மலர்களே மலர்களே இது என்ன கனவா? அப்படிதான் இருந்தது நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் ப்ரான்க்ஸ் நகரின் தாவரவியல் பூங்காவில் 'ஆர்க்கிட்' பூக்கள் கண்காட்சியைக் கண்ட பொழுது. வீட்டில் ஒரு ஆர்க்கிட் செடியை வளர்க்கவே அத்தனை கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இத்தனை வகைகளைப் பாதுகாத்து வளர்க்கிறார்கள் என்ற மலைப்புடன் வளைய வந்து கொண்டிருந்தேன்! சிறகை விரித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியைப் போல், பறவையைப் போல், சிறு சாக்கு மூட்டைகள் என எத்தனை எத்தனை ரகங்கள், வண்ணங்கள், அமைப்புகள்! இயற்கையின் முன் நாம் அனைவருமே ஒன்றுமில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்டே இருந்தது.
நாங்கள் சென்றிருந்த நாளன்று உடலை ஊடுருவும் குளிர். நல்ல வேளை! வண்டிகளை நிறுத்த பூங்காவிற்குள் இடங்கள் இருந்தது பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. எதிரே பழமையான பிரபலமான அழகான ஃபோர்தாம் பல்கலைக்கழகம் உள்ளது.கண்காட்சி நடைபெற்ற இடத்தில் மிதமான வெட்பநிலையில் மலர்களைக் கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் பூங்கா ப்ராங்க்ஸ் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ளது. நியூயார்க் நகரத்தில் எங்கு தான் போக்குவரத்து நெரிசல் இல்லை😞
250 ஏக்கரில் அழகிய காடு, ரோஜா தோட்டம், குழந்தைகளுக்கான தோட்டம், பூங்காவைச் சுற்றி வர நடந்து செல்லும் நீண்ட பராமரிக்கப்பட்ட பாதைகள் என்று பச்சைப்பசேலென கொள்ளை அழகுடன் காண்போரை வசீகரிக்கும் வகையில் பூங்காவை அமைத்திருக்கிறார்கள். சிறு ரயிலும் பூங்காவைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூங்காவிற்குள் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை மக்கள் பார்வையிட முடியும். பலவிதமான மரங்களும், செடிகளும், பூக்களும் அலங்கரிக்க, மிதமான வெப்ப நாளில் அங்கு செல்வது நல்லது. ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் வைத்திருக்கிறார்கள். திருமணம், பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் வசதிகளும் இருக்கிறது. பூங்காவிற்குள் செல்ல நாம் செலுத்தும் கட்டணத்தை நல்ல முறையில் செலவழிப்பதை நேரிடையாகவே காண முடிகிறது. மேலும் நன்கொடைகளை வழங்கி பூங்காவிற்கு உதவும் வசதிகளும் உள்ளது.
2020ல் சான்ஃபிரான்சிஸ்கோ தாவரவியல் பூங்காவில் உலகில் உள்ள அனைத்து தாவரங்களையும் மலர்களையும் கண்டு பிரமித்துப் போயிருந்தேன். 2021ல் புரூக்ளின் தாவரவியல் பூங்காவில் செர்ரி மலர்களின் அணிவகுப்பைக் கண்டு வியந்தோம். 2022ல் ப்ரான்க்ஸ் தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்கள் கண்காட்சியில் இத்தனை ஆர்க்கிட் வகைகளா என்று ஆச்சரியப்பட்டுப் போனோம். எல்லாம் மகளால் சாத்தியமானது💓 நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல பூங்காக்கள் அனைத்தும் மிக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பல அரிய வகைத் தாவரங்களையும் பொக்கிஷமாகப் பாதுகாக்குகிறார்கள். தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு இயற்கையின் அவசியத்தை உணர்த்தவும் தவறுவதில்லை இப்பூங்காக்கள்.
மழைக்காலம் தொடங்கி விட்டது. அனைத்துப் பூங்காக்களும் மலர்களால் பூத்துக் குலுங்கும் நேரம். மக்களும் இவற்றையெல்லாம் கண்டு களிக்க கிளம்பிவிடுவார்கள்.
"In nature, nothing is perfect and everything is perfect."
No comments:
Post a Comment