Tuesday, April 17, 2018

கற்றதனாலாய பயன்

ithutamil.com ல் வெளிவந்த கட்டுரை...
MAR 12, 2014

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘திருத்தப்பட வேண்டியவர்கள்‘ என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது.
பரிட்சை
இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ மாணவியர் செய்யும் திருட்டுத்தனங்கள், அது தொடர்பான குறும்புகள், அவர்களைக் கண்டுபிடிக்க ஆசிரியர்கள் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது. பின்னாளில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது பல கல்லூரிகளுக்கும் தேர்வு மேற்பார்வையாளராகச் சென்ற போது எதிர் கொண்ட அனுபவங்கள் இந்தப் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

தேர்வு மேற்பார்வையாளராகச் செல்வதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேண்டா வெறுப்புடன் முதன் முதலாக சென்ற கல்லூரியில் பெரிய ஹாலில் நான்கைந்து ஆசிரியர்களுடன் சேர்ந்து மேற்பார்வை பார்க்க வேண்டி வந்தது. வர்த்தகம், ஆங்கில இலக்கியம், B.B.A மாணவ, மாணவிகள் நிறைந்திருந்த அந்த ஹாலில் நுழைந்தவுடன் சம்பிரதாயமாக முகமன் சொல்லி விட்டு பேராசிரியர் ஒருவர் தேர்வு நியமனங்களை அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்.
பரிட்சைநானும் மற்ற ஆசிரியர்களும் ஹால் டிக்கெட் சரியாக இருக்கிறதா, அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று சரி பார்த்துக் கொண்டே வந்தோம். நகத்தைக் கடித்தபடி சில மாணவர்கள், கடவுளை வேண்டியபடி சிலர், கலங்கிய முகங்கள், அவசர அவசரமாகப் பதட்டத்துடன் உள்ளே நுழைபவர்கள் என்று நவரசங்களுடன் மாணவ மாணவியர்கள். பலரும் ஆண்டவனின் அருளை வேண்டி விபூதி குங்குமத்துடன் பக்தி மயமாக காட்சியளித்தனர்.
சரியாக முதல் மணி ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு விடையெழுதும் பேப்பர்களை கொடுத்துக் கொண்டே வந்தோம். பல மாணவர்கள் நட்புடன் சிரித்துக் கொண்டும், சிலர் தெனாவெட்டாகவும் விடைத்தாள்களை வாங்கி அவர்கள் நம்பரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் கேள்வித்தாளையும் கொடுக்க ஆரம்பித்தோம்.

பரபரவென்று தான் படித்தது ஏதாவது கேட்டிருக்கிறார்களா என்ற பதைபதைப்புடன் மாணவ, மாணவிகள் கேள்வித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் ஒரு பக்கம் எழுதி கூட முடித்திருப்பார்கள்.

நெற்றியைத் தடவிப் பார்த்து ஏமாற்றத்துடன் ஹால் முழுவதையும் நோட்டமிடும் மாணவர்களும், ஒன்றுமே எழுதாமல், எப்படா அரை மணி நேரம் கழியும் பேப்பரை கொடுத்து விட்டு ஓடலாம் என்று பொறுப்பற்ற சிலருமாய் கணங்கள் கரையும்.

சில கில்லாடிகள் கையில் கிறுக்கி வைத்துக் கொண்டும், துண்டுப் பேப்பர்களில் எழுதி வைத்துக் கொண்டும் மேலும் கீழும் பார்த்தபடி எப்படி வெளியே எடுத்து எழுதுவது என்ற தீவிர யோசனையில்!

பிட் அடித்தல்
அன்று தான் தேர்வு கண்காணிப்பாளாராக என்னுடைய முதல் அனுபவம். மற்ற ஆசிரியர்கள் அவர்கள் கடமை முடிந்தது என்று ஆளுக்கொரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் புத்தகங்களை வைத்துக் கொண்டு படிக்கவும் செய்தார்கள்.

எனக்கோ பயங்கர அதிர்ச்சி!

நானும் என்னைப் போல் ஒரு சிலரும் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள்களைக் கொடுத்துக் கொண்டே வந்தோம். சில ஆசிரியர்கள், “ஏன் சும்மா சும்மா சுத்தி வர்றீங்க? அவங்க பாட்டுக்கு எழுதுவாங்க? நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று சொன்னாலும்.. எனக்கு அது சரியாகப்படாததால் என் வேலையைத் தொடர்ந்தேன். அப்போது ஒரு மாணவன், “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணா தர்றேன். பிட் அடிங்க விடுங்க” என்றானே பார்க்கலாம்!!

இவனெல்லாம் எதுக்கு படிக்க வரணும்? என்ன ஒரு திமிர்த்தனம்? பரிட்சை ஹாலில் எக்சாமினரிடமே பேரம் பேசும் கொழுப்பு எங்கிருந்து வந்தது? எல்லாம் பணம், பதவி கொடுக்கும் திமிரு என்ற ஆத்திரத்தில் பொங்கியெழுந்தேன். “ஒழுங்கு மரியாதையா பேப்பரைக் கொடுத்திட்டுப் போனா இத்தோட முடிஞ்சுரும். இல்லைன்னா மூணு வருஷத்துக்கு உன்னால பரிட்சை எழுத முடியாது” என்றவுடன் பேப்பரைக் கொடுத்து விட்டு முணுமுணுத்துக் கொண்டே போனது அந்த புறம்போக்கு!

இந்த முதல் அனுபவம் தந்த எரிச்சல் அடுத்தடுத்த வருடங்களில் அதிகமாகிக் கொண்டுதான் போனதே தவிர குறைந்தபாடில்லை.இப்படியெல்லாம நடக்கிறதே என்கிற என்னுடைய ஆதங்கத்தை மற்ற ஆசிரியர்களுடன் பகிரிந்தபோது, யாரும் எனக்கு ஆறுதலாகவோ, ஆதரவாகவோ பேசவில்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இதற்குப் பழகிப் போயிருந்தனர்.

சிலரோ ஒரு படி மேலே போய், “நீங்க இப்பத் தான வந்திருக்கீங்க! போகப் போகப் புரியும். கண்டுக்காதீங்க” என்று முதுகெலும்பில்லாமல் சொல்லவும் ( அப்படிச் சொன்ன சிலர் இன்று உயிருடன் இல்லை ), ‘சே! இவர்களுடன் இருந்தால் எனக்கும் கெட்ட பெயர் வந்து விடும்’ என்று மேலதிகாரியிடம் சொல்லி இனி இருபது-முப்பது மாணவர்கள் இருக்கும் ஹாலில் போடுங்கள் என்று சொல்லி அதற்கான காரணத்தையும் சொல்லி விட்டேன்.
பரிட்சையில் பெண்கள்
பெண்கள் என்றால் பிட் அடிக்க மாட்டார்கள் என்கிற என் அசட்டு நம்பிக்கையும் அடுத்தடுத்த அனுபவங்களில் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ரொம்ப பெரிசுப்படுத்த வேண்டாம் என்று மேலதிகாரியே அந்த மாதிரி பெண்களை ஹாலை விட்டுப் போகச் சொல்லி விடுவார். அவர்களும் ஏதோ நம் மீது தப்பு இருப்பதைப் போல முணுமுணுத்துக் கொண்டே வெளியே போவார்கள். எல்லோரும் இப்படி இல்லை ஆனால் கணிசமான எண்ணிக்கையில் இது நடந்தது. மாணவிகள் என்றால் கடைசி நிமிடம் வரை எழுதுவார்கள். ஒரு சில மாணவிகள் உண்ணாமல், உறங்காமல் விடிய விடியப் படித்து விட்டு பரிட்சை ஹாலில் மயங்கி விழுந்த நிகழ்வுகளும் உண்டு.

சில மாணவர்கள் ஒன்றுமே எழுதாமல் அடிஷனல் ஷீட்ஸ் மட்டும் வாங்கிக் கட்டி விடுவார்கள். ஆரம்பத்தில் இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. பிறகு தான் தெரிந்தது, யார் விடைத்தாளைத் திருத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து வாங்கி பதில் எழுதி விடுவார்கள் என்று புரிந்தது. அன்றிலிருந்து எழுதாத பக்கத்தை அடித்து விடுங்கள் என்று சொல்லி சரிபார்த்து வாங்க ஆரம்பித்தேன். அதற்கும் அந்த மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. வேறு வழியில்லாமல் செய்து விட்டுப் போனார்கள்!

ஒரு கட்டத்தில் நான் தான் மேற்பார்வையாளர் என்று தெரிந்ததும், என் முன்னாலயே, “இன்னிக்கு அரியர்ஸ் தான்டா” என்று முணுமுணுத்துக் கொண்டும், “மேடம் நீங்க அதோ அந்த ஹாலுக்குப் போகலாமே” என்று சலித்துக் கொள்பவர்களும், இன்னும் சிலரோ, தேர்வு ஹால் வரை வந்து என்னைப் பார்த்தவுடன் “ஹி ஹி ஹி இன்னைக்கு நான் தேர்வே எழுதல. யாரு முகத்துல முழிச்சேனோ!?” என்றும் புலம்பிக் கொண்டும் போய் விடுவார்கள். நீ எவன் முகத்துல முழிச்சா எனக்கென்ன என்று கடைசிவரை என் வேலையில் கடுமையைக் கடைபிடித்தேன். தாங்கள் செய்வது தவறு என்பதைக் கூட உணராமல், குறைந்த பட்சம் குற்றவுணர்வு கூட இல்லாமல் என் முகத்துக்கு நேரே, ” உங்களுக்கென்ன அவார்டா கொடுக்கப் போறாங்க?” என்று கேட்ட மாணவ மாணிக்கங்களும் உண்டு!

அரியர்ஸ் தேர்வுகள் பொதுவாக மதியம்தான் நடக்கும். ஒரு முப்பத்தைந்து மார்க் வாங்க முடியாதவர்கள் பலரும் என்னைக் கண்டவுடன், ‘இந்த வருஷமும் போச்சா??’ என்று எழுந்து போன கதைகள் நிறைய உண்டு.

என்னுடைய கெடுபிடி என் சக ஆசிரியர்கள் சிலருக்கே எரிச்சலாகி இருக்க வேண்டும். ‘கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க’ என்று மறைமுகமாய் அச்கறுத்தியவர்களும் உண்டு.

‘சே! என்ன மாதிரி சமூகம்?’ என நொந்து கொண்ட தருணங்கள் அவை.

பரிட்சை ஹாலில்தான் இப்படியான அனுபவங்கள் என்றால் விடை திருத்தும் பணி இன்னும் மோசம். வீட்டிற்கு வரும் விடைத்தாள்களில் இடைச்சொருகலாக, ‘எனக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விட்டது, மற்றபடி நான் நன்கு படிப்பவன். என்னை நம்பி என் குடும்பமே இருக்கிறது. தயவு செய்து என்னை பாசாக்கி விடவும்’ என்று சொந்தக் கதை சோக கதை எல்லாம் எழுதி நெக்குருக வைப்பார்கள். அதிலும் சில அதிபுத்திசாலிகள் எனக்கு 35 மார்க் போட்டால் நீங்கள் கேட்கும் தொகையை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று ப்ளாங்க் செக் ஆஃபர் கொடுத்திருந்த கொடுமையை இங்கே சொல்லியாக வேண்டும்.



வீட்டிற்கு வரும் விடைத் தாள்களில்தான் இந்த இம்சை என்று விடைத்தாள் குழுவாகத் திருத்தும் இடத்திற்குச் சென்றால் அங்கும் வேறு மாதிரியான சங்கடங்கள். மார்க் போடச் சொல்லி சிலர் மாணவர்களின் நம்பர்களுடன் வந்து, “கொஞ்சம் இந்த நம்பருக்கு..” என்று தலையைச் சொரியும் இடைத் தரகர்கள். அதற்கு வக்காலத்து வாங்கும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள். என்னுடைய கடுமை காரணமாகவோ என்னவோ ஒரு கட்டத்தில் அவர்களே வெறுத்துப் போய் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் இருந்து என்னை முழுமையாக விடுவித்து விட்டார்கள். மிகவும் நிம்மதியாய் உணர்ந்த நாட்கள் அவை.

ஒரு மாணவனால் நூற்றிற்கு முப்பத்தைந்து மதிப்பெண் கூட பெற முடியாமல் போவதற்கு என்னக் காரணங்கள் இருக்க முடியும்? நம்முடைய கல்வி அமைப்பின் அடிப்படையில் கோளாறா? பெற்றோர் மற்றும் சமூக நிர்பந்தங்களுக்காக ஒரு மாணவன் தனக்கு விருப்பம் இல்லாத பாடங்களைப் படிக்க நேர்வதாலா? பணமும், பதவியும் இருந்தால் தங்களால் எதையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்கிற ஆணவமா!?

இதற்கெல்லாம் மாணவர்களை மட்டுமே குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன். ஒரு காலக்கட்டத்தில் திறமைக்கு மட்டுமே இருந்த அங்கீகாரம் இன்றைக்கு பணத்தை விட்டெறிந்தால் கிடைக்கக் கூடியதாக மாற்றிய வகையில் அரசைத்தான் முதல் குற்றவளியாகக் கூறுவேன். எல்லோருக்கும் கல்வி அவசியம்தான். அதே நேரத்தில் அந்தக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொண்டதுதான் இத்தனை பின்னடைவுக்கும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இலவசங்களுக்கு செலவழித்த தொகையில் அரசாங்கமே அயிரக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி கல்வியை தனியார் மயமாவதைத் தடுத்திருக்கலாம். நுகர்வு கலாச்சாரத்தில் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்குமென்பதற்கு ஆதர்ச உதாரணம் இப்போதைய நமது கல்வி அமைப்புதான்.

நிறைய ஆதங்கத்தோடு இந்த நிறைவுப் பத்தியை எழுதுகிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சி, ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பன எல்லாம் அங்கே கிடைக்கும் கல்வியினால் மட்டுமே சாத்தியமாகும். அந்த வகையில் நாம் மிக வேகமாய் ஒரு சரிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நிலையிலாவது ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கான தீர்வுகளை யோசிக்கவும் செயல்படுத்தவும் ஆரம்பிக்க வேண்டும்.

– லதா

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...