மஹா சிவராத்திரி என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது சிறுவயதில் அரசமர பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடக்கும் சிவராத்திரி கொண்டாட்டங்கள் தான்!
சிவராத்திரியை முன்னிட்டு காமராஜர் சாலையில் இருக்கும் இந்தக் கோவிலின் முன் பந்தல் போட்டு இரவு எட்டு மணிமுதல் போக்குவரத்தை முனிச்சாலையிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாகத் திருப்பி விட்டு மேடையும் கச்சேரியுமாக அந்த இடமே 'கலகல'வென்று மாறி விடும்.
ஒரு பெரிய அரசமரத்தின் கீழ் அழகான பிள்ளையார். அவருக்குப் பின்னால் மயில் வாகனத்தில் முருகன். சில நாக தெய்வங்கள். வெள்ளி/தங்க அலங்காரத்துடன் பிள்ளையார் தரிசனம் பார்த்து உருகுபவர்கள் அநேகம் பேர்!
தேங்காய், பழம், அர்ச்சனைத் தட்டு, பூ விற்பவர்கள் என்று பலரும் அவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்! இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்!
அந்தச் சிறு இடத்தில் பல கடைகள்! ஆலமரத்தைச் சுற்றி வருவதற்குள் நெல்லிக்காய், கொடுக்காய்ப்புளி, மாங்காய் விற்கும் பாட்டி , பூ விற்கும் பெண், எதிரில் காபிக்கடை, சுடச்சுட வடை, பஜ்ஜி போட்டு வியாபாரம் செய்பவர் என்று ஒரு சின்னஞ்சிறு உலகமே அவரைச் சுற்றி!
தினமும் காலையில் அபிஷேகங்களுடன் ஆரம்பித்து மலர் மாலைகளுடன் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் பிள்ளையார்.
காலை வேளைகளில் பொதி மூட்டைகளைச் சுமந்து செல்லும் மாணவர்கள் நான் நல்லா படிக்கணும் என்று தலையில் குட்டிக் கொண்டே விபூதி பூசிக் கொண்டு நடையைக் கட்டுவதும், சைக்கிளில் செல்பவர்கள் ஒரு கால் தரையிலும் ஒரு கால் சைக்கிளிலும் வைத்துக் கும்பிட்டுக் கொண்டே கடந்து செல்வதும், கடையைத் திறக்கு முன் நல்ல லாபம் பார்த்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டே கடை முதலாளிகளும், பைக்கிலும், ஸ்கூட்டரிலும் செல்பவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டும், பேருந்தில் இருந்தே தரிசிப்பவர்களும் என்று பரபரப்பான அந்த நேரத்திலும் இரண்டு நிமிடம் நின்று அவர் ஆசியைக் கோருபவர்கள் ஏராளம்!
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு காய்கறி வாங்க வரும் பெண்களின் கூட்டம் காலை நெரிசலுக்குப் பிறகு சாவகாசமாக வந்து தங்கள் மனக் குமுறல்களைச் சொல்லி வணங்கிச் செல்வார்கள்!
செவ்வாய், வெள்ளிகளில் கேட்கவே வேண்டாம். காலை, மாலை என்று நல்ல கூட்டம் வரும். சிதறு தேங்காய் உடைப்பவர்களின் கையைப் பார்த்துக் கொண்டே நாலா பக்கமும் சிதறி ஓடும் தேங்காயை பிடிக்க ஒரு கும்பல்!
இப்படித் தன்னைச் சுற்றி நடப்பவைகளை அமைதியாக உட்கார்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிவராத்திரியை ஒட்டி கோலாகலமாகப் பத்து நாட்களுக்குத் திருவிழாவே கொண்டாடி விடுவார்கள்.
இதற்காக ஒரு குழு (அரசமரம் இயல், இசை, நாடகக் குழு???) நன்கொடை வசூலிப்பதற்காக ஒரிரு மாதங்கள் முன்னமே அந்த ஏரியாக்களில் வலம் வர ஆரம்பிப்பார்கள். பந்தல் போட்டவுடனே திருவிழா களை கட்டிவிடும். ஒலிபெருக்கியில் கடவுள் பாடல்களுடன், பழைய, புதிய பாடல்கள் என ஆரம்பித்து அன்றைய தேதியில் பிரபலமான பாடல்கள் வரை மக்கள் கேட்டு ரசிக்கும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருக்கும்.
அவ்வளவாக மாடி வீடுகள் இல்லாத காலம். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்தே நிலா வெளிச்சத்தில் நட்சத்திரக் கூட்டங்களுடன் பல இரவுகளில் கச்சேரிகளை கேட்டு ரசித்திருக்கிறோம்.
மிகவும் பிரபலமான குழு வருகிறது என்றால் மட்டுமே மேடை அருகில் போய் பார்த்து விட்டு வருவது வழக்கம்.
கான்பாளையம், லட்சுமிபுரம், காமராஜர் சாலையில் இருப்பவர்கள் நித்தம் ஓர் அலங்காரம் என்று விநாயகர் தரிசனத்தைக் கண்டு களிப்பார்கள். திருவிழாவுக்கே அழகு சேர்க்கும் பலூன், கடலை, முறுக்கு, அதிரசம், ஜவ்வு மிட்டாய் விற்பவர்களும் என்று குழந்தைகள் புடை சூழ இரவு நேரங்களில் அந்த இடமே அல்லலோகப்படும்.
சிவராத்திரி விழாவில் தினமும் பாட்டுக்கச்சேரி, வில்லுப்பாட்டு, சொற்பொழிவு என்று இரவு வரை நீடிக்கும் தினங்கள் குதூகலமானவை. பாட்டியுடன் விழா ஆரம்பிக்கும் முன்பே போய்ச் சாலையில் போட்டிருக்கும் ஜமக்காளத்தில் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு கச்சேரி கேட்ட காலங்கள் எல்லாம் இனி வாரா.
ஒரு முறை TMS வந்து ரசிகர்களின் விருப்பப் பாடல்களைப் பாடி கூட்டத்தை ஆர்ப்பரிக்க வைத்தார். நடிகையும் பாடகியுமான வரலட்சுமியும் வந்து பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதக் கச்சேரிகள், சொற்பொழிவுகள்!
விழா முடிந்தவுடன் அவரவர் கொடுத்த நன்கொடைக்கு ஏற்ப அடுத்த நாள் காலையில் சுடச்சுட கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வெண் பொங்கலுக்கும் முண்டியடித்துக் கொண்டு அந்தப் பகுதி மக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த நாளில் அனைவர் வீட்டிலும் காலைச் சாப்பாடே கோவில் பிரசாதம் தான்
ஒரு சிறு கோவிலைச் சுற்றி நடக்கும் இந்த மாதிரி திருவிழாக்கள் தான் அந்த காலத்தில் பிரபல்யம். மக்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து அவர்கள் வீட்டு விசேஷம் போல் கலந்து கொள்வதில் பேரானந்தம்.
திருவிழாக்களைப் பற்றி மதுரை மக்களுக்குச் சொல்லித் தரவேண்டுமா?
பெரியவர், சிறியவர், எளியவர், செல்வந்தர் என எந்தவித சாதி பேதமில்லாமல் அனைவரும் இன்புற்றிருந்த அந்த நாட்கள் எல்லாம் வருடங்கள் பல கடந்தும் இன்றும் என்றுமே இனிமையான இளமையான நாட்கள்!
arumaiyana pathivu... Excellent Swarna...
ReplyDeleteநன்றி, அருணா :)
ReplyDeleteஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை, அன்றைய மனிதர்களின் ரசனையை, அதனூடே நீங்கள் அனுபவித்தவைளை பாசாங்கில்லாத எளிமையான மொழியில் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். பள்ளி நாட்களில் சுற்றித் திரிந்த பகுதி என்பதால் எனக்கும் அந்த வாழ்கையோடு கொஞ்சம் தொடர்புண்டு. :)
ReplyDeleteநன்றி, சரவணன். அப்படி ஒரு வாழ்க்கையை அனுபவிக்க முடிந்ததே-ன்னு ஒரு சின்ன சந்தோஷம் :)
Deleteமிக்க நன்றி, தனபாலன் :)
ReplyDeleteராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி, தனபாலன்.
ReplyDelete