பாண்டிச்சேரியின் நெரிசலில் புகுந்து அந்த மாநில முதலமைச்சர் போஸ்டர்களை தாண்டி போனால் ஒரு சிறிய குறுகலான தெருவில் மணக்குள விநாயகர் கோவில். பல கல்லூரிகள், வியாபாரங்கள் இவர் பெயரில் கனஜோராக நடக்கிறது. ஆங்கில வருடப்பிறப்பிற்கு முன் மற்றும் விடுமுறை காலம், அய்யப்ப, செவ்வாடை பக்தர்கள் வேறு என்று கூட்டம். நுழை வாயிலில் பூக்கடைகள், பொம்மைக்கடைகள் என்று பலவிதமான கடைகள். உள்ளே ஏசி காற்றில் 'சில்'லென்று விநாயகர்! அன்று வெள்ளி கவசம் அணிந்து விபூதி வாசத்துடன் தரிசனம் தந்து கொண்டிருந்தார். அவரை வலம் வருகையில் வேறு பல சன்னிதானங்கள்! சின்னக் கோவில். நல்ல கூட்டம் வருகிறது.
மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சேர்ந்து நின்று கொண்டு சுவாமி தரிசனம் முடித்தோம். ஆங்கில வருடப்பிறப்பை ஒட்டி வெள்ளி கவசத்துடன் அங்கிருந்த மூலவர், உற்சவர்களுக்கு அன்று அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல விபூதி, சந்தனம், மலர்கள் நறுமணத்துடன் கோவில் திவ்யமாக இருந்தது. வெளியில் கொலுசு போட்ட கோவில்யானை காசு வாங்கி கொண்டு ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தது. வெளியில் வந்து சிறிது நேரம் கடைகளை அலசி விட்டு, ஸ்ரீஅரவிந்தர் ஆஸ்ரமம் நோக்கி நடந்தோம்.
அப்படியே சிறிது தூரம் நடந்து போனால், ஸ்ரீஅரவிந்தர் ஆஷ்ரமம். முதலில் என் கணவர் மற்றும் அவர் நண்பர் குடும்பத்துடன் 2011ல் வந்திருந்தோம். கற்கள் பதித்தஅந்த தெருக்கள், மரங்களுடன் கூடிய உயரமான வீடுகள்- வித்தியாசமாக இருக்கிறது.
ஸ்ரீஅரவிந்தர் ஆஷ்ரமத்தின் வெளியில் செருப்புகள் வைக்க வசதிகள் செய்திருக்கிறார்கள். உள்ளே நுழையும் பொழுதே ஒருவர் அமைதியாக செல்லுமாறு சொல்ல பல பூச்செடிகளை கடந்து போனால் எதிரே சமாதி. மலர்கள் வைத்து அதை சுற்றி மக்கள் நடந்து போய் வணங்குகிறார்கள். அங்கு மர நிழலில், வாசற்படிகளில் உட்கார்ந்து மணிக்கணக்கில் கண்களை மூடி தியானம் செய்கிறார்கள். 'சிலுசிலு'வென்ற காற்றுடன் அந்த பரந்த இடமும், அமைதியும் மனதிற்கு இதமாக இருக்கிறது.
ஸ்ரீஅரவிந்தர் வாழ்ந்த அறையில் சில நிமிடங்கள் தியானம் செய்ய ஸ்பெஷல் அனுமதி வேண்டும். அங்கு அவர் உட்கார்ந்த நாற்காலி, படுத்திருந்த கட்டில், பயன்படுத்திய பொருட்கள் இருக்கிறது. நாம் மூச்சு விடும் சப்தம் தவிர வேறு எதுவும் கேட்க முடியாது. அவ்வளவு நிசப்தம் அங்கே. முதல் முறை போயிருந்த பொழுது அங்கு அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. அங்கும் பல வெளி நாட்டினரை பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் புத்தக சாலையில் ஸ்ரீஅரவிந்தர் மற்றும் அன்னை எழுதிய பல புத்தகங்களும் கிடைக்கிறது. புத்தகம் வாங்கவும் நல்ல கூட்டம்.
பிறகு, என் கணவரின் நண்பருக்கு தொலைபேசியில் நாங்கள் வீட்டிற்கு வருவதை சொல்லி விட்டு வழி கேட்டு தெரிந்து கொண்டு அவர் வீட்டிற்கு சென்றோம். மிகவும் குறுகிய தெருக்களை கடந்து சென்றோம். அந்த தெருக்களில் கூட சாமர்த்தியமாக கார்களை ஓட்டுகிறார்கள்!!! 'ஜேஜே' என்று மக்கள் வெளியில் அமர்ந்து கொண்டும், கடைகளுக்கு போய்க் கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்தில் மற்றுமொரு நண்பரும் எங்களை பார்க்க வந்திருந்தார். பேசிக் கொண்டே மதிய உணவு அவர் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டோம். சுவையான உணவு, அன்பான மனிதர்கள். நேரம்
போனதே தெரியவில்லை.
அன்னையால் நிறுவப்பெற்ற 'ஆரோவில்' போகும் சந்தர்ப்பமும் 2011-ல் எங்களுக்கு கிடைத்தது. அதற்கு முன்பதிவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. என் கணவரின் நண்பர் எங்களுக்காக முன்பதிவு செய்து வைத்திருந்தார். ஆரோவில் பாண்டிச்சேரியிலிருந்து சிறிது தொலைவில் இருக்கிறது. நண்பர் மூலமாக அறிமுகமான இன்னொரு நண்பர் எங்களை அவர் காரில் அங்கே அழைத்துப் போனார். போகும் வழி என்னவோ ஒரு வசதியில்லாத கிராமத்தை போல் இருந்தது. பல வெளிநாட்டினரும் சைக்கிளிலும், நடந்தும் போய்க்கொண்டிருந்தார்கள்.
வெள்ளை உடையணிந்த ஆசிரமத்துக்காரர்கள் முகத்தில் அமைதி தழுவ வரவேற்று ஒரு பஸ்ஸில் குழுக்களாக அழைத்து சென்றார்கள். வறண்ட பாலை நிலமாக இருந்த இடத்தை சோலைவனமாக மரங்களும், செடிகளும், புற்களும் என்றும் பல வருடங்கள் உழைத்து மாற்றியதாக சொன்னார்கள். ஒவ்வொரு குழுக்களையும் அழைத்துக் கொண்டு மரங்களை பற்றியும் அந்த கட்டிடத்தைப் பற்றியும் விரிவாக சொல்லிக் கொண்டே மாத்ரிமந்திர் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
மாத்ரிமந்திர்- வேறு உலகம். அங்கே அமைதி தவிர வேறு எதுவுமில்லை. பூகோள வடிவ அந்த கட்டிடம் நான்கு பாதைகளாக சுற்றிலும் புற்கள் சூழ, தொலைவில் மரங்கள் அடர்த்தியாக, உள்ளே படிகளில் இறங்க, வெயில் படாத வகையில் அந்த கட்டிடம் 'சில்'லென்றிருக்கிறது. உள்ளே இறங்கி தியானம் செய்யும் அறைக்குள் போக, அவரவர் வசதிக்கேற்ப உட்கார்ந்து தியானம் செய்யலாம். சில நேரங்களில் அமைதியாக இருப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே ஒரு சவாலான வேலை தான். அப்பொழுது பூதாகரமாக எழும்பும் விஷயங்களை அடக்க முயல, முடியாமல் தத்தளிப்பதற்குள் அவர்கள் விளக்கைப் போட தூக்கத்தில் இருந்து எழுந்த மாதிரி இருந்தது. அதற்குப் பின்னும் சிலர் கண்மூடி தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதுவும் என் வாழ்க்கையில் ஒரு நல்ல அனுபவம்.