Monday, April 25, 2022

பறந்தாலும் விட மாட்டேன் - 2

 பரந்து விரிந்த நீல வானம். அன்று மேகங்கள் எல்லாம் தொலைவில் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம். நியூயார்க் நகரம் அருகே செல்ல செல்ல பல குட்டி விமானங்களும், பெரிய விமானங்களும் என வானில் சிறிது போக்குவரத்து. கார்லோஸ் விழிப்போடு கண்காணித்துக் கொண்டே வந்தார். பறவை ஒன்று மிக அருகே பறந்து சென்றது. நல்ல வேளை! தப்பித்தோம். குட்டி விமானம் ஓட்டுவது சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது என்பது நன்கு புரிந்தது😓 கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த திசையில் எத்தனை வேகத்தில் மற்ற விமானங்கள் பறந்து வருகிறது போன்ற தகவல்கள் வந்து கொண்டேஇருக்க, மற்ற விமானிகள் கேட்கும் தகவல்களும் நமக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. நடுவே எங்களுடைய விமானத்தின் பெயரைக் கேட்டவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உன்னிப்பாக கேட்டுக் கொண்டே வந்தேன். என்ன ஒன்று? அத்தனை பெரிய ஹெட்ஃபோன் பெருஞ்சுமையாக காதில் உட்கார்ந்திருந்தது கொஞ்சம் கடியாகத் தான் இருந்தது எனக்கு. நகரை நெருங்கியவுடன் தாழ பறக்கத் தொடங்கியது எங்கள் விமானம்.

மாநிலத்தின் வடக்கில் அடிராண்டாக்ஸ் மலையில் துவங்கி தெற்கே அட்லாண்டிக் கடலைச் சேரும் வரை ஓடி வரும் நீண்ட ஆறு ஹட்சன். ஆற்றின் இரு கரைகளிலும் எழிலான கட்டடங்கள். அது கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது நியூயார்க் நகரம். அப்பர் மன்ஹாட்டன், மிட்-டவுன், லோயர் மன்ஹாட்டன் என்று மூன்று பகுதிகளிலும் ஓங்கி உயர்ந்த கட்டடங்கள். இங்கு தான் உலகளாவிய பல அலுவலகங்களும் செல்வந்தர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளும் விரவிக் கிடக்கிறது.

டைம்ஸ் ஸ்கொயர், க்ரைஸ்லர், எம்பயர் ஸ்டேட் கட்டடங்கள் உயரத்திற்குப் பறந்து கொண்டிருந்தோம். கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.

"அதுதான் மேடிசன் ஸ்கொயர் கார்டன்" என்று வட்டமாக இருந்த கட்டடத்தை கார்லோஸ் சுட்டிக்காட்ட, அதனைச் சுற்றி உள்ள அலுவலகங்கள், வீடுகள் நீண்ட தெருக்கள் என்று கட்டுக்கோப்பாக அமைந்திருந்த நிலப்பரப்பை மேலிருந்து காண கொள்ளை அழகு!

"அதுதான் கொலம்பியா பல்கலைக்கழகம். அதற்கு அருகே தான் நாங்கள் குடியிருந்தோம். இந்த தெருக்களில் ஓடி இருக்கிறோம் என்று விமானத்தைச் சாய்த்து காண்பிக்கையில்,

" ராசா நீ வண்டிய நேரா ஒட்டுப்பா. இங்க நானே பயந்து போய் உசுர கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லத் தோன்றியது😉

அங்கே தெரியுது "செண்ட்ரல் பார்க்". அவர் காட்டிய திசையில் பச்சைப்பசேலென துளிர் விட்ட மரங்கள் சூழ்ந்த இடம். எங்கு பார்த்தாலும் தெரியும் கட்டட குவியலுக்குள் முத்தாக இப்படி ஒரு பூங்கா! அதுவும் நகரின் மையத்தில் 843 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பாக! அதைப் பற்றி விரிவாக எழுதலாம். முழுவதையும் நானும் மகளும் நன்றாகச் சுற்றியிருக்கிறோம். அடிக்கடி குடும்பத்துடனும் அங்கு சென்று வந்திருக்கிறோம். ஆல்பனி இன்னும் பனிக்காலத்தை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குகிற அதே வேளையில் நியூயார்க் நகரம் இளந்தளிர் பச்சை மரங்களுடன், மழைக்கால பூக்களுடன் அழகாக இருந்தது சிறப்பு.

லோயர் மன்ஹாட்டன்ல் தான் உலக வர்த்தக மையம் எனும் "இரட்டை கோபுரங்கள்" இருந்தன. 9/11 அன்று நடந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு இன்று அதே இடத்தில் "ஒன் வேர்ல்ட் ட்ரேட் சென்டர்" கண்ணாடி ஜன்னல்களுடன் மின்னிக் கொண்டு அமெரிக்காவிலேயே உயர்ந்த கட்டடமாக வானளாவி வளர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதிகளில் 2001ல் நடையாய் நடந்து சுற்றிப் பார்த்திருக்கிறோம். அப்பொழுது தான் நியூயார்க் வந்திருந்த நேரம். வாழ்க்கையில் இப்படியொரு கட்டடங்களை அதுவும் இத்தனை நெருக்கமாக பார்த்ததில்லை. டொரோண்டா நகரம் தான் நான் பார்த்த மிகப்பெரிய மேற்கத்திய நகரம். அதையெல்லாம் ஒன்றும் இல்லை என்று உணர வைத்தது நியூயார்க் நகரம். இன்று மேலிருந்து பார்க்கும் பொழுது அதிக பிரமிப்பாக இருந்தது!

அப்படியே வலது பக்கம் பார்க்கையில் தனித்தீவில் 'சுதந்திர தேவி'! ஹாலிவுட் படங்களில் முழு கோணத்தில் ஹெலிகாப்டர்/விமான காட்சிகளில் பார்த்த ஞாபகம். அழகாக இருந்தது. இந்தக் குளிரிலும் சிலர் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள்! நியூயார்க் வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் இடங்களுள் இதுவும் ஒன்று.

துறைமுகத்தில் கப்பலில் செல்லும் சரக்கு கண்டைனர்கள் வரிசையாக. இப்பொழுது முழுக்க முழுக்க கடல் மேல் பறந்து கொண்டிருந்தோம். நீல வண்ணத்தில் 'மினுக்மினுக்' என மின்னிக் கொண்டிருந்தது கடல் நீர். நாங்கள் இறங்க வேண்டிய இடம் மிக அருகில் வந்து விட்டது. கார்லோஸ் எங்கே எந்த ஓடுபாதையில் இறங்க வேண்டும் என்ற தகவல்கள் அவருக்கு வர, அவரும் குறித்து வைத்துக் கொண்டார்.

இது தான் 'கோனி ஐலண்ட்'. அவர் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்றிருக்கிறோம். அங்கிருக்கும் "தீம் பார்க்" இந்த வட்டாரத்தில் பிரபலமானது. சுழற்ராட்டினங்கள் நன்றாகத் தெரிந்தது. இன்னும் சீசன் தொடங்கவில்லை என்பதால் ஆளரவம் இல்லை. கோடையில் குச்சியில் நறுக்கிய முழு மாம்பலத்தையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். யம் யம் யம்😍

"இது தான் லாங் ஐலண்ட்".

அதற்கு முன்தினம் தான் நாங்கள் இந்தப் பகுதிக்கு காரில் வந்திருந்தோம். அருகிலிருந்த கடற்கரைக்கும் சென்று வந்தோம்.'லாங் பீச்' , பெயருக்கேற்றார் போல் நீண்ட கடற்கரை. அதையொட்டி 'ஜோன்ஸ் பீச்'. ஒன்றிரண்டு மனிதர்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தார்கள். கடலோர வீடுகளுடன் அந்த இடத்தை மேலிருந்து பார்க்க அலையாடும் கடற்கரை அத்தனை அழகாக இருந்தது! கடலைப் பார்த்தாலே வரும் இன்பம் இந்த முறை மேலிருந்து மிக அருகில் பார்க்கையில் மேலும் உற்சாகம்!

"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அழகே
என்னைத் தொடுவாய் மெதுவாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்" மனம் இசைத்துக் கொண்டிருக்க...

"இங்கே ஃபார்மிங்டேலில் தான் நாம் இறங்க வேண்டிய விமான நிலையம் உள்ளது. இன்னும் சில நிமிடங்கள் தான்" கார்லோஸ் கூறவும் அப்பாடா என்றிருந்தது! இப்பொழுது காற்றின் வேகம் அதிகரித்திருந்ததில் திகிலாகி விட்டது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் ரயில் காட்சி தான் நினைவிற்கு வந்தது. அதில் பாலையாவின் வசனம் பிரபலம் ஆயிற்றே!

எங்களுக்கு முன் வேறொரு விமானம் படு வேகத்தில் 'ஜிவ்வ்'வென தரையிறங்கிய பின் ஓடுபாதையில் அழகாக விமானத்தைத் தரை இறக்கினார் கார்லோஸ். "குடுகுடு"வென ஓடி நாங்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் ஏதோ காரை நிறுத்துவது போல் மற்ற குட்டி விமானங்களுடன் நிறுத்தி விட்டு "ரிப்பப்ளிக் ஏர்போர்ட்" அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அங்கே கொலம்பியா நாட்டிலிருந்து வந்திருந்த கார்லோஸின் நண்பர்களைச் சந்தித்து விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு கார்லோஸ் புறப்பட, நாங்கள் சற்று இளைப்பாறினோம். யோசித்துப் பார்க்கையில் மேலிருந்து பார்த்த பல தெருக்களில் நடையாய் நடந்து நகரத்தைச் சுற்றி வலம் வந்திருக்கிறோம் என்று தோன்றியது. அதனால் தான் நகரத்தின் மேல் காதலாகிப் போயிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

காற்றின் வேகத்தில் விமானத்தின் ஆட்டத்தால் வீடியோ பல இடங்களில் மேலும் கீழும் ஆடியபடி இருக்கும். அப்பொழுதெல்லாம் "உயிர் பயம் காட்டிட்டான் பரமா" மொமெண்ட் தான் 😔😆

Wednesday, April 20, 2022

பறந்தாலும் விட மாட்டேன் - 1

நண்பர் கார்லோஸிடமிருந்து சிறு விமானத்தில் ஆல்பனி-நியூயார்க் வரை சென்று வர விருப்பமா என்ற எதிர்பாரா அழைப்பிதழ் பார்த்த கணத்தில் எதுவும் யோசிக்காமல் சட்டென்று 'ஓகே' சொல்லியாயிற்று. அதற்குப் பிறகு தான் அடடா! நான்கு பேர் செல்லும் குட்டி விமானத்தில் பயணம் செய்வது எப்படி இருக்குமோ, காற்று, மழை என்று இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம். இப்படி நானும் ஈஷ்வரும் சேர்ந்து குட்டி விமானப்பயணம் செல்வது சரியா? பாதுகாப்பானது தானா ? வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே என்று ஏகப்பட்ட குழப்பமான கேள்விகள். அதே நேரம், இதை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கவா போகிறது? என்ற சமாதானம் வேறு. ஆனாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அடுத்த நாள் காலை 'டான்' என்று விமான நிலையத்தில் நண்பர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுதும் ஈஷ்வரிடம் சொன்னால்,

"இப்ப நீ சும்மா வர மாட்டியா? உனக்குப் பிடிக்கும்" என்று அதே பதில்.

"எனக்குப் பிடிக்கும் தான். ஆனா ..."

முறைப்பே பதிலாக வந்தது.

நண்பரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். கையில் வைத்திருந்த ஐபேட்- ல் ஆல்பனி-நியூயார்க் வழித்தட வரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.

"கிளம்புவதற்கு முன் ஒரு விமான ஓட்டியாக சில விஷயங்களைச் சொல்லணும். அசம்பாவிதமாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அருகிலுள்ள இடத்தில் தரையிறக்கி விடுவேன். நாம் பெரும்பாலும் ஹட்சன் ஆற்றின் மேல் தான் பறக்கப் போகிறோம். அப்படி ஏதாவது நடந்தால் கரைக்கு அருகில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். சரியா? கடல் மேல் பறக்கும் பொழுது கரையில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். அங்கே நிறைய படகுகள் இருக்கும். அதனால் சீக்கிரமே காப்பாற்றிவிடுவார்கள்."

அடப்பாவி மனுஷா? இதெல்லாம் நேத்தே சொல்லிருக்கலாம்ல என நான் பேந்த பேந்த விழிப்பதைப் பார்த்து, 'லதா, நீச்சல் தெரியுமில்ல?"

நீச்சல் தொட்டியில ஓகே. ஆத்துல, கடல்ல நான் விழும் போதே என் உசுரு என்கிட்ட இருக்காதேன்னு நான் நினைத்துக் கொண்டே,

"பயமா இருக்கே கார்லோஸ்" என்றேன்.

ஈஷ்வரிடம், "வண்டி சாவிய குடுங்க. நான் உசுரோட வீட்டுக்கு கிளம்புறேன். இதென்ன புது வம்பா இருக்கு" என்றவுடன் அவரும் சற்று கலவரமாகத் தான் இருந்தார்.

"நான் 1000 மணிநேரங்கள் வானில் பறந்திருக்கிறேன். குடும்பத்துடன் கலிஃபோர்னியா வரை சென்றிருக்கிறேன். இது வரையிலும் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. யோசித்துக் கொள்." சொல்லிவிட்டு கார்லோஸ் என் பதிலை எதிர்பார்க்க ,

போற உசுரு பறந்து போய் ஹட்சன்ல தான் போகணும்னு இருந்தா யார் என்ன செய்ய முடியும். எனக்கு ஏதாவது நடந்தா எல்லா விபரங்களையும் இங்க எழுதி வச்சிருக்கேன்னு ஈஷ்வரிடம் சொல்லிவிட்டு நானும் வர்றேன் கார்லோஸ் என்றவுடன்,

"வெரி குட். அப்ப கிளம்புவோம்."

அவரைத் தொடர்ந்து நாங்கள் வெளியே நின்றிருந்த குட்டி விமானத்தை வலம் வந்தோம். என்னை விட சிறிது உயரம். விமானியுடன் மூன்று பேர் பறந்து செல்லும் வகையில் குட்டியோ குட்டி விமானம். வண்டிச் சக்கரமோ ஈஷ்வரின் பைக்கை விட சிறிதாக இருந்தது. முருகா! உசுரோட பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடப்பா என்று வேண்டிக்கொண்டு இரண்டு அங்குல படியில் கால் வைத்து உள்ளே போய் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வரும் கார்லோஸும் முன் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். இன்ஜின் சத்தம் கேட்காமல் இருக்க பெரிய ஹெட்ஃபோனை காதில் மாட்டியாயிற்று. இருக்கை பெல்ட் மட்டுமே இருந்ததது.

விமானியின் முன்னே அத்தனை பட்டன்கள். கார்லோஸ் சரிபார்ப்பு பட்டியல் பார்த்து ஒவ்வொரு பட்டன்களையும் தட்டி விட்டு வேகம், உயரம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு அதற்கான கண்ட்ரோல்களையும் சரிசெய்து கொண்டே ,"மேலெழும்பும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். பறவைகளோ, தரை இறங்கும் விமானங்களோ எதுவும் கண்ணில் பட்டால் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மேலெழும்ப உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தார்.

"கடகட"வென பேரிரைச்சலுடன் விமானத்தின் விசிறி சுழல, "ரைட், ரைட் போகலாம்" என்ற உத்தரவு கிடைத்தவுடன் "ரன்வே" பாதையில் "தடக்தடக்" என்று விமானம் அன்னநடை போட்டுச் சென்றது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக சக்கரம் தரையை விட்டு மேலே மேலே மேலே பறந்து பறந்து பறந்து... கார்லோஸ் மிக அழகாக கையாண்டார். எனக்குத்தான் விமானம் ஒருபுறமாக சாயும் பொழுது அடிவயிறு சிறிது கலங்கியது போல் இருந்தது. பக்கத்தில் தானே வீடு. தெரிகிறதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே நான் வேகமாக அசைந்தால் விமானமும் சாய்ந்து விடுமோ என்று பயந்தேன்😁 நல்ல வேளை! அப்படியெல்லாம் நடக்கவில்லை.

3500 அடியில் பறந்து கொண்டிருந்தோம். அதனால் சாலைகள், மலைகள், மரங்கள், குளங்கள், ஏரிகள் எல்லாம் தெரிந்தது. தூரத்தில் போகின்ற மேகங்களே. தூறல்கள் போடுங்கள் பூமியிலே" மனம் குதூகலித்தது.

அப்படியே ஆல்பனி டவுன்டௌன், வரிசையாக மஞ்சள் பேருந்துகள் நின்ற பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டே உறைந்திருந்த குளங்கள், துளிர் விட காத்திருக்கும் மரங்கள் அடர்ந்த கேட்ஸ்கில்ஸ் மலைகள் மேலே பறந்து கொண்டிருந்தோம். 'பச்சைப்பசேல்' என்றிருந்தால் கொள்ளை அழகா இருந்திருக்கும்😊 நினைத்துக் கொண்டேன். திடீரென ஒரு குலுக்கல். ஆஆஆ! மீண்டும் அடிவயிறு பிசைவதைப் போல் கொஞ்சம் பயம்.

"இப்ப நாம ஹட்சன் ஆற்றின் மேல் பறந்து கொண்டிருக்கிறோம்" கார்லோஸ் சொல்ல, எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பஞ்சாயத்து ஓட, மெ..து..வாக ஜன்னல் வழியே பார்த்தால் மழைநீர் கலந்த ஹட்சன் ஆறு பழுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல, தண்ணீரைக் கண்டால் ஜலகண்டம் இருப்பது போல் அத்தனை பயம் எனக்கு. ஒவ்வொரு முறை இந்தியா வர அட்லாண்டிக் மேல் பறக்கும் பொழுதும் ஒருவித இனம் புரியாத பயம் இருக்கும். சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் தான் நம்பிக்கையைத் தருவார்கள். இந்த குட்டி விமானத்தில் அவசரத்திற்கு ஆக்சிஜன் முகமூடியோ, உயிரைக்காக்கும் ஜாக்கெட்டோ எதுவும் இல்லை. நினைத்தாலே பயமாகத் தான் இருந்தது.

மனதை தேற்றிக் கொண்டு வந்தாச்சு. இனி எது வந்தால் என்ன? என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். நியூயார்க் மாநிலத்தில் சுரங்கங்கள் நிறைய இருக்கிறது. அதன் அருகே தொழிற்சாலைகளும் இருந்தது. பச்சைப்பசேல் என அழகாக பராமரிக்கப்பட்ட கோல்ஃப் மைதானங்கள், பெரிய பெரிய பண்ணை வீடுகள், கரையோரங்களில் பங்களாக்கள், தெருக்களில் வரிசையாக வீடுகள் என்று கண்களைக் கவரும் காட்சிகள்.

நீண்ட சரக்கு ரயில் ஒன்று 'ஜூக்கு ஜூக்கு ஜூக்கு" என்று செல்வதைக் காண அத்தனை அழகாக இருந்தது. "தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே என்னென்னவோ என் நெஞ்சிலே..." மனம் பாடிக் கொண்டிருக்கையில், சடாரென்று இறக்கைகள் வலப்புறம் சரிய, மீண்டும் 'திக் திக் திக்'😟

அது தான் "கிங்ஸ்டன்" என்று பாலத்தைக் கடக்கையில் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். அது ஒரு பழமையான வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுப்பிரமணி செஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள ஓரிருமுறை சென்றிருக்கிறான். நியூயார்க் மாநிலத்தின் முதல் தலைநகரமாக இருந்தது பின் ஆல்பனி மாநில தலைநகரமாகி விட்டது. அதனைக் கடந்து பொக்கீப்சீ நகரத்தின் அழகிய பாலத்தையும் கடந்தோம். அதற்குப் பிறகு "பியர் மௌண்டைன்" கரடி போல் கருங்கல் மலை.

"நியூயார்க் நகரை நெருங்கி விட்டோம்" என்று கார்லோஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பினார். 75மைல் தொலைவில்
"நியூயார்க் நகரம் தெரியும் நேரம்
கட்டடங்கள் அடர்ந்தது
அழகும் தெரிந்தது..."

Tuesday, April 5, 2022

திபெத் சுற்றுலா பயண நிகழ்ச்சி

தொலைக்காட்சி, யூடியூப்ல் வரும்  பயண நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளில் வெறும் சுற்றுலாத்தலங்களை மட்டும்  சிலர் காண்பிப்பார்கள். சிலரோ, மக்களின் உணவு, உடை, நாகரீகம், பண்பாடு என்று பல விஷயங்களைத் தெரிவிப்பார்கள். நாம் செல்ல முடியாத உலகை இவர்கள் விவரிப்பதால் பார்ப்பதற்கும் ஆவலாக,  வெளிநாடுகளில் பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் 'ஜம்யங்' என்ற திபெத்தியர் வழங்கும் "ட்ராவல் திபெத்" குறுந்தொடர்கள். அத்தனை பொறாமையையாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று நம் கண்களுக்கு விருந்தாக பல அருமையான தொடர்களைச் சுவைபட அளித்திருக்கிறார் மனுஷர்! உயர்ந்த மலைகள், பனி உருகியோடும் நீண்ட ஆறுகள், வண்ண வண்ண குளங்கள், நதிகள், பசுமை போர்த்திய விளைநிலங்கள், கட்டடங்கள், காடுகள், அழகு மடாலயங்கள் என நம்மைச் சுண்டி இழுக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். ஜம்யங்கின் குரலும், தொகுத்து வழங்கும் விதமும் தொடரை மேலும் இனிமையாக்குகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாலோ என்னவோ அருமையான சாலைகள் நாடு முழுவதும் போடப்பட்டிருக்கிறது. பெருநகரங்களைத் தவிர கிராமங்களில் மக்கள் கூட்டம் இல்லை. அத்தனை வெள்ளந்தி மனிதர்களாக தெரிகிறார்கள். அவர்களின் விடியலே எழுந்தவுடன் உலக நன்மைக்காக வேண்டிக் கொண்டு வாசனை மூலிகைகளை வீட்டு வாசலில் இருக்கும் அடுப்பில் தூபம் போடுவதில் துவங்குகிறது. தனக்காக, தன் குடும்பத்திற்காக கோவில் கோவிலாக வேண்டிக்கொண்டு அலையும் சுயநலம் பிடித்த உலகில் இவர்களின் எளிய வாழ்க்கையும் அணுகுமுறையும் மனதிற்கு இதமாக இருக்கிறது.

கிராமங்களில் வசிப்போர் கால்நடைகள், பார்லி, காய்கறி, மலர்த்தோட்டங்கள் சூழ வாழ்கிறார்கள். கிடைக்கும் பாலில் வெண்ணெய், பாலாடைக்கட்டியை  அவர்களே தயாரித்து விடுகிறார்கள். பார்லி பவுடரில்  ரொட்டி சுடுவதும், வெண்ணையில் தேனீர் போடுவதும், காட்டு எருமைகளின் இறைச்சி, காய்கறிகளைக் கொண்டு செய்த சூப் என கிடைப்பதைக் கொண்டு அவர்களுடைய அன்றாட உணவு எளிதாக முடிந்து விடுகிறது. 

ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தர் வழிபாடு செய்ய ஒரு பூஜை அறை உள்ளது. தினமும் காலையில் எழுந்தவுடன் பூஜையறையில் கிண்ணங்களில் நீரை நிரப்பி வழிபடுகிறார்கள். அதற்காக நீரைப் பிடித்துக் கொண்டு வர காலையிலேயே கிளம்பி விடுகிறார்கள். வயதானவர்கள் கையில் ஒரு மாலையையோ உருளையோ வைத்து மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டு வேலைகளைப் பெண்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கு மேல் இருப்பதால் குளிருக்கும், பனிக்கும் பஞ்சமில்லை. ஹீட்டர் வசதிகள் இல்லாமல் கிராமப்புற மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அதிசயமாக இருக்கிறது!

வீட்டிற்கு அருகே ஓடும் ஓடை, நதியிலிருந்து சுத்தமான நீரை எடுத்துப்  பயன்படுத்துகிறார்கள். மர அடுப்புகள் தான் பல இடங்களிலும். பெரிய வீடுகள் முதல் சிறு குடிசைகள் வரை இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புத்த மடாலயங்கள் தான்! இயற்கையுடனும் இறைவழிபாடுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இமயமலை அடிவாரத்தில் வாழும் திபெத்தியர். 

ஜம்யங் உலகின் அரிய மடலாயங்களுக்கு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு தொடரும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல கொள்ளை அழகு. மக்கள் மிகவும் சாத்வீகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் புண்ணியத்தலங்களுக்கு குடும்பங்களுடன் செல்கிறார்கள். ஊர்கள் ஒவ்வொன்றும் அத்தனை நேர்த்தியாக , கட்டடங்கள் அழகிய வண்ணங்களில். படபடக்கும் கொடிகள் சூழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மடாலயங்கள், ஸ்தூபிகள், பொன்னால் செய்யப்பட்ட புத்தர்கள், பனிமலைகளுக்கிடையே எப்படி இவ்வளவு உயரமான மடாலயங்களை, தியான மண்டபங்களை கட்டினார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது இத்தொடர் ஒவ்வொன்றும்.

இந்துக்கள் பலரும் தரிசிக்க நினைக்கும் கைலாச மலைக்கு கூட நம்மை அழைத்துச் செல்கிறார் ஜம்யங். முடிந்தால் நீங்களும் கண்டுகளியுங்கள்.  

Travel Tibet

ஆல்பனியிலிருந்து ஒரு மணிநேரத்தொலைவில் கேட்ஸ்கில் மலையடிவாரத்தில் 'வுட்ஸ்டாக்' என்ற சிற்றூர் இருக்கிறது. 1969ல் இங்கு நடந்த இசைத் திருவிழாவால் பிரபலமான ஊர். வியட்நாம் போரில் அநியாயத்திற்கு மக்களையும் பொருளாதாரத்தையும் இழந்து இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு நிம்மதியைத்தேடி புகை, போதை, இசை என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இங்கு நடைபெற்ற இசைத்திருவிழா வரலாற்றையே புரட்டிப் போடும் அளவிற்கு வெற்றி பெற்றது. பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்றுக் கொண்டதும் கட்டுக்கடங்காத கூட்டமும் இன்று வரையில் 'வுட்ஸ்டாக்' என்றதும் மக்களுக்கு நினைவில் வரும் நிகழ்வாக நியூயார்க் வரலாற்றில் அமைந்து விட்டது.  இன்று இசை, ஓவியக்கலைக்கூடங்கள் நிறைந்த அமைதியான ஊராக பல கடைகளுடனும் உணவகங்களுடனும் இயற்கை எழில் சூழ மக்கள் வந்து செல்லும் இடமாக மாறி விட்டிருக்கிறது. அங்கு முதல் முறை சென்றிருந்த பொழுது காபிக்கடையில் ஒருவர் இந்தியர்களா? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு விட்டு ஐந்து நிமிட மலைஏற்றதில் அருமையான திபெத்தியன் மடாலயம் ஒன்றுள்ளது. கண்டிப்பாக பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று செல்ல வேண்டிய வழியையும் கூறினார். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர். இந்தியா, நேபாளம், திபெத் சென்று வந்ததாக அவருடைய இனிய அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் வுட்ஸ்டாக் இசைத்திருவிழா அன்று எடுத்த பல படங்களை வைத்திருந்தார்கள். 

அவர் சொன்ன மடாலயத்தைத் தேடி மலையேறிச் சென்ற எங்களுக்கு அப்படியொரு ஆச்சரியம். வண்ண வண்ண கொடிகளுடன் அந்த இடமே ரம்மியமாக இத்தனை பெரிய கட்டடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களே என்ற பிரமிப்புடன் உள்ளே சென்றால் மிகப்பெரிய தங்கமுலாம் பூசிய புத்தரின் சிலை, சிகப்பு, மஞ்சள், ஊதா வண்ணங்களுடன் ஓவியங்கள் தீட்டப்பட்ட சுவர்கள், விளக்குகள் என்று அந்த இடமே ஜெகஜோதியாக மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய அறையில் மக்கள் அமர்ந்து தியானிக்க வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளும் அங்கிருந்தன. அருகே தாரா சந்நிதானத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. தாளத்துடன் முரசு ஒலியும்  இசைக்க துறவிகள் மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அதனைக் கேட்பதற்கே அத்தனை ரம்மியமாக தியான நிலைக்கு அழைத்துச் சென்றது.

தலாய் லாமா ஆசியுடன் வட அமெரிக்காவில்  அமைந்துள்ள மிகப்பெரிய புத்த மடாலயம். மூன்று வருடங்களுக்கு முன் தற்போதைய மடாலய தலைவர் புதிய ஸ்தூபிகளை நிர்மாணிக்க வந்திருந்தார். அவர்களுடைய கலாச்சாரப்படி  ஆற்றை நோக்கிய மலை உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பு. பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும் அமெரிக்கர்கள் பலரும் இங்கு வந்து தியானித்து விட்டுச் செல்கிறார்கள்.  

கோவிட் தொற்றுப்பரவல் காலத்தில் மூடப்பட்டிருந்த மடாலயம் இரு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் திறக்கப்பட்டது. 

Tibetan Moanstery, NY 

மலர்களே மலர்களே இது என்ன கனவா?


மலர்களே மலர்களே இது என்ன கனவா? அப்படிதான் இருந்தது நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் ப்ரான்க்ஸ் நகரின் தாவரவியல் பூங்காவில் 'ஆர்க்கிட்' பூக்கள் கண்காட்சியைக் கண்ட பொழுது. வீட்டில் ஒரு ஆர்க்கிட் செடியை வளர்க்கவே அத்தனை கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இத்தனை வகைகளைப் பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்ற மலைப்புடன் வளைய வந்து கொண்டிருந்தேன்! சிறகை விரித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியைப் போல், பறவையைப் போல், சிறு சாக்கு மூட்டைகள் என எத்தனை எத்தனை ரகங்கள், வண்ணங்கள், அமைப்புகள்! இயற்கையின் முன் நாம் அனைவருமே ஒன்றுமில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்டே இருந்தது.

நாங்கள் சென்றிருந்த நாளன்று உடலை ஊடுருவும் குளிர். நல்ல வேளை! வண்டிகளை நிறுத்த பூங்காவிற்குள் இடங்கள் இருந்தது பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. எதிரே பழமையான பிரபலமான அழகான ஃபோர்தாம் பல்கலைக்கழகம் உள்ளது.கண்காட்சி நடைபெற்ற இடத்தில் மிதமான வெட்பநிலையில் மலர்களைக் கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் பூங்கா ப்ராங்க்ஸ் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ளது. நியூயார்க் நகரத்தில் எங்கு தான் போக்குவரத்து நெரிசல் இல்லை😞

250 ஏக்கரில் அழகிய காடு, ரோஜா தோட்டம், குழந்தைகளுக்கான தோட்டம், பூங்காவைச் சுற்றி வர நடந்து செல்லும் நீண்ட பராமரிக்கப்பட்ட பாதைகள் என்று பச்சைப்பசேலென கொள்ளை அழகுடன் காண்போரை வசீகரிக்கும் வகையில் பூங்காவை அமைத்திருக்கிறார்கள். சிறு ரயிலும் பூங்காவைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூங்காவிற்குள் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை மக்கள் பார்வையிட முடியும். பலவிதமான மரங்களும், செடிகளும், பூக்களும் அலங்கரிக்க, மிதமான வெப்ப நாளில் அங்கு செல்வது நல்லது. ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் வைத்திருக்கிறார்கள். திருமணம், பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் வசதிகளும் இருக்கிறது.  பூங்காவிற்குள் செல்ல நாம்  செலுத்தும் கட்டணத்தை நல்ல முறையில் செலவழிப்பதை நேரிடையாகவே காண முடிகிறது. மேலும் நன்கொடைகளை வழங்கி பூங்காவிற்கு உதவும் வசதிகளும் உள்ளது.

2020ல் சான்ஃபிரான்சிஸ்கோ தாவரவியல் பூங்காவில் உலகில் உள்ள அனைத்து தாவரங்களையும் மலர்களையும் கண்டு பிரமித்துப் போயிருந்தேன். 2021ல் புரூக்ளின் தாவரவியல் பூங்காவில் செர்ரி மலர்களின் அணிவகுப்பைக் கண்டு வியந்தோம். 2022ல் ப்ரான்க்ஸ் தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்கள் கண்காட்சியில் இத்தனை ஆர்க்கிட் வகைகளா என்று ஆச்சரியப்பட்டுப் போனோம். எல்லாம் மகளால் சாத்தியமானது💓 நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல பூங்காக்கள் அனைத்தும் மிக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பல அரிய வகைத் தாவரங்களையும் பொக்கிஷமாகப் பாதுகாக்குகிறார்கள். தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு இயற்கையின் அவசியத்தை உணர்த்தவும் தவறுவதில்லை இப்பூங்காக்கள்.

மழைக்காலம் தொடங்கி விட்டது. அனைத்துப் பூங்காக்களும் மலர்களால் பூத்துக் குலுங்கும் நேரம். மக்களும் இவற்றையெல்லாம் கண்டு களிக்க கிளம்பிவிடுவார்கள்.

"In nature, nothing is perfect and everything is perfect."






Sunday, April 3, 2022

Thirty Nine



ஒவ்வொரு கொரிய தொலைக்காட்சித் தொடரின் முடிவில் தோன்றுவதெல்லாம் எப்படித்தான் இப்படியொரு கதைக்களம் இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ என்ற ஆச்சரியம் தான்! எளிமையான நாம் கடந்து வரும் பாதை தான். அதைச் சொல்லிய விதமும் கண்களை நனைக்கும் சில காட்சிகளும் என மற்றுமொரு அழகான தொடர், "Thirty Nine".

39 வயதான மூன்று தோழிகளைச் சுற்றி நடக்கும் வாழ்க்கைப் பயணம் தான் கதை. பள்ளி வயதில் எதேச்சையாகச் சந்தித்து நட்பாகி அது வருடங்கள் பல கடந்தும் தொடர்ந்து பயணிக்கிறது. மூவருக்கும் விருப்பமான உணவுகளைத் தேடி உண்பது முதல் அவரவர் பணிகளில் மும்முரமாக இருக்க, தோழிகளில் ஒருத்தி எதிர்கொள்ளும் பிரச்சினையை மற்ற இருவரும் ஆதரவாக இருந்து எப்படி கரை சேர்க்கிறார்கள் என்று இதமாகச் செல்கிறது தொடர்.

இந்தியர்களைப் போலவே கொரியர்களும் பெண்களுக்குத் திருமணம் என்பது தான் எல்லாமே என்று நினைக்கிறார்கள். எல்லா தொடர்களிலும் அதனை வலியுறுத்தும் வசனங்கள் இல்லாமல் கடக்க முடியாது. ஆனால் மேற்கத்திய உலகைப் போல் "டேட்டிங்" சமாச்சாரங்களும் இங்கு உள்ளது. படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டால் பெண்கள் தனியே அவரவர் வாழ்க்கையைப் பார்க்கத் துவங்கி விடுவது வழக்கம் போல. பெற்றோர்களும் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து கொண்டு வாழ்கிறார்கள். இத்தகைய உலகில் இளவயதில் நண்பர்கள் தான் எல்லாமுமாக இருக்கிறார்கள் .

"Letting each other do whatever they want is respecting each other."
இத்தொடரில் அப்படித்தான் இந்த மூன்று நெருக்கமான தோழிகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக அதே நேரத்தில் தங்கள் வாழ்க்கையையும் கவனித்துக் கொண்டு வாழ்வதைப் போல் காட்டியிருக்கிறார்கள்.

அனாதை இல்லத்தில் வளரும் பெண் ஒருத்தி தன் சொந்த தாயைத் தேடி அலைய, கிடைத்த நட்பில், அன்பான புது உறவில் இருந்தாலும் தான் அனாதையாக்கப்பட்டதில் ஒரு சோகம் அவளுக்கு. தோழிகளின் மேல் காட்டும் பரிவும் பாசமும், தத்தெடுத்த பெற்றோர்கள், தமைக்கையிடம் காட்டும் நெருக்கமும் அன்பும், பெற்று குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றவளை விட வளர்த்தவர்கள் மேல் என்று உணரும் தருணம் வரை அவளின் போராட்டம் ஒரு பக்கம் என 'ஜெயன் மீ டூ' மனதைக் கவருகிறார். காதலனைக் கைப்பிடிக்க முடியாமல் காதலையும் வெறுத்து ஒதுக்க முடியாமல் நோயுடன் போராடும் பெண் தன்னம்பிக்கையுடன் மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் தான் இத்தொடரின் சிறப்பு. அமைதியாக வெள்ளந்தியாக 'கிம் ஜி ஹியுன்' மற்றுமொரு பாத்திரப் படைப்பு. இவர்கள் மூவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம், அவரவர் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் துணை நிற்பது என அழகான கதை.'படபட'வென மனதில் எதையும் ஒளித்து வைத்துக் கொண்டு பேசாத நேர்மையான பெண் பாத்திரத்தில் நடித்திருக்கும் 'சோன் ஏ ஜின்' பொம்மை மாதிரி அழகு. அழுகையை கட்டுப்படுத்த அவர் சிரமப்படும் காட்சிகளில் நம்மை அழ வைத்துவிடுகிறார். 

நடுநடுவே காதல், குடும்பம், உணவு, சோஜு என்று போட்டுக்கொள்ள வேண்டும்.

"When we encounter an inconvenient truth, the truth itself isn’t what makes us flustered. We become flustered because we finally encounter something ominous that we’ve strived so hard to bottle up. That’s why we feel uneasy about the truth."

இறப்பு எல்லோருக்கும் வருவது தான். ஆனால் நோயினால் இறக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிந்த பெண் ஒருத்தி அதைச் சிறப்பாக கையாளுவதும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக தன்னை வழியனுப்ப அவள் மேற்கொள்ளும் முயற்சிகளும் என நேர்மறை எண்ணங்களுடன் வெளிப்படுத்திய விதத்தில் இந்தத் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. தனக்குப் பின்னால் தன் பெற்றோருக்காக, தன் காதலனுக்காக, தோழிகளுக்காக என்று ஒவ்வொவொன்றையும் செய்திருப்பதாக காட்டும் காட்சிகள் அத்தனையும் அருமை.

கொரிய தொடர்களின் தரம் மென்மேலும் கூடி வருகிறது. என்ன அழகான பாந்தமான கண்களை உறுத்தாத உடைகளை உடுத்துகிறார்கள் இந்தப் பெண்கள். பொறாமையாக இருக்கிறது😛 மழை ,பனிமழை, வெயில், மலர்கள் என்று மாறும் காலங்களில் வரும் காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு.

கொரியன் ஆண்கள் உண்மையிலேயே மென்மையானவர்களாக அல்லது நாடகத்தில் இப்படி பாத்திரங்களைப் படைக்கிறார்களா என்று தெரியவில்லை. மென் காதல், மென் சிரிப்பு, மென் முத்தம் என்று மென்மையாகச் செல்கிறது💕

வாழ்க்கையில் வரும் ஏற்றத்தாழ்வுகளை நாம் கையாளும் விதத்தில், அணுகும் முறையில் நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும். அழகான நட்பும் அன்பான உறவுகளும் அமைந்து விட்டால் சாவைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இத்தொடர் சொல்லும் கருத்து இதுதான்.

"Some of us had a new beginning and some faced an end when we’re… Thirty Nine."

வாரத்தில் இரு நாட்களுக்காக காத்திருந்து கண்ட அருமையான தொடர். நெட்ஃபிளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...