அடுத்த நாள் போக வேண்டிய இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவதாகப்  பேசிக் கொண்டு களைப்புடனும் அடுத்த நாளுக்கான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியும் படுக்கச் சென்று விட்டோம்.

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...