Thursday, August 5, 2021

மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு

ஜூலை 25, 2021 சொல்வனம் இதழ் 251ல் வெளிவந்துள்ள என் கட்டுரை.

“If you are a survivor of sexual abuse by a priest, teacher, coach, or other clergy you are not alone. You have rights. Our attorneys & advocates are here to help you…”
People embrace in front of the Centennial Flame on Parliament Hill at a memorial for the 215 children whose remains were found at the grounds of the former Kamloops Indian Residential School at Tk’emlups te Secwépemc First Nation in Kamloops, B.C., in Ottawa on Friday, June 4, 2021. (Justin Tang/The Canadian Press via AP)

அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களை ஊடகங்களில் அடிக்கடி பார்க்கலாம். வரலாற்றில் இந்த பாலியல் அத்துமீறல்களின் ஆரம்பப் புள்ளி எப்போதும் நிறுவனங்களில்தான் தோன்றியிருக்கிறது. வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப் பழமையான நிறுவனம் மதம்தான். உலகின் முதல் நிறுவனமும் மதம்தான்.

2000ம் வருடத்தில் ‘பாஸ்டன் க்ளோப்’ பத்திரிக்கை, ‘ஸ்பாட்லைட்’ எனும் பெயரில், அமெரிக்க கத்தோலிக்க திருச்சபைகளில், மதபோதகர்களினால் நிகழ்த்தப்படுகின்ற பாலியல் அக்கிரமங்களைத் தகுந்த ஆதாரங்களோடு செய்தியாக வெளியிட்ட போது, அந்தச் செய்தி நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கத்தோலிக்க பாதிரியாராக இருந்த ‘ ஜான் ஜியோகன்’ என்பவரால் தங்களுடைய சிறு வயதில் (இதில் நான்கு வயது குழந்தைகளும் அடக்கம்) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 100 ஆண்கள் தொடர்ந்த சிவில் வழக்குகளை அடுத்து, இந்த திருச்சபைகளில் காலங்காலமாய் தொடர்ந்து நடைபெற்று வந்த பாலியல் குற்றங்களும், அவற்றை மறைக்கும் முயற்சியில் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் ஈடுபட்டதையும், குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை தப்புவிக்க வேறு திருச்சபைகளுக்கு இடம் மாற்றி பாலியல் அத்துமீறல்கள் தொடர்வதை மறைமுகமாக ஆதரித்தது வந்ததையும், மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை கையாண்ட வழக்கறிஞர்களிடம் பேரம் பேசி, பணத்தைக் கொண்டு வழக்குகளைத் திரும்ப பெற வைத்ததையும் ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது ‘பாஸ்டன் க்ளோப்’.

இதன் விளைவாக அப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களுக்காக ஐந்து மத குருமார்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். நாடெங்கிலும் 4,392 கிருத்துவ மதகுருமார்களுக்கு எதிராக 11,000 பாலியல் குற்ற வழக்குகள் அப்போது தொடரப்பட்டதாக “ஜான் ஜே” அறிக்கை வெளியிட்டது. தங்கள் மீதான வழக்குகளை மறைக்கும் முயற்சியில் சுமார் நாலு பில்லியன் டாலர்களை கத்தோலிக்க திருச்சபை அப்போது நிவாரணமாக வழங்கியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 2018ம் ஆண்டில் பென்சில்வேனியா மாநில நிர்வாகம் வெளியிட்ட “கிராண்ட் ஜூரி” அறிக்கையில், 300க்கும் மேற்பட்ட கிருத்துவ குருமார்களினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பல மாநிலங்களும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களில் மாறுதல்களைக் கொண்டு வந்தன. அவற்றில் நியூயார்க் மாநிலமும் ஒன்று.

பொதுவாக இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் அவற்றின் பாதிப்பில் இருந்து மீள பல வருடங்கள் ஆகிறது. பாதிப்பின் தன்மை, தீவிரம் பொறுத்து அதற்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகள், சிகிச்சைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் தொடர் ஆதரவு, இவற்றுடன் இத்தனையும் தாண்டிவரத் தேவையான மனோதிடம் என பல்வேறு தளங்களின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களை பாதிப்பில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது. இதன் பின்னரே அவர்கள் குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கைகளை துவங்கிட முடிகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் நியூயார்க் மாநிலம் ‘Child Victims Act’ என்றொரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளின் மீதான சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது. குற்றவாளிகளின் மீதான குற்ற வழக்குகளை பாதிக்கப்பட்டவரின் 25 வயதிற்குள்ளும், சிவில் உரிமைகோரல் வழக்குகளை அவரது 55 வயது வரையிலும் தாக்கல் செய்ய முடியும்.

இதன் தொடர்ச்சியாக இதுவரையில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள எட்டு கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான “பஃப்லோ திருச்சபை” யினர் மீது மட்டுமே 200 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போதைய கொரோனா கால ஊரடங்கினால் நீதி மன்றங்கள் இயங்காத சூழ்நிலையில், மேற்சொன்ன காலக்கெடுவினை மேலும் ஒராண்டுக்கு நீட்டிப்பதாக நியூயார்க் மாநில கவர்னர் க்வோமா அறிவித்துள்ளார்.

மதங்களின் பெயரால் இந்த மத குருமார்கள், நிர்வாகிகள் தங்களை நம்பிவரும் பெண்கள், ஆண், பெண் குழந்தைகள் மீது நிகழ்த்திவரும் கொடூரமான அத்துமீறல்களும், வன்முறைகளும் காலம்காலமாய் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் மிக நீண்ட வரலாறை கொண்டவர்கள் இந்த மதவெறியர்கள்.

ஆட்சி மற்றும் அதிகார பின்புலங்களினால் இவர்களின் வன்கொடுமைகள் இத்தனை காலமும் பொதுவெளியில் மறைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊடகங்கள் இவர்களின் கருப்புப் பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டத் துவங்கியிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கனடாவில் இது போல வெளிச்சத்திற்கு வந்த ஒரு செய்தி இரத்தத்தை உறைய வைப்பதாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர்.

தாய்மொழிக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் இன்று தங்களுடைய அடையாளங்களை இழந்து, சொந்த நாட்டில் அகதிகளைப் போல வாழவேண்டிய அவலச் சூழலில் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் தொடர் போராட்டங்களின் வாயிலாக இந்த மதவாதிகளின் அட்டூழியங்கள் இப்போது வெளிவரத் துவங்கியிருக்கின்றன.

1972ல், மனிடோபா மாகாணத்தில், ஏழே வயதான “ஸு கரிபோ” தன் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட ‘கய் ஹில்’ உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர். பள்ளியில் அனேகமாக தினமும் அவர் பாலியல் அத்துமீறலுக்கும், இரவில் குளிர்ந்த நீரில் வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்படும் சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கிறார். இதன் காரணமாக இன்றுவரை அவர் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டவராக தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார். பாதிரிமார்கள் தங்களை நாய்கள் என்றே அழைத்ததாகவும், தினமும் அழுகிய உணவை உண்ணும்படி நிர்பந்தித்தகாவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அதாவது 1979 வரை இத்தகைய அவலம் அவருக்கு நடந்திருக்கிறது.

இவரைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1,50,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருத்துவ திருச்சபைகள் நடத்திய உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்களின் போராட்டக் குரல்கள் மதவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தாலும், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் 2008ம் ஆண்டில் கனடிய அரசு ‘Truth and Reconciliation Commission’ அமைத்தது.

1883ம் ஆண்டு துவங்கி 1996ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த உறைவிடப் பள்ளிகளில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகள், அத்துமீறல்களை இந்தக் கமிஷன் தீவிரமாக விசாரித்தது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக நீடித்த இந்த விசாரணையில், சுமார் 6,000 முதல் 25,000 குழந்தைகள் இறந்திருப்பார்கள் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது. மேலும் பலர் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய பின்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. 1920ம் ஆண்டிற்குப் பிறகு கனடிய அரசு பழங்குடியின மாணவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதை நிறுத்திவிட்டதால், இறந்த மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை விவரங்கள் முழுமையாக தெரியாமல் போனது.

இந்தப் பள்ளிகளின் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரமும் மிகவும் மோசமான தரத்தில் இருந்திருக்கிறது. தேசிய கீதம் மற்றும் வேறு சில பிரார்த்தனை பாடல்களே தங்களுக்கு கற்றுத் தரப்பட்டதாகவும், பின்னாளில் தங்கள் குழந்தைகளிடம் இருந்தே தாங்கள் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதாகவும், அங்கே பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரின் வாக்கு மூலங்களில் தெரிய வந்தது. இங்கு பயின்றவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுக்க மிகக் குறைவான ஊதியத்தில் வீட்டுப் பணியாளர்களாகவே இருந்திருக்கின்றனர். பள்ளி நாட்களில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களின் உளவியல் பாதிப்பு இன்றளவும் அவர்களிடம் தொடர்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகளின் குழந்தைகள் எத்தகைய வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதற்கான சாட்சியங்களாக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களின் வாக்கு மூலங்கள், ஆதாரங்களைத் தொகுத்து ‘Truth and Reconciliation Commission’ தலைவர் நீதிபதி முர்ரே சின்க்ளேர், இந்த கலாச்சார படுகொலையை கிருத்துவ மிஷனரிகள்தான் நிகழ்த்தினர் என்பதை 2015ல் வெளியிட்டார்.

மேலும் நிவாரணமாக அரசிற்கு 94 பரிந்துரைகளையும் முன் வைத்தார். இதையடுத்து, அப்போதைய கனடா பிரதம மந்திரியான ‘ஸ்டீபன் ஹார்ப்பர்’ நடந்த தவறுகளுக்காக பொது மன்னிப்பு கோரினாலும், இந்த தவறுகள் கிருத்துவ மிஷனரிகளினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்பதை மட்டும் அப்போதைய கனடிய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

ஜூன் 2021ல் மதவெறியர்களினால் நடத்தப்பட்ட பள்ளிகளில் கிடைத்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள், சஸ்கட்ச்சுவான், மனிடோபா,பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் இருக்கும் பெயர்களற்ற கல்லறைகள் ‘Truth and Reconciliation Commission’ தலைவர் நீதிபதி முர்ரே சின்க்ளேர்ன் ‘கலாச்சார இனப்படுகொலை’ ஆய்வறிக்கையை உறுதி செய்திருப்பது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தற்போதைய கனடிய அரசாங்கம், “பள்ளி விடுதிகளில் பூர்வகுடி மாணவ, மாணவியர்கள் தங்களின் தாய்மொழியில் பேச தடை செய்யப்பட்டிருந்ததையும், பாலியல் வன்முறைக்கு உள்ளானதையும், கொலையுண்டதையும் கனடிய மக்களின் இருண்ட கால வரலாறு” என வருத்ததுடன் ஒத்துக் கொண்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையினர் கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்வதோடு, ரோமன் கத்தோலிக்க தலைவரான போப், கனடிய பூர்வகுடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பிரதம மந்திரி ட்ரூடோ பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடிய கூடெனய் பூர்வகுடிகளின் தலைவரான ‘ஜேசன் லூயி’ ஒரு வானொலி பேட்டியில் இவ்வாறு கூறினார். ”இதுவரையில் 1,308 கல்லறைகளை அதிகாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். “நாஜிக்கள் தங்கள் போர் குற்றங்களுக்காக பொறுப்பேற்றதைப் போல, விசாரணைகளை எதிர்கொண்டு தண்டனைக்கு ஆளானதைப் போல, பூர்வீக மக்களை இனப் படுகொலை செய்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், துணை சென்ற திருச்சபை குருமார்கள் என அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. வெறும் மன்னிப்பு கோருதல் மட்டுமே இதற்குத் தீர்வாகாது. தாமதமாக வழங்கப்படும் நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான்.” என கொந்தளித்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவங்கள் நடைபெற்ற 130 உறைவிடப் பள்ளிகளில் பெரும்பாலானவை ரோமன் கத்தோலிக்க மிஷனரி சபைகளால் நடத்தப்பட்டவை. ப்ரிஸ்பைடிரியன்,ஆன்ஜிலிகன் மற்றும் கனடா யுனைடெட் தேவாலயங்களால் மற்ற பள்ளிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க அமைப்பைத் தவிர, மற்ற கிறித்தவ அமைப்புகள் அனைத்தும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் வாட்டிகன் மட்டும் இன்று வரை கள்ள மௌனம் சாதிக்கிறது. இது பூர்வ குடி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக சமீபத்தில் நான்கு தேவாலயங்கள் தீக்கிரையாகியுள்ளது.

தங்களிடம் கொட்டிக்கிடக்கும் பணத்தின் மூலம் வழக்குகளை எதிர் கொள்ளவும், தங்களுடைய அதிகார செல்வாக்கினைக் கொண்டு தங்களுடைய மதபோதகர்களை காப்பாற்றுவதிலும்தான் வாடிகன் ஆர்வம் காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனையைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாதிருக்கும் போக்கு அருவெறுப்பானதாக இருக்கிறது.

மதத்தின் பேரால், மத குருமார்கள் என்கிற போர்வையில் அப்பாவிகளின் மீது தங்களின் மன வக்கிரங்களை கொட்டிய அயோக்கியர்களை நீதியிடம் இருந்து காப்பாற்றுவதைத்தான் பரமபிதா விரும்புகிறாரா, என்கிற கேள்வி எவருக்கும் எழுவது இயற்கையே. இத்தகைய பிற்போக்குவாதிகளினால்தான் மேற்குலகில் இளம் தலைமுறையினர் பலரும் இன்று தங்கள் மதங்களை விட்டு விலகிச் செல்லும் போக்கு உருவாகியிருக்கிறது.

இவர்கள் கேட்கப் போகும் ஒரு மன்னிப்பு என்பது இந்த மக்களின் வலிகளுக்கு மருந்தாகவோ, பட்ட வேதனைகளுக்கு தீர்வாகவோ இருக்கப் போவதில்லை. தொலைந்து போன அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தரப் போவதும் இல்லை. ஆனால் இந்த மன்னிப்பு கனடிய மண்ணில் ஒரு காலத்தில் மறுக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து, அந்த மக்களின் சுயமரியாதையை உறுதி செய்யும். எதிர்கால தலைமுறையினரின் சுய நிர்ணய உரிமையை தக்கவைக்கும். அவர்களுக்கு நடந்த அநீதியை வெள்ளையினத்தவர்கள் அறிந்து தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே.இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்ந்து கொண்டிருந்த எளிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தி, அல்லல்படுத்தி, சிறுமைப்படுத்தி, சித்திரவதைக்குள்ளாக்கி சீரழித்தவர்களுக்காக கள்ளமௌனம் காக்கும் போப் தன்னளவில் ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறினை செய்து கொண்டிருக்கிறார். அன்பை போதிப்பதாகச் சொல்லும் மதத்தின் தலைவர் இப்படி நடந்து கொள்வது பெரும்பான்மை மக்களிடையே ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையுமே கிளப்பியிருக்கிறது.
அண்டை நாடான அமெரிக்காவிலும் கூட, அந்த காலகட்டத்தில் இவர்களினால் நடத்தப்பட்ட உறைவிட பள்ளிகளில் கூட இத்தகைய கொடூரங்கள் அரங்கேறியிருக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. எனவே இப்படி இறந்த குழந்தைகளுக்கு மரியாதை செய்யும்விதத்தில் அவர்களுக்கு முறையான மறு அடக்கம் செய்ய வேண்டும் என்று இனக்குழுக்களின் தலைவரான பாபி கேமரூன் அமெரிக்க அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் இதில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மாபெரும் வரலாற்று துயரச் சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய போராட்டத்தில் பூர்வகுடி மக்களோடு பல நல்லமனம் கொண்ட வெள்ளையின போராளிகளும், மத நம்பிக்கையாளர்களும் அடங்குவர் என்பது கொஞ்சம் ஆறுதல் தரும் நம்பிக்கைச் செய்தி. இந்த நம்பிக்கையோடுதான் நாம் நாளையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மதவெறி தொலைத்து, மனிதநெறி காப்போம்.

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...