Thursday, December 28, 2017

அயல்தேசத்தில் ஒரு சந்திப்பு

கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மில்பிடாஸ் நகரில் நேற்று என் தாய் பாஷை பேசும் மக்கள் ஒன்று கூடிய பெரும் விழா நடைபெற்றது. மகள் அங்கிருப்பதால் அவளைப் பார்த்து சில நாட்கள் அவளுடன் தங்கி இந்த விழாவுக்குச் சென்று வர கணவரும் ஆனந்தமாக விடுமுறையில் சென்று விட்டார்.

 அமெரிக்காவிலேயே இம்மாநிலத்தில் தான் அதிக அளவில் சௌராஷ்ட்ரா மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினாலே பெரும் விழா தான். டெக்சாஸ், வாஷிங்டன் மாநிலங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் வர வேண்டும் என்பதற்காகவே குளிர்கால விடுமுறையை தேர்ந்தெடுத்ததும் நல்ல முடிவு. ஊரைச் சுற்றிப் பார்த்து விடுமுறையை கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல் இவ்விழாவில் பங்கேற்க வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்களுக்கும் வசதியாக அமைந்து விட்டது.

இவ்விழாவினை தாங்கள் ஏற்று நடத்துகிறோம் என சிலிக்கான்வேலி மக்களின் ஆதரவு கிடைத்தவுடன் அன்றிலிருந்து திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்கள். முகநூல் குழுமம் வாயிலாக அனைவரையும் விழாவிற்கு வருமாறும் அவர்கள் தங்க வசதிகள் செய்யவும் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து திட்டங்கள் பலவும் முடிவு செய்தார்கள். விரைவிலேயே நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வர விருப்பம் தெரிவிக்க, பலரும் காத்திருப்பு பட்டியலில்! விருந்தினர்களை கவனிக்க, அன்றைய தினத்தின் உணவுத்தேவைகளை பார்த்துக் கொள்ள, குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ள, விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள என்று பல குழுக்கள், அதனை நிர்வகிக்க தன்னார்வலர்கள் பலரும் தங்கள் சொந்த வேலைகளுடன் இவ்விழாவிற்காக பல மணிநேரங்கள் , பல நாட்களென விழா நடக்கும் இடத்தை தேர்வு செய்வதிலிருந்து விருந்துணவு அதுவும் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் உணவாக இருக்க வேண்டுமென மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
விழா நாள் நெருங்க அதன் தொடர்பான செய்திகளும் முகநூல் குழுமத்தில் பகிரப்பட்டு பங்கேற்பார்களின் ஆர்வங்களைத் தூண்டி விட... அந்த நாளும் வந்தே விட்டது.

விழா மண்டபத்து வாயிலில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய குழு அன்பர்களின் யோசனையில் மூதாதையர்களின் பாரம்பரிய நெசவுத்தொழில், புலம்பெயர்தல் வரலாறுகளை தன் கைவண்ணத்தில் அழகிய ஓவியமாக படைத்திருக்கிறார் ரேணுகா. சோம்நாத் கோவில் பூர்வீகத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய கொடுங்கோலர்களின் ஆட்சியில் உயிருக்கும் மானத்திற்கும் அஞ்சி தென்னக மாநிலங்களில் தஞ்சம் புகுந்த மூதாதையர்கள் சிலர் அங்கேயே தங்கிவிட, நாயக்கர் காலத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற நகர்களில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் நெசவுத்தொழிலிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர்களின் உலகமும் விரிந்து வாரிசுகள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றாலும் இன்றும் 'மாய் பாஷா' இச்சிறு சமூகத்து மக்களை இணைத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதை பறைசாற்றுவதாகவே இருக்கிறது இத்தகைய சந்திப்புகள்!

மகளும், கணவரும் விழா அரங்கிற்குச் சென்றது முதல் யாரைப் பார்த்தார்கள், யாருடன் பேசினார்கள், அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் என்று சுடச்சுட செய்திகள் வர, அங்கு சென்றது போல் திருப்தி. என்னுடைய தோழிகள் , உறவினர்கள், சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள், என்னிடம் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் படித்தவர்கள் என பலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். மகள் பங்கு பெற்ற மேடை நிகழ்ச்சியும், கணவர் இசையமைத்து ரேணுகாவின் குரலில் இரு பாடல்கள்  தாய் பாஷையிலும் அரங்கேறியிருக்கிறது.  வாரணம் ஆயிரம் பாடலை மதுரையிலிருந்து தாத்தா ஜூட்டு தியாகராஜன் தாய் மொழியில் எழுதியதை  அமெரிக்காவில்  பேத்தி ஸ்ரியா  பாடியிருக்கிறார்.  பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், சியாட்டில் குழுவினரின் சௌராஷ்டிரா நாடகம் என  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் சிரித்து ரசிக்கத்தக்க வகையில் நிகழ்ச்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

விழாவிற்குச்  சென்றவுடன் கணவரின் அக்கா குடும்பத்தினரைச் சந்தித்ததிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவர்கள் என்று அன்றைய நாள் முழுவதும் கலகலப்பாக இருந்திருக்கிறது. மதிய உணவு மதுரை விருந்தின் சுவையுடன் இருந்ததாகவும் இரவு உணவும் பூரி, கிழங்கு மசால், மசாலா பால் என அருமையாக இருந்ததாக மகளும் கணவரும் அனுபவித்துச் சாப்பிட்டதாக கூறினார்கள்.

முதல் முறையாக மகள் கலந்து கொண்ட சௌராஷ்ட்ரா மக்களின் சந்திப்பு.  அனைவரிடமும் தாய்மொழியில் பேசும் பொழுது ஏற்படும் ஆனந்த உணர்வும், இத்தனை மக்கள் இங்கிருக்கிறார்களா என்ற வியப்பும், மேகலா ஆண்ட்டி தேடி வந்து பேசி விட்டுப் போனார்கள், துர்கா ஆண்ட்டியை தேடிப்பிடித்துப்  பேசி விட்டேன் என என் தோழிகளை அவள் சந்தித்துப் பேசியதில் இன்பமும், என்னிடம் பயின்ற மாணவ, மாணவியர்கள் வந்து பேசியதில் உற்சாகமும்,  புது நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியும், பெரியவர்கள் வாஞ்சையுடன் பேசி அன்புடன் அவர்கள் வீட்டுக்கு அழைத்தார்கள், என்ன உதவி வேண்டுமென்றாலும் எந்த நேரத்திலும் தயங்காமல் கேட்கச் சொன்னார்கள் என்று ஆச்சரியமாகவும்  இவ்வளவு மனிதர்களை ஒரு சேர சந்திக்கையில் ஏற்படும் அனைத்து வித உணர்வுக்கலவையுடன் அந்த நாளை மகிழ்வுடன் கடந்திருக்கிறாள்.

என்ன தான் இங்கு வளரும் குழந்தைகள் தங்கள் தேவைகளை யாரையும் எதிர்பாராமல் நிறைவேற்றிக் கொண்டாலும் அவர்கள் செல்லும் இடங்களில் நம் மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தான் என் மகளை ஜெர்மனிக்கும் , சைனாவுக்கும், அமெரிக்காவின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கும் துணிவுடன் செல்ல அனுமதித்தது. முன்பின் அறிமுகமில்லாத முகம் தெரியாத முகநூல் வாயிலாக தெரிந்து கொண்ட மக்கள் அன்று உதவி இன்று வரையிலும் உதவுவது... என் போன்ற பெற்றோர்களுக்குத் தெரிந்திருந்த சமூகத்தின் மதிப்பை இன்றைய தலைமுறையும் உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது இச்சந்திப்புகள்.

இதற்கு முன் விர்ஜினியாவில் நடந்த விழாவில் கணவர் மற்றும் மகனுடன் நானும் சென்றிருந்தேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அமெரிக்கா, கனடாவில் இருந்தாலும் பலரை நேரில் சந்தித்திருந்தாலும் முகநூல் வாயிலாக நண்பர்கள் மூலமாக அறிந்திருந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. விழா முடிந்து வீடு திரும்புகையில் அமெரிக்காவில் நடந்த பல சந்திப்புகளில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பதால் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கேட்டு முதன் முறையாக அனைவரும் நம் பாஷையில் பேசியது எனக்குப் புரிந்தது என்று அன்று மகன் கூறியதும் , அடுத்த சந்திப்பு மிஷிகனில். கண்டிப்பாக போக வேண்டும் என்று இன்று மகள் கூறியதும்...

தாய் மொழியில் உரையாடுவதும் அம்மொழி பேசும் மக்களிடம் பழகுவதும் தனி இன்பம் தான். அதுவும் அயல்நாட்டில் இப்படியொரு  "அவ்ரெ தின்னாள்" கொண்டாட்டமும் வேண்டியிருக்கிறது. எங்கள் சமூகம் விழாக்களையும் விருந்துகளையும் கொண்டாடி வரும் சமூகம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சந்திப்புகளும் கொண்டாட்டங்களும் குறைவில்லாமல் நடக்கிறது.

இச்சந்திப்பிற்காக உழைத்த தினேஷ் மற்றும் குழுமத்திற்குப் பாராட்டுகள்!

sourashtra song...

Saturday, December 23, 2017

Intouchables , The Fundamentals of Caring, Me Before You

Intouchables , The Fundamentals of Caring, Me Before You

இம்மூன்று திரைப்படங்களிலும் தன் தேவைகளுக்காக அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய உடல் ஊனமுற்றவர், அவரைப் பராமரிக்க வருபவர் என கதை இருவரைச் சுற்றியே நடக்கிறது. இவ்விருவருக்குமிடையே ஏற்படும் பந்தம் படத்தில் இழையோட மிகைப்படுத்தப்படாத இப்படங்கள்  ஃப்ரெஞ்ச், அமெரிக்க, பிரிட்டிஷ் ஆங்கில திரைப்படங்கள். இம்மூன்று நாட்டின் சமூக பிரச்னைகளையும் ஆங்காங்கே கோடிட்டு கதையோடு இணைத்திருந்த விதமும் அருமை.

தொடக்கத்தில்  பராமரிப்பாளர்கள் பணத்திற்காக கடமையே என அவ்வேலையை ஏற்றுக் கொண்டாலும் முடிவில் உடல் ஊனமுற்றவர்களிடம் மனதளவில் நெருக்கம் கொள்கிறார்கள். படுத்த படுக்கையாக இருப்பவர்களின் மனநிலையையும்,வேதனைகளையும் இப்படங்களில் அழகாக இயற்கையாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Intouchables பெருஞ்செல்வந்தர் ஒருவர் விபத்து ஒன்றில் நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் காலத்தைக் கழிக்க வேண்டிய சூழ்நிலையில் அவரைப் புரிந்து அனுசரித்துச்  செல்லும் பராமரிப்பாளரைத் தேடி கடைசியில் வேலையில்லாமல் திரியும் ஒருவர் அரசாங்கத்திடமிருந்து இலவச சலுகைகளைப் பெற நேர்முகத்தேர்விற்கு வர, அவரைமிகவும் பிடித்துப் போய்விடுகிறது செல்வந்தருக்கு. பெரிய வீட்டின் சூழ்நிலையும்,செல்வந்தரின் இனிய சுபாவமும் கண்டு இளைஞரும் அவரை அன்புடன் கவனித்துக் கொள்ள, அச்செல்வந்தர் விரும்பிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து சுபமாக படம் முடிகிறது. தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடித்ததாக கேள்வி.



The Fundamentals of Caring தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட இளம் வாலிபனை கவனித்துக் கொள்ள வருபவர் ,வெளியுலகத்தை காணாத அந்த வாலிபனின் மனவேதனைகளை நன்கு அறிந்து உதாசீனப்படுத்துபவனை நல்வழிப்படுத்தி அவனுடைய கனவுகளை நிறைவேற்றி வாழ்வின் அழகியலைப் புரிந்து கொள்ள உதவுகிறார்.

Me Before You அழகான, துடிப்பான பணக்கார இளைஞர். எதிர்பாராத விபத்து ஒன்றில் படுத்த படுக்கையாகி விட வாழ பிடிக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துடிப்பவர். அவரை கவனித்துக் கொள்ள வேலையிழந்து பணத்திற்கு அல்லாடும் நாயகி வேறு வழியில்லாமல் இவ்வேலையை ஏற்றுக் கொண்டாலும் அந்த இளைஞரிடம் நெருங்க அஞ்சும் கதாபாத்திரம். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வளைய வரும் அப்பெண்ணை கதாநாயகன் விரும்பினாலும் சுயகழிவிரக்கத்தில் அவளிடமிருந்து விலகியே நிற்கிறான். இருவரும் நெருங்கி வரும் வேளையில் தன் முடிவிலும் தீவிரமாக இருக்க, வேதனையுடன் படம் நிறைவடைகிறது.



தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் மிகையான நடிப்பை வெளிப்படுத்தாமல் இயற்கையாக நடித்திருப்பதும், எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதையை அதன் கோணத்திலிருந்து சற்றும் விலகிடாமல் அதன்போக்கிலேயே சமூக பிரச்னைகளையும் நேர்த்தியாக கொண்டு சென்றதில் இம்மூன்று திரைப்படங்களும் வெற்றி பெறுகிறது.

அதிக உணர்ச்சிகளைக்  கொட்டி படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப்  பெற முயலாமல் எதார்த்தமாக எப்படித்தான் இவர்களால் மட்டும் இப்படியெல்லாம் படங்களை எடுக்க முடிகிறதோ?

ஹ்ம்ம்ம்...


 




Tuesday, December 19, 2017

GOP Tax plan

GOP Tax plan நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் ... உண்மையா?
Standard deduction
தனிநபராக வருமான வரி செலுத்துவோரின் standard deduction $6,350லிருந்து $12,000 ஆகவும், கணவன், மனைவி சேர்ந்து கூட்டாக வரி செலுத்துவோரின் standard deduction $12,700லிருந்து $24,000ஆகவும் உயரத்தப்பட்டிருக்கிறதாம்.

Child tax credit
பதினேழு வயது வரைக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் $1000 tax credit அதுவும் பெற்றோர்களின் வருமானம் $110,000 கீழே இருந்தால் மட்டுமே என்றிருந்ததை மாற்றி பெற்றோர்களின் வருவாய் $400,000க்கும் கீழிருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் $2000 tax credit என்கிறதாம் இந்த புதிய திட்டம்.

Personal Exemptions
குடும்பத்து உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் $4,050வரை Personal Exemptions இருந்ததை வருடாந்திர மொத்த வருமானத்தின் அடிப்படையில் முற்றிலுமாக நீக்கியிருக்கிறார்களாம் புதிய திட்டத்தில்.

Individual Tax Rates
பத்து சதவிகிதத்தில் தொடங்கி தனிநபர் வருவாய் $418,401 மற்றும் கூட்டு வருமானம் $470,701 உள்ளோருக்கு 39.6 சதவிகித வரை இருந்த tax rate தற்போது

பத்து சதவிகிதத்தில் தொடங்கி தனிநபர் வருவாய் $500,000 மற்றும் கூட்டு வருமானம் $600,000 உள்ளோருக்கு 37 சதவிகிதமாக மாறியுள்ளது.
கூட்டாக வருமான வரி செலுத்துவோருக்கான tax rate
10 percent: $0 to $19,050

12 percent: $19,050 to $77,400

22 percent: $77,400 to $165,000

24 percent: $165,000 to $315,000

32 percent: $315,000 to $400,000

35 percent: $400,000 to $600,000

37 percent: $600,000 and above

தனியாக வருமான வரி செலுத்துவோருக்கான tax rate
10 percent: $0 to $9,525

12 percent: $9,525 to $38,700

22 percent: $38,700 to $82,500

24 percent: $82,500 to $157,500

32 percent: $157,500 to $200,000

35 percent: $200,000 to $500,000

37 percent: $500,000 and above

Corporate Tax Rate
தற்போதைய 35 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக 2018லிருந்து குறைக்கப்பட உள்ளதாம்.

Corporate Alternative Minimum Tax
பெரும் நிறுவனங்கள் பலவும் ஃபெடரல் வரி கட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க முடிவதை குறைப்பதற்காவும் குறைந்தபட்ச வரிகளை அனைவரும் கட்ட வழி செய்யவுமே இந்த AMT (Alternative Minimum Tax ) வரித்திட்டமாம் !. பல யுத்திகளை கையாண்டு தற்போதைய அதிபரும் பல வருடங்களாக ஃபெடரல் வரி கட்டாமலே இருந்திருக்கிறார். அதற்கு சட்டமும் துணையாக இருக்கிறது! பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடற கதை தான். பணக்காரர்களுக்கான அரசாங்கத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையையும் சுமக்க தான் இருக்கிறதே பலன்கள் அதிகமின்றி ஒழுங்காக வருமான வரி கட்டும் நடுத்தர வர்க்கம்.

பெரு நிறுவன AMT தற்போது முற்றிலுமாக நீக்கப்பட உள்ளதாம்.

Repatriation
நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கு 35 சதவிகித வரி விதித்தாலும் நாட்டிற்குள் கொண்டு வரும் பொழுது மட்டுமே வரி விதிக்கப்பட்ட நிலை மாறி பண இருப்புகளுக்கு 15.5 சதவிகித வரியும் இதர சொத்துகளுக்கு 8 சதவிகித வரியும் என்று மாறியிருக்கிறதாம்.(சொத்துக்களிலிருந்து வரும் வருமானம், வங்கிகளில் பதுக்கல் பணம் வைத்திருக்கும் NRIகள் கவனத்திற்கு!)

Pass-Through Deduction
சொந்த நிறுவனத்தால் வரும் லாப வருமானத்தை தனி நபர் வருமானத்தில் சேர்த்து standard bracketல்  வரி கட்டி வந்த நிலையில் கூட்டு வருமானம் $315,000 இருப்பின் தற்போது 20 சதவிகிதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம்.

Individual State and Local Tax Deductions
சொத்து வரி, பள்ளிகளுக்கான வரி மற்றும் இதர வரிகள் எவ்வளவு கட்டி இருந்தாலும் $10,000 வரை மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம் இப்புதிய திட்டத்தில். (ஹ்ம்ம்...நடுத்தர வர்க்கத்திற்கு இங்க ஏதோ ஆப்பு இருக்கிறா மாதிரி இருக்கு. இதுல ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை பண்ணி இருக்கானுங்க. )

Mortgage Interest Deduction
வீட்டுக்கடனுக்காக செலுத்தும் வட்டிக்கு இருந்த வரி விலக்கிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. இதுல செனட் பில், ஹவுஸ் பில்னு வேற ஏகப்பட்ட குழப்பங்கள். நியூயார்க் கவர்னர் குவோமோ என்னாடான்னா இந்த டாக்ஸ் பில் மட்டும் ஒப்புதலாயிடுச்சுன்னா அத நியூயார்க்ல ரிப்பீல் பண்ணிடுவோம்னு முழங்கிட்டு இருக்குறாரு.

என்னவோ போடா மாதவா...





















Monday, December 18, 2017

மதுரைக்குப் போகாதடி...

விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு காணும் காட்சிகள் பல கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமில்லாமல் ஏமாற்றத்தோடு மனதை உறுத்தவும் தவறுவதில்லை.

மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கும் பொழுதே வறண்டு கிடக்கும் நிலங்கள் மழையின்றி தவிக்கும் மதுரையைப் பறைசாற்றி வரவேற்கும் பொழுதே மனம் கனக்க ஆரம்பித்து விடும். மரங்கள் இல்லாத மதுரையில் கட்டடங்களுக்கு குறைவில்லை. விளைநிலங்களை அழித்து நகரை விரிவுப்படுத்துகிறார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அதிக விலைக்கு வாங்குவதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டில் சிறிது உண்மை இருந்தாலும் தன் தகுதிக்கு மீறிய சுமையை சுமந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது மதுரை. விமானநிலைய எல்லையை விட்டு வெளிவந்த உடனே கண்ணில் தெரிவதெல்லாம் சாலையோர குப்பைக்கிடங்குகள். சுற்றி மொய்க்கும் ஈக்கள், பன்றிகள் கூட்டம். எல்லை வரை பரந்து வளர்ந்திருக்கும் குடியிருப்புகள்! மழை நீர் குட்டையாக தேங்கி குப்பையுடன் கலந்து பரப்பும் துர்நாற்றத்தை வெகு எளிதாய் கடந்து செல்லும் மனிதர்கள் ஆச்சரியம் என்றால் குப்பையைக் கிளறி பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து உண்ணும் கால்நடைகள்...சொல்ல வார்த்தைகள் இல்லை. சுவாச் பாரத் திட்டத்தை மதுரையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினரே செயல்படுத்தவில்லையோ? மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை கொண்டு செல்வதில் சுணக்கம் ஏன்? பள்ளிகளில், வீடுகளில், அலுவலகங்களில் இருந்து தொடங்கலாமே? ஊர் கூடி தேர் இழுத்தால் முடியாத காரியம் என்று ஒன்று உண்டா? என்று உணரப் போகிறோம் நாம்?

வில்லாபுரத்திலிருந்து அவனியாபுரம் வரை ஊரும் விரிந்து கால்வாயை அடைத்து கட்டடங்களும் பரந்து மனிதர்கள் நடமாட்டமும்,  இருசக்கர வாகனங்களின் இரைச்சலும், பள்ளிப் பேருந்து, வேன்களில் புளிமூட்டைகளாக மழலைப்பட்டாளங்களும் அதிகாலையில் பயணிக்க...சாலையோர நடைபாதைகளையும் ஆக்கிரமித்திருந்த கடைகளை கடக்கும் மனிதர்களை உரசிக்கொண்டே செல்லும் மனிதாபிமானமற்ற ஷேர் ஆட்டோ வண்டிகளும்...புகையை இலவசமாக முகத்தில் வீசிக்கொண்டே கடந்து செல்லும் லாரிகளும்...மாசுக் கட்டுப்பாடு வாரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? சமீபத்தில் அதிகமாக கேள்விப்பட்டது ஆஸ்துமா, தோல்வியாதிகள் மற்றும் அலர்ஜியால் மக்கள் படும் அவதிகளை!

சாலையில் பயணிக்கும் மனிதர்களுக்குத் தான் எத்தனை அவசரம்? விடாமல் காது செவிடாகும் வரை ஒலிப்பான்களை அலற விடுகிறார்கள். தலைக்கவசம் எதற்கு என்று சிலர் மாட்டிக்கொண்டு செல்லும் ஹெல்மெட்களைப் பார்த்தால் தோன்றுகிறது. அவர்களும் பாவம் தான்! காலையில் அதுவும் உக்கிரமான மதுரை வெயிலில் வியர்த்து விறுவிறுக்க... குண்டும் குழியுமாக சாலைகள். அதைச் சரிசெய்தாலே சாலை விபத்துகள் பலவற்றைத் தடுக்கலாம்.

வேகமாக பைக்கில் அடுத்தவரை முந்திச் செல்பவர்களையும், பின்வரும் வாகனங்களைப் பற்றின பிரக்ஞை ஏதுமின்றி நினைத்த இடத்தில் வண்டிகளை நிறுத்தி தொடருபவர்களை விபத்துக்குள்ளாக்கும் அவலங்களுக்கு என்று தான் விடிவு காலம் பிறக்குமோ?

மீட்டர் என்பது தேவையில்லாத ஒன்று. நாங்கள் சொல்வது தான் கட்டணம் என்று அநியாயமாக வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கேட்பாரில்லையா? இவர்களின் பின்னணியிலும் அரசியலே! ஆனால் ஜீரோக்கள் பேசுவதோ கேரளாவைப் பார். கர்நாடகாவைப் பார் என்பது தான்.

சாலையோர காபிக்கடைகளில் வடை, பஜ்ஜி, சொஜ்ஜியை சாப்பிட்டு விட்டு 'அசால்ட்டாக' தெருவில் தூக்கியெறியும் குப்பைகளை மொய்க்க காத்திருக்கும் ஈக்களும், மிச்சம் மீதிக்காக குப்பையை வளைய வரும் நாய்களும், காஃபி சாப்பிட்ட வாயை கொப்பளித்து குப்பையில் துப்புகிறேன் என்று வழிப்போக்கர்களின் மேல் இலவச எச்சிலையும் நோயையும் பரப்பும் பீடை மனிதர்களுக்கு குறைவில்லை. நடந்து சென்று கொண்டிருப்பவர்கள் எப்பொழுது எச்சில் துப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் தான் கடக்க வேண்டியுள்ளது. படித்தவர், படிக்காதவர் என்ற பாரபட்சமின்றி போட்டி போட்டுக் கொண்டு துப்பித் தொலைக்கிறார்கள். இல்லாத புது நோய்கள் வராமல் என்ன செய்யும்? இதில் சிங்கப்பூர் பற்றி வாய்கிழிய பேசும் படங்களுக்கு குறைச்சலில்லை.

வீட்டில் கழிப்பறை இருந்தும் தெருவில் உச்சா போகும் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அம்மாக்கள்...என்றுதான் விபரீதங்களைப் புரிந்து கொள்வார்களோ? நடமாட்டம் குறைந்த தெருமுக்குகள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்கும் இடமாக இன்று வரை இருக்கிறது. மாலைவேளைகளில் அம்மம்மா, அப்பப்பா என்று தன் பெரிய குடும்பத்துடன் உலா வரும் பன்றிகளுக்கும் குறைவில்லை. பன்றிக்காய்ச்சல் வராமல் என்ன செய்யும்?

ரேஷன் கடைகளை விட கூட்டம் அள்ளுகிறது தீரா விடத்தின் புண்ணியத்தால் விளைந்த மதுபானக் கடைகளில்! அழுக்கு கைலி, சவரம் செய்யாத முகம், குளியல் காணாத தேகம், குடித்து குடித்தே குடும்பத்தை அழித்து ஒழிந்து போகிற இவர்கள் உயிரோடு இருந்து தான் ஆக வேண்டுமா? தன்னிலை அறியாமல் குடித்து அலங்கோலமாக தெருவில் புழுதியில் பார்க்கவே அருவருப்பாக... கடைகளும் ஜனசந்தடி மிக்க தெருக்களில், தெருமுனைகளில் கடைகளை வைத்திருக்கிறார்கள். மக்களைப் பற்றின துளிக்கவலையும் இல்லாத கேடுகெட்ட அரசாங்கம்!
தெற்குமாசிவீதி முழுவதும் மனிதர்கள் நடமாட முடியாத அளவிற்கு வாகனங்களால் நிரப்பப்பட்டு... திருவிழா நாட்களில் கேட்கவே வேண்டாம். எங்கிருந்து இவ்வளவு மக்கள் மதுரைக்கு வந்திருக்கிறார்கள்? எங்கு பார்த்தாலும் கூட்டம். பெரிய பெரிய கடைகளின் ஒளிவெள்ளத்தில் உஷ்ணம் கூடியது போல் தோன்றியது எனக்கு மட்டும் தானா?

எண்ணிக்கையில்லா துணிக்கடைகள், நகைக்கடைகள், துரித உணவகங்கள்...அப்பப்பா! எங்கும் கூட்டம்! பரவாயில்லையே மக்கள் செலவு செய்யும் அளவிற்கு வசதி வந்து விட்டிருக்கிறது தான்! விளக்குத்தூண் பகுதிகளில் சாலைகளைக் கடக்க உயிரை கையில் பிடித்துத் தான் செல்ல வேண்டியிருந்தது. சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதிச்சாலை முழுவதும் கரடு முரடான கற்கள் மட்டுமே. அந்த தெருவில் பல உயர்ரக உணவகங்களும் தங்குமிடங்களும். குறுகிய சாலையில் பல நூறு வண்டிகள். எப்பொழுது யார் வந்து இடித்து விட்டு கண்டுக்காமல் போவார்களா என்ற பயத்துடன் தான் நடக்க வேண்டியிருக்கிறது. மழை பெய்தால் அங்கு நீந்தித்தான் செல்ல வேண்டும். அதிசயமாக மதுரையில் மழை வந்தாலும் நிலத்திற்குச் செல்ல முடியாதவாறு வீட்டைச்சுற்றி சிமெண்ட் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். தெருவே வெள்ளத்தில் மிதக்கிறது. தோண்டிப்போட்ட சாலைகள் குண்டும் குழியுமாக. மழை நாட்களில் எங்கு கால் வைக்கிறோம் எங்கு போய் விழுவோமோ என்ற திகிலுடனே வெளியில் செல்ல, சென்றவர்கள் உயிருடன் வீடு திரும்பும் வரை பயத்துடனே இருக்க வேண்டியுள்ளது.

ஆதார் கார்டு அலுவலகத்தில் ஒரே கணினி. அதுவும் பாவம் வேலை செய்யவில்லை. வேலைகளை விட்டு கார்டு வாங்க வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். மாற்றங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ஏற்படப்போகும் இடறுகளையும் மனதில் கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களை விட்டேத்தியாக செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். யாரைக் குற்றம் சொல்வது?

வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு விடுவது போல் இருந்தார்கள். ஒரே இரவில் நடந்த அதிரடி மாற்றங்களின் பொழுது அதிக நேரம் உழைத்து கஷ்டப்பட்டாலும் நாட்டு நலனுக்காக செய்வதில் திருப்தி இருந்ததாக அகமகிழ்ந்தார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விகிதத்தில் அலுவல் அதிகாரிகள் இல்லை. பல வேலைகளையும் ஒரு சிலரே செய்ய வேண்டிய நிலையில் எள்ளும் கொள்ளுமாக படிக்காத பாமரர்களிடம் வெடித்துக் கொண்டிருந்ததைக் காண்கையில் தொலைந்து போன மனிதத்தை எண்ணி வருந்தியது மனம்.

கோவில்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. அனைவரையும் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கோவிலில் பணம், பதவியிலிருப்பவர்களுக்கு அநேக சலுகைகள்! வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய பொறுமையும் நேரமும் இல்லை. சாதகப்படுத்திக் கொள்கிறார்கள் கோவிலை கொள்ளையடிப்பவர்கள். கோவில் நிலங்களையும் சொத்துக்களையும் முறையாகக் கையாண்டாலே கோவிலில் பல நற்பணிகளை யாருடைய நிதியையும் எதிர்பார்க்காமல் செய்ய முடியும். செய்வார்களா கொள்ளைக்காரர்கள்? அவர்களிடமிருந்து மீட்க முடியுமா கோவில் நிலங்களையும் கோவில்களையும்? எங்கும் அரசியல்!

வீதி தோறும் பழைய சோறு கேட்டு வரும் பிச்சைக்காரர்களைக் காணவில்லை. கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு இலவச மதிய உணவு கிடைப்பதால் அங்கு சிறு கூட்டம் நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறது.
வறண்டு போன வைகை நதியை குப்பைக்கிடங்காக மாற்றி விட்டிருக்கிறோம். அதன் பின்னே பல லட்சங்கள் பெறுமானமுள்ள குடியிருப்புகளில் காற்று வாங்க வெளியில் உட்கார முடியாததற்கு காரணம் கொசுக்கள் மட்டுமல்ல. கூடவே வரும் துர்நாற்றமும் கூட. மழை நாட்களில் வீட்டுக்கதவை திறக்க முடியாத அளவிற்கு பெரும்நாற்றம் நதியில் சேர்ந்திருக்கும் கழிவுநீரிலிருந்தும் குப்பையிலிருந்தும். சகித்துக் கொண்டு சொந்த வீட்டுக்குள்ளேயே சிறைக்குள் வாழ வேண்டிய அவலம். வறண்ட வைகை ஆற்றுப்படுகையோ மனதை பிசைகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாலைவனம் ஆகும் நிலைமையை கண்டு விடுவேனோ என்ற அச்சமும் மழைநீரைச் சேமிக்கும் வழிவகைகளும் நிலத்தடி நீரை பெருக்கும் விழிப்புணர்வுமற்ற சமுதாயமும் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் நீதி தான் என்ன?

அதிகப்படியான பணத்தைக் கட்டி பெரிய பெரிய பள்ளிகளுக்கு குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்கள் என்ன ஏது என்று புரியாமல் தெரியாமல் குழந்தைகளால் முடியாத ப்ராஜெக்ட்களை செய்து கொடுப்பதில் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்று பள்ளிகளைக் கேட்பதுமில்லை. பள்ளிகளும் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்து விடச் சொல்கிறார்களாம். நடைமுறைக்கல்வி என்பதே கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. படிப்பவர்களும், படிக்க வைப்பவர்களும் , படிப்பை போதிப்பவர்களும் பணத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எங்கு நம் சந்ததியினரை கொண்டு செல்லும் என்று யோசிக்க கூட முடியாத நிலைமையில் தான் இருக்கிறோம்.

வருடங்கள் பல கடந்திருந்தாலும் எங்கும் எதிலும் ஒழுங்கில்லை. யாருக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை. அனைத்திற்கும் பழகியிருக்கிறார்கள். கரண்ட் போனால் சொல்லாமல் கட் பண்ணி விட்டானே என்று தான் வருத்தம் மக்களுக்கு. எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் மனப்பக்குவம் வந்திருக்கிறது. அரசியல்வியாதிகளின் வெற்றியில் இதுவும் ஒன்று. கூசாமல் கை நீட்டி பணம் வாங்கி ஓட்டுப்போடும் நமக்கிற்கு எதையும் கேட்டுப் பெறவேண்டும் என்ற உரிமையும் மறந்து போய் விட்டிருக்கிறது.

என்ன பேசினாலும் நேற்று வரை இங்கிருந்தவள் தானே? இன்று ஏதோ புதிதாக குற்றம் கண்டுபிடிக்கிறாய். வெளிநாட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் என்பதில் மட்டும் யாரும் மாறவில்லை. எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது இது தானோ? எதற்கெடுத்தாலும் அரசியலை விமரிசிப்பவர்கள் மாற்றங்கள் தனி மனிதரிடமிருந்து, ஒவ்வொருவர் வீட்டிலிருந்து ஏற்பட்டால் தான் நாட்டிலும் ஏற்படும் என்பதை உணருவார்களோ?

வீட்டிற்கு ஒரு என்ஜினீயர், ஆளுக்கொரு சொந்த வீடு, போட்டி போட்டுக் கொண்டு தகுதிக்கு மீறிய பள்ளிகளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து அல்லாடும் குழந்தைகளுடன் அல்லல்படும் பெற்றோர்கள், ஏதோ ஒன்றிற்காக ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் வாழ்க்கை, இந்தியா முன்னேறுகிறதோ இல்லையோ தனிமனித வாழ்க்கையின் தரம் குறைந்து... சுரண்டலும், குப்பையும், அதிகாரவர்க்கமும், அடிமைத்தனமும் கூடித்தான் போயிருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணரும் பொழுது இயற்கைவளங்களை கொள்ளையடித்த சமூகத்திடம் எல்லாவற்றையும் இழந்து நிற்பது உறுதி.

உணர்வுகளுடன் இருந்த மதுரை உணர்ச்சியற்றுப் பாழாகி நிற்பதை வேதனையுடன் கடந்து வர மட்டுமே முடிகிறது. இயற்கையுடன் மனிதர்களும் மாறிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அன்பிற்கு குறைவில்லாத உறவுகள், பொக்கிஷமாக நான் சுமக்கும் காலம் கடந்த பசுமையான நினைவுகள் மட்டுமே இன்றும் என் பிறந்தகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.































Friday, November 24, 2017

எதுவும் கடந்து போகும்

 விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது என்னைக் கடந்து சென்றவர் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து யோசனையுடன் சென்றார். காலம் கோலத்தை மாற்றி விட்டிருந்த காரணத்தால் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் எனக்கு அவரைத் தெரிந்து விட்டது. சில மனிதர்களை மறக்க முடியாது. நம் வாழ்வின் அங்கமாக சில காலம் அவர்களும் பயணித்திருப்பார்கள். அப்படித்தான் என் வாழ்வில் அந்தப் பெண்மணியும். அவரைப் போல சிலரால் தான் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியும் வந்தது எனக்கு என்று நினைத்தது உண்டு.

வாழ்க்கையே படிப்பினை தானே!

எதிர்பாரா சுனாமி போல பிரச்னைகள் ஒரே நாளில் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட தினத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ளவே நாட்கள் ஆன நிலையில் வாழ்க்கையும் சிரித்த வேதனையானதொரு தருணத்தில் கற்றுணர்ந்த பாடங்களில் இதுவும் ஒன்று.

பொருளாதார நெருக்கடியிலிருந்து குடும்பம் மீள வழி தெரியாமல் பெண்ணாக எதிர்கொண்ட பிரச்னைகளும் ... அதுவரை எவ்வித கவலையுமின்றி  வாழ்ந்து வந்திருந்த எனக்கு கண்முன்னே கனவுகள் சிதறும் வாழ்க்கை கற்றுத் தந்த வலிமிகுந்த நாட்களில்... வாழ்வா, சாவா போராட்டத்தில் சாவது எளிதாகவும், வாழ்வது கடினமானதாகவும் உணர்ந்த தருணம் தான் எத்தனை கொடியது! இகழ்ச்சிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், தூற்றல்கள், வழக்குகள், புறப்பேச்சுகளைக் கடந்து வருவது அவ்வளவு எளிதல்லவே!

எதிர்பாரா நேரத்தில் முகத்திலறையும் பிரச்னைகளைக் கையாளும் மனவலிமை மட்டும் இல்லாதிருந்தால் இந்தப் பதிவும் தான் இருந்திருக்குமா?

ஒவ்வொரு விடியலும் எத்தகைய கொடிய நிகழ்வுகளைக் கொண்டு வருமோ, பிரச்னைகள் எந்த ரூபத்தில் வரப்போகிறதோ, உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நாட்களுமாய்... போதும் இந்த வாழ்க்கை. முடித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்த பொழுது வாழ்ந்து சாதிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்றிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அவர்கள் என் வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று! புறக்கணித்தவர்களையும், அவமதித்தவர்களையும் பழிவாங்கிட வாழ்ந்து சாதிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தோணவில்லை.

தினம்தினம் கேட்காமல் கிடைத்த வரமாய் மலையெனப் பிரச்னைகள் வளர்ந்த பொழுது எதிர்கொள்ளத் தெரியாது மனம் வலித்தாலும் தீர்வை நோக்கியே எண்ணங்களைச் செதுக்கியதில் அருமையான மனிதர்களும் அவர்களின் வழிகாட்டுதலில் விடைகளும் தெளிவாகத் தெரிந்தது.

ஒவ்வொரு பிரச்னைகளும் விஸ்வரூபம் எடுக்கும் பொழுதெல்லாம் மனதில் எதிர்மறை எண்ணங்களைப் புகுத்தாமல் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதில் வாய்க்காவிடினும் காலம் செல்ல செல்ல கற்றுக் கொண்டதில் வாழ்க்கையின் அற்புதக்கணங்களை ஆராதிக்கும் மனமும் என்னையறியாமல் என்னுள் புக... வலியுடனான வாழ்க்கையில் பிரச்னையென்று ஒன்றிருந்தால் தீர்வென ஒன்றிருக்கும் என்ற படிப்பினையும் உணர்ந்த பொழுது வாழ்க்கை எளிதாகித்தான் போனது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன திடத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். என் தடாலடி முடிவுகள் பலருக்கும் பிடிக்காத பொழுதும் என் மனதிற்கு சரியெனபட்டதைச் செய்வதில் என்றுமே தயங்கியதில்லை. படித்த திமிர், வேலை பார்க்கும் திமிர், சொல்பேச்சு கேட்பதில்லை... புரியாத மனிதர்கள் பேசியது வருத்திய பொழுதும் என் வாழ்க்கை, என் முடிவு என் கையில்... என்னை நானே உணர, வாழ்க்கை அர்த்தமுள்ளதானது.

போலிச்சிரிப்பு, குத்தல் பேச்சு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் முதுகில் குத்துபவர் சூழ் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் புன்னகையுடன் எளிதில் கடந்து விட முடிகிறது. அவர்களும் பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். நான் கடந்து வந்த பாதையை அறியாத மூடர்கள்!

என்னைச் சுற்றி இருந்த நல்ல உறவுகள், நண்பர்கள் கிடைக்கப் பெற்றதே வரம். பிரச்னையுள்ளவர்களைச் சுற்றி இத்தகைய மனிதர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். நாம் தான் இனம் காணுவதில்லை. இன்று ஒன்றுமில்லாத விஷயங்களைப் பெரிதாக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களைப் பார்க்கையில் பாவமாக இருக்கிறது. பிரச்னைகளிலிருந்து மீளும் வழியைத் தேடாமல் பழியை யார் மீதாவது போடுவதிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தனக்குத் தான் இப்படி வாய்த்திருக்கிறதென கழிவிரக்கம் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் முக்கியத்துவத்தை அறியாமல் பொருட்களின் மேல் அதிகப்பற்றும் மனிதத்தின் மேல் நம்பிக்கையையும் இழந்தவர்கள் வருந்துவதில் பயனில்லை என்பதை உணரும் நாளில் அவர்களும் வாழ ஆரம்பித்திருப்பார்கள்.

வாழ்க்கை ஒருஅற்புதம். எனக்கு அந்தப் புரிதல் பத்தொன்பாவது வயதில் ஆரம்பித்தது. கல்லூரிப்படிப்பைத் தொடருவதே கடினமாக இருக்க, முகத்தில் புன்சிரிப்புடனும் மனதில் பூகம்பத்துடனும் நாட்களை கடக்க வேண்டிய சூழ்நிலை! கல்லூரிச்சூழல் மட்டுமே ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்த காலம் அது! மன அமைதி வேண்டிச் சென்ற திருப்பரங்குன்றம் கோவில் மயில் மண்டபமும் மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளும் அறியும் அன்றைய என் மனநிலையை! குழப்பங்களுடன் சென்று தீர்வுகளுடனும் திடமனதுடனும் வெளிவந்த அந்நாட்கள் ... என்னுள் இருந்த வலிமையை வெளிக்கொணர்ந்த வலிமிகு நாட்கள்!

தோல்வி மற்றும் ஏமாற்றத்தின் சுவையறிந்ததாலோ என்னவோ வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்ற பாடத்தையும் வாழ்க்கைச் சக்கரம் என்றும் ஓரிடத்தில் நிலையாய் நிற்பதில்லை என்ற உண்மையையும் புரிந்து கொண்டேன். இன்று நினைத்தாலும் பெரும்வலியுடன் பெருமிதமாக இருக்கிறது. அன்று சிறுமைப்படுத்துவதாய் நாக்கில் நரம்பில்லாமல் பேசி இன்று சிறுமைப்பட்டுப் போன மனிதர்கள் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. உணர்ந்த பொழுதில் வாழ ஆரம்பித்து... பிரச்னைகளை எதிர் கொள்வதில் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். அறிந்திட்டேன். கடந்து வந்த பாதையை மறக்கிலேன். கற்றுத் தந்த பாடங்களையும் மனிதர்களையும் மறக்கிலேன். உணர்த்திட்ட மனிதர்களுக்கு நன்றி!

அரவணைத்துச் சென்று நல்வழிக்காட்டிய உறவுகளும், அபய கரம் நீட்டிய உண்மையான நண்பர்களுமே என் வாழ்வின் வரம்.

Count your blessings not problems நான் அறிந்து கொண்ட பாடம்!































































Saturday, November 11, 2017

Happy Veterans Day

ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களை கௌரவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் நவம்பர் 11ம் தேதியை ராணுவ வீரர்களுக்கான தினமாக அறிவித்துள்ளது. மாநகரங்களில் கொடியேந்தி சீருடையணிந்த படை வீரர்களின் ஊர்வலம் பள்ளிக்குழந்தைகளின் வாத்திய அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெறும் நாளிது.

நாட்டின் மேல் பற்றுக்கொண்டவர்கள், மேற்படிப்பு படிக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் சேர்பவர்கள், பள்ளி முடிந்தவுடன் விரும்பிச் சேர்பவர்கள் என்று பலரும் ராணுவத்தில் சேர்ந்து கடும் பயிற்சிக்குப் பிறகு போருக்குச் செல்கிறார்கள். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அதிக அளவில் படை வீரர்களை ராணுவத்துறை தேர்வு செய்து கொண்டிருக்கிறது.சமீபத்திய ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்களில் வீரர்கள் பலரும் இறந்து போகும் சம்பவங்களால் பெற்றோரை, இளம் மனைவியரை, குழந்தைகளைப் பிரிந்து போருக்குச் செல்லும் படை வீரர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதும், உயிருடன் திரும்புவது உத்தரவாதமில்லாத நிலையில் அவர்கள் வீடு வந்து சேரும் நாள் வரை அக்குடும்பங்களின் தவிப்பும், வீடு வந்து சேர்ந்தாலும் போரில் ஏற்பட்ட அனுபவங்களில் மனச்சிதைவுக்கு ஆளாகி போதை மருந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வீரர்கள் பலரும் அல்லலுறுவதும் கண்ணெதிரே நடைபெற்றுக்கொண்டு தானிருக்கிறது.

தத்தம் வாழ்க்கையை மட்டுமே நினைத்துக் கொண்டும் தம் பிரச்சனைகளையே உலகளாவிய பிரச்சனைகளாக எண்ணிக் கொண்டும் வாழ்பவர்கள் ஒரு நிமிடமேனும் கொடுமையான சூழலில் எதிரிநாட்டில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் குடும்பங்களை நினைத்துக் கொண்டால் பிரச்னைகள் பலவும் குறையும்.

கடும்பனியிலும், குளிரிலும்,வெயிலிலும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் ராணுவ வீரர்களின் தியாகத்தால் நாட்டில் நிம்மதியாக சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்து நன்றியுடன் நினைவுகூறுவோம். குழந்தைகளுக்கும் வீரர்களின் தியாகத்தைப் போதிக்க வேண்டும். அதுவே அவ்வீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை! நம் கடமையும் கூட.

Happy Veterans Day!


























Saturday, September 16, 2017

தைராய்டு -ஏன் ? எதற்கு? எப்படி?

தைராய்டு குறைபாடினால் அவதியுறும் மக்கள் அதிகமாகி விட்ட காலத்தில் அதுவும் பெண்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் பிரச்னைகளை எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் 'சின்ன பட்டாம்பூச்சியா நம்மை சிறை பிடிப்பது' தொடரை திரு.முத்துராமன் குருசாமி ( Muthuraman Gurusamy ) அவர்கள் எழுதி வந்ததை தொகுத்து குறைந்த விலைக்குப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

இப்புத்தகத்தில் தைராய்டு என்றால் என்ன, அதன் செயல்பாடுகள், குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள், அயோடின் தேவையா?, ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தால் ஏற்படும் குறைபாடுகள், இரும்புச்சத்து குறைபாட்டிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் உள்ள தொடர்புகள், வைட்டமின் பி12, வைட்டமின் டி, செலினியம், மெக்னீசியம், ஜிங்க்-ன் அவசியம், தைராய்டு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள தேவையான ரத்த பரிசோதனைகள், உணவின் மூலம் ஹைப்போ தைராய்டை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பதை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் திரு.முத்துராமன் குருசாமி அருமையாக எழுதியுள்ளார்.

கூகிளில் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் புரிந்து கொள்ள ஏதுவாக இப்புத்தகம் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும். படித்துப் பயன் பெறவும்.

இப்புத்தகத்தில் உள்ள சிறு குறைபாடு, படங்களை பெரிதாக முழுப்பக்க அளவில் போட்டு இருந்திருக்கலாம். வண்ணப்படங்களாயிருந்திருந்தால் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருந்திருக்கும்.

Tuesday, September 12, 2017

எனக்கென்ன மனக்கவலை

குளிர் கொஞ்சம் குறையட்டும். சூரிய பகவானை பார்த்த பிறகு வாக்கிங் போகலாமென காத்திருந்து வெளியில் வந்தவுடன் எதிர் வீட்டு ஃபிலிப்பினோ பெண்மணி நாயை அழைத்துக் கொண்டு அவரும் வாக்கிங் போகத் தயாராக என்னைப் பார்த்து என்ன  லதா, பார்த்து ரொம்ப நாளாச்சு? 

ஊருக்குப் போயிட்டு இப்பத்தான் வந்திருக்கேன் என்று சிறிது நேரம் ஊர்க்கதைகளைப் பேசி விட்டு குழந்தைகளைப் பற்றி  பேச்சு திரும்ப...

அவர் மகளின் நாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் சேர்ந்து விட்டது என்று சலித்துக் கொண்டார்.

என் குழந்தைகள் சிறு வயதில் நாய் வளர்க்க ஆசைப்பட்டார்கள். அதற்கெல்லாம் நமக்கெங்கே நேரமிருக்கிறது?  இப்பொழுது என்னிடமே விட்டு விட்டுச் செல்கிறாள்.

வாஸ்தவம் தான். கணவன் மனைவி இருவருமே ஷிஃப்ட் போட்டு இரவு பகல் நர்ஸ் வேலை பார்ப்பவர்கள். குழந்தைகளை கவனிக்கவே நேரம் இருந்திருக்காது. இன்று மகனும் மகளும் கல்லூரி படிப்பு முடித்து ஆல்பனியில் ஆளுக்கொரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். விடுமுறையில் வீட்டுக்கும் வந்து தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். மகள் புதிதாக வாங்கிய நாய் ஒன்று ஆறு வாரங்கள் தானாம். அவ்வளவு துடிப்பாக  இருக்கிறது! என்னிடமும் ஓடி வர, நான் ஒதுங்கிக்கொள்ள... பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு வாலாட்டியபடி இருக்க...கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன் நான்.

கடைசிப் பையனின்  கல்லூரி பேச்சு வந்தவுடன் அவர் குரலே மாறி விட்டது. எங்களிடமும் கேட்காமல் அவனே ஆர்மியில் சேர விண்ணப்பித்து அடுத்த மாதம் பயிற்சிக்கு செல்லவிருக்கிறான். கல்லூரி செல்ல வேண்டிய நாளில் இப்படியொரு குண்டை தலையில் தூக்கிப் போட்டான். இது அவனுடைய முடிவு தான். அடலீஸ்ட் ஒரு வார்த்தை எங்களிடம் கேட்டிருந்திருக்கலாம். இல்லையென்றால் கல்லூரிப்படிப்பு முடித்தாவது சேர்ந்திருக்கலாம்.  மூன்று வாரங்களாக  அழுது புலம்பி எங்களை நாங்களே சமாதானபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இனி அவனை எப்படி வழியனுப்பி... உயிருடன் வருவானா, கால் கையுடன் திரும்புவானா என்று அழ... அவன் முடிவெடுத்த பிறகு உங்களால் என்ன செய்ய முடியும், அவன் நன்றாக இருக்க வேண்டிக் கொள்வதை தவிர. கவலைப்படாதீர்கள். நலமுடனே திரும்பி வருவான் என ஆறுதல் சொல்ல... சாரி, என் கணவர், குழந்தைகளைத் தவிர யாரிடமும் பேசவில்லை. உறவினர்கள் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. உன்னைப்பார்த்தவுடன் புலம்பி விட்டேன் என்ற தாயைப் பார்க்க கவலையாகத் தான் இருந்தது.

அவர்களின் பக்கத்து வீட்டில் இருந்த ரெனி கல்லூரியில் படிக்கும் போது தொலைந்தவன் இன்று வரை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் அவனின் பெற்றோர்கள் பெயருக்கு  உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனைப் பற்றி கேட்டு அந்தவருத்தமும் கவலையும் வேறு சேர்ந்து கொண்டது இவருக்கு.

நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நடக்காது. தைரியமாக இருங்கள் உங்களுக்காகவும் சேர்த்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்  என்று சொல்லி விட்டு வந்தேன்.

பெற்றவர்களிடம் கூட கேட்காமல் இந்த விஷயத்தில்  எடுத்த முடிவில் நொறுங்கித்தான் போவார்கள் என்று ஏன் இந்த பிள்ளைகள் உணருவதில்லை? கடைசிப்பையன் வேறு, அம்மா செல்லமோ என்னவோ?

மகன் கல்லூரியில் சேர்ந்த விஷயத்தை எவ்வளவு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இன்று மனம் நொந்து வருத்தத்துடன் அவரைப் பார்க்க கவலையாக இருந்தது.

வயிற்றுச்சுமைகள் மனப்பாரங்களாகி விட்டால் துயர் உயிருள்ள வரை.

  

Friday, July 7, 2017

பெங்களூரு...மைசூரு


2015 ஜூலை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை . மேக மூட்டத்துடன் பெங்களூரு 'குளுகுளு'வென வரவேற்க, விமான நிலையத்திலிருந்து வெறிச்சோடியிருந்த நெடுஞ்சாலைகளில் பெரிய பெரிய விளம்பர பலகைகளையும் மரங்களையும் கடந்து தம்பி வீட்டிற்குப் பயணம். வழியில் ஜிலேபியாய் பிழிந்திருந்த எழுத்துகள் தெலுங்கு மலையாளம் போல் தெரிந்தாலும் தமிழ் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே வர... தம்பி குடியிருக்கும் தெருமுனைக்கடை வாசலில் சப்போட்டா, சீத்தாப்பழத்தை அடுக்கியிருந்ததைப் பார்த்தவுடன் 'ஆஹா! தெய்வம் இருப்பது இங்கே' என மனம் பாட, தம்பியும் உனக்காக வாங்கி வச்சிருக்கேன் என்றான். தேங்க்ஸ்டா! தெரு முக்கு அம்பாள் கோவிலை தாண்டியவுடன் தம்பியின் அபார்ட்மெண்ட். பெட்டிகளை நான் எடுத்து வருகிறேன். நீ மாடியேறு என்றவுடன்...ஆ! elevator இல்லையா? என்ன அபார்ட்மெண்ட்டோ அதுவும் பெங்களூருவில்!

தம்பியும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வர, தம்பி மனைவியும் சூடாக டீ போட்டுக் கொண்டு வந்து பயணம், குழந்தைகள் என்று பேசிக் கொண்டிருந்தோம். நல்லா ஜில்லுன்னு தான் இருக்கு பெங்களூரு என்றவுடன், இரண்டு நாள் முன்பு வரை நல்ல மழை. நேற்றிலிருந்து மீண்டும் பெங்களூரு கிளைமேட் திரும்பியிருக்கு. உன் அதிர்ஷ்டம் என்றான். நல்ல வசதியான அபார்ட்மெண்ட். அநேக பால்கனிகளில் தொட்டிகளில் விதவிதமான பூச்செடிகள், மரங்களில் பறவைகளின் ஆர்ப்பாட்டம். ஜில்ல்ல்ல்ல்ல் தென்றல்!

ஒரு காலத்தில் என்னுடைய கனவு நகரம்! அங்கு தான் செட்டிலாவேனென நினைத்திருந்த நாட்களும் உண்டு! வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிப் போய் .விடுகிறது? நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாமே! அப்படித்தான் பெங்களூர் கம்பெனி வேலைக்குச் சென்ற இடத்தில் கனடாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்து...முடிவில் சுபம் :) பழைய பேச்சுகள் சிறிது நேரம் பேசி முடித்து விட்டு முன்பே திட்டமிட்டிருந்தபடி மைசூருக்குச் செல்லத் தயாரானோம். தம்பி மனைவி தட்டு நிறைய கொய்யா, சப்போட்டா, சீத்தாப்பழங்களை கொண்டு வந்து வைத்து அம்மா உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று நேற்றே சொல்லி விட்டார்கள். மானசீகமாய் அம்மாவிற்கு ஒரு நன்றி. விடுமுறையில் முதல் சாப்பாடே தித்திக்க தித்திக்க பழங்கள். வேறென்ன வேறென்ன வேண்டும். ஒரு முறை தின்றால் போதும். இப்படி பாடி தின்பதற்குத் தான் எத்தனை எத்தனை வகைகள்! வெயிட் மதுரை. ஐ ஆம் கம்மிங் சூன். இவ்வளவு செலவு செய்து ஊருக்கு வருவது இதற்காகத் தானே? ஆசை தீர சுவைத்து முடிக்க, தூங்கிக் கொண்டிருந்த தம்பியின் மகனும் எழுந்து வந்தான். ஃபோனிலும், ஸ்கைப்பிலும் பார்த்துப் பேசியிருந்தாலும் நேரில் பார்த்தவுடன் அவனுக்கு அப்படி ஒரு வெட்கம். அவனுக்கு வாங்கிச்சென்ற விளையாட்டுப் பொருட்களைப் பார்த்தவுடன் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான். பிறந்த மூன்று மாதங்களில் பார்த்தது. இப்போது மூன்று வயதாகப் போகிறது! மழலை அழகு. வெகு விரைவிலேயே ஒட்டிக் கொண்டான். தான் ஆடா விட்டாலும்... சும்மாவா சொன்னார்கள்?

எல்லோரும் தயாராகி மைசூருக்குக் கிளம்ப எனக்குள் உற்சாகம். ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு தம்பிக்கும் ரொம்ப இஷ்டம். அதிக நெரிசலில்லாத பெங்களூரு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமையை பறைசாற்றியது. அன்று நான் கண்ட மரங்களடர்ந்திருந்த நகரம் இன்று கட்டடங்களின் குவியலாய். மதுரையைப் போல மோசமில்லை. மரங்கள் இன்னும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. அங்கும் இங்குமாக இருந்த நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நகரைத் தாண்டிய சிறிது நேரத்தில் பறவைகளின் படங்களுடன் கன்னடத்தில் ஏதோ எழுதியிருக்க உள்ளே சென்றால் இன்னும் பழமை மாறா குடிசைகள், வைக்கோல் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள், செழிப்பான கோழிகள், ஆடுகளை மேய்த்துக் கொண்டு மேய்ப்பான்கள், குளங்களில் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்த மனிதர்களுடன் மாடு, எருமைகள் நீந்திக் கொண்டிருக்க... எதிர்பாராத அழகானதொரு காட்சி! நாரை இனங்கள் பலவும் குளங்களில் மீன் பிடித்து உண்பதை பார்க்க அழகாக இருந்தது. அருகில் ஒரு செங்கல் சூளையும் மாட்டு வண்டியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இரு சக்கர வண்டிகள் மட்டுமே நுழைய முடிகிற தெருவில் நெருக்கமான சிறிய வீடுகளைப் பார்த்துக் கொண்டே வெளியேறினாம். திண்ணைகள் வைத்த வீடுகள் அரிதாகி வரும் காலத்தில் கிராமங்களில் மட்டுமே காலித்திண்ணைகள் காத்திருக்கிறது. அழகாக கோலமிட்ட வீடுகள், நகர வாசனை கலக்காத மனிதர்கள்... பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. .இன்னும் சில வருடங்களில் இவர்களும் மாறி விடுவார்கள். இந்தக் கிராமங்களும் மாறி விடும் என்ற நினைவு கலக்கமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் ஒரு கிராமத்தைச் சுற்றிப் பார்த்த திருப்தியுடன் அங்கிருந்து மைசூர் செல்லும் சாலையில் பயணிக்க..

பந்தல் போட்டு இளநீர் விற்கும் கடைகள் சாலையோரங்களில்! முதல் கடையில் நிறுத்தி ஆசை தீர இளநீர் பருகி விட்டு மீண்டும் பயணம். அமெரிக்க நேரத்திற்கு கண்கள் கெஞ்ச... வழியில் வந்த அடையார் ஆனந்த பவனில் நிறுத்தி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய... தூக்கமும் பறந்து போனது. அமெரிக்க நெடுஞ்சாலைகளில் இருக்கும் ரெஸ்ட் ஏரியாக்களைப் போல பல உணவகங்கள் ஓரிடத்தில்! நன்கு பராமரித்த கழிப்பறைகள், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள் ... நல்ல வசதி தான்! மெலிதாக தட்டிய மொறு மொறு பருப்பு வடை கர்நாடக ஸ்பெஷல் என்று வாங்கிச் சாப்பிட்டோம். அஆபவனில் நல்ல கூட்டம்!

அங்கிருந்து நேராக காவிரிக்கரையில் குடிகொண்டிருந்த நிமிஷாம்பா கோவிலுக்குச் சென்றோம். ஆடி மாத அலங்காரத்தில் குட்டி பார்வதி அமர்ந்த நிலையில் மிகவும் அழகாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிறிய கோவில் தான். நல்ல கூட்டம். கோவில் நுழைவாசல் கடைகள் அம்மன் கோவிலுக்குரிய அம்சங்களுடன். பிரதான புராதன கோவிலுக்கு வண்டிகள் நிறுத்துமிடம் தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் கோவில் அமைந்திருந்த சூழல் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஆலம் மற்றும் வேப்ப மரங்கள், சலசலத்து ஓடும் காவிரி நீர், படிகளில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள், மரங்களின் நிழலில் ஓய்வெடுக்கும் முதியவர்கள், ஓடும் நதியில் முங்கி விளையாடும் குடும்பங்கள், எளிமையான குடும்பங்கள் ... மகிழ்ச்சிக்கு குறைவில்லை.


மரங்களைச் சுற்றி மாம்பழம், அன்னாசி, மாங்காய், காய்கறிகளை கூடைகளில் விற்றுக் கொண்டிருந்தார்கள். உப்பு மிளகாய்த்தூளுக்கும் பஞ்சமில்லை. பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதையும் விடுவானேன். முழுதும் பழுக்காத மாங்காய்/கனிக்கென்றே ஒரு சுவை...ம்ம்ம்ம்...

அங்கிருந்து நேராக பிருந்தாவன் தோட்டத்திற்குச் செல்ல, மேகங்கள் முட்டி மோதி துளித்துளியாகச் சாரலாய் கீழிறங்கி வர... அலைமோதியது கூட்டம். வண்டி நிறுத்தும் இடத்தில் கக்கத்தில் பணப்பையுடன் வலம் வந்து கொண்டிருந்த மனிதர்கள் வாகன நிறுத்தத்திற்கு கடமையாக வசூலித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் எதற்கும் பில் தருவதில்லை. யாரும் கேட்டு வாங்குவதும் இல்லையோ? கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்களின் அணிவகுப்பு!

கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது அங்கு சென்ற நினைவுகள் மீண்டும் உயிர்ப்பெற... அன்று கண்ட அதே காட்சி தான். பெரிதாக மாற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. கிளைகள் பரப்பிய பெரிய மரங்கள், கீச்கீச் கிளிகள் , எங்கும் மனிதர் கூட்டம், நீர் ஊற்றுகள்... அன்று கவர்ந்தது இன்று கவரவில்லை! ஏனோ? சிவாஜியும், ஜெயலலிதாவும், எம்ஜியாரும் இன்னும் பலரும் ஓடியாடிப் பாடிய இடங்களில் பலரும் விதவிதமாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கைபேசி வந்த பிறகு சுற்றியிருப்பதைக் கண்டுகளிப்பதை விட படங்கள் எடுப்பதிலும் அதை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் வந்து விட்டது நமக்கு. புதிதாக திருமணமாகி வந்தவர்கள், குழந்தைகள் பின் ஓடுபவர்கள், குடும்பங்களுடன் வந்தவர்கள் ,அமைதியாக கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வயதானவர்கள் ... உடைகளில், பேச்சுகளில், பாவனைகளில் என்று பலவகையான மனிதர்கள் அங்கே மகிழ்ச்சியுடன்! சுற்றுலாவின் மகிமையே நம்முள் இருக்கும் கவலைகளை மறக்கடித்து புதுச்சூழலில் மூழ்கி சக மனிதர்களின் மகிழ்ச்சியில் இன்புற வைப்பதே. அங்கிருந்த அனைவரும் சிறு புன்னகையுடன் கிண்டல் கேலிப்பேச்சுகளுடன் வலம் வந்ததைப் பார்க்கவே அருமையாக இருந்தது.

நீருற்று நடனம் ஆரம்பிக்க மக்கள் வெள்ளம் அதனை நோக்கி நகர, கூட்டத்துடன் நாங்களும் சேர்ந்து கொள்ள அங்கு ஒரே 'க்ளிக்' மயம்! ஒரு காலத்தில் கண்கள் விரிய கண்ட காட்சி தான்! தம்பி மகன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். நிகழ்ச்சி முடியவும் மழைத் தொடரவும் கூட்டம் சிதற...அங்கிருந்து கிளம்புவதற்குள் இருட்டியும் விட்டது.

இரவுத் தங்கல் தாஸ்பிரகாஷ் ஹோட்டலில். மதுரை காலேஜ் ஹவுஸ் போல பழைய கட்டடங்களுடன்... அங்கேயே கீழ்தளத்தில் உணவகமும் இருந்தது. கமகமவென சாம்பார்,தோசை வாசம்... ஜிவ்வென இழுக்க, அறைக்குச் சென்று பெட்டிகளைப் போட்டு விட்டு காரமான மைசூர் சாம்பார், சட்னியுடன் தோசை...

அபிராமி! அபிராமி!

பயணம் செய்த களைப்பில் தூங்கியதே தெரியவில்லை. பறவைகளின் இன்னிசைக்குரலில் உறக்கம் களைய... அருமையான கமகம காஃபி அறைக்கே வர...யம் யம் யம் யம் ...இந்தியன் காஃபியின் சுவையே அலாதி....அனைவரும் தயாராகி காலை உணவிற்குத் தயாரானோம்.கீழிருந்த உணவகத்தில் சாப்பாடு, டிபன் எல்லாமே நன்றாக இருந்தது. தெலுங்கு மக்கள் அளவு இல்லாவிடினும் இங்கும் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது போல் தோன்றியது. சுவைக்கு குறைவில்லை :)

அதிகாலை மைசூர் வெறிச்சோடி மதுரையைப் போலவே சோம்பலுடன் இருந்தது!  பழைய கட்டடங்கள் இன்றும் அதே தோற்றத்துடன் நகரை மெருகூட்டுவதை ரசித்துக் கொண்டே ரவுண்டானாவில் காந்தி சிலையையும் மைசூர் அரண்மனை முன்பு மகாராஜாவின் சிலையையும் கடந்து சாமுண்டி மலைக்குப் பயணமானோம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


பெங்களூரு-மைசூர் படங்கள்

















Sunday, June 4, 2017

Kaaterskill Falls

வீட்டிலிருந்து ஒரு மணிநேரத்தில் கேட்ஸ்கில்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 79m உயர இரண்டடுக்கு அருவி Kaaterskills Falls. நியூயார்க் மாநிலத்தில் உயரமான அருவியும் கூட. வருடத்தின் வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு அழகினைச் சுமந்து செல்லும் அருவியை கண்டு களிக்க மக்கள் கூட்டமும் நன்கு இருக்கும். மலைகளும் மரங்களும் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அருவி. பனி உருகி மழைக்காலத்தில் அருவியில் நீரோட்டம் அதிகமாகவும், கோடையில் குறைந்தும் சில நேரங்களில் வறண்டும் போவதுண்டு. இலையுதிர்காலத்தில் வண்ண மரங்களுடனும், பனிக்காலத்தில் பனி சூழ்ந்தும் இருக்கும். சமீபத்திய பெருமழையில் பாறைகள் கீழே உருண்டு சாலையை செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். அருவியின் கீழிருந்து மேல் செல்ல ஒரு மைல் செங்குத்தான மலைப்பாதையில் சிரமப்பட்டுத் தான் ஏற முடிகிறது. குழந்தைகளைத் தோளில் சுமந்து செல்லும் குடும்பங்கள், வளர்ப்பு நாய்கள் துள்ளிக் குதித்தோட செல்பவர்கள் என அனைத்து வயதினரும் நடைபயணம் செல்ல அழகான ஒரு இடம். மழைக்காலத்தில் மட்டும் ஈர கற்களை கவனித்து செல்ல வேண்டி இருக்கும். இரு வருடங்களுக்கு முன் மலையிலிருந்து வழுக்கி விழுந்து ஒரு பெண் இறந்ததாக செய்திகள் வந்தது. தற்போது இரண்டாவது அடுக்கிலிருந்து மிகவும் செங்குத்தான பாதைகள் சீரமைக்கப்பட்டு அங்கிருக்கும் கற்களைக் கொண்டே படிகளாக்கி இருக்கிறார்கள்.

கோடையில் குழந்தைகளுடன் வந்திருந்த பொழுது அவர்களும் ஆனந்தமாக குளித்து விளையாடி இருக்கிறார்கள். முதல் தளம் வரை சென்று வருவது வழக்கம். சரி, இந்த முறை அருவியின் உச்சி வரை சென்று பார்ப்பதென முடிவெடுத்து நாற்பது ஐம்பது படிகளை சிரமப்பட்டு ஏறி மேலே சென்றால் இன்னும் இருபது நிமிடங்கள் மேலேறிச் செல்ல வேண்டும். சிரமமான பாதை தான் என்றவுடன் 'கலிஃபோர்னியாவில் கடும் வெயிலில் மலையேறின அனுபவம் தந்த பயத்தில் ஐயோ நான் வரலைப்பா. நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்' என்று அனுப்பி விட்டு போவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டே ஹாய், ஹலோ சொன்னவர்களை சிரித்துக் கொண்டே கடந்து எப்படியோ நானும் அருவியின் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.

என்னை எதிர்பார்க்காத சுப்பிரமணியும் அம்மா, யூ மெய்ட் இட் என்று சொல்லவும், நல்ல வேளை நீ வந்து விட்டாய். இல்லையென்றால் உன்னை கீழே வந்து அழைத்துச் செல்லலாம் என்றிருந்தேன். ஒன்றும் சிரமம் இல்லியே? இவ்வளவு நல்ல இயற்கை காட்சியை பார்க்கத் தவறி இருப்பாய்.

ஆம், அழகான கேட்ஸ்கில்ஸ் மலையின் அடர்ந்த பசுமைக் காடுகளும், அருவியும் ,பறவைகளும், வன மலர்களும் நிச்சயமாக பார்க்க வேண்டியதே. நல்லவேளையாக 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ'வென்று ஐயப்பன் பாடல்களை மனதில் பாடிக் கொண்டே நானும் மலையேறிவிட்டேன். 

அன்று மட்டும் 2.6மைல்கள் மலையேறி நடந்திருந்தாலும் ஐந்து மைல்களுக்கு மலையேறின களைப்பு! அதிசயமாய் வியர்த்துக் கொட்டியது!

வழியெங்கும் 'குளுகுளு' 'சிலுசிலு' தென்றல் சாமரம் வீசியதில் மலையேற்றம் இனிமையான பயணமாக அமைந்ததில் பரம திருப்தி.

அப்பகுதி விளைநிலங்களில் ஸ்டராபெரிஸ் செடிகள் பழங்களுடன் இன்னும் சிறிது நாட்களில் அறுவடைக்குத் தயாராக! கால்நடைகளுக்கான சோளத்தை கிடங்குகளில் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். அருவி இருக்குமிடம் சிற்றூருக்கே உரித்த அழகுடன் மனதை கொள்ளை கொள்ளும். எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஊரும் கூட! இனிமையான நாளை கழித்திட்ட இன்பத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.


Thursday, May 25, 2017

பச்சை நிறமே பச்சை நிறமே...

கடும்பனி மற்றும் கொடுங்குளிரிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் மழையை வரவேற்க, இலைகளைத் துறந்து குளிரில் சோகத்துடன் காட்சியளித்த மரங்களும், நீண்ட உறக்கத்திற்குச் சென்றிருந்த விலங்குகளும், திசைமாறிய பறவைகளும்  உலா வரும் காலமிது. 

மழையில் நனைந்த புற்களும் மரங்களும் புத்துயிர் பெரும் நாளில் நகரமே பச்சை வண்ண புத்தாடையுடன் வலம் வரும் அழகே அழகு! துளிர் விடும் இளம்பச்சை இலைகளும், மழைக்காலத்தில் மட்டுமே பூக்கும் வண்ண மலர்களும் மனங்களை மயக்கும் காலமும் இதுவே.

மழையில் நனைந்தபடி, குடைக்குள் பேசி சிரித்தபடி வெளியுலகில் மனிதர்கள் நடமாட, பூங்காக்களில் குழந்தைகளின் சிரிப்பும் கும்மாளமுமாய்...
ஒருவர் மடியில் ஒருவர் தலை வைத்து உலகை மறந்த நிலையில் காதலர்கள், சக மாணவ, மாணவியருடன் விவாதித்துக் கொண்டும் படித்துக் கொண்டும் கல்லூரி மாணவர்கள், ஸ்கேட்போர்டில் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டே செல்லும் இளங்காளையர்கள், கைகோர்த்து இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் தம்பதியர்கள், இடைவெளி விட்டு பேசிக்கொண்டே செல்லும் ஆண் பெண் நண்பர்கள், குளங்களில் குஞ்சுகளுடன், துணையுடன் வளைய வரும் வாத்துகள், மரத்திற்கு மரம் தாவும் அணில்கள்,  இரை தேடி விரையும் பறவைகள் துணையுடன் கூடு கட்டி குஞ்சுகளைப் பொறித்து பராமரித்து வளர்ப்பதை காணும் இன்பமுமாய் அனைவரும் கொண்டாடி வரவேற்கும் சிறப்பான காலமும் இம்மழைக்காலமே!

இடி, மின்னலுடன் மழை பொழிந்து மனிதர்களையும் மனங்களையும் குளிர்விக்க, வானவில்லின் அழகோ வானத்தை அலங்கரிக்க, வானில் தான் எத்தனை வர்ணஜாலங்கள்!

துளிர் விடும் மரங்கள், வளர்ந்து வரும் புற்கள் சிலருக்கு ஒவ்வாமையானதாக இருந்தாலும், எண்ணங்கள் சிறகடிக்க வண்ணங்களில் உணர்வுகள் சிதறும் மழைக்காலப் பொழுதுகள் தான் எத்தனை ரம்மியமானவை!


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

வள்ளுவன் வாக்கும் உண்மையன்றோ!

Monday, May 1, 2017

அந்த நாள் ஞாபகம்

கோடை விடுமுறையில் பார்க்க வேண்டிய படங்கள் அத்தனையையும் பார்த்தாகி விட்டது. பாட்டி வீடு, பெரியம்மா, மாமாக்கள் வீட்டு விசிட்டுகளும் முடிந்து விட்டது. வார இதழ்களையும் ஒன்று விடாமல் படித்தாகி விட்டது. வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய வேளையில் ...

அப்பா, போர் அடிக்குது. கதை புக்கு வாங்கித்தா.

போய் பாட புஸ்தகத்தை எடுத்து வாசி.

அது செம போர். ஸ்கூல் திறக்கட்டும்.

போன வருஷ கொஸ்டின் பேப்பருக்கு பதில் எழுதிட்டு வரச்சொல்லி இருக்காங்கள்ல. அதை எழுதி முடி. கையெழுத்து அழகாகும்.

போப்பா. அதுவும் போர்.

சும்மா நைநைன்னுட்டே இருக்காத. உன் கூட பிறந்தவங்க அமைதியா இல்ல. (பக்கத்துக்கு இலைக்கு பாயசம் கிடைக்கும்னு அவங்களுக்குத் தெரியும்) நீ மட்டும் தான் எப்ப பாரு போர் அடிக்குது போர் அடிக்குதுன்னு உயிரை வாங்குற. கொஞ்ச நேரமாவது அமைதியா இருக்க முடியுதா உன்னால?

அப்ப எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போப்பா.

இந்தா பஸ்சுக்கு காசு. நீயும் உங்க அக்காவும் சிம்மக்கல் லைப்ரரி போயிட்டு வாங்க.

ஹை ஜாலி!  தங்கையும் தம்பிகளும் வீட்டில் இருக்க, அக்காவும் நானும் பெரிய மனுஷித்தனமாக கிளம்ப, உனக்கு எந்த பஸ் சிம்மக்கல் போகும்னு தெரியும்ல? அதிகம் பேசாத அக்கா. பேசிக்கொண்டே இருக்கும் நான்.  நெல்பேட்டை வரை நடந்து செல்லும் வழியெல்லாம் பேசிக் கொண்டே சென்று  சிம்மக்கல் செல்லும் பஸ் ஏறி நூலக நிறுத்தத்தில் இறங்கிக்  கொண்டோம்.

சுள்ளென வெயில் கடமையாற்றிக் கொண்டிருக்க, சாலையை கடந்து முதல் முறையாக நூலகத்தின் படியேற, வாசலில் மட்டமான சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தவர் என்னம்மா, புஸ்தகம் ஏதாவது எடுக்க வந்திருக்கீங்களா?

இல்ல, படிக்க வந்திருக்கோம்.

சேர்த்துப்  போட்டிருந்த நீண்ட மேஜைகள் நான்கில்  தினசரி செய்தித்தாள்கள் இறைந்து கிடந்தது. சிலர் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்க, அந்த காலத்து மின் விசிறிகளும், டியூப் லைட்டுகளும் அலங்கரித்துக் கொண்டிருந்த கட்டடம். சூரிய பகவானின் கருணையால் தெரு வெளிச்சம் பாதி நூலகத்தை வெளிச்சமாக வைத்திருக்க, மீதி இடங்கள் இருட்டாகவே இருந்தது. நுழைவாசலுக்கருகே பெரிய அரை வட்ட மேஜையில் , அவர் தான் லைப்ரரியனோ? வெள்ளையும் சொள்ளையுமாய்...உள்ளே வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

என்னம்மா, என்ன புஸ்தகம் தேடுறீங்க?

கதை புஸ்தகம்.

கடைசியில இருக்கு. உள்ள போங்க. ஒல்லியான மனிதர் ஒருவர் கைகாட்ட...

நாங்கள் இருவரும் உள்ளே போக, அந்த கடைசி ஷெல்ப்-ல் நிறைய கதை புத்தகங்கள். பறந்து வந்த தெருப்புழுதியை கூட்டி குமித்து வைத்திருந்தார்கள் மூலையில். ஒரே கொசுக்கடி வேறு. அக்காவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. எங்களைத்தவிர பெண்கள் எவரும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

கிளம்பலாம் வா. எனக்கு இங்க பிடிக்கல.

மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி ரத்ன சுருக்கமா தான் பேசுவா.

இரு இரு. ஒரு கதையாவது படிச்சிட்டுப் போவோம்.

இல்ல. இப்பவே போகணும்.

வேறு வழியில்லை. கிளம்பித்தான் ஆகணும். படிக்க விடமாட்டாள்.

உன்னைய போய் கூட்டிட்டு வந்தேன் பாரு. தனியாவே வந்திருக்கலாம். இப்ப வீட்டுக்குப் போய் என்ன பண்ண போற?

உனக்கு இங்கேயிருந்து பாட்டி வீட்டுக்குப் போக வழி தெரியும்ல?

அதுவும் நல்ல ஐடியா தான்.

அக்ரஹாரத்து வீடுகளின் முன் போட்டிருந்த வளைவுக்கோலங்களையும், மோட்டார் உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆஃபிஸ்களின் பெயர் தாங்கிய பலகைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே பழைய சொக்கநாதர் கோவில் படியேறி வணங்கி விட்டு வியர்க்க விறுவிறுக்க சிம்மக்கல் சாலைக்கு பக்கவாட்டுச் சாலையில் பழங்கள் விற்கும் மண்டிகளின் பெரிய பெரிய தராசுகளையும்,   மாம்பழம், வாழை, சாத்துக்குடி, ஆப்பிள், தேங்காய் என்று அனைத்து வித பழங்களும் விற்கும் தெருவையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இம்பீரியல் தியேட்டரையும் கடக்க, எத்தனை மனிதர்கள், எத்தனை வேடிக்கை காட்சிகள்!

பஸ் காசு இருக்கு. புதுமண்டபம் பக்கத்துல எள்ளு மிட்டாய் வாங்கிச்சாப்பிடலாம் வா. அதையும் விடுவானேன். ஆளுக்கொரு பாக்கெட் வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே பழக்கப்பட்ட தெருக்களை கடந்து தேர்முட்டி வந்து விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துச் சந்தில் பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

எங்க போயிட்டு வர்றீங்க இந்த வேகாத வெய்யில்ல? எங்களை எதிர்பார்க்காத பாட்டி.

சிம்மக்கல் லைப்ரரி போனோம். இவளுக்கு அங்க பிடிக்கல. அதான் கிளம்பி வந்துட்டோம்.

பரவாயில்லையே! வழி தவறாம சரியா வந்து சேர்ந்துட்டீங்க.

 கைபேசி இல்லாத காலங்கள் தான் எவ்வளவு சுகமாக இருந்தது.

என்ன இருக்கு பாட்டி சாப்பிட? பசிக்குது. சாப்பிட்டு கிளம்புறோம்.

கொஞ்ச நேரம் பேசி விட்டு வெயில் குறைந்த பிறகு வழியில் வாங்கிச் சாப்பிட பாட்டி கொடுத்த பணத்துடன் மீண்டும் நடை.

மிகவும் பழகிய தெருக்கள். மனிதர்கள். கடைகள். கீழவாசல் பிள்ளையார் கோவில் அருகே 'பனங்கா உண்டோ' என்று அரிசி மாவு, பொரிகடலை, வெல்லம், ஏலக்காய் சேர்த்து செய்த மாவு உருண்டை விற்பார்கள். கமகம மணத்துடன் பற்களின் உறுதியையும் தாடையையும் பதம் பார்க்கும் பதார்த்தம். வாயில் போட்டால் வீடு செல்லும் வரை கரையாது. உப்பிய கன்னத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்த கதையைச் சொல்ல...

இன்று போல் இல்லாவிடினும் அன்றும் போக்குவரத்து நெருக்கடிகள் இருந்தது. நெல்பேட்டையிலிருந்து முழுவதுமாக ஒரு ரவுண்டு அடித்து திரும்பியதில் ஒரு திருப்தி. எத்தனை கேர்ஃப்ரீயாக இருந்திருக்கிறோம்! பதினான்கு வயதில் பயமில்லாமல் ஊர் சுற்ற முடிந்திருக்கிறது. சுற்றவும் விட்டிருக்கிறார்கள். இன்று குழந்தைகளை வெளியே அனுப்பவே பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது!

புத்தகம் படிக்க முடியா விட்டாலும் வழியெங்கும் எத்தனை எத்தனை காட்சிகள், மனிதர்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், சினிமா போஸ்டர்கள், கோவில்கள், கடைகள், மரங்கள் ...

இது போதும் எனக்கு இது போதுமே-ன்னுட்டு... கோடையை கழித்த நல்லதொரு இனிமையான நாள்.

அந்த நாள் ஞாபகம்...



















Friday, April 14, 2017

அந்த 100 நாட்கள்

டிசம்பர் 31,2016 இரவு ஆங்கில புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டே ஃபேஸ்புக் ஆப்-ஐ அலைபேசியில் இருந்து எடுத்து விட, இனி 100 நாட்களை எப்படிக் கடக்கப் போகிறேனோ? ஒருவேளை அவசரப்பட்டு விட்டேனோ? ஒரு வாரம் இல்லையென்றால் ஒரு மாதம் முயற்சி செய்து பார்த்திருக்கலாமோ? ஃ பேஸ்புக் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? ஜீவிதமே அங்க தான இருந்தது. தடாலடியா 100 நாட்கள் எனத் தாவி இருக்கக் கூடாதோ? மனதில் பட்டிமன்றம் ஓடினாலும் நாட்டில் 100 நாட்கள் விதவிதமாகப் பல்வேறு வண்ணங்களில் சேலை, டிஷர்ட் போட்டுப் படங்களைப் போடுவதை விட இது ஒன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை. தொடர் பழக்கத்திலிருந்து வெளிவருவது அவ்வளவுஎளிதானதும் அல்ல. முயற்சி செய்து தான் பார்ப்போமே. எனக்கும் சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது.

ஜனவரி முதல் நாள் காலையில் மகளை ஊருக்கு வழியனுப்பி விட்டு வரும் வழியில் ஆதவனின் வருகையையும், வானின் வண்ணங்களையும் நெஞ்சிலும் காமெராவிலும் படம்பிடித்துக்கொண்டே... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கையில் ஓ! ஃபேஸ்புக் தான் இப்ப கிடையாதே! சிறிது வருத்தமாகவும் இருந்தது. அதனால் என்ன, இன்ஸ்டாகிராமில்போட்டு திருப்திபட்டுக் கொண்டேன். செய்திகளை, டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுதோ கை பரபரவென ஸ்டேட்டஸ் போட துடித்ததென்னவோ உண்மை. முதல் இரு நாட்கள்மட்டுமே அப்படி இருந்தது. சுப்பிரமணிக்குப் பள்ளி திறந்தவுடன் என் அதிகாலை பரபரப்பு குறைந்திருந்ததை உணர முடிந்தது. காலையில் ஃபேஸ்புக் பக்கம் வராத பொழுதுகள் அமைதியாகப் பழைய நாட்களைப் போல.

என்ன, உடனுக்குடன் தெரிந்த செய்திகள் கொஞ்சம் சாவகாசமாகத் தெரிந்தது. காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படும் அரசியல் பதிவுகளைப் படிக்காமல் மனம் நிம்மதியாக இருந்தது.ரெசிபியை ஃபேஸ்புக்கில் தேடி சமைத்து முடித்ததும் படம் போடுவது போன்ற அலப்பறைகள் இல்லாமல் பாட்டு கேட்டுக் கொண்டே நிதானமாகச் சமையல் வேலைகள் முடிந்தது.ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டிராமல் நடப்பதும் விளையாடுவதும் அதிகரித்து வாரத்திற்கு 50000 ஸ்டெப்ஸ் டார்கெட்டை எட்ட முடிந்தது.

மடியில் கணினி, கையில் அலைபேசி, கண்கள் டிவியில் என மல்டிடாஸ்கிங் ஜிகிலடிக்கள் இல்லாத நாட்கள் எனக்கே ஆச்சரியமான ஒன்று! குடும்பமாக வெளியில் சென்ற பலநாட்களில் செல்ஃபோன் மறந்த நாட்களும் பலவாகிப் போனது! வேடிக்கைப் பார்த்துக் கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டே ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ததும் கடந்த காலமாகி மனக்கண்ணில் படங்களை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த வார்த்தைகளை மனதில் எழுதிக் கொண்ட பயணங்கள் மீண்டும் என் உலகத்திற்குள் நான்!

எத்தனை எத்தனை விஷயங்கள் தான் நடந்து விட்டது இந்த நூறு நாட்களில்! தமிழ்நாட்டு (அ)சிங்க அரசியல் தகிடுதத்தங்கள், டிரம்ப் பதவியேற்பு, எதிர்ப்பு, தினம் ஓர் அதிரடி அறிவிப்பு,வாடிவாசல் மெரீனா போராட்டம், நெடுவாசல் அரசியல் அரங்கேற்றங்கள், மதுரையில் வெயில் கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இத்யாதி இத்யாதிகள்... ஆம்... எல்லாவற்றுக்கும் காரணம் மோடி சர்க்கார்... புலம்ப ஒரு கோஷ்டி. எப்படித்தான் தமிழ்ச்செய்திகளையும், கலந்துரையாடல்களையும் பொறுமையாகத் தமிழர்கள் பார்க்கின்றனரோ? பார்த்தாலே ரத்தக்கொதிப்பு வந்து விடும் போல் ஏக டெசிபெலில் ஒவ்வொருவரும் சேனலில் கத்திக் கொண்டிருக்கிறார்கள்! தினசரிகளையும் தொலைத்ததில் மனஅமைதியே!

பனியும், குளிரும், வெயிலும், மழையுமாகச் சென்று கொண்டிருந்த பனிக்காலம் முடியும் தருவாயில் சென்றேன் என்று நினைத்தாயோ, வந்தேன் பார் என வரலாறு காணாதபனிப்புயலால் ஆல்பனியை கலங்கடித்து... இத்தனை வருடங்களில் முதல் முறையாக அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு எதிர்பாராத விடுமுறையைத் திகட்ட திகட்டகொண்டாட வைத்ததில் திளைத்த உள்ளங்கள் இரண்டு. வேறு யார்? நானும் என் செல்ல சுப்பிரமணியும் தான். அவனுக்குப் போனஸாக அடுத்த நாளும் விடுமுறை !ஆனந்தக்கூத்தாடியதை சொல்லவும் வேண்டுமோ?

மனதிற்கினிய மழைக்காலமும் வந்தே விட்டது. 'குளுகுளு' மழைச்சாரலில் நனையும் சுகமே அலாதி. மழைக்காற்றின் சுவாசத்தில் புத்துயிர் பெறும் மரங்கள் பச்சை வண்ணம்உடுத்தி வலம் வர ஆரம்பிக்கும் நாட்களும் வெகு அருகில். எங்கே மாயமாய் மறைந்தனவோ என்றிருந்த பறவைகள் வந்தேன் வந்தேன் எனக் கூட்டிற்குத் திரும்பி இனிய கானம்இசைக்கும் காலைப்பொழுதுகள், உல்லாச உலகில் அவர்களின் காதல் கீதங்கள் ரம்மியமாக இசைக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குருவிகளுக்காக ஆண் குருவிகளின் காத்திருத்தலும், சேர்ந்து கூடு கட்டும் அழகும்... கேமராவும் கையுமாக மீண்டும் நான்.

விசேஷ தினங்களுக்கு நண்பர்களிடமிருந்து வரும் வாழ்த்துகளுக்குக் குறையவில்லை. இணையம் தாண்டிய நட்பு வட்டம் என்று போல் இன்றும் உயிர்ப்போடு இருக்க,தொடர்பிலிருந்த வரை உள்ள நட்பு யாதெனவும் புரிந்தது. இணையத்தை, சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருப்பவர்களின் மேல் மரியாதை பன்மடங்கு கூடியிருக்கிறது. பலன்கள் பலவும், இழப்புகள் சிலவும் என இந்த 100 நாட்கள் பலவும் கற்றுத் தந்தது. என்னைக் காணாமல் எனக்கு ஏதோ உடற்பிரச்னை என்று நினைத்தவர்களும் கவலைப்பட்டவர்களும் தனி மடலில் செய்திகளை அனுப்பி அதற்கும் பதில் வராததால் கணவரிடம் விசாரித்த நல்ல உள்ளங்களும்...கண்ணு கொஞ்சம் வியர்த்துத்தான் போனது இந்த முகமறியா நட்புகளால்!

எப்படி இருக்கீங்க? ஃபேஸ்புக்ல நீங்க இல்லாதது உங்களைப் பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு. சுப்பிரமணிய, உங்க குருவிங்க படங்களை ரொம்பவே மிஸ் பண்றோம்னு பலஃபீலிங்ஸ்!

ஆக, முகநூல் அடிமையாகாமல் என்னால் வெளிவர முடியும் என்ற நம்பிக்கையும், திட்டமிட்ட பல வேலைகளுடன் திட்டமிடாத சில வேலைகளும், கற்றுக் கொண்ட பல பாடங்களுமாய் ... 100 நாட்களும் ஒரு சுகானுபவமே! இணையம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறிய வேண்டும் என்ற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பார்க்கலாம்.

அப்பாடா! தொலைந்தாள் என்றிருந்தவர்களே வந்து விட்டேன் உங்கள் டைம்லைனை நிரப்ப...ஹி ஹி ஹி...ஸ்டார்ட் த ம்யூசிக்க்க்க்க்க்க்.

துர்முகி வருடம் நிறைவடைந்து புது வருடமான ஹேவிளம்பி பிறக்கும் மங்களகரமான இந்நன்னாளில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் பொன்மயமான வாழ்வு அனைவருக்கும்  அமையட்டும்.

நண்பர்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


Wednesday, April 12, 2017

அவனும் அவளும்

என்னங்க இன்னும் ரெடியாகலையா?

ஆறு மணி படத்துக்கு இப்ப இருந்தே போகணுமா? இன்னும் நேரமிருக்கே!

வீட்லருந்து தியேட்டர் போய்ச் சேர அரைமணி நேரமாவது ஆகும். இப்ப கெளம்பினா தான் சரியா இருக்கும். புதுப்படம் வேற. கூட்டம் இருக்கும். டிக்கெட் கிடைக்குமா?

அதெல்லாம் கிடைக்கும்.

படத்துக்குப் போக பிடிக்கலைன்னா நான் எங்கம்மா கூட போய்க்கிறேன்.

அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ தான் ரொம்ப அவசரப்படற.

ஹ்ம்ம். பெரிய டைரக்டர் படம். ARR மியூசிக். இன்னும் பல கவர்ச்சி அம்சங்கள் இருக்கு. படத்தை 'ஆஹா ஓஹோ'ன்னு விமரிசனம் பண்ணி மார்க் போட்ருக்காங்க. நீங்க என்னடான்னா ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க?

நான்ன்ன்ன் அலட்டறேன்? அது சரி!

பின்ன என்ன? எனக்கெல்லாம் விக்கோ வஜ்ரதந்தி விக்கோ வஜ்ரதந்தின்னு அந்த தாத்தா 'ஆஆ'ன்னு வாய பொளக்கிற விளம்பரத்துலருந்து, க்ளோஸ்அப்ல முடி பறக்க கண்ணு மின்ன சிரிக்கற மாதவன் விளம்பரம் எல்லாம் பார்த்தா தான் படம் பார்த்தா மாதிரி இருக்கும்.

சரி,சரி கிளம்பு! இவ்வளவு சீக்கிரமெல்லாம் நான் படத்துக்குப் போனதே இல்லை!

நீங்கள்லாம் கல்யாணாமே பண்ணிருந்துக்கக் கூடாது.

மாலை வெயிலும் சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்க...

எப்படியோ டிக்கெட் வாங்கி கூட்டத்தோடு கூட்டமாக கிடைத்த இரு இருக்கைகளில்... ஒரே ஜாலி. இன்னும் விளம்பரம் கூட போடலை.

விளம்பரம் முடிந்து படம் ஆரம்பித்து...

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை...
மூழ்கியதில்....

ஹே! வீட்டுக்குப் போகலாமா?

வீட்டுக்கா? எதுக்கு? இப்பத்தான படமே போட்ருக்கான்?

எனக்கு இப்பவே தலைவலிக்க ஆரம்பிச்சிடுச்சு.

எனக்கு வர்ற கோவத்துக்கு... உங்களையெல்லாம்....

ப்ளீஸ்!

இன்னும் இன்டெர்வல் கூட விடல. கடலைமிட்டாய், முறுக்கு, கோன் ஐஸ்கிரீம் எல்லாம் எனக்காக வெயிட்டிங். நான் வரமாட்டேன். நீங்க போங்க.

கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னென்ன அவஸ்தைகள்! நிம்மதியா ஒரு படம் பார்க்க முடியுதா! ஹூம்ம்ம்ம்ம்ம் ...

ஒரு வழியா படம் பார்த்து முடிய...

எப்படி இவ்வளவு ஆர்வமா இந்தப் படமெல்லாம் பார்க்கிற? உன்னைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு!

இருக்கும் இருக்கும். எப்படித்தான் உங்களை மட்டும் ஓவியமா பெத்தாய்ங்களோன்னு எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு!

பாட்டு ரிலீஸான நாள்லருந்து பாடி கொன்னுக்கிட்டிருந்தியே!

ஞே!

அந்தப் படம் ரிலீஸாயிடுச்சு போலிருக்கே! நீ போகல ?

ஏன்? நீங்க வரல? வந்து பார்த்த்துட்டு நாலு 'நல்ல' வார்த்தைய சொல்றது.

சரி சரி வர்றேன்.

ரொம்ப அலுத்துக்க வேணாம். நான் போயிட்டு வர்றேன். அந்த ஹீரோயின பார்த்தா கொஞ்சம் ஷோபனா மாதிரி இருக்காம்.

நான் தான் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றேனே! நாளைக்குப் போகலாம். உனக்காகத்தான் வர்றேன்.

 காதுல தோடு இருக்கான்னான்னு பார்த்துக்கிட்டேன். பத்திரமா தான் இருக்கு. ஹி ஹி ஹி!

ஆனா ஒன்னு. அங்க வந்து தலைவலிக்குது கால்வலிக்குதுன்னு சொன்னா அவ்வளவு தான்.

ஹேய்! என்ன? படம் பார்க்கணும்னு சாரட்டு வண்டியிலே சாரட்டு வண்டியிலேன்னு தையா தக்கான்னு ஆடிக்கிட்டு இருந்த? இப்ப தூங்கிக்கிட்டு இருக்க?

போகலாம் போகலாம். இன்னும் நேரமிருக்கே!

சீக்கிரம் கிளம்பு.

என்ன? என்னிக்குமில்லாத அதிசயமா இருக்கு! என்ன நடக்குது?

ரெவியூ எல்லாம் படிச்சியா? இப்பவே சொல்றேன்...

ஒன்னும் சொல்ல வேணாம். காசு குடுத்து தலைவலி வாங்கிக்க நான் ரெடி.

டிக்கெட்டும் வாங்கியாச்சு. இன்னும் முக்கா மணிநேரம் இருக்கு. இப்ப உள்ள போனா உன்னையும் என்னையும் தவிர ஒரு ஜனமும் இருக்காது. வா, மால் முழுக்க சுத்தி வருவோம். ஏதாவது சாப்பிடறியா?

ம்ஹூம். (மைண்ட் வாய்ஸ் - கவனிப்பெல்லாம் பலமா இருக்கே?!)

தியேட்டருக்குப் போயிடுவோம். எனக்கு கடைசி வரிசையில சென்ட்டர் சீட் வேணும்.

நமட்டுச் சிரிப்புடன், இந்தா தியேட்டர் முழுக்க உனக்குத்தான்!

என்ன கொடுமையிது! வெள்ளிக்கிழமை கூட கூட்டம் இல்லைன்னா... நம்ம டமில் மக்கள்ஸுக்கு  அறிவு கிறிவு முதிர்ச்சி ஏதாவது...??? உங்கள நம்பி பெரிய டைரக்டர் ஒருத்தரு மூளைய கசக்கிப் பிழிஞ்சு காதல் சொட்ட சொட்ட சில பல முன்னேற்ற கருத்துக்களை வச்சு படம் எடுத்தா... கொஞ்சம் கூட ரொமான்டிக் ரசனை இல்லை. இப்படியா துரோகம் பண்றது டமில்ஸ்?

அதுக்குள்ள ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக

பாப்கார்ன் வேணுமா?

தியேட்டர்லருந்து தப்பிச்சு ஓட காரணம் தேடுறாரோ?!

அதெல்லாம் வேண்டாம்.

கொஞ்ச நேரத்துல விக்ரம் வேதா ட்ரைலர்... 

ஹை!

அடுத்த தலைவலி வேற வருது போல!

இளம்தம்பதியர் தள்ளு வண்டியில் குழந்தையுடன்  தியேட்டரில் என்ட்ரி ஆக ...அப்பாடா! துணைக்கு ஆள் இருக்காங்க.

படத்த போடுங்கடா சீக்கிரம்.

கைநிறைய ராட்சஸ பாப்கார்ன் பக்கெட்ட்டுடன்... மூன்று பெண்கள் முன் வரிசையில்.

படத்தோட டைட்டில் போட்டவுடன்... சவுண்ட ஏன் இவ்வளவு கூட்றானுங்களோ?

திடீர்னு கத்திக்கிட்டே நாலு பொண்ணுங்க முன் வரிசையில். ஆன்சைட் ப்ராஜெக்ட்டுக்கு வந்துருப்பாங்களோ? அவங்க மட்டும் தான் ஆர் ஜே பாலாஜி வர்றப்பவும், 'வீசீ' கண்ணு முழிய விரிச்சு ஆணாதிக்கத்தனமா கத்துறப்பவும்...சீ சீ...உணர்ச்சிகரமா நடிக்கறப்பவும் ஓஓன்னு கூப்பாடு போட்டாங்க... மத்தபடி நடுநடுவில் வந்து சேர்ந்த இருபது பேரும் அமைதியாக  படத்தைப் பார்க்க...

 கேளாயோ கேளாயோ...முடிஞ்சு படம் தொடர, மெதுவா ஓரக்கண்ணால சைடுல பார்த்தா பசங்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டு... ஹ்ம்ம்... எப்ப தலைவலி படலம் ஆரம்பிக்கப் போகுதோ?

அங்க அந்த 'வீசீ' பாரதியார் கவிதைகளை காதலோட சொல்ற சீன்ல திரும்பி பார்த்தா... தலைவலிக்கு அமிர்தாஞ்சன் விளம்பரத்துல வர்ற மாதிரி நெத்தியில கைய வச்சுக்கிட்டு... பாவமா தான் இருந்துச்சு.

ஆனா, மனுஷன் எதுவுமே பேசலையே!

படம் முடிஞ்சு மால்-ஐ விட்டு வெளியே வந்தா,

வான் வருவான் தொடுவான்

மழை போல் விழுவான்

காற்றாய் கரைவான்

குளிராய் உறைவான்

-ங்கிற மாதிரி மழை தூறிய வானமும் சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் காற்றும் முகத்திலறைய...

அழகியே ஏ அழகியே take me home take me home னு

தொலைவில் நிறுத்தியிருந்த வண்டியில் ஓடிப்போய் ஏறி ஹீட்டர் போட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டுப் பாட்டை போட்டா...

விதி வலியது!









































































































Sunday, March 19, 2017

இப்படியும் சில ஜென்மங்கள்!

வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே எந்த குக்கர் எத்தனையாவது விசில் கணக்கையும் கவனித்துக் கொண்டு காது முழுவதும் டிவி நிகழ்ச்சியில் என வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை. இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தங்கள் திருமணத்திற்காகப் பெற்றவர்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பற்றி பேசினார்கள். சரி, வழக்கமான ஒன்று தான். பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில்அப்படி என்ன கேட்டு விடப் போகிறார்கள்?

முதலில் பேசிய இளம்பெண் நூறு சவரன் நகை வேண்டும், அப்புறம் கார், அப்பா கட்டிய வீடு ... அவளுடைய அம்மாவோ சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண்ணோ லேட்டஸ்ட் வைர நகை செட். ஹெலிகாப்டர்ல மாப்பிள்ளையும் பொண்ணும் வந்து இறங்கணுமாம்! வாவ்! ஆசை இருக்கலாம். அதுக்காக இப்படியா?

ஏதோ எங்களால முடிஞ்ச அளவில ஒரு இருபது பவுன் நகை, மாப்பிளைக்குச் செயின் அம்மா சொல்லி முடிப்பதற்குள் மகள் இருபது பவுனுக்கு கல்யாணமே வேண்டாம்னு அலறல். எண்பது சவரன் கேட்டால் தான் ஐம்பதாவது போடுவார்கள் சார். அவர்களால் முடியும் என்று ஏதோ மூன்றாம் மனிதரிடம் வசூலிப்பது போல் எப்படித் தான் பேச முடிகிறதோ? வீட்டில் பார்த்து திருமணம் செய்வது பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்கத்தான் ரீதியில் அந்தப் பெண்கள் பேசியது மிகவும் கேவலமாக இருந்தது.

நானும் ஆரம்பத்தில் இந்தப் பெண்கள் பையனை பெற்ற அம்மாக்களிடம் தான் வரதட்சணை கேட்கிறார்கள் போல என்று பார்க்கஆரம்பித்து, பெற்ற அம்மாவிடம் கேட்டவுடன் இப்பேர்பட்ட ஜடங்களும் ஜந்துகளும் வெட்கமின்றி தகுதிக்கு மீறிய  பணம்,வீடு, நகை கொடுக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை என பொதுவெளியிலேயே பேசியதை பார்த்தபொழுது இப்படியும் பெண்கள்  அதுவும் படித்து சுயமாய் முன்னேறி பெற்றவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் காலத்தில் வாழ்கிறார்களே.... வெறுப்பாக இருந்தது.

வெளிப்படையாகப் பேசுகிறேன் என்று இரு பெண்கள் பேசியது கொடுமையிலும் கொடுமை. சாகிற வரைக்கும் பென்ஷன் வரப்போகுது, சம்பாதித்திருக்கிறார்கள் கொடுப்பதற்கென்ன... இவர்கள் இறந்து விட்டால் சொத்துக்களைப் பிரிப்பதில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்க திருமணத்திற்கு முன்பே சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்து விட வேண்டும்...ம்ம்ம்...இவர்களைப் பெற்றவர்கள் பாவம் தான்.

தங்களுக்காகப் பெற்றவர்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தை விட, பெண்ணைப் பெற்றவர்கள் ஆரம்பத்திலிருந்து சேர்த்து வைத்திருக்க வேண்டியது அவர்கள் கடமை ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நெருடலாக இருந்தது. காலம் தான் எப்படி மாறி விட்டிருக்கிறது? உறவுகளின் பலம் உணராமல் பணம் இருந்தால் போதும் அதுவும் தனக்கு வேண்டியது கிட்டினால் போதும், கூட பிறந்தவர்களைப் பற்றி கூட சிறிதும் கவலைப்படாத சுயநல மனநிலையை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது!

அம்மாவிடம் அவ்வளவு நகை, பணம், சொத்து கிடையாது என்று தெரிந்திருந்தும் அடாவடியாக லிஸ்ட் போட்டு கேட்கிறார்கள். சென்டிமென்டல் வேல்யூவென்று சொல்லி அம்மாக்களின் சேலைகளையும் விட்டு வைக்கவில்லை!

அப்பா இன்று வரை எங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கை வாழவே இல்லை. இனி எப்போது வாழ்வார் என்றும் தெரியவில்லை. அதே நிலைமை என் வருங்கால கணவருக்கும் வரக்கூடாது அதனால் தான் பணம் வேண்டும் என்று கேட்கிறேன் என்பதில் இருக்கும் அப்பட்டமான சுயநலம், புகுந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்க பிறந்த வீட்டினர் செய்ய வேண்டிய சீர் வரிசை... மாமியாரே பரவாயில்லை போலிருக்கிறது! ... சிந்தித்து தான் பேசுகிறார்களா?

இந்த கேடு கேட்ட ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கப் போகும் அந்த அப்பாவி ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து சில உறவினர் வீடுகளில் இப்படியும் கேவலமான ஜந்துகள் பெற்றவர்களின் நிலைமை தெரிந்தும் அவர்களை வதைப்பதை கண்டு போதிய படிப்பறிவும், உறவுகளின் அன்பை புரிந்து கொள்ளக் கூட முடியாத உணர்ச்சியற்றவர்களாய் இருக்கிறார்களே என வருந்தியதுண்டு. பெண்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டு சொந்தக்காலில்உழைத்து தன்னைச் சுற்றியுள்ளோரையும் உயர்த்த வேண்டும் என்ற துடிப்புடன் முன்னேறும் இந்த கால கட்டத்தில் கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக் கொண்டு ஒடத் துடிக்கும் பெண்களின் மனவோட்டம், நிகழ்ச்சி பார்த்த பலரையும் முகம்சுளிக்க வைத்திருக்கும்.

இப்படியுமா பெண்கள் இருப்பார்கள் ? இருக்கிறார்கள்? இவர்கள் தான் நவீன உலகின் பெண்களா? குடும்பங்களில் உறவை பேணிக்காக்கும் நற்குணங்களைப் பணம், சொத்து, நகை கொண்டு அளவிடும் மனநிலையில் இருப்பவர்கள்  இப்படி பேசுவதற்கு சில பெற்றோர்களின் ஆண்பிள்ளை பாசம் தான் காரணமா? ஆண், பெண் பாரபட்சமின்றி இருவருக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் பெற்றோர்களுக்கு இன்னும் என்ன தயக்கம் ? பிள்ளை தங்களை வைத்துக் காப்பாற்றுவான் தான், அவன் மனைவி சொல்லும் வரை. வயதான காலத்தில்சொத்துக்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு சில பெற்றோர்கள் படும்பாட்டை நேரிலேயே பல இடங்களில் காண்கிறோம்.

சொத்துக்களைச் சேர்த்து சொந்தங்களைப் பிரித்து வைக்கும் வேலையைச் செவ்வனே செய்கிறது இந்தப் பாழாய்ப் போன பணம். பணமா பாசமா என்றால் பணம் தான் என்று பெரும்கூச்சலுடன் பெரும்பாலாரும், பாசம் என்று மெல்லிய குரலில் சிலருமாகிப் போனது காலத்தின் கோலம்!

வடஇந்திய ஸ்டைலில் மெகந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தமிழ் சமுதாயத்தில் ஊடுருவதையும் சில அம்மாக்கள் விரும்பவில்லை. மாடர்ன் பெண்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜஸ்ட் ஃபார் ஃபன். அவர்கள் செலவில் திருமணத்தை செய்தால் இந்த ஆடம்பரங்கள் எல்லாம் இருக்குமா?

மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சிணை கேட்பார்கள் என்றில்லை. பெற்ற பெண்களே கேட்பார்கள் என்ற காலகட்டத்தில் வாழும் பெற்றோர்களுக்கு கொடுமையான காலம் தான். நல்ல கல்வியை கொடுத்து விட்டோம் இனி உன் பாடு என்று சொல்லஆரம்பித்தால் அவர்களுக்கும் பொறுப்பு வரும். எதிர்பார்ப்புகளும் குறையலாம்.

பெற்றோர்களும் தங்கள் சுயசம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களைப் பிள்ளைகளுக்குச் சரிசமமாக பங்கு பிரித்துக் கொடுத்தும், ஆண் பெண் குழந்தைகளைப் இனம் பிரித்துப் பாராமல் அவர்கள் விருப்ப கல்வியினை வழங்கி தத்தம் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வகையில் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் அதிக எதிர்பார்ப்பிற்கு பெற்றோர்களும் ஏதோ ஒரு வகையில் காரணிகளாகி விடுகிறார்கள். குடும்ப நிலைமையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் வயதில் தெளிவாக சொல்லிப் புரிய வைக்காததும், அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தின் அருமையை உணர வைக்காததும் பல பெற்றோர்கள் செய்யும் தவறு.

கல்வியறிவு இன்னும் இத்தகைய பெண்களின் எண்ணங்களை மாற்றவில்லை. சம உரிமை கேட்கும் பெண்களுக்குத் தங்களால் பெற்றோர்கள் படும் துயரிலிருந்து அவர்களை மீட்கும் எண்ணமும் இல்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண்களிடம் கண்ட வருத்தமான விஷயம். ஆண்கள் வரதட்சணை கேட்பதே பெண்களை அவமதிக்கும் செயல் என்று போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் பெண்களைப் பெற்றவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பெரும்பொறுப்பிலிருப்பதாக இப்பெண்கள் பேசியதில் இருந்த மடமையை எண்ணி வெட்கி தலைகுனிய வைத்தது இந்நிகழ்ச்சி.

Saturday, February 18, 2017

இரண்டாம் உலகம்

பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும்.

கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
Statue of Liberty
வடகிழக்கில் ‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள் செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,

இந்தியர்கள் மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக் கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத் துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,

நீலக்கடலின் பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும் கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம், கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ் மாநிலமும்,

வறட்சியுடன் மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி, பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட் நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக் கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில் கலிபோர்னியா மாநிலமும்,
California
இலையுதிர்காலத்தில் இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,

உலகையே ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப் பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில் செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம் என்றால்,

அட்லான்டிக் கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும், விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும், பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும், பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,

பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,
Minnesotta
அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள், விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச் செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும், பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும் என நிவெடா மாநிலமும்,

உலகின் அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின் திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு அரிசோனா மாநிலமும்,
Grand Canyon
பச்சைப்பசேலென விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா மாநிலமும்,

இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள், பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில் வயோமிங் மாநிலமும்,

என ஒவ்வொரு மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும் இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும் வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன் என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!
Maduraiஆயிரம் இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத் தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா என்னுடைய இரண்டாம் உலகம்.

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...