மாலை நேரங்களில் கொறிக்க ஏதாவது வேண்டியிருந்த காலங்களில் அம்மா தினமும் வேக வைத்த சக்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, அவித்த கருப்பு உளுந்து, தட்டைப்பயறு, சுண்டல் என்று சத்துள்ள உணவுகளைத் தான் கொடுப்பார். இன்று வரையில் மதுரையில் இந்த கதை தொடர்ந்தாலும் நவநாகரீக உலகில் விளம்பரங்களின் ஆதிக்கத்தில் குழந்தைகளும் கடைகளில் விற்கும் நொறுக்குத்தீனிகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றைய பெற்றோர்களுக்கும் நேரமில்லையா இல்லையென்றால் சோம்பேறித்தனமா என்று தெரியவில்லை. வேலை எளிதில் முடிகிறது என்று கண்டதையும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். அதனால் பல பக்க விளைவுகள் இருந்தாலும் உடனடி ருசியில் மயங்கி பழக்கமும் உண்டாகி விடுகிறது.
நம் ஊரில் கிடைக்கும் சக்கரைவள்ளிக்கிழங்கை 'ஜாப்பனீஸ் ஸ்வீட் பொட்டேடொ' என்று சீனர்களின் கடையிலும் சக்கரைக்கிழங்கு என்று இந்தியக்கடைகளிலும் விற்கிறார்கள்.
வகை வகையாக பாக்கெட்டுகளில் வரும் நொறுக்குத்தீனிகளை உண்டு மகிழும் இன்றைய குழந்தைகளுக்கு இதன் அருமைகளை நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.உருளைக்கிழங்கை வேகவைத்தும் மசித்தும் அமெரிக்கர்கள் விரும்பி உண்கிறார்கள். நாம் மசாலா செய்து சாப்பிட்டாலும் குழந்தைகளும் பெரியவர்களும் எண்ணையில் பொறித்த ஃப்ரெஞ்ச்ப்ரைஸ், சிப்ஸ்க்குத்தான் அடிமையாகி இருக்கிறார்கள். எடை கூடி அவதிப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment