Sunday, May 12, 2013

முதல் மரியாதை - 2

என் அம்மாவின் அம்மா (ஐங்கேர் அம்போ/அயம்போ) வேறு குணாதியசங்களை கொண்டவர். கொஞ்சம் கண்டிப்பானவர். எவரையும் எளிதில் நம்பி விட மாட்டார்.

அவரோடு கீதாபவனம்,  திருவிழாக்களுக்கும், விடுமுறையில் குற்றாலம், பழனி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், மாரியம்மன் தெப்பக்குளம், யானைமலை என்று கோவில்களுக்கும், திரைப்படங்கள் என்று பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். நிறைய கை வைத்தியம் தெரிந்தவர். சுவையாக சமைக்கவும் செய்வார்.

அவரின் வைர மூக்குத்தியும், தோடுகளும், வளையல்களும், காசை இடுப்பில் சொருகிகொள்ளும் விதமும், தாயம் விளையாடும் நேர்த்தியும், மற்றவர்களை கடிந்து கொள்வதிலும், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஆட்களை பார்த்தவுடன் எடை போடுவதிலும், என்று என் அப்பாவின் அம்மாவிடமிருந்து பல வித்தியாசங்கள் இருந்தது.

ஒரு பெரிய குடும்பத்தை வளர்த்து ஆளாக்கிய விதத்தில் அவரின் ஆளுமை மிகவும் பிடிக்கும். கடைசி வரை யாரையும் அண்டி வாழாமல் தனியாகவே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டிய அவருடைய மனதைரியம் ரொம்பவே பிடிக்கும்.

நல்ல தாத்தா, பாட்டிகளுடன் வளரும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், அந்த வாய்ப்பை தர மறுக்கும் மகனோ/மருமகளோ துர்பாக்கியசாலிகள்.

சில தாத்தா,பாட்டிகள் இருந்தும் இல்லாமலிருப்பதே மேல் என்ற நிலைமையும் உண்டு. அவ்வளவு அராஜகம்:( அவர்களை விட்டு ஒதுங்கி இருத்தலே நலம்.

சில வீடுகளில் நாலைந்து தலைமுறை சேர்ந்து இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி என்று!

கொடுத்துவைத்தவர்கள்!

அனைத்து தாய் உள்ளங்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்!



1 comment:

  1. உண்மையிலேயே நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...