எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஏழாவது தொடராக உத்தரகாசி-குப்தகாசி பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் உத்தரகாசி -குப்தகாசி
தடைகள் பல கடந்து கங்கோத்ரியில் கங்கா அன்னையைத் தரிசித்த பரம திருப்தியுடன் உத்தரகாசியிலிருந்து குப்தகாசிக்கு அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். ஏழு மணி நேரப் பயணம். காலை உணவைப் பொட்டலம் கட்டிக்கொடுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை பாகீரதி ஆற்றை வணங்கி மனநிறைவுடன் ‘பை பை உத்தரகாசி, பை பை ஷிவ்லிங்கா ரிசார்ட் ‘ என்று அங்கிருந்து விடைபெற்றோம். குளிர்காற்று உடலை வருட, எங்களைப் போலவே அங்கு தங்கியிருந்த யாத்திரீகர்கள் பலரும் கேதார்நாத் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேர மலைப்பயணத்தில் ‘சவ்ரங்கி கால்’ என்னுமிடத்தில் வண்டியை நிறுத்தினார் அசோக்குமார்ஜி. இரண்டு மூன்று சுற்றுலா வாகனங்கள் எங்களுக்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் மலைகள். நான்கைந்து பலகாரக்கடைகள். அழகான ‘சோரங்கிநாத்’ கோவில். பனிக்காலத்தில் இங்கு கொட்டிக் கிடக்கும் பனியைக் கண்டுகளிக்க மக்கள் வருவார்களாம்! திரும்பிய திசையில் எல்லாம் பசுமையான இமயமலை பரவியிருந்தது கொள்ளை அழகு! காலை பூஜை முடிந்து அலங்காரங்களுடன் திவ்யமாக தேவி தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிறிய கோவில் தான் என்றாலும் சுத்தமாக இருந்தது. கோவிலைச் சுற்றி வந்து சிறிது நேரம் மலைக்காற்றைப் பூரணமாக சுவாசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்த மரங்களில் மக்கள் வேண்டுதலுக்காகத் துணிகளை முடிந்து வைத்திருந்தார்கள். எத்தனை எத்தனை வேண்டுதல்கள்! அனைவருக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கட்டும் என்று அவர்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொண்டேன். மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் கிடைக்கும் அமைதியும் அழகும் அங்கே குடிகொண்டிருந்தது. காண்போரை வசீகரம் செய்யும் இடம் அது! இளைஞர்கள் வளைத்து வளைத்து செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த கடையில் சில மிட்டாய்களை வாங்கிக் கொண்டு விறகு அடுப்புகளில் களிமண் பூசிய பாத்திரங்களில் சமையல் செய்து கொண்டிருந்த உணவகத்தில் ‘சுடச்சுட’ இட்லியைப் பார்த்தவுடன்,
“பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…” பாடல் மனதில் ஒலிக்க, கடைக்குள் நுழைந்தோம். இட்லி வேண்டும் என்றவுடன் கடைக்காரர் இட்லித்தட்டிலிருந்து அலேக்காக சுடு இட்லிகளை கையாலேயே எடுத்துத் தட்டில் வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வந்தார். இட்லி பெரிதாக பூப்போல மிருதுவாக, ‘ஆஹா…இதுவல்லவோ மல்லிப்பூ இட்லி. யம் யம் யம்…’ அது சாம்பார் மாதிரி இல்லை. எங்கள் வீடுகளில் ‘தக்காளி அவுண்டி’ என்று செய்யும் குழம்பு மாதிரி அத்தனை சுவையாக இருந்தது. தமிழக உணவு வடக்கே எங்கோ ஒரு மூலையில் கிடைக்கிறது அதுவும் குறைந்த விலையில் தரமாக! சிறப்பு! ஆலு பரோட்டாவும் தயாராகிக் கொண்டிருந்தது. மேகி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருவதை அங்கிருந்த கடைகளில் அடுக்கி வைத்திருந்ததில் தெரிந்தது. என் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிட்டிருப்பார்கள்! வனாந்திரமாக இருந்த இடத்தில் கிடைக்காத காலை உணவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது!
எதிரில் இருந்த கடையில் ‘சாய்’ சாப்பிடலாம் என்று அங்கே சென்றால் அங்கிருந்த சிறுவன் ‘கடகட’வென சமையல் வேலைகளைத் தனியாளாக செய்து கொண்டிருந்தான். கடையின் பின்புறம் மலை. எதிரே மலை என்று எங்கெங்கு காணினும் பரந்து விரிந்த இமயம்! அது என்னவோ தெரியலை என்ன மாயமோ புரியலை நம் கைச்சமையல் தராத திருப்தி வெளியே சில இடங்களில் கிடைக்கிறது. அதுவும் இந்தப் பயணத்தில் ரசித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திருப்தியான காலை உணவை உண்ட பரவசத்துடன் தொடர்ந்தது எங்கள் பயணம். யாத்திரைக்கு வருபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள். அங்குக் கழிப்பிட வசதிகள், அதுவும் வயதானவர்களுக்கு, பெண்களுக்கு இல்லாதது தான் பெரிய குறையாக இருந்தது! அரசு இந்த விஷயத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
‘பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா’ தான். எத்தனை இடங்களில் நின்று மலை அழகை ரசித்தாலும் போதவில்லை. எங்கும் செல்லாமல் அங்கேயே தங்கி விட வேண்டுமென பல நேரங்களில் எங்களுக்குத் தோன்றியது. விவசாயம் பெரும்பாலும் பாசுமதி அரிசி ரகம் மலைகளில் விளைவிக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டோம். சிறு சிறு மலைக்கிராமங்கள். நம்மூரில் இருக்கும் மரத்தடி பிள்ளையார் போல் சாலைகளில் சிவன், ஹனுமன், தேவி, சூலாயுதம் கொண்ட சிறு சிறு தெருக்கோவில்கள் பல. மக்கள் நின்று வணங்கி விட்டுச் செல்கிறார்கள். பறவைகளின் இன்னிசை கீதம் சூழலை மேலும் இனிமையாக்கிக் கொண்டிருந்தது. கிராமத்துக் கோவில்கள் கலையம்சத்துடன் கட்டப்பட்டிருந்தது அழகு. நடுவழியில் பெரிய பாறை உருண்டு சாலையில் இருந்ததைக் கவனமாக கடந்து வந்தோம். சில இடங்களில் ‘Sinking zone ahead’ வாசகங்கள், மழையில் அடித்துச் செல்லப்பட்ட சாலையில் புழுதி பறக்கப் பயணம், குறுகலான வளைவுகள் என வழி முழுவதும் திடீர் திடீரென ‘மரண பயத்த காட்டிட்டான் பரமா’ காட்சிகளுக்கும் பஞ்சமில்லை
நான்கு மணிநேரத்திற்குப் பிறகு ஊர் ஒன்றின் வழியே பயணம். கன்சாலி செல்லும் வழியில் குறைந்த விலை தங்கும் விடுதிகள் பல இருந்தது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்து கூட்டம் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இதே நகரத்தில் என்றால் மஞ்சள் வண்ணம் பூசிய பேருந்துகள் சாலைகளை ஆக்கிரமித்திருக்கும். இந்தக் குழந்தைகள் பாவம் தான்! மணி பத்தரை ஆகி விட்டிருந்தது. எந்த நேரத்தில் பள்ளியை ஆரம்பிப்பார்களோ என்ற யோசனையுடன் நிமிர்ந்தால் ‘கப்’பென்று முடை நாற்றம் அருகிலிருந்த குப்பைமேட்டில் இருந்து. பாவம் அந்த வழியாக நடந்து செல்பவர்கள். மூக்கைப்பொத்திக் கொண்டு தான் நடக்க முடியும். அருகிலேயே வீடுகள். எப்படித்தான் சுவாசிக்கிறார்களோ என்று கவலையாக இருந்தது. குப்பைகளை முறையாகப் பராமரிக்கும் திட்டங்கள் இன்னும் வரவில்லையா இல்லை எதையும் சகித்துக் கொண்டு செல்லும் இந்திய மனப்பாங்கின் காரணமாக கண்டுகொள்ளாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை. உருப்படாத விஷயங்களுக்குப் போராடுபவர்கள் சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கும் இவ்வாறான விஷயங்களுக்கு மக்களுடன் சேர்ந்து போராடினால் தீர்வு கிடைக்கும். அதைத்தான் நாம் செய்ய மாட்டோமே
நண்பகல் நேரத்தில் சிறு அருவிப்பாதையில் ‘சாய்’ குடிக்க வண்டியை நிறுத்தி சிறிது தூரம் நடந்து சென்றோம். தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் குழாய்களில் கொட்டிக் கொண்டிருந்தது. உணவகங்களில் அனைத்துவிதமான உணவுவகைகளும் கிடைக்கிறது! பெரிய பெரிய மூங்கில் கூடைகளைச் சுமந்து மலைவாழ் பெண்கள் மலைகளில் ஏறி ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்கள். கடினமான வாழ்க்கை தான்! திடமான பெண்கள்! ‘டாடா’ பேருந்துகளும் மஹிந்திரா வண்டிகளும் ஹோண்டா பைக்குகளும் அதிகம் தென்பட்டது. வழியில் மீண்டுமொரு இடத்தில் பாறைகள் உருண்டு விழுந்திருந்த காட்சியைக் கடந்து செப்பனிட்டுக் கொண்டிருக்கும் சாலை வழியே வந்தோம். காலையில் ‘ஷிவலிங்கா ரிசார்ட்’ உணவகத்தில் கொடுத்திருந்த அவல் உப்புமா, சாண்ட்விச், வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டே போக்குவரத்து நெரிசலில் நகருக்குள் பயணம். மணி 2.45. கேதார்நாத்திற்கு இன்னும் 47கிமீ தூரம் இருந்தது. வளைவுகளில் புண்ணிய பூமிக்கு வருகை தரும் யாத்திரீகர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.
மூன்று மணியளவில் குப்தகாசி நகரை வந்தடைந்தோம். கடல்மட்டத்திலிருந்து 4000அடி மேல் இமயமலையில் அமைந்துள்ள அழகான புராதன நகரம். விதவிதமான துணிகள், கலையலங்காரப் பொருட்கள், இனிப்புத் தின்பண்டங்கள், மருந்துகள் , பழங்கள், காய்கறிகள் என்று சகலவிதமான பொருட்களை விற்கும் பல கடைகள் வழியெங்கும். உத்தரகாசியில் இருக்கும் பழமையான காசிவிஸ்வநாதர் கோவிலைப் போலவே இங்கும் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. மகாபாரதப் போருக்குப் பின் முக்தி வேண்டி பாண்டவர்கள் சிவனைக் காண தவம் இருக்கையில் முதலில் நந்தியாக இங்கு காட்சி அளித்துப் பின் கேதார்நாத்தில் சிவரூபமாக தரிசனம் அளித்தார் என்பது ஐதீகம். கேதார்நாத் செல்வதற்கு முன் இக்கோவிலுக்கு மக்கள் செல்வது வழக்கம். காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர். ‘குப்த’ என்றால் ஒளிதல் என்று அர்த்தமாம்.
தெருவில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, “அதோ மக்கள் வருகிறார்களே அந்த வழியே சென்றால் கோவிலுக்குச் சென்று விடலாம். போய்விட்டு வாருங்கள்” என்று அசோக்குமார்ஜி சொல்லி விட்டார். இப்படித்தான் என்ன ஏது என்று சொல்லாமல் தடாலடியாக இறக்கி விட்டு விடுவார். கடைகள் தானே இருக்கிறது இங்கே கோவில் எப்படி? நம்மூர் என்றால் கோபுரம் தொலைவிலிருந்தே தெரிந்து விடும். அங்கிருந்த மக்களிடம் “மந்திர் கஹான் ஹே?” என்று கேட்டு அவர்களும் வழியைச் சொல்ல, வீடுகள், கடைகளைத் தாண்டி ஒரு கிலோமீட்டர் தூரம் மூச்சு முட்ட சுமார் 100 படிகளுக்கும் மேலே ஏறிச் செல்லும் வழியெங்கும் கொத்துக்கொத்தாக மின்சார வயர்கள் அங்கும் இங்கும் என்று பார்த்தாலே ‘ஷாக்’காக இருந்தது. சாய்ந்தாற் போல ஒரு தெருவில் காரைக்குடி அரண்மனை வீடு போன்ற கட்டட அமைப்பு. திறந்தவெளி வடிகால். எதிரில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை விற்கும் கடைகள் இருந்தது. இதுவா கோவில் என்று உள்ளே எட்டிப்பார்த்தால் 1000 வருடங்களுக்கும் மேலான கோபுர அழகுடன் கோவில்! ஆஹா!
மலையடிவாரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமையப்பெற்ற அழகே உருவான குப்தகாசி கோவில் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் சிறப்புப் பெற்ற புண்ணியத்தலம் ஆகும். கோவிலில் நுழைந்தவுடன் சிவனை நோக்கி இருக்கும் நந்தி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் சிவலிங்கம். பின்னால் பார்வதி உருவம். சக்தி பீடங்களில் ஒன்று என்று அறிந்தோம். விஸ்வநாதர் கோவிலின் முன்னால் யமுனையும் கங்கையும் கலக்கும் மணிகர்ணிகை குண்டம் இருந்தது. சுற்றிலும் மலைகள் சூழ கோவில் அமைந்திருக்கும் இடமே தெய்வீகமாக இருக்க, அங்கிருந்து செல்ல மனமில்லாமல் கிளம்பினோம்.
பெருமழை அடித்துச் சென்றிருந்த சாலையில் தட்டிமுட்டி வண்டி கஷ்டப்பட்டு ஏறி மூன்றரை மணிவாக்கில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ‘தி வில்லேஜ் ரிட்ரீட்’ வந்து சேர்ந்தவுடன் அப்பாடா என்று இருந்தது. நீண்ட பயணம். குறைந்தது ஐந்தாறு மலைகளில் ஏறி இறங்கி வந்திருப்போம். ஆனாலும் களைப்பில்லை. நாங்கள் வந்திருப்பதை அறிந்தவுடன் அலுவலக மேலாளர் துடிப்பான இளைஞர் கிருஷ்ணா வந்து பெட்டிகளை எடுத்துச் சென்றார்! சிரித்த முகத்துடன் சினேகபாவத்துடன் இனிமையானவராகத் தெரிந்தார். எங்களுடைய அறையைக் காண்பித்து விட்டு இரவு எட்டு மணிக்குச் சாப்பாடு, இப்பொழுது ‘சாய்’சாப்பிட வாருங்கள் என்று சொல்ல, சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ரிசார்ட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.
எங்களுடைய பயணத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த தங்குமிடம் என்றால் அது இந்த ரிசார்ட் தான். முன்னறையிலிருந்து பார்த்தால் தூரத்தில் மலையிலிருந்து மந்தாகினி துள்ளியோடி வருவது தெரிகிறது. எதிரே பனிபடர்ந்த மலைச்சிகரங்கள். ‘டபடப’ என்று ஓயாமல் சுழலி கத்திகளைச் சுழற்றிச் செல்லும் பெரிய பெரிய ‘பளபளா’ ஹெலிகாப்டர்கள். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்லும் வசதிகளும் இருக்கிறது. அழகாக வானில் வட்டமடித்துச் செல்லும் பெரிய வண்ணப் பறவையைப் பார்ப்பதே அழகு தான்.
எந்தப் பனிச்சிகரத்தைப் பார்த்தாலும் சிவரூபமாகவே மனதில் பதிந்து விட்டிருக்கிறது. அமைதியாக ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எதிரே குப்தகாசி நகரின் அழகு கட்டடங்கள். கருமேகங்களுடன் ‘சிலுசிலு’ காற்று என்று ரம்மியமான மாலைப்பொழுது. 6.30 மணியளவில் வானம் இருண்டு கொண்டே வர, கருமேகங்களை முத்தமிட்டு மறையும் வான் வசீகரன் மனதை கொள்ளை கொண்டான். மறக்காமல் ‘க்ளிக்’கிக் கொண்டேன். இந்த உலகம் தான் எத்தனை அழகு! எதைப்பற்றியும் சிந்திக்காமல் அந்த நொடிப்பொழுதில் வாழும் வாழ்க்கை தான் எத்தனை இனிமையாக இருக்கிறது! ஆனால் இது நிரந்தமல்லவேஅப்படி நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது? சரிதானே?
யோசித்துக் கொண்டே திரும்பினால் ஒரு பெண் இடுப்பை வளைத்து யோகா செய்து கொண்டிருந்தார். சிறு புன்னகை. அறிமுகப்படுத்திக் கொண்டோம். “இடுப்பு வலி, குதிகால் வலி. அதான் யோகா செய்கிறேன்” என்றவர் அப்பொழுது தான் அங்கு வந்திருந்தார். மும்பையிலிருந்து டேராடூன் வந்திறங்கி தனியாக கேதார்நாத், துங்நாத் பயணமாம்! அவருடன் வரவிருந்த தோழி கடைசி நேரத்தில் அப்பாவின் உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போய்விட்டது. பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதால் தனியாக கிளம்பி வந்துவிட்டேன் என்றார். அய்யோடா! அமெரிக்காவில் எங்கு வேண்டுமென்றாலும் தனித்துச் செல்ல என்னால் முடியும். மதுரையில் நான் தனியே வெளியே சென்றால் ஏழு மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று இன்று வரை எனக்கு அம்மா இடும் கட்டளை. இல்லையென்றால் வரிசையாக அழைப்புகள் வர ஆரம்பிக்கும். இந்தப் பெண்மணிக்கு அந்த பயம் எல்லாம் இல்லை போலிருக்கு!
என் மைண்ட் வாய்ஸை புரிந்து கொண்டவராக, அவருடைய அப்பா இப்படித்தான் அடிக்கடி எங்காவது அழைத்துச் செல்வார். வளர்ந்தவுடன் தனியே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்தியதால் இந்தியாவில் பல இடங்களுக்குத் தனியாகவும் நண்பர்களுடனும் தானும் தன் சகோதரனும் செல்வதால் “பழகிவிட்டது. நிம்மதியாக இருக்கிறது. நான் ஒரு மார்வாடிப் பெண். எங்கள் வீடுகளில் சதா சமையல் வேலை நடந்து கொண்டிருக்கும். யாராவது விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். வீட்டில் மாமனார், மாமியார், மகன், கணவன் என்று சிறு குடும்பம் தான். ஆனால் வேலை இருந்து கொண்டே இருக்கும்.” அதனால் தனக்காக நேரம் எடுத்துக்கொள்ளும் பொழுது பெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்காவது கிளம்பி விடுவாராம். பல இடங்களில் ஹைக்கிங் செல்வது இவருடைய பொழுதுபோக்கு என்று ஆச்சரியப்படுத்தினார். இப்பொழுதும் ‘துங்நாத்’ கோவிலுக்கு ஹைக்கிங் செல்வதற்காக வந்திருந்தார். இவருடன் கூடவே ஒரு வழிகாட்டியும் நடந்து வர முன்பதிவெல்லாம் செய்து வைத்திருந்தார். படித்த படிப்பு வீணாகக் கூடாது என்பதற்காக ஆன்லைனில் டியூஷன் எடுப்பதாகக் கூறி எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருடைய உறவினர்கள் பலரும் நியூயார்க், நியூஜெர்சியில் இருக்கிறார்கள் என்றார். “நாளை நானும் கேதார்நாத் செல்கிறேன்.எங்கே தங்குகிறீர்கள்? அங்கே சந்திப்போம்.” என்று தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டோம்.
இந்தியாவில் மலையேற்றம் செல்ல பல நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த குழுக்களைப் பல இடங்களில் வைத்துள்ளது. அவர்களுடன் இரவு நேர இமய மலையேற்றம், பனிக்கால மலையேற்றம் என்று போக முடிகிறது. ஆகா! துங்நாத் கோவிலைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் போயிருக்கலாம் என்று தோன்றிற்று. அதற்கு வித்யா (மும்பைப் பெண்) ‘பஞ்ச கேதார்’ என்று ஐந்து சிவத்தலங்கள் இருக்கிறது. குப்தகாசி கோவிலில் நந்தியாக காட்சி தந்த சிவபெருமானை இனம் கண்டு கொண்ட பாண்டவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்க, பீமனின் பிடியில் சிக்குண்ட நந்தியின் உடல்பாகங்கள் ஐந்து மலைகளில் சிதறி அங்கு பாண்டவர்கள் சிவனுக்காக கோவில்களைக் கட்டினார்கள் என்பது ஐதீகம் என்று கூறினார். கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்நாத் , கர்பேஷ்வார், ருத்ரநாத் தான் அந்த பஞ்ச கேதார் தலங்கள். முடிந்தால் இன்னொருமுறை அந்தக் கோவில்களுக்குச் சென்று வாருங்கள் என்றார்.
இதற்குத் தனியாக இன்னொரு முறை வரவேண்டும் போலிருக்கே! ஏற்கெனவே உத்தரகாசியில் சந்தித்த மலேசியா மக்கள் 12 ஜோதிர்லிங்க தரிசனம் பெற ஒருமுறை சென்று வாருங்கள் என்று உசுப்பேத்தியிருந்தனர். அதில் சோம்நாத் கோவிலும் இருப்பதால் ஒரு சின்ன ஆசை. என் மூதாதையர்கள் அங்கிருந்து தான் புலப்பெயர்ந்தவர்கள் என்பதால் அங்குச் செல்ல வேண்டுமென்ற கனவு இன்று வரை எனக்கு உண்டு. பார்க்கலாம்! இப்படி பார்க்க வேண்டிய கோவில் பட்டியல் நீண்டு கொண்டே போனால் நான் தான் என் செய்வேன்
அதற்குள் ஐந்தாறு தெலுங்கு பேசும் குடும்பங்கள் கேதார்நாத் பயணத்தை முடித்துத் திரும்பியிருந்தனர். அவர்களுள் மஞ்சு என்ற பெண்மணி அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் பேச ஆரம்பித்தார். “பயங்கரமான குளிர் அங்கே. நியூயார்க்கில் உங்களுக்குப் பழக்கமாகியிருந்தாலும் இங்கே வசதிகள் குறைவு என்பதால் கேதார்நாத்தில் தங்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காது” என்று கூறவே, அடடா! அங்கு தங்க வேண்டும் என்று அடம்பிடித்து எங்களுடைய பயண முகவரிடம் கூறினோமே! அவரும் இதைத்தான் சொல்லியிருந்தார். “அடிப்படை வசதிகளைத் தவிர வேறு எதையும் அங்கே எதிர்பார்க்க முடியாது. என்னைக் குற்றம் சொல்லக் கூடாது” என முன்பே எச்சரித்திருந்தது நினைவிற்கு வந்தது. இப்போது குழப்பமாகி விட்டது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. மஞ்சுவின் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும் அடிக்கடி வந்து செல்வேன் என்றும் கூறினார். அவருடன் வந்திருந்தவர்களின் குழந்தைகளும் அமெரிக்காவில் குடியேறியிருந்தார்கள். இங்கே பெற்றோர்கள் ஆனந்தமாகப் புண்ணிய யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டக்காரர்கள் தான்!
அதற்குள் இரவு உணவு தயாராகி விட, வித்யாவும் எங்களுடன் இணைந்து கொண்டார். சுடச்சுட பன்னீர் கிரேவி, நான், தால், சோறு, ஆச்சார், தயிர், காய்கறி சப்ஜி, சேமியா பாயசம். சாப்பிடக்கூடாது என்று நினைத்தாலும் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தேன் காலையில் 10 மணிவாக்கில் கேதார்நாத் செல்லலாம். ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன்பதிவை பயண முகவர் ஏற்கெனவே செய்து நேரமும் குறித்திருந்தாலும் சீக்கிரம் சென்றால் நல்லது என்று அறிவுறுத்தினார். நாங்களும் காலை பத்து மணிக்குச் செல்ல முடிவு செய்தோம். இந்தப் பயணத்தில் முதல் முறையாக நீண்ட நேரம் தூங்கப் போகிறோம் என்று மகிழ்வுடன் தூங்கிப் போனோம்.
எப்பொழுது நன்றாக தூங்க நினைக்கிறோமோ அப்பொழுது தான் சீக்கிரமே முழிப்பு வந்து விடும். ஆந்திராவிலிருந்து வந்திருந்தவர்கள் பத்ரிநாத் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் தயாராகிக் கொண்டிருந்தார்கள். யாரோ சத்தமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வெளியில் சிறிது நேரம் நடந்து விட்டு சாப்பாட்டு அறையில் சுடச்சுட டீயை எடுத்துக் கொண்டு முன்னறை தொங்கு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தால் பறவைகளின் ‘கீச்கீச்’ சத்தம். தெளிந்த வானம். பனிபடர்ந்த மலையின் மேல் உலா வரும் வான் வசீகரன். ‘சில்ல்ல்ல்ல்ல்’ மலைக்காற்று என்று புத்தம் புது காலை வரவேற்றது. சமையலறையில் பூரி, மசாலா தயாராகிக் கொண்டிருந்தது. யம் யம் யம்…
ரிசார்ட்டை ஒட்டி இறங்கிச் சென்றால் மாட்டுக்கொட்டகையுடன் சில கூரை வீடுகள். யாரையும் கண்டுகொள்ளாமல் கையில் இருக்கும் கைப்பேசியில் விளையாடிக் கொண்டே எருமைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள் இளம்பெண் ஒருத்தி. கொஞ்சம் சுதாரிப்பாக இருந்தாலே ஏதேதோ நடக்கிறது. அவளுக்குப் பழகிய இடம் என்பதால் இப்படி இருக்கிறாளோ என்னவோ. கவனமாக இருக்கலாம் என்று தோன்றியது. அங்கே நான் பார்த்தவரையில் ஆண்களை விட பெண்களே கைப்பேசியில் நாட்டம் கொண்டிருந்ததைப் போன்று தோன்றியது. கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் கிடுகிடுவென மரம் மீதேறி இலைகளைப் பறித்து ஆடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். எப்படி இவ்வளவு வேகமாக மரம் மீதேறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. அங்கு வந்து அமர்ந்த அழகான பறவைகளைப் படம் எடுத்துக் கொண்டேன்.
விரைந்து குளித்து முடித்து துணிகளைச் சலவைக்கு அங்கேயே கொடுத்து விட்டு காலை உணவைச் சாப்பிட்டோம். எத்தனை பூரி சாப்பிட்டேன் என்று தெரியவில்லை. உப்புமாவையும் விடவில்லை. நன்றாக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு கிருஷ்ணாவிடம் நாளை பார்க்கலாம் என்று சொல்லி ‘சோன்ப்ரயாக்’ சென்றோம். அங்கிருந்து தான் கேதார்நாத் பயணம் துவங்குகிறது. வழியெல்லாம் சாலைகள் இருந்த இடத்தில் மழைத்தண்ணீர் அடித்துச் சென்றதால் வெறும் கற்களும் மண்ணும் தான் மிஞ்சியிருந்தது. எங்கெங்கோ வளைந்து வளைந்து சென்று ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து சேர்ந்தோம். கேதார்நாத் செல்ல பல தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகின்றன. இதில் சென்றால் ஐந்து நிமிடங்களில் சென்று விடலாம். நடந்து மலையேறினால் குறைந்தது எட்டு மணிநேரம் ஆகும் என்பதால் நாங்கள் செல்லவில்லை. முடிந்தால் இறங்கி வரலாம் என்று அப்போதைக்கு முடிவெடுத்தோம்.
எங்களுடைய பயண முகவர் ஏற்கெனவே கேதார்நாத் சென்று வர முன்பதிவு செய்து காலை 11.30 மணிக்கு நேரம் குறித்திருந்தாலும் நாங்கள் அன்று அங்கு சென்ற நேரத்தைக் கணக்கில் கொண்டு மூன்று மணிக்குத் தான் செல்ல முடியும் என்று கூறி விட்டார்கள். என்ன இப்படி இருக்கிறார்கள்? சொன்ன நேரத்திற்கு விட முடியவில்லை என்றால் எதற்கு முன்பதிவு என்று ஏமாற்றமாகிவிட்டது எனக்கு. அங்கே ஒரு ஹாலில் குறைந்தது 75 பேராவது அவரவர் சொந்தங்களுடன் அமர்ந்திருப்பார்கள். கோவிட் பற்றின எந்த பயமும் இந்தியாவில் பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. அதற்காக அசட்டையாகவும் இருக்க முடியாதே? மாஸ்க் இல்லமால் எங்கும் செல்லக் கூடாது என்று அன்பு மகள் வேறு கட்டளையிட்டிருந்தாள்.
கழிவறை செல்லும் வழி என்று போட்டிருந்த இடத்தில் எப்படித்தான் உட்கார்ந்திருக்கிறார்களோ குமட்டும் நாற்றம். ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தது. சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய இடத்தை மிக மிக அசுத்தமாக வைத்திருக்கிறோம். அதைப்பற்றின கவலைகள் ஏதுமின்றி இருக்கிறோம். என்ன செய்வது? டிசைன் அப்படி! அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியே வாசலுக்குச் சென்று காத்திருந்தோம். உள்ளே நம்மூர் மக்களைப் போல் ஒரு பெரிய குழு ஒன்று இருந்தது. வெளியே காத்திருக்கையில் ஒருவர் மெதுவாக எத்தனை மணிக்கு எங்களுடைய ஸ்லாட் என்று பேச்சு கொடுத்தார். பார்த்தால் நம்மூர் பக்கத்து ஆள் மாதிரி இருக்கிறாரே என்று நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு வழக்கம் போல, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, நியூயார்க், மதுரை என்று சொல்ல, “அட… நீங்க தமிழா? இவ்வளவு நேரம் இது தெரியாம இங்கிலிஷ்ல பேசிட்டு இருந்திருக்கோம் பாருங்க” என்று சிரித்தோம். அவர் உடனே அவர் குழுவில் இருந்தவர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். காரைக்குடிச் செட்டியார் குடும்பங்கள். மதுரை, சென்னை, பெரியகுளம் பகுதிகளில் இருந்து இரண்டு வேன்களில் வந்திருந்தார்கள். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து வந்திருந்த மனிதர் மிகவும் அமைதியானவராகத் தெரிந்தார். தொழில் சம்பந்தமாக அமெரிக்காவிற்கு வந்து சென்றிருப்பதாகக் கூறினார். இங்கே வந்து மதுரை ஆட்களைச் சந்திப்போம் என்று நினைக்கவில்லை என்று மகிழ்ந்தார்.
அவர்களில் ஒரு குழு கேதார்நாத் சென்று விட்டதாகவும் இவர்கள் சென்று இரவு தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதால் அங்கு தங்கும் விடுதிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலரே முறையான உடைகளை அணிந்திருந்தார்கள். பலரும் வெறும் செருப்பு மட்டுமே. குளிரைத் தாங்கும் ஜாக்கெட் கூட இல்லை. “எப்படிங்க அங்க இரவு இருப்பீங்க? -3 டிகிரி செல்சியஸ்னு போட்டிருக்கு.” என்றால் ஒரு இரவு தானே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று ஆச்சரியமூட்டினார்கள். பாவமாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்து வந்தது ஒன்று. நடப்பதோ வேறொன்று.
எதிரில் ஒரு உணவகம் இருந்தது. அங்கே காரைக்குடிகாரர் ஒருவர் சமையல்காரர்/மேற்பார்வையாளராக இருந்தார். தமிழ்நாட்டு கூட்டத்தைப் பார்த்தவுடன் சாப்பாடு தயார். இட்லி, தோசை கிடைக்கும் என்று ஆசை காட்டி விட்டுப் போக, நாங்கள் அங்கே உடனே ஆஜர். மேஜையில் அமர்ந்தால் ஈக்கள். யக் ‘மொறுமொறு’ தோசைக்கு ஆர்டர் கொடுத்து விட்டு கையை ஆட்டி ஈக்களை விரட்டிக் கொண்டே இருந்தோம். சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் ருசியாக இருந்தது. கூடவே ‘சாய்’. மணி ஒன்று தான் ஆகியிருந்தது. கூட்டம் இப்பொழுது கொஞ்ஞ்ஞ்சம் குறைந்திருந்தது.
தமிழ்மக்கள் “வாங்க இங்க வந்து உட்காருங்க.’ என்று அவர்களுக்கு அருகில் நாற்காலிகளைப் போட்டு அழைக்க நாங்களும் அமர்ந்து கொண்டோம். வாழ்க்கையில் தனது குழந்தைகளின் கடமைகளை முடித்த திருப்தியில் பலரும் மூன்று நடுத்தர வயது குடும்பங்களும் வந்திருந்தனர். ஒருவர் ஆரம்பப்பள்ளி வயது குழந்தைகளுடன் வந்திருந்தார்! பாவம் அந்த குழந்தைகள்! நேரத்திற்குத் தூங்க முடியாமல் சாப்பிட முடியாமல் கஷ்டம் தான். செட்டிநாடு ஸ்பெஷல் சீடை என்று கொடுத்தார்கள். “சாப்பிடுங்க நல்லா இருக்கும். மதுரையில செட்டிநாடு பலகாரங்கள் விற்கிற கடை இருக்கு. ஊருக்குப் போறப்ப வாங்கிட்டுப் போங்க” என்று முகவரியையும் கொடுத்தார்கள். சீடை சூப்பராக இருந்தது. கண்டிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் அந்த செட்டிநாடு கடைக்குப் போறோம். அள்றோம் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.
குழுவில் ஒருவருடைய மகன் அட்லாண்டாவில் இருப்பதாகவும் கோடையில் அங்கிருந்ததாகவும் அடிக்கடி அமெரிக்காவிற்கு வந்து செல்வதாகக் கூறினார். பலருடைய குழந்தைகளும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருந்தனர். குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு தமிழக ஆளுநர் வரை ஆட்கள் தெரிகிறது. அங்கிருந்து உத்தரகாண்ட் கவர்னரிடம் சொல்லி இவர்கள் எல்லோரும் முன்பதிவு செய்யாமலே ஹெலிகாப்டர் பயணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பரவாயில்லையே!
சிறிது நேரத்தில் அறிமுகமானாலும் வடமாநிலத்தில் தமிழில் பேசியதால் மகிழ்ச்சியும் நெருக்கமும் உண்டாயிற்று. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஜோதிர்லிங்க யாத்திரை, அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். நாம் தான் எங்கேயும் போகாமல் இருக்கிறோமோ என்று தோன்றியது.
மூலையில் ஒரு வட இந்திய பாட்டி ‘லொக்லொக்’ என்று இருமித் தள்ளிக் கொண்டிருந்தார். போடு மாஸ்க்கை என்று மீண்டும் மாஸ்க்கை போட்டுக் கொண்டோம். இந்த வயதில் இப்படிப்பட்ட உடல்நிலையில் கேதார்நாத் செல்லும் பாட்டியின் அசாத்திய தைரியம் எனக்குப் பிடித்தது. இப்படி வயதானவர்கள் பலரும் ‘சார்தாம்’ யாத்திரைக்கு வந்திருந்தார்கள். அதுவும் கொரோனா காலத்திற்குப் பிறகு 2022ல் கோவில் திறந்ததால் அதிக கூட்டம் என்று நினைக்கிறேன்! வெளியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் பொழுதே ‘மடமட’வென்று ஆட்கள் இறங்கவும் ஆறு நபர்களை அழைத்துச் சென்று அமர வைத்தும் விடுகிறார்கள். அது பேரோசை எழுப்பி ‘விர்ர்ர்ர்ர்’ரென பறந்து மலைகளுக்கிடையில் அழகாக வளைந்து செல்வதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் அடி மனதில் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. திரும்பி வரும்பொழுது ‘லொக்லொக்’ பாட்டி கேதார்நாத் போய்விட்டிருந்தார். அப்பாடா!
இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடலாம். மூன்று மணி என்று சொல்லி மணி நான்காகி விட்டது. இருட்டுவதற்குள் போய் விடவேண்டும் என்ற பதட்டம் ஆரம்பித்து விட்டது. வானில் கருமேகங்கள் சூழ, ஹெலிகாப்டர் பயணம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. “ஈஸ்வரா! ஏமாத்திடாதேப்பா! உன்னைய பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இன்னுமொருமுறை வர முடியுமா தெரியலை.” என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்கள் அவரவர்க்குத் தெரிந்த சிவப்பாடல்களைப் பாடி வேண்ட ஆரம்பித்தார்கள். இன்னொருவர் “தைரியமாக இருங்கள். கண்டிப்பாக கோவிலுக்குப் போய்விட்டுத் தான் நீங்கள் ஊருக்குப் போவீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு வேண்டி காசு முடிஞ்சு வச்சுட்டு வந்திருக்கிறேன். எந்த தடங்கலும் ஏற்படாது” என்று ஆறுதல் கூறினார். இப்படியே ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி மேகம் எப்பொழுது கலையும் என்று காத்துக்கொண்டு இருந்தோம். 4.30 மணியளவில் மீண்டும் வானில் ஹெலிகாப்டர்கள் பறக்கும் ஓசை. ஆனால் வேறு நிறுவன ஹெலிகாப்டர்கள். இந்த நிறுவன பைலட் மேகங்கள் முற்றிலும் விலகிய பின்னர் தான் ஹெலிகாப்டர் பயணம் தொடரும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதுவரை காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்ய? இருட்டி விட்டால் இன்று போக முடியாது என்று வேறு வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.
காலையில் 11 மணியிலிருந்து ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’. நல்லதே நடக்கும் என்று காத்திருந்தோம்.
No comments:
Post a Comment