Wednesday, March 29, 2023

மென்திறன்கள் அவசியம். ஏன் ?


தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் வேளையில் நாம் பணிபுரியும் துறைக்கேற்ப நம் அறிவை வளர்த்துக் கொள்வதும் அவசியமாகிறது. அப்பொழுது தான் பணியில் நீடித்து இருக்க முடியும். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தான் துறை சார்ந்த கல்வியறிவு தேவைப்படுகிறது. இதனை 'Hard skills' என்கிறோம். இதில் பின்தங்கிவிட்டால் கிடைத்த வேலையைக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் பணியிடத்தில் மென்மேலும் வளர்ந்து முன்னேறிச்செல்ல 'Hard skills'டன் நமக்குத் தேவையாக இருப்பது 'Soft skills' எனும் மென்திறன்கள் தான்.

நாம் படிக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ 'Soft skills' திறமைகளைச் சொல்லித் தருவதில்லை. நாம் வளரும் சூழலில் கற்றுக்கொள்ள வேண்டிய இந்தப் பாடங்கள் இன்று வியாபாரமாக மாறி அதைச் சொல்லிக் கொடுக்க நமக்கு ஆள் வேண்டியிருக்கிறது. முதன்முதலில் கனடாவிற்கு பணிநிமித்தமாக சேர்ந்த இடத்தில் அங்கிருந்த கனடிய மக்களுடன் எப்படி பேச வேண்டும்? பழக வேண்டும் என்று கூடத் தெரியாது. அந்நிய மொழி மட்டுமன்றி அந்நிய பழக்க வழக்கங்களும் முற்றிலும் அறிந்திராத நேரம் அது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அந்நியப்பட்டு நின்றதால் நிறுவனத்தில் சில பயிற்சிகள் அளித்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது துறை சார்ந்த அறிவு மட்டும் இருந்தால் போதாது. துறையிலுள்ள மனிதர்களிடம் பழகுவதிலும் பேசுவதிலும் தான் நம் திறமையை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும். அதிகார வர்க்கத்தினைக் கவர முடியும் என்று கற்றுக் கொண்டேன்.

நாம் சொல்ல வருவதை எப்படித் தெளிவாக சொல்வது? நிர்வாகம்,/குழுவினர் சொல்வதை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்வது? நாம் பேசுவது புரியாவிட்டால் ஈமெயில் மூலம் எப்படி எழுதிப் புரியவைப்பது? நம் உடல்மொழி மூலம் எவ்வாறு நம்மை, நம் தன்னம்பிக்கையை உணர்த்துவது என்று அறிந்து கொண்டேன். இதற்காக வகுப்புகள் எடுத்தார்கள்!

வேலையிடத்தில் முதல் பேச்சிலேயே நம்மை எடை போட்டு விடுவார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடாமல் இருக்க பேச்சுத் திறமையை, அடுத்தவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து ஐயங்களை எழுப்புவது எல்லாம் அதிமுக்கியம் என்று கற்றுக் கொண்டேன். காது கொடுத்துக் கேட்கும் திறமை என்பது மிகமிக அவசியம். அவசரக்கொடுக்காக பேசி, மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அதற்காக எப்பொழுதும் அமைதியாகவே வேடிக்கைப் பார்ப்பதும் நல்ல தகுதி அன்று. நம்முடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பது நம் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.

குழு மனப்பான்மையுடன் வேலை செய்பவர்களைத்தான் நிறுவனங்கள் விரும்பும். தொழில்நுட்பத்தைப் பற்றின அறிவு ஓரளவு இருந்தால் போதும். குழுவில் உள்ளவர்களுடன் அனுசரணையாக செல்பவர்களால் எங்கு சென்றாலும் எளிதாக வேலை செய்யவோ பழகவோ முடியும். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதம். குறை கண்டுகொண்டே இருப்பவர்களிடம் இருந்து விலகி, ஊக்குவிப்பவர்களோடு தொடர்பில் இருப்பது மன, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டி தான் செய்ததாக காட்டிக் கொள்ளும் மக்கள் தான் இங்கு அதிகம். அவரவர் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கிப் போற்றுதல் மிகச் சிறந்த குணம். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான மிக முக்கியமான தகுதியும் கூட!

சிலர் எப்பொழுதும் விவாதம் செய்து கொண்டோ, தான் செய்த தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது குற்றம் சுமத்திக் கொண்டோ இருப்பார்கள். பணியிடத்தில் செய்யும் வேலையில் பிரச்னைகள் வந்தால் தீர்வுகளை நோக்கியே நம் எண்ணம் செல்ல வேண்டும். நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் தினமும் காலையில் துறை சார்ந்த சந்திப்பு நடைபெறும். அப்பொழுது முன்தினம் நடந்த வேலை குளறுபடிகளைப் பற்றி திட்ட மேலாளர் கூற ஆரம்பித்தவுடன், இதற்கு காரணம் அந்த துறை, இந்த துறை என்று மாற்றி மாற்றி துறைத்தலைவர்கள் அடுத்தவரைச் சுட்டிக் காட்டி தவறை மறைக்க யத்தனிப்பார்கள். இந்த நேரத்தில் பிரச்னையை ஆராய்ந்திருந்தால் தீர்வுகள் கிடைத்திருக்கும் என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். என் மன நிம்மதிக்காக எண்ணி மூன்றே வாரத்தில் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வேலை தேடிச் சென்று விட்டேன்.

பணியிடத்தில் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புறணி பேசி நல்ல பெயர் எடுக்க சிலர் நினைப்பார்கள். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் குழுவினரின் ஆதரவற்றவர்களாக தனித்து விடப்படும் கொடிய நிலைக்கு ஆளாவார்கள். குற்றம் சுமத்துவதோ, இல்லாததைப் பொல்லாதாதைப் பற்றி அவதூறு பேசுவதோ இல்லாமல் நாசூக்காக குறைகளை நிவர்த்தி செய்யும் வழிகளைச் சொல்லிக் கொடுக்கலாம். நிறைகளைக் கூறி குறைகளைக் களையும் வழிகளைக் கூறுவதன் மூலம் அவர்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டலாம். அதே போல் நம்முடைய குறைகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அவசரப்படாமல் எதிர்வினையாற்றாமல் ஆற அமர சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும். மிகவும் கஷ்டமான ஆனால், அவசியமான ஒன்று.

பணியிடத்திலும் சரி, வீட்டிலும் சரி நேரத்திட்டமிடல் என்பது மிக அவசியம். நம் நாளின் வெற்றியைத் தீர்மானிப்பதே இந்த திறமை தான். இதைக் கையாளுபவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். 

இந்த குணாதியசங்களை எளிதில் நம் வாழ்க்கையில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். வீடுகளில் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவுக்காரர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் கடைபிடிக்கும் பழக்கங்கள் தான். இன்று மனிதர்களை விட்டு விலகி கணினியில் மூழ்கி தனித்திருக்கும் தலைமுறை உருவாகி வருவதால் இதனைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. நம்மைச் சீர்படுத்திச் செழுமையாக்கிக் கொள்ள பல்வேறு புத்தகங்கள், அனுபவமிக்க மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். செவி சாய்த்து நம்மைத் திருத்திக் கொள்வோம்.

என்னைப் பொறுத்தவரையில் பணியிடத்தில் தான் நாளின் பெரும்பகுதியை கழிக்கிறோம். என்ன தான் படித்த படிப்பிற்காக, பணத்திற்காக வேலைக்குச் சென்றாலும் அங்கு செல்லும் பொழுது மன நிம்மதியுடன் மகிழ்வுடன் ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும். 'கடனே' என்று செல்லும் பொழுது தான் அங்கிருக்கும் மனிதர்களை வெறுக்க ஆரம்பித்திருப்போம். வேலையின் மீது நாட்டம் குறைய ஆரம்பித்திருக்கும். மனமும் உடலும் எளிதில் சோர்வடைந்து நம் மேல் நமக்கு வெறுப்பும் தோன்றி 'என்னடா பொல்லாத வாழ்க்கை' என்று பாட ஆரம்பித்திருப்போம்.

அதனால் பல வேலைகளுக்கு கடினமான திறன்கள் முக்கியம் என்றாலும், அவை பெரும்பாலும் போதுமானதாக இல்லை. எந்தவொரு பணியிடத்திலும் வெற்றி பெறுவதற்கு அவசியமான தொடர்பு, குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன், சிக்கலைத் தீர்த்து வைக்க மாற்றி யோசிக்கும் திறன் போன்ற வலுவான மென்மையான திறன்களைக் கொண்டவர்களைத்தான் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கிறது.

"இனிமை நிறைந்த உலகமிருக்கு. இதிலே உனக்கு கவலை எதுக்கு" என்று பாட வேண்டுமானால் நம்முடைய மென்திறன்களை ('Soft skills') வளர்த்துக் கொள்வது அவசியம்.












No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...