'இரண்டாம் உலகம்' பற்றிய எனது கட்டுரை
'இதுதமிழ்' வலைதளத்தில் ...
http://ithutamil.com/?p=3719
'இதுதமிழ்' வலைதளத்தில் ...
http://ithutamil.com/?p=3719
பரப்பளவில்
இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும்
கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க
வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை
வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும்
தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும்
அதிசயத்தில் ஆழ்த்தும்.
கனடாவில்
இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய்
பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச்
சொல்லவே வேண்டாம்.
வடகிழக்கில்
‘ஜோ’ வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா
நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய,
அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள்,
சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நகரத்தின் நடுவே இயற்கை
எழிலுடன் அமைதி தவழும் பூங்காக்கள், வித விதமாய் பல்வேறு மொழிகளைப் பேசும்
மக்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களே நேரில் வந்து விட்டதைப் போல் ஆடையணிந்து
நகர்வலம் வரும் மனிதர்கள், உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவியின் சிலை, ஒரே
நாளில் ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாக்கும் தந்திரங்கள்
செய்யும் வால்ஸ்ட்ரீட் , அமெரிக்க மண்ணில் அமைந்த முதல் இந்தியக் கோவில் என
வடகிழக்கு மாநிலத்தில் நியூயார்க் என்றால்,
இந்தியர்கள்
மட்டும்தான் இங்கு வாழ்கிறார்களோ என்று நினைக்க வைக்கும் ஓக் ட்ரீ
சாலையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின்
அனைத்துப்பகுதி மக்களுக்காகவே திறந்திருக்கும் நகை, துணி, பலசரக்குக்
கடைகள், விதவிதமான உணவகங்கள் , இனிப்புக் கடைகள், பீடா சாப்பிட்டுத்
துப்பிய கறையுடன் ரயில் நிலையங்கள் என நியூஜெர்சி மாநிலமும்,
நீலக்கடலின்
பின்னணியில் நகரங்களுக்கே உரிய பிரம்மாண்ட அழகுடன் ஜொலிக்கும்
கட்டிடங்கள், நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு டோனட், ஐஸ்கிரீம்,
கேக் கடைகள், நகர்வலத்தில் பழமையையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும்
கட்டிடங்கள், நகரின் நடுவில் பச்சைப் பசேலென பூங்காக்களும் என மாசசூசெட்ஸ்
மாநிலமும்,
வறட்சியுடன்
மலைகளும், அழகிய பசிபிக் கடலோர நகரங்களும், ஆயிரக்கணக்கான வருடங்களாக
ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மரங்களைக் கொண்ட காடுகளும், காய்கறி,
பழத்தோட்டங்களும், குழந்தைகள் கண்டு களிக்க டிஸ்னிலேண்டும் , ஹாலிவுட்
நடிகநடிகையர்கள் வலம் வரும் இடங்களும், மனதைப் பறிக்கும் பசிபிக்
கடற்கரையும், கடலோரப் பாலங்களும், கடல் வாழ் உயிரினங்களும் என தென்மேற்கில்
கலிபோர்னியா மாநிலமும்,
இலையுதிர்காலத்தில்
இயற்கைத் தேவன் தீட்டிய வண்ண ஓவியமாகவும், பனிக்காலத்தில் வெண்பட்டு
உடுத்திய தேவதையாகவும் கண்ணைக் கவரும் மலைகள் கொண்ட வெர்மான்ட் மாநிலமும்,
உலகையே
ஆட்டிப் படைக்கும் ஜனாதிபதியின் மாளிகை, பல உள்நாட்டு வெளிநாட்டு
விவகாரங்களில் தலையிட்டு முஷ்டி தூக்கி முடிவெடுக்கும் அமெரிக்கப்
பாராளுமன்றம், வரலாற்றைப் பறைச்சாற்றும் நினைவுச் சின்னங்கள், போரில் இறந்த
வீரர்களின் கல்லறைகள், நூலகம் என்று பலவித கட்டிடங்கள் , மழைக்காலத்தில்
செர்ரி மரங்களில் அரும்பும் பூக்களின் கொள்ளை அழகுடன் வாஷிங்டன் நகரம்
என்றால்,
அட்லான்டிக்
கடலோர அழகு கொஞ்சும் மாநிலங்களும், வெள்ளை மணல் கொண்ட பீச்சுகளும்,
விதவிதமான பனைமரங்களும், பணக்காரர்களின் சொகுசு பங்களாக்களும்,
பண்ணைத்தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரித்
தோட்டங்களும், சதுப்புநிலக் காடுகளும், அதனுள் வாழும் விலங்கினங்களும்,
பணியிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கியவர்களும், ‘விர்விர்’ என்று
சூறாவளியாகப் பறக்கும் கார், பைக் ரேஸ்களும், குழந்தைகளுடன் குதூகலிக்க
டிஸ்னி உலகமும் என்று ப்ளோரிடா மாநிலம் தென்கிழக்கில்,
பத்தாயிரம் ஏரிகளைக் கொண்டு பாதி வருடம் குளிரும், பனியுமாக மின்னெசோட்டா மாநிலமும்,
அமெரிக்காவில் கார் என்றவுடன் நினைவுக்கு வருவதும் கிரேட் லேக்ஸ் என்று கடல் மாதிரி விரிந்த ஏரிகளும் கொண்ட மிச்சிகன் மாநிலமும்,
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் நின்ற மிட் ராம்னி பிறந்த ஊரும், மார்மன் என்ற
கிறிஸ்துவப் பிரிவினர் வாழும் அமைதியான பல இயற்கைப் பொக்கிஷங்களைத்
தன்னகத்தே கொண்ட மலைகளும், ஏரிகளும், இந்நாட்டிலே மிகப் பெரிய ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா கோவிலையும் கொண்ட யூட்டா மாநிலமும்,
குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும் பல விதமான கேளிக்கைகள்,
விருந்துகள் , கொண்டாட்டங்கள், உலகில் பெயர்பெற்ற கட்டிடங்களைச்
செயற்கையாக உருவாக்கி வண்ண விளக்குகளின் ஜொலிப்பில் பார்ப்பவரைக் கொள்ளை
கொள்ளும்- இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் போடும் விடிவெள்ளி நகரமும்,
பொறியியலில் சாதனை என்று போற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்த அணைக்கட்டும்
என நிவெடா மாநிலமும்,
உலகின்
அதிசயங்களுள் ஒன்றான பள்ளத்தாக்குகள் – பல்லாயிரக்கணக்கான வருட இயற்கையின்
திருவிளையாடல்களையும், பல விதமான சப்பாத்திக்கள்ளி மரங்களையும் கொண்டு
அரிசோனா மாநிலமும்,
பச்சைப்பசேலென
விளைநிலங்களும், மலைகளும் , ஆறு, ஏறி, குளங்களும், பனிப்பாளங்களுடன் கூடிய
மலைகளும், குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்டு வடமேற்கில் மொன்டானா
மாநிலமும்,
இயற்கை
எழில் கொஞ்சும் மரங்கள், விலங்கினங்கள் , இயற்கைச் சுடுநீர் ஊற்றுகள்,
பூமியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் லாவா எரிமலைகள் என்று வடமேற்கில்
வயோமிங் மாநிலமும்,
என ஒவ்வொரு
மாநிலமும் குளிர், கடுங்குளிர், பனிமழை, சூறாவளி, மழை, காட்டுத்தீ, வறட்சி
என தட்பவெப்ப நிலையிலிருந்தும், உண்ணும் உணவிலிருந்தும், கேட்கும்
இசையிலிருந்தும், பேச்சு வழக்குகளிலிருந்தும், பலவிதமான குடிமக்களுடனும்
வேறுபட்டு நின்றாலும் ஒவ்வொருக்குள்ளும் நிறைந்திருக்கும் அமெரிக்கன்
என்கிற பெருமித உணர்வே இந்த நாட்டை இன்னும் மேலானதாக, பெருமையுடைய நாடாக
நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.!
ஆயிரம்
இருந்தாலும் என் தாய்நாட்டிற்கு அப்புறம்தான் எதுவும் என்பதில் எனக்கு
எப்போதும் இரண்டாம் கருத்து இல்லை. அந்த வகையில் தனக்குள்ளே பன்முகத்
தன்மையுடைய ஐம்பது மாநிலங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கும் அமெரிக்கா
என்னுடைய இரண்டாம் உலகம்.
No comments:
Post a Comment