Wednesday, February 26, 2014

மஹா சிவராத்திரி


மஹா சிவராத்திரி என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது சிறுவயதில் அரசமர பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடக்கும் சிவராத்திரி கொண்டாட்டங்கள் தான்!

சிவராத்திரியை முன்னிட்டு காமராஜர் சாலையில் இருக்கும் இந்தக் கோவிலின் முன் பந்தல் போட்டு இரவு எட்டு மணிமுதல் போக்குவரத்தை முனிச்சாலையிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாகத் திருப்பி விட்டு மேடையும் கச்சேரியுமாக அந்த இடமே 'கலகல'வென்று மாறி விடும்.

ஒரு பெரிய அரசமரத்தின் கீழ் அழகான பிள்ளையார். அவருக்குப் பின்னால் மயில் வாகனத்தில் முருகன். சில நாக தெய்வங்கள். வெள்ளி/தங்க அலங்காரத்துடன் பிள்ளையார் தரிசனம் பார்த்து உருகுபவர்கள் அநேகம் பேர்!

தேங்காய், பழம், அர்ச்சனைத் தட்டு, பூ விற்பவர்கள் என்று பலரும் அவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்! இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

அந்தச் சிறு இடத்தில் பல கடைகள்! ஆலமரத்தைச் சுற்றி வருவதற்குள் நெல்லிக்காய், கொடுக்காய்ப்புளி, மாங்காய் விற்கும் பாட்டி , பூ விற்கும் பெண், எதிரில் காபிக்கடை, சுடச்சுட வடை, பஜ்ஜி போட்டு வியாபாரம் செய்பவர் என்று ஒரு சின்னஞ்சிறு உலகமே அவரைச் சுற்றி!

தினமும் காலையில் அபிஷேகங்களுடன் ஆரம்பித்து மலர் மாலைகளுடன் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் பிள்ளையார்.


காலை வேளைகளில் பொதி மூட்டைகளைச் சுமந்து செல்லும் மாணவர்கள் நான் நல்லா படிக்கணும் என்று தலையில் குட்டிக் கொண்டே விபூதி பூசிக் கொண்டு நடையைக் கட்டுவதும், சைக்கிளில் செல்பவர்கள் ஒரு கால் தரையிலும் ஒரு கால் சைக்கிளிலும் வைத்துக் கும்பிட்டுக் கொண்டே கடந்து செல்வதும், கடையைத் திறக்கு முன் நல்ல லாபம் பார்த்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டே கடை முதலாளிகளும், பைக்கிலும், ஸ்கூட்டரிலும் செல்பவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டும், பேருந்தில் இருந்தே தரிசிப்பவர்களும் என்று பரபரப்பான அந்த நேரத்திலும் இரண்டு நிமிடம் நின்று அவர் ஆசியைக் கோருபவர்கள் ஏராளம்!

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு காய்கறி வாங்க வரும் பெண்களின் கூட்டம் காலை நெரிசலுக்குப் பிறகு சாவகாசமாக வந்து தங்கள் மனக் குமுறல்களைச் சொல்லி வணங்கிச் செல்வார்கள்!

செவ்வாய், வெள்ளிகளில் கேட்கவே வேண்டாம். காலை, மாலை என்று நல்ல கூட்டம் வரும். சிதறு தேங்காய் உடைப்பவர்களின் கையைப் பார்த்துக் கொண்டே நாலா பக்கமும் சிதறி ஓடும் தேங்காயை பிடிக்க ஒரு கும்பல்!

இப்படித் தன்னைச் சுற்றி நடப்பவைகளை அமைதியாக உட்கார்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிவராத்திரியை ஒட்டி கோலாகலமாகப் பத்து நாட்களுக்குத் திருவிழாவே கொண்டாடி விடுவார்கள்.

இதற்காக ஒரு குழு (அரசமரம் இயல், இசை, நாடகக் குழு???) நன்கொடை வசூலிப்பதற்காக ஒரிரு மாதங்கள் முன்னமே அந்த ஏரியாக்களில் வலம் வர ஆரம்பிப்பார்கள். பந்தல் போட்டவுடனே திருவிழா களை கட்டிவிடும். ஒலிபெருக்கியில் கடவுள் பாடல்களுடன், பழைய, புதிய பாடல்கள் என ஆரம்பித்து அன்றைய தேதியில் பிரபலமான பாடல்கள் வரை மக்கள் கேட்டு ரசிக்கும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அவ்வளவாக மாடி வீடுகள் இல்லாத காலம். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்தே நிலா வெளிச்சத்தில் நட்சத்திரக் கூட்டங்களுடன் பல இரவுகளில் கச்சேரிகளை கேட்டு ரசித்திருக்கிறோம்.

மிகவும் பிரபலமான குழு வருகிறது என்றால் மட்டுமே மேடை அருகில் போய் பார்த்து விட்டு வருவது வழக்கம்.

கான்பாளையம், லட்சுமிபுரம், காமராஜர் சாலையில் இருப்பவர்கள் நித்தம் ஓர் அலங்காரம் என்று விநாயகர் தரிசனத்தைக் கண்டு களிப்பார்கள். திருவிழாவுக்கே அழகு சேர்க்கும் பலூன், கடலை, முறுக்கு, அதிரசம், ஜவ்வு மிட்டாய் விற்பவர்களும் என்று குழந்தைகள் புடை சூழ இரவு நேரங்களில் அந்த இடமே அல்லலோகப்படும்.

சிவராத்திரி விழாவில் தினமும் பாட்டுக்கச்சேரி, வில்லுப்பாட்டு, சொற்பொழிவு என்று இரவு வரை நீடிக்கும் தினங்கள் குதூகலமானவை. பாட்டியுடன் விழா ஆரம்பிக்கும் முன்பே போய்ச் சாலையில் போட்டிருக்கும் ஜமக்காளத்தில் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு கச்சேரி கேட்ட காலங்கள் எல்லாம் இனி வாரா.

ஒரு முறை TMS வந்து ரசிகர்களின் விருப்பப் பாடல்களைப் பாடி கூட்டத்தை ஆர்ப்பரிக்க வைத்தார். நடிகையும் பாடகியுமான வரலட்சுமியும் வந்து பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதக் கச்சேரிகள், சொற்பொழிவுகள்!

விழா முடிந்தவுடன் அவரவர் கொடுத்த நன்கொடைக்கு ஏற்ப அடுத்த நாள் காலையில் சுடச்சுட கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வெண் பொங்கலுக்கும் முண்டியடித்துக் கொண்டு அந்தப் பகுதி மக்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த நாளில் அனைவர் வீட்டிலும் காலைச் சாப்பாடே கோவில் பிரசாதம் தான்

ஒரு சிறு கோவிலைச் சுற்றி நடக்கும் இந்த மாதிரி திருவிழாக்கள் தான் அந்த காலத்தில் பிரபல்யம். மக்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து அவர்கள் வீட்டு விசேஷம் போல் கலந்து கொள்வதில் பேரானந்தம்.

திருவிழாக்களைப் பற்றி மதுரை மக்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா?

பெரியவர், சிறியவர், எளியவர், செல்வந்தர் என எந்தவித சாதி பேதமில்லாமல் அனைவரும் இன்புற்றிருந்த அந்த நாட்கள் எல்லாம் வருடங்கள் பல கடந்தும் இன்றும் என்றுமே இனிமையான இளமையான நாட்கள்!





Monday, February 24, 2014

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

நான் எழுதிய உண்மையும் கற்பனையும் கலந்த கதை ஒன்று 'இதுதமிழ்' வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்டது  :)


http://ithutamil.com/?p=4129%2F



Wednesday, February 19, 2014

லதா புராணம் - 151 - 175

என் முகநூல் பக்கங்களில் இருந்து...

வழி மேல்

விழி வைத்து

உன் வரவுக்கு

காத்திருந்தேன்.

உன் பாதம்

நிலம் படாமல்

உனைத் தாங்கி

நின்றேன்.

நீயோ,

வேறொருவனைக்

கண்டதும்

எனை

மறந்து

விட்டாயே?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

-செருப்பு

லதா புராணம் #151



பின்னணியில் நீல வானம்

மலை முகட்டில்

மஞ்சள் கீற்றாய்

உனது புன்னகை ஒளிர

நான் எனை மறந்தேன்.

அன்றலர்ந்த தாமரையானேன்.

ஞாயிறு போற்றுதும் , ஞாயிறு போற்றுதும் ...

லதா புராணம் # 152


நேற்றிரவிலிருந்து ஒரே பரபரப்பு!
.
.
.
.
.
.
.
நிமிடத்திற்கொருமுறை இணையத்தில் என்ன நடக்கிறது என்று சலசலப்பு.
.
.
.
.
.
.
எழுபத்தைந்து சதவிகிதம்
.
.
.
.
.
.
பள்ளிகள் இருக்காது என்று படித்ததும், தொலைக்காட்சியில் வெள்ளைக்கார ரமணனும் ஆறு முதல் பத்து இன்ச் வரை பனிப்பொழிவு இருக்கலாம் என்று உறுதி செய்தவுடன் ...
.
.
.
.
.
.
பள்ளி இருக்குமா என நாளை காலை வரை எதுவும் நிச்சயமில்லை எனத் தெரிந்தும் விசிலடித்து ஆனந்த கூத்தாடுகிறான்

லதா புராணம் # 153


பனி மூடிய மரங்கள்

விண்ணும் மண்ணும்

வெள்ளை வீடுகளாய்

இன்றைய காலை புலர்ந்தது !

லதா புராணம் #154


உன் பார்வை

எனை வழுவிச்

சென்றாலும்

உன் பாதக்

கொலுசொலிகள்

பாடும் ஜதியை

நானறிவேன்

லதா புராணம் #155


காலையில் காரை பனியில் இருந்து மீட்டு, சாலையை கடந்து பஸ்சை பிடிப்பதற்குள்
போகுதே போகுதே ... என்று கண்முன்னாடியே அதை தவற விட்டு...

'சே' கண் இமைக்கும் நேரத்தில் கோட்டை விட்டுட்டேனே என்று என்னையே நொந்து கொள்ள ...

எனக்கென்ன மனக் கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை
பாணியில் நான் பெத்த ராசா...

சரி,அடுத்த தெருவில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்குப் போகலாம் என்று விரைவாகப் போகையில் ...
இந்த பஸ் டிரைவர் சுத்த மோசம் , நடுவில் நிறுத்தி ஏத்த மாட்டார் , என் பழைய பஸ் டிரைவர் நல்லவர் என்று தனக்கு சாதகமானவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வர ...

அடுத்த தெருவில் பஸ்சிற்காக காத்திருந்த பொழுது அதுவும் வந்து கதவுகளை திறந்து காத்திருக்க,
இது தானே உன் பஸ் என்று பஸ் நம்பரைப் பார்த்துக் கேட்க , செல்லமும் வழித்தட எண்ணை நினைத்து ம்ஹும் , இது இல்லை என்று சொல்லிக் கொண்டே அந்த நம்பரும் கண்ணில் பட,
இது தான், இது தான் என்று சொல்லி அதிரடியாய் ஓடி...

ம்ம்ம்... எனக்கென்ன மனக் கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை

லதா புராணம் #156



கதிரவனின்

கனிந்த பார்வையில்

வெட்கி

நிற்க முடியாமல்

நெக்குருகி

ஆறாய்

ஓடுகிறாள்

பனி மங்கை

லதா புராணம் #157



ஸ்வர்ண

ஜுவாலையுடன்

நீ பவனி

வரும் அழகில்

மனதை பறிகொடுத்து

மயங்கி நிற்கிறாள்

பேதை அவள் !!!

லதா புராணம் #158


தங்க 'விலையேற்றம்'

என்று தானே சொன்னார்கள்?

'தங்க' எடையேற்றம்

ஆனது எப்படி ???

- புரியாத புதிர்!!

லதா புராணம் #159



அதிகாலையில்

ஆழந்த உறக்கத்தில்

கன்னக்குழி விழ

தன்னை மறந்து

சிரிக்கும் குழந்தையின்

சிரிப்பு - priceless

லதா புராணம் #160



அநியாயங்களையும்

அவதூறுகளையும்

செய்தவர்கள்

அநியாயத்திற்கு

நல்லவர்களாக

நடிக்கிறார்கள் !

-உலகம் ஒரு நாடக மேடை !

லதா புராணம் #161



தாயை

களைப்புறச் செய்த

களிப்பில்

களைத்து

கண்ணுறங்கியது

குழந்தை

லதா புராணம் #162


காலனின் கைப்பிடி

தளர்ந்ததில்

மீண்டும்

உயிர்த்தெழுந்தேன் !!!

லதா புராணம் #163

தாயின்

கைகளிலும்

தோளிலும்

மடியிலும்

தன்னை மறந்து

தூங்கும்

குழந்தைக்குத்

தெரியும்

சுகம் என்றால்

என்னவென்று!

லதா புராணம் #163


ஆலிலை கிருஷ்ணனாய்

அன்னை மடியில் தவழ்ந்து

வெண்ணை உண்ட கோபாலாய்

நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்து


குழலூதும் கண்ணனாய்

கேட்பவர்களை வசீகரித்து


கோபியர் கொஞ்சும் ரமணனாய்

வளரும் என் லட்டு கோபால்.



இன்று என் வீட்டில் கோகுலாஷ்டமி...

லதா புராணம் #164 



குழந்தைகளின் தலையணை விளையாட்டில் (pillow fight )

வானிலிருந்து

வெண்பஞ்சு மழை

லதா புராணம் #165


'மூடுபனி'யில்

அழகான 'வீடு' கட்டி

'அழியாத கோலங்கள்' இட்டு

'மூன்றாம் பிறை'யில்

'ரெட்டை வால் குருவி'யை

'மறுபடியும்'

அழகாக

படம் பிடித்து காட்டிய

'நம்மவர்'.

படக் கதாநாயகிகளை

மங்கலான ஒளியிலும்,

சூரிய உதய வேளையிலும்

மஞ்சள் வெயில் மாலையிலும்

கேசம் பறக்க அழகாக

காட்டிய

டைரக்டர் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி!

லதா புராணம் #166


காதலிக்கத் தெரிந்தால்

மட்டும் போதாது

காதலைச் சொல்லவும்

தெரிய வேண்டும் !

இல்லையென்றால்

காதலை

காதலர்களை

நம்பி

கடை விரித்தவர்கள்

எப்படி பிழைப்பை

நடத்துவார்களாம்???

லதா புராணம் #167

காதலடி நீ யெனக்கு,

காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,

வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே

பொங்கி வருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே!

நல்லஉயிரே கண்ணம்மா...

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

லதா புராணம் #168


எப்பொழுதும் கைப்பேசியில்

செய்தி வந்து விடும்.

இன்றும் வரும்

என்று ஏகத்துக்கும்

எதிர்ப்பார்த்ததில் ஏமாற்றமே!

பதறிப் போய்

தொலைக்காட்சி வாயிலாக

தெரிந்து கொண்டதில்

ஒரே ஆர்ப்பாட்டம். . . . . . . . . . .
.
.
.
.
.
.
.

இன்றும் பள்ளிக்கு விடுமுறை!

அடுத்த வாரம் முழுவதும் பனிக்கால விடுமுறை!!!

ஆக மொத்தம், ஊ லலா ஓஹோ ஊ லலா தான்

கும்பகர்ணனும், தாயாரும் மீண்டும்

விட்ட இடத்திலிருந்து

அவர்கள் வேலையைத் தொடர...

லதா புராணம் #169


வெண்பனிக் குவியல்களுடன்

கறுப்புத் தார்ச்சாலைகள்.

பனி படர்ந்த இலைகளுடன்

பச்சை மரங்கள்.

பனிக்காலத்திற்காய் இலைகளை

துறந்த மரங்கள்

வெண்பனிக் கூட்ட

மேகங்களை நோக்கி

ஆதவனை வரவேற்கும்

இனிய காலைப் பொழுது !!!

லதா புராணம் #170

பனி பகவானுக்கு

நாள், கிழமை, நேரம், காலம், பொழுதுகள்

எல்லாம் மறந்து விட்டன

போலும்!

விடுமுறை அன்றும்

கடமை தவறா

கண்மணியாக

பொழிந்து கொண்டிருக்கிறார்!!!!

கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா??

லதா புராணம் # 171


காதலிக்கும் போது

மாயமாவது

கல்யாணத்தின் போது

'மதம்' பிடிக்கிறது !

லதா புராணம் #172


திருமணத்திற்கு முன்

'மிஸ்' ஆகாத கால்கள்

திருமணத்திற்குப் பிறகு

'மிஸ்டு கால்'களாக

பரிணாமம் !

லதா புராணம் #173


அம்மா எங்களுக்குச் சொன்னது ..

யாராவது மிட்டாய். பிஸ்கட் குடுத்தா வாங்க கூடாது.

தெரியாதவங்க கிட்ட பேசக் கூடாது.

அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க-ன்னு சொன்னா நம்பி அவங்களோட போகக் கூடாது.

நான் என் குழந்தைகளுக்குச் சொல்வது ...

கார் வர்ற எதிர் திசையில் நடக்கணும்.

இந்த அட்ரஸ் தெரியுமா, நாய் காணமா போயிடுச்சு, பார்த்தியா-ன்னு கேட்டா பேசாம ஓடியே போயிடணும்.

முடிஞ்சா யார் வீட்டுக் கதவையோ தட்டி உதவி கேட்கணும்.

அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு-ன்னு சொன்னா நம்பி அவங்களோட போகக் கூடாது...

ம்ம்ம்ம்...

காலங்கள் மாறினாலும் கவலைகள் வெவ்வேறு ரூபத்தில் ...

லதா புராணம் #174


நான் வெளியில வர்ற மாதிரி வருவேனாம்

நீ 'ஊ'-ன்னு பேய்க் காத்து அடிக்கிற மாதிரி அடிப்பியாம்

அவனும் அழுகுற மாதிரி 'ஓ'- ன்னு அழுவானாம்

சூரிய, வாயு & பனி பகவான்கள் நடத்தும்

வான் அரசியல்

இந்திய அரசியலையே மிஞ்சி விடுகிறதே!!!!
.
.
.
.
.
.

எப்பவும் போல பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு

வேற யாரு?

லதா புராணம் #175

Tuesday, February 11, 2014

முதல் முதலாக முதல் முதலாக ...

உண்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும் அந்த ஊரில் எந்த உணவு நன்றாக இருக்கும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கும்.

கனடா வந்த புதிதில் ஒரு கடையை கடந்து சென்றாலே பருப்பு வடை வாசனை தூக்க, நூலகம் எதிரில் இருந்த பர்கர்கிங்கில் என்ன தான் விற்கிறார்கள் என்ற ஆர்வமிகுதியில் உள்ளே போனால் சிறிய வரிசையில் ஆர்டர் கொடுக்க மக்கள் காத்திருந்தார்கள்.

நாலைந்து டேபிள்களில் தனியாகவோ, குழந்தைகளுடனோ கையில் பன், அதற்குள் ஏதோ ஒரு இலை (lettuce -லெடஸ், லெட்டுயூஸ் சரியான உச்சரிப்பல்ல என்று என் வாண்டுகள் கிண்டலடிக்கும்), ஒரு கறித்துண்டு, நடுவில் ஒரு சீஸ் துண்டு வைத்து வாய் நிறையக் கடித்துச் சாப்பிடுவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு நிமிடத்திற்கொரு முறை வாயை துடைத்துக் கொள்வதும், நடுநடுவே கோக் குடிப்பதையும், பிரெஞ்சு பிரைஸ் எடுத்து கெட்ச் அப்பில் தோய்த்துச் சாப்பிடுவதையும், பார்த்து நாமும் இன்று இந்த பர்கரை சாப்பிட்டு விட வேண்டும் என்று நானும் என் மகளும் அந்த வரிசையில் ஐக்கியமானோம். என் முன் உள்ளவர்கள் எப்படி என்ன ஆர்டர் செய்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருந்தேன்.

உணவு வகைகளின் பெயர்களை எழுதி விலையுடன் பட்டியல் போட்டு அனைவரும் பார்க்கும் வண்ணம் வைத்திருந்தார்கள். அதை படிப்பதற்குள் என்ன, எப்படி ஆர்டர் செய்வது என்று தெரியாமல் கையில் அப்போது இருந்த காசிற்கு ஒரு சின்ன பிரெஞ்சு பிரைஸ் மட்டும் வாங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

கவுன்டரில் இருப்பவர்கள் கீறல் விழுந்த ரெக்கார்டர் மாதிரி எல்லோரிடமும், 'Hi, what would you like to order' என்று கேட்டு கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்த பாஷை புரிய பல மாதங்கள் ஆகியது *:( sad என் முறை வரும் பொழுது நானும் போர்டில் இருந்த நம்பரைச் சொல்லி அதை சுட்டிக் காட்ட, அவளும் திரும்பி பார்த்து small fries? என்று கேட்டு விலையைச் சொல்ல, நானும் பணத்தை கொடுத்து விட்டுப் பார்க்க, 'here or to go' என்று கேட்க, எனக்கு புரியாமல் விழிக்க, mam, do you want it here என்று மீண்டும் எனக்குப் புரியற மாதிரி அழுத்திச் சொல்ல, oh, 'here' என்று சொன்னவுடன் ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில், ஒரு சின்னக் கப்பில் கெட்ச்அப்-புடன் வைத்துக் கொடுத்தார்.

அவர் என்னை வித்தியாசமாக பார்ப்பதாக தோன்றியது எனக்கு!

இனிமேல் எப்படி ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். என் மகளுக்கும் எனக்கும் அன்று முதல் பிரெஞ்சு பிரைஸ் மேல் தீராக் காதல். எண்ணையில் பொரித்த உருளைக்கிழங்கு சீவல். கசக்கவா செய்யும்? அதில் ஏதோ ஒருவித கொழுப்பு சேர்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதோடு சரி *:( sad இப்போது அதுவும் கிடையாது *:( sad

முதல் முறை நானும்,என் கணவரும் டொரண்டோவில் ஒரு ரெஸ்டாரெண்டில் 'Fish & Fries' ஒன்று ஆர்டர் செய்தோம். அது எப்படி இருக்கும் என்று தெரியாமல், பிஷ் என்று இருக்கிறது நன்றாகத் தான் இருக்கும் என்று ஆர்டர் பண்ணி விட்டு என்ன வரப் போகிறதோ என்று எதிர்பார்ப்புடன் இருக்க, எங்கள் எதிர்ப்பார்ப்பு வீணாகவில்லை. முள்ளில்லாத, நீளவாக்கில் அறுத்த மீனை மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்தெடுத்த நான்கைந்து மீன்துண்டுகள், பிரைஸ், கெட்ச் அப், ப்ளூ சீஸ் என்று தட்டு நிறைய பார்த்தவுடன்..ம்ம்ம். சுவையாக இருந்தது. அன்று முதல் ப்ளூ சீஸிற்கும் அடிமையாகி விட்டது என் நாக்கு *:) happy பல இடங்களில் சாப்பிட்டும் அந்தச் சுவை மட்டும் கிடைக்கவில்லை.

பின்னொரு நாளில் அமெரிக்கா போவதற்கு விசா வாங்கி விட்டு, டொராண்டோவில் ஒரு ரெஸ்டாரெண்டில் குடும்ப சகிதம் போய் முதல் முறையாக சிக்கன் பர்கர் ஆர்டர் செய்தோம். would you like mayo என்று கேட்ட போது அது என்னது என்று தெரியாமல் விழிக்க, அவளிடம் கேட்க வெட்கப்பட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள்மீண்டும் எங்களிடம் mayonise என்றாள். ம்ம்ம்.அது என்ன என்று தெரிந்தால் தான் சொல்லியிருப்போமே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, எஸ் எஸ் என்று தலையை ஆட்டி விட்டு, அய்யோயோ என்னத்தை கொண்டு வந்து தரப் போறாளோ என்று பயந்து கொண்டே அந்த கூட்டத்தில் நாங்கள் மட்டும் தனியாக இருப்பது போன்ற உணர்வுடன் காத்திருந்தோம்!

பர்கர் கேட்டாலும் பிரைஸ், கோக் கூடவே அழையா விருந்தாளியாக வந்தது. அப்பாடா பர்கர் பிடிக்கவில்லை என்றாலும் பிரைஸ் சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று மனம் கணக்கு போட ஆரம்பித்து விட்டது. என் மகள் பன்களின் நடுவிலிருந்து சிக்கனை மட்டும் எடுத்துச் சாப்பிட்டாள். பன்களுக்கு நடுவில் mayo தடவி, சிக்கன் பர்கர், சிறிது லெடஸ் இலைகள், ஒரு சீஸ் துண்டு வைத்து எப்படி எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, இரண்டு கைகளில் பன்னை பிடித்து வாய்க்குள் திணிக்க, ம்ம்ம். சுவையாக இருந்தது! மெதுவாக டிஸ்ஸு பேப்பரால் வாயை துடைத்துக் கொண்டே, ம்ம்ம். நன்றாக இருக்கிறது என்று பிரைஸ், கோக் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டு இது தான் சிக்கன் பர்கரா என்று சாப்பிட்டு முடித்தோம். இப்படித்தான் பர்கர் மேல் காதலும் வந்தது.

முதன் முதலில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு பீட்ஸா கடைக்கு கூட்டிக் கொண்டு போனார்கள். நானும் என்னுடன் வேலை பார்த்த மற்ற மூன்று நண்பர்களும் கம்பெனி முதலாளியும் ஒரு டேபிளில். குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்க, தண்ணீர் போதும் என்று சொல்லி விட்டு மெனு கார்டை புரட்டிக் கொண்டிருந்தோம். அதைப் படிப்பதற்கே கொஞ்சம் நேரமாகியது. பீட்ஸா எப்படி இருக்கும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று கூட தெரியாது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கம்பெனி முதலாளி எங்கள் அனைவருக்கும் ஆர்டர் செய்தார். அப்பாடா, ஒரு தொல்லை முடிந்தது.

சிறிது நேரத்தில் சுடச்சுட சீஸ் பீட்ஸாவும், சிறிய தட்டுக்கள், டிஸ்ஸு பேப்பர்கள், கத்தி மற்றும் முள்கரண்டி வர, எப்படி முள்கரண்டி வைத்துக் கொண்டு சாப்பிட என்று தெரியாமல் வெட்கமாகி விட்டது.

அதற்குள் கம்பெனி முதலாளி இரண்டு கைகளிலும் வைத்து சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு நண்பர் மட்டும் விடாக் கண்டன், கொடாக்கண்டன் கதையாக கத்தி எடுத்து முள்கரண்டி பிடித்து கஷ்டப்பட்டு பீட்ஸா துண்டுகள் போட எத்தனிக்க, பல படங்களில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்து, யார் மேல் பீட்ஸா பாயப்போகிறதோ என்று பீதியுடன் பயந்து கொண்டே சாப்பிட்டது நல்ல அனுபவம்.

கையை பிசைந்து சாப்பிட்டுப் பழகி விட்டு, நாசூக்காக சாப்பிட கஷ்டமாக இருந்தது ஆரம்ப காலங்களில். பீட்ஸா மேல் போடப்பட்டிருக்கும் வட்ட வட்ட பெப்பரோனியைப் பார்த்து பல சைவ விரும்பிகளும் தக்காளி என்று நினைத்து ஆர்டர் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பீட்ஸா மேல் மிளகாய்த்தூளை தூவி சாப்பிட பிடித்து பிறகு காய்கறிகள் போட்ட பீட்ஸாவும் அருமையாக இருக்க, விதவித பீட்ஸாக்களின் மேல் காதல் வயப்பட்டு பீட்ஸா இல்லையேல் நான் இல்லை என்ற அளவிற்குப் போய் இன்று பீட்ஸாவை விட்டு முடிந்த அளவில் ஒதுங்கியே இருக்கிறேன்!

வெளியிடங்களில் சாப்பிடும் பொழுது அந்த இடங்கள், அங்கு வரும் மனிதர்கள் அவர்களின் நடை, உடை, பாவனைகள், உணவை விரும்பிச் சாப்பிடுபவர்கள், கடமைக்குச் சாப்பிடுபவர்கள், அவதி அவதியாக சாப்பிடுபவர்கள், குடும்பங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இனிமையாக என்று...

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைத்து அதை பின்னாளில் நினைக்கும் பொழுது நம்மையும் அறியாமலே...

ம்ம்ம் இனிமையான நாட்கள் !






Friday, February 7, 2014

இரண்டாம் உலகம்

'இரண்டாம் உலகம்' பற்றிய எனது கட்டுரை 

'இதுதமிழ்' வலைதளத்தில் ...

http://ithutamil.com/?p=3719


பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும்.
கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
Statue of Liberty
வடகிழக்கில் ‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள் செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,
இந்தியர்கள் மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக் கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத் துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,
நீலக்கடலின் பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும் கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம், கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ் மாநிலமும்,
வறட்சியுடன் மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி, பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட் நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக் கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில் கலிபோர்னியா மாநிலமும்,
California
இலையுதிர்காலத்தில் இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,
உலகையே ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப் பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில் செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம் என்றால்,
அட்லான்டிக் கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும், விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும், பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும், பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,
பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,
Minnesotta
அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள், விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச் செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும், பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும் என நிவெடா மாநிலமும்,
உலகின் அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின் திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு அரிசோனா மாநிலமும்,
Grand Canyon
பச்சைப்பசேலென விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா மாநிலமும்,
இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள், பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில் வயோமிங் மாநிலமும்,
என ஒவ்வொரு மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும் இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும் வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன் என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!
Madurai
ஆயிரம் இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத் தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா என்னுடைய இரண்டாம் உலகம்.

Sunday, February 2, 2014

லதா புராணம் #126-150


முகநூல் புராணங்கள்
------------------------------

இன்னார்க்கு இன்னாரென 

இட்ட சிவன் செத்துடலை என 

பாட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்தது   

லதா புராணம் #126


காலையில் 

கண் விழிக்கு முன் 

எழுப்பினால் 

'மகாபாரத' யுத்தமே 

நடக்கும்! 

எச்சரிக்கை விடுத்து

தூங்கச் செல்கிறான்

என் செல்ல 'கும்பகர்ணன்'!

லதா புராணம் #127



வானில் மட்டுமா வெள்ளி முளைக்கும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நம் தலையிலும் தான் 

லதா புராணம் #128



ஊறப்போட்ட அரிசியை சாப்பிடாதே 

உன் கல்யாணத்தன்று மழை கொட்டும்

என சொன்னார்கள்.

அப்படி எல்லாம் நடக்கவே இல்லை 

பெரியவர்கள் சொன்னது பொய் என்று மீண்டும் நிரூபணம் 

லதா புராணம் #129



லதா புராணம் #129 மேம்படுத்தியது  


ஊறப்போட்ட அரிசியை சாப்பிடாதே

உன் கல்யாண நாளில் மழை கொட்டும்

என்றெல்லாம் மிரட்டினார்கள்.

நானும் பார்க்கிறேன்

இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட

அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.

இந்த பெரிசுகள் தாமும் ஏமாந்து

என்னையும் ஏமாற்றியிருக்கிறார்கள்.

ம்ம்ம்ம்ம்ம்

லதா புராணம் #129



போன மச்சான் திரும்பி வந்தான் கதையா

போலார் வொர்ட்டெக்ஸ் மீண்டும்...

லதா புராணம் #130



முன்பெல்லாம் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குப் மணப்பெண்ணை அழைத்துச் செல்லும் பொழுது 

மணப்பெண் அழுது கொண்டே பிரியாவிடை கேட்க, பெற்றவர்களும், உற்றார் உறவினர்களும் கலங்கிய கண்களுடன் வழியனுப்ப ...

சிறிது நேரம் அந்த சூழ்நிலையே சோக கீதம் இழைக்கும்.

பிறகு வந்த வருடங்களில் கொஞ்சம் அழுகுற மாதிரி நடிங்க பாஸ் என்று மாமா, அத்தைகள் கேலி செய்யும் அளவுக்கு மாறி விட்டது. 

ஹி ஹி ஹி !!!!

லதா புராணம் #131




மெல்ல திறந்தது கதவு படத்தில் வருகிற அமலா மாதிரி கண் மட்டும் தெரிய 

ஆல்பனியில் மனித நடமாட்டம் !

உபயம் - ஜனவரி மாத கடுங்குளிர் 

லதா புராணம் #132



பொண்ணு கொஞ்சம் துடுக்குத்தனமா பேசுவா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. 

அப்பா மாமனாரிடம் 

மாமனார் - அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. 'அவங்களே பார்த்துப்பாங்க' !!!

அவர் மகனைப் பத்தி ஒரு வார்த்தை, ம்ஹும் 


லதா புராணம் #133


மகள் 

தங்காள் 

அக்காள் 

இல்லாள் 

லதா புராணம் #134


அன்று

தவழ்ந்தாய் 

தீண்டினாய் 

வருடினாய்

தென்றலாக !


இன்றோ

சீண்டுகிறாய்

சீறுகிறாய்

அறைகிறாய்

கடுங்குளிர் காற்றாக !


லதா புராணம் #135


உனக்கு

கூட்டல் மட்டும் தான் தெரியும்

என முன்பே தெரியாமல் போனதே!

- எடை பார்க்கும் எந்திரம் 

லதா புராணம் #136


என் செல்ல கும்பகர்ணனின் 

'தவத்தை'

கலைக்க 

மனமில்லாமல் 

'கும்பகர்ணி' யானென்   

லதா புராணம் #137



பெற்றோர்கள் சொல்வதை 

மூத்த குழந்தைகளும் 

இளைய குழந்தைகள் சொல்வதை 

பெற்றோர்களும் 

கேட்கும் காலம் 

லதா புராணம் #138


சுதந்திர இந்தியாவில் 

குண்டு துளைக்கும் 

மேடையில் 

சுதந்திரமாக 

உரை 

ஆற்றும் நாள்

மீண்டும் வருமோ?


பெண்கள்

குழந்தைகள்

சுதந்திரமாக

பயமின்றி

வெளியில்

செல்லும் நாள்

என்று வருமோ?


நாட்டின் நலன்

ஒன்றையே

கருதி

நல்வழிப்படுத்தும்

அரசியல் தலைவர்கள்

மீண்டும் வருவாரோ?


ஜாதி, மத, இன

பாகுபாடின்றி

எல்லோரும்

இந்நாட்டு

மக்கள் என

கூடி மகிழ்ந்து

வாழும் நாள்

மீண்டும் வருமோ?




லதா புராணம் #139



பொங்கலுக்குப் பட்டு வேட்டி,சட்டை சகிதம்

பக்கத்து வீட்டு 'அண்ணாச்சி'யான கோபிநாத்

சூட் கோட் போட்டு 'சகோ.கோபிநாத்' ஆக தூரச் சென்று விட்டார்

-நீயா நானா??

லதா புராணம் #140



கலங்கிய கண்களும்

சிவந்த கன்னங்களும்...

நீ

அறைந்ததால் தானே?

- பனிக்குளிர் காற்று!

லதா புராணம் #141



அம்மா, அம்மா அழுது கொண்டே வந்த மகனை ஆதரவாய் அணைத்த அன்னை கேட்டாள்...

என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி தேம்பி தேம்பி அழறே ?

உன்னை யார் என்ன சொன்னாங்க? நீ ராஜா வீட்டு கன்னுகுட்டியாச்செ?

நீ சொல்லி குடுத்ததை தான் நான் சொன்னேன் ம்மா. ஆனா, ஆனா, அதை தப்பு -ன்னு சொல்லி ...

மக்கு-ன்னு எல்லாரும் கை கொட்டி சிரிக்கிறாங்கா ? அந்த வாத்தியார் என்னை எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டார் தெரியுமா?

மீண்டும் அழ ஆரம்பிக்க ...

என் செல்லம் -ல அழக்கூடாது, நல்ல பையன் -ல . அம்மா சொன்னா கேட்டுக்கணும் ...

யாரு மக்கு-ன்னு இவனுங்களுக்கு நாம காட்டுவோம்.

நீ போய் பீட்சாவும், ஐஸ்கிரீமும் சமர்த்தா சாப்பிடுவியாம்.

அம்மா போய் மக்கு-ன்னு சொன்னவங்களை 'ஆப்பு' வச்சிட்டு வருவேனாம். சரியா?

எங்கிட்டேயாவ ...என்று கோபத்துடன் அம்மா வெளியேற ...

'தலையாட்டி பொம்மை'யும் தலையை ஆட்டிக் கொண்டே வேடிக்கைப் பார்க்க ...

ஹையா, சோட்டா பீம் என்று டிவி பார்க்க ஓடினான் அந்த ...

எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா...  


http://www.youtube.com/watch?v=xB_eWW5ttaM


லதா புராணம் #142


கவிஞர் வைரமுத்து நியூயார்க்கில் இன்று இருந்திருந்தால் ...

காற்றே என் வாசல் வந்தாய்
விரைவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
போலர் வொர்ட்டெக்ஸ் என்றாய்...

என்று தான் எழுதியிருப்பார் !!!!

லதா புராணம் #143



என்ன, பெரிய ஹரிச்சந்திரன் -ன்னு நெனைப்பா?
-நானும், எடை பார்க்கும் எந்திரமும்  

லதா புராணம் #144


துணிக்கடை பொம்மை

உடுத்தியிருந்த சேலையில்

பொம்மை ஆனாள் அவள் !

லதா புராணம் #145


முயல் பாய்ச்சலில் ஏறும் விலையும்

ஆமை நடையில் இறங்கும்.

இது 'தங்க'த்திற்கு !


பவுண்டு பவுண்டாகா ஏறும் எடையும்

அவுன்சு அவுன்சாக இறங்கும்.

இதுவும் 'தங்க'த்திற்கே !

லதா புராணம் #146



சத்தமில்லா முத்தத்தில்

கன்னங்கள் சிவக்க

உறைந்து நின்றாள்

அவள் !

லதா புராணம் #147


லதா'ஸ் முதலாம் விதி
----------------------------------
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, வாய்க்கட்டுப்பாடு தேவை.

லதா'ஸ் இரண்டாம் விதி
------------------------------------
சாப்பாடு டைரக்ட்லி ப்ரோப்போர்ஷனல் டு வெயிட்டு.

லதா'ஸ் மூன்றாம் விதி
---------------------------------
ஒவ்வொரு இனிப்பு சாப்பிடும் போது இனிப்பின் எடையுடன் பிற எதிர் எடைகளும் கூடும்.

லதா புராணம் #148


தந்தைக்கும்

தனையனுக்கும்

இடையில்

'பஞ்சாயத்து தலைவி'யும்

ஆகிறாள்

தாய்!

லதா புராணம் #149



நொடி

முகநூல்

பயணம்

சடுதியில்

பரோட்டா

மரணம்

- தீஞ்ச பரோட்டா

லதா புராணம் #150

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...