Tuesday, January 26, 2016

2015 - நியூயார்க் - சென்னை

பல நேரங்களிலும் பயணங்கள் சுவாரசியமாகவும், பலவிதமான மனிதர்களையும், புதுப்புது இடங்களையும், இயற்கையான நிகழ்வுகளையும் கண்டுகளிக்க வைக்கும் அனுபவமாக இருக்கும். நீண்ட பயணங்களில் சின்னச் சின்ன விஷயங்களை கூர்ந்து நோக்கினால் களைப்பும் பறந்து தான் போகும். விமானம் ஏறுவதற்கு முன்பிருந்து இறங்கும் வரை நம்மை அறியாமலே பல மக்களை சர்வ சாதாரணமாக கடந்து கொண்டிருந்தாலும் சிலரை பார்த்தும் சிலருடன் பேசியும் பல ஆச்சரியமான தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
அப்படித்தான் ஆரம்பமாகியது என்னுடைய நியூயார்க்- துபாய்-சென்னை பயணமும். நண்பர் ஒருவர் அவருடைய பத்து வயது மகளைச் சென்னையில் உறவுக்காரர்களிடம் சேர்த்திடமுடியுமா என்று கேட்டதால் அந்தப் பெண்ணும் என்னுடன் பயணித்தாள்.

மாலை நேர வாகன நெரிசல்களுடன் போக்குவரத்து ஸ்தம்பித்த நியூயார்க் நகர மேம்பாலங்கள் அழகு தான்! கட்டிடக்குவியல்களாய் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நகரம். மனிதர்கள், கட்டிடங்கள், மரங்கள் மெல்ல மெல்ல கண்ணில் இருந்து மறைய, வெண்பொதி மேகங்களுக்குள் தஞ்சமானது விமானம்.

அருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானிய பெண்மணி பல வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள், கணவரை விட்டுவிட்டு தான் மட்டும் கராச்சி செல்வதாக மிகுந்த குதூகலாத்துடன்சொன்னார். அவர் கணவர் ஆரம்ப நாட்களில் வேலை கிடைக்காமல் மிகுந்த சிரமத்துடன் இருந்ததாகவும் நீங்கள் எப்படி அமெரிக்கா வந்தீர்கள்? எப்பொழுது வந்தீர்கள்? என்ன படித்திருக்கிறீர்கள் ? இந்தியாவில் எங்கிருக்கிறீர்கள்? ஒரே கேள்விக்கணைகள் தான்! என் மனதிலோ, ஒர்  இந்தியன் வேலை பார்க்க ஹெச்-1 விசா வாங்கிக் கொண்டு தான் வரமுடிகிறது. இவர்கள் மட்டும் எப்படி வேலையும் இல்லாமல் வரமுடிகிறதோ? என்ற கேள்வி! சாப்பாடு வரும் வரை பாகிஸ்தானைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார். தனக்குப் பல இந்திய குடும்பங்களை நன்கு தெரியுமென்றும் அனைவரும் படித்திருக்கிறார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்! அவருடைய பேச்சில்அவர் தாய்நாட்டின் போக்கைப் பற்றின பயமும் வருத்தமும் நிறையவே இருந்தது.

பயணத்தை முன்னிட்டு படிக்கக் கொண்டு வந்திருந்த மின் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்க, அதன் சுவாரசியத்தில் பல மணி நேரங்கள் சென்றதே தெரியவில்லை. அமெரிக்க நேரப்படி இரவானதும் தூக்கமும் கண்களைத் தழுவ, கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டே தூங்கியும் தூங்காமலும்... விழித்துப் பார்த்தால் விமானமே தூங்கி வழிய, சரி, ஏதாவது படம் பார்க்கலாம் என்று ஒரு படத்தையும் பார்த்தாகி விட்டது. இரவா பகலாஒரு சிறு குழப்பம். ஜன்னல் கதவை திறந்து பார்த்தால் கண் கூசுகிறது. ஐரோப்பாவின் மேல் பறக்கிறோம் போலிருக்கிறது.அங்கு விடிந்து விட்டிருந்தது. இப்படியே மாறி மாறி புத்தகம், டிவி, கேம்ஸ் , சாப்பாடு என பொழுதுகள் கரைந்து ...

ஒரு வழியாக பதினான்கு மணிநேரங்களுக்குப் பிறகு பாலைவனச் சோலையாம் துபாய் மண்ணில் விமானம் தரையிறங்கியது. மிகுந்த ஆவலுடன் துபாயை எதிர்நோக்கியிருந்தேன். புழுதிப்படலத்துடன் 'தகதக'வென கொளுத்தும் வெயில் மதுரையை விட மோசமாக இருந்தது. மதுரை மக்கள் விழித்துக் கொள்ளா விட்டால் விரைவில் மதுரையும் ஒரு வறண்ட பாலைவனம் ஆகிவிடும் போலிருக்கிறது! மேலிருந்து பார்க்கையில் கண்ணைக் கவரும் வகையில் கடல் மேல் பனைமர வடிவில் கட்டிய அழகு வீடுகள். பேரிச்சம்பழ, பனை மரங்கள், செடிகள்  பாலைவனத்தில் பசுமையை போராடி கொண்டு வந்திருக்கிறார்கள். எப்படித்தான் இந்த வெயிலில் மனிதர்களும், மரங்களும் தாக்குப்பிடிக்க முடிகிறதோ? 'கசகச'வென்று ஒரே வெக்கை காற்று!


துபாய் நகரின் வளர்ச்சியை பறைச்சாற்றும் ஒங்கியுயர்ந்த வானளாவிய கட்டிடங்கள் பார்க்க அழகாக இருந்தது. துபாய் விமான நிலையம் கொசகொசவென பல கடைகளுடன் கூட்டமாக இருக்க... தனியாக இருந்திருந்தால் நான் மட்டும் அங்கிருக்கும் அனைத்து நகைக்கடைகளையும் ஒரு விசிட் செய்திருப்பேன். வந்ததற்கு இரண்டு மூன்று கடைகளைப் பார்த்து விடலாம் என்று என்னுடன் வந்திருந்த குட்டிப்பெண்ணிடம் கடைகளைச் சுற்றிப் பார்க்கலாமா என்றவுடன் ஓ! போகலாம் ஆன்ட்டி. அம்மா எங்களைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்கள். ஆனால் எனக்கு வேடிக்கைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும் என்றவுடன், சரி வா என்று கடைகளைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு நகையையும் விடாமல் 'ஆ'வென்று கண்களை அகல விரித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள். அழகு!

நியூஜெர்சியில் இதைவிட அழகான டிசைன்களில் நகைகள் கிடைக்கிறது. எதற்குத் துபாய் துபாய் என்று அடித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை . கடைகளிலும் நேர்த்தியாக நகைகள் இல்லாமல் ஏனோதானோவென்று இருப்பது போல் தோன்ற, வைர நகைகளும் அழுது வடிந்து கொண்டிருந்தது. இன்னும் உள்ளே சென்றால் நல்ல கடைகள் இருக்குமோ என்னவோ? பலரும் தங்க பிஸ்கோத்துகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள்!!!

பெண்களும் ஆண்களுமாய் சரியான கூட்டம். இஸ்லாமிய பருவ வயதுப் பெண்கள் முகம் மட்டும் காட்டிக்கொண்டு உடலை மறைத்த உடையணிந்தபடி இருக்க, திருமணமான பெண்கள் பலரும் உடல் முழுவதும் கருப்புத் துணியைப் போர்த்தியபடி மெல்லத் திறந்தது கதவு அமலாக்களாக அவர்கள் வீட்டு ஆண்களுடன் நடமாடிக் கொண்டிருந்தார்கள். நீண்ட வெள்ளை அங்கிகளை அணிந்து கொண்டு ஆண்கள்! இந்த வெயிலில் எப்படித்தான் கருப்புநிற ஆடைகளை அணிகிறார்களோ?? அதுவும் பெண்களுக்கு மட்டும் தான் இந்தச் சோதனை!

தாய்நாட்டிற்குச் செல்லும் இந்தியர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். கைகளில் லேட்டஸ்ட் ஃபோன் சகிதம் 'பளபள'வென டிப்டாப்பாக முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு படித்து நல்ல வேலையில் இருந்தவர்கள் போன்ற தோற்றத்தில் பலரும், கைகளில் பரிசுப்பொருட்களுடன் தங்கள் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே சிறு வேலையில் இருப்பவர்கள் பலரும் என பெருங்கூட்டம்!

எப்படி நேரம் ஓடியது என்றே தெரியவில்லை. சென்னை செல்லும் விமானம் தயாராகி விட்டது. இந்தக் குழந்தை யார்? ஏன் உங்களுடன் பயணிக்கிறாள்? ஏதோ குழந்தையைக் கடத்துவதைப் போல அதிகாரிக்கு மேல் அதிகாரிகள் வேறு சந்தேகத்துடன் கேள்வி மேல் கேள்வி. அடக்கொடுமையே! எங்கேயாவது இவள் என் மகள்னு சொல்லி இருக்கேனா? இல்லை. என்ன ஏது என்று கேட்காமல் நீங்களாகக் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. இவள் நண்பரின் மகள். இவளை சென்னையில் அவள் அம்மாவிடம் கொண்டு சேர்க்கச் சொன்னார்கள். முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறாள். இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என் டிக்கெட் என்னிடம் இருக்கிறது. அவள் டிக்கெட் அவளிடம் இருக்கிறது. இனி அவள் உங்கள் பொறுப்பு என்றவுடன் ஒன்றுமில்லை. சாரி சாரி மேடம். நீங்கள் போகலாம் என்று அனுப்பி வைத்தார்கள். அட ! கூனா முனாக்களா... மனதிற்குள் அவர்களைச் சாடிக் கொண்டே...இருக்கையில் அமர, விரைவில்சென்னையில் இருப்போம் என்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் பயணம் ஆரம்பிக்க...

நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் நால்வர் அமரும் இருக்கையில் மூன்று இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு ஷேக்... அப்பப்பப்பா எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆள்! நல்ல உயரமும்கூட. அவர் மனைவி பூச்சி மாதிரி ஒரு ஓரத்தில்! நிஜமாகவே நான்கு டிக்கெட் வாங்கி இருப்பார்களோ?? ஒரு வயது குழந்தை வேறு ஓடிக்கொண்டிருந்தது! குண்டாக இருப்பவர்களுக்கு இருக்கும் சிரித்த முகம். சுமாரான ஆங்கிலத்தில்முதல் முறை இந்தியா செல்கிறோம் என்று சொன்னார். அந்தச் சுட்டிப் பெண் மழலை அராபியில் அழகாகப் பேசிக்கொண்டேஏஏஏஏஏஏஏஏ வந்தாள். என்ன, எனக்குத் தான் எதுவும் புரியவில்லை. ஆனாலும் ரசிக்க வைத்தாள். பெண் குழந்தையல்லவா?!

ஒரு படமும் பார்த்து முடிய, சென்னையில் விரைவில் இறங்கப் போகிறோம் என்ற விமானியின் அறிக்கை பலரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டது. மழையில்லாத இரவு இனிதே வரவேற்க...அப்பாடா! ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம் என்று நினைக்கும் பொழுதே அடுத்த நாள் காலை வரை எப்படி பொழுதை போக்குவது என்ற கவலையும் கூடவே தொடர்ந்தது.

விரைவிலேயே குடியேற்ற சோதனைச்சாவடியை கடந்து தூக்க கலக்கத்திலிருந்த பயணிகளுடன் பெட்டிகளுக்காக காத்திருக்க, சிறிது நேரம் கழிந்தது. கஸ்டமஸ் அதிகாரிகளின் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு தங்கள் உறவினர்களின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் அவர்களைக் கண்டதும் கையசைத்து வரவேற்பதும் எட்டியெட்டி இன்னும்ஆட்களைக் காணவில்லையே எனப் பார்க்கும் கூட்டத்தையும் கடந்து வெளியே வந்து சென்னை காற்றைச் சுவாசிக்க ...

தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்த ஆனந்தம் மனதில்.


தொடரும் பயணம்....

2 comments:

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...