Tuesday, October 8, 2019

இலையுதிர்கால பயணம் - லேக் ஜார்ஜ்


அதிகாலைப்பயணங்கள் ஆனந்தமானவை. அதிலும் குளிர் சேர்ந்து கொண்டால் நடுக்கத்துடன் பயணிப்பதும் சுகம். வார இறுதியில் குழந்தைகள் இல்லாமல் இலையுதிர்கால அழகைக் காண ஆரம்பித்த முதல் பயணம். அவர்கள் இருந்திருந்தால் சொன்ன நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டிருப்போம். அவர்களுக்கு வேண்டியததை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டேனா, மருந்துகள், வழியில் கொறிக்க தின்பண்டங்கள் என்று பார்த்து பார்த்து யோசித்துப் புறப்பட வேண்டிய அவசியமில்லாத பயணம். வெயில், மழை, குளிர் என்று அனைத்துக்கும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு குறித்த நேரத்தில் கிளம்ப முடிந்தது.


விடியாத விடியலில் லேக் ஜார்ஜ் நோக்கிப் பயணம். கிழக்கில் வான் வசீகரன் செந்நிறக்கதிர்களுடன் வலம் வர, விண்ணில் ஒரு மாயாஜாலமாய் மூடு பனி. வழியெங்கும் நீர்நிலைகளில் குளிர் பனியின் கைங்கரியம். புற்களில் வெண்ணிறத்தில் பனி படர்ந்திருக்க உறைநிலைக்கும் கீழே வெப்பம் சென்று கொண்டிருந்ததை வண்டியில் இருந்து இறங்கியவுடன் உடலைத் தழுவிய குளிர் ஜில்லென்று உரைத்தது.



ஓரிருவர் நடந்து கொண்டிருக்க, அமைதியான ஏரியை அதுவும் காலைப்பனியுடன் வலம் வரும் ஏரியைக் காண அழகோ அழகு. அந்த ஜில்ல்ல்ல்ல்ல் ஏரியில் ஒருவர் மெதுவாக உள்ளிறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தான் குளிர ஆரம்பித்தது. பனிக்காற்றும் வீச, நிற்க முடியாமல் வண்டிக்குள் தஞ்சமடைந்தோம்.

புத்தம் புது காலை
பனிபொழியும் வேளை
என் வானிலே ...


No comments:

Post a Comment

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...