Friday, June 25, 2021

மனமென்னும் மாயப்பேய்

மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது! பல நேரங்களிலும் தன்னிடம் இல்லாத, மற்றவர்களிடம் இருக்கும் பொருட்களால் தான் தன்னுடைய நிம்மதியும் மகிழ்ச்சியும் தொலைந்து போகிறது, போயிருக்கிறது. அது மட்டும் கிடைத்து விட்டால் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று திண்ணமாக நம்ப வைக்கும் திறன் படைத்தது.

மேலோட்டமாக பார்த்தால் இத்தகைய சிற்றின்பம் அந்தப் பொருள்(கள்) நமக்கு கிடைக்கும் வரையில் தான். மனமென்னும் குரங்கு அடுத்த கிளைக்குத்தாவி புதுக்கவலையை உருவாக்கும். நாமும் திக்குத்தெரியாமல் ஓடும் தலையில்லாத கோழியைப் போல் தவித்துக் கொண்டிருப்போம். அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றைத் தொடர்ந்து தேடி அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன். அது தான் வாழ்க்கை எனவும் தீவிரமாக நம்புகிறான். அந்தப் பயணத்தில் தான் பலரும் சுயத்தை இழந்து துன்பத்தின் பிடியில் மாட்டிக்கொள்கிறோம்.

தனக்கான வாழ்க்கையை வரையறுத்து வாழ முற்படுகையில் வெவ்வேறு ரூபங்களில் வெளியுலகின் தாக்கங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, சமாளித்து வெளியில் வர முடியாமல் புதைகுழியில் சிக்குண்டு விடுவதால் நிம்மதியை, சந்தோஷத்தை சிதைக்கிற விஷயம் என்னவென்று அறியாமலேயே போய் விடுகிறோம்.!

அறிந்து கொண்டால் அதனை நோக்கிய பயணத்தில் மனதைச் செலுத்தி இடர்களை நீக்கும் வழிகளை கண்டறியலாம். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் மனதைச் செதுக்க துவங்குவதில் அழகான சிற்பமாக வாழ்க்கை செழித்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 

செய்கிறோமோ? அது தான் மில்லியன் டாலர் கேள்வி.

இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். உடல் உபாதையின் மூல காரணியை கண்டறிந்து அதற்கான வைத்தியங்களை மேற்கொண்டு  அதிலிருந்து விடுபடுவது போல தான் மனதின் குழப்பங்களையும் அமைதிக்கான தீர்வையும் கண்டடைய வேண்டியது அவசியமாகிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதிற்கு அளிக்காததால்  மனச்சோர்வும், கவலைகளும், விரக்தியும் ஆட்கொள்கிறது.

நமக்கான மன அமைதியும் மகிழ்ச்சியும் நம்மிடம் தான் இருக்கிறது. மனமென்னும் மாயப்பேயை கட்டுப்படுத்தும் வித்தை ஒன்றை அறிந்தால் இன்பம் எனும் அரியணைக்குள் ஏறி அரசாட்சி செய்யலாம். 

வாழ்க்கை ஒரு வரம்.  அதனை அர்த்தமுள்ளதாக்கி வாழ முயல்வோம்.


"Each one has to find peace from within. And peace to be real must be unaffected by outside circumstances."

-Mahatma Gandhi


 



No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...