Thursday, December 1, 2016

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை...

கோடையில் ஒரு மாலை நேரம். சமையலறையில் நான் எதையோ உருட்டிக் கொண்டிருக்க, சங்கீத ஸ்வரங்கள் காதில் இன்னிசையாய் பாய, வேலையை விட்டுவிட்டு கதவைத் திறந்து பார்த்தால் மரத்தின் உச்சியில் மிகச்சிறிய பறவை ஒன்று அழகான குரலில் விசிலடித்துப் பாடி நிறுத்த, மறுகணம் வேறு மரத்தின் உச்சியில் இருந்து பதிலாக அவளின் இனிய குரலில் ஒரு தேவகானம்! தொடர்ந்து மாறி மாறி பாடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பறந்து பறந்து மரங்களை மாற்றினாலும் பாடுவதை மட்டும் நிறுத்தவில்லை அவர்கள் இருவரும்.

ஆனந்த ராகம் என்பது அது தானோ? அவ்வளவு இனிமை அவர்களின் குரலில்! கோல்ட் ஃபின்ச் பறவைகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மஞ்சள் உடம்பும் கருப்பு மற்றும் சாம்பல் நிற சிறகுகள் கொண்ட அழகான வண்ணப் பறவைகள்!

அடர் மஞ்சள் நிறத்தில் தலையில் கருப்பு குல்லாய் போட்டுக் கொண்டிருக்கும் ஆண் பறவை உருவத்தில் பெண் பறவையை விட சிறிது பெரியதாக இருக்கும். வண்ணம் குறைந்த பெண் பறவை மிகச் சிறியதாக இருக்கும்.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், கோல்ட் ஃபின்ச் குரலைக் கேளாதவர் என்றால் மிகையில்லை. பறவைகளை  கண்டால் எண்ணங்கள் சிறகு விரிக்கிறது.

அப்பறவைகளைப் பற்றி அறிந்து கொண்டவுடன் அவர்களுக்கான feeder-ம், விதைகளும் வாங்கி காத்திருந்ததில் ஒரு வாரம் கழித்தே எங்கள் பகுதிக்கு வந்தது. இன்று ஐந்தாறு பறவைகள் வந்து செல்கிறது. வசீகரிக்கும் குரலுக்காகவும், வண்ணத்திற்காகவும் மிகவும் ரசிக்கப்படும் இப்பறவைகளின் இன்னிசை கானத்தில் நனைய ஆவலுடன் காத்திருக்கிறேன்!

ஓய்வெடுக்கச் சென்றவர்கள் என்று திரும்புவார்களோ?

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ....


Sunday, November 20, 2016

விழுப்பம் தரும் கொழுப்பு

சொல்வனம்
 | இதழ் 160 | 30-10-2016


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் சமூகத்தின் இணைய பங்களிப்பு என்பது வியத்தகு எல்லைகளைத் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. தமிழர்களைப் போல சமூகவலைத்தளங்களில் உயிர்ப்புடன் இயங்கும் பிற இனக்குழுக்களையும் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.சாட் ரூம், மெசஞ்சர்கள், வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லைகள் விரிய விரிய தமிழின் ஊடான கருத்தாடல்கள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உடல்நலம், சமூகம், அரசியல், கலை,விமர்சனம், விவாதங்கள் என பல்வேறு தளங்களில் புதிதுபுதிதான கட்டுடைப்புகளையும், கதவுகளையும் திறந்து கொண்டே இருக்கிறது. தமிழையொத்த வயதுடைய வேறெந்த மொழியிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடந்த 2013ம் வருடத்தில் வெறும் ஐம்பது அறுபது உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் உணவுக் குழுமம் ஒன்றில் நண்பரால் இணைக்கப்பட்டேன். சமையல் குறிப்புகளை பகிரும் இன்னொரு குழுமம் போல என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைக்கு அந்த குழுமத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக அந்தக் குழுவின் தன்னார்வலர்கள் இணையவெளியைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வெகுசன ஊடகங்களோ ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் செயல்பாடுகளையும் அதன் விளைவுகளையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதே வேகத்தில் இந்தக் குழுமத்தின் செயல்பாடுகள் தொடருமானால் அடுத்த சிலவருடங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்க்கையை, உடல்நலத்தை, உணவுக்கலாச்சாரத்தை புரட்டிப்போட்ட குழுமமாக அந்த குழுமம் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது.

கோவையில் பிறந்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரியும் “நியாண்டர்” செல்வன் என்பவரால் ஆதி மனிதனின் உணவு பழக்கங்களை முன்னிறுத்தித் துவங்கப்பட்ட இந்த குழுமத்தின் பெயர் “ஆரோக்கியம்&நல்வாழ்வு”. எல்லோருக்கும் புரிகிற மாதிரிச் சொன்னால் “பேலியோ டயட்” க்ரூப்.
கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.

Robert C. Atkins என்கிற இதயநோய் மருத்துவர் கடந்த 1972ம் ஆண்டில் தன்னுடைய நோயாளிகளின் உடல் பருமனைக் குறைப்பதற்காக தற்போதைய பேலியோ டயட்டின் முன்னோடியான உணவுமுறையை உருவாக்கினார். அதாவது நிறைய கொழுப்பு, ப்ரோட்டீன் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவு. இது நல்ல பலனைத்தர “அட்கின்ஸ் டயட்” பிரபலமானது. இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. கூடுதலான புரோட்டீன் சிறுநீரகத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்பது போல பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் அட்கின்ஸ் டயட் பரவலாக தடையாக இருந்தது. எனினும் கடந்த முப்பது ஆண்டுகளாய் நடந்த தொடர்ச்சியான ஆய்வுகளில் அட்கின்ஸ் டயட் பலவகையிலும் மேம்படுத்தப்பட்டு தற்போதைய வடிவத்தில் இருக்கிறது. அதாவது ”நிறைய கொழுப்பு, மிதமான புரோட்டீன், மிகக் குறைவான கார்போஹைட்ரேட் கூடுதலாக உடலுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துக்கள்.”

அதெப்படி நிறைய கொழுப்பைச் சாப்பிடுவது. இரத்த அழுத்தம் எகிறி ஹார்ட் அட்டாக் வந்துவிடுமே என்கிற கவலையும், கேள்வியும் எல்லோருக்குள்ளும் வருவது இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு பதிலாக, காலம் காலமாய் நம் உடலுக்கு எது நல்லது என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோமோ அதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் அறிவியலை புரிந்து கொள்ளச் சொல்கிறார் செல்வன். நமது உணவின் வரலாறு என்பது பசியில் துவங்கியிருந்தாலும் இன்றைக்கு அது ருசி சார்ந்த ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது. நாவின் ருசிக்கு அடிமையானதால் உடலுக்குத் தேவையானது என்பதைத் தாண்டி, நாவின் சுவை நரம்புகளை திருப்திப்படுத்துவதாக இன்றைய நமது உணவுகலாச்சாரம் ஆகிவிட்டிருக்கிறது. இந்த பலவீனத்தை மூலதனமாக வைத்து பலன் அடைபவர்கள் இரண்டே பேர்தான், ஒன்று பெப்சி மாதிரியான உணவுப்பொருட்களை தயாரிக்கும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள். மற்றவர்கள் மருத்துவத் துறையினர். நம்முடைய வாழ்நாள் உழைப்பின் பெரும்பகுதியை நாம் இவர்களிடம்தான் இழந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் கசப்பான உண்மை என்கிறார்.

நமது உடல் இயக்கத்திற்கு இரண்டு வகையான எரிபொருட்களில் இயங்கும் தன்மையுடையது. ஒன்று மாவுச்சத்து எனப்படும் கார்போ ஹைட்ரேட், மற்றது கொழுப்பு. அரிசி, கோதுமை, பருப்பு, சிறுதானியம் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பியவை. இத்தோடு பால் பொருட்கள், எண்ணைகள் மற்றும் அசைவ உணவுகளின் வழியே கொழுப்பையும் எடுத்துக் கொள்கிறோம். நமது அன்றாட உணவில் மாவுச்சத்தின் விகிதம் அதிகமாய் இருப்பதால் அதுவே நம் உடலின் பிரதான எரிபொருளாக இருக்கிறது. உடலின் தேவைக்கேற்ப கார்போ ஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடல் இயங்கியலுக்கு வழங்கப்படுகிறது. உடலின் அன்றாடத் தேவைக்குப் போக மீதமிருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறுபகுதிகளில் சேகரித்து வைக்கப் படுகிறது. இதனால் தேவைக்கு அதிகமாய் சாப்பிடுகிறவர்கள் மற்றும் குறைவான உடல் உழைப்பு உடையவர்களின் உடலில் கொழுப்பு சேகரமாவது அதிகமாகிறது.இப்படி சேகரம் ஆகும் கொழுப்பு ஒரு கட்டத்தில் இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. இதயத்தின் இரத்த நாளங்களில் இப்படி உருவாகும் அடைப்பையே ஹார்ட் அட்டாக் என்கிறோம்.

நாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகள் ஒரு கட்டத்தில் நமது உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனில் ஒரு சமச்சீரற்ற தன்மையை உருவாக்கிவிடுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு கொடுக்கும் பாதிப்புகள் மிக அதிகம். முப்பது வயதைத் தாண்டிய எல்லா பெண்களுமே வெளியில் சொல்லமுடியாத ஏதோவொரு உடல்நல பாதிப்பால் அவதியுறுகின்றனர். அத்தகைய பெண்களுக்கு இந்த பேலியோ டயட் நல்ல பலனையும், தீர்வையும் தருகிறது என்கிறார் செல்வன். தையராய்ட் உள்ளிட்ட கருப்பை தொடர்பான பாதிப்புகள், மாதவிலக்கு சுழற்சியில் உள்ள பாதிப்புகளில் இருந்து குணமான பெண்களின் அனுபவ பகிர்வுகளை பார்க்கும்போது இத்தனை நாளாய் இப்படியொரு எளிய தீர்வினை நாம் தெரிந்து கொள்ளாமல் போனோமே என்கிற எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் உண்டாகும்.

ஆரம்ப நாட்களில் இது போல தகவல்களை எல்லாம் படிக்கப் படிக்க இதெல்லாம் சாத்தியமா? என்னால் முடியுமா?. தட்டு நிறைய சாம்பாருக்கு கொஞ்சம் சோறு, சோற்றுக்கு கொஞ்சம் ரசம், குழையக்குழைய தயிர் சாதம் இல்லாமல் முடியாது என் சாப்பாடு. வார இறுதியைக் கொண்டாடுகிறேன் என்கிற பெயரில் பிரியாணி, சமோசா, இனிப்புகள் கண்ணில் நிழலாட இவற்றையெல்லாம் எப்படி சாப்பிடாமல் இருப்பது? அதுவும் நான் ரசித்து ருசித்து சாப்பிடும் ரசமலாய், குல்ஃபி, பாசுந்தி, சீஸ் கேக்… காசிக்குப் போகாமலே இவற்றையெல்லாம் ஒதுக்குவது என்னால் முடிகிற காரியமா? நானோ மணியடிச்சா சோறுங்கிற மாதிரி பசிக்கிறதோ இல்லையோ நேரம் பார்த்து சாப்பிடற இனம். கொஞ்சம் தாகமெடுத்தாலும் போரடித்தாலும் கையில் கிடைத்ததை சாப்பிடும் அப்பாவி….இப்படி ஏகப்பட்ட மைனஸ் இருந்தாலும் வயதையும், உடல் நலத்தையும் யோசித்து நல்ல நாளில் பேலியோ டயட்டுக்கு மாறினேன்.

உடல் எடை குறைப்பது ஒன்று மட்டும்தான் அப்போதைய என் தலையாய பிரச்னையாக இருந்தாலும், செல்வன் சொன்ன பேலியோடயட் தீர்வாகுமா, கடைபிடிப்பது எளிதானாதா என்கிற சஞ்சலம் ஆரம்பத்தில் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் செல்வன் தொடர்ச்சியாக மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை, தொடரும் ஆராய்சிகளை, தன்னுடைய அனுபவத்தைச் திரும்பத்திரும்பச் சொல்லி என் போன்ற ஆரம்பநிலை சஞ்சலக்காரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார். முதற்கட்டமாக வெளியில் சாப்பிடுவதைக் குறையுங்கள். சிப்ஸ், எண்ணையில் பொரித்த உணவுகள், கேக் மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பண்டங்களை ஒதுக்குங்கள். காஃபி, டீ எல்லாம் வேண்டாம். இதன் அடுத்த கட்டமாக பேலியோ டயட்டுக்கு மாறுங்கள் என ஒரு பயணவழியும் சொல்லிக் கொடுத்தார்.

எங்கே இனி வீட்டில் எல்லோருக்கும் பேலியோ தான் என்று சொல்லிவிடுவேனோ என்று பயந்த மொத்த குடும்பமும், இதெல்லாம் உனக்கெதுக்கு? உனக்கென்ன மற்றவர்கள் போல் சுகர், பிபி போல ஏதாவது பிரச்னைகள் தான் இருக்கா? நொறுக்குத்தீனிகளை ஒழித்து ஒழுங்காக சாப்பிட்டாலே உன் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ்கள், நீங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை, நான் மட்டும்தான் பேலியோ என அவர்கள் வயிற்றில் பால்வார்த்தேன்.

தினமும் குறைந்தது நான்கு முட்டைகள், நூறு பாதாம் பருப்பு, நிறைய சீஸ், மீன், இறைச்சி, காய்கறி வகையறாக்கள். தயிர் அதுவும் கெஃபிர் என்றால் மிகவும் நல்லது இல்லையென்றால் பால் ஒரு கப் போதும்…இதுதான் செல்வன் அவர்கள் எனக்கு பரிந்துரைத்த டயட். “என்னது நூறு பாதாமா?” என அதிர்ந்த கணவரை சமாதானப்படுத்தி விட்டு, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இன்சூரன்ஸ் இருக்கு. சோ நோ ப்ராப்ளம் என்று கடுக்முடுக்கென்று பாதாமை சாப்பிட ஆரம்பித்தால்…..கொடூரமாக இருந்தது. பிறகு தான் தெரிந்தது பாதாம் , வால்நட்ஸ்களை நன்கு ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்று. இல்லையென்றால் சிறிது நெய்யில் வறுத்து மிளகு உப்பு போட்டுச் சாப்பிடலாம் என்றார்கள். எனக்கும் அந்த சுவையெல்லாம் பிடித்திருந்தது.

மாதாந்திர செலவுகள் கொஞ்சம் கூடித்தான் போனது. பாதாம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணிநேரங்கள் வேறெதுவும் சாப்பிடக்கூடாது என்று வேறு பயமுறுத்தியிருந்தார்கள். அதற்குள் பசித்தால் என்ன செய்வது என்கிற கவலை எனக்கு. அதெல்லாம் பசிக்காது. பசிச்சா நிறைய தண்ணீர் குடிங்க என்று குழுமத்தில் அட்வைஸ் செய்தார்கள். ஒரு காலத்தில் அறிவுரைகள் மட்டும்தான். அந்த சமயத்தில் செல்வன் மட்டும்தான் பேசுவார், நாங்களெல்லாம் திருவிளையாடல் நாகேஷ் போல கேள்விகள் மட்டுமே கேட்போம். மனிதன் ஒருபோதும் சலித்துக் கொண்டதே இல்லை. அந்த பொறுமைக்கே எல்லா பெருமையையும் அவருக்கு நாம் செய்யவேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்சோர்வின் காரணமாக தூங்கி விடும் வழக்கம் மெதுவாக மாறி ஹைப்பர் ஆகிவிட்டேனோ என்பது போல் புத்துணர்ச்சியுடன் வலம் வர அது தான் பேலியோவினால் நான் கண்ட முதல் மாற்றம். பிறகு சோற்றுக்கு டாட்டா சொல்ல தேங்காய் எண்ணையில் வறுத்த மீன் அல்லது அவனில் பேக் செய்த சால்மன் மீன், முட்டை என்று மாறி கஷ்டப்பட்டு இனிப்பிற்கு பைபை சொன்னாலும் வருடத்தில் சில இனிப்பான நாட்களில் மட்டும் கொஞ்சம் இனிப்பை தொட்டுக்கொண்டேன்.

மாதம் ஒரு முறை ஒவ்வொரு நாட்டு உணவு விடுதிகளுக்குச் சென்று சாப்பிட்டு வருவது மற்றும் டெஸெர்ட் டே என்று இனிப்புகளை உண்டு மகிழ்ந்த குழுக்களில் இருந்து வெளியேறியதில் நண்பர்களுக்கும் வருத்தம். உடல் எடையும் கணிசமாக குறைய இனி இப்படித்தான் சாப்பிடப்போகிறேன் என்று என்னையே மாற்றிக் கொண்டேன். எனக்கான உணவுத்தேவைகள் எளிதாகவும் கணவருக்கும் பேலியோ ஆசை வந்திருக்கிறது. வருவார். வந்து தானே ஆக வேண்டும்.

தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது வெயிலில் நடக்க வேண்டும். வருடத்தில் நான்கைந்து மாதங்கள் மட்டுமே வெயில் இருக்கும் எங்கள் ஊரில் நடையெல்லாம் பிரச்னை இல்லை. முன்பு வெயிலில் சென்று வந்தாலே கை, கழுத்துப்பகுதிகள் எல்லாம் அலர்ஜியால் தோல் தடித்து சிவந்து அரிப்பு என பல பிரச்னைகள் இருந்தது. பேலியோவிற்குப் பிறகு அதில் நல்ல முன்னேற்றம். படிப்படியாக 10,000 ஸ்டெப்ஸ் அல்லது ஐந்து மைல்கள் நடந்தால் இன்னும் நல்லது என்றார்கள். நடக்க முயற்சிக்கிறேன்.

நம் உடலின் ஆரோக்கியம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே என்கிற எளிய உண்மையை இந்த குழுவில் சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதோடு நம் முன்னோர்கள் காலம் காலமாய் சொல்லி வந்த விரதம் என்கிற போர்வையில் உள்ளுறுப்புகளுக்கு கொடுக்கும் ஓய்வும் முக்கியம் என்பதும் இந்தக் குழுவில் நான் கற்றறிந்த மற்றொரு ஆரோக்கிய ரகசியம். இந்த விரதம் மற்றும் பேலியோ டயட் இரண்டையும் ஒருங்கினைத்தால் அதுதான் “வாரியர் டயட்”.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய பல்வேறு உடல் உபாதைகளைப் பற்றி குழுவில் பகிர்ந்து கொள்வதும், அதற்கு திரு.செல்வன் அவர்கள் மிகப் பொறுமையோடும், அக்கறையோடும் கொடுக்கும் உணவுத் தீர்வுகளும், அதை பின்பற்றிய பிறகு அவர்களின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றஙக்ளைப் பற்றி மகிழ்ச்சியும் பரவசமுமாய் அவர்கள் பகிர்ந்து கொள்வதை விழிகள் விரிய படித்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. எத்தனை எத்தனையோ முகம் தெரியாதவர்கள், ஒரு புள்ளியில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒருவரால் வழங்கப்பட்ட தீர்வுகள் பலனளிக்கிறது என்பது எத்தனை மகத்தான சேவை.

இந்த இடத்தில் என்னுடைய ஒரு சந்தேகத்தையும் பதிவு செய்தாக வேண்டும். ஒரு எளிய உணவு மாற்றத்தின் மூலமாக உடல் ரீதியான பல பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து அதன் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றால், அதை ஏன் ஆங்கில மருத்துவம் ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்தக்கூடாது. குறிப்பாக உயர் சர்க்கரை பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு நிறைய மாத்திரைகளோடு தரப்படும் உணவுப் பட்டியலில் நிறைகார்போ ஹைட்ரேட் உணவுகளான அரிசிச்சோற்றையும், கோதுமையையும்தான் பரிந்துரைக்கின்றனர். அதாவது தினமும் உணவில் கார்போஹைட்ரேட் வடிவில் சர்க்கரையையும் சாப்பிட்டுக் கொண்டு அதற்கான மாத்திரையையும் சாப்பிடு என்பது தங்களின் வியாபாரத்தை தக்கவைக்கும் தந்திரமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை.

நான் கண்கூடாக பார்த்த வகையில் பேலியோ உணவுமுறையால் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, சொரியாஸிஸ், பெண்களுக்கு இருக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் டி, பி-12 குறைபாடுகள், மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினை, மிகையான உதிரப்போக்கு, பிகாட், பிகாஸ் ஹார்மோன் , பைப்ராய்ட் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைப்பது ஒரு வரமே. புற்றுநோய் மேலும் பரவாமல் கட்டுப்பாட்டில் வைக்கமுடிவது, துவக்கநிலை சிறுநீரக கோளாறுகள், அல்சைமர் எனப்படும் நியாபக மறதி போன்ற பாதிப்புகளுக்கு முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க பலன்களை பேலியோ டயட் தருகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறையான மருத்துவ பரிசோதனை, அதன் அடிப்படையில் ஒரு டயட் சார்ட்….அவ்வளவுதான். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் உறுதியான மனக்கட்டுப்பாட்டோடு இதை கடை பிடிக்கிறவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

இன்று ஆல விருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்தக் குழுமத்தில் இன்று பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களும் அங்கத்தினராக இருக்கின்றனர். அவர்கள் பேலியோ டயட்டின் பலனை தங்களுடைய நோயாளிகளுக்கும் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கின்றனர். டிவி சீரியல் ஒன்றில் கூட பேலியோ சம்பந்தப்பட்ட வசனங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. டிவி விவாதங்களில், பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டது. பேலியோ ஹோட்டல் கூட வந்திருப்பதாக கேள்வி.

இன்னொரு பக்கத்தில் பேலியோ டயட்டுக்கு எதிராக பேசுகிறவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு இறைச்சியை மனிதன் உண்டால் பின்விளைவுகள் எப்படி இருக்கும்? பால், வெண்ணெய், சீஸ் மற்றும் இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வளர்ப்பதில் இருக்கும் சுற்றுப்புறச்சூழல் கேடுகளைப் பற்றி பேலியோக்காரர்களின் நிலை என்ன? இது உண்மையிலேயே நல்ல மாற்று உணவு முறை தானா? வருபவர்களுக்கு ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்களை வைத்து டயட் சொல்லும் இவர்கள் என்ன டாக்டர்களுக்குப் படித்தவர்களா? மக்களின் உயிருடன் விளையாடுவது விபரீதத்தில் முடிந்தால் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? என்பது போன்ற எதிர்கேள்விகளும், விமர்சனங்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தனை எதிர்ப்புகளின் ஊடே, செல்வனின் முயற்சியால் இணையம் தாண்டி ஒவ்வொரு நகரமாக பேலியோ அறிமுக கூட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. பேலியோவால் ஈர்க்கப்பட்டு பலனடைந்த பிரபலங்கள் வாயிலாகவும் இந்த உணவுமுறை மக்களிடையே செல்லும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பேலியோ டயட் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. தங்கள் நேரத்தையும், பொருளாதாரத்தையும் பொருட்படுத்தாத தன்னார்வலர்கள் மக்களுக்குத் தங்களால் இயன்ற பேலியோ தொண்டினை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொள்கிறார்கள். திரு,நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோ புத்தகம் இந்த வருட புத்தகச் சந்தை விற்பனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வனின் முயற்சிகள் வெறும் பேலியோ டயட்டோடு நின்றுவிடவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அடுத்த கட்டமாக “வாரியர் டயட்”, சைவர்களுக்காக “நனி சைவம்”, பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கென “மக்கள் டயட்”, பெண்கள் பொதுவில் சொல்லத் தயங்கும் பிரச்சினைகளுக்கென பிரத்யேக பெண்கள் குழுமம் என பல்வேறு தளங்களில் தன் அறிவையும், அனுபவத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஒத்துழைக்க நிறைய நல்லவர்களும், சில போலிகளும் உடனிருக்கிறார்கள். ஆரம்ப நாட்களில் தினமும் நிறைய விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், கட்டுரை பகிர்வுகள் என தகவல் களஞ்சியமாக இருந்த குழுமம் இப்போது சந்தைக்கடை போலாகிவிட்டது. செல்வனும், அவருடைய சக அட்மின்களும் தங்களால் முடிந்த வரையில் எல்லோருக்கும் தீர்வுகளை வழங்கிட முயற்சிக்கின்றனர். தன்னலம் கருதாத இவர்களினால் நிறைய பேருக்கு இந்த தகவல்கள் போய் சேருகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். இணையம் தாண்டி பொதுவெளியில் கடைசி மனிதனுக்கும் இதன் பலன்கள் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு. அப்படி ஒன்று நடக்க முடிந்தால் நிச்சயமாக ஒரு யுகப்புரட்சியாக அமையும்.


விவாதங்களின் அரசியல் ; இரண்டாம் பட்சமான தகுதியும் தரமும்


சொல்வனம் இதழ்
 | இதழ் 159 |



முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலில் தன் கணவருக்கு பக்கபலமாய் இருந்த அனுபவம், பில் கிளிண்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நேரடி அரசியலில் இறங்கி செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய நிர்வாக அனுபவம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கூடுதல் சிறப்புத்தகுதியுடையவர் என்பதால் அவரை சரியான வகையில் எதிர்கொள்ளும் ஒரு வலுவான வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், ஆதங்கமும் தற்போது குடியரசு கட்சியினரிடையே வெளிப்படையாகவே எதிரொலிக்கத் துவங்கிய சூழலில் ஹிலரி-ட்ரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செயிண்ட் லூயிஸில் நடந்தேறியது.

கடந்தகாலத்தில் பெண்கள் தொடர்பாக தான் பேசியவைகளுக்காக வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். அதற்காக தன் குடும்பத்தினரிடமும், அமெரிக்க மக்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பெண்களை எப்போதும் மதிக்கிறேன். இப்படியெல்லாம் கம்மிய குரலோடு ட்ரம்ப் தன்னுடைய விவாவதத்தை துவக்கியபோது அதனை அவருடைய சொந்தக்கட்சியினர் உட்பட யாருமே ரசிக்கவில்லை.

கடந்த முறை போலில்லாமல் இந்த முறை பார்வையாளர்களும் வேட்பாளர்களிடம் கேள்விகள் கேட்கக்கூடியவகையில் விவாதத்தை வடிவமைத்திருந்தனர். இதனால் வேட்பாளர்களும் இயல்பாக மேடையின் குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டே கலந்துரையாடினர்.

ஹிலரி கடந்த விவாதத்தின் போது கடைபிடித்த அதே மென்மையான ப்ளாஸ்டிக் புன்னகையை ஏந்தியவராக, தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டார். மறுமுனையில் ட்ரம்ப் தனது வழக்கமான மூர்க்கத்தனமான உடல் மொழியுடன் இருந்தார். சமயங்களில் அவருடைய உடல் அசைவுகள் அச்சுறுத்தும் வகையில் இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதை விட எதிர்குற்றச்சாட்டுகளைச் சொல்லிவிடுவதுதான் தனக்கான சரியான உத்தியாக இருக்குமென இரு தரப்பினரும் நினைத்தனரோ என்னவோ ஆரம்பம் முதலே இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் உறுதியாக இருந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹிலரிதான். பல இடங்களில் ஹிலரி தடுமாறினாலும் தனது ப்ளாஸ்டிக் புன்னகையைக் கொண்டு சமாளித்தார். சில இடங்களில் காது கேளாதவரைப் போல திரும்பிக்கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதெல்லாம் விவாதத்தின் ஆரம்பகட்டத்தில்தான். நேரப்போக்கில் விவாதத்தை தன்போக்கில் நகர்த்திச் சொல்வதில் ஹிலரி இரண்டாவது முறையும் வெற்றியடைந்தார்.

கடந்த விவாதத்தில் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் இந்த முறை ட்ரம்ப் சரியாக பயன்படுத்திக் கொண்டார். விவாதத்தின் பல கட்டத்தில் ட்ரம்ப்பின் கை ஓங்கியிருந்தது. “ஒபாமா கேர்” திட்டம் மிகப்பெரிய தோல்வி என்று ட்ரம்ப் வைத்த வாதத்திற்கு ஹிலரியின் சமாளிப்புகள் பெரிதாய் எடுபடாமல் போனது. ஹிலரியின் கடந்த கால செயல்பாடுகள், நிர்வாகத்திறமையின்மை போன்ற விஷயங்களை ட்ரம்ப் தொட்ட போது ஹிலரி மீண்டும் ட்ரம்ப்பின் மீது தனிமனித தாக்குதல்களில் இறங்கினார். இந்த முறை ட்ரம்ப் பதிலுக்கு ஹிலரியின் கணவர் கிளிண்ட்டனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் என பழைய குப்பைகளை கிளற ஹிலரியிடம் பதட்டம் மேலோங்கியதை பார்க்க முடிந்தது.

ஹிலரியின் வால்ஸ்ட்ரீட் பேச்சுக்கள் அடங்கிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என முன்பு பெர்னி சேண்டர்ஸும், தற்போது டிரம்ப்பும் வலியுறுத்தியபோது அவற்றை ஹிலரி வெளியிட மறுத்துவிட்டார். ஆனால் தற்போது அவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவிட்ட நிலையில் தான் பேசியவைகளை விக்கிலீக்ஸ் திரித்து வெளியிட்டிருப்பதாக ஹிலரி சொன்ன சமாதானங்களும், ஆப்ரகாம் லிங்கன் கதையும் விவாத அரங்கில் எடுபடாமல் போனது.

ஏதோ இப்போதுதான் முதல்முறையாக ரஷ்யா, அமெரிக்க தேர்தல்களை சீர்குலைக்க சைபர் தாக்குதல் நடத்த முனைவதைப் போலவும், அத்தகைய ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவிப்பதும் நாட்டு நலனுக்கு உகந்ததில்லை என்கிற ஹிலரியின் திசைதிருப்பல்களும் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெறாமலே போனது.

உள்நாட்டில் நிலவும் பொருளாதார தேக்கநிலை, சர்வதேச உறவுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள், தீவிரவாதம், அகதிகள் பிரச்சினை, வர்த்தக பற்றாக்குறை போன்ற தலைப்புகள் தொடர்ந்து பேசப்பட்டாலும் அவற்றின் ஊடே தன்னை முன்னிறுத்தி மற்றவரை மட்டம்தட்டும் வகையில் இரண்டு வேட்பாளர்களும் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்தது.

விவாதத்தின் நிறைவில் இரு வேட்பாளர்களிடமும், மற்றவரிடம் பிடித்த அம்சங்களைப் பற்றி கேட்டபோது ஹிலரி எவ்வித தயக்கமும் இல்லாமல் ட்ரம்ப்ன் குழந்தைகளை மதிப்பதாக கூறினார். வேறெந்த விஷயத்துக்காக இல்லாவிட்டாலும் கூட இந்த ஒரு விஷயத்தில் ட்ரம்ப்பையும் தான் மதிப்பதாக ஹிலரி கூறியது ரசிக்கும்படி இருந்தது. பதிலுக்கு ட்ரம்ப், ஹிலரியின் தளராத போராட்ட குணத்தை தான் மிகவும் மதிப்பதாக கூறினார்.

இதோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் துனை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற விவாதம் தரமானதாக இருந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில் நடைபெற்ற துனை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதங்கள் பெரிய அளவில் வாக்காளர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவில்லை என gallup.com சொல்கிறது.

இருந்தாலும் கூட ஜனாதிபதியின் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்படும் கணத்தில் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை துனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளும் மரபின் படி இதுவரை எட்டு துனை ஜனாதிபதிகள், ஜனாதிபதியாகி இருக்கின்றனர். அந்த வகையில் துனை ஜனாதிபதி வேட்பாளர்களின் தகுதி, நிர்வாகத்திறன் போன்றவை கவனமும், முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனநாயக கட்சியின் சார்பாக வெர்ஜீனிய செனட்டரான டிம் கெய்ன் துனை ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இருக்க, குடியரசுக்கட்சியின் சார்பில் இந்தியானா மாகான ஆளுனரான மைக் பென்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறார். இ்ருவருமே அனுபவம் மிகுந்த அரசியல்வாதிகள்.

சென்ற வாரம் இவர்களுக்கு இடையே நடந்த துணை அதிபர் வேட்பாளர்களின் விவாதத்தில் தனிமனித தாக்குதலின்றி இரு வேட்பாளர்களும் தங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டினை மட்டுமே முன்னிறுத்திப் பேசியது அவ்விவாதத்தின் பலமாக இருந்தது. தெருச்சண்டையைப் போல நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதத்தோடு ஒப்பிடுகையில் பென்ஸ், கெய்ன் விவாதம் முதிர்ச்சியான அரசியலின் வெளிப்பாடாக இருந்தது.

இரு வேட்பாளர்களும் தங்கள் பங்கைச் சரியாகவே செய்திருந்தாலும், குடியரசுக்கட்சியின் டிரம்ப் போல் தன் வசம் இழக்காமல் தேர்ந்த அரசியல்வாதியாக பென்ஸ் மிகவும் பொறுமையாகவும் சாதுரியமாகவும் பேசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் குடியரசுக்கட்சியின் துனை ஜனாதிபதி வேட்பாளர் பென்ஸ், ட்ரம்ம்பை விட சிறந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்திருப்பார் என நினைக்கத் தோன்றியது. குடியரசுக் கட்சியினர் இப்போதே 2020 வருடத்திற்கான தங்களுடைய ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் கிடைத்துவிட்டதாக பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

ட்ரம்ப்பின் ஆபாச அவதூறு ஆடியோ மற்றும் வீடியோக்கள் வெளியான பின்னர் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களை ட்ரம்ப்பிடம் இருந்து தூரமாகவே காட்டிக்கொள்ல முனைகின்றனர். ட்ரம்ப்பை திரும்பப் பெறமுடியுமா என்கிற விவாதம் கூட குடியரசுக்கட்சியினர் மத்தியில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் இதற்கெல்லாம் ட்ரம்ப் அசைந்து கொடுக்கிறவராகத் தெரியவில்லை. தன்னுடைய மூர்க்கத்தனமான அணுகுமுறையை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ட்ரம்ப்பின் சர்வாதிகார தொணி பலருக்கும் பிடிக்கவில்லை. அமெரிக்கா போன்ற ஒரு வல்லாதிக்க சக்தியின் தலைமை பொறுப்புக்கு வருகிறவரிடம் எதிர்பார்க்கப் படும் ஆளுமைத் திறன், பக்குவம் எதுவுமே ட்ரம்ப்பிடம் காணக்கூடியதாக இல்லை. வெளிப்படைத் தனமாக பேசுவதாக அவர் நினைத்துக் கொள்ளும் பல விஷயங்கள் ஆரம்ப நாட்களில் ரசிக்கப்பட்டாலும் தற்போது அவை உளரல்களாக, கேலிகளாய் மாறிக்கொண்டிருபப்தை ட்ரம்ப் உணர்ந்தவராகத் தெரியவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் ஹிலரியின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மின்னஞ்சல்களில் உள்ள தகவல்கள் ஹிலரியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் அபாயமிருப்பதாக அவருடைய ஆதரவாளர்களே கவலை தெரிவிக்கின்றனர்.

சிரியாவில், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒரு மருத்துவமனையில் இருந்த இருபது பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சொல்லப்பட்ட ஜான்கெர்ரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்று அவருடைய அலுவலகமே ஒத்துக் கொண்டுள்ள நிலையில், வரும் நாட்களில் ரஷியாவிடம் சிக்கியுள்ள தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகும் பட்சத்தில் அது ஒபாமா அரசு மற்றும் ஹிலரியின் நிர்வாக குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும் என்கிற பதட்டம் ஜனநாயக கட்சியினரிடையே ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய சூழலில் அமெரிக்கா உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி இருக்கின்றது. அதையெல்லாம் சமாளிக்கத் தேவை தெளிவான தொலைநோக்குடைய உறுதியான ஒரு தலைமை. ஆனால் தற்போதை நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கிறது. ஒருவேளை இரண்டு கட்சிகளுமே தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்திட தவறிவிட்டனவோ என்கிற கேள்வி எழாமலில்லை.

இந்த தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அது அவர்களுடைய ஆளுமைத்திறனுக்கோ, கொள்கைகளுக்கோ, நிலைப்பாடுகளுக்கோ கிடைத்த அங்கீகாரமாக சொல்லிக்கொள்ளமுடியாது. முழுக்க எதிரியின் பலவீனத்தால் கிடைத்த வெற்றி என்றுதான் கருத வேண்டும்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் படி தற்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும், ட்ரம்ப் அத்தனை எளிதாக தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்பவராகத் தெரியவில்லை. எனவே வரும் நாட்களில் அமெரிக்க தேர்தல் களம் அனல் பறக்கும் ஒன்றாக இருக்கும்.

ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை

சொல்வனம் இதழ்
 | இதழ் 158 | 01-10-2016


அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் என்பது ஏறத்தாழ தமிழ் தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் போல இரண்டு வருடங்களுக்கும் குறைவில்லாமல் நீளும் சம்பிரதாயச் சடங்கு. ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரித்தான பரபரப்பும் சுவாரசியமும் கொண்டவை. அந்த வகையில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்ளும் முதல் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இரண்டு விவாதங்கள் பாக்கியிருக்கின்றன.

இந்த விவாதங்களின் நோக்கமே, யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாத நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு தெளிவைத் தரவேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அதனை அவர்கள் அணுகும்முறை, கையாளுவதற்கான திட்டங்கள், அதை வெளிப்படுத்தும் அவர்களின் உடல்மொழி, ஆளுமைத் திறன் என எல்லா கூறுகளும் இந்த விவாதங்களின் மூலமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.

பலவகையிலும் இந்த விவாதம் முந்தைய காலங்களில் நடந்த விவாதங்களை  விட வித்தியாசமானதாகவும், புதுமைகளை கொண்டதாகவும் இருக்குமென  ஊடகங்கள்  தங்களின் கணிப்புகளை கூறி வந்தன. இந்த விவாதத்தில் மூன்று முக்கிய பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை நாட்டின் பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள்.

இத்தகைய பின்னனியுடன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஹிலரி, ட்ரம்ப் இடையிலான முதல் விவாதம் வெற்றிகரமாக(!) நடந்தேறி இருக்கிறது.

ஒரு பக்கம் ஹிலரி க்ளிண்டன். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதி. வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாக இருந்து பெற்ற அரசியல் அனுபவம், செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக கூடுதலாக கிளிண்டன் போன்ற ஒருவரின் பின்புலம் என எல்லாவகையிலும் ஹிலரி கூடுதல் தகுதியுடையவராகத் தெரிந்தார்.

மறுமுனையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான தொழிலதிபராக அறியப்பட்டவர். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர். அமெரிக்காவும், அமெரிக்கர்களும் எல்லா வகையிலும் சுரண்டப்படுவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.

விவாதத்தின் போது ஒரு வார்த்தை பிசகினாலும் அது பாதகமாய் போய்விடும் என்பதால் இரண்டு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் எப்படி கையாளுவது, விவாதத்தின் போக்கை தீர்மானிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய முன் தயாரிப்போடு வந்திருந்தது பல இடங்களில் வெளிப்பட்டது.

இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.

எதைப்பற்றிப் பேசினால் ட்ரம்ப் எரிச்சலாவார் என்பதைப் பற்றி ஹிலரி நன்கு தெரிந்து வைத்திருந்தார். விவாதம் துவங்கிய சில நிமிடங்களில் அதை திறமையாக பயன்படுத்தினார். ட்ரம்ப் ஏன் இன்னும் வருமான வரி விவரங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை அதில் உள்ள தகவல்கள் அவர் சொல்லிக் கொள்வது போல் செல்வந்தரில்லை என்பதை காட்டிவிடுமா, அவருடைய நிறுவனங்களின் மேல் இருக்கும் கடன் நிலுவைகள் எத்தகையவை, தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அளித்திருப்பதாக சொல்லும் நிதி விவரங்கள் முற்றிலும் பொய்யான தகவல்களாக இருக்குமோ என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக அவர் எழுப்பிய கேள்வியில் ட்ரம்ப் நிலைதடுமாறித்தான் போனார். ஹிலரி அழித்ததாகச் சொல்லப்படும் 33000 மின்னஞ்சல்களை வெளியிட்டால் தன்னுடைய வரிவிவரங்களை தணிக்கைக்குப் பிறகு வெளியிடுவதாக ட்ரம்ப் சொன்னதற்கு  பதிலளித்த ஹிலரியோ, தவறு நடந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன் என ஒற்றைவரியில் மின்னஞ்சல் சர்ச்சையை கடந்து போனார். ஹிலரியின் மின்னஞ்சல் சர்ச்சையை ட்ரம்ப் சரியாக முன்னெடுத்துப் பேசாதது அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டதாகவே தோன்றியது.

அடுத்த கட்டமாக ஹிலரி கையில் எடுத்த ஆயுதம், ட்ரம்ப்பின் நிர்வாகத்திறன் மற்றும் அவருடைய வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை பற்றியதாக இருந்தது. ட்ரம்ப்பின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு ஹிலரி விரித்த வலையில் ட்ரம்ப் தானாய் வந்து விழுந்தார் என்றுதான் சொல்வேன். தான் வசமாக சிக்க வைக்கப்பட்டதில் எரிச்சலான ட்ரம்ப் தனிமனித தாக்குதலில் இறங்கினார். இந்த இடத்தில் அவருடைய பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.

ஹிலரி தன்னுடைய பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் நன்மையளிக்கும் எதையுமே செய்யவில்லை அது அவருடைய திறமையின்மையையும், தோல்வியையும் குறிக்கிறது என்கிற வாதத்தை ட்ரம்ப் இன்னும் சிறப்பாக எடுத்து வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவரின் முன்கோபமும், எரிச்சலும் அவருக்கு எதிரியாகிப்  போனது. பல இடங்களில் விவாதத்தை தன் போக்கில் திசைதிருப்பி தனக்கு சாதகமாக்கும் உத்தியிலும் ஹிலரி வெற்றிபெற்றார்.

அமெரிக்க  வர்த்தக ஒப்பந்தங்களில் (NAFTA ) கிளின்டன் அரசு செய்த  தவறுகளைச்  சுட்டிக் காட்டி,  அன்று அதையெல்லாம் ஆதரித்த ஹிலாரி இன்று அதை எதிர்ப்பதைப்  போல் காட்டிக்கொள்வது மலிவான  அரசியலே என  ட்ரம்ப் முன் வைத்த வாதத்திற்கு ஹிலரியால் தடுமாற்றத்துடன் சமாளிப்பான பதில்களையே சொல்ல முடிந்ததை இங்கே  குறிப்பிட்டாக வேண்டும்.

க்ளைமேட் சேஞ் அண்ட் க்ரீன் எனர்ஜி பற்றிய வாதத்தில், டிரம்ப் தன் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதை குற்றம் சாட்டிப் பேசினார் ஹிலரி. பதிலுக்கு ட்ரம்ப், ஹில்லரி முப்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் ஏதோ இன்று தான் இவ்விஷயத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதும், அதுவும் தேர்தல் சமயங்களில் மட்டும் பேசுவதன் பிண்ணனி பற்றி எழுப்பிய கேள்வி சில கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது.

சைபர் அட்டாக்கிற்கு காரணமான சோவியத் ரஷ்யாவுடன் டிரம்ப் நட்புறவு கொண்டுள்ளார்  என ஹிலரி ஆரம்பிக்க, அப்படி இல்லையென்றால் பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஹிலாரியின் கட்சி எப்படி நடத்தியது என்கிற விவரங்கள் உலகுக்கே தெரியாமலே போயிருக்கும் என்றவுடன் அப்பேச்சையும்  ஹிலரி எளிதாக திசை மாற்றிக்கொண்டார்.

அதிபர் ஒபாமாவின் பிறப்புச்சான்றிதழ் பற்றிய பேச்சுகளும், கறுப்பர்களுக்கு வீட்டு வாடகைக்கு விட மறுத்து அதைச் சார்ந்து டிரம்ப் மேல் எழுப்பப்பட்ட சட்டமன்ற வழக்குகளும் அவர் கறுப்பர்களுக்கு ஆதரவானவர் அல்ல என்ற தொனியில் ஹிலாரி பேச, தன் மேல் தவறில்லை என்பது நிரூபணமாகி  தான் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றாகி விட்டது என்று அவ்விவாதத்தை டிரம்ப் முடித்து வைத்த கையோடு, 90களில் ஹிலரி கருப்பினத்தவரை  “super predators” என்று  சொன்னதை சுட்டிக்காட்டியது கவனம் பெற்றது.

ஹிலரியின் உடல்நலம் பற்றிய பேச்சை ட்ரம்ப் எடுத்தவுடன், பெண்களைப் பற்றி ட்ரம்ப் கூறிய பல தரமற்ற விமர்சனங்களையும், அவதூறு வார்த்தைகளை பதிலடியாகத் தர, ட்ரம்ப்பினால் பதில் சொல்லமுடியாமல் போனது. இந்த இடத்தில் மட்டும் ட்ரம்ப் சுதாரித்திருந்தால் ஹிலரியின் பெண்ணியவாதி பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கலாம். அவரது கணவர் கிளிண்ட்டனின் பெண் விவகாரங்கள், அதில் தொடர்புடைய பெண்களுக்கு ஹிலரி கொடுத்த தொல்லைகள் மிரட்டல்கள் போன்றவைகளை எல்லாம் ட்ரம்ப் எடுத்துப் பேசியிருந்தால் அது ஹிலரிக்கு பெருத்த சேதாரமாகி இருக்கும். இதை எப்படி ட்ரம்ப் மறந்து போனார் என்பதை இன்னமும் ஆச்சர்யத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக தொடர்ந்த விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிலரி தன்னுடைய அனுபவத்தை, உழைப்பை வெற்றிகரமாக பறைசாற்றினார்.அடிப்படை மேடை நாகரீகம், உடல்மொழி, கேள்விகளை எதிர்கொண்ட நிதானம், தனக்கு சாதகமான இடங்களில் அழுத்தமாய் பேசி, தன் பலவீனங்களை சுட்டிக்காட்டியபோது பதட்டமின்றி அந்த பேச்சுகக்ளை திசைதிருப்பி விவாதத்தின் நெடுகே அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  லாவகம் என பலவகையில் ஹிலரியின் உழைப்பு தெரிந்தது. அந்த வகையில் ட்ரம்ப் எல்லா அம்சங்களிலும் தோற்றுப்போனார்.

தனக்கு சாதகமான அம்சங்கள் பற்றிய புரிதல்களில் ட்ரம்ப் குழம்பிப் போயிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதிலும் அவருக்கு சரியான நிலைப்பாடுகள் இல்லை. அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை முன்வைத்து விவாதித்திருந்தால் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பார் என்றே பலரும் கருத்துச் சொல்லியிருந்தனர்.

ஹில்லரியை பொறுத்த வரையில் உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மேடையில் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியில்லாதவராக காட்ட வேண்டும் என்ற நோக்கம் இந்த முதல் சுற்றில் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஹிலரியின் நம்பகத்தன்மை மீதிருக்கும் சந்தேகத்தின் நிழல் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதை வரும் நாட்களில் ஹிலரி எபப்டி கையாளப்போகிறார் என்பதில்தான் வெற்றி தோல்வி நிர்ணயமாகும். ஏனெனில் இத்தனை மோசமான பின்னடைவுக்குப் பிறகும் சாமான்ய அமெரிக்கர்கள் ட்ரம்ப்பைத்தான் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் சொல்வது ஹிலரிக்கு தோல்விதான். இருவருக்குமான இடைவெளி குறைவாகவே இருக்கிறது. அடுத்த இரண்டு சுற்றுக்களில் அதை நிரப்ப ட்ரம்ப் தன்னாலான அத்தனையும் செய்வார் என்பதால் ஹிலரிக்கு வெற்றி என்பது எளிதில்லை என புரிந்திருக்கும்.

இது ஒரு புறமிருக்க, இந்த இரு கோமாளிகளின் பேச்சுக்களை  யார் கேட்பது என்கிற அலட்சியத்துடன் தொலைக்காட்சியை தவிர்த்தவர்களும் ,  புட்பால் பார்த்தவர்களும் கணிசமானவர்கள் இருந்தனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். விவாதம் நடந்து கொண்டிருந்த போதே சமூகவலைத்தளங்களில் உடனுக்குடன் நக்கலும், நையாண்டியுமான கமெண்ட்டுகள் திங்கள் இரவை விறுவிறுப்போடும் குதூகலமாயும் வைத்திருந்தன.

கடந்த 2008ம் வருடத்தில்  ஒபாமாவுக்கும்  மெக் கைனுக்கும் நடந்த  விவாதத்தில் தன்னுடைய நேர்மையான  வசீகரப் பேச்சால் மக்களின் முழு ஆதரவைப் பெற்றார் ஒபாமா. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள், புஷ்ஷின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களில் வெறுப்புற்றிருந்த  மக்களுக்கு ஒபாமா ஒரு நாயகனாக தெரிந்தார். கறுப்பர்கள், வெள்ளையர்கள், பிறநாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியும் கண்டார். அதற்குப் பிறகு 2012ல் நடந்த விவாதங்களில் மிட் ராம்னிக்கு ஒபாமாவே பரவாயில்லை என்று தோன்றியதால்

ஒபாமா வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை அபபடியான சூழல் எதுவுமில்லை.

ஒப்பீட்டளவில் கடந்த முறை போட்டியில் இருந்த வேட்பாளர்களை விட , இந்த முறை வேட்பாளர்களின் தகுதியும், தரமும் கேள்விக்குள்ளாகி இருப்பதை தொடர்ந்து கவனிக்கும் எவரும் கூறிவிடமுடியும்.இந்த தேர்தலில் அரசியல் அனுபவம் மிக்க ஹிலரிக்கே தங்கள் ஒட்டு என்று சொல்லவும் முடியாமல்  அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப்-பிற்கும் ஆதரவு தெரிவிப்பதில் இருக்கும் தயக்கம் என தெளிவற்ற குழப்பச்சூழலே இதுவரை நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியில் கணிசமானவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதும் , ஒருவேளை ஹிலரி பதவிக்கு வந்தால் அது ஒபாமா ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்கிற மக்களின் எண்ணவோட்டம் ஹிலரிக்கு பாதகமாய் அமைய வாய்ப்பிருக்கிறது.  ஏற்கனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருக்கும்  ஆஃப்கானிஸ்தான், சிரிய போர்கள், சிரியா அகதிகள் பிரச்சினை ,இஸ்லாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் ஹிலரியின்  நிலைப்பாடுகளினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அவர் வால் ஸ்ட்ரீட் மக்களுக்காக உழைப்பவர் என்ற பொதுப்படையான குற்றச்சாட்டுகளும் ஹிலரியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவையெல்லாம்  ட்ரம்ப்புக்கு எத்தனை தூரம் சாதகமாய் அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஹிலரியின் பலவீனங்களை தன்னுடைய பலமாக மாற்றிட  இன்னமும் ட்ரம்ப்புக்கு வாய்ப்பிருப்பதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.இப்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும் கூட வரும் வாரங்களில் ட்ரம்ப் என்னவிதமான உத்திகளை கையாளப்போகிறார், அடுத்தடுத்த விவாதங்களின் போது ட்ரம்ப்பின் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். அந்த வகையில் வரும் நாட்கள் இரு வேட்பாளர்களுக்கும் சவாலான காலகட்டமாக இருக்கும்.

அடுத்த சுற்று விவாதத்தின் முடிவில் இது பற்றி இன்னும் பேசுவோம்.


எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு


சொல்வனம்
 | இதழ் 144 | 26-01-2016



முதன்முதலில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நாடே ஒரு வித உற்சாக கொந்தளிப்பில் இருந்தது. வெள்ளை, கறுப்பின மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளில் தங்களை காக்க வந்த தெய்வமாகவே பார்த்தார்கள் பெரும்பாலானோர். கறுப்பின மக்கள் அவரை, அவருடைய பதவியேற்பை தங்களுக்கான அங்கீகாரம் என்றே நம்பினார்கள். சரித்திரத்தில் இடம் பெற்ற அவரது பதவியேற்பின் போது மக்கள் கூட்டம் வாஷிங்டன் டி.சி வரை பயணித்து தங்களை வெறுத்து அடிமையாக நடத்திய வெள்ளையினத்திற்குத் தக்க பதிலடியாகாவே பலரும் அன்றைய நாளை கொண்டாடினார்கள். மார்டின் லூதர் கிங்கின் கனவுகள் நனவாகி அமெரிக்க மண்ணில் கறுப்பர்களுக்கான அடையாளம் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த நாள் அந்நாள். ( பட்லர் என்ற திரைப்படத்தில் அதை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்கள்.)

இவற்றை எல்லாம் காண சகிக்காத குடியரசுக்கட்சி அவர் அமெரிக்கன் இல்லை, இங்கு பிறக்கவில்லை, அப்பா ஒரு ஆப்ரிக்கன் , அவர் ஒரு முஸ்லீம் என்று வழக்கமான சேற்றை வாரி ஏசினாலும், பொய் சொல்லி ஈராக் மீது படையெடுத்தது, கோடிக்கணக்கில் போருக்காக பணத்தை செலவழித்தது, ஆப்கான், பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த அமெரிக்கர்களுக்கு அவர்களைப் பற்றின பிம்பத்தை வளர்த்து பயமூட்டியது, வேலையில்லா திண்டாட்டம் என புஷ் ஆட்சியில் மக்களுக்கு இருந்த அதிருப்தியில் மாற்றம் வேண்டும் என்ற ஒபாமாவின் குரல் உரக்க கேட்டதில் அதிசயமில்லை.

முதன் முதலில் அமெரிக்க தேர்தலைப் பற்றிய புரிதல் ஆச்சரியமாக இருந்தது. primary election என்று ஒன்று நடத்துகிறார்கள். அதில் அவரவர் கட்சியைச் சார்ந்தவர்கள் ஜனாதிபதி பதவிக்குத் தாங்கள் உகந்தவர்கள் என்று நம்புபவர்கள் போட்டி இடுகிறார்கள். மக்கள் முன்னிலையில் நாடே பார்க்க, தான் ஏன் அந்தப் போட்டிக்குத் தகுதியானவன்(ள் ) என்று பேசுகிறார்கள். அங்கு சில பல கோமாளித்தனங்கள் நடந்தாலும் மக்கள் யார் தலைவராக வந்தால் நல்லது என்று இனம் கண்டு கொள்கிறார்கள். அவர்களை கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னார் தான் என்று அறிவித்து விட்ட நாளிலிருந்து கட்சியில் இருக்கும் அனைவரும் ஒருமித்த கருத்துடன் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டிய வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் ஒபாமாவின் பேச்சு சாமானியரையும் கவர்ந்தது. தலைவர் என்ற பந்தா இல்லாமல் தங்களுள் ஒருவராக மக்கள் அவரை இனம் கண்டார்கள். அவரால் நிச்சயமாக நாட்டை நல்வழிப்படுத்த முடியும் என்று தீவிரமாக நம்பினார்கள்.

பதவி ஏற்பு முடிந்து வெள்ளை மாளிகையில் குடும்பத்துடன் குடியேறிய ஒபாமாவை வாய் ஓயாது பெருமையாக பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் மேல் தீவிர கடுப்பில் இருந்த குடியரசுக்கட்சியும் அவருடைய ஒவ்வொரு கோரிக்கைக்கும் தடை போட்டுக் கொண்டே வந்தது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ, பணம் கரைய, ஹௌசிங் மார்க்கெட் சரிய, உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில் இயங்க, ஈராக் போர் தீவிரமடைய, பல போர் வீரர்களின் உடல்கள் போர்த்திய கொடிகளுடன் ஊர் திரும்ப, இயற்கைப் பேரிடர்கள் என முதல் நான்கு வருடம் ஒபாமாவின் சோதனைக் காலம்.

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க சில வழிகளை கையாண்டது, வீடு வாங்குபவர்களுக்குச் சலுகைகள், கார் கம்பனிகளுக்கு அரசாங்கமே கடன் என்ற பெயரில் பண உதவி வழங்கி அவர்களை மீட்டது, ஒசாமா பின் லாடனை பிடித்தது அவருடைய அரசின் சாதனை தான். அவருடைய மனைவியும் போர் வீரர்களுக்கு உதவிகள், பள்ளியில் குழந்தைகளுக்குச் சத்தான உணவுத்திட்டம் என்று அவரளவில் மக்களிடையே பல நற்செய்திகளை கொண்டுச் சென்றார். மக்களும் இவரைச் சொல்லி குற்றமில்லை, எதிர்க்கட்சிகள் இவரின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை அதற்கு முன்பிருந்த புஷ் அரசின் தவறான கொள்கையால் தான் அவரே நினைத்தாலும் இன்னும் பல தேர்தல் வாக்குறுதிகளை செய்ய இயலவில்லை என்று திண்ணமாக நம்பினார்கள்.

அடுத்த தேர்தலும் வாசற் கதவை தட்ட, மீண்டும் ஒரு முறை அவரே ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட, அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளியவரை காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த எதிர்க்கட்சி அதை செயலாக்க விடாமல் அவரை எதிர்த்துக் கொண்டே இருந்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மக்களின் எதிர்ப்பார்ப்புடன் வெள்ளைமாளிகைக்கு வந்த ஒபாமாவை ஒரே இரவில் நாட்டை ஜீ பூம்பா சொல்லி மாற்றி விடும் மாயஜால வித்தைக்கார் என்று நினைத்த கூட்டம் அவரின் கைகள் கட்டுண்ட நிலையில் வெள்ளை மாளிகையை ஆளுவது இன்ன பிற சக்திகள் , ஜனாதிபதி என்ற தனிமனிதனின் கையில் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

இதோ இந்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கான கூத்துகளும் நடக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் நடந்த ஸ்டேட் ஆப் தி யூனியன் கூட்டத்தின் போது அவருடைய பேச்சு கேட்பவரை மெய்சிலிர்க்கத் தான் செய்தது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் ஜனநாயக கட்சி இறங்கி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது அவர் பேச்சில். தீவிரவாதிகளை தான் கையாளும் விதமே சரி என்ற தொனியில் எதிர்க்கட்சிகளின் ஆவேச பேச்சு பிரச்னைகளுக்குத் தான் வழிவகுக்கும் என்று கூறினார்.

உலக மக்களிடையே பிரபலமானவராக புன்னகையுடன் வலம் வந்த முதல் கறுப்பின ஜனாதிபதி, கறுப்பின மக்களுக்காக போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவை நிஜமாக்கிய ஒரு நல்ல மனிதர் ஜனாதிபதி ஒபாமா என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் சமீப காலமாக ஒபாமா முஸ்லிம்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார், நாட்டில் நடக்கும் தீவிரவாத நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்கிறார் என்ற அதிருப்தியில் மக்கள் பலரும் இருக்கிறார்கள்.

ஆனாலும் நாற்பத்தி நான்காவது ஜனாதிபதியாக ஒபாமா ஆட்சிக்கு வந்து வாஷிங்டனில் லட்சகணக்கான அமெரிக்கர்களின் முன் கருப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காக, சம அந்தஸ்திற்காக ஓங்கி ஒலித்த மார்டின் லூதர் கிங் ஜூனியரின் கனவை நனவாக்கி பல அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளார் என்றே கூறலாம்.

நீளும் சாலைகள், பயணங்களும்தான்…

சொல்வனம் இதழ்
 | இதழ் 156 | 01-09-2016


அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது ஜனாதிபதிக்கான தேர்தல் திருவிழாவின் உச்ச கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமையை ஹில்லாரி கிளிண்ட்டன் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் அமெரிக்கர்கள் தங்களை இந்த உலகின் உரத்த சிந்தனையுள்ள முன்னேறிய சமூகம் என பெருமையடித்துக் கொண்டாலும் கூட, கடந்த 228 ஆண்டுகளில் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்கி பார்க்காதது வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

அமெரிக்க ஜனநாயகத்தின் முதல் தேர்தல் 1788 முதல் தொடர்ந்து நடந்துவந்தாலும், கடந்த 1920ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதிதான் பெண்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையே வழங்கப்பட்டது. அதுவரை பெண்கள் நாலாந்தர குடிமக்களாகவே கருதப்பட்டனர். பெண் என்பவள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப்பெற்று, அவர்களை கவனித்து, கணவனை திருப்தி செய்ய பிறந்தவள் என்பதுதான் நிதர்சன நிலையாக இருந்தது. வீடுதான் அவள் உலகம், கணவரின் சம்பாத்தியத்திலோ, சொத்திலோ உரிமைகள் ஏதும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள்.

இந்த வகையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்க பெண்ணிய வரலாற்றின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதனையொட்டியே அமெரிக்க அரசும் இந்த் நாளை ”Women’s Equality Day” என சிறப்பித்து கொண்டாடுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தொடர் போராட்டங்களின் விளைவாகவே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். 1875ல் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி தனது வாக்கினை பதிவு செய்து அதற்காக கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்கொண்ட பெண்ணிய போராளி Susan B.Anthony (1820 – 1906) தான் அமெரிக்காவின் முதல் பெண் வாக்காளர். அவர் மீது தொடரப்பட்ட வழக்கும், தண்டனையும் அதன் மீதான விவாதங்களுமே பெண்ணிய உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக்கியது.

வாக்குரிமை என்பது முதல் புள்ளியாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதர்சனங்களை புரிந்து கொண்ட அமெரிக்க ஆட்சியாளர்கள் பெண்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாய் வழங்கிடத் துவங்கினர். ஆண்களுக்கு நிகரான கல்வி, வேலைவாய்ப்பு, சம்பளம் என பல்வேறு மட்டங்களில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளாக சட்டபூர்வமானது. ஆனாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது அத்தனை எளிதானதாக இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். ஆரம்ப காலங்களில் ஆசிரியர், செவிலியர், அலுவலக செயலாளர் வேலைக்கு மட்டுமே என்பதைப் போல சில கட்டுப்பாடுகள் பெண்களுக்கு என்றிருந்திருக்கிறது. மருத்துவம், சட்டம், பொறியியல், அரசியலிலும் பல துறைகளில் நுழையவும், பங்களிக்கவும் பெரும் போராட்ட்டங்களுக்குப்பின் தான் அவர்களால் வர முடிந்திருக்கிறது.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என அறிவுசார் சமூகத்தினர் பலரும் தங்கள் எழுத்துக்கள், கருத்துக்களின் மூலமாக பெண்ணியக்க போராட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியிருக்கின்றனர். Betty Friedan எழுதிய The Feminine Mystique பெண்களுக்கான உரிமைகளை பேசும் முக்கியமான நூலாக இருந்திருக்கிறது. “Feminism is a movement to end sexism, sexist exploitation and oppression.” என்று தன் எழுத்துக்களின் மூலம் பெண் மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடிய BELL HOOKS, பெண்களுக்காகவும், கறுப்பின மக்களுக்காகவும் தன் எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலமாக தொடர்ந்து போராடிய MAYA ANGELOU இன்னும் பல பெண்கள் அயராது உழைத்துப் பெற்ற உரிமைகள் தான் இன்று பெண்களை சுதந்திரமாகவும், தங்கள் கனவுகளை நனவாக்கவும் செய்து கொண்டிருக்கிறது. இவகளைப் போலவே 1931ல் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்ணான Jane Addams (1860 – 1935) தான் வாழ்ந்த காலகட்டத்தின் மிக முக்கியமான பெண்ணிய போராளி என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரத்திற்கான அமெரிக்க பெண்களின் போராட்டம் பல்வேறு தளங்களில் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றுவரை தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்டு சமத்துவ சமூக அங்கீகாரத்திற்காக போராடிய இந்த நிஜமான பெண்ணிய போராளிகளின் பட்டியல் நீளமானது. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியம்.

இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

No-fault divorce எனும் சட்டம் பெண்களுக்கு போதிய பாதுகாப்பினை வழங்கவில்லை என்னும் குற்றச்சாட்டு இப்போது வலுப்பட்டு வருகிறது. நினைத்த நேரத்தில் எந்தவிதக் காரணமும் சொல்லாமல், அப்படியே காரணங்கள் இருந்தாலும் அதை நிறுவ வேண்டிய அவசியம் இல்லாமல் தம்பதிகள் மணவிலக்கு பெறமுடியும் என்பது பொருளாதாரத்தில் தற்சார்பு அடையாத நடுத்தர மற்றும் கீழ்நிலையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இதனால் பாதிக்கப்படும்பெண்கள் அவர்களின் குழந்தைகள், குடும்பச்சூழல், வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கான சட்டத்தில் தீர்வுகள், திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.அமெரிக்காவின் பல மாநிலங்களில் இன்றும் பெண்கள் தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமையில்லாத நிலை தொடர்வதும் வருத்தம் தரும் நிதர்சனம்.

இதைப் போலவே பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களைப் பற்றி தனியே ஒரு புத்தகமே எழுதலாம். அத்தனை வன்முறைகள். பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சொல்லும் வகையில் உள்ள சில ஷரத்துக்களை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குற்றம் செய்தவன் இந்த ஓட்டைகளில் இருந்து தப்பித்து சுதந்திரமாய் திரிவது தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்கும் அவமானங்களுக்கும் ஆளாகின்றனர். இதைப் பற்றி ஜனாபதி தொடங்கி உள்ளூர் அரசியல்வாதிகள் வரை கவலையோடு பேச மட்டுமே செய்கின்றனர். உருப்படியாக எதுவும் செய்த பாடில்லை.

பல பணியிடங்களில் பதவிகள் ஒன்றாய் இருந்தாலும் கூட ஊதிய நிர்ணயங்களில் பாகுபாடு தொடர்கிறது. பெண் என்பதால் சில பொறுப்புகள் மறுக்கப்படுவதும், உளவியல் ரீதியான தொல்லைகள், வேலை நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் அலுவலகத்திலேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லை என்பது இன்றளவும் ஜீரணிக்கமுடியாத ஒன்று.

ஒரு பெண் குடும்ப வன்முறை என புகார் அளித்தால், அவள் தன் கணவன் தன்னை துன்புறுத்துகிறான் என்பதற்கான சாட்சியையும், ஆதாரங்களையும் தரவேண்டும் என்கிறது அமெரிக்க காவல் துறை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இருக்கும் பட்சத்தில் ஓரளவு சட்ட பாதுகாப்பு கிடைக்கிறது. இவற்றையெல்லாம் சீராக்கும் சட்டங்களைக் கொண்டு வர பல மாநிலங்களும் தங்களால் ஆன அளவுக்கு முயன்று கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவற்றின் வேகம் போதாது என்கின்றனர் பெண்ணிய போராளிகள்.

பெண்களின் நிலமை இப்படியிருக்க, திருநங்கைகளுக்கு பெண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என சட்டமிருந்தாலும் பொது இடங்களிலும், வேலை செய்யுமிடங்களிலும் அவர்கள் பல்வேறு கேலிகளுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகின்றனர். சமீபத்தில் கூட ஒரு திருநங்கை தனக்கு பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடி தன் உரிமையை மீட்டார். இதில் இன்னும் சுவாரசியமாக திருநங்கையரை வெறுத்து ஒதுக்கி கேலி செய்து அவமதிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது நகைமுரண். இந்தியாவைப் போலவே இங்கும் திருநங்கையர் சமூகத்தின் அத்தனை அவமானங்களையும் எதிர்கொள்கின்றனர்.

நூற்றாண்டுகள் கடந்தாலும் அமெரிக்கப் பெண்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம். பாலின சமத்துவம் என்பது இருபாலாரும் ஒருவரை ஒருவர் புரிந்து அங்கீகரிக்க வேண்டியது என்பதை ஆண்களும், அரசாங்கமும் புரிந்து ஓத்துழைத்தால் வருங்கால சமூகத்தின் நன்மைக்கும், மேன்மைக்கும் நல்லது செய்தவர்களாவோம்.




யாரிந்த ட்ரம்ப்? ஏனிந்த கொலைவெறி!!!

சொல்வனம்
 | இதழ் 149 | 28-04-2016| 


அமெரிக்க மண்ணில், எனக்கு இது நான்காவது அதிபர் தேர்தல். கடந்த 2000த்தில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் “அல்கோர்” முன்னணியில் இருந்தாலும், ஃப்ளோரிடா மாகாண தேர்தல் முடிவுகளை தள்ளிப் போட்டு, சில பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ஜூனியர் புஷ் அதிபரானதாக ஜனநாயக கட்சியினர் பல காலமாய் புலம்பிக்கொண்டிருந்தனர். பின்னாளில் இதை மையமாக வைத்து “ரீகவுண்ட்” என்றொரு திரைப்படம் கூட வெளியானது.

ஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் போர் நடவடிக்கைகள், இரட்டை கோபுரத்தாக்குதல், விமான நிலயங்களில் திடீர்திடீரென ரெட் அலர்ட், வீண்வதந்திகளினால் பதற்றம் என  மக்களிடைய ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியே இருந்தது. போதாதகுறைக்கு பொருளாதார பின்னடைவுகள், வேலையில்லா திண்டாட்டம்,கேட்ரினா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் என எல்லாம் சேர்ந்துகொள்ள, மக்கள் புதிய தலைமையை, நம்பிக்கையை எதிர்பார்த்தனர். மக்களின் இந்த எதிர்பார்ப்பை, தேவைகளை ஜனநாயக கட்சியின் ஒபாமா நிச்சயம் நிறைவேற்றுவார் என நினைத்த மக்கள் அமோக ஆதரவளித்து  அதிபராக்கினர்.கடந்த எட்டாண்டுகளில் ஒபாமா தான் அளித்த வாக்குறுதிகளில் சிலதை செய்தார், சிலதை செய்யவில்லை, பலவற்றை செய்யவிடாமல் தடுக்கப்பட்டார் என்றெல்லாம் நிறையவே  விவாதங்கள் இருக்கின்றன.

எது எப்படியோ, இதோ அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபருக்கான தேர்தல்களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பது உறுதியாகிவிடும். வேட்பாளர் போட்டியில் நிறைய பேர் குதித்திருந்தாலும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹில்லாரி கிளிண்ட்டனும், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பும் அனைவரின் கவனத்தை பெற்ற வேட்பாளர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த கட்டுரையின் நாயகனாகிறார் “ட்ரம்ப்”.

ஜெர்மானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட்,ஹோட்டல்கள்,சூதாட்டவிடுதிகள், கோல்ஃப் மைதானங்கள் என பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் குழுமத்தின் தலைவர், தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றவர், 1987ம் ஆண்டுவரை ஜனநாயக கட்சியின் ஆதரவாளராய் இருந்தவர், அதிரடியான பேச்சுகளுக்கு சொந்தக்காரர், மூன்று திருமணங்களை செய்தவர், ஆரஞ்சு வண்ண தலையர், பணத்திமிர் கொண்டவர், ஏற்கனவே கடந்த 2000 த்தில் ஜூனியர் புஷ்ஷுடன் அதிபர் வேட்பாளராக மல்லுக்கட்டியவர் என ஏகப்பட்ட புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் டொனல்ட் ட்ரம்ப்.

அதிரடியான, வெளிப்படையான மேடைபேச்சுக்கள்தான் டொனால்ட் ட்ரம்ப்பை மற்றவர்களிடம் இருந்து தனியே அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னார்தான் என்றில்லாமல் எல்லோரையும் தன் பேச்சில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். சொந்த கட்சியினரைக் கூட விட்டுவைப்பதில்லை. ஆரம்பத்தில் இத்தகைய ஆரவார பேச்சுக்கள் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டாலும் கூட, தற்போது மனிதர் ஏதோ சொல்ல வருகிறார் என அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினர் கவனிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னிடத்தில் நிறைய பணம் இருக்கிறது. அதை வைத்தே தேர்தல் செலவுகளை சமாளிப்பேன். எனக்கு யார் பணமும் தேவை இல்லை. அதனால் நான் யாருக்காகவும் என் கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. யாரிடமும் விலை போக வேண்டிய அவசியமும் இல்லை என்று ட்ரம்ப் கொக்கரித்த போது மற்ற வேட்பாளர்களால் அமைதியாக வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.

தற்போதைய ஒபாமா ஆட்சியில் அமெரிக்காவின் மதிப்பும் மரியாதையும் உலக அரங்கில் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. உலக அரங்கில் நமக்கென இருந்த கௌரவத்தை இந்த எட்டு ஆண்டுகளில் இழந்து விட்டோம். இழந்த பெருமைகளை மீட்டெடுத்து மீண்டும் வளமான,வலுவான அமெரிக்கா உருவாக்குவதே தன்னுடைய குறிக்கோள் என்பதுதான் இந்த தேர்தலில் ட்ரம்ப்  முன் வைக்கும் ஒற்றை செய்தி. இதைச் சுற்றியே அவருடைய மற்ற கொள்கை வடிவங்கள் முன்வைக்கப் படுகின்றன.
சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் அமெரிக்கர்களின் வேலைகள், மெக்ஸிகோ, சைனா, இந்தியாவிற்கு செல்வதைத் தடுத்து, மீண்டும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்கிற பேச்சுக்கு எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நம் நாட்டில் மக்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைகளை தூக்கிக் கொடுத்த ஒபாமா அரசும், ஹிலாரியும் வெட்கப்பட வேண்டும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விளாசி தள்ளிக் கொண்டிருக்கிறார்.

இதைப் போலவே அமெரிக்க நிறுவனங்கள் செலவை காரணம் காட்டி உள்நாட்டில் தயாரிக்காமல்,வெளிநாட்டில் தயாரித்த பொருட்களை இங்கு கொண்டு வரும் பொழுது அதற்கு அதிகமான வரியை விதிப்பேன் என்று உலகளாவிய அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் வயிற்றிலும்  புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் தேவையில்லை. இது அன்றைய புஷ் அரசின் தவறான நடவடிக்கை. இதை அன்றிலிருந்து நான் சொல்லிக் கொண்டு வருகிறேன் என தன் சொந்த கட்சி தாக்கிப் பேசியது பலருக்கும் பிடித்துப் போனது. தீவிரவாதத்தை தயவுதாட்சண்யமின்றி அடியோடு ஒழிப்பேன். முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை. அகதிகள் என்ற போர்வையில் ஐசிஸ் தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள்  ஊடுருவதை ஒபாமா அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால்தான், இன்று நம் நாட்டில் இருந்து கொண்டே நம் மக்களை தீவிரவாதிகள் கொன்று குவிக்கிறார்கள் என்பதைப் போன்ற பேச்சுக்கள், இந்த குறைகளை களைய ட்ரம்ப்தான் சரியான ஆளாக இருப்பார் என பலரையும் நினைக்கத் தூண்டியது. இதன் எதிரொலியாக  பல மாநில ப்ரைமரி தேர்தலில் ட்ரம்ப் முன்னிலை பெற்றார்.

மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவேன். அவர்களால் போதைப்பொருட்களும் அதன் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து விட்டது.  இரு நாடுகளுக்கிடையே பெரிய சுவர் ஒன்று கட்டுவேன் என்று ட்ரம்ப் பேசியதற்கு எதிர்வினையாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப்,  நாட்டில் பாலங்களை கட்டுவதைப் பற்றி யோசிக்காமல் இரு நாடுகளுக்கிடையே சுவரை கட்டுவேன் என்று சொல்பவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது என்று சொல்ல,  போப்பையும் ட்ரம்ப் விட்டு வைக்கவில்லை.  போப்பையே எதிர்த்துப் பேசி விட்டாரே. இனி இவர் அவ்வளவு தான் என்றார்கள். ஆனாலும், அதற்குப் பின்னர் நடந்த ப்ரைமரியில்  ட்ரம்ப் முன்னிலையிலேயே  இருந்தார்.

‘சூப்பர் டியூஸ்டே’ தேர்தலுக்கு முன் வேட்பாளர்களிடையே நடைபெறும் விவாதஙக்ளில் ஆளாளுக்கு அதைச் செய்வோம், இதைச்செய்வோம் என்று சொல்லியும், சக வேட்பாளர்களை வம்புக்கு இழுத்தும் தங்கள் வார்த்தை ஜாலங்களினால் கலகலப்பூட்டினர். க்றிஸ் கிறிஸ்டி தனக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று தெரிந்து ஒரு கட்டத்தில் விலகிக் கொண்டார்.  மருத்துவத்துறையை சார்ந்த பென் கார்சன் தீவிர கிறிஸ்தவ ஆதரவாளர். ஆரம்பத்தில் அவரிடமிருந்த உற்சாகம் சில ப்ரைமரிகளில் காணாமல் போயின. மக்களும் அவரை எளிதில் மறக்க, ட்ரம்ப்புக்கு தன் ஆதரவை தெரிவித்துக் கொண்டு வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். எளிதில் கோபப்படுபவர் என அறியப்பட்டிருந்த ஜெப் புஷ்சும் ட்ரம்ப்பின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. பலத்த தோல்வியுடன் க்ரூஸ்-ஐ  ஆதரிக்கிறேன் என்று அவரும் தேர்தலில்  இருந்து விலகிக் கொண்டார். மார்கோ ரூபியோவிற்கும் ட்ரம்ப்புக்கும் நடந்த வாரத்தை விவாதங்களில் ரூபியோவிற்கு இன்னும் அரசியல் ஞானம் வரவில்லை என்று அவருடைய சொந்த மாகாணத்திலேயே அவரை வெற்றி கண்ட ட்ரம்ப் சொல்லாமல் அவரையும் விரட்டி அடித்தார்.

தற்போது டெட் க்ரூஸ் மற்றும் கைச் களத்தில் இருக்கிறார்கள். இவர்களுள் ஒருவர்தான் குடியரசுக்கட்சி வேட்பாளராக முடியும் என்கிற நிலையில் குடியரசுக்கட்சியின் பழமையாளர்கள் ட்ரம்ப் முன்னிலையாவதை ரசிக்கவில்லை என்றொரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில் சில நிகழ்வுகள் நடைபெற ட்ரம்ப் அவர்களையும் தன் பேச்சுகளில் தாளித்தெடுத்தார்.

இப்படி எல்லாம் ட்ரம்ப்புக்கு ஆதரவாய் போய்க் கொண்டிருக்கையில், அவருடைய பிரச்சார மேலாளர் நிருபர் ஒருவரை அடிக்கச் சென்ற விவகாரம் பெரிதானது. சமீபத்தில் ஒரு பேட்டியில், அபார்ஷன் சட்ட விரோதம் என்றால் அதை செய்து கொள்ளும் பெண்களை தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும், அதற்கு காரணமான ஆண்களுக்குத் தண்டனை இல்லை என்று உளறிக் கொட்ட எல்லா தரப்பிலிருந்து ட்ரம்ப்புக்கு கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக பெண்களின் ஆதரவு கணிசமாக குறைந்திருக்கிறது.இதன் எதிரொலியாக விஸ்கான்சின் ப்ரைமரி தேர்தலில் ட்ரம்ப்புக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.

அமெரிக்க தேர்தலில் வேட்பாளர் தேர்வு மற்றும் அதிபர் தேர்வு நடைமுறைகள் கொஞ்சம் சிக்கலானவை. 1237 பிரநிதிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முடியும். ஒரு வேளை தனக்கு அத்தகைய ஆதரவு கிடைக்காவிட்டால் தனியாகவே தேர்தலை சந்திப்பேன் என்று இப்போதே தன் கட்சியினரை கலவரப்படுத்திக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். தங்களுக்கு பிடித்த வேட்பாளரை நிறுத்தும் முழு அதிகாரமும் தங்களுக்கே இருப்பதாகவும், யாரும் தங்களை இப்படியெல்லாம் நிர்பந்திக்க முடியாது என்று கட்சியும் தன்பங்கிற்கு எதிர்குரல் கொடுத்திருக்கிறது. இதனால் குடியரசு கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுவரை ட்ரம்ப் முன்னணியில் இருந்தாலும் கூட 1237 பிரதிநிதிகளைப் பெற முடியுமா என்பது பெரிய கேள்விகுறிதான். இப்போதுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் ஏழாம் தேதி கலிபோர்னியாவில் நடக்கவிருக்கும் ப்ரைமரி தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அங்கிருக்கும் 172 பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவு ட்ரம்ப்புக்கா அல்லது க்ரூஸுக்கா என்பதை பொறுத்து தான் குடியரசு கட்சி தன்  வேட்பாளரை பரிந்துரை செய்யும் நிலையில் உள்ளது. நியூயார்க் மாநில ப்ரைமரியும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ட்ரம்ப்பின் முன்னுக்கு முரணான பேச்சுகளுக்கு பரவலான அதிருப்தி இருந்தாலும், விஸ்கான்சின் ப்ரைமரியில் ட்ரம்ப் தோற்ற நிலையில் நியூயார்க் ப்ரைமரி முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமைந்தது மீண்டும் அவர் பலத்தை நிரூபித்துள்ளது. கனெக்டிகட், டெலவேர் , ரோடே ஐலேண்ட், மேரிலேன்ட், பென்சில்வேனியா ஐந்து மாநிலங்களிலும் ட்ரம்ப் வென்று முன்னிலையில் இருக்கிறார். இன்டியானா ,  கலிஃபோர்னியா ப்ரைமரி முடிவுகள் யாருக்குச் சாதகமாக  இருக்கும் என்பதைப் பொறுத்துத்தான் ட்ரம்ப்பின் எதிர்காலம் தீர்மானமாகும்.

ப்ரைமரி தேர்தல்களில் ஜெயித்தாலும் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்களா?, ஒருவேளை கட்சி ட்ரம்ப்பை நிராகரித்து விட்டால் அவர் சுயேச்சை வேட்பாளாராக தேர்தலில் நிற்பாரா?, மும்முனைத் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறதா?  இப்படி  பல கேள்விகளுடன் அமெரிக்க தேர்தல்களம் பரபரப்பாகி இருக்கிறது.

ஸ்டோனிப்ரூக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்(Helmut Norpoth) உருவாக்கிய ஒரு ஸ்டாடிஸ்டிகல் மாடல், இந்த தேர்தலில் ட்ரம்ப் அதிபராகும் வாய்ப்பு 97% – 99% இருப்பதாக சொல்கிறதாம். இந்த மாடல் 1912ல் இருந்து இதுவரையில் எல்லா தேர்தல் முடிவுகளையும் சரியாக கணித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரே ஒரு முறைதான் பிழைத்திருக்கிறதாம். அதாவது 99% துல்லியம்.
அந்த ஒற்றை விழுக்காட்டில் தொக்கி நிற்பது ட்ரம்ப்பின் எதிர்காலம் மட்டுமல்ல, அமெரிக்காவின் எதிர்காலமும்தான்.

எங்கே போய்விடப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


கனவுப் பிரதேசம்

வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற வாய்ப்பு கனடா வேலைவாய்ப்பில் கிடைத்து டொரோண்டோவிலும் இறங்கியாயிற்று. வந்த சில மாதங்களிலே கனடா வாழ்க்கை ஒத்து வருமோ வராதோ என்ற தவிப்பில் மீண்டும் ஊருக்கே திரும்பி விடலாம் என கணவர் ஆரம்பிக்க, வந்தது தான் வந்தோம் அமெரிக்காவையும் பார்த்து விட்டுச் சென்று விடலாம். வேலைக்கான விசாவும் கிடைத்து விட்டதே. அங்கும் பிடிக்கவில்லையென்றால் ஊரை பார்த்து கிளம்பி விடலாம் எனச் சொல்லவும் விதி விட்ட வழி என அன்று இதே நாளில் காலையில்  எங்களின் அமெரிக்கப் பயணம் ஆரம்பமாகியது.

 இலங்கைத்தமிழ் நண்பர் ஒருவர் தோசையுடன் சம்பல்  கொண்டு வந்து அன்புடன் பரிமாற, மதுரை நண்பர் மதி எங்களை கண்ணீருடன் வழியனுப்ப, கனத்த மனதுடனும், கலக்கத்துடனும்   கனடாவிற்கு டாட்டா சொல்லி விட்டு  வாடகைக்காரில் பயணமானோம்.

மதுரையிலிருந்து ஐந்து பெட்டிகளுடன் ஆரம்பமான எங்களின் பயணத்தில்  சமையல் பாத்திரங்களும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும், மூன்று வெவ்வேறு பருவ காலங்களைக் கண்டதில் அதற்கான உடைகளும்,  காலணிகளும் என மேலும்  ஐந்து பெட்டிகளுக்கான சாமான்கள் கேட்காமலே சேர்ந்து விட்டிருந்தன! இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டு போகப்போகிறோம் என்ற மலைப்புடன் வேறு வழியின்றி  குப்பைகளைக் கொட்டும் ஆரஞ்சு வண்ண garbage bagகளில் மூட்டைகளாக கட்டிக் கொண்டு வண்டியிலும் ஏற்றியாயிற்று.

இந்தியர்கள் என்றாலே ஹிந்தியும் தெரியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் அந்த பஞ்சாபி ட்ரைவர் பேச ஆரம்பிக்க, ஹிந்தி கொஞ்சம் கொஞ்சும் தெரியும் என்று அவரை நாங்களும் பேசி பயமுறுத்த,  ஆச்சரியத்தில் மூழ்கி பின்பு தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டே வர, மூன்றரை மணி நேரத்தில் டெட்ராய்ட்டில் அமெரிக்க எல்லையைத் தொட்டு விட்டோம்.

கனவு நனவாகும் நேரத்தில் மனதில் ஒரு படபடப்பு. இதற்காகத் தானே காத்திருந்தாய் லதா? எது எனக்கு முடியாது என்று மக்கள் நினைத்திருந்தார்களோ அதைச் சாதித்து விட்டதில் பேரானந்தம்! இனி இங்கு தான் என் வாழ்க்கை என்று நான் முடிவெடுத்த நாளும் கூட! கணவருக்குத் தான் தயக்கமும் குழப்பங்களும்.

எல்லையில் இருந்த குடியேற்ற அலுவலகத்தில் சம்பிரதாயக் கேள்விகளை கேட்டு விட்டு, படிவங்களைச் சரிபார்த்து நாட்டுக்குள் அனுமதிக்கும் I94 கார்டை பாஸ்போர்ட்டுடன் இணைத்துக்   கொடுத்தார்கள். அதற்குப் பிறகு தான் சிக்கலே ஆரம்பித்தது.

வண்டியோட்டி வந்தவரை  அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி மறுக்க, வேறு வழியின்றி எங்கள் பொருட்களை வெளியே எடுத்து வைக்க, டோனட் வளர்த்த தொப்பை போலீஸ்காரர்கள் ஆச்சரியத்துடன் குப்பை பைகளைப் பார்த்த்துக் கொண்டிருக்கும் போது தான் கணவரிடம் டிரைவருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு சரியான சில்லறை இல்லை என்று தெரிந்தது. அங்கிருந்தவர்களிடம் கேட்க அவர்களும் இல்லையென்று கைவிரிக்க, அங்கிருந்து ஒரு  மைல் தொலைவில் ஒரு கடை இருக்கிறது. அங்கு கிடைக்கலாம் என்றவுடன் வேறு வழியின்றி மூட்டை முடிச்சுகளுடன் மகளும் நானும் அலுவலகத்தில் காத்திருக்க, அந்த டிரைவரும் வெளியில் காத்திருந்தார்.

நிமிடங்கள் கரைந்தாலும் சென்ற மனிதரை மட்டும் காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலையில் யாரும் தென்படவுமில்லை.  அங்கிருந்த அதிகாரிகளும் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே என்று மேலும் தவிப்பைக் கூட்ட, டெட்ராய்ட் பற்றின நல்ல அபிப்பிராயம் இல்லாதது வேறு பயத்தைக் கொடுக்க, ஆரம்பமே இவ்வளவு களேபரமாக இருக்கிறதே!  என கவலைப்பட்டுத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் செல்போனுடன் அலைந்த காலம் அல்லவே!

ஒரு வழியாக ஒரு மணிநேரம் கழித்து வந்தவர் பணத்தைக் கொடுத்து பஞ்சாபிக்காரருக்கு நன்றியைச் சொல்லி அனுப்பி விட்டு அலுவலகத்தில் இருந்த தொலைபேசியில்  நாத்தனாரிடம் நாங்கள் வந்து சேர்ந்த விவரத்தைச் சொல்லிய பின் அவருக்காக காத்திருந்தோம்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரங்கள் அந்த அலுவலகத்தில் மூட்டைகள், பெட்டிகள் சூழ உட்கார்ந்திருந்தோம். இதுவே இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு என்றிருந்தால் ஒரு K9 மோப்ப நாய் அத்தனை மூட்டைகளையும் சந்தேகக் கண்ணுடன் முகர்ந்து பார்த்திருக்கும். 'திருதிரு'வென முழித்துக் கொண்டிருக்கும் என்னைச் சுற்றி அலெர்ட்டாக போலீஸ்காரர்கள்  துப்பாக்கி சகிதம் இருந்திருப்பார்கள்! உள்ளே இவ்வளவு நேரம் உட்கார அனுமதித்திருப்பார்களோ என்பதே சந்தேகம் தான்!

காலம் தான் எப்படி மாறி விட்டிருக்கிறது!

அன்று மிக்ஷிகனில் ஆரம்பித்த எங்களின் கனவுப்பயணம்  பல மாநிலங்களில் அலைக்கழித்த பிறகு ஆல்பனி வந்து சேர... பெரிய நகரம் இல்லையென்றாலும் இயற்கை எழிலுடனும் நான்கு பருவங்களையும் சுமந்து வரும்  ஆல்பனி மனதிற்கு நெருக்கமாகி விட்டது. தினம் தினம் மனிதர்களுடன் இயற்கை  கற்றுத்தரும்பாடங்களை படித்துக் கொண்டே நகர்கிறது அமெரிக்க வாழ்க்கை.

பிறந்த ஊர் மதுரை என்றாலும் பிழைப்பைத் தேடிவந்த ஆல்பனியும் என்னை வசீகரித்து விட்டது!


நவம்பர் 20ம் தேதி கனவு நனவான நாள்!












Friday, October 7, 2016

நானும் ரவுடி தான்...

பேச்சு கூட சரியாக வராத என் இரண்டு வயது சுப்பிரமணியை வேறு வழியில்லாமல் பேபிசிட்டரிடம் விட வேண்டிய நிலை. நல்ல வசதியான பஞ்சாபிக்காரர்கள் வீடு. அந்தப் பெண்மணியின் மூன்று வயது பேத்தியும் அங்கு இருக்கவே சரி, விளையாட துணைக்கு ஆள் இருக்கிறதே என்று தினமும் அவனை விட்டுவிட்டுச் செல்வேன். மூன்று வயது தான் என்றாலும் அந்தப் பெண்குழந்தை அழகாக இருப்பாள். நல்ல வளர்த்தி. குண்டு வேறு. ஒரு நாள் மாலையில் அவனை அழைத்து வரச்சென்ற போது அவள் வேகமாக ஓடி வந்து சுப்பிரமணியை கீழே தள்ளி விட்டு அடிக்க கையை ஓங்கும் நேரம் நான் கதவைத் திறக்க, என்னை எதிர்பார்க்காததால் உறைந்து போய் நிற்க, சுப்பிரமணி வேகமாக வந்து என் கால்களை கட்டிக்கொண்டான்.

அடி லங்கிணி! என் குழந்தையை போட்டா அடிக்கிறாய்? என்று நானும் வேகமாக அவள் பக்கத்தில் சென்று கண்ணை உருட்டி இனி என் குழந்தையை தொட்டால் அவ்வளவு தான் என்று அடிப்பது போல் மிரட்டினேன். மாய்மாலக்காரி! அதற்குள் ஏதோ அடி வாங்கினவள் போல் பொலபொலவென கண்ணீருடன் ஓடிப் போய் பாட்டியிடம் தஞ்சம் புக, பேத்தி அழுவதைக் கண்டதும் என்ன ஏது என்று கையில் ஃபோனுடன் பாட்டியும் வர, வந்ததே கோபம் எனக்கு.

என் குழந்தைய காசு கொடுத்துத் தான பார்த்துக்கிறீங்க. நீங்க பாட்டுக்கு ஃபோன்ல இருந்தா என்ன அர்த்தம்? இதோ உங்க பேத்தி என் பையன தள்ளி விட்டு அடிக்கப் போறா. ஏதாவது ஆச்சுன்னா? இதுக்கா உங்ககிட்ட விட்டுட்டுப் போறேன். நான் கோபப்பட்டு அன்று தானே பார்த்திருக்கிறாள் அந்தப் பெண்மணி.

என் பேத்தி அப்படியெல்லாம் செய்ய மாட்டாள்.

அப்ப நான் பார்த்தது என்ன?

அவங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க .

இனிமே என் குழந்தை எங்க இருக்கானோ அங்க தான் நீங்க இருக்கணும். உங்களால குழந்தையை பார்த்துக்க முடியலன்னா சொல்லிடுங்க. நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்னு சொல்லிவிட்டு கோபமாய் பயந்து போய் நின்று கொண்டிருந்த குழந்தையுடன் வெளியேறினேன்.

மனசே ஆறவில்லை.! கிராதகி கிராதகி!

பின் சீட்டில் கலவரத்துடன் உட்கார்ந்திருக்கும் சுப்பிரமணியை பார்த்தவுடன் மிகவும் கஷ்டமாகி விட்டது. சரியாக பேசக்கூட தெரியாத குழந்தையை தள்ளி விட்டாளே! நல்லா நாலு போடு போட்டு இருந்துருக்கணும். குண்டச்சி. தின்ன கொழுப்பை என்கிட்டயே காமிக்கிறாளே!
வீட்டிற்கு வந்தவுடன் அமைதியாக குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு கணவர் வந்தவுடன் ஒரு புலம்பு புலம்ப, எங்கே, வேற பேபிசிட்டரைப் பார்க்கணும் என்று ஆரம்பித்து விடுவேனோ என்று அவருக்குப் பயம் வந்து விட்டது. குழந்தைகள் விளையாடும் போது இப்படியெல்லாம் நடக்கும். அவன் ஒரு தடவ அடி வாங்குவான். அப்புறம் சாமாளிச்சுக்குவான். 

ஆனாலும் மனசு ஆறவேயில்லை. என் குழந்தை எதற்கு அடி வாங்கணும்?

இரவு தூங்குவதற்கு முன் சுப்பிரமணியிடம் மெதுவாக பேச்சு கொடுத்து நாளைக்கு அந்தப் பெண் அடிக்க வந்தால் நீயும் அடித்து விடு, தள்ளி விட்டால் நீயும் தள்ளி விடணும், சரியா? பயமாக இருந்தால் அவள் பாட்டியுடனே இருந்து விடு என்று ஓதி விட்டேன். பாவம், குழப்பத்துடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தவன் தூங்கி விட்டான். எனக்குத் தான் தூக்கமே போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் எங்களைப் பார்த்தவுடன் பாட்டியிடம் தஞ்சம் புகுந்தவளைப் பார்த்து எங்க, என் பையனை இப்ப வந்து தள்ளி விடு பார்க்கலாம் என்றவுடன் மெதுவாக எட்டிப் பார்த்தாள். அவளெதிரே சுப்பிரமணியிடமும் அவள் தள்ளி விட வந்தால் அவளை நீ தள்ளி விடு. அடித்தால் திருப்பி அடி என்றவுடன் அவள் பாட்டிக்கும் பயம் வந்திருக்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. கவலைப்படாமல் இருங்கள் என்று சொன்னாலும் அந்த குட்டிச்சாத்தானை முறைத்துக் கொண்டே வெளியேறினேன். தினமும் காலையில் சிரித்துப் பேசி விட்டுச் செல்பவள் இன்று கண்டிப்புடன் போகிறாளே என்று அந்த குண்டுப்பெண்ணும் யோசனையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று முழுவதும் மணிக்கொருமுறை ஃபோன் செய்து குழந்தை பத்திரமாக இருக்கிறானா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

உடனடியாக அடுத்த பேபிசிட்டரை தேடவும், தெய்வாதீனமாக ஒரு நல்ல ஆத்மா கிடைக்க, அவரிடம் தான் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆனந்தமாக சென்று வந்தான் சுப்பிரமணி. இதாண்டா சாக்கு என்று நானும் மகளும் என் தம்பிகளின் திருமணத்திற்கு மூன்று வாரம் ஊருக்கும் சென்று வந்தோம்.

சுப்பிரமணி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் பள்ளித்தலைமை ஆசிரியரிடமிருந்து ஃபோன். இவர் ஏன் காலையிலேயே கூப்பிட்டுக்கிட்டு? யோசனையுடன் எடுத்தால்...பஸ்சில் ஒரு இன்சிடென்ட் நடந்தது என்றவுடன் பதட்டம். ஐயோயோ என்னாச்சு? ஒன்னும் இல்ல. உங்க பையன் இன்னொரு பையனை அடிச்சுட்டான்.

வாட்? நம்பவே முடியலை. அப்படியெல்லாம் அடிக்கிறவனில்லையே? என்ன நடந்தது என்று கேட்கவும் நேரில் வரச்சொல்லி விட,

போச்சுடா! இது என்ன புது பூதம்! நேராக சுப்பிரமணியின் வகுப்பு ஆசிரியரிடம் பேசினேன். அவரும் ஆச்சரியப்பட்டு நம்பவே முடியவில்லை. இவனா அடித்தான் என்று!

என்னடா நடந்துச்சு?
அவன் ஒரு வாரமா என்னை nerd nerdன்னு சொல்லிக்கிட்டே எரிச்சலை கிளப்பினான். அதான் இன்னைக்கு அடிச்சுட்டேன். (ரஜினி, விஜய் படம் பார்க்காமலே இப்படின்னா...!)

ஒரு வாரமா நடந்துருக்கு. நீ எங்கிட்ட சொல்லல. டிரைவர், டீச்சர், பிரின்சிபால்னு இத்தனை பேர் இருக்காங்க. யார்ட்டயாவது சொல்லி இருந்துருக்கலாம். இப்ப பாரு! வீணா பிரச்னைய இழுத்து வச்சிருக்கே! ஆனா ஒன்னு, நல்லா அடிச்சிட்டே இல்ல. இனி ஒரு பய உங்கிட்ட வாலாட்ட மாட்டான். உன் பக்கமும் தப்பு இருக்குறதுனால என்ன தண்டனையோ ஏத்துக்க தான் வேணும். சொல்லிவிட்டு பிரின்சிபாலிடம் இவனை வம்புக்கிழுத்ததால் நடந்திருக்கிறது என்று சொல்ல, அவரும் அந்த மாதிரி சமயங்களில் எங்களிடம் வந்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

அடி வாங்கின அந்தப் பையன் சுப்பிரமணியை விட இரண்டு மடங்கு வளர்த்தி. எங்கள் தெருவில் இருப்பவன் தான். கொஞ்சம் அப்நார்மலாக இருந்தான் அப்போது. அதற்குப் பிறகு வந்த கோடைவிடுமுறையில் சுப்பிரமணியனை வீடு தேடி வந்து விளையாட அழைத்துப் போனான்.

ஆரம்பப் பள்ளி இறுதி ஆண்டில் பஸ்சில் நடக்கும் bullying பற்றி சுப்பிரமணி எழுதிய குறுங்கவிதை(!) ஒன்றை பள்ளி நுழைவாயிலில் பெரிய போஸ்டராக ஒட்டியும், இறுதி ஆண்டு பட்டமளிப்பு விழாவின் போது அழைப்பிதழில் அச்சடித்தும் சுப்பிரமணியை அவன் வகுப்பு ஆசிரியர்கள் கௌரவித்தார்கள்!

நானும் ரவுடி தான் - சுபம்.

Wednesday, August 24, 2016

சம்சுலா பெடி (samchulaa peTi) ...

மாப்பிள்ளை வீட்டாரால் பெண்ணிற்கு 'அன்பாக' அளிக்கப்படும் ஒரு பெட்டி நிறைய பொருட்கள்(சம்சுலா பெடி), சௌராஷ்டிரா வீட்டுத் திருமணங்களில் அங்கம் வகிக்கும் ஒன்று. அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கல்யாண வீட்டில் பெண்ணின் நெருங்கிய சொந்தங்கள் ஆவலாக இருப்பார்கள். தங்களுக்குப் பிடித்தது இருந்தால் உடன்பிறந்தவர்கள் உரிமையோடு எடுத்துக் கொள்வார்கள்.

அந்தப் பெட்டியை வாங்குவதிலிருந்து அதில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டுமென முடிவு செய்வதில் குடும்பப் பெரியவர்களின் பங்கு அதிகமாக இருந்தது அந்தக் காலத்தில். மாப்பிள்ளையின் சகோதரி மற்றும் அவர் கணவர் சென்று வாங்கி வர வேண்டும் என்பது சம்பிரதாயம். இன்றோ, மாப்பிள்ளையின் பங்கீடும் அதிக அளவில் இருக்கிறது. கொடுத்து வைத்த பெண்கள்!

தகரப்பெட்டியிலிருந்து சூட்கேஸ் என்றாகி இன்று ரோலர் மாடல் கைப்பெட்டிகளாக அவை உருமாற்றம் கொண்டிருந்தாலும் அப்பெட்டியில் சில சம்பிராதயப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகம் பார்க்கும் கண்ணாடி, பவுடர், மஞ்சள், குங்குமம், பொட்டு, கண் மை, கொலுசு, சீப்பு, சிக்கெடுக்கும் சில்வர் குச்சி, பழங்கள், இனிப்புகள் மற்றும் கோலாட்டம் ஆட இரண்டு வண்ண வண்ண குச்சிகள். இதைத்தவிர வெள்ளி, தங்க நகைகள் அவரவர் வசதிக்கேற்ப!

எங்களிடையே கோலாட்டம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் மூன்றோ ஐந்து நாட்களோ பெண்கள், சிறுமிகள் அனைவரும் ஆனந்தமாக ஆடிய காலங்கள் உண்டு. வடக்கே இருந்து வந்த இந்தக் கோலாட்டம் இன்றும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. இந்த காலத்துப் பெண்களுக்கு கோலாட்டம் ஆடவும் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே!

இன்று விதவிதமான சேலைகள், நகைகள், மேக்கப் சாமான்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வசதியை பறைசாற்றிக் கொள்ள இந்தப் பெட்டிகளும் துணை போகின்றன. ஏழை நெசவாளர்கள் வீட்டில் இன்றும் இந்தப் பழக்கம் தொடருகிறது. இது மதுரை சௌராஷ்ட்ரா மக்களிடம் மட்டுமே இருக்கிற ஒரு பழக்க வழக்கமா அல்லது திண்டுக்கல், சேலம், பழனி, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோண மக்களிடமும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சில பெண்கள் தங்கள் கணவரின், அவர் வீட்டின் அன்பின் அடையாளமாகவும் பார்க்கிறார்கள். என்ன, எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. சில மாப்பிள்ளை வீட்டார் பாவிகள் அதிலும் கடுமையாக இருக்கிறார்கள்.

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்து வரும் அந்தப் பெட்டி ஒரு கல்யாணப் பெண்ணின் கனவுப் பெட்டியும் கூட! பெண்ணிற்குப் பிடித்த பொருட்கள் இருந்தால் அவளுக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் அன்றிலிருந்தே டண்டணக்கா தான் .... :) சிலர் முன்னெச்சரிக்கையாக பெண்ணை அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்த பொருட்களையே வாங்கி பெட்டியில் வைத்துக் கொடுத்து விடுகிறார்கள்!

பெண்ணிற்குச் சீர் கொடுத்துத் திருமணங்கள் நடந்த காலங்களில் ஆரம்பித்த பழக்கம் இன்று பெண் வீட்டில் சீதனம் வாங்கிக் கொண்டும் தொடருகிறது.

Sunday, August 14, 2016

அமெரிக்க மாட்டுப்பண்ணை ஒரு விசிட்...



நண்பர் ஒருவர் அவருடைய குடும்பம் நடத்தும் ஃபார்ம் ஓபன் ஹவுஸ்க்கு வா என அழைப்பு விடுவிக்க நேற்று சென்றிருந்தோம். என் அப்பாவின் பெரியம்மா வீட்டில் மாடுகள் இருந்தது. இயற்கை உணவுகளை உண்டு குடும்பத்தில் ஒன்றாக அம்மாடுகள் வளைய வந்த நினைவும், மாடுகளின் பெரிய கண்களை கண்டு மிரண்டதும், கன்று ஈன்றவுடன் சீமைப்பாலில் பால்கோவா செய்த நினைவுகள் வர, அமெரிக்க மாட்டுப்பண்ணைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிளம்பி விட்டோம்.

வீட்டிலிருந்து நாற்பது நிமிட கார் பயணம். கோடைமழைக்கான கருமேகங்கள் பின் தொடர, பளிச்சென நீல வானம் முன் தொடர பச்சைப்பசேல் மரங்கள் வழியெங்கும். வெயிலோ 100+ டிகிரியோ என அனலாக!

வியர்த்து விறுவிறுக்க குழந்தைகளுடன் பண்ணையை சுற்றிப்பார்க்க வந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமாகி நடக்க ஆரம்பித்தோம். சோளத்தை பறிக்கும் பொழுதே பிரித்தெடுக்கும் ராட்சத மெஷின்கள், மாடுகளின் சாணத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று அதையே தோட்டங்களில் உரமாக, காய்ந்த புற்களை மாடுகளுக்குத் தீவனமாக என்று கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள்.

800 கறவை மாடுகள் காற்றோட்டமான சூழ்நிலையில் கொட்டகையில் இருந்தது. நம்மூர் மாடுகளைப் போலில்லாமல் ஒவ்வொன்றும் பெரிய பெரிய உருவங்களில் பெரிய பெரிய மடிகளுடன்!

அங்கு பால் கறப்பது ரொபாடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன்! மாடுகளின் கழுத்தில் இருக்கும் காலரில் பால் கறந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தால் தான் மீண்டும் பால் கறக்கிறது அந்த மெஷின். இல்லையென்றால் கதவை ஆட்டோமேட்டிக்காக திறந்து அந்த மாட்டை வெளியே அனுப்பி விடுகிறது. மாடுகளும் தன்னிச்சையாக பால் கறக்கும் இடத்திற்கு வர பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். மாடுகளின் மடியினை சுத்தம் செய்வது முதல் எத்தனை கேலன் பால் கறக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்களையும் அந்த ரோபோட்ஸ் சேர்த்து வைக்கிறது.

ஒவ்வொரு மாடும் 5-8 காலன் பால் ஒரு முறை தருகிறது. ஒரு மாட்டிலிருந்து மூன்று முதல் நான்கு முறை பால் கறக்கிறார்கள். கறக்கும் போதே குளிரூட்டப்பபட்டு முறையாக பெரிய கண்டைனர்களில் சேமித்து வைக்கிறார்கள்.

கன்றை ஈன்றும் பருவத்திலிருக்கும் மாடுகள், கர்ப்பம் தரித்திருக்கும் மாடுகள், பால் தரும் மாடுகள் என மாடுகளை தனித்தனி கொட்டகையில் பிரித்து வைத்திருக்கிறார்கள். மாடுகளுக்கு காய்ந்த வைக்கோலும், சோளமுமே புரதான உணவாக இருக்கிறது.

மாடுகள் எல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையில் நல்ல உணவுடன், நீர் ஆகாரத்துடன் பராமரிக்கப்பட்டு வளர்ந்தாலும் கன்றுக்குட்டியை தாயிடமிருந்து பிரித்து தனியே அடைத்து வைத்திருப்பதும், இயற்கை முறையில் கருத்தரிக்க விடாமல் செயற்கை முறையில் கருத்தரிக்க வைப்பதும்... நமக்காக அந்த ஜீவன்கள்...பாவம் தான்!

ஒரு மாட்டுப் பண்ணையை சமாளிக்க பல மணிநேரங்கள் உழைத்தாலும் அவர்களுக்கு லாபம் அவ்வளவாக இல்லை என்று சொல்லும் பொழுது உலகமெங்குமே இவர்களின் நிலை இப்படித்தான் போல என வருந்தியபடி அங்கிருந்து விடைபெற்றோம்.


படங்கள் : https://goo.gl/photos/Tn183BJPCot9yKgM6















Tuesday, June 28, 2016

அப்பம்..புவம்...பணியாரம்

பெரும்பாலான சௌராஷ்டிரா வீடுகளில் குழந்தைகளுக்குப் பல் முளைத்தவுடன் காலை உணவிற்கு முன் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்னாக் இந்த அப்பம் ஆகத்தான் இருந்தது. இனிப்பாக வெண்ணெய் சுவையுடன் ஏலக்காய் மணத்துடன் ...யாருக்குத் தான் பிடிக்காது?

ஆப்பக்கார அம்மாவை பார்த்தவுடன்...பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க...காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க...என மனம் பாட ஆரம்பித்து விடும். தெருமுக்கில் பொறுமையாக விறகடுப்பை மூட்ட ஆரம்பித்தவுடன் வாங்குபவர்கள் வரிசை ஆரம்பித்து விடும். சமயங்களில் எத்தனை அப்பம் வேண்டும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் கழித்து வாங்கி வருவதுண்டு. எனக்கு அங்கு நின்று அவர் லாவகமாக அப்பம் ஊற்றுவதை வேடிக்கை பார்க்கவே ஆசை அதிகம்.

முதல் நாள் அரைத்து வைத்த அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் கலந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையும், ஏலக்காய் பொடியையும் கலந்து மண்சட்டியில் ஊற்றி அதற்கென இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட மூடியால் மூடி, சிறிது வெந்த பிறகு வெண்ணையையும் சுற்ற விட்டு...மடித்து இலையில் வைத்து வீட்டில் எடுத்து வர...வாயில் வைத்தால் கரையும் 'கமகம'வென மணக்கும் அப்பத்தில்... மனமும் 'தம் தன தம் தன ராகம்' பாட, இனிதான காலையும் இனிதே ஆரம்பமாக... அது ஒரு கனா காலம்!

தெருக்களில் அப்பம் சுட்டு விற்பவர்கள் குறைந்திருந்தாலும் சில இடங்களில் இன்றும் தொடர்கிறது இந்த வியாபாரம். ரெடிமேட் ஆப்ப மாவும் கிடைக்கிறது. கொண்டு வந்து வீட்டில் சுட்டு சாப்பிடலாம். மதுரையில் தான் எத்தனை எத்தனை வசதிகள்?
காலையில் எழுந்தவுடன் அப்பமா, பிட்டா என்று மண்டைக்குள் பட்டிமன்றம் நடத்திய அந்த காலங்கள்...

ஆஹா!!!

அந்த மாவையே இட்லி மாதிரி ஊற்றி 'புவம்' என்று தெருவில் விற்றுக்  கொண்டு வருவார்கள். நடுநடுவே வரும் சிறு தேங்காய் துண்டுகள், ஏலக்காய் மணத்துடன் புவமும் சாப்பிட சுவையாக இருக்கும்.

குழிப்பணியார சட்டியில் ஊற்றி பணியாரமாகவும் சாப்பிடலாம்.

உலகத்தின் பல மூலைகளில் இருந்தாலும் பலரும் தங்கள் குழந்தைகளுக்கும் இதன் சுவையை அறிமுகப்படுத்த மறக்கவில்லை.

ஊருக்குச் சென்றால் அம்மா மறக்காமல் செய்ய ... வீட்டிற்கு வரும் மகளுக்கு நானும் செய்து கொடுக்கிறேன்.

அப்பம்டா....அமெரிக்க அப்பம்டா...


Saturday, June 11, 2016

மீண்டும் பிறந்து வந்தான் ...

இருந்திருந்து அன்று தான் பனிக்காலத்தின் மிக மோசமான குளிரும், பனிமழையும். பக்கத்து மாநிலம் மாசசூசெட்ஸ் நிலைமையோ அதை விட மோசம். பல அலுவலகங்களையும் சீக்கிரமே மூடி விட்டிருந்தார்கள். பயணிப்பவர்கள் மிகவும் கவனமாக இருங்கள். அவசியமிருந்தால் ஒழிய வெளியில் யாரும் செல்லாதீர்கள் என்று இந்த ஊர் ரமணன் வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவு உணவை முடித்து விட்டு மகனின் அலைபேசியின் அழைப்புக்காக காத்திருந்தேன். பனிக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் பள்ளியிலிருந்து Ski Club குழு ஒரு மணிநேரத் தொலைவில் இருக்கும் பனி மலைக்குச் சென்று skiing செய்து விட்டு வருவார்கள். அலைபேசியும் அழைக்க, இப்பத் தான் நெனைச்சேன். சரியா கூப்பிட்டானே என்று பார்த்தால், வேறு எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும்? குழப்பத்துடன் எடுக்க, ஹலோ , என் பெயர் சூஸன் நான் உங்கள் மகன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கிறேன். ski mountain ரிசார்ட்டில் இருந்து பேசுகிறேன். இன்று ஒர் அசம்பாவிதம் நடந்து விட்டது. மெதுவாக அவர் பேச பேச, எனக்குள் பதட்டம் அதிகரிக்க, என்னாச்சு என் பையனுக்கு ? சீக்கிரம் சொல்லுங்க.

அவன் மலை உச்சியிலிருந்து பனிச்சறுக்கிக் கொண்டே வரும் பொழுது நிலை தடுமாறி உருண்டு கீழே விழுந்து மரத்தில் மோதி...என் உடம்பு சில்லிடுவதை என்னால் உணர முடிந்தது. கடவுளே!

இப்ப எப்படி இருக்கான்? தலையில் அடி இல்லையே?

முதல் உதவி செய்து கொண்டே ஆம்புலன்ஸ்-ல் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். அங்கு சென்றால் தான் தெரியும்.

கடவுளே! என்ன இது சோதனை?

நான் என் மகனிடம் பேசலாமா? பேசும் நிலையில் இருக்கிறானா?

இருங்கள். நான் அவனிடம் கொடுக்கிறேன்...

அம்ம்ம்மா...அழுகையுடன் மகனின் குரல் கேட்கவே...என்னாச்சுடா? நெஞ்சு வலிக்குதும்மா. கால் அசைக்க முடியல. சுக்கு நூறாக என்னுள் நொறுங்க... சரி, சரி, அழாதே. நானும் அப்பாவும் ஹாஸ்பிடல் வந்துடறோம். உனக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாதே.

சொல்லி விட்டேன். ஆனால்...பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. நெஞ்சு வலி என்கிறானே...கடவுளே...ஏன் இப்படி?

மீண்டும் சூஸன் பேச, மருத்துவமனை விவரங்களைக் கேட்டறிவதையும் பதட்டமாகப் பேசுவதையும் கேட்டவுடன் கணவரும் அருகில் வந்து நிற்க...நான் பேசுவதிலிருந்து ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு அவரும் பதட்டத்துடன்...என்னாச்சு?

நெஞ்சு வலிக்குதுன்னான் என்று சொன்னால் இவர் பதட்டப்படுவாரே!

சொல்லு.

நாம உடனே இந்த ஆஸ்பத்திரிக்குப் போகணும். நம்ம பையன் கீழே விழுந்துட்டானாம். நான் அவன் கூட பேசினேன்.

என்னது??? எப்படி விழுந்தான்?

கார்ல போகும் போது விவரமா சொல்றேன். இப்ப கிளம்புங்க.

சிறிது நேரம் பூஜையறையில் என்னை அமைதியாக்கிக் கொண்டு என் மகனை பத்திரமாக ஒரு சேதாரமுமில்லாமல் உயிருடன் அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகையில்... என்னையுமறியாமல் உடைந்து போனேன்.

கணவரும் தயாராகி வர, நீயே காரை ஒட்டு. மகனுக்கு ஏதோ சீரியஸ் என்று புரிந்து அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

நானும் வண்டியை கிளப்ப, இப்ப சொல்லு. என்ன நடந்தது? எந்த ஹாஸ்பிட்டல்?

என் ஃபோனில் கடைசியாக அழைத்த நம்பரில் பேசுங்கள். பதட்டப்பட வேண்டாம். அவனுக்கு ஒன்றும் ஆகாது. என்று தைரியம் சொல்லி விட்டு...அவரும் பேச, சூஸன் என்னிடம் சொன்னதையே அவரிடம் சொல்ல...அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து, நீங்கள் அங்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டே இருங்கள் என்று கவலையுடன் சொல்லி ஃபோனை வைத்து விட்டு... எனக்கு ஒன்னுமே புரியல? பயமா இருக்கு. நல்ல வேளை, முதல்ல நீ போன் எடுத்துப் பேசின. ஏன் இப்படியெல்லாம்...

இங்கே இருந்து அங்க போக இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகலாம். ஒன்னு பண்ணுங்க, அந்த ஊரிலிருக்கும் நண்பர்கள் ஜெயஸ்ரீ, கணேஷ கூப்பிட்டு அவங்களால ஆஸ்பத்திரிக்குப் போக முடியுமான்னு கேளுங்க.

குட் ஐடியா. அவங்க நம்பர்?

உடனடியா ஃ பேஸ்புக்ல மெசேஜ் அனுப்புங்க. இன்னொரு நண்பரிடமிருந்து எண்ணையும் வாங்கிக்கலாம் என்று சொல்ல, அவர் படபடவென செய்தி அனுப்பி விட்டு, நண்பரிடமிருந்து நம்பரையும் வாங்கிக் கொண்டு ...

ஜெயஸ்ரீ, கணேஷிடம் பேச, அவர்களும் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவனமாக வாருங்கள். நாங்கள் அவனருகில் இருக்கிறோம் என்று சொல்லவும் கொஞ்சம் நிம்மதி. இவர்கள் அருகில் இருந்தால் குழந்தை தனியாக இருப்பதாக நினைக்க மாட்டான் என்ற நினைவே மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

மீண்டும் சூஸனை தொடர்பு கொண்டால், இப்பொழுது தான் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தோம். ஒரு பத்து நிமிடம் கழித்துத் தொடர்பு கொள்கிறோம் என்று வைத்து விட்டார்.

எவ்வளவு மெதுவாகப் போக முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட்டிக் கொண்டு சென்றாலும் எதிரில் வரும் வண்டிகள் வழுக்கிக் கொண்டு காரை இடிப்பது போல் வந்து செல்ல... யாரையும் குறை சொல்ல முடியாது. கரணம் தப்பினால் மரணம் நிலை தான் அன்று.

திடீர்திடீரென வரும் வளைவுகள், வழுக்கும் சாலைகள், 'சொளசொள'வெனக் கொட்டும் பனிமழை, உறைபனிக்கும் கீழான குளிர், வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை, ஏற்ற இறக்கங்கள். முதன்முறையாக அச்சாலையில் பயணம்... பத்திரமாக மருத்துவமனை போய்ச் சேருவதே அந்த நேரத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்க...

மெதுவா போ, லேட்டானாலும் பரவாயில்லை.

இப்பவே 20 மைல் வேகத்துல தான் போறேன். பின்னாடி ஒரு கிரகம் வேற வண்டிய இடிக்கிற மாதிரி எவ்வளவு பக்கத்துல வர்றான்.

அவன் போகட்டும். வழிய விடு. இவ்வளவு மோசமா இருக்கிற ரோட்ல கூட இப்படியெல்லாம் ஓட்டிட்டு வர்றாங்க!

அவனுக்கு வழிவிட ஒதுங்கினால் கார் வழுக்க... நாங்கள் பத்திரமா போய்ச் சேரணுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

மருத்துவமனையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் வந்து கையெழுத்திட்டால் தான் நாங்கள் அட்மிட் பண்ணி டெஸ்ட் பண்ண முடியும் என்றவுடன்...நாங்கள் வர இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம். நீங்கள் டெஸ்ட்களை உடனே ஆரம்பியுங்கள் என்று சொல்ல அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள்.

அதற்குள் ஜெயஸ்ரீ அழைக்க, நாங்க ஆஸ்பத்திரிக்கு வந்துட்டோம். இப்ப தான் CT ஸ்கேன் எடுக்கக் கூட்டிட்டுப் போனாங்க. உங்க பையன் பக்கத்துல தான் இருக்கோம். அவன் தைரியமா இருக்கான். நீங்க கவலைப்படாதீங்க எனச் சொல்லவும்...மிகப்பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.

இவ்வளவு மெதுவாகப் போனால் போய்ச் சேர்ந்த மாதிரி தான்! ஆனால் வேறு வழியில்லை.

இரவு, பனி மழை ,அவ்வளவாக மக்கள் நடமாட்டமில்லாத வெறுமையான சாலை...மனம் முழுவதும் என் குழந்தையின் முகமே. வழி முழுவதும் வேண்டுதல்களுடன்.

ஒரு வழியாக மருத்துவமனை வந்திறங்கியதும் காரை நிறுத்தி விட்டு, எங்கு அட்மிட் செய்திருக்கிறார்கள் என்று கேட்டு ஓடிப் போய் பார்த்தால்...ஜெயஸ்ரீ, கணேஷ் இருவரும் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்க, எங்களைப் பார்த்ததும் சிரிக்க முயன்று அம்மா என்று அழ ஆரம்பித்து... கண்களுக்கு அடியில் நல்ல அடி , நெற்றியில் கீறல்கள், முகமெல்லாம் கருநீலமாக, கீழே விழுந்த வேகத்தில் தெர்மல் பேன்ட் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க...நர்ஸ் ஏதோ மருந்தை உள்ளே ஏற்ற...

நாங்க வந்துட்டோம்ல. கவலைப்படாத. உனக்கு ஒன்னும் இல்லை. இரு, டாக்டர்ட்ட பேசிட்டு வந்துடறோம்.

டாக்டர்ரும், நல்லவேளை தலையில் அடிபடவில்லை. அவனுடைய ஹெல்மெட்டும், கண்ணாடியும் தான் அவன் தலையையும், கண்களையும் காப்பாற்றியிருக்கிறது. உங்களுடைய அதிர்ஷ்டமோ, அவனுடைய நல்ல வேளையோ சிறு காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறான். இவன் விழுந்த வேகத்திற்கு மரத்தில் மோதியதால் அதிர்ச்சியில் இருக்கிறான். மருந்துகள் கொடுத்திருக்கிறோம். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், குழப்பம் எல்லாம் இருக்கும். இன்னும் சில டெஸ்டுகள் செய்ய வேண்டும். சில ஸ்பெஷலிஸ்ட்களும் வந்து பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இன்சூரன்ஸ் விவரங்களை கொடுத்து விட்டு வாருங்கள் என்றவுடன் கணவர் சென்று விட, நண்பர்களுக்கு என் நன்றியைச் சொல்ல, அவர்களும் நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதலாகப் பேச, அந்த நேரத்தில் அதுதான் அவசியமாக இருந்தது. ஏழேழு ஜென்மத்திற்கும் கடன்பட்டு விட்டோம்.

அம்மா, என் பக்கத்துல வந்து உட்காரு என்று கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழ, என்னால, அழக் கூட முடியல. மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்மா. தண்ணி கூட கொடுக்க மாட்டேங்குறாங்க.

உடனே, டாக்டரிடமும், நர்சிடமும் சொல்ல, அவர்களும் வந்து பார்த்து விட்டு ஒரு பிளாஸ்டிக் ட்யூப் மாதிரி ஒன்றை கொடுத்து மெதுவாக ஊதி அதற்குள் இருக்கும் சிறு பந்தை மேலே கொண்டு வர முயற்சி செய். இப்படிச் செய்தால் நுரையீரலில் fluids தேங்காது. இல்லையென்றால் நிமோனியா வந்து விடும் என்று பயமுறுத்த... இப்போதைக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டாம். வாந்தி வரும் என்று ஐஸ்கட்டிகள் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

ஆரம்பத்தில் மூச்சை இழுத்து சிறு பந்தை மேலே கொண்டு வர சிரமப்பட்டான். சிரமம் பார்க்காமல் பண்ணி விடு. இல்லையென்றால் வேறு பிரச்னைகள் வந்து விடும் என்ற பிறகு செய்தான். இறுகியிருந்த தசைகள் இளகியது போல. வலிக்காகப் போட்ட மருந்துகளும் வேலை செய்ய சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.

நள்ளிரவை நெருங்கி விட ,அதற்குப் பிறகு தான் அங்கிருந்த சூஸனின் நினைவே வந்து யாராவது இவரை கொண்டு போய் வீட்டில் விட வேண்டுமே! அவரும் பள்ளி வளாகத்தில் தான் தன் வண்டி இருக்கிறது என்று சொல்ல, நீங்கள் இவரைப் போய் விட்டு விட்டு நாளைக் காலை வந்து விடலாம் என்று கணவரிடம் சொல்ல, அவரும் விருப்பமில்லாமல் செல்ல வேண்டியதாயிற்று.

நரம்பியல் மருத்துவர் ஒருவர் வந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிப் பல கேள்விகளை கேட்டு , ஹீ இஸ் ஆல்ரைட். குழப்பம் இருக்கிறது. மயக்கத்தில் இருக்கிறான். மேலும் சில டெஸ்டுகளைப் பரிந்துரை செய்து விட்டுச் சென்றார். செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து உள்காயம் தான் இருக்கிறது. வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்ள அது தானாக ஆறிவிடும். கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். அப்பாடா! இன்னுமொரு பாரம் இறங்கியது போல் இருந்தது எனக்கு.

எங்களைப் பொருத்தவரை எல்லா மருத்துவ உதவிகளும் செய்தாயிற்று. ஹீ இஸ் ஆல்ரைட். நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றவுடன், என்ன சொல்கிறீர்கள்? அவன் இன்னும் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான். காலில் அடிபட்டிருக்கிறதா என்று எக்ஸ்-ரே இன்னும் எடுத்துப் பார்க்கவில்லை. அவனால் நடக்க முடியவில்லை. அவ்வளவு தூரம் வண்டியில் உட்கார்ந்து வருவானா? முதலில் என்னிடம் வண்டி கிடையாது. அர்த்த ராத்திரியில் பனி வேறு கொட்டிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் வீட்டிற்குச் சென்றாலும் நடுவில் ஏதாவது பிரச்னை என்றால் உடனே வர முடியாது. இங்கேயே இருக்கிறோம். நாளை காலை வரை நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு பிறகு டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்றவுடன் அவர்கள் தீவிரமாக யோசிக்க...

இந்த ஊரில் இன்சூரன்ஸ் பிரச்னைகள் பலவும் இருப்பதால் டாக்டர்களால் உடனே முடிவும் எடுப்பதும் கடினம். வேறு வழியில்லாததால் அவர்களும் எமெர்ஜென்சி வார்டிலிருந்து குழந்தைகள் வார்டிற்கு மாற்ற... மணி கிட்டத்தட்ட இரவு ஒன்று. இனி இங்கு ஒன்றும் பிரச்னைகள் இல்லை. நானே சமாளித்து விடுவேன். உங்கள் குழந்தைகளும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள், நீங்களும் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று ஜெயஸ்ரீ & கணேஷை வற்புறுத்தி அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் ஏதாவது உதவி என்றால் சிரமம் பார்க்காது கூப்பிடுங்கள், நாளை காலை வருகிறோம் என்று விடைபெற...

களைத்து தூங்கிக் கொண்டிருந்தவனின் அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். இன்று snowstorm. skiing நன்றாக இருக்கும் என்று காலையில் எவ்வளவு குதூகலமாக பள்ளிக்குச் சென்றான்? பார்த்து கவனமாக போ, வேகமாக போகாதே என்று சொல்லியும்... கைக்குழந்தையாய் இருந்த போதும் மன வலியைத் தந்தான் இன்றும் அது தொடர்கிறது. ஏதேதோ எண்ணங்கள்! பள்ளி திறந்த சில நாட்களில் விளையாடும் பொழுது கைவிரலை ஒடித்துக் கொண்டு ஒரு நாள்... வெளியில் சைக்கிள் ஒட்டுகிறேன் என்று உடம்பு முழுவதும் சிராய்ப்புடன்ஒரு நாள்... வெளியில் சென்றால் வீடு திரும்பும் வரை இவன் பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற கவலை தான் பெரும்பாலும் எனக்கு. இன்று தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். உடல் வலியுடன் அவனும், மன வலியுடன் நானும்...குழந்தையாய் இருந்து விட்டால் தொல்லையேதும் இல்லையடான்னு சும்மாவா சொன்னாங்க.
வயிற்றில் சுமந்ததை விட நெஞ்சில் சுமக்கையில் வலியின் பாரம் அதிகமாகி விடுகிறது. ஒரு வலியிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த வலி. அவன் வலியிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேயிருந்தது மனம். குழந்தை வலியால் துடிப்பதை பெற்றவர்களுக்குப் பார்க்க சகிக்குமா?

அந்த வார இறுதியில் நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தான். அவன் உயிர் பிழைத்து மறுஜென்மம் எடுத்து வந்ததே திருநாளாகி மீண்டும் புதிதாய் பிறந்து விட்டது போல் ஆனது இந்த வருடப் பிறந்த நாள்!

வெளியில் இன்னும் பனிமழை கொட்டிக் கொண்டிருந்தது.

டெஸ்ட்டுக்கு ரத்தத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு மணிநேரத்துக்கொரு முறை நர்ஸ் வந்து காய்ச்சல் இருக்கா என்று பார்த்து விட்டுப் போக ... மணி காலை மூன்றாகி விட்டது, தூங்கலாம் என்று நினைக்கும் போது...கதவு தட்டப்பட... எக்ஸ்-ரே எடுக்கணும். கூட்டிட்டுப் போக வந்திருக்கிறேன் என்று சக்கர நாற்காலியுடன் ஒருவர். தூங்கிக் கொண்டிருந்தவனை மெதுவாக தட்டி எழுப்பி வா, போய் எக்ஸ்-ரே எடுத்துட்டு வந்துடலாம். எழுந்திரு. அந்த தூக்கக் கலக்கத்திலும் நீ போய் தூங்கும்மா. நான் போய்க்கிறேன் என்றான்.

இருக்கட்டும். நானும் வருகிறேன் என்று இருவரும் சென்று எக்ஸ்-ரே எடுத்து முடித்துத் திரும்ப, நர்ஸ் வந்து மாத்திரைகள் கொடுத்து விட்டு, இருவரும் தூங்குங்கள். நாளை காலை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

அப்பொழுது தான் தூங்கிய மாதிரி இருந்தது. ஆறு மணிக்கு வேறு ஒரு நர்ஸ் வந்து கதவை தட்ட...அதற்குள் விடிந்து விட்டதா? நான் கிளம்பி விட்டேன் என்று கணவரிடமிருந்து ஃபோன். நர்சிடமிருந்து டூத் பேஸ்ட், ப்ரஷ், சோப் வாங்கிக் கொண்டு வந்து நானும் தயாராக...மகனோ ஆழ்ந்த நித்திரையில்!

பள்ளியிலிருந்து பிரின்சிபால் அழைத்து நலம் விசாரித்து விட்டு, என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். பள்ளியும், ஆசிரியர்களும் முடிந்த அளவு செய்கிறோம் என்றார். இப்போதைக்கு ஒரு வாரத்திற்குப் பள்ளிக்கு வர மாட்டான். அவனுடைய ஹோம்வொர்க் மட்டும் அனுப்பி விட முடியுமா என்று கேட்க அவரும் ஆசிரியர்களிடம் சொல்லி விடுகிறேன் என்று பேசி முடிக்க...

ஜெயஸ்ரீயும் காஃபி, சுவையான காலை உணவுடன் வந்து விசாரித்து விட்டுச் சென்றார். கணவரும் வந்து விட, தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பித் தயாராகச் சொல்ல...

குழந்தைநல மருத்துவர் வந்து டெஸ்டுகள் செய்து விட்டு சிறிது நாளைக்கு மூளையில் அதிக அதிர்வுகள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். நோ டென்னிஸ், நோ மியூசிக், நோ படிப்பு என்ற போது சிரித்தவன், நோ டிவி, நோ கேம்ஸ், நோ கம்ப்யூட்டர், நோ செல்போன் என்றவுடன் கலவரமானான். பிஸியோதெரபிஸ்ட்டும் வந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்ல...

அப்பா, என்னோட போன், ஜாக்கெட், பேக் எல்லாம் அந்த ski சென்ட்டர்ல இருக்கு என்று ஞாபகப்படுத்தியவுடன் தான் அப்ப உன் ஸ்கீஸ், ஷூ எல்லாம்? பள்ளியை தொடர்பு கொண்டு பாதி பள்ளியிலும் மீதி ski சென்ட்டரிலும் இருப்பதை தெரிந்து கொண்டோம்.

அன்று சில விலை அதிகமான பொருட்களை ski சென்ட்டரில் தொலைத்திருந்தான். அவன் குணமாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். பாதிப்புகள் எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. மனதிற்குள் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டான் என்கின்ற பெரு நிம்மதி . என்ன தான் கண்ணுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தாலும் சில பல சம்பவங்கள் நம்மையும் மீறி நடக்கத் தான் செய்கிறது. வெளிநாட்டில் இருப்பதால் ஆறுதலுக்கு கூட குடும்பத்தினர் அருகில் இல்லாதது கொடுமை. தனிமைப்போராட்டத்துடனே வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறோம் பலரும்!

ஆனால், மிகவும் அருமையாக பார்த்துக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆறுதலாக நண்பர்கள் என்று நல்ல மனம் கொண்டவர்களால் அந்த வலிமிகுந்த இரவை ஒருவாறு கடந்து விட்டோம்.

 இன்று தினம் ஒன்றுக்கும் இன்சூரன்ஸ்காரர்கள் அனுப்பும் பில்கள் எங்களுக்கு ரத்தக்கொதிப்பை கொடுத்து விடும் போல!

இதுவும் கடந்து போகும்!






















































'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...