Wednesday, February 8, 2023

வாழ்க வளமுடன்!

நேற்று ஷூ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி துள்ளிக்குதித்துக் கொண்டே வேகமாக வந்து, "ஹாய் மை நேம் இஸ் சூஸன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "என்ன மாதிரியான ஷூ வேண்டும்.?" என்று கேட்டார்.

நானும், " எனக்கு உயிர்போற குதிகால் வலி. நல்ல ஷூ வேண்டும்." என்றேன்.

அவரும் பாதங்களைப் படமெடுத்து சிறிது நேரம் ஏன் குதிகால் வலிக்கிறது என்று ஒரு மருத்துவரைப் போல் படங்களை வைத்து விளக்கி விட்டு, உள்ளே சென்று ஷூக்கள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று போனார்.

நரைத்த தலைமுடி. குட்டையான உருவம். தெளிவான பேச்சு. துறுதுறு முகம். வயது 55+ ஆக இருக்கலாம். எப்படி உற்சாகமாக வேலை பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று அட்டைப்பெட்டிகளுடன் வந்தவர் ஒரு பெட்டியிலிருந்து ஷூ ஒன்றை எடுத்து லேஸ் பிரித்து, "இதைப் போட்டுப் பார்." என்றார்.

"எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு." சொல்லிக் கொண்டே வாங்கிப் போட்டு நொண்டி நொண்டி நடந்து பார்த்து, அதற்குள் அவர் இரண்டாவது, மூன்றாவதையும் பிரித்துக் கொடுக்க நானும் போட்டுப் பார்க்க...

"தேர்ந்த மருத்துவரைப் போல இத்தனை விஷயங்களைப் பேசுகிறீர்களே. அது சம்பந்தமாக படித்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "நான் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். இருபது வருடங்கள் நியூயார்க் சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பபாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஒய்வு பெற்றேன்." என்று ஆச்சரியமூட்டினார்!

"அப்ப கொரோனா காலத்துல நீங்க இல்லையா?"

"ஆறு மாதம் வரை இருந்தேன். அதற்கு முன்பு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுப்பரவல் , டிக் வேறு பல பூச்சிகளின் மூலம் உருவாகும் நோய்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒய்வு பெற்றதும் 'LLBean' என்ற கடையில் துணிகளை மடித்து வைப்பது பொருட்களை வரிசைப்படுத்தி வைப்பது போன்ற வேலைகள். இங்கு சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். எனக்கு ஓட மிகவும் பிடிக்கும். என் அம்மா 100 வயதாக இரு வாரங்கள் இருக்கும் பொழுது தான் இறந்தார். அதுவரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தவர். இங்கு வேலை செய்வதால் பலரையும் தினமும் சந்திக்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது."

ஓ! அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினியியல் துறையில் வேலை கிடைத்தும் இருமுறையும் என்னால் சேர முடியவில்லை." என்று என் அனுபவத்தையும் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கனடாவில் சாஸ்கேட்ச்சுவான் எனும் குளிர் பிரதேசத்தில் பிறந்து கால்கரியில் படித்து முடித்து அமெரிக்காவில் வந்து செட்டிலாகியிருக்கிறார். அவருடைய குழந்தைகளை ஒரு பஞ்சாபி பெண்மணி தான் வளர்த்திருக்கிறார். அவருடைய குழந்தைகள் பஞ்சாபி உணவை விரும்பி உண்பார்கள். இந்தியாவில் நான் எந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டார்.

"கனடாவில் வெளிநாட்டவர்களை விரும்பி அழைத்துக் கொள்வார்கள்." அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சொல்லாமல் கண்ணை உருட்டினார்.

என் பெயரையும் தவறில்லாமல் உச்சரித்தார். பரவாயில்லையே என்றவுடன் அவரின் கீழ் படித்த இந்திய மாணவர்களின் பெயர்களைச் சொன்னார்.
பணம் கொடுத்து விட்டுத் திரும்புகையில் "சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்." என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாகவே அமெரிக்காவில் "கஸ்டமர் கேர்" என்பது தொழிலின் அடிப்படை. அவர்கள் தான் நமக்கு மூலதனம் என்று உணர்ந்த எந்த நிறுவனமும் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள பணியாட்களுக்கு பயிற்சி அளிக்கும். நான் சென்ற கடையும் ஷூக்களுக்கு மிகவும் பிரபலமானது. அதனால் தான் கொள்ளை விலையில் விற்றாலும் வாங்கி கொண்டுச் செல்ல கூட்டம் இருக்கிறது.

. மெத்த படித்தவர்கள் என்ற அகம்பாவோமோ எந்த வேலையையும் கீழ்த்தரமாக என்னும் மனோபாவமோ இல்லாது நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பலரையும் அறிவேன். எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாகவே நான் இங்கு பகுதி நேரம் வேலை செய்கிறேன் என்று சொல்வார்கள். அமெரிக்கர்கள் பலரிடமும் இருக்கும் இந்த குணாதிசயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் மக்களில் பலரும் தங்களால் தான் அமெரிக்காவில் தினசரி வேலைகள் நடப்பதைப் போல் 'நான் இப்படியாக்கும் நான் அப்படியாக்கும்' என பீலா விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மனிதர்களிடையே வெட்டி கௌரவம் பார்க்காமல் உயர் படிப்பு படித்திருந்தாலும் ஒய்வு காலத்தில் அதற்கு சம்பந்தமே இல்லாத தனக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சூஸனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.


வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...