Friday, May 10, 2013

முதல் மரியாதை - 1

நம்மில் பலருக்கும் நம்முடைய தாத்தா, பாட்டிகளுடன் வாழ்ந்த வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். எனக்கு அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா என்று இரு பாட்டிகளுடன் வாழ்ந்த வாழ்க்கையும் பல அனுபவங்களை கற்றுத் தந்தது. தாத்தாக்களை பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

என் பாட்டி (அப்பாவின் அம்மா) என்றதும் அவருடைய களையான முகமும், பெரிய பெல்ஜியன் வைரத்தோடுகளும், பட்டையான தங்க வளையல்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மூன்று வட தங்கச்சங்கிலியும், அந்த காலத்தில் வயதான பெண்கள்மகாரஷ்ட்ரிய பெண்கள் ஸ்டைலில் அணியும் பட்டுச்சேலையும், நெற்றியில் விபூதியுமாக இன்றும் அவர் முகம் நன்கு நினைவில் இருக்கிறது.

அவருக்கென்று ஒரு பெரிய கருப்புநிற மர பீரோ ஒன்று அவருடைய ரூமில் இருந்தது. அவருடைய தேவைகள் மிகவும் குறைவானதாகவே இருந்தது. அழகாக அவருடைய சேலைகளை அடுக்கி வைத்திருப்பார். இரண்டு சின்ன டிராயர்களில் அவருடைய நகைகள் இருக்கும். பீரோவின் சாவி அவருடைய கழுத்தில் இருக்கும் ஒரு செயினில் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்து அவருக்கு கண் பார்வை கிடையாது. ஆனால் வீடு முழுவதும் வளைய வருவார். ஒரு முறை வைரத்தோட்டை தவற விட்டு, வீடே அமளி துமளி ஆகி விட்டது. அம்மாவிற்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கி கொடுப்பது, பேச்சு துணை என்று அவருடைய பங்களிப்பு இருக்கும்.

தினமும் காலையில் குளித்து விட்டு தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்வார். பிறகு தாத்தா படத்தின் முன் சிறிது நேரம் வணங்கி விட்டு காலை சாப்பாடு சாப்பிடுவார். தன் ஒரே மகளை இளம் வயதில் திருமணம் செய்து கொடுத்து ஓரிரு வருடங்களிலேயே பறி கொடுத்தவர். அத்தையையும் படத்தில் தான் பார்த்திருக்கிறோம்.

நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுவார். அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களாகட்டும், காய்கறிகளாகட்டும். தமிழகம், கேசவன், அம்சவல்லி பிரியாணியையும் விரும்பி சாப்பிடுவார். நாகலெட்சுமி, உட்லேண்ட்ஸ் என்று அரசமரம் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருந்தும் தோசை, பூரி, சப்பாத்தி வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். இதைத் தவிர வீட்டில் செய்யும் பட்சணங்களையும் விரும்பி சாப்பிடுவார். நன்றாக சுவையாக சமைக்கவும் செய்வார் என்று அம்மா சொல்வார்.

வீட்டில் பாட்டி இருந்ததால் அவரைப் பார்த்து பேசி விட்டுப் போக என்று அடிக்கடி உறவினர்கள் வந்து போவார்கள். சிறிது நேரம் இருந்து பேசி ஒரு காபி குடித்து விட்டு எங்களுடனும் பேசி விட்டு போவார்கள். அவருக்கும் நன்கு பொழுது போகும். அவர்களும் தங்கள் மனக்குறைகளை சொல்ல, பாட்டியும் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்ல வந்தவர்களும் அன்பு பாராட்டிச் செல்வார்கள். வீட்டோடு சாயப்பட்டறையும் இருந்ததால், வேலைக்கார்களுடனும் அவர்களுடைய குசலம் விசாரித்துக் கொண்டிருப்பார்.

மாலை வேளைகளில், அவருடைய தோழிகளுடன் அல்லது உறவினர்களுடன் பேசவோ சிறிது தூரம் நடக்கவோ என்றால் அவர் கையை பிடித்து அழைத்துச் செல்வோம். அவருடன் பிறந்தவர்கள் குடும்பமும் அருகில் இருந்ததால் வீட்டு விசேஷங்களுக்குத் தவறாமல் பாட்டியுடன் போய் வருவோம். அப்பா, அம்மா எங்களை கண்டிக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாய் அவர்களை கண்டிப்பார். அழுகிற எங்களுக்கு அறிவுரைகளும் சொல்லுவார். அனைவரையும் அணைத்து சென்றவர். என் மாமாக்கள், பெரியம்மாக்கள், பாட்டி என்று யார் வந்தாலும் அனைவரையும் அன்புடன் வரவேற்று பேசுவார்.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் பல குழந்தைகளை பெற்று, இழந்து, கடைசியில் என் அப்பா, பெரியப்பா மட்டும் மிஞ்சி மிகுந்த பாசத்துடன் வளர்த்தவர். பேரக்குழந்தைகள் மேலும் மிகுந்த அன்புடன் இருந்தவர். பல துயரங்களையும், அனுபவங்களையும் கண்டு கஷ்டப்பட்டுத் தன் வாரிசுகளுக்கு வீடுகள், நகைகள் என்று சொத்து சேர்த்து வைத்த புண்ணியவதி. மருமகளை மகளாக நினைத்தவர்.

அவர் சாப்பிடும் கரும்புத்துண்டிலிருந்து, பழங்கள், வெத்தலை வரை கேட்டு வாங்கி அவரை கஷ்டப்படுத்தியதும் உண்டு. அவருக்கு கால் அமுக்கி விடுவதும், மருந்து கொடுப்பதும், வெத்தலையை இடித்துக் கொடுப்பதும்  என்று அம்மா, அம்மா என்று அவரையே சுற்றிசுற்றி வந்த காலமும் உண்டு.

அவருடைய இறப்பு தான் என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் இழப்பு. அவருடைய இறுதி நாட்களில் அவர் பட்ட கஷ்டங்களை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. பள்ளி விட்டு வந்தவுடன் சொந்தங்கள் பாட்டி வாயில் கொஞ்சம் பால் ஊற்றுங்கள் என்று சொல்லும் பொழுது அழுது கொண்டே அவர் வாயில் பால் ஊற்றியதை நினைத்தால் அவர் உயிர் சீக்கிரம் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அவர் இறந்த அன்று நடுக்கூடத்தில் அவர் உடலை சுற்றி அழுது கொண்டிருந்த சுற்றமும், அவர்களை பார்த்து நாங்களும் அழுது கொண்டே நின்றதும், அதுவரை அழுது பார்க்காத அப்பா அழுவதை பார்த்ததும், சரசரவென்று தாரை,தாரையாக அழுததும்...

இப்படி ஒரு பாட்டியின் அன்பு, அருகாமை என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

என் அம்மா மற்றும் பெரியம்மா வருகையினால் அந்த குறை சிறிது போயிருக்கிறது.

பாட்டி என்கிற உறவு மகத்தானது. அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும்.

அனைத்து தாய் உள்ளங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்!


14 comments:

  1. 100% உண்மை தான்... அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நன்கு புரியும்...

    அன்னையர் தின அன்பு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. brought back my memories i feel like cing my granny this moment!

    ReplyDelete
  3. Brought back my memories too! wanna c my granny this moment!

    ReplyDelete
  4. என் அம்மாச்சியிடம் இருந்து கிடைத்த அன்பும், அரவணைப்பும், ஆசீர்வாதமும்தான் வாழ்வின் பல தருணங்களில் எனக்குத் துனை நின்றதாய் நம்பியிருக்கிறேன்.அத்தகைய உயர்ந்த ஒரு அன்பை, அரவணைப்பினை இரு தினங்களுக்கு முன்னர் வரை என் குழந்தைகளும் அனுபவித்திருந்தனர். பாட்டிகள் எப்போதுமே விசேடமானவர்கள். தாய்மையின் உயர்ந்ததோர் நிலை அது.

    ReplyDelete
    Replies
    1. பாட்டி என்கிற உறவு பேரக்குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
      அந்த மாதிரி பாட்டிகள் கிடைப்பதும் அரிதாகிக் கொண்டிருக்கிறது :(


      பாட்டியை இழந்த குழந்தைகளுக்கு என் ஆறுதல்கள்.

      Delete
  5. Very beautiful recording...just a small suggestion, perhaps Grandma was wearing Maharashtrian style saree...☺ than Gujarathi style..Thanks

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக் காட்டியதற்கு நன்றி, மிதிலா. மாறி விடுகிறேன்.

      Delete
  6. I had the blessing of conversing with my Grandmothers viz. ammo & ayambo (ainghErambo).

    ReplyDelete
  7. Anbirkum undho adaikkum thaal miss my paati

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...