Wednesday, January 30, 2013

ஜில் ஜில் திகர்தண்டா

மதுரையில் மட்டும் அதுவும் நகருக்குள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த இந்த திகர்தண்டா இப்பொழுது பல இடங்களிலும் கிடைக்கிறது.

சிறு வயதில் என் பாட்டி வீடு மஞ்சனக்காரத் தெருவில் இருந்த பொழுது, அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் தூக்குச் சட்டியில் வாங்கி வருவது வழக்கம். எனக்கு எப்போதும் எங்கு போனாலும் எப்படி செய்கிறார்கள் என்ற ஆர்வம். மஞ்சனக்காரத் தெரு முக்கில் ஒரு நாலு சக்கர வண்டியில் வைத்து ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எத்தனை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வரிசையாக கண்ணாடி டம்ளர்களை வைத்து பெரிய அகண்ட சில்வர் பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் இருக்கும் ஐஸ்கட்டிகளை இடக்கையில் வைத்து ஒரு கனத்த கரண்டி கொண்டு 'நங்நங்'கென்று போட்டு உடைக்க, உடைந்த ஐஸ் கட்டிகளை கண்ணாடி டம்ளர்களில் போடுவார். இன்னொரு பாத்திரத்தில் ஊற வைத்த கடற்பாசி இருக்கும். அதே கரண்டியில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக டம்ளர்களில் போடுவார். ஒரு தூக்குச் சட்டியில் சர்பத் இருக்கும். அதையும் கரண்டியில் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டம்ளர்களில் ஊற்றுவார். அடுத்து பாலாடை ஒரு ஸ்பூனில் எடுத்து போட்டு ஒரு ஆத்து ஆத்த, திகர்தண்டா ரெடி. நாக்கில் நீர் ஊற ஐஸ் கட்டி உருகுவதற்குள் பாட்டி வீட்டிற்கு ஓட்டம். பாட்டியும் எல்லோருக்கும் டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்க, மெதுவாக ஸ்பூன் போட்டு சாப்பிட்டால், ஆஹா! வழுவழு கடற்பாசி, இனிப்பான சர்பத் நல்ல வாசனையுடன், பாலாடையும், ஐஸ்கிரீமும் சேர்ந்து   சில்லென்று தொண்டைக்குள் இறங்கும் பொழுது அதுவும் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில்..ம்ம்ம்ம்ம்  ..

இதுவே ஸ்பெஷல் என்றால், ஐஸ்கிரீம் சேர்த்த திகர்தண்டா. அது இன்னும் சுவையாக இருக்கும். ஐஸ்கிரீம் மட்டும் எடுத்துக் கொண்டு பகல் நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிகளில் வருவார்கள். கோன் ஐஸ்கிரீம் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம் அது.வண்டி வருவது தெரிந்தவுடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்! எவ்வளவு சாப்பிட்டாலும் எடை ஏறாத காலம். இப்போது பார்த்தாலே எடை எகிறி விடுகிறது!

ஆரம்பத்தில் மஞ்சனக்காரத்தெரு முக்கிலும், கீழமாசிவீதி முக்கிலும் இருந்த கடைகள் இன்று பலவாக பெருகி விட்டிருக்கிறது. எல்லாக் கடைகளிலும் கூட்டம்! ஏனோ, வெளியூரில் இருக்கும் மக்களுக்கு இந்த சுவை அவ்வளவாக பிடிப்பதில்லை:( இப்போதெல்லாம் விருந்துகளிலும் ஐஸ்கிரீம் வைக்க இந்த கடையைத் தான் நாடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். தொண்டை வலி, இருமல், இருந்தாலும், வந்தாலும் பரவாயில்லை விருந்தில் வைக்கும் ஐஸ்கிரீமை சுவைக்காமல் பெரியவர் முதல் சிறுவர் வரை விடுவதில்லை. மதுரை மக்களை அப்படி மயக்கி வைத்திருக்கிறது இந்த ஐஸ்கிரீம்!இன்று திகர்தண்டா 30,40,50 ரூபாய்களில் கிடைக்கிறது. 50 ரூபாய்க்கு தாராளமாக ஐஸ்கிரீம், பாலாடையுடன் தொண்டைக் குழியில் இறங்கும் பொழுது 'ஜில்'லென்று - சாப்பிட்டாலே பரவசம் தான். ஐஸ் பாஸந்தியும் கிடைக்கிறது.

ஜில் ஜில் ஜிகர்தண்டா உடம்பிற்கு குளிர்ச்சியான பானம் என்கிறார்கள்.
இந்த திகர்தண்டா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால் வீட்டில் நானே பண்ணி சாப்பிடும் அளவிற்கு :)

Wednesday, January 23, 2013

இயற்கை என்னும் இளைய கன்னி -2- பனிக்காலம்

After a snow storm
மதுரையில் இருந்த வரை கோடைக்காலமும், மழைக்காலமும் தெரியும். புத்தகத்தில் படித்திருந்த மேலைநாட்டு தட்பவெப்பநிலைகளை பார்க்கும் போது தான் படித்தவைகள் புரிந்தன. நாங்கள் கனடா வந்தது பிப்ரவரி மாதம், கடும்குளிர்/பனிக்காலத்தில்! விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்தால் குளிர் பின்னி பெடலடித்து விட்டது. அடுத்த நாள் காலையில் கண்ணை கூசவைக்கும் சூரிய வெளிச்சத்தை பார்த்தவுடன், ஒகே கொஞ்சம் வெளியில் போய் விட்டு வரலாம் என்று லைட் ஜாக்கெட், பனிக்குல்லாய், கையுறை போட்டுக் கொண்டு வெளியில் இறங்கியவுடன் முகத்தில் பட்ட குளிர் காற்று ஊசி போல் குத்த சில நிமிடங்களில் காது மடல்கள் ஜிவ்வென்று சுண்டினால் அறுந்து விடும் போல அவ்வளவு வலி, திரும்பி அபார்ட்மெண்டுக்குள் தஞ்சம். இந்த ஊமை வெயிலை நம்பி இனி வெளியில் போக கூடாது. உடம்புக்கு முடியாமல் போய் விடும் என்று உரைத்தது. வாழ்க்கையில் முதன் முதலில் அனுபவித்த குளிர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாமல் போகும் விதத்தில்:( அப்போது தான் புரிந்தது ஏன் வெதர்(weather)சேனல் என்று ஒன்றிருக்கிறது என்று!

அதேபோல் தான், முதல் பனிமழையும். இரவிலிருந்தே வானம் ஒரு வித பழுப்பு நிறத்துடன் இந்தா வருகிறேன் என்று சிணுங்கி கொண்டே பஞ்சு பறப்பது போல ஆரம்பித்து, 'சடசட'வென்று சடுதியில் பஞ்சுமழையாகி 'கொட்டோ கொட்டெ'ன்று கொட்டி, சிறிது நேரத்தில் வீட்டுக் கூரைகள் எல்லாம் ஒரே வெண்பனியால் மூடப்பட்டு பார்க்கவே நன்றாக இருந்தது. காலையில் எழுந்திருந்து பார்த்தால் தெருக்கள், வீடுகள், கார்கள் எல்லாமே பனியால் மூடப்பட்டு, ஒரே 'வெள்ளைக்' காடாக பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அப்போதெல்லாம் கார் கிடையாது. அதனால் பல கஷ்டங்கள் தெரியவில்லை.


அமெரிக்கா வந்த பிறகு, மிச்சிகனில் இருந்த சமயம் அடிக்கடி snow கொட்டும். என் கணவர் தான் கார் ஓட்டுவார். பயந்து கொண்டே தான் உட்கார்ந்திருப்பேன். temperature மைனசில் போகும் போது black ice மேல் கார் போய் வழுக்கி கொண்டு எதிலாவது மோதி ஆங்காங்கே வண்டிகள் நிற்பதை பார்த்தால் பயமாக இருக்கும். அதே போல் snow பெய்யும் பொழுது wiper தள்ளிக் கொண்டே வர, நெரிசலில் ஊர்ந்து போவது மகா கொடுமை. snowstorm கொடுமையே தாங்காது. இதில் blizzard என்று சொல்லி இன்னும் பயமுறுத்தினார்கள். ஒருநாள் முழுவதும் தொடர்ந்து பனி கொட்டி, அடுத்த நாள் கதவை திறந்தால், கதவின் மேல் இருந்த snow எல்லாம் வீட்டின் முன்னறையில்:( அவசியம் இல்லாவிட்டால் வெளியே போகாதீர்கள் என்று அறிவிப்புகள். வீட்டுக்குள் இருந்தபடியே அந்த பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தோம்.


Utah வில் இருந்த பொழுது ஓரளவு snowவிற்கு பழகி விட்டோம். அங்கு காலையில் snow பெய்தால் மாலைக்குள் கரைந்து விடும். சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள். பனிசறுக்கு விளையாட என்று மலைகள். அங்கும் நண்பர்கள் விளையாடுவதை பார்க்க போனோம். சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் அழகாக snowboarding, skiing செய்வதை பார்க்க நன்றாக இருந்தது. பல நண்பர்களும் skiing பழகிக்கொண்டார்கள். அந்த விளையாட்டும் அழகு தான். மலை உச்சியிலிருந்து 'சர்சர்' என்று snow வைத் தள்ளிக் கொண்டே வளைந்து வளைந்து இறங்கி வருவதை பார்க்கவும், அவர்களை ஏற்றிக் கொண்டு லிப்ட்கள் போவதையும், சூடாக்கப்பட்ட cafetariaவில் hot chocalate குடித்துக் கொண்டே பார்ப்பதும் சுகம் தானே?

சமயங்களில் இரண்டு அடிக்கும் மேலும் snow பொழியும். பனிப்பொழிவு முடிந்தவுடன் செடிகள், கார்கள், சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளை மழை தான். அதுவும் ஒரு அழகு தான். உப்பளம் போல் தெருவெங்கும் ஒரே வெள்ளை பனி- சூரிய வெளிச்சத்தில் கண்களை கூச செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் குழந்தைகள் snow உருட்டி விளையாடுவதும், sled -ல் சறுக்குவதுமாய் இருப்பார்கள். பெற்றோர்கள் கார்களை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். இது வரை, கடுமையான பனிப்பொழிவு இருந்தும் ஒருமுறை கூட அலுவகங்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டதில்லை. முக்கால்வாசிப் பேர் வந்து விடுவார்கள் கூட. பனிப்பொழிவு என்றவுடன் இரவிலிருந்தே சாலைகளில் அதை கரைக்கும் உப்பை தெளித்து வைத்து விடுவார்கள். அதனால் சாலைகளில் ஓட்ட சிரமம் இருக்காது. தெருக்களை மெதுவாகத்தான் சுத்தம் செய்வார்கள். வீட்டிலிருந்து மெயின் ரோட்டை வந்தடைவதற்குள் கார் தாறு மாறாக போகும் :( முருகா, பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே என்று இருக்கும்.
After an ice storm
நியூயார்க் வந்த பிறகு தான் 'ஐஸ்'மழையும் பார்த்தோம். ஐஸ்மழை மிகவும் மோசமான ஒன்று. தரையில் காலை வைத்தால் 'சர்' என்று கீழேயே விழ வேண்டியது தான். அதற்கென்று இருக்கும் பூட்ஸ்களை அணிந்து போனால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஐஸ்மழைக்குப் பிறகு பார்க்க ரம்மியமாக இருக்கும். ஐஸ் கணம் தாங்காமல் மரங்களும் செடிகளும் தலை தாழ்த்தி இருப்பது போல் இருந்து ஒடிந்து விடும் கூட!வீட்டை சுற்றி icicles குச்சி குச்சியாக பார்க்க அழகாக இருந்தாலும், அந்த கூரிய முனை தலையில் விழுந்தால் அவ்வளவு தான்!

இப்படி, பனி, குளிர், ஐஸ்மழை என்று இந்த பனிக்காலம் முழுவதும் போய்க் கொண்டிருக்கும். வீட்டில் ஹீட்டர் போட்டுக் கொண்டு பில்லும் தாறுமாறாய் எகிறிக் கொண்டிருக்கும். வெளியில் போக வேண்டுமென்றால் கால் முதல் தலை வரை போர்த்திக் கொண்டு சகல அலங்காரங்களுடன் போவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். குழந்தைகள் பாடு தான் பெரும்பாடு! பல குளங்களும், ஆறுகளும், நதிகளும் உறைந்து போய் பறவைகளும் அதில் வழுக்கிக் கொண்டு போவதை பார்க்கலாம். பல இடங்களிலும் அரசாங்கமே பொது மக்களுக்காக நன்கு பராமரித்த ஐஸ் ஸ்கேட்டிங் அரங்குகளில் குழந்தைகள், பெரியவர்கள் என்று பலரும் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருப்பார்கள்.

Frozen lake

நாங்கள் இருக்கும் பகுதியில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பு Santa Speedo Sprint என்று ஆண்களும் பெண்களும் ரெட் கலர் ஸ்விம்மிங் உடை, santa hat மட்டும் போட்டுக் கொண்டு இந்த குளிரில் ஓடுவார்கள்!!! அதேபோல், ஜனவரி மாதம் முதல் நாள் அன்று, உறைந்தும் உறையாமலும் இருக்கும் ஏரியில் 'தொபுக்கடீர்' என்று குதித்து வருவார்கள்.


Polar plunge
 நினைத்தாலே புல்லரிக்கும். பார்த்தால் நமக்கு குளிர் ஜூரம் வந்து விடும் போல் இருக்கும் :( அதை பார்க்க பெரிய கூட்டமும் வரும். பெரிய ஏரிகளில் பனி நன்கு  உறைந்தவுடன் கார், பைக் ரேஸ்கள் நடக்கும். பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிலர் அந்த குளிரிலும் உறைந்த ஏரியில் துளையிட்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதற்காக காலையிலிருந்தே தயாராக சாப்பாடு, மீன் பிடிக்க தேவையான சாமான்களுடன் வந்து பல தூண்டில்களைப் போட்டு காத்துக் கொண்டிருப்பார்கள். என்னே ஒரு பொழுதுபோக்கு!

போன வருடம் snowshoeing என்று காலில் டென்னிஸ் ராக்கெட் போன்று ஒன்றை கட்டிக் கொண்டு snow வில் நடந்த அனுபவம் நன்றாக இருந்தது. பனியில் அணில்,மான்கள் நடந்த தடயங்கள் பார்த்துக் கொண்டே குளிர் காற்று முகத்தில் அடிக்க தத்தி தத்தி பனியில் நடந்தது என்று  ஒரு புதிய அனுபவம்!

Bike race on a frozen lake



ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என்று பாடிக் கொண்டே இருக்கலாம் இந்த பனிக்காலத்தில்..






My son walking on a frozen lake

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...