Sunday, April 15, 2018

சுவிட்சர்லாந்து

NOV 21, 2013





மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.

ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித்துப் பார்த்தால் மட்டுமே அறியவும், அனுபவிக்கவும் முடியும். அந்த உணர்வுகளை வெறும் வார்த்தைகளில் எழுதி விட முடியாது.

சுற்றுலா என்கிற பெயரில் நகரங்களை சுற்றியது போதும், மலைகளின் மேலே ஏதாவது ஒரு ஊரில் தங்க வாய்ப்பு கிடைக்குமானால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து, என் கணவர் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் முருகனிடம் சொல்ல, அவரும் தேடிப் பார்த்து ஓர் இடத்தைத் தேர்வு செய்து கூறினார்.

சுவிட்சர்லாந்தில் Lake Lucerne அருகில் பிராம்பொடென் என்ற இடத்தில் உள்ள மலை தான் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த இடம். இதற்காக முருகனுக்கும், செல்விக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். கனவுகளிலே வந்து கொண்டிருந்த மலைகளை நேரில் தரிசித்த பொழுது உண்டான உற்சாகத்தில் அவ்வளவு தூரம் பயணித்த அலுப்பும், களைப்பும் ஓடியேப் போச்சு.

டிரெஸ்டென், ஜெர்மனியிலிருந்து ஆஸ்திரியாவைக் கடந்து பத்து மணி நேர சாலைப் பயணத்திற்குப் பிறகு ஆல்ப்ஸ் மலைகள் நம் கண் முன்னே விரியத் தொடங்கும் போதே மனம் ஒரு நிலையில் இல்லை.சுவிட்சர்லாந்தின் எல்லையில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு நகரங்களின் ஊடே பயணிக்க ஆரம்பித்தோம். காரை ஒட்டி வந்த கணவருக்கோ ‘ஏன்டா கியர் போட்ட வாடகை வண்டியை எடுத்தோம்?’ என்று ஒவ்வொரு நொடியையும் நொந்து கொண்டே வர, ‘அப்பாடா நான் தப்பித்தேன்’ என்று குழந்தையாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த முருகனின் காரைத் தொடர்ந்து போனதால் வழி தவறவில்லை. ஓரிடத்தில் பளிச்சென்று யாரோ எங்கள் காரைப் படம் எடுத்த மாதிரி இருந்தது. பிறகு தான் செல்வி, நீங்கள் வேகமாகக் காரை ஓட்டி இருப்பீர்கள், உங்கள் காரைப் படம் எடுத்து விட்டார்கள். அதற்கான கட்டணம் உங்களுக்கு வந்தாலும் வரலாம் என்று பீதியைக் கிளப்பி விட, ‘ஆஹா இந்த செலவு வேற இருக்கா!! இனிமே கவனமா ஓட்டணும்’ என்று சொல்லிக் கொண்டோம்.

மெதுவாக சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்து, மெல்ல மெல்ல மலைகள் சூழ ஆரம்பிக்க, ஆங்காங்கே சலசலவென்று நீரோடைகள் எங்களைத் தொடர ஆரம்பித்தன. எதை விடுவது, எதை எடுப்பது எனத் தெரியாமல் ஆங்காங்கே வண்டியை நிறுத்திப் படங்கள் எடுத்துக் கொண்டே மலைகளின் மேல் ஏற ஆரம்பித்தோம். இருட்டவும் துவங்கி இருந்தது.

கடைசி நிமிட GPS சொதப்பல்களில் மலை முகடுகள் வரைச் சென்று சாலைகள் இல்லாமல் எப்படியோ அதல பாதாளத்தில் விழாமல், நாங்கள் தங்கப் போகும் வாடகை விடுதியின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டோம். அவர் நீங்கள் இன்னும் மலை ஏறி மேலே வர வேண்டும் என்று சொல்ல, இருட்டு நேரத்தில் இப்படி ஒரு இடத்தில் தப்பு செய்து விட்டோமோ என்று பயந்து கொண்டே ஒரு வழியாக விடுதி வந்து சேரும் பொழுது இரவு நேரமாகி விட்டது. சுற்றிலும் மலைகள் மலைகள் மட்டுமே.

பக்கத்தில் வீடுகள் இல்லை. வரும் வழியில் அசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த சில மாடுகளை மட்டுமே பார்த்தோம். லேசாகக் குளிர்வது போல் இருந்தது. வீட்டு உரிமையாளர் அழகாக தலையை ஆட்டி ஆட்டி முருகன், செல்வியிடம் ஜெர்மனில் பேச, நாங்களும் அவர்கள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பெண்மணி அவர் அப்பாவின் உதவியுடன் அந்த வீட்டை கட்டியதாகச் சொன்ன போது, ஆஹா இந்த மலையில் வீடு கட்டுவதே ஒரு சவாலான வேலை.. அதையும் இவரே செய்தார் என்று சொன்ன போது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லி விட்டு வெளியில் இருந்த விறகுக் கட்டைகளை அடுப்பில் போட்டு சிறிது நேரத்தில் வீடு கதகதப்பாகி விடும் என்று கூறி விட்டு அவர் கிளம்ப, பயணக் களைப்பில் கையில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போனோம்.

காலையில் மேய்ச்சலுக்கு கிளம்பிய ஆடுமாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த வித்தியாசமான மணி எழுப்பிய ‘கிணிங் கிணிங்’ ஓசை எங்கள் தூக்கத்தைக் கலைத்தது. ஜன்னல் வழியே பார்த்தால், சுற்றிலும் நெருக்கமாய் பச்சைப் பசலேன்று மலைகள், நிற்கட்டுமா, போகட்டுமா என யோசித்துக் கொண்டிருக்கும் சூரியன், மலைகளின் மேல் பட்டும் படாமலும் ஒரு மெல்லிய பனித்திரை….. வாவ்!

குளித்து முடித்து எனக்கான டீயையும் போட்டுக் கொண்டு வெளியில் வந்தால் ‘சில்’லென்ற இதமான குளிர் வருட, காலைப்பனியில் புற்கள் ஜொலிக்க, தொலை தூர மலைகளில் செம்மறியாடுகளும், கொழுத்த மாடுகளும் அதன் கழுத்தில் பெரிய பெரிய மணிகளும் , மலைகளில் அந்த மணிகளின் எதிரொலியும், சுத்தமான காற்றும் என்று அந்த நிமிடங்களில் அனுபவித்த ஒவ்வொன்றையும் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத சுகானுபவங்கள் !!

அதற்குள் குழந்தைகளும், கணவரும், செல்வி, முருகனும் எழுந்து வந்து, “ஆஹா, என்ன ஒரு அருமையான இடம், நேற்று இரவு எப்படி பயந்து கொண்டே வந்தோம்!” என்று பேசி மகிழ்ந்தபடியே காலை உணவை முடித்து வீட்டை விட்டு Lake Lucerne பார்க்க கிளம்பினோம்.





இந்த ஊரை ஒரு சொர்க்கம் என்று சொன்னால் அது மிகையில்லை. வளைவும் நெளிவுமாய் ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய மலைப் பாதைகள், குப்பைகள் இல்லாமல், சுத்தமாய் துடைத்து விட்டாற்போல பராமரிக்கப்படும் சாலைகள். சாலையின் இருமருங்கிலும் கொட்டிக் கிடக்கும் அழகை காணக் கண் கோடி வேண்டும்.

வேறென்ன வேண்டும்!


படங்கள்: விஷ்வேஷ் ஓப்லா


லதா

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...