Tuesday, February 11, 2014

முதல் முதலாக முதல் முதலாக ...

உண்பதில் நாட்டம் உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும் அந்த ஊரில் எந்த உணவு நன்றாக இருக்கும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கும்.

கனடா வந்த புதிதில் ஒரு கடையை கடந்து சென்றாலே பருப்பு வடை வாசனை தூக்க, நூலகம் எதிரில் இருந்த பர்கர்கிங்கில் என்ன தான் விற்கிறார்கள் என்ற ஆர்வமிகுதியில் உள்ளே போனால் சிறிய வரிசையில் ஆர்டர் கொடுக்க மக்கள் காத்திருந்தார்கள்.

நாலைந்து டேபிள்களில் தனியாகவோ, குழந்தைகளுடனோ கையில் பன், அதற்குள் ஏதோ ஒரு இலை (lettuce -லெடஸ், லெட்டுயூஸ் சரியான உச்சரிப்பல்ல என்று என் வாண்டுகள் கிண்டலடிக்கும்), ஒரு கறித்துண்டு, நடுவில் ஒரு சீஸ் துண்டு வைத்து வாய் நிறையக் கடித்துச் சாப்பிடுவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு நிமிடத்திற்கொரு முறை வாயை துடைத்துக் கொள்வதும், நடுநடுவே கோக் குடிப்பதையும், பிரெஞ்சு பிரைஸ் எடுத்து கெட்ச் அப்பில் தோய்த்துச் சாப்பிடுவதையும், பார்த்து நாமும் இன்று இந்த பர்கரை சாப்பிட்டு விட வேண்டும் என்று நானும் என் மகளும் அந்த வரிசையில் ஐக்கியமானோம். என் முன் உள்ளவர்கள் எப்படி என்ன ஆர்டர் செய்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருந்தேன்.

உணவு வகைகளின் பெயர்களை எழுதி விலையுடன் பட்டியல் போட்டு அனைவரும் பார்க்கும் வண்ணம் வைத்திருந்தார்கள். அதை படிப்பதற்குள் என்ன, எப்படி ஆர்டர் செய்வது என்று தெரியாமல் கையில் அப்போது இருந்த காசிற்கு ஒரு சின்ன பிரெஞ்சு பிரைஸ் மட்டும் வாங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

கவுன்டரில் இருப்பவர்கள் கீறல் விழுந்த ரெக்கார்டர் மாதிரி எல்லோரிடமும், 'Hi, what would you like to order' என்று கேட்டு கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்த பாஷை புரிய பல மாதங்கள் ஆகியது *:( sad என் முறை வரும் பொழுது நானும் போர்டில் இருந்த நம்பரைச் சொல்லி அதை சுட்டிக் காட்ட, அவளும் திரும்பி பார்த்து small fries? என்று கேட்டு விலையைச் சொல்ல, நானும் பணத்தை கொடுத்து விட்டுப் பார்க்க, 'here or to go' என்று கேட்க, எனக்கு புரியாமல் விழிக்க, mam, do you want it here என்று மீண்டும் எனக்குப் புரியற மாதிரி அழுத்திச் சொல்ல, oh, 'here' என்று சொன்னவுடன் ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில், ஒரு சின்னக் கப்பில் கெட்ச்அப்-புடன் வைத்துக் கொடுத்தார்.

அவர் என்னை வித்தியாசமாக பார்ப்பதாக தோன்றியது எனக்கு!

இனிமேல் எப்படி ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். என் மகளுக்கும் எனக்கும் அன்று முதல் பிரெஞ்சு பிரைஸ் மேல் தீராக் காதல். எண்ணையில் பொரித்த உருளைக்கிழங்கு சீவல். கசக்கவா செய்யும்? அதில் ஏதோ ஒருவித கொழுப்பு சேர்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதோடு சரி *:( sad இப்போது அதுவும் கிடையாது *:( sad

முதல் முறை நானும்,என் கணவரும் டொரண்டோவில் ஒரு ரெஸ்டாரெண்டில் 'Fish & Fries' ஒன்று ஆர்டர் செய்தோம். அது எப்படி இருக்கும் என்று தெரியாமல், பிஷ் என்று இருக்கிறது நன்றாகத் தான் இருக்கும் என்று ஆர்டர் பண்ணி விட்டு என்ன வரப் போகிறதோ என்று எதிர்பார்ப்புடன் இருக்க, எங்கள் எதிர்ப்பார்ப்பு வீணாகவில்லை. முள்ளில்லாத, நீளவாக்கில் அறுத்த மீனை மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்தெடுத்த நான்கைந்து மீன்துண்டுகள், பிரைஸ், கெட்ச் அப், ப்ளூ சீஸ் என்று தட்டு நிறைய பார்த்தவுடன்..ம்ம்ம். சுவையாக இருந்தது. அன்று முதல் ப்ளூ சீஸிற்கும் அடிமையாகி விட்டது என் நாக்கு *:) happy பல இடங்களில் சாப்பிட்டும் அந்தச் சுவை மட்டும் கிடைக்கவில்லை.

பின்னொரு நாளில் அமெரிக்கா போவதற்கு விசா வாங்கி விட்டு, டொராண்டோவில் ஒரு ரெஸ்டாரெண்டில் குடும்ப சகிதம் போய் முதல் முறையாக சிக்கன் பர்கர் ஆர்டர் செய்தோம். would you like mayo என்று கேட்ட போது அது என்னது என்று தெரியாமல் விழிக்க, அவளிடம் கேட்க வெட்கப்பட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள்மீண்டும் எங்களிடம் mayonise என்றாள். ம்ம்ம்.அது என்ன என்று தெரிந்தால் தான் சொல்லியிருப்போமே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, எஸ் எஸ் என்று தலையை ஆட்டி விட்டு, அய்யோயோ என்னத்தை கொண்டு வந்து தரப் போறாளோ என்று பயந்து கொண்டே அந்த கூட்டத்தில் நாங்கள் மட்டும் தனியாக இருப்பது போன்ற உணர்வுடன் காத்திருந்தோம்!

பர்கர் கேட்டாலும் பிரைஸ், கோக் கூடவே அழையா விருந்தாளியாக வந்தது. அப்பாடா பர்கர் பிடிக்கவில்லை என்றாலும் பிரைஸ் சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று மனம் கணக்கு போட ஆரம்பித்து விட்டது. என் மகள் பன்களின் நடுவிலிருந்து சிக்கனை மட்டும் எடுத்துச் சாப்பிட்டாள். பன்களுக்கு நடுவில் mayo தடவி, சிக்கன் பர்கர், சிறிது லெடஸ் இலைகள், ஒரு சீஸ் துண்டு வைத்து எப்படி எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, இரண்டு கைகளில் பன்னை பிடித்து வாய்க்குள் திணிக்க, ம்ம்ம். சுவையாக இருந்தது! மெதுவாக டிஸ்ஸு பேப்பரால் வாயை துடைத்துக் கொண்டே, ம்ம்ம். நன்றாக இருக்கிறது என்று பிரைஸ், கோக் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டு இது தான் சிக்கன் பர்கரா என்று சாப்பிட்டு முடித்தோம். இப்படித்தான் பர்கர் மேல் காதலும் வந்தது.

முதன் முதலில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு பீட்ஸா கடைக்கு கூட்டிக் கொண்டு போனார்கள். நானும் என்னுடன் வேலை பார்த்த மற்ற மூன்று நண்பர்களும் கம்பெனி முதலாளியும் ஒரு டேபிளில். குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்க, தண்ணீர் போதும் என்று சொல்லி விட்டு மெனு கார்டை புரட்டிக் கொண்டிருந்தோம். அதைப் படிப்பதற்கே கொஞ்சம் நேரமாகியது. பீட்ஸா எப்படி இருக்கும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று கூட தெரியாது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கம்பெனி முதலாளி எங்கள் அனைவருக்கும் ஆர்டர் செய்தார். அப்பாடா, ஒரு தொல்லை முடிந்தது.

சிறிது நேரத்தில் சுடச்சுட சீஸ் பீட்ஸாவும், சிறிய தட்டுக்கள், டிஸ்ஸு பேப்பர்கள், கத்தி மற்றும் முள்கரண்டி வர, எப்படி முள்கரண்டி வைத்துக் கொண்டு சாப்பிட என்று தெரியாமல் வெட்கமாகி விட்டது.

அதற்குள் கம்பெனி முதலாளி இரண்டு கைகளிலும் வைத்து சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு நண்பர் மட்டும் விடாக் கண்டன், கொடாக்கண்டன் கதையாக கத்தி எடுத்து முள்கரண்டி பிடித்து கஷ்டப்பட்டு பீட்ஸா துண்டுகள் போட எத்தனிக்க, பல படங்களில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்து, யார் மேல் பீட்ஸா பாயப்போகிறதோ என்று பீதியுடன் பயந்து கொண்டே சாப்பிட்டது நல்ல அனுபவம்.

கையை பிசைந்து சாப்பிட்டுப் பழகி விட்டு, நாசூக்காக சாப்பிட கஷ்டமாக இருந்தது ஆரம்ப காலங்களில். பீட்ஸா மேல் போடப்பட்டிருக்கும் வட்ட வட்ட பெப்பரோனியைப் பார்த்து பல சைவ விரும்பிகளும் தக்காளி என்று நினைத்து ஆர்டர் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பீட்ஸா மேல் மிளகாய்த்தூளை தூவி சாப்பிட பிடித்து பிறகு காய்கறிகள் போட்ட பீட்ஸாவும் அருமையாக இருக்க, விதவித பீட்ஸாக்களின் மேல் காதல் வயப்பட்டு பீட்ஸா இல்லையேல் நான் இல்லை என்ற அளவிற்குப் போய் இன்று பீட்ஸாவை விட்டு முடிந்த அளவில் ஒதுங்கியே இருக்கிறேன்!

வெளியிடங்களில் சாப்பிடும் பொழுது அந்த இடங்கள், அங்கு வரும் மனிதர்கள் அவர்களின் நடை, உடை, பாவனைகள், உணவை விரும்பிச் சாப்பிடுபவர்கள், கடமைக்குச் சாப்பிடுபவர்கள், அவதி அவதியாக சாப்பிடுபவர்கள், குடும்பங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இனிமையாக என்று...

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைத்து அதை பின்னாளில் நினைக்கும் பொழுது நம்மையும் அறியாமலே...

ம்ம்ம் இனிமையான நாட்கள் !






4 comments:

  1. பீட்ஸாவையும், பர்கரையும் - வாயை அகலத் திறந்து உள்ளே அமுக்கும் கலையை மேலை நாட்டவர்களிடம் இருந்து தான் கற்க வேண்டும்! நமக்கு இட்லி / தோசை விள்ளல்களை உள்ளே தள்ளித் தான் பழக்கம் என்பதால், பர்கர் / பரிட்டோ போன்ற உணவு வகைகளை, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம் தான்! அட்லீஸ்ட் என்னைப் பொறுத்தவரை! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik - எனக்கும் குழந்தைகள் முதற்கொண்டு எப்படி சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுகிறார்கள் என்ற ஆச்சரியம் இருந்ததுண்டு :) பர்கரை நடுவில் கட் செய்து இரண்டு பீஸாக எளிதாக சாப்பிடலாம் என்றும் தெரிந்து கொண்டேன் :)

      Delete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...