Monday, March 13, 2023

நிலை மாறும் உலகில் ...

கடந்த வாரம் வியாழன்(மார்ச் 09,2023) அன்று $210பில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்ட அமெரிக்காவின் 16வது பெரிய வங்கி, 48 மணிநேரத்தில் தலைகுப்புற விழுந்து வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தவர்களைச் சித்தம் கலங்க வைத்து விட்டது. அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு பிரபல வங்கி திவால் நிலைக்குச் சென்றதும் அரசும் மக்களும் பொருளாதார மந்தநிலைக்கு நாடு சென்று விடுமோ என்று அஞ்சும்படி ஒரு பதட்டம் நிலவியது.

40 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் சிலிக்கான்வேலி வங்கி(SVB) , அமெரிக்காவின் சிறப்பான வங்கிகளுள் ஒன்று. 65,000 தொடக்க நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை அந்த வங்கியில் தான் வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு அதிக அளவில் முதலீட்டாளர்கள் பணத்தை வாரி இறைக்க, 2021ல் நிறுவனங்களின் வைப்புநிதி மட்டும் மூன்று மடங்கு அதிகரித்தது. வங்கிகளில் நாம் சேமித்து வைக்கும் பணத்தைக் கொண்டு கடன்களை வழங்கி அதில் வரும் வட்டியில் லாபம் பார்ப்பார்கள். இங்கோ, கடன் வாங்குபவர்கள் குறைவாகவும் முதலீட்டாளர்களின் பணத்தால் நிறுவனங்களை நடத்துபவர்கள் அதிகமாகவும் இருந்ததால் வைப்பு நிதியும் குவிய தொடங்கியது. அத்தனை பணத்தையும் வைத்துக் கொண்டு வங்கி தான் என்ன செய்யும்?

அவர்களும் அந்தப் பணத்தைக் கொண்டு $80பில்லியன் டாலர்களுக்கு அரசாங்க பத்திரங்களை (Federal Bonds) வாங்கியுள்ளனர். சமீப காலமாக அரசாங்கம் வட்டி விகிதங்களை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பத்திரங்களின் மதிப்பு குறைய ஆரம்பிக்க, SVB $2 பில்லியன் டாலர்கள் நஷ்டத்திற்கு தங்களிடமிருந்த பத்திரங்களை விற்றிருக்கிறது. இதனால் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களிடையே பயம், சந்தேகம், நிச்சயமற்ற தன்மை உருவாக, வங்கியின் பங்குகள் 60% குறைவாக கீழிறங்கியது. நிறுவனங்கள் பலவும் தங்களுடைய பணத்தைக் காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் பலரும் தங்கள் பணத்தை எடுக்க வங்கிக்கு விரைந்திருக்கிறார்கள். அதிக பணம் வங்கியிலிருந்து வெளியே செல்லும் நிலைமை உருவானது. அனைவருக்கும் பணத்தைத் தர முடியாமல் வங்கி தவிக்க, 2021ல் $700 ஆக இருந்த ஒரு பங்கின் விலை $50ஆக குறைய, வெள்ளிக்கிழமை அன்று (மார்ச் 10, 2023) பங்குச்சந்தையில் அதன் பங்குகளை வாங்கவோ விற்கவோ தடை விதிக்கப்பட்டது.

சில நிறுவனங்கள் 150 மில்லியன் டாலர்கள் முதல் 303பில்லியன் டாலர்கள் வரை தங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்துள்ளனர். அமெரிக்காவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் சேமிப்பில் $250,000 வரை தான் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(FDIC ) காப்பீடு செய்கிறது. இதனால் 175பில்லியன் டாலர்கள் சேமிப்பில் ஐந்து சதவிகிதத்தினர் மட்டுமே காப்பீட்டில் பணத்தைப் பெற முடிந்திருக்கிறது. மற்றவர்களின் நிலைமை தான் கேள்விக்குறியாகி விட்டது. தொடக்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கான மாதாந்திர சம்பளம் இனி எப்படி வழங்குவது என்று நிறுவனங்கள் ஸ்தம்பித்து விட்டது. இதனால் 2008ல் நடந்தது போல பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நாடு மற்றும் உலகம் முழுவதும் பரவியது. சமூக வலைதளங்கள் அல்லோலகப்பட்டது!

இதனைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி மற்றும் நியூயார்க்கில் உள்ள சிக்னேச்சர் வங்கி ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகளும் வெள்ளிக்கிழமை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தன. ஆனால் ஜேபி மோர்கன், வெல்ஸ் ஃபார்கோ மற்றும் சிட்டிகுரூப் போன்ற நாட்டின் சில பெரிய வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன.
   
நல்லவேளையாக, அரசாங்கத்தின் தலையீட்டால் வங்கி திவாலாகும் நிலைமையிலிருந்து தப்பித்து விட்டது. வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் சேமிப்பிற்கும் எந்த பங்கமும் இல்லை. பணம் பத்திரமாக இருக்கிறது என்று அரசும் அறிவித்து விட்டது.

இந்த வங்கி திவாலாவதற்கு முன் மேலாளர்களுக்கு வருடாந்திர போனஸ் அளித்துள்ளது. கடந்த இருவாரங்களில் நிர்வாகிகள் தங்களது பங்குகளை விற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மக்களை அலைக்கழித்த இவர்களை அரசாங்கம் தண்டிக்குமா?

ஒன்றும் செய்யாது. செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்😡




No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...