Sunday, August 5, 2012

பயணக் குறிப்புகள் - Mt.Jungfrau, ஸ்விட்சர்லாந்து

Lake on our way to Interlaken Ost railway station
அடுத்த நாள் எல்லோரும் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு கிளம்புகையில் மணி பத்தரைக்கும் மேலாகி விட்டது! அங்கிருந்து ஒரு இரண்டு மணிநேரப் பயணத்தில் Interlaken என்ற மலை சூழ்ந்த இடத்தில் ஏரியைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி சிறிது நேரம் அமைதியான அந்த ஏரியையும் பின்புலத்தில் இருந்த மலைகளையும் ரசித்துவிட்டுப் படங்களையும் எடுத்து கொண்டு ரயில்வே ஸ்டேஷன்சென்றோம். சுவிஸ்சில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஏரிகளும் தான். தண்ணீருக்கும், இயற்கை எழிலுக்கும் பஞ்சமில்லை.
Beautiful view when we waited for Murugan 

நாங்கள் போக வேண்டிய Mt.Jungfrau செல்ல அந்த வழியில் தான் போக வேண்டும்.அங்கு போய் சேர்ந்தவுடன், ஏரியில் சிறிது நேரம் செலவழித்தோம். அங்கிருந்து Mt.Jungfrau போவதற்கு ரயில் டிக்கெட்டுக்களை வாங்கவேண்டி இருந்தது. நல்ல கூட்டம்.

பாஸ்போர்ட்டைக் காட்டி பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் டிக்கெட் வாங்கினோம். அதிக விலை! அதற்கு அருகில் இருக்கும் கடையில் சில நொறுக்குத்தீனிகளையும் வாங்கிக் கொண்டு, Grindelwald என்னும் இடத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு ட்ரெயினில் Mt.Jungfrau போக வேண்டும். ட்ரெயினில் எங்களைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு மூட்டையை எடுத்து என் மகனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த தயிர் சாதமும், சிப்சும் கொடுத்து, நாங்கள் எல்லோரும் சாண்ட்விச்களைச் சாப்பிட்டு முடித்து விட, இறங்க வேண்டிய இடமும் வந்தது. மீண்டும் வேறொரு ட்ரெயினில் ஏற, Grindelwald ஸ்டேஷனில் முருகன் ஒரு பெஞ்ச் மீதேறி வண்டியில் உட்கார்ந்திருந்த எங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி நகர, செல்வி அலற, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த ஸ்டேஷனும் வர, ஒரே கலவரம். முருகனிடமிருந்து ஃபோன்-அடுத்த நிறுத்தத்தில் எங்களை இறங்கிக் கொள்ளுமாறு. அவரிடமோ ட்ரெயின் டிக்கெட் கிடையாது.
Train to Mt.Jungfrau
எப்படியோ ஒரு ஸ்டேஷன் தானே! வந்து சேர்ந்து விட்டார். மறக்க முடியாத அனுபவம். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஸ்டேஷனை சுற்றிப் பார்த்து ஹிந்தி, மாண்டரின், ஜப்பான், ஆங்கில மொழியில் வழித்தடங்கள் எழுதப்பட்டு இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது முருகனும் வந்த சேர நிம்மதியாக இருந்தது. மீண்டும் சரியான ரயிலில் ஏறி Mt.Jungfrau போனோம்.
Train view from Inside

டிக்கெட் பரிசோதகர் அழகாக இரு கைகளையும் கூப்பி நமஸ்தே சொன்னார். நாங்களும் திருப்பி நமஸ்தே சொன்னோம் வணக்கம் என்று தமிழில் சொன்னால் அவருக்குப் புரியாதென்று. இந்தியர்கள் என்றாலே ஹிந்தி பேசுபவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்! அம்மணி மூக்கு வேறு குத்தி அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு கருப்பு ஹேர் டை அடித்து பார்க்க லேடி காகா மாதிரி இருந்தார் :) அங்கிருந்து பலரும் நிறைய வயதானவர்கள் கூட நடந்து மலை ஏறிக்கொண்டிருந்தார்கள். என் கணவருக்கோ மலைக்கு நடந்து போக வேண்டும் என்ற ஆசை. ஆனால் முடியுமா என்று தெரியவில்லை. அவர்களைப் பார்த்தால் மலையேறிப் பழக்கம் உள்ளவர்கள் மாதிரி இருந்தது. அப்படி செய்திருந்தால் நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருந்திருக்கும். சரி கீழிறங்கி வரும்பொழுதாவது நடந்து வருவோம் என்று நினைத்துக் கொண்டோம். ஒரு அரை மணி நேரம் ரயில் மலையேற ஆரம்பித்தது. நல்ல நீளமான ரயில். அந்த செங்குத்தான மலையில் இந்த ரயில் மேலேறிப் போவது மிகப் பெரிய சாதனை தான்! 

View from train
எங்கு பார்த்தாலும் மலை, மலை,மலை, நடுநடுவே சின்ன சின்ன அருவிகள் என்று இயற்கையின் வண்ண ஜாலங்கள். எதை படம் பிடிப்பது, வேடிக்கைப் பார்ப்பது என்று தத்தளித்துக் கொண்டேசென்றோம். அவ்வளவு அழகான நீளமான ஒருவழி ரயில்வே பாதை. நல்ல குளிர், பனி மூட்டம். மேலே ஏற,ஏற சூரியனின் சுவடு குறைந்து கொண்டே வருவது போல் இருந்தது.
நடுவில் ஓரிடத்தில் நாங்கள் சென்ற ரயில் சிறிது நேரம் நிற்கும் எனவும் அந்த இடத்திலிருந்து ஆல்ப்ஸ் மலையை கண்டு ரசிக்கலாம் என்று சொல்ல, நாங்கள் இறங்க, அந்த நேரத்தில் இன்னொரு ரயில் அந்த பாதையைக் கடந்து போனது.
Mt.Junfrau
மீண்டும் ரயில் பயணம் தொடர, கடைசியில் வந்தே விட்டது, Mt.Jungfrau ஐரோப்பாவின் மிக உயர்ந்த மலை உச்சியில் இருந்தோம்! வெள்ளைப் பனிப்போர்த்திய உயர்ந்த மலை! சூரியஒளியில் கண்களை கூசச் செய்யும் விதமாக மின்னிக் கொண்டிருக்க சூரியன் வருவதும் போவதுமாக தன் வித்தையை காட்டிக் கொண்டிருந்தது.
Ice cave
இறங்கியவுடன் ஒரு பனிமலை குகைக்குள் நடந்துக் கொண்டே வந்தோம். காலைப் பார்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வழுக்கி கீழே விழ வேண்டியது தான். மெதுவாக பெங்குயின்கள் மாதிரி தத்தி தத்தி நடந்துக் கொண்டே போக, வாய் குளிரால் தந்தி அடிக்க, அங்கிருக்கும் பனிச் சிலைகளை பார்த்துக் கொண்டும், படங்களை எடுத்துக் கொண்டும் வெளியே வர, அப்பாடா என்றிருந்தது.
பனிக்குகை முழுவதும் பல வடிவங்களில் பொம்மைச் சிலைகள் குளிரில் உருகாமல் இருக்கிறது. அப்போ எப்படி குளிர் இருந்திருக்கும்? மெதுவாக படிகளின் வழியே மேலே சென்றால் கண்கள் கூசுகிற மாதிரி வெள்ளை வெளேரென்று மூஞ்சியில் அடிக்கிற ஆல்ப்ஸ் பனிமலை. சிறு வயதில் புவியியலில் படித்த ஆல்ப்ஸ் மலையை நேரில் தொட்டுப் பார்த்து திக்குமுக்காடித் தான் போனேன் நானும். காற்று வேறு வீச, குளிர் இன்னும் அதிகமாகி விட்டது. காது வலிக்க ஆரம்பித்து விட்டது. அங்கும் சில இடங்களில் ஒரே வழுக்கல் தான். எப்படியோ தட்டுத்தடுமாறி உள்ளே போக, ஒரே சீன மக்கள் கூட்டம். அங்கிருக்கும் சுவிஸ்நாட்டு கொடியுடன் போட்டோ எடுக்க அவ்வளவு போட்டி. சிலர் பனியை உருட்டி அடுத்தவர் மேல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பனிக்கும், வெண்மேகத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு ஓங்கியுயர்ந்த வெண்பனி மலைகள்.

Mt.Jungfrau
இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலிருந்து அரசியல்வாதிகள் குழு (யார் காசிலோ??)ஒன்று ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க ஜோடியாக வந்திருந்த கூட்டம் குளிர் காரணமாக மலைப்பக்கம் வராமல் உள்ளேயே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு பல இடங்களில் பூட்டுக்கள் கொத்துக்கொத்தாக கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். காதல் வாழ்க!
அங்கு ஒரே ஒரு சின்ன தடுப்பு தான். 
விழுந்தால் கீழே சறுக்கிக் கொண்டே மேலே பரலோகம் போக வேண்டியது தான்! அந்த இடம் மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. அது வரை சென்று படங்களை எடுத்துக் கொண்டு சில்லிட்ட மூஞ்சி சிவக்க ஆல்ப்ஸ் மலையின் உச்சியிலிருந்து இறங்க மனமில்லாமல் கீழிறங்கி வந்தோம்.

அங்கிருந்த கடையில் சுவிஸ் நினைவாக மாடுகளின் கழுத்தில் இருக்கும் பெரிய மணி ஒன்றை வாங்கினோம். அங்கு இரண்டு உயர்தர ரெஸ்டாரெண்டுகள். ஒன்று இந்தியன் ரெஸ்டாரெண்ட். நல்ல மசாலா வாசனை.
பசி வேறு. சுடச்சுட மசாலாடீயும் சைனீஸ் நூடுல்சும் வாங்கிச் சாப்பிட, அந்தக் குளிரில் இதமாக இருந்தது. கடைசி ட்ரெயின் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடும் என்று அறிவிப்பு வந்தவுடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிப் போய் வரிசையில் நிற்க, ட்ரெயின் வர, கீழே நடக்க முடியாத வருத்தத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இறங்கினோம். பலரும் கீழிறங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ற உடையும், காலுக்கு ஹைக்கிங் பூட்சும் வேண்டும். திறந்த வெளி. குளிர்காற்று, எதற்கு வம்பு?

கீழிறங்கி வரும் பொழுது இருட்டி விட்டது. நல்ல பசி வேறு. நூடுல்ஸ் எல்லாம் எந்த மூலைக்கு? ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் இருக்கா என்று தேடிக் கொண்டே வந்தோம். ஒரு சைனீஸ், ஒரு டர்கிஷ். சரி என்று டர்கிஷ் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்து உட்கார்ந்திருந்தால் கவனிக்க ஆள் இல்லை. வெறும் இரண்டே பேர் அந்த இடத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலிருக்கும் டேபிளில் உட்கார்ந்திருந்த அமெரிக்காவிலிருந்து வந்த தமிழ் பெண்மணியோ ஒன்றும் சாப்பிடுவதற்கு நல்லா இல்லை. நீங்கள் வேண்டுமானால் வேறு இடத்திற்கு போய் சாப்பிடுங்கள் என்று உசுப்பி விட்டார். வேறு எங்கு போவது? அதனால் அங்கேயே உட்கார்ந்திருந்தோம். அதற்குள் அவர் சுவிஸில் எல்லாமே குதிரை விலையாக இருக்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? எப்படி வந்தீர்கள்? என்று ஆயிரம் கேள்விகளை கேட்டுத் தொலைத்து எடுத்து விட்டார். நாங்களும் ஆர்டர் செய்து சாப்பாடு வருவதற்குள் பசி வாட்ட  ஒரு வழியாக முடித்து விட்டு வரும் பொழுது மிகவும் நேரமாகி விட்டது. இப்பொழுது மலைப்பயணம் பழகிவிட்டதால் பதட்டமில்லாமல் வீடு வந்து சேர்ந்தோம். இரவு நேர மலைப்பயணமும் ஒரு அழகு தான். வீடு வந்து சேரும் பொழுது அனைவரும் களைப்பால் ஓடிப் போய் தூங்கியவர்கள் தான்! எப்போது தூங்கினோம் என்று தெரியாது!




2 comments:

  1. பயணங்களின் போது இம் மாதிரி எதிர்பாராமல் ஏற்படும் சம்பவங்கள் அந்த நினைவுகளை மேலும் பசுமையாகவும், மறக்கமுடியாததாகவும் ஆக்கி விடுகிறது. :(



    Posted by மு.சரவணக்குமார் to என் அனுபவங்கள்... at August 6, 2012 11:56 AM

    ReplyDelete
  2. உண்மை தான். ஆனால், அப்போது மிகவும் பதட்டமாக இருந்தது.



    Posted by Latha Kuppa to என் அனுபவங்கள்... at August 6, 2012 12:48 PM

    ReplyDelete

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...