கோவிலுக்கு எதிரில் காபிக்கடைகளைத் தாண்டி ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவதற்குள் ஒருவர் வேகமாக வந்து இங்கு நாடி ஜோசியம் அருமையாக சொல்வார்கள் என்று பரபரத்தார்! எனக்கும் பார்த்தால் தான் என்ன என்று தோன்றினாலும் எதையாவது சொல்லி மனச்சஞ்சலம் வந்து விட்டால் என்று எண்ணிக் கொண்டு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டு கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஓரமாக பூக்கள் விற்பவர்களும் வரிசையாக கையேந்தி பிச்சை எடுப்பவர்களும் என்று கோவிலின் முன் கூட்டம்.
சின்னக் கோபுரம் தான். வைத்தீஸ்வரன் நடுநாயகமாக இருக்க, தையல்நாயகி அம்மன் அழகான அலங்காரத்துடன் இருந்தார். முருகன், விநாயகர், அங்காரகன், சூரியன், தன்வந்தரி என்று தனித்தனி விக்கிரகங்கள். ஓரளவு கூட்டமும் இருந்தது. கோவில் குளம், மரங்கள் என்று கோவில்சுற்றும் நன்றாக இருந்தது. நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை.
கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு கும்பகோணம் நோக்கிப் பயணம். வரும் வழியில் மயிலாடுதுறை தாண்டி வரும் பொழுது சணல் கயிற்றில் செய்த கூடைகள், அமரும் இருக்கைகள் நிறைய விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக கும்பகோணம் வந்தவுடன் முதலில் தெரிந்த ஒரு ஹோட்டலில் நிறுத்தி ஒரிஜினல் கும்பகோணம் பில்டர் காபி குடித்தோம் ஆங்கில வருடப்பிறப்பை ஒட்டி கடையை வண்ண பலூன்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்திருந்தனர். அங்கு ஆரம்பித்த காபி குடிக்கும் பழக்கம் மதுரை வரும் வரை நீண்டது. காபி சுவை பேஷ் பேஷ், அருமையாக இருந்தது. பூஸ்ட், ஹார்லிக்ஸ் கூட கடைகளில் கிடைக்கிறது!
கும்பகோணத்தில் நாங்கள் தங்கப் போகின்ற ஹோட்டல் வழி கேட்டு அங்குப் போனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் நடனப் போட்டியில் வென்ற ஜோடி ஆடுகிறது, இன்னொரு கூட்டம் பாடுகிறது என்று 'சர்வ' அலங்காரங்களுடன் இருந்ததைப் பார்த்து விட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மேனேஜரும் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று சொன்னவுடன் பேசமால் கோவில் பக்கம் இருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினோம்.
கும்பகோணம் உள்ளே நுழைந்தவுடன் நெரிசலான குறுகிய தெரு வழியாக குளத்தை தாண்டிப் போனால் எதிரே கோவில் கோபுரம்- சிவ,சிவ என்று பக்கவாட்டில் பார்த்தால் பெருமாள் கோவில்- கோவிந்தா கோவிந்தா
தலை நிமிர்ந்து பார்த்தால் கோபுரங்கள்! இது தான் கும்பகோணம்!
விதவிதமான கடைகள். உயர்ந்த கட்டிடங்களில் நகை அணிந்த சீமாட்டிகளின் வண்ண விளம்பரங்கள், ஜோய் ஆலுக்காசுக்காக சிரித்துக் கொண்டே நடிகைகள். தமிழ்நாட்டைப் பறைசாற்றும் விதத்தில் ஜெனரேட்டர், இன்வேர்ட்டர் உதவியில் விளக்குகள். வந்தாரை வரவேற்கும் கொசுக்கள்
ஒரு வழியாக ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு விட்டு சிறிது நேரம் புது வருட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹோட்டல்களில் தவறாமல் கொசுவிரட்டியும் இருக்கிறது. ஏசியும் இருந்தது
நடுநடுவே அம்மா, அக்கா, தங்கை, தம்பி, கணவர் என்று எல்லோருடனும் ஊர் வந்து சேர்ந்த தகவலை சொல்லி விட்டு, என் தம்பியும் இரவு உணவு முடித்து விட்டு வர, சூடான பாலையும் குடித்து விட்டு, அடுத்த நாள் போகப் போகிற சூறாவளி கோவில் பயணத்தை நினைத்துக் கொண்டே நாங்கள் தூங்கியும் போனோம்.