Tuesday, December 24, 2024

மில்லியன் டாலர் கேள்வி!


இந்த மாத துவக்கத்தில் நியூயார்க் நகரில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்ப்ஸன் துப்பாக்கியால் குறிவைத்து சாலை நடைபாதையில் கொல்லப்பட்டார். அத்தனை பிசியாக இருக்கும் நகரம்! அதிகாலை நேரம் என்பதால் கூட்டம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரை சைலன்சர் வகை துப்பாக்கியால் கொன்றவன் அங்கிருந்து தப்பிவிட்டான். பின் எப்படியோ ஐந்து நாட்கள் அலசி ஆராய்ந்து அருகிலிருக்கும் பெனிசில்வேனியா மாநிலத்திலிருந்து கோழியை அமுக்குவது போல் அமுக்கி அவனை நியூயார்க்கிற்கு அழைத்து வந்திருக்கிறது காவல் துறை.

பலநாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை இது என்கிறது காவல் துறை. டிசம்பர் 4ந் தேதி யுனைடெட் ஹெல்த்கேரின் தாய் நிறுவனமான 'யுனைடெட் ஹெல்த் குரூப்' தனது வருடாந்திர முதலீட்டாளர் மாநாட்டை ஹில்டன் ஹோட்டலில் நடத்தும் விவரங்களை அறிந்து நவம்பர் 24ந்தேதியே நியூயார்க் வந்திறங்கி இருக்கிறான் 26 வயதான கொலையாளி 'லுய்ஜி மன்ஜோனே'.

அதிகாலையில் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்ப்ஸன்ஐ கொன்று விட்டு சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பி விட்டிருக்கிறான். காவல்துறையும் ஒன்று விடாமல்அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு கேமராக்கள் மூலம் அவனைத் தொடர்ந்து சென்றிருக்கிறது.அங்கிருந்து அவன் தப்பி பாஸ்டன், நியூஜெர்ஸி, கனெக்டிகட், ஃபிலடெல்ஃபியா சென்றிருக்கலாம் என்று பின்தொடர்ந்து கடைசியாக, பெனிசில்வேனியா மாநிலத்தில் பிடித்து விட்டனர்.

ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மன்ஜோனேக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். கொலை செய்ய துப்பாக்கியைப் பயன்படுத்தியதற்காக அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை. மாநிலம் விட்டு மாநிலம் வந்து செய்த கொலைக்காக அதிகபட்சமாக ஆயுள் தண்டனை. ஒரு வன்முறைக் குற்றத்தைச் செய்ய சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக 30 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஃபெடரல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நியூயார்க் மாநில நீதிமன்றம் கொலையாளி மீது 11 வழக்குகளைப் பதிந்துள்ளது.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், தாம்சனின் மரணத்தை "அதிர்ச்சியையும், கவனத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த நன்கு திட்டமிடப்பட்டு இலக்கு வைக்கப்பட்ட கொலை" என்று விவரித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு, நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் எட்வர்ட் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்ஜோனேனின் கருத்துக்களை நாடு முழுவதும் ஒளிபரப்புவதற்கான ஒரு தவறான முயற்சியில்" தாம்சனை கொன்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் கிடைத்த துப்பாக்கிக்குண்டு உறைகளில் 'Delay', 'Deny', 'Depose' என்று நிரந்தர மார்க்கரில் எழுதப்பட்ட வார்த்தைகளைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். காப்பீட்டுத் துறையினர் பயன்படுத்தும் சொற்றொடரை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. ஒருவர் மருத்துவ காப்பீடு கேட்டு விண்ணப்பித்தால் முடிந்தவரை தாமதப்படுத்துவது. இல்லையென்றால் கோரிய தொகையை மறுப்பது. அதுவும் முடியவில்லையா விண்ணப்பத்தை முற்றிலும் நிராகரித்து விடுவது. இப்படி செய்து கொண்டே இருந்தால் விண்ணப்பித்தவருக்கு மனஉளைச்சல் ஏற்படும். நாளடைவில் வேறு வழிகளை நாடிச் சென்றுவிடுவார்கள் என்பது காப்பீட்டுத்துறையினர் செய்வது வழக்கம். இதைத்தான் 'Rainmaker' படத்தில் அருமையாக காட்டியிருப்பார்கள்.

சுகாதார காப்பீட்டுத் துறை, குறிப்பாக பணக்கார நிர்வாகிகள் மீது விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் கொலையாளி பல குறிப்புகளை எழுதி வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. நல்ல கல்லூரியில் படித்தவன் எப்படி கொலையாளி ஆனான்? இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதற்கு ஒருவரைத் தூண்டும் பல காரணிகள் உள்ளன என்று வடகிழக்குப் பல்கலைக்கழக குற்றவியல் நிபுணர் ஜேம்ஸ் ஆலன் ஃபாக்ஸ் கூறியுள்ளார். அநீதிக்கு எதிரான மனநிலை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கலாம். யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் மன்ஜோனேனுக்கு தனிப்பட்ட முறையீடு இருந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், காவல்துறையால் பெறப்பட்ட அவரது எழுத்துக்களின் அடிப்படையில், அவர் சுகாதாரத் துறை மீது கருத்தியல் வெறுப்பைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

அவரது பின்னணியைப் பொறுத்தவரை பணக்கார குடும்பம், ஐவி லீக் கல்வி என கொலை செய்யத் தூண்டும் முகாந்திரம் இல்லாது போனாலும் பலரை வஞ்சிக்கும் ஒரு அமைப்பின் மீதான கோபம் போல் தான் இந்த கொலைவழக்கில் தெரிகிறது. இவர்கள் தங்களை ஒரு ஹீரோவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பவர்களாக நினைத்துக் கொள்வதுண்டு. தற்பொழுது பலராலும் கொலையாளிக்கு ஆதரவு கிடைத்து வருகிறது." என்று ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சுகாதார காப்பீட்டுத் துறை மீது பல கண்டனங்களும் அதிருப்திகளும் பொதுமக்களுக்கு உண்டு. பெரு நிறுவன முதலைகள் மக்களின் பணத்தை உறிஞ்சி அவர்களுக்குத் தேவையான காப்பீடுகளை வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு என்றும் உண்டு. முதல்முறையாக இவ்வாறு ஒரு நிறுவன அதிகாரி கொல்லப்பட்டிருப்பதால் கடுமையான தண்டனை தருவதில் நீதிமன்றமும் முனைப்பாக உள்ளது.

ஆனால் கொலைக்கான மூல காரணத்தை யாராவது அலசி உபாயம் காண்பார்களா?

இல்லை என்பதே அதன் பதிலாக இருக்கும்.

சென்னை மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் அம்மாவிற்கு மருத்துவர் சரியான முறையில் மருத்துவம் அளிக்கவில்லை. தன்னையும் இழிவுபடுத்தினார் என்று ஒருவருக்கு கோபம் வந்து மருத்துவரைக் கத்தியால் குத்திய சம்பவம் தான் நினைவிற்கு வந்தது. அதை நியாயப்படுத்த முடியாது. அப்படியொரு நிலைக்குக் கொண்டுச் சென்றவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படிப் புரிய வைப்பது?

முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கொலையாளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏன் தீவிரவாதியைப் போல நடத்த வேண்டும்? உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்? கொலைக்கான தண்டனையைக் கொடுக்காமல் ஏன் தீவிரமாக ராணுவ விசாரணை என்பதில் இருக்கிறது பெரு நிறுவன முதலாளிகளின் லாபி. இப்படி ஆளாளுக்கு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளைச் சுட ஆரம்பித்தால் என்னாவது? அவர்களுக்கும் பயம் வரத்தானே செய்யும்?

எங்கே, எதனால் இப்படியொரு நிலைமை என்று யார், யாருக்குப் புரியவைப்பது?

மில்லியன் டாலர் கேள்வி!

Monday, December 23, 2024

அங்கிள் சாமின் உண்மையான முகம்


சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்று பார்த்தால் நம்ம 'மேட் டேமன்'. இவர் நடித்த படங்கள் எல்லாமே பார்க்கிற வகையில் தான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கின்ற பொழுது எடுத்த படமென்றால் தொண்ணூறுகளில் எடுத்த படம் என்று தெரிந்து விட்டது. இந்தப் படத்தை இதற்கு முன் பார்த்தது போலவே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அநேகமாகப் பார்க்க ஆரம்பித்து நடுவில் தூங்கி விட்டிருப்பேன். அதனால் சில காட்சிகள் பார்த்தது போலவே இருந்தது.

தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அமெரிக்காவில் தனியொருவனாக வாழும் ஏழை மாணவர்களின் நிலையை நன்கு பிரதிபலித்திருந்தார்கள். இந்தப்படத்தில் ஏழ்மை, பெருநிறுவன முதலைகள், நீதிமன்றம், குடும்ப வன்முறை என்று அமெரிக்காவின் மறுமுகத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

நமக்குத் தெரிந்த வாழ்க்கையெல்லாம் இந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சராசரி அமெரிக்கர்களை விட கூடுதல் வருமானம் ஈட்டும் இந்தியர்கள். கலர்கலராக 'இன்ஸ்டா'வில் போடும் படங்களை வைத்து அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான் என்று இன்ஸ்டா காலத்திற்கு முன்பு நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வறுமையின் நிறம் வெள்ளையும் கருப்புமாக இங்கும் இருக்கிறது என்று.

கல்லூரியில் படிப்பதென்பது பலருக்கும் இங்கு கனவாகவே இருந்தது. ஓரளவு வசதி இருந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்றிருந்த நிலை இப்பொழுது மெல்ல மாறிவருகிறது. மேற்படி சட்டம், மருத்துவம் பயில ஆண்டுகளும் செலவுகளும் அதிகம் என்பதால் ஏழை மாணவர்களின் பாடு திண்டாட்டம் தான். அரசு உதவி அளித்தாலும் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கதாநாயகனுக்கு. வாடகை கொடுக்க முடியாமல் கதாநாயகன் காரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அங்கே, இங்கே ஏதோ கிடைக்கிற துக்கடா வேலைகளைப் பார்த்துக் கொண்டு சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் பகுதி நேர வேலையின் மூலமாக மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில் கட்சிக்காரர்களுக்கு உதவ தானாகவே சென்று ஆஜராகிறான். எப்படியாவது தன் கட்சிக்காரர் ஜெயித்து விட வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் கதாபாத்திரம். நடுவே ஒரு குடும்ப வன்முறை வழக்கிற்கும் ஆஜராகிறான்.

மகனின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுத்து பெற்றோர் செலவழிக்க முடியாமல் மகன் இறந்து விடுகிறான். அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறான் கதாநாயகன். பெரிய நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவ மாட்டார்களே தவிர, தங்களுக்காக வாதாட பெரிய தலைகள் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு நேற்று பட்டம் வாங்கியவனைப் பந்தாடுவார்கள். கோடிக்கணக்கில் செலவிடுவார்கள்!

கதாநாயகன் எல்லா வழிகளிலும் முயன்று நிறுவன மேலதிகாரி வரை விசாரணை செய்து முடிவில் பணத்தைக் கொள்ளையடிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனம் செய்த தகிடுதத்தங்களை வெளிக்கொணர்வான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஆணையிடும். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் அந்த நிறுவனம் 'திவால்' அறிக்கை அனுப்பி யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் தப்பி விடும். வாதாடிய வக்கீலுக்கோ மகனை இழந்த குடும்பத்திற்கோ எந்த நிவாரணமும் கிடைக்காது. இது தான் 'corporate greed' என்பது.

இப்படி மக்களின் பணத்தை 'காப்பீடு' என்ற பெயரில் வசூலித்தாலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி வேலைகள் செய்து வருவது கண்கூடு. மருத்துவர் கோரும் பணம் அதிகமா அல்லது நிறுவனங்கள் அவர்களுக்குப் பாதியைக் கொடுப்பது சரியா? தெரியவில்லை. 'ஒபாமாகேர்' வந்த பிறகு ஏமாந்த சோணகிரிகளிடம் அதிகமாக வசூலிக்கிறார்கள்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன மேலதிகாரியை ஒருவன் சைலன்சர் துப்பாக்கியால் நியூயார்க் நகரத்தில் சுட்டுக் கொன்று விட்டான். தப்பியோடிய அவனைப் பிடித்தது மட்டுமில்லாமல் தீவிரவாதம் என்ற பெயரில் ராணுவ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளில், பொது இடங்களில் சராமாரியாக துப்பாக்கியால் கொல்லும் பைத்தியங்களைக் கூட தீவிரவாதி என்று தண்டனை கொடுப்பதில்லை. கார்ப்பரேட்காரன் ஒருவனைக் கொன்றதற்கு எப்படியெல்லாம் துடிக்கிறது அமெரிக்கா! இது தான் அங்கிள் சாமின் உண்மையான முகம்😩

என்னவோ போடா மாதவா!


Sunday, December 15, 2024

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவதைப் போல பலரும் தங்களுடைய மனைவியிடம் கூட பேசுவதில்லை என்பதே உண்மை. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். குடும்பத்தில் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. அதனால் தான் நண்பர்களைச் சந்தித்துப் பேசுகிறோம் என்பது தான் பல ஆண்களின் வாதம்.

இவற்றையெல்லாம் கூட ஒப்புக்கொள்ளலாம். அது என்ன, நண்பர்களுடன் இருந்தால் 'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா? இது தான் அவர்களின் மனைவியரின் வாதம். சென்ற வார 'நீயா நானா' விவாதம் இதைப் பற்றியது தான்.

எனக்குத் தெரிந்து என் தந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையையும் அவர் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு வருவார். இது வாடிக்கை. ஞாயிறுகளில் நாங்கள் பாட்டிவீட்டிற்குச் சென்று விடுவோம். அதனால் குடும்பத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை.

என் கணவரும் மதுரையில் நண்பர்களைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று அவர்களைச் சந்தித்துப் பேசி விட்டு வருவார். இது வாடிக்கையாகப் பலரது வீடுகளிலும் நடக்கின்ற கதை தான்.

ஆனால், கடந்த சில வருடங்களாக, நண்பர்கள் சந்தித்துக் கொண்டால், 'மச்சி, ஓபன் த பாட்டில்' என்று 'பார்ட்டி' வைத்துக் கொண்டாடுவது' வாடிக்கையாகி விட்டிருக்கிறது. எப்படி அப்படியொரு சந்தர்ப்பத்தை உண்டாக்கலாம் என்று நன்றாகவே திட்டமிடுகிறார்கள். அதற்குத் தான் பல குடும்பங்களில் பெண்கள் பொங்குகிறார்கள்.

"வாரம் முழுக்க வேலை. வீட்டிற்கு வேண்டிய அத்தனையையும் செய்து விடுகிறோம். எங்களுக்காக சில மணி நேரங்கள். மனைவியிடம் கூட பேச முடியாததை நண்பர்களுடன் பேசிக் கொள்கிறோம். பழைய பள்ளி, கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனந்தமாக, நண்பர்களுடன் ஒரு அரட்டை. அப்படியே கொஞ்சம் குடி. இது தப்பா?"

"அய்யோ பாவம்! அவர்களும் மனுஷங்க தானே? ஒரு 'கட்டிங்' அடிச்சா என்ன தப்பு? நண்பர்களுடன் இருக்கிறப்ப?" ஒன்றுமே தெரியாதது மாதிரி பெண்களிடம் கேள்விகள் கேட்கிறார் கோபிநாத்.

ஒரு 'கட்டிங்' என்று ஆரம்பித்து எல்லை மீறிச் சென்று விட்டால்? ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால்? அந்த நேரத்தைக் குடும்பத்துடன், குழந்தைகளுடன் செலவிடலாமே? ஏன் சிறையிலிருந்து தப்பித்துச் செல்வது போன்ற பாவனை? இப்படி பல கேள்விகளும் தங்களைத் தவிக்க விட்டு விட்டு இவர்கள் மட்டும் ஜாலியாக ஆட்டம் போடுகிறார்களே என்ற அங்கலாய்ப்புகளும் மனைவிகளிடமிருந்து.

படித்தவர்கள், பணியில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல தங்கள் கவலைகளை மறைக்க இப்படித்தான் ஒரு 'கட்டிங்'கில் ஆரம்பித்து பின் அது தினமும் தொடர்ந்து அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏதும் தங்கள் வாழ்வில் நடந்து விடக்கூடாது என்பதில் பெண்களுக்குரிய அச்சம் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. நான் 'மொடாக்குடியன்' இல்லை. அப்படி எல்லாம் ஆகிவிடமாட்டேன் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான். குடிக்கு அடிமையாகி விட்டால் பணியிடத்தில் சுணக்கம், வீட்டில் கருத்து வேறுபாடு என்று சடுதியில் படுபாதாளத்திற்குள் தள்ளி விடும்.

இப்பொழுதெல்லாம் பணி நிமித்தமாக, நண்பர்களுடன், வெளியூர்களுக்குச் சென்றால் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் குடிப்பது அதிகரித்து விட்டது. அதுவும் தவிர, தட்டுப்பாடின்றி கிடைக்கும் மதுபானமும், 'குடி, குடி' என்று குடிமக்களைக் குடிகாரர்களாக்கி காசு பார்க்கும் கேவலமான அரசாங்கமும் இருக்கும் வரை பெண்கள் தவிப்புடனும் அச்சத்துடனும் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. இதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்?

மெல்ல, மெல்ல போதை மாநிலமாக நம் கண்முன்னே தமிழகம் மாறிவருவது வேதனையான நிலைமை. பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே குடிக்கு அடிமையாகி வரும் போக்கு பல பெற்றோர்களுக்கும் அச்சத்தைத் தருகிறது. முன்பு, பயந்து பயந்து குடித்தார்கள். இன்றோ, நண்பர்களின் "சந்திப்புகள்" என்றாலே பெரும்பாலான இடங்களில் குடி இல்லாமல் இல்லை என்றாகிவிட்டது.

கடவுளின் அருள் இருந்தாலோ அல்லது மிகக் கட்டுப்பாடு கொண்ட மனம் இருப்பவர்களால் மட்டுமே குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும் என்று நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் கூறியது தான் உண்மை.

குடும்பத்தின் நன்மை கருதி குடிக்கு அடிமையாகாமல் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடும் மக்களும் இருக்கும் நாட்டில் தான் இப்படிப்பட்ட குடிகாரர்களும் உருவாகுகிறார்கள் வெவ்வேறு காரணத்தை அவர்களாகவே கொடுத்துக் கொண்டு.

என்னவோ போடா மாதவா!














Tuesday, December 10, 2024

Multiple Facets of Madurai - யானைமலை


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த மலையைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். வைகை ஆற்றைத் தாண்டி மேலூர் செல்லும் பாதையில் ஒரு யானை தும்பிக்கையை நீட்டி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும். என் சிறுவயதில் அந்தப் பிரம்மாண்டமான மலையை ஆச்சரியத்துடன் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. மாடிவீடுகள் அதிகம் இல்லாத காலத்தில் எங்கள் வீட்டு மாடியிலிருந்து தெரியும். அம்மா தற்போது இருக்கும் வீட்டு மாடியிலிருந்து கூட தெரிகிறது.

தூரத்திலிருந்தே தெரிந்து பேருந்துடன் கூடவே பயணிப்பது போலத் தொடரும் மலையடிவாரத்தில் தான் நரசிங்கம்பட்டி என்னும் கிராமம் இருக்கிறது. அங்கே தான் பிரபலமான நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோவிலும் உள்ளது. மலையின் கீழே தாமரைப் பூத்துக் குலுங்கும் பெரிய குளம். மலை நிறைய மந்திகளின் அட்டகாசமும் அதிகமாக இருக்கும்.
 
என் சமூகத்து மக்கள் கோவிலில் திருநாட்களைக் கொண்டாட அடிக்கடி சென்று வரும் இடம். அங்கே சௌராஷ்டிரா சத்திரங்கள் இன்று வரையில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள சிறு குன்றின்மீது முருகன் கோவில் இருக்கிறது. அதைப் பராமரிப்பவர்களும் எம் சமூகத்து மக்கள் தான். சிறிய கோவில் இன்று பெரிதாகக் கட்டப்பட்டுச் சிறப்பாக இருக்கிறது.

இளவயதில் கோடைவிடுமுறையில் பாட்டி அழைத்துச் செல்லும் இடங்களில் நரசிங்கம்பட்டியும் ஓன்று. மதுரையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது போன்ற பிரமை. இப்பொழுதெல்லாம் பைக்கில் கூட சென்று விட முடிகிறது. வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து விட்டால் போதும் தூங்குமூஞ்சி மரங்கள் சாலையின் இருபுறமும் அலங்கரிக்க, காவலர் குடியிருப்புகளைத் தாண்டினால், 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல' தான் 💕💕💕 அத்தனை பசுமையான விளைநிலங்கள் நிறைந்த இடமாக இருந்தது. இன்று நன்கு சுருங்கி ஏதோ சிறிது விளைநிலங்களை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் சென்றால் கரும்புத்தோட்டங்களைப் பார்க்கலாம். வயல்வெளிகள் இன்றும் மனதை அள்ளுகிறது.

ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து குதிரை வண்டியில் ஏறி சத்திரத்திற்குச் செல்வோம். காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோழிகள், குஞ்சுகள், மாட்டுக்கொட்டகைகளைக் கடந்து சென்று, அங்குத் தங்கி கிராமத்து மண்வாசனையை நன்கு அனுபவித்திருக்கிறோம். இன்று அந்தக் கிராமத்தின் சுவடே காணவில்லை! ஓலைக்குடிசைகள் மறைந்து கல் கட்டடங்களாகி ஒத்தக்கடையா இது என்று மிரட்டுகிறது! மதுரையின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது! ஆனாலும் அந்த பஜ்ஜி, வடை, காபிக்கடைகள் கொஞ்சம் நவநாகரீக ஸ்டைலில் இருக்கிறது😇😋 புழுதிபறக்க பேருந்துகள், காது வலிக்க ஒலிப்பானை அலற விட்டுச் செல்லும் லாரிகள், இரு சக்கர வண்டிகள் என்று போக்குவரத்து மிகவும் சவாலாக இருக்கிறது. எத்தனை அமைதியாக இருந்த ஊர் கால் நூற்றாண்டில் எப்படியெல்லாம் மாறிவிட்டிருக்கிறது! எங்கெங்கோ இருக்கும் பள்ளிகளின் வாகனங்கள் சீருடை அணிந்த குழந்தைகளை அழைத்துச் செல்ல மூலைமுடுக்குகள் வரை வருகிறது. தண்டாட்டி அணிந்த ரவிக்கை அணியாத பொக்கைவாய்ப் பாட்டிகளைக் காணவில்லை. கயிற்றுக்கட்டில், ஓலைவேய்ந்த குடிசைகள் எல்லாம் மாயமாய் மறைந்து கிராமங்கள் நகர வேடம் பூண்டு வலம் வருகிறது. நல்ல முன்னேற்றம் தான்!


ஒருகாலத்தில் சௌராஷ்டிரா மக்கள் பலரும் வயல்வெளிகள், தோப்புகள் என்று வாழ்ந்த இடம்! பாட்டிவீட்டு நிலங்கள் கூட அங்கே எங்கேயோ தான் இருந்தது. காலப்போக்கில் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் அங்கிருந்தவர்களே குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டார்கள்! அங்குச் சென்றால் இப்படி நினைவுகள் பல அலைமோதும்.

குளத்தின் உள்ளே சென்றால் தாமரைத்தண்டு காலை இழுத்து விட்டுவிடும் என்று பயந்து, பயந்து காலை உள்ளே விட்ட நாட்கள் எல்லாம் அத்தனை பசுமையாக நினைவில் ஆடியது. அருகிலே சுரங்க வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும். அந்த வயதில் 'போரடிக்கிறது' என்ற சொல்லே தெரியாது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குரங்கு, கோழிகளுடன் விளையாடி, குளத்தில் நீராடி, விளையாடி மகிழ்ந்த நாட்கள் எல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... காலை, மாலை கோவிலுக்குச் சென்றுவருவோம். மின்விளக்கு, விசிறிகள் கூட சத்திரத்தில் இருக்காது. பிறகு விளக்கு, தண்ணீர் வசதிகள் வந்தது. எப்படித்தான் அங்குத் தங்கியிருந்தோமா? பாட்டி சமைக்க வேறு செய்வார்😊 எளிமையான உணவு தான் என்றாலும் சுவையாக இருக்கும். சோற்றை உருட்டிக் கொடுத்து ஏதாவது புராணக் கதைகளைச் சொல்லி, விசிறி வீசி எங்களைத் தூங்க வைப்பார். ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் இங்குச் சென்று அன்றைய நாளை அசை போட்டுவிட்டு வருவேன். பாவம் ஈஷ்வர்! நான் சொல்ற கதைகளைக் கேட்பது போல் நன்றாகப் பாவனை செய்வார்😉 அத்தனை முறை சொல்லியாகிவிட்டது!

குளத்தின் எதிரே இருந்த பிள்ளையார் அன்று அரச மரத்தின் கீழ் வெயிலில் அமர்ந்திருந்தார். இப்பொழுது அவருக்கும் ஒரு வீடு கிடைத்திருக்கிறது. வெயில்படமால் சுகமாக உள்ளே அமர்ந்திருக்கிறார்.

அங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலுக்கும் சென்று வருவோம். இப்பொழுதும். பெரிய தடாகம். எதிரே யானைமலையின் அழகு தரிசனம். ஆகா! காண கண்கோடி வேண்டும். அந்தக்கோவிலும் அத்தனை அழகு. அதுவும் தாயாரின் அலங்காரம்💖 சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சக்கரத்தாழ்வார் விசேஷம். சிறுகோவில் தான் என்றாலும் அழகான பெருமாள். அமைதியான கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

திரு.மனோகர் தேவதாஸ் அவருடைய பள்ளி வயதில் நண்பர் ஒருவருடன் யானை மலைமீதேறி சிறிது தூரம் வரை சென்று அங்கிருந்து அழகான பச்சைப்பசேல் வயல்வெளிகளையும் கிணற்றிலிருந்து நீரை எடுத்து வயலுக்குப் பாய்ச்சும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறார். மாடுகளைக் கொண்டு உழுவது தான் அன்றைய விவசாய நடைமுறை. நாங்களும் பார்த்திருக்கிறோம். இந்தத் தலைமுறையினர் அறிந்திராத பலவிஷயங்களில் இதுவும் ஒன்று. 1950களில் பார்த்ததை நினைவில் கொண்டு 1980களில் வரைந்திருக்கிறார். மீண்டும் அந்த உலகத்திற்கே கொண்டு சென்று விட்டது இந்தப்படம்.

சிறுவயதில் பார்த்த யானைமலை கொஞ்சம் உருவத்தில் சுருங்கியது போலத் தெரிகிறது. அங்கிருந்த குன்றுகளைப் பாளம் போட்டுத் தகர்த்திருக்கிறார்கள்😞 மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் வரும் பல கிரானைட் குன்றுகள், மலைகளை இப்படித்தான் பாளம் பாளமாக வெட்டி சாலையோரம் வைத்திருந்தார்கள். சகாயம் ஐபிஎஸ்சின் சகாயத்தால் சிறிது நாட்கள் "கிரானைட் திருடர்கள்" வாலைச் சுருட்டிக்கொண்டிருந்தனர்.

 யோக நரசிங்கப்பெருமாள் கோவில் குளத்தை மொத்தமாக குத்தகைக்கு விட்டிருக்கிறது கோவில் நிர்வாகம். பூக்களைப் பறிக்க முடியாது. கடந்த மாதம் அங்குச் சென்று விட்டு வந்த ஈஷ்வர் குளத்தை நாசமாக்கி வைத்திருக்கிறார்கள். குப்பையும் கூளமுமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார்😌 நமக்கு எதன் அருமை தான் தெரிந்திருக்கிறது. அதுவும் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தான் இத்தனை அலட்சியங்களுக்கும் காரணம். சொரணை கெட்டவர்களாகி விட்டோம் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

யானைமலைக்குச் சென்று அங்கிருக்கும் சமண சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து 'அரிட்டாபட்டி' சென்ற கதையும் உண்டு.
 

Saturday, December 7, 2024

Multiple Facets of Madurai


இந்த வருட ஆரம்பத்தில் மதுரையில் தங்கியிருந்த நாட்களில் பல புத்தகக்கடைகளில் தேடியும் கிடைக்காத புத்தகம் இது. திரு.மனோகர் தேவதாஸைப் பற்றி அறிந்து கொண்ட நாளில் இருந்து அவருடைய புத்தகங்களை வாங்க முயற்சித்து வருகிறேன். சில புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம் இது. நான் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றி ஒருவர் தீராக்காதலுடன் ஓவியங்களாக மையினால் தீட்டியிருக்கிறார். கூடவே, அதன் தொடர்புடைய விவரணைகளும் அழகு.

முதன்முதலில் இவரின் ஓவியங்களை நான் பார்த்தது மதுரையில் பிரபலமான 'ஜேஜே ரெசிடண்ஸி' தங்குமிடத்தில். உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் பெரிய பெரிய சட்டங்கள் போட்ட படங்கள் நம்மை வரவேற்கிறது. மதுரையைப் பற்றின அழகான புகைப்படங்கள் பல இருந்தாலும் அதன் அழகை ஓவியமாக இப்படித் தீட்டியவர் யாரோ என்று ஒவ்வொரு படங்களையும் பார்த்தேன்.
அதற்குப்பிறகு தான் அவரைப்பற்றின தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஆகா! புத்தகங்கள் எழுதியிருக்கிறாரே வாங்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இந்த முறை ஈஷ்வர் ஊருக்குச் சென்றிருந்த பொழுது பேராசிரியர் பிரேம்பாபுவின் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறார்.
அடடா! நான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகமாச்சே என்று சொல்லியிருப்பார் போல. அவரும் அன்புப்பரிசாக கொடுத்துவிட்டார்.

நன்றிகள் பல பிரேம்பாபு சார்.

புத்தகத்தின் முதல் படமே அத்தனை தத்ரூபமாக இருக்கிறது. புதுமண்டபத்தில் இருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவ சிற்பத்தை தன்னுடைய மையினால் தீட்டியிருக்கிறார். இதே போன்ற அன்னையின் திருக்கல்யாண சிற்பம் அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் சந்நிதியின் வெளிப்புறத்தில் காளிக்கு எதிரில் இருக்கும். அது தான் எனக்குத் தெரியும். புதுமண்டம் முழுவதும் கடைகள் இருந்ததால் இந்த அழகிய சிற்பத்தை நான் பார்க்கவில்லை போல. விரைவில் புதுமண்டபம் புதுப்பொலிவுடன் அருங்காட்சியமாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்.

மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே கண்பார்வை கோளாறு இருந்தும் அற்புதமான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவரின் மனைவி மஹிமா மைக்கேலும் ஒரு ஓவியக்கலைஞர். இவரின் வெற்றியில் சமமான பங்கு அவருக்கும் உண்டு.

இன்று அந்த மாமனிதர் இறந்த நாள். இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களில் ஒருவர்.




Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...