தமிழர் திருநாட்களில் ஒன்றான பொங்கலன்று ஊரில் இருக்கப் போகிறோம் என்ற நினைவே மிகவும் உற்சாகமாகவும், இனிமையாகவும் இருந்தது!
பொங்கல் திருநாள் என்றால் என்ன என்று தெரிந்த மகளுக்கு சொந்த ஊரில் பாட்டி, மாமா, அத்தைகளுடன் கொண்டாடுவது இன்னும் கோலாகலமாக இருக்கும் என்று கிறிஸ்துமஸ் முடிந்த கையோடு இந்தியாவிற்கு கிளம்பினோம்.
பல வருடங்களுக்குப் பிறகு மார்கழி மாதக் குளிர், மழை என 'குளுகுளு' சென்னைவாசம், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் கோவில் தலங்களை தரிசித்து விட்டு மதுரைக்குப் போகும் போதே பொங்கல் களையுடன் பிறந்த ஊரும் இரு கரங்களை நீட்டி வரவேற்க மனதுக்கு இதமாக இருந்தது. மேலூர்-அழகர்கோவில் போகும் வழியெங்கும் கரும்பு அறுவடை செய்து வியாபாரத்திற்கு லாரிகளில் ஏற்றுவதைப் பார்க்கும் பொழுதே ஆனந்தமாக இருந்தது.பொங்கல் திருநாள் என்றால் என்ன என்று தெரிந்த மகளுக்கு சொந்த ஊரில் பாட்டி, மாமா, அத்தைகளுடன் கொண்டாடுவது இன்னும் கோலாகலமாக இருக்கும் என்று கிறிஸ்துமஸ் முடிந்த கையோடு இந்தியாவிற்கு கிளம்பினோம்.
எங்கு பார்த்தாலும் வண்ணக் கோலப்பொடிகள், கரும்புகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். துணி, நகைக்கடைகளில் பொங்கலை முன்னிட்டு கூட்டம் அலைமோதியது. மண், பித்தளை பொங்கல் பானைகள், விளக்குகள் என்று கடைகளில் 'பளிச்'சென்று அடுக்கி வைக்கப்பட்டு அழகாக இருந்தது!
போன வருடம் நல்ல கரும்பு விளைச்சல் என்று சொன்னார்கள். இவ்வளவு சுவையான கரும்பு சாப்பிட்டு எவ்வளவு வருடம் ஆயிற்று?? யம் யம் யம் என்று நான் கரும்பை அனுபவித்துச் சாப்பிடுவதை வேடிக்கையாக பார்த்த என் மகள், உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று கேட்டாள் ??
பொங்கலுக்கு முன் தின இரவில் அம்மா இருந்த குடியிருப்பில் அனைவரும் சேர்ந்து கோலமிடுவது நீங்களும் வாருங்கள் என்று சொல்ல நாங்களும் எங்கள் கைவண்ணத்தை காட்டி விடலாம் என்று கிளம்பும் போது மணி இரவு பத்தரை.
தீபாவளியோ என்று நினைக்கத் தோன்றியது அன்று. பெண்கள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக் கோலம் போட, குழந்தைகள் வண்ணப் பொடிகளை எடுத்துக் கொண்டு அம்மாவிற்குத் துணையாக, ஆண்கள் பெண்களுக்குத் துணையாக என்று தெருவில் அம்மணிகளின் கைவண்ணத்தில் உண்டான படைப்புகள் அழகோ அழகு!
சிறிது நேரம் நாங்களும் கோலமிட்ட வீடுகளை வலம் வந்தோம். அதற்குள் எங்கள் குடியிருப்பில் வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்து வண்ணப் பொடிகளை எடுத்து வைக்க, நானும், மகளும் ரங்கோலி போட்டு முடிக்க, எங்களை அதிசயமாக பார்த்தவர்கள், பரவாயில்லையே அழகாக கோலமும் போடுகிறீர்களே என்றுவியந்தார்கள்!
அந்த நடுஇரவிலும் வேடிக்கையாக பேசிக்கொண்டுப் பெரியவர்களும், விடுமுறையைக் கொண்டாடி மகிழும் குழந்தைகளும் என்று தெருவே 'ஜேஜே' என்று இருந்தது! தம்பி மகனும் தூங்காமல் மற்ற குழந்தைகளுடன் ஓடியாட, தம்பியும் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட , மதுரையில் மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சி!
கிருஷ்ணன் கோவிலில் பெண்கள் குழாம் ஒன்று பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களும் எப்போது ஊருக்கு வந்தீர்கள் என்று குசலம் விசாரிக்க நாங்களும் அவர்களுடைய நலத்தையும் கேட்டுக் கொண்டு அழகு கோலங்களைப் படம் பிடித்துக் கொண்டோம்.
மீனாக்ஷி அம்மன் கோவிலைச் சுற்றி கோலப் போட்டியைப் பார்க்க அதிகாலையில் செல்லலாம் என்று சொல்லிக் கொண்டு படுக்கைக்குப் போகும் போதே மணி ஒன்றைத் தாண்டியிருந்தது.
ஒஓ! நேரமாகி விட்டதே என்று அவசர அவசரமாக காலையில் கோவிலுக்குக் கிளம்பினோம். அம்மன் சன்னதி முன்பு மனதை கொள்ளை கொள்ளும் அழகான பிரமாண்ட மலர்க்கோலம்! சித்திரை வீதி முழுவதும் பெண்களின் கைவண்ணத்தில் அழகிய வண்ணப் படைப்புகள்! கடைகள் இல்லாத மனித நடமாட்டம் குறைந்த தெருக்களில் காலை வேளையில் நடப்பது சுகமாக இருந்தது. அந்த அதிகாலையிலும் கோவிலின் முன்னே இருக்கும் மதுரை வீரனுக்குச் சிலர் பொங்கல் படைத்துக் கொண்டிருந்தார்கள்!
ஐயப்ப, முருக, செவ்வாடை பக்தர்கள் கூட்டம் கோவிலுக்குள்! மதுரைக்கே பெருமை சேர்க்கும் தெருவோர இட்லிக்கடைகளில் வடை, இட்லி,பூரி, தோசை என்று சுடச்சுட வியாபாரம் நடந்து கொண்டிருந்தது! கோவிலைச் சுற்றி புதிதாக முளைத்துள்ள ஹல்வா கடைகளில் ஐயப்ப பக்தர்கள் கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்!
அமைதியான தெருக்களின் வழியே வந்து இளநீர் குடித்து விட்டு விடிந்தும் விடியாத பொழுதில் வீடு வந்து சேர்ந்தோம். தம்பியும் அம்மாவும் சென்று பொங்கலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டைத் துடைத்து, வாசலில் மாவிலைத் தோரணம், கூரைப் பூ, கரும்புகளை கட்டி, சாமி படங்களையும் சுத்தம் செய்து பொட்டு வைத்து கரும்பு, மஞ்சள் கிழங்கு என அலங்கரித்து, வாழை இலைகளில் மாவிளக்கு, தேங்காய், வாழைப்பழங்களை படைத்து, நன்கு துலக்கிய இரு பொங்கல் பானையையும் அடுப்பின் மேல் வைத்துப் பால் பொங்கி வரும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று குழந்தைகள் துள்ளிக் குதிக்க ... ம்ம்ம். எவ்வளவு வருடங்கள் ஆகி விட்டது இப்படி கொண்டாடி?
அரிசி வெந்ததும் வெல்லம் போட்டு நெய்யில் வறுத்த முந்திரி, ஏலம், உலர் திராட்சை போட்டு இறக்கும் போது மனமும் , மணமும் நிறைந்திருந்தது.
சிறு வயதிலிருந்தே என் மகளுக்குப் பிடித்த சக்கரைப் பொங்கல் கூடவே பால் பொங்கலும் :) பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து விட்டுத் திகட்ட திகட்ட சாப்பிட்டோம். மறக்க முடியாத ஒரு திருநாள் :)
நீங்களும் இந்த வருடப் பொங்கல் நன்னாளை உங்கள் குடும்பத்தினருடன் இன்பமாக கொண்டாடி மகிழுங்கள் !
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். :)
ReplyDeleteமிக்க நன்றி, சரவணன். உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Deleteஅனுபவங்களை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! சென்ற் வருட அனுபவம் இது என்று நினைக்கிறேன். நம் ஊரை விட்டு பல்லாயிரம் மைல் கற்கள் வாழும் ஒவ்வொருத்தரிடமும் இந்த உணர்வுகள் நிச்சயம் இருக்கிறது!
Deleteகோலங்களும் மிஅக் அழகு!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி, திருமதி.மனோ சாமிநாதன்.
Deleteபோன வருட நினைவுகள் தான் இவை :) அடுத்த முறை ஊருக்குப் போகும் வரை இந்த நினைவுகளுடன் தான்!
தெருவில் பெண்களின் கைவண்ணத்தில் அழகான கோலங்களைப் பார்க்க முடிந்தது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி, தனபாலன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
Deleteஎத்தனை வருடங்கள் வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்யத் தகுந்த கட்டுரை.... மதுரையைப் பற்றி எழுதும் வரிகளிலும் மதுரையின் மணம் கமழ்கிறது.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... (வாழ்த்துக்களா அல்லது வாழ்த்துகளா என்று போன வருடம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது.... :) )
ReplyDeleteமிக்க நன்றி, திருமுருகன்.
ReplyDelete//மதுரையின் மணம் கமழ்கிறது// மதுரை வாசம் அப்படி :)