Sunday, April 29, 2018

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

ithutamil.com ல் வெளிவந்த கட்டுரை
APR 20, 2016



இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது மாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும்.

திருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும்.

பங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்மனும்,சுந்தரேஸ்வரரும் ஊர்வலம் போகும் வாகனங்களை மராமத்துச் செய்து வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம் தேரோட்டத்திற்குத் தேரை அலங்கரிக்கும் வேலைகள், கோவில் மண்டபங்கள், சுவருக்கு வர்ணமடித்தல், வீதிகளை, விளக்குகளை சரிசெய்தல் எனப் பரபரப்பாக வேலைகள் களைகட்டிவிடும்.

பங்குனி மாதத்தின் கடைசி வாரத்தில் காப்புக்கட்டி, கொடியேற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவின் முதல்பாதி அஃபீஷியலாய் துவங்கும். இந்த விழாவின் நோக்கம் மங்கையர்கரசியாம் மதுரை மீனாட்சியைப் பட்டத்து அரசியாக்கி, திக்கு விஜயம் செய்வித்து, எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணச் செய்வதுதான்.

திருவிழாவின் அடுத்த பகுதியாக அழகர் கோவிலில் அருள்பாலிக்கும் சுந்தரராஜபெருமாளாகிய அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையை நோக்கி வருவதுதான். மதுரையில் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகிரிஷிக்கு மோட்சம் அளித்த பின்னர், அடுத்த மூன்று நாட்கள் நகரின் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களை மகிழ்வித்து பூப்பல்லக்கு கண்டு ஊர் திரும்புவதோடு சித்திரைத் திருவிழா நிறைவுக்கு வரும்.Madurai Music
இந்தக் காலகட்டத்தில் மதுரையையே அலைக்கழிக்கும் வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனாலும் அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள்? வெயில் கொளுத்தினாலும், தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம் கூட்டமாகக் உறவினர்கள், நண்பர்கள் சூழக் கோவிலுக்குச் செல்வதில் தான் என்னே ஆனந்தம்!

மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின் முதலாம் நாள் அம்மை அப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக்குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின் ஊர்வலம் கோலாகலமாக பவனி வர,
எட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் மதுரையின் மகாராணியைக் காண கூட்டம் அம்மன் கோவிலில் ஆரம்பித்து , விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் குழந்தைகளுடனும் சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கும். ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திர விமானத்தில் வந்து தெரு முக்குகளில் அம்மன் திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.
இப்படி ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பரியம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று அம்மன் உலா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்!
தாலி
மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டுத் தங்கள் தாலிக்கயிற்றையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். மதுரை மக்களின் பெரும்பகுதியினர் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற்று, விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய வீடு திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புச் செய்து விடுவதால் கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் நேரில் சென்று வந்த திருப்தி!

திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சொக்கநாதருடன் காட்சி தரும் கோலத்தையும் பார்க்க மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரமாக ஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். பெண்களைக் குறிவைக்கும் இடி மன்னர்களிடம் இருந்தும், ஆண்களைக் குறிவைக்கும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சமேதரராய்ப் பார்த்து மனமுருகி வணங்க, அதனைத் தொடர்ந்து வரும் அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, சர்வ அலங்காரபூஷிதையாகப் பவனி வரும் மீனாக்ஷி அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும். அம்மனின் அழகுப் பூப்பல்லக்கை பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.
சித்திரைத் திருவிழா தேர்மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் வருடம் முழுக்க நின்று கொண்டிருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்தத் தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம் அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண ஒட்டுமொத்த மதுரையும் வெளிவீதிகளில் குவிந்திருக்கும்.

வெடிச் சத்தம், முரசு சத்தத்துடன், மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அந்தப் பிரமாண்ட தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிறத் தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்கப் பெரிய வடங்களும், ‘ஹர ஹர மஹா தேவா’ என்று ஒரே குரலில் சொல்லிக் கொண்டே அதை இழுக்கும் மாணவர்கள், பெரியவர்கள், குழந்தைகள்.. வாழ்வின் மிக ரம்மியமான தருணங்கள் அவை.

தேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களைத் தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, மைக்கில் ஒருவர் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

தேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் ‘ஜேஜே’ என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டு மின்சார வயர்கள் மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு திருவிழா கதைகளை பேசிக்கொண்டே வீடு திரும்பும் மக்கள் கூட்டம்!



அம்மனும், சுவாமியும் வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்பும் குழந்தைகள் இருக்கும் இடங்களில் அவர்கள் கண்பட ஜவ்வு மிட்டாய் விற்பவர்கள், விதவிதமான பலூன்கள், வாட்ச் மிட்டாய், தள்ளு வண்டியில் வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதிகளில் இருக்கும் ஜிகர் தண்டா கடைகளில் கூடும் கூட்டமும் என்று அந்நாட்கள் வியாபாரிகளுக்கும் கொண்டாட்டமான நாட்களே!
கள்ளழகர்மதுரையில் தேரோட்டம் நடக்கிற அதே நாளில் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜபெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து பல்லக்கில் மதுரைக்கு கிளம்புவார். அழகர் மதுரைக்கு கிளம்புவதே தனித்திருவிழாவாய் சொல்ல வேண்டும். அத்தனை ஆர்பாட்டமாய் இருக்கும். மதுரைக்கு வரும் வழியெங்கும் கூடவே மக்கள் வெள்ளம் அவரைத் தொடர்ர்ந்துவரும். ஒவ்வொரு ஊரிலும் மண்டகபடிகளில் எழுந்தருளி மரியாதையை ஏற்றுக் கொண்டு மதுரை எல்லைக்கு மறுநாள் காலையில்தான் வந்து சேர்வார்.
மதுரையின் எல்லையான மூன்றுமாவடியில் கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் உற்சவம்தான் “எதிர்ச்சேவை”. மதுரையே திரண்டுவந்து கள்ளழகரை வரவேற்பது கண்கொள்ளாக் காட்சி. அதிகாலையில் ஊருக்குள் வரும் கள்ளழகர் அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேர இரவாகிவிடும் என்றால் அழகருக்கான வரவேற்பும், உற்சாகமும் எப்படியானதாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Kallazhagar in Vaigaiசித்திரை மாதத்தின் முழுநிலவு நாளில், அதிகாலையில் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வுதான் சித்திரைத் திருவிழாவின் க்ளைமேக்ஸ். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து லட்சோப லட்சம் மக்கள் வைகயாற்றில் திரண்டிருக்க, தங்கக்குதிரை வாகனத்தில், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தவராய், பட்டுடுத்திய அழகர் ஆற்றில் இறங்கும். கண்கொள்ளா காட்சியின் அழகும், சிலிர்ப்பும் அனுபவித்தே அறியவேண்டியது. அழகர் அணிந்து வரும் பட்டின் நிறத்தை வைத்துத்தான் அந்த ஆண்டின் மழை மற்றும் விவசாய விளைச்சலை தீர்மானிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

ஹனுமான், கருடன் வேடம் போட்டுக் கொண்டவர்கள், தண்ணீரை பீய்ச்சிக் கொண்டே ஆற்றில் இறங்கும் அழகரை தீர்த்தவாரி செய்து குளிர்விக்கும் கோமாளிகள், நாமம் போட்டு துளசி மாலை கட்டி நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடிய சொம்பில் சூடம் வைத்து அழகரை மனமார வேண்டி நிற்பவர்கள் என வைகையில் மக்கள் வெள்ளம் கரை புரளும்.

பெருமாளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவித்து சர்க்கரையை அங்குள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளைப் பார்த்த திருப்தியுடனும், ஓசியாகக் கிடைக்கும் விசிறி, தொன்னை வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாப்பிட்டு சிறிது இளைப்பாறி விட்டு வருபவர்களும் உண்டு. பெரியப் பெரிய நாமம் போட்ட உண்டியல்கள், விசிறிகள் புடை சூழ அழகரும் வைகையில் ஒவ்வொரு மண்டபத்திலும் எழுந்தருளுவார்.
Kallazhagar Kovil
அன்று இரவு முழுவதும் வண்டியூரில் நடக்கும் தசாவதார அலங்காரத்தையும் கண்குளிரப் பார்த்து விட்டு கள்ளழகராகத் திரும்பி மலை ஏறும் வரை அவரின் தரிசனத்திற்காக வழியெங்கும் காத்திருக்கும் மக்கள் திருவிழாவை இனிதே முடித்த திருப்தியில் வருடம் முழுவதும் திருவிழாவிற்குக் குறைவில்லாத மதுரையில் வைகாசி விசாகத்திற்காகத் தயாராவார்கள்.

என் மதுரையில் இருந்து இன்றைக்கு நான் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தள்ளியிருந்தாலும் கூட, இந்த திருவிழாக்காலத்தின் பசுமையான் நினைவுகள் என்னை இன்னமும் மதுரையில்தான் வைத்திருக்கின்றன. பதினோரு நாட்கள் மதுரை வீதிகளில் பவனி வரும் அம்மனின் தரிசனம், பாட்டி வீடு, உறவுகளின் வரவு என்று கலகலக்கும் நாட்கள். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளன்று குடும்பத்துடன் தரிசனம் கண்டு அன்றைய பொழுதை மண்டபங்களில் கழித்தது. கூட்டத்தில் தொலைந்து விடாமலிருக்க அப்பாவின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு சென்றது, வைகையில் மக்கள் வெள்ளத்தைக் கண்டு பிரமித்தது, அன்று நாங்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அப்பாவின் நினைவுகள்…
ம்ம்ம்.. இன்றில்லை, என்றைக்குமே எனக்கு மதுரைத் திருவிழா, ஒரு மகத்தான பெருவிழாதான்.
புகைப்பட உதவி: Guna Amuthan
– லதா

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...