Tuesday, October 1, 2024

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் போட்டியைப் பற்றின கட்டுரை அடுத்த அமெரிக்க அதிபர் யார்?



இன்னும் இரு மாதங்களில் அமெரிக்காவின் 47வது அதிபர் யாராக இருக்கக்கூடும் என்பதில் உலகமே ஆவலோடு காத்திருக்கின்றது. யாருமே எதிர்பாராத அளவிற்குத் தேர்தல் களத்தில் மாற்றங்கள் சடுதியில் நிகழ்ந்து விட்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் கருத்துக்கணிப்புகள் மாறிக்கொண்டு வருகிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் அதிபர் வேட்பாளர்களாக குடியரசுக்கட்சியின் சார்பில் 78 வயதான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சியின் தற்போதைய அதிபர் 81 வயதான பைடனும் தான் களத்தில் இருந்தனர். ஜூன் 27, 2024 அன்று ‘சிஎன்என்’ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விவாதத்திற்குப் பிறகு பைடனின் வயோதிகமும் உடல்நலம் சார்ந்த கேள்விகளும் பெரிதாகப் பேசப்பட்டது. “நா குழறிப் பேசுவது புரியவில்லை. இத்தனை நடுக்கத்துடன் நடந்து வரவே தள்ளாடுகிறாரே இவரை நம்பியா இன்னும் நான்கு வருடங்களுக்குப் பொறுப்பை ஒப்படைப்பது? அப்படியென்றால் இப்பொழுது வெள்ளை மாளிகை யார் பொறுப்பில் இருக்கிறது? அடிக்கடி மருத்துவர்கள் வந்து செல்வது எதற்காக” என்றெல்லாம் கேள்விகள் வர ஆரம்பித்தது. விவாதத்தின் போது “பைடன் பேசியதில் பலவும் எனக்குப் புரியவில்லை. நேயர்களுக்கும் புரிந்திருக்காது. ஏன் அவருக்கே என்ன பேசுகிறோம் என்று புரிந்திருக்காது” வழக்கம் போல ட்ரம்ப் தன்னுடைய ஸ்டைலில் பேசியது மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றது.

அதற்குப்பிறகு ஜூன் 28 அன்று நார்த் கரோலினாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் தன்னுடைய மூப்பின் தடுமாற்றத்தை ஒத்துக் கொண்டார் அதிபர் பைடன். 29ந்தேதி அன்று நியூயார்க்கில் நிதி திரட்டும் கூட்டத்தில் அவரைப் போட்டியிலிருந்து விலகிச் செல்லுமாறு பதாகைகள் ஏந்திய வாக்காளர்கள் முற்றுகையிட்டனர். ஜூலை 2ம் தேதி அவர் கட்சியைச் சார்ந்த டெக்ஸாஸ் பிரதிநிதி லாயிட் டோகெட் போட்டியிலிருந்து வெளியேறுமாறு பகிரங்கமாகக் கூறிய முதல் ‘ஹவுஸ் டெமாக்ராட்’ ஆனார். அதற்குப்பின் அரிசோனா பிரதிநிதி ரவுல் கிரிஜால்வா, மாசசூசெட்ஸ் பிரதிநிதி சேத் மௌல்டன் ஆகியோரும் பைடனின் வெளியேற்றத்திற்கு அழைப்பு விடுக்க மற்ற கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர். ஜூலை 4 அன்று பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ‘ஸ்விங்’ மாநிலங்களைத் தளமாகக் கொண்ட இரண்டு வானொலி நிலையங்கள், ‘WURD’, ‘WAUK’ பைடனுடன் முன் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்களை ஒளிபரப்பின. முன்கூட்டியே வழங்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு நேர்காணல் நடத்தியாகப் பேட்டி கண்டவர்கள் உண்மையைச் சொல்ல நிலைமை தீவிரமாகியது. பைடன் மீதிருந்த அவநம்பிக்கை கூடியது. மருத்துவர்களை அழைத்து அவர் பதவியில் நீடிப்பது சரிதானா எனப் பரிசோதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.

நிலைமையைச் சரிசெய்ய ஜூலை 5ந்தேதி ‘ஏபிசிநியூஸ்’ செய்தி தொகுப்பாளர் ‘ஜார்ஜ் ஸ்டீஃபனோபுலோஸு’டன் ஒரு நேர்காணல் நடந்தது. அப்பொழுது பைடன் “ட்ரம்ப் தன்னை இடைமறித்ததால் சொல்ல வேண்டிய பதிலைச் சொல்ல முடியாமல் போயிற்று. கடவுள் வந்து கேட்டுக் கொண்டால் ஒழிய இந்தப் போட்டியிலிருந்து நான் விலக மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். பேட்டி எடுப்பவர் மீண்டும் மீண்டும் அவர் வயதும் தள்ளாமையும் இன்னும் நான்கு வருடங்கள் அவரை முழுமையாகச் செயல்பட வைக்குமா என்று சந்தேகத்துடன் கேட்டாலும் “தன்னால் முடியும். ட்ரம்ப்பைத் தோற்கடிக்க தன்னால் மட்டுமே முடியும்” என்று அதிபர் சொன்னதை நம்ப முடியாமல் தான் பார்த்துக்கொண்டிருந்தார் ஜார்ஜ். நேயர்களும் தான்.

அதற்கு மறுநாள் பேட்டி எடுத்த ஜார்ஜிடம் வழிப்போக்கர் ஒருவர் கேட்ட கேள்விக்கு “பைடன் சரியான வேட்பாளர் இல்லை” என்று தன்னுடைய கருத்தைக் கூற, அது வைரலானது. தொடர்ந்து பைடனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஹாலிவுட் ‘சால்ட்பெப்பர்’ நாயகன் ‘ஜார்ஜ் குளூனி’ வேறு கண்டிப்பாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று பேட்டி கொடுக்க, நிலைமை மிகவும் மோசமானது. இத்தனை நடந்த பிறகு ஒரு மூத்த அரசியல் தலைவரிடம் எப்படி போட்டியிலிருந்து விலகிச்செல்லச் சொல்வது என கட்சித்தலைமையும் நிலைமையை உணர்ந்து தவித்துக் கொண்டிருந்தது.

ஜூலை 1,2024 அன்று வெர்மான்ட்டின் பீட்டர் வெல்ச், பைடனை போட்டியிலிருந்து விலகுமாறு பகிரங்க அழைப்பு விடுத்த முதல் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஆனார். இவரையும் சேர்த்து 10 ஜனநாயகக் கட்சி காங்கிரஸார் போட்டியிலிருந்து விலக கோரிக்கை வைத்தனர். இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஜூலை 11ல் வாஷிங்டனில் நடந்த ‘நேட்டோ’ உச்சிமாநாட்டில் உக்ரேனிய அதிபர் ‘வோலோடிமிர் ஜெலென்ஸ்கி’யை ‘அதிபர் புடின்’ என்று அறிமுகப்படுத்தி பேரதிர்ச்சியைத் தந்தார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹாரிஸை “துணை அதிபர் ட்ரம்ப்” என்று தவறாகக் குறிப்பிட்டார். மேலும் “நீங்கள் வெற்றி பெற வழி இல்லை என்று என்னுடைய தேர்தல் குழு கூறினால் மட்டுமே தான் போட்டியிலிருந்து வெளியேறுவேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் ட்ரம்ப் படுகொலை முயற்சி நடக்க, அந்த நேரத்திலும் காயமடைந்த ட்ரம்ப் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது முஷ்டியை உயர்த்தி, “ஃபைட் ஃபைட் ஃபைட்” என்று உரத்துக் கூற, கூட்டமும் அதை எதிரொலித்தது. ட்ரம்ப்பின் செல்வாக்கும் சற்றே அதிகரித்தது.

ஜூலை 16ல் பைடன் பேட்டியளித்த நேர்காணலில் “ஆட்சி செய்ய இயலாத உடல்நிலை காரணங்கள் ஏற்பட்டால் மட்டுமே போட்டியிலிருந்து விலகுவதைப் பற்றி பரிசீலனை செய்வேன்” என்று கூறினார்.

ஜூலை 17 அன்று பைடனுக்கு ‘கோவிட்’ என்று செய்திகள் வெளிவந்தன! அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கு முன்பே உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரான முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், ஹவுஸ் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் பைடனைச் சந்தித்து அவர் தேர்தலில் தொடர்ந்தால் நவம்பர் மாதத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாக ‘பொலிட்டிக்கோ’ உள்ளிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 18, குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் தன்னுடைய கட்சி சார்பில் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். துணை அதிபர் வேட்பாளர் ஜேடி வின்சுடன் மேடையில் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

ஏற்கெனவே ஆளும் அரசின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையினால் கடுப்பிலிருந்த மில்லினியல்களுக்கு பைடன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து செல்வாக்கு அதிரடியாகச் சரிந்தது. அதுவரையில் பைடனை ஆதரித்து பணத்தைக் கொட்டியவர்கள் விவாதத்திற்குப் பின் ட்ரம்ப்பின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக மாறி வரும் நிலையைக் கண்டு அவசரகதியில் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளர் ஒருவர், பைடனின் மறுதேர்தல் முயற்சி யதார்த்தத்துடன் சற்றும் தொடர்பில்லாதது. ஹிலரி க்ளிண்டனின் 2016 பிரச்சாரத்தின் தவறுகளை மீண்டும் செய்யக்கூடும் என்றும் அஞ்சுவதாகக் கூறினார். விவாதத்திற்கு முன்பு வரை கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தவர்கள் கூட வெளிப்படையாகத் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது மட்டுமில்லாமல் உடனடியாக வேட்பாளர் பதவியிலிருந்து விலகி துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பைடனே எதிர்பாராத திருப்பம் அது. ஜனநாயகக் கட்சியும் கள்ள மெளனத்துடன் இதை ஆதரித்தது.

விவாதத்தின் பிறகு வந்த கருத்துக்கணிப்புகள், மக்களின் எண்ணங்களை அறிந்து அவரே கௌரவமாக விலகி இருந்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டுகளாக அரசியலில் கோலோச்சியவர். கடவுளே வந்து சொன்னால் ஒழிய தன் முடிவில் மாற்றம் கிடையாது என்று கூறியவரே வேறுவழியின்றி பெருந்தன்மையுடன் நாட்டின் நலத்தில் அக்கறை கொண்டு விலகுவதாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஜூலை 21 அன்று ஜனநாயகத்தைக் காக்க போட்டியிலிருந்து விலகுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக பைடன் அறிவித்து கட்சியின் வேட்பாளராக ஹாரிஸை முன்மொழிந்தார். தேர்தலுக்கு 100 நாட்களே இருந்த நிலையில் ஹாரிஸும் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டார். நாட்டுக்காக பைடன் செய்த மிகப்பெரிய தியாகம் என்று வானளாவ புகழ்ந்தார்.

இரு கட்சியும் தங்கள் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவே ஒரு ‘மினி தேர்தல்’ எல்லா மாநிலங்களிலும் நடக்கும். போட்டியாளர்களும் தீவிரமாக மக்களின் ஆதரவைக் கோரி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருப்பார்கள். யாருக்கு மக்கள் அதிகம் வாக்களிக்கிறார்களோ அவர்களையே கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களாக கட்சி மாநாட்டில் அறிவிக்கும். ஜனநாயக கட்சியின் சார்பில் மார்ச் 2024ல் கலிஃபோர்னியா ஆளுநர் ‘கேவின் நியூசம்’, மிச்சிகன் ஆளுநர் ‘க்ரெட்ச்சென் விட்மர்’ வேட்பாளர்களாக ஆர்வம் காட்டிய போதும் பைடனின் அறிவிப்பிற்குப் பின் இருவரும் விலகி விட்டனர். அப்படி ஒன்று நடந்திருந்தால் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் வேட்பாளர் தேர்தலில் பங்கு பெறாமல் இருந்த ஹாரிஸிற்கு அடித்தது பம்பர் லாட்டரி.  அவரைவிடத் தகுதியான வேட்பாளர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அனைவரும் பைடனுக்காக ஒதுங்கி இருந்தார்கள். ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் அதிபருக்குப் பின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒரே தகுதியும் ட்ரம்ப்பை எதிர்க்கச் சரியான போட்டியாளராகவும் அவரை விட்டால் தற்போது கட்சியில் தகுந்த வேட்பாளர் வேறு யாரும் இல்லை என்ற நிலையில் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்வுப் போட்டியில் நீடிக்க முக்கிய அம்சமாக இருப்பது அவர்கள் பெரும் நன்கொடைகள் தான். நன்கொடைகள் குறைய ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் மீது தானே பணத்தைக் கட்டுவார்கள்? அப்படித்தான் தொடக்கத்தில் பைடனை ஆதரித்தவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு ஏராளமான நிதியை வழங்கினார்கள். ஆனால் அதை விடவும் அதிகமாக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிற்கு நிதியை அள்ளிக் கொடுத்தார்கள். அதுவும் அவர் மீது வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே பலத்த ஆதரவை வழங்கினார்கள். இதுவும் ஜனநாயகக் கட்சிக்கு ஆச்சரியமாகவும் பைடன் மீதான நம்பிக்கை குறையவும் காரணமாக இருந்தது. பைடன் விலகிய பிறகு அவர் வசூலித்திருந்த அத்தனை நிதியும் ஹாரிஸின் தேர்தல் நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. போட்டியில் ஹாரிஸ் களமிறங்கிய பிறகு உற்சாகம் பெற்ற கட்சியினர் தாராளமாக நிதி உதவிகள் செய்ய இன்று ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தேர்தல் நிதியைக் கொண்டு தான் தேர்தல் செலவுகளைக் கையாள முடியும். இதை வைத்து ஹாரிஸ் வெற்றி பெறுவது திண்ணம் என்று கூற முடியுமா?

2016ல் ஹிலரி 623மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி (ட்ரம்ப் $335மில்லியன்) முன்னிலையில் இருந்தார் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
A graph showing a line graph

Description automatically generated

ஆகஸ்ட் 17,2024 அன்று ஜனநாயக கட்சியினர் நடத்திய மாநாட்டில் கமலா ஹாரிஸை ஆதரித்து அனைவரும் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஒபாமா, க்ளிண்டங்களுடன் சேர்ந்து கோரிக்கையும் விடுத்தார் பைடன். ஆக, ஜனநாயகத்தைக் காப்போம் என்று கூறுபவர்கள் தான் அதை மீறி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!

மாநாட்டில் பேசிய அனைவரும் ட்ரம்ப்பைத் தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஹாரிஸிற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏற்கெனவே மக்களிடையே குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்திய ட்ரம்ப்பின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டாம். அது இன்னும் மோசமாகவே இருக்கும். தற்போது அமெரிக்கா புதியதொரு அத்தியாயத்திற்குத் தயாராக உள்ளது. ஹாரிஸிற்கு வாக்களிப்போம். அனைவரும் தேர்தலில் வாக்களியுங்கள்” என்று பேசியது ஆதரவாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுவரையில் வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்துக் கொண்டிருந்த குடியரசுக்கட்சியினரின் சுருதி கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு சற்றே குறைந்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் 2016லும் ட்ரம்ப்பிற்கு எதிராக ஊடகங்கள் இருந்தன என்று குடியரசுக்கட்சியினர் புறந்தள்ளுகிறார்கள். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் துணை அதிபர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருவருமே அத்தனை பிரபலமானவர்கள் இல்லை.

ட்ரம்ப் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ள 39 வயதுள்ள ஒஹையோ செனட்டர் ‘ஜேடி வேன்ஸ்’ முன்பு தீவிரமாக ட்ரம்ப்பை எதிர்த்தவர். இன்று தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். எழுத்தாளர். யேல் பல்கலையில் சட்டம் பயின்றவர். கடற்படையில் பணியாற்றியவர். தற்போது செனட்டராக இளம் அரசியல்வாதி என்று பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய ‘Hillbilly Elegy’ புத்தகம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ஏழ்மையையும் சமூக அவலத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தன்னுடைய அனுபவங்கள் வாயிலாக மிக அழகாக எழுதிப் பிரபலமானார். அது படமாகவும் இயக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸ்ல் வெளிவந்தது. “பொருளாதாரத்தில் சிக்கி இருக்கும் அமெரிக்காவிற்கு ட்ரம்ப் அதிபராவது அவசியம்” என்று குடியரசுக்கட்சி மாநாட்டில் பேசியுள்ளார். இந்திய வம்சாவளியான சட்டம் பயின்ற ‘உஷா சிலுக்குரி’ இவரது மனைவி ஆவார்.

கமலா ஹாரிஸ் தனது துணை அதிபராக மினசோட்டா ஆளுநர் ‘டிம் வால்ஸ்’ஐ தேர்ந்தெடுத்துள்ளார். இவர் பள்ளி ஆசிரியராக, கால்பந்து பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர். அமெரிக்க இராணுவ தேசிய காவலில் 24 ஆண்டுகள் பணியாற்றி சார்ஜென்ட் மேஜர் பதவிக்கு உயர்ந்து அதிலிருந்து ஓய்வு பெற்றவர். 2006 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிப் பதவியிலிருந்த ஒருவரைத் தோற்கடித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2018ல் மினசோட்டா ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022ல் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மினியாபோலிஸ்-செயின்ட் பால்-ல் உள்ள ‘WCCO’ வானொலியின் அரசியல் ஆய்வாளரான ப்ளோயிஸ் ஓல்சன் , “அமெரிக்காவின் உட்புற கிராமங்களில் குடியரசுக்கட்சி வாக்காளர்கள் அதிகம். அதனால் அவர்களே தொடர்ந்து வென்று வருகிறார்கள். அங்கு இவரை அனுப்பினால் ‘சிகப்பு’ ‘நீல’மாக மாறும். அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

துணை அதிபர்கள் யாராக இருந்தாலும் வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்த கட்சி, அதிபர் வேட்பாளர், தேர்தல் கொள்கைகளைக் கவனத்தில் கொண்டு தான் வாக்களிக்கிறார்கள்.

வேட்பாளர்களின் இனம், பாலினம் என்ற வகையில் ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் ஆண்களின் ஆதரவு ட்ரம்ப்பிற்கும் பெண்களின் ஆதரவு ஹாரிஸுக்கும் இருப்பதாக ‘சிபிஎஸ்’ கருத்துக்கணிப்பு இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே கணிசமான பாலினப் பிளவு உருவாகி வருவதைக் காட்டுகிறது. ட்ரம்ப்பின் முக்கிய ஆதரவாளர்கள் ஆண் வாக்காளர்களாகவும், 45-64 வயதுக்குட்பட்டவர்களாகவும், கல்லூரிக் கல்வி இல்லாத வெள்ளை வாக்காளர்களாகவும் உள்ளனர். இளம் வாக்காளர்கள், பெண்கள், கறுப்பினத்தவர்கள் ஹாரிஸிற்கு ஆதரவாக உள்ளனர்.

சமீபத்திய தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியில் ட்ரம்ப்பை விட ஹாரிஸ் 3.4 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். இருப்பினும் அதிபர் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஸ்விங்’ மாநிலங்களில் போட்டி மிக நெருக்கமாக, தீர்மானிக்க முடியாதபடி தான் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளது. அவரவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இருவரும் மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருந்தாலும் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கப் போவது ‘போர்க்கள’ மாநிலங்களான(battleground states) அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் வாக்குகள் தான். மற்ற குடியரசுக்கட்சி மாநிலங்கள் பெரும்பாலும் அந்தக் கட்சி அதிபர் வேட்பாளருக்கும் ஜனநாயக கட்சி மாநிலங்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கும் வாக்களித்து விடும். ஆனால் விதிவிலக்காக சில மாநிலங்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் வேறுபடும். அதைத்தான் ‘போர்க்கள மாநிலங்கள்’/’ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என்றழைக்கிறார்கள்.

A map of the united states

Description automatically generated

ஏழு மாநிலங்களில் ஆறில் ஹாரிஸ் முன்னணியில் இருப்பதாகவும் நெவேடாவில் ட்ரம்ப் வலுவாக இருப்பதாகவும் ‘குக் அரசியல் அறிக்கை’ காட்டுகிறது. 2020ல் பைடன் வெறும் 0.4 சதவீதம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரிசோனாவில் ஹாரிஸின் வலுவான முன்னிலை, தன்னுடைய முன்னோடியான பைடனின் பின்தங்கியிருந்த வாக்குவங்கியில் இருந்து முன்னேறியுள்ளதும் ட்ரம்ப்பிற்குச் சவாலாக இருப்பதையும் குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட சிபிஎஸ் கருத்துக்கணிப்பு எந்த ஒரு போராட்ட களத்திலும் எந்த வேட்பாளரும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னிலை பெறவில்லை என்றே தெரிவிக்கிறது.

இப்போது ​​ஒரு வகையான போர்க்களமாக மாறியிருப்பது நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள இரண்டாவது மற்றும் முதல்-வளைய புறநகர்ப் பகுதிகள் ஆகும். அவை குடியரசுக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. இன்றைய வாக்காளர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஜனநாயகக் கட்சியினருக்குச் சாதகமாக மாறி வருகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் போட்டி வெறும் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ தீர்மானிக்கும் என்பதை விட ‘ஸ்விங் கவுன்டிஸ்’ஐ சார்ந்திருக்கும். இந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 5% வாக்காளர்கள் இந்த ஆண்டு போட்டியின் முடிவைத் தீர்மானிக்க முடியும். அதிகபட்சம் 150,000 வாக்காளர்கள் அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறார்கள் என்று தேர்தல் வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். அதிபர் தேர்தலின் முடிவிற்கு ‘ஸ்விங்’ மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இரு கட்சிகளும் அதிகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பணத்தையும் நேரத்தையும் அங்கே செலவிடுகின்றன. மற்ற மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்த விஷயம் என்பதால் நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் தேர்தல் களேபரங்களைக் காண்பது அரிது. ஆனால் டெக்சாஸ், ஃப்ளோரிடா போன்ற சிகப்பு மாநிலங்களை நீலமாக மாற்ற ஜனநாயக கட்சியினர் முயன்று வருகிறார்கள்.

இதற்கிடையே முன்னாள் ஜனநாயகவாதி தற்போதைய சுயேச்சை வேட்பாளர் ‘ராபர்ட் எஃப் கென்னடி(ஆர்எஃப்கே) ஜூனியர்’ ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ களில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்து வந்தார். பைடன்/ட்ரம்ப்பை பிடிக்காதவர்களின் ஆதரவு இவருக்கு கணிசமாக கிடைத்திருந்தது. ஹாரிஸ் ஆட்டத்திற்குள் நுழைந்தவுடன் இவருக்கு ஆதரவு அளித்தவர்கள் மாறியுள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது. ஜனநாயக கட்சி ஆர்வம் காட்டாத நிலையில் தேர்தல் நிதியும் செல்வாக்கும் குறைய, தனது ஆலோசகர்களிடம் அதிபர் ட்ரம்ப் ஆட்டிசம் போன்ற சிறுவயது நாள்பட்ட நோய்களில் கவனம் செலுத்துவதிலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் தீவிரமாக இருப்பதை உணர்ந்ததாகக் கூறினார். தனது பிரச்சாரத்தை ஆகஸ்ட் 23 அன்று நிறுத்தி, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரித்து ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’களில் அதிபர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். என்ன தான் கென்னடியின் ஆதரவு ட்ரம்ப்பிற்கு உத்வேகத்தைக் கொடுத்தாலும் சுயேச்சை வாக்காளர்கள் உண்மையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் ஆதரவை மாற்றிக் கொள்வதால் இவர்களின் வாக்குகளே அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனால் அவர்களின் ஆதரவைப் பெற இரு கட்சி வேட்பாளர்களும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், தேசிய மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்கா அதிபர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. 270 எலக்டோரல் வாக்குகள் பெறுபவரே அதிபராக முடியும். உண்மையில் தேசிய அளவில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும் அல்கோர் புஷ்ஷிடமும்(2000) ஹிலரி ட்ரம்ப்பிடமும்(2016) தோற்றது வரலாறு. தற்போதைய ‘பைவ்தர்ட்டிஎயிட்’ கருத்துக்கணிப்புகளில் ஹாரிஸ் 281ம் ட்ரம்ப் 257 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் பிரபல வாக்குகள் அதிகம் பெறப்போவதில் 51.6% சதவீதம் பெற்று ஹாரிஸ் முன்னிலையிலும் ட்ரம்ப் 48.4% பெற்று இரண்டாமிடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2016, 2020ல் ஏற்பட்ட கருத்துக்கணிப்பு குழப்பங்கள் இந்த வருடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனங்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், பொருளாதாரம், பணவீக்கம், வேலைகள், குற்ற நடவடிக்கைகள் போன்ற முக்கிய கொள்கைச் சிக்கல்களைக் கையாளுவதற்கு வாக்காளர்கள் குடியரசுக் கட்சியைத் தான் இன்னும் அதிகமாக நம்புகிறார்கள் என்பதை ‘சவண்டா’ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரத்தியேக கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குடியேற்றமும் நசிந்து வரும் பொருளாதாரமும் குடியரசுக்கட்சியின் முக்கிய கொள்கைகளாக மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது. ஜனநாயக கட்சியினர் பெண்களின் கருக்கலைப்பு உரிமைச்சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

வெற்றி யாருக்கு என்பதை அக்டோபருக்குள் கணித்து விடுவார்களா? அக்டோபர் மாதம் என்றுமே வேட்பாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும். 2016 தேர்தலில் விக்கி லீக்ஸ் தொடர்ந்து வெளியிட்ட ஹிலரியின் ஈமெயில் குளறுபடிகள் “பாப்புலர்” ஓட்டில் ஜெயிக்க வைத்து எலக்டோரல் வாக்குகளில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக மாறியது வரலாறு. இந்த அக்டோபர் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பது புதிராகவே இருக்கிறது.

2016ல் நடந்த தேர்தலில் ஹிலரி 65,844,610 வாக்குகளையும் ட்ரம்ப் 62,979,636 வாக்குகளையும் பெற்று 2.9மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி ஜெயித்து முன்னிலையில் இருந்தாலும் எலக்டோரல் வாக்குகள் ட்ரம்பிற்குத் தான் சாதகமாக இருந்தது. 270 எலக்டோரல் வாக்குகள் வெற்றியை நிர்ணயித்தாலும் 304 வாக்குகள் பெற்று அதிபரானார் ட்ரம்ப். ஹிலரி 227 வாக்குகள் பெற்றுத் தோற்றுப் போனார். ரஷ்யாவின் தலையீடு , அக்டோபர் மாதத்தில் வெளியான விக்கிலீக்ஸ் தகவல்கள், தேர்தலுக்கு முன்பான எஃப்.பி.ஐ விசாரணை, முக்கியமாக “பெண் வெறுப்பு”. ஒரு பெண் அதிபராவதை இன்னும் பல அமெரிக்க ஆண்களாலும் சில பெண்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹிலரியின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டது இனியும் தொடருமா?

2016 தேர்தலில் புடினின் தலையீட்டில் ட்ரம்ப் ஜெயித்ததாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர் . ‘காம்ரேட் கமலா’ என்று ட்ரம்ப் இந்தத் தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறிவருகின்றார்.

செப்டம்பர் 10அன்று ட்ரம்ப்பிற்கும் ஹாரிஸிற்கும் இடையே முதல் விவாதத்தை ‘ஏபிசி தொலைக்காட்சி’ நிறுவனம் நடத்தவிருக்கிறது. தங்களுடைய தேர்தல் கொள்கைகளை இருவரும் மக்களிடையே கொண்டு சென்று நடுநிலை வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நிகழ்வாகவும் அமையலாம் என்பதால் மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்த இரு வேட்பாளர்களும் கடுமையாகப் பயிற்சி எடுப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

அதிபர் வேட்பாளர்களின் நிறை,குறைகள் மட்டுமன்றி அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும் கொள்கைகளும் தான் ‘ஸ்விங் வோட்டர்’ஸின் ஆதரவைப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது.

யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்று அறிய உங்களுடன் சேர்ந்து நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...