Sunday, January 5, 2014

Lake George - குளிர்கால அவதாரம்

வீட்டிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் இருக்கும் Lake George- மழை, குளிர், பனி, கோடை, இலையுதிர் என்று வருடம் முழுவதும் எந்தக்  காலத்திலும் மனம் குளிர போகுமிடங்களில் ஒன்று.

இந்த ஊருக்கு வந்த புதிதில் கோடையில் மட்டும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏரியில் நீந்தி விளையாட போனது மெதுவாக மற்ற நேரங்களில் கூட போக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதற்கு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளும், கொள்ளை அழகும் தான்.

நீல நிற வானம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரி. சுற்றிலும் மலைகள். பலரும் விரும்பும் ஒரு சுற்றுலா மையம்.

உறைந்த ஏரி பனிக்காலத்தில் அழகு என்றால் ஏரியில் துள்ளி விளையாடும் குழந்தைகள், சுட்ட இறைச்சியை சாப்பிட்டு விட்டு குடும்பங்களுடன் பொழுதைப் போக்கும் கோடைக்காலம் இன்னுமொரு அழகு என்றால் மலை முழுவதும் பல வண்ண இலைகளுடன் பவனி வரும் இலையுதிர் காலமோ  கொள்ளை அழகு!

ஜனவரி முதல் நாள் முதலே ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள்.. பனிக்காலத்திலும் மக்களை உற்சாகப்படுத்தும். 

உறைநிலைக்கும் கீழே சென்று ஏரி உறைய, சலனமில்லாத தண்ணீர் கரை அருகில் நிற்கும் அழகே அழகு தான்.

ஜனவரிமுதலாம் நாளன்று மதியம் இரண்டு மணியளவில் Polar Plunge என்று அந்தக் குளிர் நீரில் குதிக்கக் காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே நமக்கு ஜுரம் வந்து விடும்.

ஹாயாக நீச்சல் உடையை அணிந்து கொண்டு சிறுவர்கள், சிறுமியர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே ஏரியில் குழுமியிருக்கும். இதை வேடிக்கைப் பார்க்க வந்த எங்களைப் போன்ற கூட்டம் ஆர்ப்பரிக்க, விசில் சத்தம் கேட்டவுடன் 'தொபுக்கடீர்' என்று உறைந்தும் உறையாமலும் இருக்கும் ஜில்லிட்ட ஏரித்தண்ணீரில் குளியல் போட்ட கூட்டம் கரைக்கு ஓடி வருவதை பார்த்தால்..அந்த நேரத்தில் குளிர் காற்றும் சேர்ந்து கொண்டால் பற்கள் தந்தி அடிக்க, பார்க்கிறவர்களுக்கும் குளிர் தொற்றிக் கொள்ளும். 

கடைகள் எல்லாம் சீசனை முன்னிட்டு மூடி இருந்தாலும், இந்த ஒரு நாள் கூத்துக்காக பீட்ஸா கடைகளும், ஓரிரு உணவகங்களும் திறக்கப்பட்டு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கும். எப்படித்தான் இந்தக் குளிரில் குளியல் போட  இவர்களால் முடிகிறது என்று ஆச்சரியத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டே சூடான காபி, சாக்லேட்பால் குடிப்பது அங்கு வரும் பலருக்கும் வாடிக்கையான ஒன்று.

பிப்ரவரி மாதம் Winter கார்னிவல் என்று ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் குளிர்கால கொண்டாட்டங்களில் ஏரியின் மேல் நடக்கும் பைக், கார் ரேஸ் பார்க்க கண்கொள்ளாக்  காட்சியாக இருக்கும்.

ஏரி நன்கு உறைந்தவுடன் ஏரியினுள்ளே காரை எடுத்துச் செல்லலாம். முதல் முறை ஏரிக்குள் காரை எடுத்துச் செல்லும் பொழுது ஒரே பக்...பக்..பக்...பனியை உடைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டே போனோம். சிறிது தூரம் சென்று பெரிய பெரிய கார்களைப் பார்த்தவுடன் அந்த பயம் போய் விட்டது. கரையின் அருகில் உறையாத தண்ணீரை கடந்து போக அச்சமாகத் தான்இருந்தது.

ரேஸ் நடக்கும் இடத்தில் பனியை சீராக்கி 'வழுவழு'வென்று இருக்கும். நடப்பதற்கு மிகுந்த சிரமம் தான். பல நேரங்களில் வழுக்கி விழுந்து எழுவதற்குள் மீண்டும் விழுந்து என்று போனதும் சுகம் தான். அதற்கான ஷூவுடன் போனால் பிரச்சினை அவ்வளவாக இருக்காது.

பைக்கை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் தான். தலைக்குப் பெரிய கவசம், உடம்பு முழுவதும் மறைத்த லெதர் ஜாக்கெட், கையுறைகள், ஸ்பெஷல் ஷூக்கள், பைக் சக்கரங்கள்... பனியில் சறுக்கிக்  கொண்டு போகும் வகையில் எக்ஸ்ட்ரா அவதானிப்புகளுடன் என்று பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். நேரம் ஆக,ஆக ரேஸை காண வந்திருக்கும் கூட்டமும் சேர, 'விர்விர்'ரென்று பைக்குகள் எல்லாம் உறுமிக் கொண்டே பாயத் தயாராக இருக்கும்.


ஒருவர் கொடி அசைத்தவுடன் அனைவரும் பனியை கிழித்துக் கொண்டு 'சர்ரென்று' சீறிப் பாய்வதை பார்க்க வேண்டுமே! இதே போல் தான் கார் ரேஸ் அன்றும். ஸ்பெஷல் டயர்களுடன் கார்களும் நீ முந்தி நான் முந்தி என்று பனியில் வழுக்கித் தள்ளாடிக் கொண்டு போவதை திகிலுடன் பார்க்க நன்றாக இருக்கும்.

குழந்தைகளும் பெரியவர்களும் snowmobile எடுத்துக் கொண்டு ஏரியை வலம் வருவதும், ஹெலிகாப்டரில் ஏரியைச் சுற்றி வருவதும், பெங்குயின் போல் தத்தி தத்தி நடந்து கொண்டே போவதும் என்று ஏரி முழுவதும் கொண்டாட்டமான மன நிலையில் மக்களைக் காணலாம்.

பனிக்காலத்தில் ஏரியில் மீன் பிடிப்பவர்கள் பனியைக் கடைந்து சிறு துளையிட்டு மீன்களைப் பிடிக்க தூண்டிலில் மீன் உணவை மாட்டி விட்டுக் காத்திருப்பார்கள். பலரும் பிளாஸ்டிக் வாளியைக் கவிழ்த்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டு பொறுமையாக காத்திருக்கிறார்கள். அன்று அதிர்ஷ்டநாளாக இருந்தால் நிறைய மீன்களைப் பிடித்துச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் மீன் பிடிக்க லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அளவே மீன் பிடிக்க முடியும். சில குறிப்பிட்ட மீன்களே பிடிக்க வேண்டும் என்று எல்லாம் நியதி இருக்கிறது. ஒரு பெண்மணி தன் தூண்டிலில் சிக்கிய மீனை ஜூன் மாதம் தான் பிடிக்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் தண்ணீருக்குள் விட்டு விட்டார்!!!

மீன் பிடிப்பதற்கென்று அவர்கள் வைத்திருக்கும் கருவிகள்!!!! பனியை குடைய ஒருவர் ஸ்வீடனில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தேன் என்று பெருமையாக அந்த ட்ரில்லை காண்பித்தார். கத்தி போல் கூர்மையான அந்த ட்ரில்லை நல்ல பிளாஸ்டிக் கவர் போட்டு பத்திரமாக வைத்திருந்தார்.

எல்லோரும் அதை போலவே வைத்திருந்தார்கள்- வேறு டிஸைனில், வண்ணத்தில். சிலர் கண்கள் மட்டுமே தெரியும் வகையில் உடல் எல்லாம் மூடிக் கொண்டு அந்தக் குளிரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு, குடிக்க பியர் , தண்ணீர் சகிதம் தயாராக. சிலர் டென்ட் போட்டு சூடாக டீ போட்டும் குடித்துக் கொண்டிருந்தார்கள். மீன்களின் நடமாட்டத்தை பார்க்க சோனார் ஒன்று வைத்து என்று ஏரியில் பல இடங்களில் துளை போட்டு தூண்டிலையும் போட்டு காத்திருக்கிறார்கள்.

இப்படி குளிர் காலத்தில் ஆள் அரவமற்ற ஏரியில் மீன் பிடிப்பது பலருக்கும் பொழுதுபோக்கு தான். ஏரி மீன்களும் கிடைத்து விடுகிறது *:) happy
குளிர் காற்றில் முகம் சிவந்து, கண், மூக்குகளில் நீர் வழிய , காது மடல் வலியும், கை கால் விரல்களில் குளிரினால் உண்டாகும் வலியையும் பொறுத்துக் கொண்டால் இந்த பனிக்கால கொண்டாட்டங்களை கண்டு களிக்கலாம்.

குளிர் மற்றும் பனியை காரணம் காட்டி வீட்டில் முடங்கிக் கிடக்காமல் இளைஞர்களும், பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் உறைந்த ஏரியின் மேல் பல மைல்களுக்கு நடந்து செல்வதும் அதை கண்டு களிப்பதும் புதிய அனுபவம்!


படங்கள் : விஷ்வேஷ் ஒப்லா


6 comments:

  1. //ஹாயாக நீச்சல் உடையை அணிந்து கொண்டு சிறுவர்கள், சிறுமியர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே ஏரியில் குழுமியிருக்கும். இதை வேடிக்கைப் பார்க்க வந்த எங்களைப் போன்ற கூட்டம் ஆர்ப்பரிக்க, விசில் சத்தம் கேட்டவுடன் 'தொபுக்கடீர்' என்று உறைந்தும் உறையாமலும் இருக்கும் ஜில்லிட்ட ஏரித்தண்ணீரில் குளியல் போட்ட கூட்டம் கரைக்கு ஓடி வருவதை பார்த்தால்..அந்த நேரத்தில் குளிர் காற்றும் சேர்ந்து கொண்டால் பற்கள் தந்தி அடிக்க, பார்க்கிறவர்களுக்கும் குளிர் தொற்றிக் கொள்ளும். //

    பனி கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை ...இப்போ தான் முதல் முறையாக படித்து அனுபவிபதால் ....ரொம்பவே ஜில் என்று இருந்தது ...:)

    இப்படி மெனக்கெட்டு எங்களுக்கு பனி படையல் படைத்த உங்களுக்கு ...:) ஜில் என்று ஒரு நன்றி ...:)

    போட்டோ கூட அதன் கதை சொல்லுகிறது ....:) அவருக்கும் ஒரு ஜில் ஜில் நன்றி ...:)

    ReplyDelete
    Replies
    1. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :)

      Delete
  2. ச்ச்ச்சில்லென்று ஓர் அனுபவத்தை பகிர்ந்த, உங்க அஃபிஷியல் போட்டோக்ராபருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...